Showing posts with label வேலுப்பிள்ளை பிரபாகரன். Show all posts
Showing posts with label வேலுப்பிள்ளை பிரபாகரன். Show all posts

Saturday, November 28, 2020

வேலுப்பிள்ளை பிரபாகரன் 66

 26 நவம்பர் 2020 விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள்.  

சென்ற ஆண்டு இங்கிலாந்து அரசாங்கத்தின் நீதிமன்றம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேல் வைத்திருந்த அத்தனை குற்றச்சாட்டுகளையும் நீக்கி விட்டது.  இலங்கை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் நேற்று இலங்கை அரசு ஈழத்தில் பல இடங்களில் அவரின் நினைவு தினம், பிறந்த தினம் விழா கொண்டாட இன்னமும் அனுமதிப்பதில்லை.

Friday, March 06, 2020

இப்போது முதல் இலவசமாக

1990க்கு பிறகு தான் "அவர்" இந்தியாவிற்கு அறிமுகமானார். தயாரிப்பாளர் திரு. பிவி நரசிம்மராவ். இயக்குநர் திரு. மன்மோகன்சிங் அவர்கள்.

அவர் தான் உண்மையான "உலக நாயகன்". ஆனால் அவரை "திருநிறைச் செல்வன் சர்வதேச அரசியல்" என்று அழைத்தனர். இந்தியாவின் பார்வை மாறத் தொடங்கியது. மாற்றங்களும் இங்கே உருவாகத் தொடங்கியது. திருநிறைச் செல்வனைச் சிலர் ஆரோக்கியத்துடன் வளர்த்தனர். அவர்களில் முக்கியமான மூன்று பேர்களை உங்களுக்கு அடையாளம் காட்ட முடியும்.

International Monetary Fund IMF (சர்வதேச நிதியம்)
World Trade Organization (WTO) உலக வணிக அமைப்பு
General Agreement on Tariffs and Trade (GATT) கட்டணங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பொதுவான ஒப்பந்தம்.

சுருக்கமாகச் சொன்னால் வணிகம், வணிக நலன், லாபம்.

ஆனால் இதனை வேறு விதமாக அழைத்தனர். உலகளாவிய பார்வை. உலகமே ஒரு கிராமம். வர்த்தகத்திற்குத் தடையே இல்லை. தடைகளை உடை. வளர். வாழ். வாழ வை என்றும் அழைத்தனர்.


Wednesday, May 18, 2011

வேலுப்பிள்ளை பிரபாகரன் --தமிழீழம் என்றொரு பிரதேசம்


 "தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும்" என்று தீர்மானமாய் சொன்னது பிரபாகரன் அல்ல. 


இதன் வித்து இலங்கை என்ற நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவானது.  தமிழர்களில் முதல் தலைமுறை தலைவரான அருணாச்சலம்  உருவாக்கியது ஆகும்.  அவர் தனி ஈழம் என்று தான் தொடக்கத்தில் சொன்னார். அதுவே தமிழீழம் என்று பின்னால் மாறியது.  அருணாச்சலம் படித்தவர், பண்பாளர், சட்ட மேதை ஆனால் வெகுஜன ஆதரவு பூஜ்யம்.  அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுக்க கொழும்புவிலும் மேல்தட்டு மக்களுடன் இருந்த காரணத்தால் கடைசி வரைக்கும் மக்கள் ஆதரவென்பது அவருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இறுதியில் அவர் கொள்கைகளும் கொலையாகி வெகுஜன ஆதரவு இல்லாமல் மறைந்தும் போனது.

அருணாச்சலம் முதன் முதலாக உருவாக்கிய இலங்கை தேசிய காங்கிரஸ் சிங்களர்களின் கைக்கு போன போதே அச்சத்துடன் எதிர்காலத்தில் இனி சிங்களர்களுடன் தமிழினம் சேர்ந்து வாழ முடியாது என்றார்.  அப்போது இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு கால் நூற்றாண்டு காலம் இருந்தது. அவராலும் முடியாமல் அவர் சகோதரர் இராமநாதன் முயற்சியும் தோல்வியாகி கைகள் மாறி கடைசியில் 1972 ஆம் ஆண்டில் செல்வநாயகம் மனம் நொந்து போய் சொல்லும் அளவிற்கு வந்து நின்றது. இதையே பிரபாகரன் உரத்துச் சொன்ன போது மற்றவர்களால் வினோதமாக பார்க்கப்பட்டது. 

சர்வதேச அரசியல் புரியாமல் இதென்ன அடம் என்பதாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது. அருணாச்சலம் புத்தியால் ஜெயிக்க முடியாமல் செல்வநாயகம் சக்தியாலும் வெல்ல முடியாமல் கடைசியில் பிரபாகரன் பலத்தாலும் வெல்ல முடியாமல் கலவரங்களும்யுத்தங்களும்  தொடர்ச்சியாக வந்து மொத்த தமிழர்களின் உயிரும் உடைமையும் இழந்து இன்று நாங்களும் வாழ்ந்தால் போதும் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றது. 

இதுவே இன்று இலங்கையில் உயிர்பிழைத்தவர்கள் நான் தமிழர் என்று சொல்ல பயந்து வாழும் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. தொடக்க காலத்தில் அருணாச்சலமும், இவர் சகோதரர் இராமநாதனும் எழுதியுள்ள புத்தகங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல இன்று வரைக்கும் சிங்களர்களுக்கே பாடபுத்தகங்கள். 

சிங்களர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுத்தவர்கள் மறைந்து கிடைத்து இருக்க வேண்டிய மரியாதையின்றி இறந்தும் போனார்கள். 

இவர்களிடம் கற்று கொண்ட மாணவர்கள் ஆட்சியாளர்களாகவும் மாறி சிங்கள இனவாதத்தின் ராஜாவாகவும் மாறிப் போனது சரித்திர ஆச்சரியங்கள். 

தங்களுக்கு சிறப்பாக கற்றுக்கொடுத்தவர்களின் பெயர்களை இன்று அவலமாய் வந்து நின்ற தமிழர்களுக்கு உருவாக்கப்பட்ட திறந்த வெளி முகாம்க்கு சூட்டப்படும் நன்றிக்கடனையையும் தீர்த்துள்ளார்கள். வாழ்ந்து சென்ற தமிழ் தலைவர்களின் அதிர்ஷ்டம் அவ்வளவு தான். 

அருணாச்சலம் முகாம், இராமநாதன் முகாம், ஆனந்த குமாரசாமி முகாம் என்று உருவாக்கப்பட்டது. மொத்த இலங்கை மக்களும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைப் பெயர்கள் இன்று நிர்க்கதியாய் நிற்பவர்கள் வாழ்க்கை உதவியாய் உள்ளது என்பது பெரும் சரித்திர சோகம்.

