Showing posts with label மின்சாரம் தொடர். Show all posts
Showing posts with label மின்சாரம் தொடர். Show all posts

Tuesday, November 20, 2012

மின்சாரம் கனவு - 10 இனி தமிழகம் வாழ வழி உண்டா?





இந்த தொடரின் முடிவில் வந்து நிற்கின்றோம். எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் வழியா இல்லை பூமியில்? என்பதையும் யோசிக்கத்தானே வேண்டும்.

தற்போதைய தமிழக முதல்வர் அடுத்த வருடம் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியே தீருவேன் என்று சூளுரைத்துள்ளார்.  ஆனால் நிதர்சனமான உண்மைகள் என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு அன்றைய பேச்சு அன்றோடு போச்சு.  ஆனால் பாதிக்கப்படும் மக்களுக்கு?  
நாம் இதுவரையிலும் தனியார் மின் உற்பத்தியாளர்கள் மூலம் தமிழக மக்களுக்கு எந்த காலத்திலும் பிரயோஜனமில்லை என்பதையும் பார்த்து விட்டோம். ஆனாலும் மத்திய மாநில அரசாங்கங்கள் அவர்களை முன்னுக்கு கொண்டு வருவதில் தான் அதிக அக்கறை காட்டுகின்றது. காரணம் காசு இல்லாவிட்டால் கட்சி நடத்த முடியாது என்பது கட்சி விசுவாசிகள் சொல்லும் காரணமாகும். 

26.3.2012 அன்று சமர்பிக்கபட்ட பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு 3,800 மெகாவாட்டுக்கான மின் திட்டங்களை அறிவித்துள்ளது.  அது உடன்குடி 800 மெகாவாட். உப்பார் திட்டம்  எண்ணூர் 1600 மாற்றுத் திட்டம், 600 மெகாவாட், தூத்துக்குடி 4வது கட்டம் 800 மெகாவாட் 

ஆக மொத்தம் 3800 மெகாவாட்.

இதற்கும் மேலாக எண்ணூரில் 600 மெகாவாட்டுக்கான ஒரு திட்டத்தையும் எரிவாயுவினை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் 1000 மெகாவாட்டிறக்ன இரு திட்டங்களையும் தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். 

இவற்றால் தமிழகத்தின் மின் பற்றாக்குறையத் தீர்க்க முடியுமா?முதல்வர் சொன்னபடி தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாற்றி விடமுடியுமா?

1991 - 2002 ஆம் ஆண்டு காலகட்டத்திற்குள் இந்தியாவிற்குள் மின்சாரத் துறையில் மூதலீடு செய்ய வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் 4.5 சதவிகிதம்.  அத்தனை பேர்களும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட மகராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களையே தேர்ந்தெடுத்தனர். இந்த மாநில மின்வாரியங்கள் லாபகரமாக செய்ல்பட்டுக் கொண்டுருந்தன என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.


1991 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய பொருளாதார கொள்கைக்குப் பிறகு மூன்று தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் இந்த துறையில் ஈடுபட அனுமதித்து உள்ளனர்.

முதலாவதாக மாநில மின் வாரியங்களோடு(புரிந்துணர்வு மற்றும் வெளிப்படையான போட்டி என்ற அடிப்படைகளில்) நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்து கொள்ள நிறுவனங்கள் அனுமதி அளித்தனர். 

இரண்டாவதாக சுய மின் தேவையை ஈடுசெய்து கொள்வதற்கான சுய மின் உற்பத்தி நிலையங்கள்  இங்கே அனுமதிக்ப்பட்டன. 

மின்சார வாரியத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தததை செய்து கொள்வதற்காக நிர்ப்பந்தமற்ற அதே நேரத்தில் தனியார் மின் வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான உரிமையைக் கொண்ட வணிக மின்சார உற்பத்தி நிலையங்களும் அனுமதிக்கபட்டன.

ஆனால் அரசாங்கம் விரும்பிய ஆசைப்பட்ட அத்தனை மாற்றங்களும் கடந்த 1991 க்குப் பிறகு மின்துறையில் நடந்தேறி வந்துள்ளன.  ஆனால் மக்களுக்கு இறுதியில் கிடைத்தது தான் என்ன?

தமிழகத்தின் இன்றைய மின் தேவை 12,000 மெகாவாட் .ஆனால் 8000 மெகாவாட். தான் உற்பத்தியில் இருக்கின்றது. 

2007 ஆம் ஆண்டில் தொடங்கிய மின் வாரியத்தின் சுய உற்பத்தி மற்றும் நெய்வேலி என் எல் சி & என் டி பி சி யின் கூட்டு முயற்சி மின் நிலையங்கள் 2012 ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2013 தொடக்கத்திலேயோ தம் உற்பத்தியைத் தொடங்கி விடும். .தோராயமாக 2013 கோடைக காலத்தில் சுமார் 3300 மெகாவாட் மின்சாரம் அதிகமாகக் கிடைக்க வாய்பிருக்கிறது.

திருவள்ளுர் என்சிபிசி மற்றும் தமிழ்நாடு மின்வாரியமும்  இணைந்து 1500 மெகாவாட்.  இதில் த நா மினவாரியத்தின் பங்கு 1041 மெகாவாட்.

வட சென்னை இரு யூனிட் 1200 மெகாவாட். 

மேட்டுர் 600 மெகாவாட்.

நெய்வேலி என் எல் சி உடன் த நா மின்வாரியமும் இணைந்து 1000 மெகாவாட் இதில் மின்வாரியத்திற்கு பங்கு 367 மெகாவாட்.

சிம்மத்ரி 3 வது யூனிட் 95 மெகாவாட்

ஆக மொத்ம் 3323 மெகாவட்.

அணுமின் நிலையங்களில் இருந்து 1100 மெகாவாட் கூடுதலாக மின்சாரம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டாலும் கல்பாக்கம் மற்றும் கைகா அணு மின் நிலையங்கள் இதுவரை 30 சதத்திற்குக் கீழே தான் உற்பத்தியைக் காட்டியுள்ளன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.  அணு மின் நிலையங்களில் இருந்து அதிக பட்சமாக 500 மெகாவாட் கிடைக்கும் என்பதே பெரிய எதிர்பார்ப்பு தான். .

2013 ஆம் ஆண்டில் மின் தேவை 7.சதம் கூடியிருக்கும் என்று வைத்துக் கொண்டால் அதன் கோடை காலத்தில் தமிழகத்தின் மின் தேவை 13000 மெகாவாட்டாக இருக்கும். அப்பொழுதும் 1200 மெகாவாட் அளவிற்குப் பற்றாக்குறை இருந்து கொண்டு தான் இருக்கும். தமிழகம் நிச்சயம் மின்வெட்டை சந்திக்க வேண்டிதான் வரும்.

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2017 வரை தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க சாத்தியமே இல்லை.

2014 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மின்  பற்றாக்குறைய 2200 மெகாவாட்டாகக் கூடிவிடும். புதிய தொழிற்கூடங்கள் நிறுவப்படும் பட்சத்தில் இது மேலும் அதிகரிக்கும். 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஆண்டாதலாலும் தேர்தல்கள் கோடை காலத்தில் நடத்தப்படும் என்பதாலும் இந்தக் கூடுதல் தேவையை ஈடுகட்ட அரசானது சந்தையில் கூடுதல் விலை கொடுத்தே மின்சாரத்தை வாங்கும்.  இதன் காரணம் மின்வாரியத்தின் நஷ்டம் படு வேகமாகக்கூடிப்போகும்.

2015 ஆம் ஆண்டில் மின் பற்றாக்குறையானது இன்று இப்போது உள்ளதைப் போல 3300 மெகாவாட்டாகக்கூடிப் போகும். 

2014 ஆம் ஆண்டோடு ஜிஎம்ஆர் நிறுவனத்தின் 2,200 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக் காலகட்டம் முடிந்து போயிருக்கும்.  2016 ஆம் ஆண்டில் 200 மெகாவாட்டுக்கான மதுரை மற்றும் சாம்பல்பட்டி மின் நிலையங்களின் உற்பத்தி முடிந்து போகும்.

இந்த சூழ்நிலையில் 15 ஆண்டுகள் கடந்து விட்ட திரும்பகோட்டை (107 மெகாவாட்) இருமுறை பழுதுபட்ட குத்தாலம் (101 மெகாவாட்) மின் நிலையங்கள் எப்படி உதவும் என்று சொல்ல முடியாது.

உருவாக்கப்படும் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எப்படி உதவும் என்று சொல்ல முடியாது.  புதிய மின் உற்பத்தி நிலையங்கள் வர வாய்பில்லாத சூழ்நிலையில் தமிழகத்தின் மின் தேவை 4500 மெகாவாட்டைத் தாண்டியிருக்கும்.  

எனவே மின்வாரியத்தைக் காப்பாற்வே முடியாத சூழ்நிலை 2016-17 ஆம் ஆண்டில் நிகழலாம்.

இதனை தடுக்க வழிகள் உண்டா?

2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மின்சார சட்டத்தினால் உருவாக்கப்படட தனியார் மின நிறுவனங்கள் (ஏறக்கறைய பத்து நிறுவனங்கள்) தமிழ்நாடு முழுக்க பிரம்மாண்டமாக வளர்ந்து கொண்டு இருக்கின்றன.

