Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

Saturday, October 18, 2014

கொள்ளையடிப்பது தனிக்கலை

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவது என்பது எல்லோருக்கும் எளிதல்ல. அதற்கு மனதை தயார் படுத்தியிருக்க வேண்டும். சவால்களோ? சங்கடங்களோ எதிர் கொள்ளத் தெரிய வேண்டும்? நாம் அவசரப்பட்டு விட்டோமோ? என்று அங்கலாய்ப்பட்டுக் கொள்ளாமல் புதிய சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும். 

இங்கு எல்லோருக்கும் சுய பாதுகாப்பு என்பது மற்ற அனைத்தையும் விட முக்கியமாக உள்ளது. எத்தனை தத்துவங்கள் சொன்னாலும் அவரவர் பொருளாதாரம் சார்ந்த விசயங்களில் நிறைவு இல்லை என்றால் மனதளவில் சோர்ந்து விடுகின்றார்கள். தேவையான கவலைகள், தேவையற்ற கவலைகள் என்று இனம் பிரிக்கத் தெரியாமல் மொத்தமாகக் கவலைகளைக் குத்தகை எடுத்துக் கொண்டு வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு விடுகின்றார்கள். 

வேறு எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. நடுத்தரவர்க்கத்தின் மிகப் பெரிய பலவீனமே பற்றாக்குறை பட்ஜெட் தான். இதன் காரணமாகத்தான் இங்கே உரிமைக்கான எந்தப் பெரிய போராட்டமும் நிகழ்வதில்லை. நமக்கேன் வம்பு? என்று ஒதுங்கிப் போய்விடுகின்றார்கள். ஒரு நாள் பொழுது என்பதைத் தங்கள் பொருளாதாரம் சார்ந்து சிந்திப்பதால் வேறு எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. 

இதையும் மீறி சிந்தனை ரீதியாக மாற்றம் பெற்றவர்களால் மட்டுமே தனது இலக்கை நோக்கி முன்னேற முடிகின்றது. சாதிக்க விரும்புவர்கள் சங்கடங்களைத் தாண்டித் தானே மேலேறி வர முடியும். அது பண ரீதியோ அல்லது பதவி ரீதியோ எதுவாக இருந்தாலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இல்லாதவர்களில் வாழ்வில் எந்த மாறுதலும் நிகழ்ந்து விடுவதில்லை.




Friday, October 10, 2014

காற்றில் பறக்கும் கௌரவம்

காலம் செய்யும் கோலத்தை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருந்தது. 

'என்னை மிஞ்சியவர்கள் இந்த உலகில் யாருமில்லை' என்று கருதிய மாமன்னர்கள் அத்தனை பேர்களின் வாழ்க்கைத் தடங்களின் அடையாளங்களில் எதுவும் மிஞ்சவில்லை. சம்மந்தப்பட்டவர்களின் வாரிசுகள் இன்னமும் இருக்கின்றார்களா? எப்படி இறந்தார்கள்? என்பது கூட அறியாத அளவுக்குக் கொடுமையான காலம் அனைத்தையும் கரைத்து விட்டது. 

பதவியைப் போதையைப் போல ரசித்து ருசித்தவர்களின் அந்திம வாழ்க்கை சொல்லும் கதை அனைத்தும் அந்தோ பரிதாபம் என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது. இனி மிச்சம் ஏதும் இருக்கக்கூடாது என்று உச்சமாய் அதிகாரத்தைச் சுவைத்து வாழ்ந்த அதிகாரவரக்கத்தினர் பலரின் வயோதிக வாழ்க்கை என்பது அனாதை விடுதியில் தான் கொண்டு போய்ச் சேர்க்கின்றது. 

சமூகத்தில் உள்ள பல தரப்பட்ட நிலைகளைப் போலத்தான் ஒவ்வொரு இடத்திலும் உள்ள தொழில் நிறுவனங்களின் கதையும் பல அனுபவங்களை நமக்குப் பாடமாகச் சொல்கின்றது. 

பெயர்ப் பொருத்தம் பார்த்து வைத்த நிறுவனங்கள், ஜாதகத்தில் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள், வாஸ்த்து பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் போன்ற சிறப்பம்சம் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை தலைமுறைகள் தொடர்கின்றது? 