பிரபாகரன் இவர்களைப் போல படித்தவரோ, பட்டம் வாங்கியவரோ அல்லது புத்தகங்கள் எழுதியவரோ அல்ல.  அத்தி பூத்தாற் போல கொடுத்த ஊடக பேட்டிகளும் வருடந்தோறும் உரையாற்றிய மாவீரர் தின பேச்சுகளுமே அவரைப் பற்றி அவரின் கொள்கைகளையும் நம்மால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடியும். போர் வெறியர்,மன நோயாளி,புதிய தலைமுறைக்கு பயங்கரவாதத்தை கற்றுக்கொடுத்தவர், உலகத்திற்கு மனித வெடிகுண்டு என்பதை அறிமுகம் செய்தவர் என்று சொல்லப்படுவரின் நியாய வாதங்கள் எதுவும் இன்று எவர் காதிலும் போய் விழாது.

பிரபாகரன் செய்த சாதனைகள் ஒவ்வொன்றும் இவருக்கு முந்தைய தலைமுறை தலைவர்கள் எவரும் செய்யாதது மட்டுமல்ல.  நிணைத்தே பார்க்க முடியாதது. 

அவர்கள் ஜனநாயகம் காட்டிய வழியில் சென்று தங்களை நம்பியிருந்த வழிகாட்டாமல் மறைந்தவர்கள்.  இவரோ தான் கொண்ட கொள்கை சரி என்று நம்பி அதையே செய்தும் காட்டியவர். தன்னுடைய தன்னம்பிக்கை மட்டுமே வழி காட்டும் என்று கடைசிவரையிலும் கொண்ட கொள்கையில் பிடிவாதமாய் உறுதியாய் நின்றவர் 

அரசியல் தெரியாதவர் என்று சொல்லப்படுபவர்கள் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை படித்துப் பார்த்தாலே அவர் தன் வாழ்நாளில் நம்பிக்கைகளும், அவமானங்களுக்கும் இடையே போராடிப் பார்த்த அத்தனை நிகழ்வுகளையும் நமக்கு புரியவைக்கும். பிரபாகரன் உருவாக்கிய தமிழீழத்தின் சமூக கட்டமைப்பு வெளி உலகத்தால் அதிகம் பார்க்கப்படாத பார்வைகள்.,

நான்கு புறமும் நீர் என்பதான தீவில் எட்டு புறமும் எதிரிகளாக இருந்தவர்களுடன் வாழ்ந்தவர் உருவாக்கிய ஒவ்வொன்றும் கடைசியில் அவரைப் போலவே இன்று கேள்விக்குறியாய் சூன்யத்தில் நிற்கிறது?

1985 ஆம் ஆண்டு தமிழர் புனர்வாழ்வு கழகம் தொடங்கப்பட்டது.  போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலைமைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கும், சொந்த இடங்களை விட்டு விட்டு வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும், அகதி முகாமில் ஆதரவற்று இருந்தவர்களுக்கும், தற்காலிக குடிசைகளிலும் இருந்தவர்களை இனம் கண்டு அவர்களை அரவணைத்து வாழ்க்கை கொடுப்பது இதன் கடமையாக இருந்தது. இதன் உருவாக்கத்திறகு முன்னதாக புலிகளின் ஊடகப்பிரிவு செயல்படத் தொடங்கியது.  முதலில் வானொலியில் ஆரம்பித்து இறுதியில் தொலைக்காட்சி சேவை வரைக்கும் கொண்டு வந்தார்கள்.  மிகுதியான பால் உணர்வை தூண்டும் காட்சிகளை தணிக்கை செய்யப்பட்டு அத்துடன் செய்தி அறிக்கைகள், நடப்பு நிகழ்வுகளை துல்லியமாக காட்டும் அளவிற்கு கடைசி வரைக்கும் தொடர்ந்து தமிழீழத்தில் ஒலிபரப்பு சேவை நடத்தப்பட்டது.  இந்திய அமைதிப்படை உள்ளே நுழைந்த போது முதலில் தாக்கப்பட்டது இந்த வானொலி சேவையே ஆகும்.

யுத்தத்தினால் பெற்றோரை, பாதுகாவலர்களை இழந்த பெண் பிள்ளைகளின் பராமரிப்புக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம். 1991 இல் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து போரில் பெற்றோரை இழந்த ஆண் பிள்ளைகளை பாதுகாக்க 1993 ஆம் ஆண்டு. காந்த ரூபன் அறிவுச்சோலை தொடங்கப்பட்டது. வெற்றிமனை என்ற அமைப்பின் மூலம் நடந்த போர்கள் மூலம் கண் முன்னால் உறவுகளை பறி கொடுத்து அடைந்த மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மனநிலை பாதிக்கப்பட்ட வர்களுக்கும் உயரிய சிகிச்சை அளித்து அவர்களை பராமரித்து மறுவாழ்வு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. 

மூதாளர் பேணகம் என்ற அமைப்பின் மூலம் போரினால் தமது பிள்கைளை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட முதியோரையும், சொந்த பந்தம் இல்லாமல் இருப்பவர்களையும், உறவினர்கள் இருந்தும் கைவிடப்பட்ட முதியோர்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்டது  1992 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பின் மூலம் தமிழர்களின் தமிழ் மொழியையும் அழிந்து கொண்டுருக்கும் கலை மற்றும் பண்பாடுகளையும் மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. தியாகி திலீபன் மருத்துவ சேவையின் மூலம் அரசாங்கம் உருவாக்கிய தடைகளை மீறி ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவாக்கிய மருத்துவமனைகள் மூலம் அத்யாவஸ்யமான மருந்துப் பொருட்களை வரவழைத்தும், பயிற்சியளிக்கப்பட்ட போராளிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.  தமிழீழ படைத்துறைப் பள்ளியின் மூலம் வளர்ந்து கொண்டுருக்கும் இளையர் கூட்டம் போரினால் அவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகமும், இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு தமிழீழ சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்டது. இதே ஆண்டில் பொதுக்கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டி வருடந்தோறும் பரிசு வழங்க தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை தொடங்கப்பட்டது.  1994 ஆம் ஆண்டு தமிழீழத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக வேளாண்மையும் கைத்தொழிலையும் உருவாக்கி சிறப்பானவர்களுக்கு பரிசு கொடுத்து சிறப்பிக்க உருவாக்கப்பட்டது. .