இந்த பத்து நிறுவனங்களும் உற்பத்தி செய்யப்போகும் 18140 மெகாவாட் ஆகும்.  இவர்கள் தயாரிக்கப் போகும் மின்சாரம் எதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு அல்ல. அது வியாபாரத்திற்கு. மேற்கொண்டு நமக்கு அவசியம் தேவைப்படால் அவர்கள் சொல்லும் விலைக்கு நாம் கட்டுப்பாட்டால் வாங்கிக் கொள்ளலாம். இதில் ஒரு நிறுவனம் தான் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் உள்ள சி. பிரதாப் ரெட்டி அவர்களுடையது.  ஏறக்குறைய 2000 மெகாவாட் அளவுள்ள தமிழ்நாட்டில் மரக்காணத்தில் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிறுவனங்களின் பட்டியல்

COASTAL ENERGEN PVT LTD 1200 MW TUTICORIN
TRIDEM PORT POWER LTD 2000 MW NAGAPATTINAM
UDI INFRASTRUCTURE PVT LTD 2000 MW CUDDALORE
SRI CITY INFRASTRECTURE DEVELOPMENT LTD 1000 MW MANAPPADU
IND BARATH POWER MADRAS PVT LTD 1320 MW TUTICORIN
PEL POWER PVT LTD (PATEL ENGG. LTD) 1050 MW NAGAPATTINAM
NSL NAGAPPATTINAM & INFRATECH PVT LTD 1500 MW NAGAPATTINAM
IL AND FS TAMIL NADU POWER CO LTD 3600 MW CUDDALORE
APPOLLO INTRASTRUCTURE PROJECTS FINANCE CO PVT LTD 2000 MW MARAGGANAM
SRM ENERGY PVT LTD 2000 MW CUDDALORE
TOTAL 18140 MW

சரி, இவர்களால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. மீதி இருக்கும் வாய்ப்புகள் தான் என்ன? 

1. ஆந்திராவில் உள்ள சிம்மத்திரி முதல் நிலையத்தின உற்பத்தித் திறனான 1000 மெகாவட்டில் தமிழகத்திற்கு சட்டபடி கிடைக்க வேண்டிய ஆனால் இதுவரையிலும் கொடுக்கப்டடாத பங்கு 190 மெகாவாட் ஆகும். தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டாவது நிலையத் திறன் கூட இன்று வரையிலும் ஆந்திரத்திற்கே வழப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார்.

2. நெய்வேலி முதல் நிலையத்தின் உற்பத்தித் திறன் 600 மெகாவாட் ஆகும்.1962ல்நிறுவப்பட்டது. இந்த 600 மெகாவாட்டும் தமிழகத்திற்குத்தான் என்ற ஒப்பந்தம் இருக்கிறது. இது புதுப்பிக்கப்படும் போது அதன் திறன் 1000 மெகாவாட்டாகும்.  இந்த 1000மெகாவாட்டையும் தமிழகத்திற்கு பெற முடியும் .

3 தூத்துக்குடியில் அமையவிருக்கும் என்எல்சி மினவாரியக் கூட்டு மின் நிலைய ஒப்பந்தப்படி உள்ள 387 மெகாவாட்டுக்குப் பதிலாக 750 மெகா வாட்டைப் பெற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. இந்தியாவின் கிழக்கு மேறகுப் பிராந்தியங்களில் இருந்து கிடைக்கும், குறைந்த விலை மின்சாரத்தைத் தமிழகத்திற்கு கொண்டு இன்று போதுமான மின் பாதைகள் இல்லை.  இதை அமைக்க ஏற்பாடு செய்யதாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

5. தொடக்கம் முதலே தனியாருக்கு மட்டுமே சாதகமான ஒழுங்குமுறை ஆணையத்தை கலைக்கப்படாதவரைக்கும் மின்சாரச் சட்டத்தை நீக்க முயற்சி எடுக்காத வரையிலும் எந்த மாறுதல்களும் நடை பெறப் போவதில்லை.

2016-2017 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது இல்லாமல் போயிருக்கும்.  தனியார் மூலம் மட்டும் மின்சாரத்தை பார்க்க முடியும்.

கூட்டு முதலீட்டுத் திட்டங்களான நெய்வேலி அனல் மின் நிலையம் தமிழ்நாடு மின்வாரியம் தேசிய அனல் மின் கார்ப்ரேஷன் தமிழ்நாடு மின் வாரிய திருவள்ளுர திட்டம் ஆகியவை 2002-2003 ஆம் ஆண்டுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டன என்றாலும் கூட இவை இந்த பத்தாண்டுக்குப் பிறகே செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றது.

ரூ 10,000 கோடி முதலீட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் (டிட்கோ) இணைந்து திரவ இயற்கை எரிவாயு முனையம் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தையை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தமிழ்நாடு அரசுடன் 24 மே 2010 ஆம் தேதியன்று தொடங்கியது.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்க்கும், தமிழ்நாடு தொழில் வளர்சசிக் கழகத்துக்கும் இடையே ஆகஸ்டு 2010 ல் கையெழுத்தானது.  

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் இது தான் முதல் மறு வாயுவாக்கம் முனையமாகும்.  இந்த முனையமானது ஆண்டொன்றுக்கு 50 லட்சம் மெட்ரிக் டன் திரவ இயற்கை எரிவாயுவைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கும். இந்தத் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்த ஒப்பந்தம் 22 மார்ச் 2012 ல் கையெழுத்தானது. 

2015-16 ஆம் ஆண்டு வாக்கில் இந்தத் திட்டம்  செயல்படத் துவங்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.  இந்த திட்டத்திற்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயுவினை நீணட் கால அடிப்படையில் வாங்குவதற்காக கட்டார், பிரிட்டிஷ், கேஸ் மற்றும் ரஷ்ய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.

இந்த தொடர் முடிவடையும் இந்த நேரத்தில் நீங்கள் இந்த வலைதளத்தை ஒரு முறை விரும்பியவர்கள் பார்த்து விடவும்.


இந்த வலைதளத்தில் உள்ள நிறுவனத்தை துபாய் நாட்டில் உள்ள அஹமது புகாரி நிறுவி உள்ளார். நிலக்கரி வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர். .டாட்டா குழுமம் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு மற்ற நாடுகளில் இருந்து நிலக்கரி விநியோகம் செய்வது அவரது முதன்மையான தொழில். இவரின் நிறுவனம் தூத்துக்குடியில் 1200 மெகாவாட் நிலக்கரி மின் மையம் மின் உற்பத்தியைத் துவங்கும் நிலையை அடைந்துள்ளது. மேலும் அங்கேயே 1600 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி மையத்தை நிறுவ முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த மின் நிலையம் டாட்டா பவர் டிரேடிங் நிறுவனத்துடன் அதன் 70 சதவிகித மின்சாரத்தினை மின கொள்முதல் ஒப்பந்தத்தை செய்துள்ளது. மீதமுள்ள 30 சதவிதிக மின்சாரத்தை என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்ட போது 

அவர் சொன்ன பதில்

"இந்த மின்சாரத்தை எவருக்கு வேண்டுமானாலும் விற்கு கொள்ளலாம் என்பதற்கான உரிமையை 2003 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டம் எங்களுக்கு வழங்கி உள்ளது.  இலங்கை வங்காள தேசம், பாகிஸ்தான் போன்ற தெற்கு ஆசியாவைச் சேர்ந்த நாடுகளில் உள்ள எவருக்கும் இந்த மினச்ரத்தை நாங்கள் விற்றுக் கொள்ளலாம் எனப்தை சட்டம் உறுதிபபடுத்தி உள்ளது.  யார் நல்ல விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விற்போம்" என்றார்.
                                                               •••••••••••••••••••••••••••

நம்முடைய சட்டங்கள் என்பது சாமானிய மக்களுக்காகவா? என்பது தற்போது உங்களுக்கு புரிந்து இருக்குமோ? .

ஸ்வீட் எடுங்க. கொண்டாடுங்க. புதிய திரைப்படங்களுக்குச் செல்வோம். விமர்சனம் எழுதுவோம். மீதி நேரம் இருந்தால் சிரிப்பொலி, ஆதித்யா சேனல் பார்க்கலாம். நாளைய பொழுதில் என்ன மாறுதல்கள் வேண்டுமானாலும் நடக்கக்கூடும்.  கவலைப்பட்டு என்ன ஆகப் போகின்றது?.

நாம் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். 

இன்றைய சூழ்நிலையில் சென்னையைத் தவிர்த்து மற்ற இடங்களில் அறிவிக்கப்படாமல் 16 மணி நேரம் மின்தடை அமலில் இருக்கிறது.  கடந்த மூன்று ஆண்டுகளில் மின்சாரத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்களும், நாடு இழந்த தொகையும் கணக்கில் அடங்கா. இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லை. காசு இருந்தால் கவலையில்லை என்று யோசிக்கும் நடுத்தரவர்க்கத்தினர் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் இன்வெர்ட்டர், யூபிஎஸ்க்கு கூட சார்ஜ் ஏற்ற முடியாத அளவுக்கு உருவாகப் போகும் மின்தடையில் வாழப் போகின்ற நம் வாழ்க்கை நம்மை பார்த்தே சிரிக்கும் காலம் வரப்போகின்றது.

அரசியல்வாதிகளின் கொள்ளையை விட நமக்கு அரசியல்கட்சி விசுவாசம் தான் பிரதானமானது. வாழ்க்கைக்குத் தேவையான பிரச்சனைகளை விட தற்போது சாதிப் பிரச்சனைகள் தான் முக்கியமானது. நமக்கு ஏன் வீண் வம்பு என்று பாதுகாப்பாக வாழப் பழகி விட்ட சமூகத்திற்கு அஹிம்சை எண்ணமே நமக்கு முக்கியமானது. 

காந்தி சொன்ன கிராமிய பொருளாதாரத்தைப் பார்த்து கைகொட்டி சிரித்த அத்தனை பேர்களுக்கும் இனி வரும் காலங்களில் அவர் வாழச் சொன்ன வாழ்க்கை தான் சரி என்று உணரும் நேரமாகவும் இருக்கப் போகின்றது. நுகர்வு கலாச்சாரம் என்ற நுகத்தடியில் நாமே நம்மை விரும்பி மாட்டிக் கொண்டுள்ளோம். உணர்ந்துள்ள அரசியல்வாதிகளும் கனவு காணுங்கள் என்று தானே சொல்லி நம் ஆசையை அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பன்னாட்டு, பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியில் தான் இனி நம் வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ள வேண்டும். . 