Saturday, August 30, 2014

யோசிக்காதே? ஓடிக் கொண்டேயிரு!

4. து.மு  -  து.பி

என் அறையை விட்டு வெளியே வந்தேன். 25000  சதுர அடி கொண்ட பெரிய தொழிற்சாலையின் தொடக்கம் முதல் குறிப்பிட்ட பகுதி வரைக்கும் எந்திரங்கள் நேர்த்தியாக வரிசைக்கிரமமாக  இருந்தன.  பல எந்திரங்களில் தொழிலாளர்கள்  (TAILORS)இல்லை. 


அங்கே பணிபுரிந்து கொண்டிருந்தவர்களிடத்தில் அதிக அளவு சுறுசுறுப்பு இல்லாமல் தைத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.  

தொழிற்சாலையின் உள்ளே பரவியிருந்த  உஷ்ணக்காற்று என்னைத் தாக்கியது. எந்திரங்களின் சப்தமும்,  தொழிலாளர்களின் உழைப்பையும் கவனித்தப்படியே ஒவ்வொரு பகுதியாக நகர்ந்து கொண்டிருந்தேன்.  ஒவ்வொரு இடத்திலும் பெயர் பலகை மாட்டப்பட்டு இருந்தது. 

STITCHING SECTION. CHECKING SECTION, FINAL CHECKING, AQL AREA, IRON SECTION, PACKING SECTION என்று தனியாக இருந்தது. 

மற்றொரு பகுதியில் LOT SECTION, CUTTING SECTION, STORE ROOM செயல்பட்டுக் கொண்டிருந்தன.  SAMPLES SECTION மற்றொருபுறம் இருந்தது. அங்கிருந்த சிலர் என்னை சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தனர். 


அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த எவரும் என்னை கண்டு கொள்ளவில்லை.

ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்தில் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் பலதரப்பட்ட துறைகள் சம்மந்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறையும் ஒரு உலகம். ஒவ்வொரு உலகமும் ஒரு நாடு போன்றது. அந்த நாட்டிற்கு ஒரு மன்னர், ஒரு மந்திரி, ஒரு சேனாதிபதி போன்ற படைபட்டாளங்கள் இருக்கும். அந்தந்த துறையில் பணிபுரியும் பெண்கள் பல சமயம் மகுடம் சூட்டாத ராணியாகவும் சிலரோ அந்தப்புற இளவரசியாக இருப்பார்கள். அவற்றை நாம் படிப்படியாக பார்க்கலாம்


ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.......

அத்தியாயம் 5  யோசிக்காதே?  ஓடிக் கொண்டேயிரு!

அப்போது தான் நான் பணியாற்றி வந்த பல நிறுவனங்களைப் பற்றி, அங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி யோசிக்கத் துவங்கினேன்.


தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களை கவிழ்த்தவர்கள்,  குறுகிய காலத்திற்குள் நிறுவன பெருக்கிக் கொண்டவர்கள், உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள், தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிவளர்ச்சியை விட தங்களது பொருளாதார வளர்ச்சியை நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது. 

காரணம் எல்லாநிலையிலும் எல்லோருக்கும் பணம் தான் பிரதானமாக இருந்தது. ஒருவர் பணத்தை முதலீடாக போட்டு விட்டு பெரிய லாபத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார். மற்றொருவர் குறுக்கு வழியில் பணத்தை துரத்திக் கொண்டிருக்கின்றார். மொத்ததில் இருவருக்குமே தூக்கம் தேவையில்லாமல் போய்விடுகின்றது. முதலீடு செய்தவர் முதலாளி. ஆனால் அவரின் லாபத்தை தவறான வழியில் அடையக் காத்திருப்பவர் பணியாளர். 

ஐம்பது ரூபாய் திருட்டு முதல் மாதம் ஐந்து லட்சம் திருட்டுத்தனம் வரைக்கும் அவரவர் பதவிக்கு தகுந்தாற் போல நடந்து கொண்டேயிருப்பதால் கடைசியாக பாதிக்கப்படுவது நிறுவனத்தின் வளர்ச்சியே.  கடைசியில் ஒரு நாள் நிறுவனம் வங்கியில் போய் சிக்கிவிடுகின்றது.  