மக்களின் வங்கி சேவைக்காக தமிழீழ வைப்பகம் சட்டத் தேவைகளுக்காக தமிழீழ நீதி நிர்வாகத்துறை, நகர் நிர்வாகத்திற்காக தமிழீழ காவல் துறை இது போக மாணவர்களுக்கென்று விளையாட்டுத் துறையும் தொடங்கப்பட்டது.  மொத்தத்தில் தமிழீழ பகுதிகளில் வாழ்ந்த மக்களின் பொருளாதார சமூக கட்டமைப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

பிரபாகரன் உரையாற்றிய மாவீரர் உரைகள் என்பது பல விதங்களில் பயன் உள்ளதாக இருந்தது. போரில் இறந்த வீரர்களுக்கு கௌரவம் செலுத்தும் விதமாக அதே சமயத்தில் தமிழ் மக்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கத்தையும், சர்வதேச சமூகத்திற்கு புலிகள் இயக்கம் விடுக்கும் கோரிக்கை என்பதாக பல தளங்களில் விவாதப் பொருளாக அணைவராலும் உற்று கவனிக்கக் கூடிய வகையில் இருந்தது.  பிரபாகரனின் நோக்கத்தையும் விருப்பத்தையும் தனிப்பட்ட கொள்கைகளையும் புரிந்து கொள்வதாகவும் இருந்தது.

சங்கர் இறந்த தினமாக நவம்பர் 27 என்பதை கணக்கில் கொண்டு மாவீரர் தினம் என்று உருவாக்கப்பட்டு முதன் முதலாக இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து கடைசிகட்ட உக்கிர தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது இனம் தெரியாத அடர்ந்த காட்டில் இருந்து கொண்டு உரையாற்றிய பிரபாகரனின் உரை என்பது 2008 வரைக்கும் 19 வருடங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அதே தினத்தில் ஒலிபரப்பப்பட்டது.  உலக ஊடகங்களும், உலகத்தமிழர்களும் ஏன் சிங்கள ஆட்சியாளர்களுமே இதை வைத்து தான் புலிகளின் அடுத்த கட்ட நகர்வை புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது. 

மொத்த 19 வருட உரைகளின் மூலம் நம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையே போராட்டங்களும், ஒவ்வொரு கால கட்டத்திலும் தான் மாறத் தயாராய் இருந்த போதும் மதிக்காத சிங்கள ஆட்சியாளர்களின் மேல் இருந்த அவநம்பிக்கையின் ஊசலாட்டத்தையும் நமக்கு பல விதமாக புரிய வைக்கின்றது. பிரபாகரன் முதல் மாவீரர் உரை தொடங்கிய போது புலிகளின் அதிகாரப்பூர்வமான இறந்தவர்களின் எண்ணிக்கை 1207 பேர்கள்.. இதுவே 19 வருடங்களுக்குப் பிறகு 17,903 பேர்கள் இறந்ததாக மாவீரர் தின உரையில் குறிப்பிட்டார்.

"ஓர் இனத்தை பொறுத்தவரையிலும் வீரர்களை, பெண்களை, அறிவாளிகளையும் மதிக்காத இனம் காட்டுமிராண்டியாக அழிந்து விடும். எமது இயக்கத்தில் இப்போது வீரர்களுக்கு பஞ்சமாக இருக்கிறது. எமது போராளிகளை நினைவு கூறும் தினத்தை ஒரே நாளில் வைப்பதால் வீரச்சாவு அடைந்த மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிப்படையான வீரர்களை வரை ஒரே மாதிரி நினைவு கொள்ளப்படுகிறார்கள்.  காலப்போக்கில் குறிப்பிட்ட சில சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மரியாதை சிலருக்கு மட்டும் போவதை தடுப்பதற்காக இதை வருடந்தோறும் கொண்டாடப் போகிறோம்."

"நான் உயிருக்கு உயிராய் நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் விழ்ந்த போதெல்லாம் எனது இதய்ம் வெடிக்கும்.  ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை.  இந்த இழப்புகள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டி இருக்கின்றன"

"நாம் இனத்துவேசிகள் அல்லர். போர்வெறி கொண்ட வன்முறையாளர்களும் அல்லர்.  நாம் சிங்கள மக்களை எதிரிகளாவோ விரோதிகளாகவே கருதவில்லை. நாம் சிங்கள தேசத்தை அங்கீகரிக்கின்றோம்.  சிங்களப் பண்பாட்டை கௌரவிக்கின்றோம்.  சிங்கள மக்களின்  தேசிய வாழ்வில் அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை".

"நாம் எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்களினம் என்ற அந்தஸ்துடன் நிம்தியாக சுதந்திரமாக கௌரவமாக வாழ விரும்புகிறோம்.  எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள் என்பது தான் எமது மக்களின் எளிமையான அரசியல் அபிலாஷைகள்.  இந்த நியாயமான நீதியான நாகரிகமான எமது மக்களின் வேண்டுகொளை சிங்கள அரசு எப்போது அங்கீகரிகரிக்கின்றதோ அப்போதுதான் ஒரு நிரந்தர சமாதானமும் தீர்வும் ஏற்பட வாய்ப்பு உண்டு."

"ஆயுத பலத்தால் தமிழீனத்தை அடக்கி ஆள வேண்டும் என்றும், சிங்கள பௌத்த பேரின வாதத்தின் ஆதிக்க மனோநிலையில் சிறிதளவேனும் மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை.  இனத்துவேச அரசியல் சேற்றில் சிங்கள தேசம் மூழ்கிக் கிடக்கும் வரை தமிழரின் தேசிய அபிலாசைகள் பூர்த்தியாகது.  நீதியான நியாயமான அரசியல் தீர்வை நாம் சிங்கள ஆளும் வார்க்கத்திடம் இருந்தது எதிர்பார்கக முடியாது." 

"மனித நீதி எனும் அச்சில் இவ்வுலகம் சுழவில்லை என்பதை நாம் அறிவோம்.  இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை முன் வைக்கிறது.  இவ்வுலகில் ஓழுங்கு அமைப்பை பொருளாதார மற்றும் வணிக நலன்களே தீர்மானிக்கின்றன.  இன்றோ சார் நீதியிலோ மக்களின் உரிமை சார்ந்தோ நிற்கவில்லை.  நாடுகளுக்கிடையேயான சர்வதேச உறவுகளும் அரசியல் நெறிகளும் இத்தகைய நல்களைச் சார்ந்தே தீர்மானிக்கபடுகின்றன.  எனவே எங்களது அறம் சார்ந்த நியாயங்கள் உடனடியாக சர்வதேச சமகத்தான் அங்கிகரிக்கபடும் என் எதிர் பார்க்க முடியாது.  ஆனால் அதே நேரம் அந்த அங்கீகாரத்திற்காக போராடியே ஆக வேண்டும். உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன."