பத்தாண்டுகளுக்கு முன்னால் சூரிய சக்தியை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று அரசாங்கங்கள் முன்னெடுத்து இருந்தால்? இன்று இந்த அளவுக்கு பிரச்சனைகள் உருவாகியிருக்குமா? 

அப்புறம் எப்படி அவர்களால் சம்பாரித்து இருக்க முடியும்? 

வெகுஜன பத்திரிக்கைகளில் கூட இத்தனை விஸ்தாரமாக எழுத முடியாது. அவர்களின் நிர்ப்பந்தங்கள் என்பது தனியாக பேசவேண்டிய சமாச்சாரம். பணத்தை சம்பாரிப்பதை விட சம்பாரித்த பணத்தை காப்பாற்று தான் இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனை.. பணம் படைத்தவர்களுக்கு காப்பாற்றியே ஆக வேண்டிய பயம். மொத்தத்தில் அதுவொரு இருண்ட உலகம்.

அது சரி?

இங்குள்ள வளம் அத்தனையும் சுரண்டியபிறகு அரசியல்வாதிகளும் நாமும் எதை வைத்து நாம் நுகரப் போகின்றோம்?

தொடர் இத்துடன் முடிவடைகின்றது.  
                         •••••••••••••••
நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களுக்கு மட்டும் தான் கடிதம் எழுதத் தெரியுமா?  அடுத்த பதிவில்...........
                        ••••••••••••••••
இந்த தொடர் பதிவு எழுத உதவிய புத்தக ஆசிரியர் திரு சா. காந்தி அவர்களுக்கும் உதவி புரிந்த எனது நண்பர்கள் இருவருக்கும் தேவியர் இல்லத்தின் நன்றியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.. 
                       •••••••••••••••••••  
தொடரை வாசித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை நல் இதயங்களுக்கும் என் நன்றிகள்.  
                        •••••••••••••••••
வலைதள வாசிப்பாளர்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகத்தில் இந்த தொடரை ஒவ்வொருவரும் முறை வைத்து படித்துக் கொண்டு இருப்பதாக நண்பர் அழைத்துச் சொன்னபிறகு வலையில் எழுத வேண்டிய விசயங்களுக்கு அப்பாற்பட்டு பல கூடுதல் தகவல்களை எழுதத் தொடங்கினேன். 

நான் நினைத்தபடியே இந்த தொடர் பலரின் பார்வைக்கும் சென்றடைந்தது மகிழ்ச்சியே.  இன்னமும் எழுத வேண்டிய விசயங்கள் பல இருந்தாலும் முக்கியமான தகவல்களை ஓரளவுக்கு எழுதியுள்ளேன். தேவையான நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டிய விசயங்களை எழுதியுள்ளேன் என்பதே எனக்கு திருப்தியாக உள்ளது. என்னை உழைக்க வைத்த நண்பர் வவ்வாலுக்கு நன்றி.

இந்த பதிவில் உங்கள் விமர்சனங்களை எழுதி வைத்தால் அது பலரின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடும். நிச்சயம் இதில்  நீங்கள் எழுதி வைக்கும் விமர்சனத்திறகெல்லாம் கைது நடவடிக்கை  ஏதும் இருக்காது என்பதை கூடுதல் தகவலாக விட்டுச் செல்கின்றேன்.

Sunday, November 18, 2012

மின்சாரம் கனவு – 9 மின் மிகை மாநில சவால்கள்

தொடக்கம்..

ஒன்று.   இரண்டு.   மூன்று.   நான்கு.   ஐந்து.   ஆறு   ஏழு    எட்டு

எல்லாத் துறைகளிலும் அரசாங்கம் சார்ந்த பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே ஈடுபடும் பட்சத்தில் பயன்படுத்துவோருக்கு மாற்று ஏற்பாடு இருக்காது. அரசாங்க நிறுவனம் என்றாலே நாம் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கும் காலத்தோடு ஒவ்வாத தன்மை இருக்கும்.  பொது மக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்காது. நாம் செலவழிக்கும் காசுக்கு நல்ல சேவை கிடைக்காது போன்ற ஆயிரத்தெட்டு குற்றச்சாட்டுகள் உண்டு.

குறிப்பாக தற்போது தனியார் துறை உள்ளே வந்தவுடன் தான் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தொலைபேசி, அலைபேசி சேவைகள் விரைவாக வளர்ந்துள்ளன. தனியார்கள் கொடுக்கும் சேவையினால் தான் இன்றைய இந்தியாவில் பல துறைகளில் ஒரு உண்மையான போட்டி நிலை உருவாகியுள்ளது  என்பது எத்தனை தூரம் உண்மையோ ஆனால் அந்த அளவுக்கு தனியார் நிறுவனங்கள் மக்களை சேவை என்ற வார்த்தை கொண்டு சுரண்டல் தன்மையையும் வளர்த்து மிக விரைவில் மிகப் பெரிய நிறுவனமாகவும் வளர்ந்து விடுகின்றது. இதன் மூலம் பாதிப்புக்கு அதிகம் உள்ளாவது பொதுஜனமே.

இன்றைய தனியார் அலைபேசி நிறுவனங்கள் மேல் பொதுமக்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

காலதாமதம் என்பது காலப்போக்கில் மறந்து விடு என்பதாக அர்த்தம்.

முக்கிய காரணம் நம் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு பின்னால் உள்ள சக்திகள்.  நமது சட்டமுறைகள் குறிப்பாக சாமானியனுக்கு  எட்டாத நிலையில் இருக்கும் சட்ட குளறுபடிகள். 

இந்த மின் துறையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்து துண்டை காணோம் துணியைக் காணோம் என்று ஓடக்காரணமே இங்கே உள்ளவர்களை சரிக்கட்ட அல்லது அவர்களின் நோக்கங்களை புரிந்து கொள்ளவே தனியான திறமை அவர்களுக்குத் தேவைப்பட்டது. சிறப்பான சேவை என்ற நிலையில் இருக்கும் பல நிறுவனங்கள் பின்வாங்கி விட முடிந்தவரைக்கும் லாபம் என்ற நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவிற்குள் வரத் தொடங்கின. அனுபவசாலிகள் உள்ளே வரும் போது அவர்களின் கொள்கைகள் வேறுவிதமாகத்தான் இருக்கும்.

சிலரோ இது போன்ற பழக்கங்கள் எங்களிடம் இல்லை என்று கிடைத்தவரைக்கும் லாபம் என்று அள்ளிக் கொண்டு ஓடிவிட்டார்கள்.  மேற்கொண்டு வெளியே இருந்தபடி தாங்கள் விரும்பியபடி ஆட்டிவைப்பது எளிது என்று தங்கள் திட்டங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.  இன்று வரைக்கும் பல நிறுவனங்கள் அந்த வேலையை மட்டும் தான் இந்தியாவிற்குள் செய்தும் கொண்டும் இருக்கிறார்கள்.

தொடக்கத்தில் பல ஐடி நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள்ளே வந்தது. தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பார்த்து பயந்து கர்நாடகா பக்கம் ஓடினார்கள்.  பத்தாண்டுகளில் கர்நாடகா பெற்ற வளர்ச்சி நினைத்தே பார்க்க முடியாத ஒன்று. இன்று வரைக்கும் பல நிறுவனங்கள் குஜராத் பக்கம் செல்லவே விரும்புகிறார்கள்.

அரசாங்க கொள்கை என்பது கண்கட்டி வித்தை போலவே இருப்பதால் பலருக்கும் இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே இல்லை.  அது குறித்தும் இங்குள்ள அரசியல்வாதிகள் கவலைப்படுவதும் இல்லை.

கட்டிங் என்பது மதுக்கடைகளில் உபயோகிக்கப்படும் வார்த்தை என்பதாக மட்டும் நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் இன்னமும் அரசியல் உலகத்தைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

அரசியல் என்பது தற்போது ஒரு முதலீடு.  முதலீட்டை போட்டு உள்ளே வருபவர்கள் அதனை மீண்டும் எடுக்கத்தான் விரும்புவார்கள்.  ஓட்டுப் போட காசு தரமாட்டார்களா என்று யோசிக்கும் மக்கள் இருக்கும் வரையிலும் இந்த அரசியல் வணிகம் நடந்து கொண்டே தான் இருக்கும். 

கேள்விகள் என்பது கேலியாகிப் போனப் பிறகு எவர் எதைக்குறித்து பேச முடியும்?  உன் பங்கு உனக்கு? என் பங்கு எனக்கு என்பதாக மக்களும் மாறியுள்ளனர்.  இதைப் புரிந்த அரசியல்வாதிகளும் அவரவருக்கு தெரிந்த வகையில் உழைத்து மிக விரைவில் தொழில் அதிபர்களாக மாறிவிடுகின்றனர்.

இந்த இடத்தில் ஒரு சிறிய உதாரணத்தைப் பார்த்து விடுவோம். 

எஸ்டிசிஎம்எஸ் என்பது ஒரு தனியார் மின் உற்பத்தி நிறுவனம். 2002 டிசம் மாதம் தன் உற்பத்தியைத் துவங்கியது.

இதன் எரிபொருள் நெய்வேலியிலேயே கிடைக்கும் பழுப்பு நிலக்கரியாகும்.

தமிழகத்தில் எரிபொருள் வளம் குறைவே. இன்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தனது அனல்மின நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரியை வட மாநிலங்களில் இருந்து கப்பல் மூலமாகத்தான் கொண்டு வருகின்றது.  சென்னைத் துறைமுகத்தில் வந்திறங்கும் நிலக்கரியானது மேட்டூர் அனல் மின் நிலையத்திற்குத் தொடர் வண்டிகளின் மூலம் கொண்டு செல்லப் படுகிறது.

நிலக்கரியின் விலையானது டன் ஒன்றுக்கு தோரயமாக ரூ 900 என்று எடுத்துக் கொண்டால் அதனை மின் நிலையத்திற்குச் கொண்டு வர டன் ஒன்றுக்கு சுமார் 1600 ரூபாயை செலவிட வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தின் ஒரே நிலக்கரி சுரங்கத்தின் வாயிலிலேயே அமைக்ககூடிய ஒரு மின் நிலையத்தைத் தனியாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டளையிட்டது.