இப்படி சிக்கிய நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் கதையென்பது அவலத்தின் உச்சமாக இருக்கும். வெளிநாட்டுக் கார்களில் பவனி வந்த பல முதலாளிகள் இன்று வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 


Sunday, July 27, 2014

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்......

அமெரிக்காவில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் வலைத்தமிழ் இணையத் தளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 1 முதல் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்....."என்ற எனது தொடர் வெளிவரப்போகின்றது. 

ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையும் வெளிவரப்போகின்ற இந்தத் தொடருக்கு உங்கள் அனைவரின் ஆதரவைக் கோருகின்றேன். 

இந்தத் தொடர் எதைப் பற்றியது என்பதற்காக வலைதத்தமிழ் நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் எழுதிய அறிமுகக் கட்டுரை இது. உங்கள் பார்வைக்கு. 

ணவு, உடை, உறைவிடம் என இந்த மூன்றையும் மனித வாழ்க்கையில் மிக முக்கியம் என்று சுட்டிக் காட்டுகின்றார்கள். ஆதி காலத்து மனித சமூகத்தில் இந்த மூன்றுக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் மூன்றுமே அவரவர் அன்றாட வாழ்வில் இயல்பான அங்கமாகவே இருந்தது. காட்டில் கிடைத்த கிழங்கு வகைகளே உணவாக மாறியது. இலைகளே ஆடையாக இருந்தது.

மலைக்குகைகளே வசிக்கப் போதுமானதாக இருந்தது. காலப்போக்கில் ஒவ்வொன்றும் மாறியது. இன்றைய சூழ்நிலையில் உணவு என்பது ருசியின் அடிப்படையிலும், ஆடைகள் நாகரிகத்தின் வெளிப்பாடாகவும், உறைவிடம் அந்தஸ்தின் அங்கமாகவும் மாறியுள்ளது. ஆனால் இந்த இடத்தில் நாம் யோசிக்கவேண்டிய ஒன்று உண்டு. இன்னமும் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏழைகள் பட்டினியுடன் தூங்கப் போவதும், சாலையோர குடிசைகளையே தங்கள் உறைவிடமாகக் கருதி வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்.

ஆணோ, பெண்ணோ, ஏழையோ, பரமஏழையோ எவராயினும் உடைகள் இல்லாமல் வாழ முடிகின்றதா? மானத்தை மறைக்க என்கிற ரீதியில் ஒட்டுத்துணியாவது தங்கள் உடம்போடு ஒட்டிக் கொண்டு வாழ்பவர்களைத்தானே நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். மொத்தத்தில் மூன்று வேளை பசியோடு வாழ்ந்தாலும், வாழ்நாள் முழுக்கத் தங்களுக்கென்று தங்க இடமில்லாமல் வாழ்ந்த போதிலும் அத்தனை பேர்களுக்கும் உடைகள் என்பது அவசியமானதாகத்தானே இருக்கின்றது. அந்த உடைகளைப் பற்றித் தான் இந்தத் தொடரில் பேசப் போகின்றோம். 

நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் விரும்புவது பிராண்ட் வகையான ஆடைகள் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடைகள் உருவாக்கத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் விசும்பல் மொழி மறைந்துள்ளது என்பதை உணர்ந்து இருப்பீர்களா? வெள்ளை ஆடைகள் என்றாலும், நீங்கள் விரும்பம் வண்ணம் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னாலும் வடியும் இரத்தக் கறையை நாம் பார்க்கப் போகின்றோம். 

உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஆடைத் தொழிற்சாலைகளிலும் இன்றைய காலகட்டத்தில் பலதரப்பட்ட நவீன வளர்ச்சி வந்துள்ளது. மனித ஆற்றல் அதிக அளவு தேவைப்படாமல் எந்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு விஞ்ஞானம் நமக்குப் பல வசதிகளைத் தந்துள்ளது. ஆனால் பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இன்றும் மூன்று வேளை ரொட்டிக்காக மட்டுமே பணிபுரிபவர் லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். மனித மாண்புகளை உடைத்து எந்திரமாக மாற்றப்பட்ட மனிதக்கூட்டம் தான் இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர்.

தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் உள்ள ஒவ்வொரு தொழிற்சாலையின் சுவற்றில் காது வைத்துக் கேட்டால் நாம் விக்கித்துப் போய் நிற்கும் அளவிற்கு ஏராளமான சோகக்கதைகள் உண்டு. 

ஏனிந்த அவலம் என்பதனை நான் இருக்கும் சூழ்நிலையில், நான் பணிபுரிந்த திருப்பூர் நிறுவனங்கள் வாயிலாக உங்களுக்குச் சொல்லப்போகின்றேன். ஆடைகளை மட்டும் பேசப்போவதில்லை. ஆடைகளோடு பின்னிப்பிணைந்த நூலிழைகள் போல வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். நான் கடந்து வந்த பாதையை, பார்த்த, பழகிய, பாதித்த மனிதர்களைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

காதல், காமம்,ஏக்கம், இயலாமை, வன்மம், குரோதம்,பித்தலாட்டம் எனக் கலந்து கட்டி கதம்பம் போல் உள்ள இந்தக் கவுச்சி வாடையைத்தாண்டி கண்ணாடி ஷோரூம் வரைக்கும் பயணித்து வரும் இந்த ஆடைகளைப்பற்றிப் பேசப் போகின்றோம். 

எந்தத் தினத்தில் இருந்து இந்தத் தொடர் தொடங்கும் என்று கேட்கின்றீர்களா? வரும் ஆகஸ்ட் 1 முதல் வலைத்தமிழில் இணையத் தளத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும். உங்கள் ஆதரவை, விமர்சனத்தில் வாயிலாகத் தெரியப்படுத்தலாமே? என்னை உழைக்கத் தூண்டும் அல்லவா? உங்கள் ஆதரவினைக் கோரும். 

-ஜோதிஜி திருப்பூர். 

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் தொடரை படிக்க :

(ஒவ்வொரு வாரமும் இதே பக்கத்தில் தொடர்ந்து படிக்கலாம்)


சென்ற பதிவான ஐந்தாம் வருட நிறைவு நாளுக்காக நான் எழுதிய பதிவுக்கு விமர்சனத்தின் மூலம் ஊக்கமும், நிறை குறைகளைச் சுட்டிக் காட்டிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. எழுதுவதும் ஒரு பயிற்சியே. நான் எழுத்துலகில் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது என்பதை உணர்ந்தே வைத்துள்ளேன். 

நான் சார்ந்துள்ள ஏற்றுமதி தொழில் வாழ்க்கை கொஞ்சம் எழுத்து வாழ்க்கை கொஞ்சம் என்று மாறி மாறி பயணித்துக் கொண்டிருப்பதால் என் எழுத்து நடையில், சொல்லவரக் கூடிய கருத்துக்களில் பல சமயம் குழப்பம் கும்மியடிக்கத் தான் செய்கின்றது. நிச்சயம் இந்தத் தவற்றைத் திருத்திக் கொள்ள முயற்சிக்கின்றேன். இதன் காரணமாக இந்தத் தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆய்த்த ஆடைத்துறையில் பல வருடங்கள் இருந்து விட்டுத் தற்போது வேறு துறைக்கு மாறிவிட்ட என் நெருங்கிய நண்பர் திருத்தி தர சம்மதம் தந்துள்ளார். இதன் மூலம் மேலும் மெருகூட்டும் என்றே நம்புகின்றேன். 

ஒவ்வொரு சமயத்திலும் விமர்சனத்தின் வாயிலாக நண்பர்கள் சுட்டிக் காட்டியுள்ள பல குறைகளை இந்தத் தொடர் மூலம் சரி செய்து சரியான முறையில் எழுத முடியும் என்றே நம்புகின்றேன். 

வலைத்தமிழ் நிர்வாகத்தில் உள்ள அனைத்து அங்கத்தினர்களுக்கும் நண்பர் பார்த்தசாரதிக்கும் என் அன்பு கலந்த நன்றியை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.