"சமாதானத்திற்கான போர் என்றும் தமிழரை விடுதலை செய்யும் படையெடுப்பு என்றும் பரப்புரை செய்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்புப் போர் தமிழரின் அமைதியக் குலைத்து தமிழரை அகதிகளாக்கி தமிழரை அடிமைகளாக்கி தமிழரின் சமூக பொருளாதார வாழ்வைச் சீரழித்து தமிழருக்கும் என்றுமில்லாத பெரும் அவலத்தை கொடுத்து இருக்கிறது. சமாதானத் தத்துவம் பேசி உலகத்தை ஏமாற்றிய போதும் இது தமிழருக்கு எதிரான போர் என்பதை அரசு நடையில் காட்டியுள்ளது.  இராணுவ ஆட்சி நடைபெறும் தமிழ் பகுதிகளில் மிக மோசமான ஒரு இன அழிப்புக் கொள்கை மறைமுகமாக செயற்படுகிறது என்பதையே இது காட்டுகிறது."

"நாம் சமாதானத்திற்கான விரோதிகள் அல்லர். அன்றி சமாதான வழியில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எதிரானவர்களும் அல்லர்.  தாம் வேண்டுவது உண்மையான சமாதானத்தையே. எமது மக்கள் எமது மண்ணில் நிம்மதியாக சுதந்திரமாக அந்நியத் தலையீட இன்றி அமைதியாக வாழ்ந்து தமிழ் அரசியல் வாழ்வைத் தாமே தீர்மானிக்ககூடிய உண்மையான கொளரவமான நிரந்தரமான சமாதானத்தையே நாம் விரும்புகின்றோம். இந்த சமாதான வாழ்க்வை தமிழருக்கு வழங்க சிங்கள பெயத்த பேரினவாத சக்திகள் இனங்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதே."

"தமிழரின் தாயகம், தமிழரின் தேசியம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அவற்றின் அடிப்படையில் ஒரு அரசியற் தீர்வுத் திட்டம் வகுப்பட வேண்டுமென்ற நாம் திம்புக் காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம்."

"சிங்களம் ஒரு பெளத்த நாடு.  அன்பையும் அறத்தையும் ஆன்மீக ஞானத்தையும் போதித்த காருணிய மகானை வழிபடும் தேசம்.  தர்மத்தின் தத்துவத்தில் தழைத்த பௌத்த சமகத்தில் இனக்குரோதமும் போர் வெறியும் விஸ்வரூபம் பெற்று நிற்பது எமக்கு வியப்பாக இருக்கிறது. தமிழர் தேசம் போதையும் வன்முறையையும் விரும்பவில்லை.  அமைதி வழியில் அகிம்சை வழியில் தர்மத்தை வேண்டி நின்ற எமது மக்கள் மீது வன்முறைத் திணித்தவர்கள் யார்நாம் எமது உயிரையும் உடைமையும் பாதுகாக்க ஆயுதமேந்தி போராட வேண்டிய நிர்பபந்த சூழ்நிலையை உருவாக்கிய விட்டவர்கள் யார்சிங்கள பௌத்த தீவிரவாதமே தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி தேச சுதந்திர போராட்டத்தில் குதிக்க வைத்தது."

"ஆட்பலம், ஆயுதபலம், இராணுவ பலம், மக்கள் பலம் என்கிற ரீதியில் சகல பலத்தோடு நாம் வலுப்பெற்று நின்ற போதும் எமது தாயகத்தை மீட்டெடுக்கும் போதிய சக்தி இருந்த போதும்  நாம் சமாதான பாதையை கைவிடவில்லை. உயிர் அழிவையும் இரத்தக் களரியையும் தவிர்த்து சமாதான வழியில் நாகரிகமான முறையில் தமிழரின் சிக்கலை தீர்ககவே நாம் விரும்புகிறோம்."

"தமிழர் தாயகத்தில் அமைதி நிலை தோன்றினாலும் இயல்புநிலை தோன்றவில்லை.  உயர் பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் எமது மக்களின் வாழ்விடங்களை சமூக பொருளாதர பண்பாட்டு மையங்களை சிங்கள ஆயுதப் படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன. சிறிய அளவிலான புவியற் பரப்பில் குடிசன நெரிசலும் கொண்ட யாழ்பாணக் குடாநாட்டை 40 000 படைகள் ஆக்ரமித்து நிற்கின்றனர். எமது மக்கள் தமது இயல்பபு வாழ்க்கை நடத்த முடியாதவாறு மூச்சுத் திணறும் ஆக்கிரமிப்பு என்றுமே பதட்ட நிலையைத்தான உருவாக்குகின்றது.".

"பேச்சு வார்த்தைகளின் தொடக்கத்திலேயே எமது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஆரம்பித்தலேயே தீர்த்து விட வேண்டும் என்பதே எங்கள் தலையாய கோரிக்ககை."   

"முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சனை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வு காண ஆளும் கட்சி முயற்சிப்பதும் எதிர்ககட்சி எதிர்பபதும் பின்பு எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக மாறி மீண்டு அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்த சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது."

"இடைக்கால தீர்வுமின்றி நிரந்தர தீர்வுமின்றி நிலையான அமைதியும் இல்லாமல் நிம்மதியான வாழ்வும் இன்றி நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்கள தேசமானது தமிழனத்தை அரவணைத்து இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம் அரவணைத்து இணைத்து வாழவும் விருப்பமில்லை. அதே சமயம் பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் வீடின்றி விடுதலையின்றி எதிர்காலச் சுபிட்சமின்றி சூனியமாக அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழ முடியாது.  பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லை கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்து விட்டோம்."

"பண்டைய இதிகாசங்கள் புனைந்து விட்ட புரளிகளால் சிங்கள இனம் வழி தவறி சென்று கொண்டுருக்கிறது. தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்து கிடக்ககிறது.  இதனால் சிங்கள பௌத்த பேரினவாதம் இன்றோரு தேசியச் சித்தாந்தமாக சிங்கள தேசத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த கருத்தாக்கம் பாடசாலைகள் பல்கலைக்கழங்களில் இருந்தும் பத்திரிக்கை துறை வரை ஊடுருவி நிற்கிறது. மாணவர்களோ, புத்திஜீவிகளோ, எழுத்தாளர்களோ அரசியல்வாதிகளோ சுயமாகச் சிந்திக்க முடியாதபடி சிங்கள மூலத்தை இந்த கருத்தாக்கம் சிறைப்பிடித்து வைத்து இருக்கிறது.  பௌத்த பேரினவாதக் கருத்துக்கள் சிங்கள மனிதனின் மன அமைப்பின் ஆழத்தில் அழியாத கோடுகளாக பொறித்து விடப்பட்டு இருக்கின்றன.  இதனால் சிங்கள தேசம் போர் வெறி பிடித்து போர் முரசு கொட்டுகிறது."