இந்த தனியார் மின் உற்பத்தி நிலையத்தின் உண்மையான மூலதனம் 700 கோடி  ஆனால் தன்னுடைய முதலீடு 1608 கோடி என்று கணக்கு காட்டியது. பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது.

ஆனால் நிறுவனம் இந்த வழக்கு இந்தியாவிற்ககு வெளியே தான் நடத்த வேண்டும் என்று மேலும் பிரச்சனையை உருவாக்கி விரும்பியபடியே லண்டன் நீதிமன்றத்தில் நடத்தி வெற்றியும் பெற்றது.

இந்த வழக்குக்காக ஆஜரானவர் தான் தற்போது பாரதிய ஜனதாவில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி.

மக்களுக்காக நாங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைவர்களின் பின்னால் இருக்கும் விசயங்களை வெளிப்படையாக எழுதப் போனால் அது இந்த தொடரின் போக்கை மாற்றிவிடும்.

தாராளமயமாக்கத்திற்குப் பிறகு உருவான தனியார் மின் உற்பத்தியில் அப்போதைக்கு என்ன சந்தை நிலவரமோ அது தான் மின் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமே தற்போது வீட்டுக்குப் பயன்படுத்தும் எரிவாயுவுக்கு குறிப்பிட்ட சிலிண்டருக்கு மேல் தேவைப்படும் போது மானியம் இல்லாத விலைதான் என்று உருவாக்கியுள்ளது.

அதுவும் அப்போதைய சந்தை விலை.தான் என்று சொல்லும் போது இந்த துறைகள்  தனியார் வசம் என்றால் கேட்கவும் வேண்டுமோ?

போட்டியில் இருக்கும் பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து கொண்டு லாபி அமைப்பை உருவாக்கிக் கொண்டு குறிப்பிட்ட விலையை நிர்ணயிக்கும் போது அது கடைசியில் பயன்படுத்தும் பொதுஜனத்தை தான் வந்து தாக்குகின்றது. 

தனியார்கள் மின்சார உற்பத்திக்கு வந்த பிறகு அரசாங்கம் அவசர தேவையின் பொருட்டு  பல அசாதாரணமான முடிவுகளை எடுக்கத் தொடங்கின.

எடுத்துக் காட்டாக, மின் உற்பத்திக்கென உலகில் இது வரை மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படும், மிகவும் விலை கூடிய நாப்தாவை எரிபொருளாக உபயோகிக்கும் மின் நிலையங்களைக் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

நாப்தா என்பது பெட்ரோலிய திரவத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு பொருளாகும். இது வெகு விரைவில் ஆவியாகும் தன்மையைக் கொண்டது.

மேற்கத்திய நாடுகளில்  இது ரசாயன உரம் தயாரிப்பதற்காகப் பல காலம் பயன்படுத்தப்பட்டு வந்தது.  ரசாயன உரத்தினால் நிலத்திற்கும் நீருக்கும் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு வந்த பிறகு மேற்குல நாடுகளில் ரசாயன உரத்தின் தேவை வெகுவாகக் குறைந்து போனது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏற்கனவே இந்த ஆலைகளால் உபயோகிப்பட்டு வந்த நாப்தாவிற்கான புதிதான பயன்பாடு கண்டறியப்பட்டது.

அது தான் மின் உற்பத்திக்கான எரிபொருளாக அதனைப் பயன்படுத்தும் செயல்படாகும் என்றாலும்கூட மேற்குலகம் இந்த எரிபொருளின் அடிப்படையிலான மின் நிலையங்களை இன்றளவும் நிறுவவில்லை. 

இந்த மின் நிலையங்களை இரண்டு வருடங்களுக்குள்ளாகக் கட்டிக் கொள்ள முடியும் என்பதுவும், இந்த மின் நிலையங்களால் உற்பத்தி செய்யப்டும் மின்சாரம் விலை கூடியது ஆகும்.

இந்த மின்சாரத்தை வாங்கும் மாநில மின் வாரியங்கள் வெகு விரைவில் திவாலாகிவிடும். இது தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

மேலும் உள்ளூரில் புதிதாக இயற்கை எரிவாயு கண்டறிப்படும் போது தனியார் மின் நிலையங்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.

மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் மாநில மின் வாரியங்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இரண்டாண்டுகளுக்குள் கட்டமைக்க முடிகின்ற எரிவாயு மின் நிலையங்களைக் கட்டிக் கொள்வதைத் தடுக்கவே அனைத்து உள்ளூர்  எரிவாயு மூலாதாரங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மின் நிலையம் அமைப்பதற்காக அனுமதி வழங்காத மத்திய அரசு நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திலேய தங்களது மின உற்பத்தியை தொடங்கிக் கொள்ள தனியாருக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்த தொடர் முழுக்க தற்போதைய பூதாகர பிரச்சனையாக உருவாகியிருக்கும் மினவெட்டைப் பற்றியும், அதற்குப் பின்னால் உள்ள அத்தனை விசயங்களையும் பற்றியும் பார்த்தோம்.

இனி இதனால் என்ன மாறுதல் இந்தியாவில் தமிழ்நாட்டில் உருவாகும்?

மாநில மின் வாரியங்கள் இனி இல்லாமல போகும்.

மின் வாரியத்தின் அனைத்து சொத்துக்களையும் தனியார் மின் உற்பத்தி மற்றும் மின் வழங்கல் நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள அரசுகள் வழி வகை செய்யும்.

மின்சாரத்தின் விலையை சந்தையே தீர்மானிக்கும் என்பதால் சாமானிய மக்களால் இதனை இனிவரும் காலங்களில் வாங்க இயலாது

வேளாண்மை மற்றும் வீட்டு உபயோகத்திற்கு அரசுகளால் வழங்கப்படும் மின்சார மானியம் நிறுத்தப்படும்.

சிறு குறுந் தொழில் துறையினருக்கும் தேவைப்படுகின்ற மின்சாரததை அவரகள் மாநிலத்தின் மைய மின் கட்டமைப்பில் இருந்து கேட்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கும்.  நடை முறைகளை அரசுகள் மேற்கொள்ளும்.

எடுத்துக் காட்டாக, வீடுகளிலும் வேளாண் நிலங்களிலும் மின்சாரத்தை சுயமாக உற்பத்தி செய்து கொள்ள வழிவகை செய்கின்ற சூரிய ஒளி, சிறு காற்றாலை மற்றும் குப்பையில் இருந்து தயார் செய்ய முடிகனிற் மின உபகரணங்களை இந்த  துறையினர் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டங்களை அரசுகள் முன் வைக்கும். 

சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூரிய சக்தி கொள்கையை நினைவில் கொண்டு வரவும்..

மாநிலத்தின் மைய மின் கட்டமைப்பில் இருந்து ஒரு வேளை இந்தத் துறையினருக்கும் மின்சாரம் தேவைப்படும் எனறால், அதற்காக அவர்கள் அணு மின் நிலையங்களை மட்டுமே நம்பியிருக்கவேண்டும்.

ஏனெனில் இதர எரிபொருட்களின் அடிப்படையிலான மின் உற்பத்தி என்பது முழுமையாகத் தனியார் கைகளில் சென்றடைநதிருக்கும்.

அவற்றை அவர்கள் சந்தை விலையில் விற்பர்.  எஞ்சியிருக்கும் அரசுத்துறை மின் உற்பத்தி என்பது ஆபத்துக்கள் நிறைந்த அணு மின் நிலையங்களைச் சார்ந்தாக மட்டுமே இருக்கும்.

ஆனால் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியம் மற்றும் அணு உலைகளை மட்டுமே இந்த அணு மின் நிலையங்கள் நம்பியிருக்க வேண்டும்.

இதனை அமெரிக்காவால் 2005 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்தது. தற்போதைய மன் மோகன் சிங் அரசாங்கமும் வெற்றிகரமாக நிறைவேற்றியும் உள்ளது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை இது வரும் காலங்களில் யுரேனியம் மற்றும் அணுத் தொழில் நுட்பங்களை வைத்திருக்கும் அந்நிய நாடுகளின் கைக்குச் செல்லும். .

இப்படிப்பட்டக் சமூக நிறுவனக் கட்டமைப்பில் இருந்து சமானிய மக்களால் எளிதில் வெளியேற முடியாது.

ஆனால் சாமானிய மக்களின் உபயோகத்தில் இருந்து கையாட்டப்பட்ட மின்சாரமோ பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் மற்றும் வாத்தகத் துறையின் கட்டற்ற வளர்ச்சிக்கு உபயோககப்படுத்தப்படும்.

இப்படிப்பட்ட சூழலுக்கான முக்கால் பங்குப் பயணத்தை இன்று நம் சமூகம் கடந்து விடடிருக்கிறது. 

கேளிக்கை விசயங்களுக்கு, நுகர்வு சந்தையில் முன்னுரிமை கொடுத்து வாழப் பழகி விட்ட சமூகத்திற்கு இனி நம்மை கேட்பதற்கு எவருமில்லை என்ற நோக்கத்தில் தான் அரசாங்கத்தின கொள்கைகள் ஒவ்வொன்றும்  உருவாக்கப்படும்.

உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Wednesday, November 14, 2012

மின்சாரக் கனவு - 8 ப.சிதம்பரம் குடும்ப சேவை





1999 ஆண்டில் மத்திய மின்துறை அமைச்சராக சுரேஷ் பிரபு இருந்த போது மின்வாரியங்கள் தங்கள் சுய உற்பத்தியைப் பெருக்கிக் கொள்வதற்கு ஏற்றவாறு மத்திய மின் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். 