"பௌத்தம் ஒர் ஆழமான ஆன்மிகத் தரிசனம்.  அன்பையும் அறத்தையும் ஆசைகள் அற்ற பற்றற்ற  வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மிகத் தத்துவம்.  இந்த தார்மீக நெறியை 2000 ஆண்டுகளுக்கு மேல் கடைபிடிப்பதாக கூறிக்கொள்ளும் சிங்களம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இனவாத விசத்தினுள் மூழ்கிக் கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமாக வன்முறையாகக் கோரத்தாண்வம் ஆடுகிறது. 60 ஆண்டுகளாக வன்முறையற்ற அகிம்ச வழியிலும் ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்ட சிங்கள உலகிலே சிறிதும் மனமாற்றம் நிகழவில்லை.  எத்தனையோ இழப்புகள், அழிவுகள், எண்ணற்ற உயிர்பலிகள் நிகழ்ந்த போதும் சிங்கள தேசம் மனம் திருந்தவில்லை.  இதற்கு சர்வதேச சமூகத்தின் பொருளாதார இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டு கொடுப்புகளும் ஒரு பக்கச் சார்பாக தலையீடுகளும் தான் காரணம்."

"எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திரத்திற்காக போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்."

எங்கள் காலத்தில் எங்கள் லட்சியத்தை அடைந்து விடுவோம் என்பதைவிட நியாயமான தீர்வுகள் எட்டப்படாதவரைக்கும் இந்த போராட்டம் அடுத்து வருபவர்கள் முன்னெடுத்து செல்வார்கள்.

தமிழீழம் பிரபாகரன் கதையா? என்று நான் எழுதியுள்ள புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி இது. வேலுப்பிள்ளை பிரபாகரன் பேசிய மாவீரர் உரைகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பட்ட கட்டுரை இது. 

பிரபாரகன் குறித்து அவரின் தனிப்பட்ட கொள்கைகள் குறித்து கடந்து வந்து பாதைகளில் பெற்ற அனுபவங்களின் தொகுப்புக்கு இங்கே சொடுக்கவும். பிரபாகரன் சர்வாதிகாரம் காரணம். 

Saturday, January 23, 2010

பிரபாகரன் சமாதானத்தை விரும்பாதவர்

பிரபாகரன் உருவாக்கிய " முதல் கரும்புலி தாக்குதலினால் " அதிர்ந்த இலங்கை ராணுவம் " யாழ்பாண முற்றுகை "  யை பாதியில் பரிதாபமாய் நிறுத்த வேண்டிய சூழ்நிலை. மறுபக்கம் ரா கொடுத்த அழுத்தங்கள் கொடுத்த பாதிப்புகள் ஜெயவர்த்னேவுக்கு முழி பிதுங்கி இந்தியா எதிர்பார்க்கும் ஒப்பந்தத்திற்கு தலையாட்ட வேண்டிய பரிதாபம்.
நரி ஞானி ஜெயவர்த்னே ஊசிப்போன பிரியாணி போல் நாறிக்கொண்டுருந்த நேரமது.  வல்லரசு தனது நெற்றிப்பொட்டில் வேகமாக தட்டிக்கொண்டுருந்தது.  ஒருவரை வழிக்கு கொண்டு வந்தாகி விட்டது.  அடுத்தது?  பிரபாகரன் பழி எடுத்துக்கொண்டுருக்கிறார்.  என்ன செய்வது?

பூடான் நாட்டில் நடந்த திம்பு பேச்சு வார்த்தை முதல் பெங்களூர் மாநாடு வரைக்கும் விடுதலைப்புலிகளால் முன் வைக்கப்பட்ட தீர்மானங்களை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  காரணம் சமாதானத்திற்கான கதவுதகள் திறந்து இருந்த போதிலும் பிரபாகரன் என்ற ஆளுமை தன்னுடைய சுயநலத்துக்காக அத்தனையும் புறக்கணித்தார் என்பது இன்று வரையிலும் வைக்கப்படும் மொத்த குற்றச்சாட்டு.  அது உண்மையா?

1.  தமிழ் மக்கள் தனித்தன்மையான தேசிய இனக்கட்டமைப்பு உள்ளவர்கள்.  கடந்த கால நிகழ்வுகள், போராட்டங்கள், ஒப்பந்தங்கள், சிங்கள ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட உரிமைகள் என்று மொத்தத்திலும் சிங்கள தமிழ் இனம் என்பது சேர்ந்து வாழமுடியாத சூழ்நிலையில் உருவாக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

காரணம் இதற்கு முன்னால் நடந்த கேலிக்கூத்தான ஒப்பந்தங்கள்.  ட்டலி சேனநாயகா, பண்டாரா நாயகா ஒப்பந்தம், சீறீமாவோ பண்டாரா நாயகா ஒப்பந்தங்கள் என மொத்தமும் வெறும் தீப்பந்தமாகத் தான் போய் திருட்டுத்தனத்தின் உச்சமாக இருந்ததும், அதை தலைவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டுருப்பதும் தான் நடந்தது.

2.  தமிழர்கள் வந்தேறிகள் அல்ல.  பூர்வகுடியான அவர்களுக்கு மொத்தமான உரிமைகளும், அத்தனை பாக்யதைகளும் உண்டு என்பதை உணர வேண்டும். சிங்களர்களைப் போல தமிழர்களும் தனித் தன்மையான தாயகம் உண்டும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

காரணம் இராணுவம் போர் தொடுக்கின்றது என்றால் முதலில் குறிவைத்து தாக்கப்படுவது தமிழர்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடுதல், வழிபாட்டுத்தலங்களை, நூலகங்களை குறிபார்த்து அழிப்பது என்று கனஜோராக நடந்து கொண்டே இருந்தது.

3.  உருவாக்கும் தமிழர்களின் உரிமையும், எதிர்பார்க்கும் தனித்தன்மையாக தேசத்திற்கும் எந்த காலத்திலும் சிங்களர்களால் தீர்மானிக்கமுடியாத அரசியல் சட்ட முன்வரைவு வேண்டும்.  வடக்கு கிழக்கு என்று தமிழர்களின் தாயகத்தை இணைத்து மொத்த தமிழர் தேசமாக உருவாக்கப்பட வேண்டும்.  தமிழர், முஸ்லிம், சிங்களர்கள் என்று பிரிக்கும் பட்சத்தில் எதிர்கால அமைதிக்கு என்றும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.