1999 ஆம் ஆண்டில் மினவாரியத்தின் நிதி நிலை புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குவதற்கு ஏற்றதாகவே இருந்தது என்றாலும் கூட அது தன் சுய உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ள எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.  தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த தனியார் மின் நிலையங்களின் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டின் மின்வாரியததின் எதிர்காலத்தை அதன் அன்றைய மாநில அரசும் பலிகொடுத்து விட்டன. 

அன்று ஆட்சியில் இருந்தவர்கள் புள்ளி வைத்தார்கள்.தற்போது கட்டுக்கு மீறி  இன்று அலங்கோலமாய் வந்து நிற்கிறது. ஆனால் தினந்தோறும் பத்திரிக்கைகளில்  நாங்கள் தான் செய்தோம் ஆனால் அதை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை என்று சொல்லி லாவணி கச்சேரி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மின்சாரத்துறையில் இந்தியாவில் பல நல்ல நோக்கத்திற்காக  தனியாரின் முதலீட்டை ஈடுபடுத்துவதற்காகவே மத்திய அரசானது 15.10.1991 அன்று மின்சாரக் கொள்முதல் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. மின்சாரச் சட்டம் (2003)  பிரிவு 9  தனியார்களைப் பற்றி பேசுகிறது.  

இந்த சட்டத்தின் மூலம் இந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பல விதங்களில் பல வகைகளில் நிறைய முன்னுரிமைகளையும் அது அளிக்கிறது.  இவ்வாறு வழங்கப்பட்டதற்கு காணம் தனியார்கள் இந்த துறைக்கு அதிக அளவு வரவேண்டும். அதிக அளவில் மின் உற்பத்தியில் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கையில் உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகின்றது.. 

பொதுவாக ஒரு அரசாங்கம் என்பது ஒரு பறவை போன்றது.  தேவையில்லாத சுமைகளை சுமக்கும் பட்சத்தில் இயல்பாக பறக்க முடியாது.  இதன் காரணமாகவே பல நாடுகளில் பல துறைகளை தனியார் வசம் ஒப்படைக்கவே விரும்புகின்றது.  தவறில்லை.  

ஆனால் எங்கே தவறு?

கல்லில் கூட நார் எடுக்கக்கற்றுக் கொண்ட ஒரு கேடு கெட்ட அரசியல் தரகர்களை வைத்துக் கொண்டு வாழும் நமது இந்திய ஜனநாயகத்தில் இப்போதைய முழுங்கிப் போன சூழ்நிலையில் நீங்கள் எது குறித்து பேசினாலும் புரிந்து கொள்வது சிரமமே.

இது போன்ற மக்களின் அன்றாட வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட திட்டங்கள்  ஊழலற்று ஜெயிக்க இன்னமும் நமக்கு 50 ஆண்டுகளாவது தேவைப்படும். 

இந்திய நாடு அடிபட்டு, மிதிபட்டு லட்சக்கணக்கான பேர்கள் உயிர் இழந்து சுதந்திரம் பெற்ற கதையைப் பற்றி தெரியாதவர்கள் தான் இன்றைய சூழ்நிலையில் நமக்கு தலைவர்களாக இருக்கிறார்கள்.

உலகவங்கிக்கு கணக்குபிளையாக இருந்தவர்கள் தான் இன்றைக்கு இந்தியாவின் திட்டங்களை உருவாக்கும் இடத்தில் இருக்கிறார்கள். உங்களால் என்ன சொல்ல முடியும்?

மக்களின் உண்மையான சுதந்திரத்தின் அருமையை தெரிந்து கொள்ள மனம் இல்லாது இருப்பவர்களின் கையில் தான் தற்போதைய ஆட்சியும் அதிகாரமும் குவிந்து கிடக்கின்றது. 

பணம் என்பதை தேவை என்பதைத் தாண்டி வெறி என்ற நோக்கில் சேர்த்துக் கொள்ள விரும்பும் இந்த தரங்கெட்ட அரசியல் தலை(மை)முறைகள் அழியும் போது தான் அதற்குண்டான உண்மையான வாய்ப்புகள் நமக்கு உருவாகக்கூடும்.  

மின்சாரத்தை பிரத்யோகமாகத் தன் சொந்த மின் தேவைகளை நிறைவு செய்திட மின் நிலையம் ஒன்றை நிறுவிக் கொள்பவர் அல்லது தன் உறுப்பினர்களின் மின் தேவையை நிறைவேற்றிட மின் நிலையம் ஒன்றை நிறுவிடும் குழு ஆகியோரையே மின்சாரச் சட்டத்தின் பிரிவு 2 (8) ஆனது சுய உற்பத்தியாளர்கள் என்று அழைக்கின்றது.

இந்த சட்டப் பிரிவுகளை நடைமுறைப்படுத்துவற்காக 8.6.2005  ஆம் தேதியன்று மத்திய அரசு சில விதிகளை உருவாக்கியது. அவற்றின்படி சுய மின் உற்பத்தி நிலையமாக ஒரு மின் நிலையம் கருதப்பட வேண்டுமென்றால்

1. அந்த மின் நிலையத்தில் 26 சதவிகித்திற்கு குறையாமல் சுய உற்பத்தியாளர்கள் முதலீடு செய்திருக்க வேண்டும்.

2. அந்த மின் நிலையத்தின் ஆண்டு உற்பத்தியில் 51 சதவிகிதத்திற்கும் குறையாமல் சுய உறப்த்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த விதியின்படி ஒரு மின் நிலையத்தின் மூலதனத்தில் 26 சதவிகிதத்தை மட்டும் வைத்திருப்பவர்கள் 51 சதவிதிதம் மின் உற்பத்திக்கு உரிமையாளராகி விடுகிறார்கள். மூலதனத்தில் உள்ள எஞ்சிய 74 சதவிதிகம் பங்குடையவ்ர்கள் 49 சதவிகிதம் மின் உற்பத்தியின் உரிமையாளர் என்றாகிறது.

இந்த சுய உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கத்தால் அளிக்கபடும் பல சலுகைகளை ஒரு மின் உற்பத்தி நிலையம் முழுமையாக அனுபவிக்க முடியம். இதன் மூலம் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு கொடுக்க முடியும்.

மாநில மின்வாரியங்களிடமோ, மத்திய நிதி ஆதாரங்களிலோ மின் உற்பத்திக்காக இனி வரும் காலங்களில் முதலீடு செய்ய நிதி செய்ய கைவசம் எதுவும் இல்லை. எனவே தனியாரை இந்த மின் உற்பத்தியில் ஈடுபடுத்துவதே சிறந்து என்று மத்திய அரசு கூறியது.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று சொல்வார்களே அதைப் போல மத்திய அரசின் அண்டப்புளுகு என்பதை குருடன் கூட கண்டு பிடித்து விட முடியும். காரணம் அரசின் பணம் தனியாரின் மூலதனத்திற்காகவே வாரி இறைக்கப்பட்டது. 

மின் நிலையத்திற்காகத் தனியார் செய்யும் 30 சதவிகிதம் முதலீட்டினை அந்த மின் நிலையம் அமைக்கத் தேவைப்படும் நான்கு ஆண்டு காலகட்டத்தில் அவர்கள் முதலீடு செய்கிறார்கள்.  அதாவது மொத்த முதலீட்டில் சராசரியாக 7.5 சதவிகிதம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் முதலீடு செய்கிறார்கள்.  மொத்த பணத்தையும் வைத்துக் கொண்டு தொழில் செய்ய வேண்டியதில்லை. 

ஆண்டு தோறும் என்று கணக்கு வைத்துக் கொண்டு  படிப்படியாக நான்கு ஆண்டுக்குள் கொண்டு வருகின்றார்கள். 

எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லும் மத்திய மற்றும் மாநில மின்சார வாரியங்களோ ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தனியார்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காக மட்டுமே 24.7 சதவிகிதம் கட்டாயம் தர வேண்டும் என்பது தான் இங்கு ஆச்சரியமானது.

மொத்த முதலீட்டின் அடிப்படையிலேயே மின்சாரக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிற்து.  ஆனால் ஒவ்வொரு தனியாரும் தாங்கள் தங்களின் மொத்த முதலீட்டுக் கட்டணத்தை ஒப்பந்தம் செய்யப்பட்ட அளவை விட 30 சதவிதிகத்தை மேலாகவே உயர்த்திக் காட்டுவது தான் வழக்கம்.

இதனால் தனியார் மின் மின்சாரத்தினை மத்திய அரசு மாநில மின் வாரியங்களின் மேல் வலுக்கட்டாயமாக திணித்தது. இதன் காரணமாகவே தனியார்கள் தமிழகத்திற்கு ஓடோடி வந்தனர். 

ஆனால் நாம் ஏற்கனவே பார்த்த ஐந்து நிறுவனங்கள் மட்டுமே இறுதியில் மின் நிலையங்களை அமைத்தன. இவற்றின் மொத்த உற்பத்தித் திறன் 988 மெகாவாட்டாகும். 

தமிழ்நாடு மின்வாரியம் இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூலதனக் கட்டணமாக 1,006 கோடி ரூபாயை செலுத்தியது.  ஒவ்வொரு ஆண்டும் இந்த ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் செலுத்திய ரூபாயின் காரணமாகத் தான்  மின்சார வாரியம் இந்த அளவுக்கு கடன் சுமையில் மாட்டிக் கொண்டது. சுய சார்புகளை கொண்டு வந்திருந்தால் இப்போதுள்ள  மின்வெட்டும் வந்திருக்காது. . 

ஒரு வேளை இந்த தொகையை இங்கேயே முதலீடு செய்திருக்கும்பட்சத்தில் ஆண்டுக்கு 7.50 மெகாவாட் திறனுள்ள சொந்த மின் நிலையங்களே உருவாக்கி இருக்க முடியும்.  கடந்த பத்து ஆண்டுகளில் மின் வாரியத்தின் உற்பத்திறனும் சுமார் 7500 மெகாவாட் என்ற அளவில் உயர்ந்திருக்கும்.  ஆனால் இன்று அது தனியார் கையை எதிர்நோக்கியிருக்கும் பரிதாப நிலைக்கு மத்திய அரசால் தள்ளப்பட்டு நிற்கிறது.  