காரணம் தந்தை செல்வா ஆட்சியாளர்களிடம் கேட்ட தமிழர்கள் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?  சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை, அது போல தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை என்ற இந்த இரண்டு பகுதிகளையும் சுயாட்சி மாநிலமாக அதே சமயத்தில் இரண்டையும் இணைத்து இந்தியாவில் உள்ள மத்திய அரசு போல மொத்த இலங்கைக்கும் ஒரு கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் அவரவர் வாழ்க்கையும் தனித்தன்மையுடன் பாதுகாத்துக் கொண்டு செல்லுதல்.  அமைதிக்கு அமைதியும் ஆச்சு.  இதற்குப் பிறகு எப்படி பிரச்சனைகள் வரும்?  ஆனால் எவர் கேட்டார்கள்?

4.  தமிழர்களின் வாழ்விடங்களில் இலங்கை இராணுவத்தின் ஆளுமையும், அக்கறையும், காவல்பணியிடங்களும் இருக்கும் பட்சத்தில் அதுவே அமைதியை கெடுக்கும் சூழ்நிலையைத்தான் உருவாக்கும். ஆகவே  நீக்கப்படவேண்டும்?

காரணம் சிங்களர்கள் வாழும் பகுதியில் தேவையான எல்லைக் காவல் படை முதல் அத்தனை பாதுகாப்பு சமாச்சாரங்களும் எப்போதும் தயாராய் இருக்கும்..  ஆனால் தமிழர்கள் பகுதியில் கலவரம் என்று தொடங்கினால் முதலில் கைது செய்யப்படுவதே தமிழர்களைத்தான்.  அது போக ஜாமீன் என்பதோ, சம்மந்தப்பட்டவர்களை பார்க்க முடியும் என்பதே நினைத்தே பார்க்க முடியாது?  நேராக பரலோகம் தான்.

5.  சகல தமிழ் மக்களுக்கும் சமமான உரிமைகளும், குடியுரிமைகளும் வேண்டும்.  தமிழர்களின் மொழியான தமிழ்மொழியே ஆட்சி மொழியாக, அரசாங்க மொழியாக இருக்க வேண்டும்.

காரணம் சிங்கள தலைவர்கள் கொண்டு வந்த ஆட்சி மொழி சிங்களம் என்பது மொத்த அரசாங்கத்திலும், நீதிமன்றத்திலும் சிங்களம் இருந்தால் மட்டும், தெரிந்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.  மெதுமெதுவாக தமிழை மறந்தே ஆக வேண்டும். சரி கல்வி பாடசாலை முதல் மற்ற அத்தனை அரசாங்க அலுவலகங்களிலும் சிங்களம் தெரிந்த போதிலும் தமிழர்களுக்கு ஒரு சட்டம்.  சிங்களர்களுக்கு ஒரு சட்டம்?  இடதும் குற்றம்.  வலது திரும்பினாலும் குற்றம்????

தந்தை செல்வா என்றழைக்கப்படும் செல்வநாயகத்திற்கு முன்னால் போராடிக்கொண்டுருந்த இனவாத தலைவர்கள் அத்தனை பேரும் தமிழர்களின் நலன் என்பதை விட மொத்தமாக சிங்கள -தமிழர்கள் நலன் என்றும், இலங்கை என்பதை அமைதியாக அணைவரும் ஒன்றாக சேர்ந்து, ஆண்டு கொண்டுருந்த ஆங்கிலேயர்களை விரட்டி விட்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டிய அவஸ்யம் என்பதாக கருத்தில் கொண்டு போராடிப் பார்த்தவர்கள்.


பின்னால் வந்த தந்தை செல்வா காந்திய வழியான போராட்டங்கள் என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அத்தனை சிங்கள தலைவர்களுக்கும் காவடி தூக்குபவராக இருந்த போதிலும், உரிமைக்கான போராட்டங்களை முன் எடுத்து போராடிப்பார்த்த போதும் ஆண்டு கொண்டுருந்த எந்த தலைவர்களும், எவரும் அசைந்து கொடுக்கக்கூட தயாராய் இல்லை.  காரியம் ஆகும் வரைக்கும் பசப்பு வார்த்தைகள். அதுவே ஒரு அளவிற்கு மேல் போனதும் கை கழுவுதல் என்ற கண் எதிரே அத்தனை அக்கிரமங்களையும் அட்டகாசமாக நிறைவேற்றிக்கொண்டுருந்தனர்.  ஆதரவுக்கு ஆதரவும் ஆச்சு.  பெற்ற தமிழர்களின் ஆதரவை வைத்துக் கொண்டு தான் நிணைத்த சிங்கள மக்களுக்குத் தேவையான அத்தனை முன்னேற்பாடுகளையும் உருவாக்கிக் கொள்ள முடிந்தது?    எப்பூடீ???????

அப்படியென்றால் நம்முடைய தமிழ் தலைவர்கள்.  " தயை கூர்ந்து தமிழ் மக்களே அமைதியாய் இருங்கள்.  நமக்கான விடிவு இன்னும் வரவில்லை.  நம்பிக்கை இழக்காதீர்கள்.  காந்திய வழி என்பது இறுதி தீர்வு.  ஆனால் காலம் நாம் அடைய வேண்டிய கரையை காட்டும்.  அது வரைக்கும் நாம் பொறுமையை இழக்கக்கூடாது?"    என்று மக்களின் ஆற்றாமையை அமைதிப்படுத்தினார்கள்?????

பின்னால் வந்த அமிர்தலிங்கத்தை ஜெயவர்த்னே ஏறக்குறைய புழுவுக்குச் சமமாக மிதித்ததும், பாராளுமன்ற கூட்டத்தில் சொல்ல முடியாத அளவிற்கு கேவலத்தின் உச்சகட்டமாய் நடத்திய போதும் அவரால் மீறவும் முடியவில்லை.  மாறவும் முடியவில்லை.   இந்திரா காந்தி, கலைஞர் என்று காவடி எடுத்தாரே தவிர இறுதியில் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த தமிழர்கள் கூட ஒரு அளவிற்கு நம்பிக்கை இழக்கும் சூழ்நிலைதான் உருவானது.