இந்த இடத்தில் சில விசயங்களை உங்கள் மனதில் கொண்டு வர வேண்டும்.

புதிய பொருளாதாரக் கொள்கை. இதன் காரணமாக மத்திய அரசு கொண்டு வந்த கொள்கை ரீதியான முடிவுகள். இதற்காக உருவாக்கப்பட்ட மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.  இதுவரைக்கும் நாம் வேறொருவரை குற்றம் சாட்ட முடியும்.  

ஆனால் உள்ளே தனியார் வந்து விட்டால் அவரை வாரி அனைத்து உச்சி முகர்ந்து, அவருக்கு தேவைப்படும் வசதிகள் செய்து கொடுப்பது முதல் அவர் நிர்ணயிக்கும் கட்டணம் வரைக்கும் பின்னால் மறைமுகமாக இருப்பது இங்குள்ள அரசியல் தலைவர்களே. 

இதைப்பற்றி விரிவாக இங்கே பேசினால் பல விபரீதமான புலனாய்வு கட்டுரைகள் போல எழுத வேண்டியிருக்கும். இந்த இடத்தில் இதை குறிப்பிட்டு எழுதக் காரணம் தினந்தோறும் ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் இந்த மின்சாரம் குறித்து அறிக்கை விடுவதும், லாவணி கச்சேரி நடத்திக் கொண்டு இருப்பதையும் நீங்கள் அன்றாடம் பத்திரிக்கையில் படித்துக் கொண்டு இருப்பீங்க தானே? 

ஆனால் நடந்த, நடந்து கொண்டிருக்கும் உண்மையான நிலவரங்கள் என்பது வேறு?

2001 ஆம் ஆண்டு  தொடங்கி கடந்த 10 ஆண்டு காலத்தில் இந்த தனியார் நிறுவனங்களின் உற்பத்தித் திறனில் 46 சதவிகிதத்தை மட்டுமே மின் வாரியம் பயன்படுத்தி உள்ளது.  அநத நிறுவனங்களின் பயமுறுத்தும் மின் கட்டணம் காரணமாக எஞ்சிய உற்பத்தித் திறனான 54 சதவிகிதத்தை மின் வாரியம் உபயோகப்டுத்தவில்லை.

ஒப்பந்ததின்படி தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்திக்குத் தயாராக இருந்தால் மட்டுமே போதும்.  அப்படி இருந்தாலே அவற்றை நிலைக் கட்டணமான 68.49 க்கு உகந்தவை என்று கருதிக் கொள்ள வேண்டும் என அந்த ஷரத்துக்கள் கூறுகின்றது.

தனியார் நிறுவனங்களுடைய  நிலைக்கட்டணம் மின்சாரத்தின் விலையைக் கடுமையாக கூட்டி விட்டது என்பது தான் கடந்த பத்தாண்டு வரலாறு.

இந்த ஐந்து நிறுவனங்களைத் தவிர வேறு இரண்டு தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டு மின்வாரியத்துடன் நீண்ட கால ஒப்பந்தம் போட்டு இருந்தது. 

அந்த நிறுவனங்கள் 1.அபான் மற்றும் பென்னா. போன்ற நிறுவனங்களே.

இந்த சமயத்தில் ஒரு ஆச்சரிய தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.  

2007 2008 ஆம் ஆண்டு தனியார் கொடுத்துக் கொண்டிருந்த மின் கட்டண விலையை பார்த்து விடுவோம்.  இந்த கட்டணம் ஒரு யூனிட்டின் ரூபாய் விலை.

ஜி எம் ஆர் 6.58 
பி.பி.என் 17.78
மதுரை பவர் 8.63
சாம்பல்பட்டி 8.74
நெய்வேலி எஸ்டிசிஎம்எஸ் 3.52

இதே போல் மற்ற இரண்டு நிறுவனங்களான

அபான் 2.31
பென்னா 2.58

2006 ஆம் ஆண்டில் பிபிஎன் நிறுவனத்திடமிருந்து 244 மில்லியன் யூனிட்டை (24.4 கோடி யூனிட்) மின்வாரியம் வாங்கியது. இது இந்த நிறுவனத்தின் வெறும் 35 நாள் உற்பத்தித் திறனுக்கு சமமானது.  ஆக எஞ்சிய 330 நாளுக்கும் இந்த மின் நிலையம் எந்த உற்பத்தியையும் செய்யவில்லை என்றாகிறது.  ஆனால் அந்த ஆண்டில் இது பெற்ற நிலைக்கட்டணம் 3330.04 கோடி ரூபாயாகும்.  அதாவது உற்பத்தியே மேற்கொள்ளாத 330 நாட்களுக்கும் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் அந்த நிறுவனம் தமிழ்நாட்டு மின்வாரியத்திடமிருந்து பணத்தைப் பெற்றுக்  கொண்டது என்றாகிறது.

இதுதவிர உற்பத்தி செய்த 24.4 கோடி யூனிட்டுக்களுக்காக மின்சாரக் கட்டணமாக 103.78 கோடி ரூபாயையும் அது மின்வாரியத்திடம் வசூலித்தது.  இந்த நிலையத்தின் மாறும் கட்டணம் மட்டுமே யூனிட் ஒன்றுக்கு 4.25 ரூபாயாக இருந்தது.  அதே நேரத்தில் மற்ற நிறுவனங்களின் மொத்த மின் விலையே (மூலதனக் கட்டணம் ப்ளஸ் மாறும் கட்டணம்) பி.பி.என் நிறுவனத்தின் மாறும் கட்டணத்தைவிடக் குறைவாக இருந்தன என்பதும் தான உண்மை.  எடுத்துக் காட்டாக நெய்வேலியின் எஸ்டிசிஎம்எஸ் மற்றம் அபான் மின் நிலையங்களின் மொத்த மின் விலையை கவனித்தாலே புரியும் தானே.

தனியார் மின்சாரத்தின் விலை தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் நிதிக் கட்டமைப்பை சீர்குலைத்து வருகிறது என்பதோடு அது மொத்த அரசின் நிர்வாகத்தையும் பாதிக்கின்றது. கடன் சுமை அதிகமாகின்றது. மக்களுக்கு தேவைப்படும் அன்றாட நடைமுறையில் உள்ள எந்தவொரு நலத்திட்டத்தினையும் செயல்படுத்த முடியாது. இது அத்தனையும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு தெரியும் தானே?


மற்றொன்றையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஐந்தாவது தனியார் நிறுவனமான எஸ்டிசிஎம்எஸ் மூலம் விற்கப்படும் மின்சாரத்தின் விலையானது ஒப்பீட்டளவில் விலை குறைவாக இருந்தாலும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் மேலே இருப்பதால் அவர்களுக்கு உண்டான அடிப்படைச் செலவுகள் மிகவும் குறைவு. இவர்கள் நிர்ணயிக்கும் விலை என்பது ஒரு பொதுத் துறை வழங்கும் மின்சாரத்தின் விலையைக் காட்டிலும் அது இருமடங்காக உள்ளது என்பதையும் நாம் மறக்கக்கூடாது. 

ஆனால் எந்த அரசியல் தலைவர்களும் இது குறித்த அக்கறையை காட்டத் தயாராக இல்லை என்றாலே உங்களுக்கு என்ன காரணம் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

ஆனாலும் இந்த இந்தியா இன்னமும் நல்ல முறையில் நகர்ந்து கொண்டிருப்பதற்கு அங்கங்கே ஏதோ சில நல்ல அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் இருப்பதால் தானே?  

தனியார் மின்சார உற்பத்தியாளர்களின் இந்த கொள்ளை விவகாரங்களை வெளியே கொண்டு வந்து இந்த ஒப்பந்த ஷரத்துக்களை நீக்கியே ஆக வேண்டும் என்று ஒருவர் போராடத் துணிந்தார்.

இந்த ஐந்து தனியார் நிறுவனங்களின் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களையும் மாற்றி அமைத்திட வேண்டுமென்று 2001 ஆம் ஆண்டு முதலே கோரிக்கைகள் எழுந்து வந்துள்ளன. 

மாநில அரசும், ஒழுங்குமுறை ஆணையமும் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.  ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட சமயங்களில் கொள்முதல் விலையைக் குறைக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் மாற்றப்பட வேண்டுமென பலரும் கருத்து தெரிவத்துள்ளனர்.

ஆனால் எதையும் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.

2002 ஆம் ஆண்டில் திரு நெல்லிக்குப்பம் வீ கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்த முறையற்ற கொள் முதல் விலையினைக் குறைக்க வேண்டி ஒழுங்கு முறை ஆணையத்திடம் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.  இவர் முன்னாள் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறப்பினர். வழக்குரைஞரும் கூட. 2003 ஆம் ஆண்டில் மேலும் ஒரு மனுவினைத் தாக்கல் செய்தார்.  

கொடுமை கொடுமை என்று கோவிலுக்குச் சென்றால் அங்கே ஒரு கொடுமை நின்று ஆடினால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு கொடுமையும் அப்போது நடந்தது. 

ஆமாம்.

இந்த ஐந்து தனியார் நிறுவனமும் சேர்ந்து எங்களுக்கு இந்த விலை போதாது. கொஞ்சம் கூட்டிக் கொடுங்க சாமிகளா? என்று அவர்கள் பங்குக்கு ஒரு மனுவை ஆணையத்திடம் தாக்கல் செய்தனர். 

நிறுவனங்களின் சார்பாக வாதாட வந்தவர்கள் யார் தெரியுமா? 


தற்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவர் மனைவி திருமதி நளினி சிதம்பரம்.  

முந்தைய அத்தியாயத்தில் ப.சிதம்பரம் இதே போல் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக வாதாடி ஜெயித்துக் கொடுத்த கதையையும் படித்தோம் அல்லவா?

கிருஷ்ணமூர்த்தி கொடுத்த மனுவுக்கு ஆரம்ப கட்ட விசாரணைக்கு அனுமதி கிடைத்தபோதிலும் அதையும் ப. சிதம்பரம் குடும்ப வழக்கின் மூலம் தடை உத்தரவை பெற்றுக் கொடுத்தனர். அப்படியே வழக்கு பாதியில் தொங்கி விட்டது.

கடைசியில் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி ஒரு தனி நபர் என்று காரணங்கள் கூறி தனியாருக்குச் சாதமாக மங்களம் பாடிவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள ஆண்ட கட்சி, தற்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, எதிரிக்கட்சிகள், சாதிக்கட்சிகள் என்று உங்கள் மனதில் உள்ள அத்தனை தலைவர்களையும் இப்போது உங்கள் நினைவில் கொண்டு வர வேண்டும். 

இவர்கள் அத்தனை பேர்களும் நம் நலத்திற்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நம் குழந்தைகளுக்கு இருட்டறைக்குள் நின்று கொண்டு பேசி புரியவைக்க வேண்டும். 

Sunday, November 11, 2012

மின்சாரக் கனவு --7 லாபம் Vs கொள்ளை



தொடக்கம்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு

தமிழ்நாட்டில்  ஆட்சி மாறி முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கு கடந்த பத்தாண்டுகளாக  கட்டணத்தை உயர்த்தவில்லை. 

ஆண்ட கலைஞர் ஆட்சியின் அலங்கோலம் என்று பரப்புரை செய்யப்பட்டது. இந்த அரசியல் விவகாரங்களை தனியாக தொடர் முடியும் போது பார்க்கலாம். எல்லா விலையும் ஏறியிருக்கும் போது மின்சாரத்தின் விலையையும்  ஏற்றித் தானே ஆக வேண்டுமெனறு திருவாளர் பொதுஜனம் தமக்கு தாமே சமாதானம் செய்து கொண்டனர். ஆனால் இதற்கு பின்னால் மலிந்திருக்கும் ஊழலும் பொறுப்பற்ற தன்மையும் அளவிடமுடியாதது. 

இதைவிட இதனால் தமிழ்நாட்டின் மின்சார எதிர்காலம் எதிர்கொள்ளப் போகும் சவால்களும் நம் முன்னால் ஏராளமாக உள்ளது.

மின்சாரத் துறையில் தனியார்கள் வந்த போது இனி மலிவான மின்சாரம் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றார்கள். தனியார்மயமாக்கப்பட்ட பின்னர் தான் நாட்டில் தொலை தொடர்புத்துறை அபரிமிதமாக வளர்ச்சியடைந்தது. கட்டணமும் குறைந்தது என்பதைப் போலவே இந்த மின்சார விசயத்திலும் நடக்குமென்றே பலரும் நம்பினார்கள். 

ஆனால் மின்சாரத் துறையில் தனியார்கள் வந்த பின்பு மின்சார கட்டணம் நடுத்தர, அடித்தட்டு மக்களின் கழுத்தை நெறித்தது.  ஏன் குறையவில்லை? என்பதற்கு முதலில் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்ற அமைப்பே.  

மின்சார கொள்முதல், மின்கட்டண நிர்ணயம் போன்ற. மொத்த லகானும் அவர்கள் கையில் தானே இருக்கின்றது. ஆனால் அவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மக்களின் தேவைக்கு அப்பாற்பட்டது என்பதை சொல்லாமல் புரியவைத்தார்கள். ஆணையத்தின் ஒவ்வொரு கடந்த கால செயல்பாடுகளும் "இருட்டறைக்குள் உள்ளதடா உலகம்" என்பதாக விபரம் தெரிந்வர்களுக்கு உணர வைத்தது. 

இத்துடன் மற்றொரு கூத்தும் நடந்தது. 

இந்த சமயத்தில் நீங்கள் மீண்டும் ஒன்றை நன்றாக மனதில் நினைவில் வைத்திருக்க வேண்டும்.  

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் 53,298 கோடி ரூபாய். இன்றைய தேதியில் தமிழ்நாடு அரசிற்கு இருக்கும் மொத்த கடனில் இது பாதித் தொகையாக வந்து விடுகின்றது. 



இந்தியாவில் அலைக்கற்றை ஊழல் ஒரு பிரளயத்தையே உருவாக்கியது.  ஆனால் பலன்?  

அவர் செய்தார், அவரும் செய்தார் என்று கைகள் மாறிக் கொண்டே சென்றது.  

ஆனால் முடிவு? 

இப்போது நீதிமன்றத்தில் இருக்கின்றது.  ஊழல் வெளிவந்த கதைகள் இப்படி இருக்கும் போது மின்சாரத் துறையில் தனியார்களின் ராஜ்ஜியத்தை அவர்களின் திரைமறைவு வேலைகளை, உதவும் அதிகாரவர்க்கம், ஆணையங்கள், பலன் பெற்றவர்கள் என்று பக்கம் பக்கமாக எழுத வேண்டிய பல விசயங்கள் இருந்தாலும் சில விசயங்களை மட்டும் இங்கே பார்த்து விடலாம்.

குறிப்பாக ஒரு தொழிலில் முறைப்படி கிடைத்தே ஆக வேண்டிய லாபம் என்பது வேறு.  ஆனால் லாபம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பது என்பது வேறு.

மின்சாரத் துறையில் கோடிக்கணக்கான ரூபாய்கள் கொள்ளையாகத்தான் மக்களின் வரிப்பணம் கடந்த பல ஆண்டுகளாக தனியார் கைகளுக்கு போய்க் கொண்டேயிருக்கின்றது. 

பலருக்கும் தெரிந்தே போவது தான் மகத்தான ஆச்சரியம்.

காரணம் தனியார்கள் ஒரு துறைக்கு வரும் போது தான் உண்மையான போட்டிகளும், சேவைகளும் கிடைக்கும் என்று எண்ணம் கொண்டவர்களுக்கு நாம் எந்த அளவுக்கு ஏமாளியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் நமது அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு நேர்மையானவர்கள் என்பதையும் உணர வைக்கும். காரணம் இன்று தமிழ்நாடு மின்சார வாரியம் சுமக்கும் கடன் தொகை அத்தனையும் தனியார்களுக்கு தாரை வார்த்த பணம் என்பதை நாம் நம் நினைவில் வைத்திருக்க வேண்டும். 

சுருக்கமாகச் சொல்லப் போனால் அவர்களிடமிருந்து மின்சாரம் வாங்கினாலும் காசு. வாங்காவிட்டாலும் காசு கொடுக்கத்தான் வேண்டும்.  காரணம் நம்முடைய சிற்பிகள் வடிவமைத்த ஒப்பந்தங்கள் அப்படித்தான் செப்புகின்றன.

தனியார்கள் நஷ்டம் என்று சொல்லிக் கொண்டு வெளியே சென்றுவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் என்று ஒன்று கொண்டு வந்ததை ஏற்கனவே பார்த்தோம். .

இந்த நிலையில் மத்திய மின் துறை அமைச்சகம் 21.1.2011 அன்று மின்சார மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியது.

"2011 - 2012 ஆம் ஆண்டில்  நாட்டிலுள்ள அனைத்து மின் விநியோக நிறுவனங்களும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 89 கோடி நஷ்டத்தை ஈட்டும்.  அதனால் மின் விநியோக நிறுவனங்கள் தனியாருடன் செய்து கொண்ட கொள்முதல் ஒப்பந்தங்களின்படி பணத்தை உடனே தருவதற்கான வழிகள் இல்லாது போகும்.  எனவே இந்த ஒரு தொகையை மின் பயனீட்டாளர்கள் மீது சுமத்தத் தேவையான உத்தரவுகளை அனைத்து மாநில ஒழுங்குமுறை ஆணையங்களும் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மின் விநியோக நிறுவனங்கள் மின் கட்டண உயர்வு வேண்டும் என்று  கேட்கவில்லை. ஆனால் மத்திய தீர்ப்பாயமே முடிவு எடுத்து வருடந்தோறும் தனியார் பலன் பெறும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்த வழிவகை செய்தது. 

இதன்படி அனைத்து ஓழுங்குமுறை ஆணையங்களும் மின் விநியோக றிறுவனங்கள் மின் கட்டண உயர்வைக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் ஆண்டு தோறும் கட்டண விகிதத்தை ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் அறிவித்தாக வேண்டுமென்று அது உத்தரவிட்டது. இதன் மூலம்  மொத்த இந்தியாவின் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 89 கோடி ரூபாயை மத்திய மின் தொகுப்பு ஆணையம் கேட்டுக் கொண்டபடி மக்கள் தலையில் சுமத்த அது உத்தரவிட்டது.

இந்தியாவில் மொத்த 85 மின் விநியோக நிறுவனங்கள உள்ளது.  ஒவ்வொன்றிடமும் தனிப்பட்ட முறையில் மத்திய தீர்பபாயம் எநத  கருத்தையும்  கேட்கவில்லை. 

"நான் சொல்கின்றேன் நீ செய்" என்பதாக முடிவு எடுக்கப்பட்டது.  

இதிலும் குறிப்பிடப்ட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த தண்டத்தொகையில் கிட்டத்தட்ட பாதி அளவு தொகை அதாவது 53,298 கோடி ரூபாய் நஷ்டத்திற்கு சொந்தகாராக விளக்கும் தமிழ்நாடு மினச்ர வாரியத்தின் கருத்தைக் கூட கேட்கவில்லை. எதனால் இந்த நஷ்டம் என்பது குறித்து அதன் மூல காரணத்தை ஆராய விரும்பவில்லை. 

அது சரி? 

தனியாருக்கு இந்த துறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றது? இதனால் அரசாங்கத்திற்கு என்ன லாபம்? இல்லை இவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தினால் பயன்படுத்துவோருக்கு என்ன பலன்? போன்ற கேள்விகள் நமக்கு இயல்பாக தோன்ற வேண்டும்.