இன்றைய பிரபாகரன் என்பவர் கூட அமிர்தலிங்கம் பார்க்க வளர்ந்தவர். இடையில் இயக்கப் போராளிகளுக்குள் பிரச்சனை உருவான போது நல்ல புரிதல்களை உருவாக்கியவர்.  ஒரு அளவிற்கு மேல் இளையர் கூட்டம் வெகுண்டு எழுந்த போது அமைதிப்படுத்த முடியாமல் தடுமாறி நின்றவர்.  அவரே பூனைக்கும் பாலுக்கும் காவலாக இருந்தவர்.  தன்னுடைய உயிர் சிங்களர்களால் பறிக்கப்படுமா?  இல்லை போராளிகளால் போக்கப்படுமா? என்று நாளொரு வண்ணமும் பொழுதொரு அவஸ்த்தையுமாக மரண வாழ்க்கை வாழ்ந்தவர்.  இறுதியில் விடுதலைப்புலிகளினால் மேலோகம் அனுப்பப்பட்டவர். ஆனால் விடுதலைப்புலிகள் நாங்கள் இல்லை என்று எப்போதும் போல அறிக்கை விட்டனர்.

ஒவ்வொரு நிகழ்வுகளையும் பார்த்து, கேட்டு, உணர்ந்து வந்த பிரபாகரன் இனி எந்த காலத்திலும் இவர்களை மாற்ற முடியாது.  இனி வாயால் பேசினால் உரிமைகள் கிடைக்காது. இவர்களை உதைத்தால் தான் உண்மையான உரிமைகளை தமிழர்கள் பெற முடியும் என்பதை உணர்ந்த காரணத்தினால் மட்டுமே தான் தேர்ந்தெடுத்த ஆயுதப்பாதை தவறு என்று உணரும் சூழ்நிலை உருவாகாமல் கடந்து போய்க்கொண்டே இருந்தது.  அதுவும் ஜெயவர்த்னே ஆளத் தொடங்கிய போதும் இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போதிலும் அளவு கடந்த அவரின் தமிழர் வெறுப்பு என்பது சாதாரண அப்பாவி தமிழ் மக்களுக்கே பேரிடியாக இருந்தது.

நம்மவர் பிரபாகரன்.  சொல்லவா வேண்டும்.  கண்ணுக்கு கண்.  பல்லுக்கு பல்.  ஆனால் இதிலும் ஒரு ஆச்சரியம்.  சிங்கள தலைவர்களைப் பொறுத்தவரையில் தமிழர்கள் என்பவர்கள் அத்தனை பேர்களுமே போராளிக்குழு தான்.  ஆனால் விடுதலைப்புலிகள் சிங்கள அப்பாவி மக்கள் மேல் தாக்குதல் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  இறுதி வரையிலும் போர் தர்மம் என்பது கடைபிடிக்கப்பட்டது.  முள்ளிவாய்க்கால் வரைக்கும்.  வேறுவழி இல்லை என்ற சூழ்நிலையில் கடந்த மே மாதம் நடந்த இறுதிப்போரில் மொத்த வாழ்வாதாரமான அணை மட்டும் உடைக்கப்பட்டுருக்குமேயானால் இன்று தேர்தலும் இருக்காது?  பொது வேட்பாளர் பிழைத்து இருப்பாரா என்பதும் சந்தேகம்?   சிங்கள பெரும்பான்மை என்பது இன்றைய சூழ்நிலையில் சிறுபான்மையாகி சிறுத்த குட்டிப்படையாய் பக்கியாய் மாறியிருக்கும்.

பிராந்திய நலனை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டிக்கொண்டுருக்கும் இந்தியாவின் எறிகணை பார்வையை வேறு வழியே இல்லாமல் ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் ஒரு ஒரமாக பார்வையாளனாக அமர்ந்து பார்க்க வேண்டிய தர்மசங்கட நிலைமை பிரபாகரனுக்கு.

வரவில்லை என்றாலும் குற்றம்.  வந்து எதிர்த்தாலும் குற்றம். அது தான் திம்பு தொடங்கி பெங்களூர் வரைக்கும் நடந்தது.  இந்த பிரச்சனையை முழுமையாக புரிந்து கொண்டவர் தீட்சித் என்ற போதிலும்,  இந்த புதிர் பிரச்சனையை நாங்கள் அவிழ்த்துக் காட்டுகிறோம் என்று ராஜீவ் உருவாக்கிக் கொண்டுருக்கும் வீண் பிடிவாதங்களும், அவருக்குப் பினனால் இருக்கும் வானளாவிய அதிகார வர்க்கத்தினரையும் எப்படி எதிர்கொள்வது?

சிங்களர்கள் என்றால் சிரத்சேதம் செய்துவிடலாம்.  இது இந்தியா?  தாய் தந்தையர் நாடு.  தலைமுறைகளும், நம்மை இப்போது வளர்ப்பவர்களும், வளர்த்தவர்களும், ஆதரிப்பவர்களும் என் மொத்தமாக தமிழ்நாட்டின் உள்ளே இருக்க எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்து விடமுடியாது?
இடது வலது இரண்டு பக்கத்திலும் பிரச்சனை?   யோசனை என்பதோ பேச்சு என்பதோ தேவையில்லை என்று கருதுபவர் பிரபாகரன்.  காரணம் இது அரசியல் கட்சி அல்ல.  செயல் ஆமாம் செயல் மட்டுமே முக்கியம் என்று அனைவருக்கும் உணர்த்தி வாழ்ந்து கொண்டுருப்பவர். சாத்யமில்லாத சமாதான பேச்சுவார்த்தைகளை விரும்பாத பிரபாகரனை கொழும்புவில் இருந்த இந்திய தூதரகத்தில் அரசியல் பிரிவில் செயல்பட்டுக்கொண்டுருந்த அதிகாரி ஹர்தீப் பூரி யாழ்பாணத்திற்கு வருகை தந்து (1987 ஜுலை 19) பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்தார்.  அவருடைய அலுவலகத்தில் சந்தித்த பிரபாகரனுக்கு புதுடெல்லியின் அழைப்பு கொடுக்கப்பட்டது.

காரணங்கள் எதுவும் விளக்கப்படவில்லை.  தமிழர்களுக்கு உண்டான தீர்வு உடன்படிக்கைகள் ராஜீவ் காந்தி மூலம் உருவாக்கப்பட்டவைகளை விளக்கும் பொருட்டு என்று சொன்ன போதிலும் வேறு வழி எதுவுமில்லாத பிரபாகரன் அந்த ஆட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய துர்பாக்ய நிலைமை.  அனுப்பி வைக்கப்பட்ட இந்திய ராணுவ விமானத்தின் (1987 ஜுலை 23 யாழ்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவில் வளாகம்) மூலம் உடன் யோகரெத்தினம், தீலிபனுடன் சென்னையை நோக்கி பயணித்தார்.  அப்போது சென்னையில் இருந்த ஆன்டன் பாலசிங்கத்திடம் தமிழ்நாட்டு காவல்துறையினர் பிரபாகரன் வருகையை மட்டும் தெரிவிக்க, விமான நிலையத்தில் இணைந்து கொண்டவர் மொத்தமாக புதுடெல்லியை நோக்கி பயணம் செய்தனர்.  விமான நிலையத்தில் அதிகாரி பூரியிடம் என்ன வகையான தீர்வு என்று கேட்ட போதிலும் பிரபாகரனிடம் சொன்ன அதே பதில் தான் சொல்லப்பட்டது.