ஒரு மின் நிலையம் உருவாகக வேண்டும் என்றால் ஒரு தனியாரிடம் மொத்த முதலீட்டுத் தொகையில் 30 சதவிகிதம் மட்டும் இருந்தால் போதும்.  மீதியுள்ள நிதிகள்,  நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் மூலம் வந்து விடும்.

இது தவிர மின் நிலையத்திற்குத் தேவையான மின் உற்பத்தி எந்திரங்களின் இறக்குமதி, சுங்க வரி போன்ற சலுகைகள் அரசால் அளிக்கப்படுகின்றது. இதிலும் பல நிறுவனங்கள் ஏற்கனவே மேலைநாட்டில் பயன்படுத்தப்பட்ட கருவிகளை புதிய கருவிகள் என்ற பெயரில் கணக்கு காட்டி இறக்குமதி செய்து ஒரு பெரிய தொகையை லவட்டி விடுகின்றன. உள்ளே வரும் இந்த உபயோகமற்ற கருவிகளால் மொத்த மின் உற்பத்தியும் பாழாகிவிடுவது தான் மிச்சம். தனியாருக்கு இரண்டு வகையில் லாபம். அரசாங்கம் தருகின்ற வரிச்சலுகைகள் ஒருபக்கம். மற்றொன்று  ஒப்பந்தம் போட்டபடி அவர்களுக்கு வழங்கவேண்டிய தொகைகளை அந்தந்த மின்சார வாரியங்கள் கப்பம் போல கட்டியாக வேண்டும். 

இதற்கு மேலும் தமிழ்நாட்டில் உள்ள எரிவாயுகளை தனியாருக்குத்தான் மத்திய அரசாங்கம் பாதிக்கு மேற்பட்ட அளவு கொடுத்து அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.

முதலில் தமிழகத்தில் கிடைக்கும் அரிய வகை எரிவாயுக்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களின் பட்டியலை நாம் பார்த்து விடலாம்.   

1. ARKAY ENERGY (RAMESHWARAM) LTD  
2.  OPG POWER GENERATION LTD  
3. KAVERY GAS LTD. 
4. SAI REGENCY  
5. CORAMANDEL CEMENTS 
6. SAHELI LTD. 
7. SOUTHERN ENERGY DEVELOPMENT CORPORATION 
8. MM STEELS LTD 

ஆனால் தமிழ் நாடு மினவாரியத்திற்கு இந்த வளத்தில் 50 சத அளவு தான் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

மீதமுள்ள எரிவாயுவினை மத்திய அரசு நிறுவனமான கெயில் (GAIL) தனியாருக்கு சொந்தமான சுய மற்றும் இதர தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் தாரை வார்த்து விட்டது.


இதன் மூலம் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கிடைக்க வேண்டிய பெரும்பகுதி வருவாயையும் தனியாருக்கு போய் விடுகின்றது. 

மின் நிலையம் இயங்குவதற்கான எரிவாயு ஒதுக்கீடு பெறுவதில் முன்னுரிமை என்பது தான் இவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளில் மிகப் பெரும் சலுகையாகும்.


ஒரு தனியார் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கும் பல சலுகைகளைக் கொண்டே அரசாங்கம் தனியாக ஒரு மின் உறபத்தி  நிலையமே உருவாக்கி விட முடியும்.  மிக குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரம் வழங்க முடியும்.  ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் ஏற்கனவே கையெழுத்திட்ட புதிய பொருளாதாரக் கொள்கை என்று பூச்சாண்டி காட்டுவார்கள்.



தமிழகத்தில் முதல் முதலாக நாகூருக்கு அருகில் உள்ள நரிமணம் என்ற இடத்தில் தான் 1980களின் கடைசியில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டது. இந்த எரிவாயுவினைப் பயன்படுத்தி 10 மெகாவாட் திறனுடைய மின் நிலையம் ஜனவரி 1992 ல் தன் மின் உற்பத்தியைத் தொடங்கியது.  ஜெட் விமானங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை உபயோகிக்கத் துவங்கப்பட்ட இந்த மின் நிலையம் தமிழ்நாடு மின் வாரியத்த்துக்கு சொந்தமானது.  இது 2001 ஆம் ஆண்டு வரை இயங்கியது.

அதன் பிறகு மன்னார்குடி மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள குத்தாலம் ஆகிய இடங்களில் எரிவாயு கண்டறிய்பட்டது.  மூன்றாவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வழுதூர் என்ற இடத்திலும் எரிவாயு கண்டறியப்பட்டது.  இவ்வாறு தமிழகத்தில் கண்டறியப்பட்ட அரிய எரிவாயு வளம் ரசாயன உர உற்பத்திக்கு உபயோகிக்க வாய்ப்பில்லை. முழுக்க முழுக்க மின் உற்பத்திக்காகவே அது உபயோகிக்கப்பட்டது.   மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள இந்த தனியார் மின் நிறுவனங்களைப் பற்றி ஒவ்வொன்றாக சற்று விபரமாக பார்த்து விடலாம்.



ராமநாதபுரம் மாவட்டத்தில் உளள வழுதூர் இரண்டாவது மின் நிலையத்தை பிஜிஆர் எனர்ஜி யானது ஒப்பந்த காலமான மார்ச்சிற்குள் ( 2009 ) தன் பணியை முடிக்கவில்லை.  இந்த நிறுவனம் இதற்கு முன்னால் ஜிஈஏ  என்ற பெயரில் வயரிங் போன்ற இரண்டாம் கட்டப் பணிகளை செய்து வந்த நிறுவனமாகும். வழுதூர் இரண்டாம் மின் நிலையத்தில் தான் மின் நிலையத்திற்கான முழு ஒப்பந்தகாரராக உருவெடுத்தது.  இந்த நிறுவனத்திடம் தான் மேட்டூரின் 600 மெகாவாட் மின் நிலையத்தில் ஈபிசி பணியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

2011 ல் மின் உற்பத்தியைத் துவங்கியிருக்க வேண்டிய இந்த மின் நிலையமானது இன்று வரை தொடங்கப்படவில்லை.

இதே நிறுவனம் தான் கடலூர் பவர் புராஜெக்ட் என்ற 1220 மெகாவாட் அனல் மின் நிலையம் ஒன்றைத் தனது சொந்த செலவில் நிறுவுவதாக 28.9.2006 ஆம் தேதியன்று மின் வாரியத்துடன மின் கொள்முதல் ஒப்பந்தத்தினை செய்து கொண்டது.  மின் ஒழுங்குமுறை ஆணையமும் இதற்கு அனுமதி வழங்கியது.  ஏனிந்த தாமதம்? என்று கேள்வி எதுவும் கேட்காமல் இந்த நிறுவனத்திறகு வருடந்தோறும் அனுமதியை ஆணையம் நீட்டித்துக் கொண்ட வருகின்றது.  இதன் காரணமாகத்தான் பங்குச் சந்தையில் இதன் மதிப்பு (6202 கோடி ரூபாய்). சரியாமல் இருக்கிறது.

இந்த ஒப்பந்தகார நிறுவனமானது பிஜிஆர் எனர்ஜி யின் தொழில் நுடப்த் தவறால் ஒன்னரை ஆண்டு காலம் மின் உற்பத்தியை செய்ய முடியவில்லை.  மின் உற்பத்தி இல்லாத இந்த காலகட்டத்தில் ஏற்கனவே கேஸ் அத்தாரிட்டி ஆப் இண்டியா லிமிட் (கெயில்) உடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த மின் நிலையத்திறகான எரிபொருளான இயற்கை எரிவாயுவிற்கான கட்டணத்தில் 80 சதவிகிதத்தை தமிழ்நாட்டு மின்சார வாரியம் செலுத்தவேண்டி வந்தது. இதனால் வாரியத்துக்கு கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

2008 ஆம் ஆண்டில் உருவான கடுமையான  மின் பற்றாகுறையில் தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் விலை கேட்ட போது  யூனிட் 6,70 என்றார்கள். மின்சாரக் கொள்முதலை அனுமதிக்கும் அதிகாரம் ஒழுங்கு முறை ஆணையத்து மட்டும் தான் உண்டு.  அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அரசாங்கமும் (?)  ஏற்றுக் கொண்டபடி யூனிட் ரூபாய் 6.70 என்று இவர்களிடம் கொள்முதல் செய்ய ஆணையத்திடம் மின்வாரியம் அனுமதி கேட்டது.  

மீண்டும் உங்கள் நினைவுக்கு கொண்டு வர வேண்டிய விசயம் இந்த நிறுவனங்கள் அனைத்தும் தமிழகத்தின் இயற்கை வளமான எரிவாயுவை பய்னபடுத்துபவை. இவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் அடிப்படை விலை மற்றும் லாபத்தோடு ரூ 2.30க்கு மேல் இருக்க முடியாது. 

இந்த உண்மை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, அதிகாரத்தில் இருந்த அனைவருக்கும் வெகு நன்றாகவே தெரியும் எனறாலும் கூட இது ஆணையத்தின் கட்டளையாக முடிக்கப்பட்டு வெகுஜனத்தின் பணம் இந்த தனியார் உற்பத்தியாளர்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றது.

இந்த அளவுக்கு சலுகைகள் அளித்த போதிலும் நாம் ஏற்கனவே பார்த்த ஐந்து தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு பாக்கித் தொகையாக ரூ 2500 கோடி செலுத்த வேண்டியுள்ளது. 

இந்த தொகையை அவர்களிடமிருந்து வசூலித்தாலே இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு மானிய விலையில் மினச்ரத்தை வழங்க முடியும்.

ஆக ஏழைக்கு எல்லாருமே எதிரிகள் தான் என்பது உண்மைதானே.

தற்போது நடுத்தரவர்க்கமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை ஏழையாக மாற்றி விட்டால் கேள்விகள் ஏதும் வராது. அன்றாட வயிற்றுப் பாட்டுக்கு மட்டும் ஓடி உழைக்க வேண்டியதாக மட்டுமே வாழ முடியும்.