"உங்களுக்கு மொத்த விசயங்களும் டெல்லியில் அதிகாரி தீட்சித் தெரிவிப்பார்".

தந்திரமென்றாலும் மந்திரம் போல் ஒவ்வொன்றும் நடந்து கொண்டுருந்தது.  டெல்லி விமான நிலையத்தில் இருந்து அசோகா நட்சத்திர உணவு விடுதியின் மேல்தளம் வரைக்கும் கருப்பு பூனை பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்டனர்.  ஏற்கனவே செய்திருந்தபடி மொத்த வெளியுலக தொடர்பும் துண்டிக்கப்பட்ட நாகரிக சிறைவாசம் தொடங்கியது.
திரைப்பட(ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம்) கதாநாயகன் போல் அதிகாரி தீட்சித் வந்து அமர்ந்தார்.  பற்ற வைத்த சுருட்டு புகையை மீறி வெளிவந்த அவருடைய வார்த்தைகள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டது போலிருந்து.  இறுதியில் " நீங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வேண்டும் " என்று ஒரு ஆங்கிலத்தில் அடிக்கப்பட்ட ஒரு கத்தை தாள்களை முன்னால் வைத்தார்.  பாலசிங்கம் படித்து முடித்து சொன்ன போது பிரபாகரன் முகம் வெளிறியது மட்டுமல்லாமல் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத வெறியையும் உருவாக்கியிருந்தது.

ஜெயவர்த்னே உருவாக்கிய அதே திட்டம்.  தமிழர்கள் வாழும் பகுதியை மூன்று கூறுகளாக பிரித்து, தமிழர், சிங்களர், முஸ்லீம் என்று துண்டாடி இருந்தது மட்டுமல்லாமல் திருகோணமலை பகுதியும், சிங்களர்களுக்கான தனிப்புரிதலுடன்.

நரித்தனமாக தன்னுடைய வேலையை காட்டியிருந்த ஜெயவர்த்னே ஜெயிக்கத் தொடங்கிய முதல் அடி அது.  முதல் கோணல் முற்றிலும் கோணல்.  அதனால் என்ன?  வெற்றிகரமாக ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் தனது பயணத்தை தொடங்கியது

Thursday, December 31, 2009

பிரபாகரன் இறுதி மொழி

பிரபாகரன் தொடங்கிய ஆயுதப் போராட்டத்தை தாண்டி, பதுங்கு தாக்கு என்ற கொரில்லா முறையில் இருந்து மாறி, இராணுவ தாக்குதல்கள் என்ற முறைப்படியான போராட்டம் தொடங்கும் இந்த காலகட்டத்தில் அவருடைய புரிதல்களையும், உண்டான நிகழ்வுகளில் இருந்து அவருக்கு உருவான தாக்கத்தையும் அவருடைய பிரபாகரன் "மொழியை கண்டுணர்ந்து" ஈழ முதலாம் யுத்தத்தில் நுழைவோம்.

" தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச் சின்னமானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால்தான் எமது இயக்கத்திற்கு விடுதலைப்புலிகள் என்று பெயரிட்டேன். புலிச்சின்னமானது தமிழ் தேசியத்தின் புத்தெழுச்சியை உருவகப்படுத்துகிறது. அத்துடன் கொரில்லா யுத்த முறையையும் புலிச்சின்னம் குறித்து நிற்கிறது"

"இந்த போராட்ட அனுபவங்கள் எனது இலட்சியத்தை ஆழமாக வலுப்படுத்தி இருக்கின்றன. எனது பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கின்றன. இந்த நீண்ட போராட்டத்தின் பின் இந்த கருப்பு "ஜுலைக்குப் பிறகு தமிழ் மக்களின் சகல பிரிவினரையும் ஒரே இலட்சியத்தின் கீழ் ஆட்சியாளர்கள் இணைத்து உள்ளனர்"

" என்னுடைய கொரில்லா போராளியின் வாழ்க்கை துயரமும், விரக்தியும் கலந்தது. நாங்கள் தேர்ந்தெடுத்த ஆயுத பாதை என்பது மிகச் சரியானது என்பதை கடந்த 12 ஆண்டுகளில் உணர்ந்துள்ளோம். மக்களும் இப்போது அதை உணரத் தொடங்கியுள்ளனர்."

" உமா மகேஸ்வரனுக்கும் எனக்கும் உண்டான பிரிதல் என்பது தனிப்பட்ட விரோதம் அல்ல. ஒரு புரட்சி இயக்கத்தின் தலைவர் மொத்தமாக ஒழுக்கம் சார்ந்த விசயங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒழுக்கம் குறைந்து, குழப்பம் மலிந்து மொத்தமும் கொள்கைகள் அத்தனையும் சிதைந்து போய்விடும். உமா மகேஸ்வரனை இயக்கத்தின் தலைவராக நியமித்தவன் என்ற முறையிலும், மத்திய குழுவின் தீர்மானத்தின்படியும் வெளியேற்ற வேண்டிய கட்டாயம்"

" 2,9,1982 நான் எழுதிய கடிதத்தின்படி மொத்த மற்ற இயக்கங்களுடன் சேர்ந்து செயல்பட தயாராய் இருப்பதையும், ஆனால் நீண்ட கால செயல் அடிப்படையில் இருக்க வேண்டிய அவஸ்யத்தையும் தெரிவித்த போதிலும், அவர்கள் விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டுவதை விட சொல்லுக்கும் செயலுக்கும் இடையே உள்ள வித்யாசத்தை விலக்கி செயல்பட்டுருந்தால் மகிழ்ச்சி"

" சாதாரண இயல்பான வாழ்க்கை வாழ ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். நான் அந்த வாழ்க்கை வாழ விரும்பவில்லை. மேலும் மற்ற இயக்கங்களுடன் என்னுடைய மேலாதிக்கம் இணைந்து செயல்பட முடியாமை இருப்பதாகக் கூறுவது எல்லாம் திட்டமிட்டு சொல்லக்கூடிய குற்றச்சாட்டு. நாங்கள் பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்பவர்கள் அனைவரும் பகிர்ந்து அளிக்கக்கூடிய ஒரு சமாதான உடன்படிக்கை தொடக்கம் முதலே ஏற்படுத்திக்கொடுத்து இருந்தால் நாங்கள் ஏன் ஆயுதம் தூக்கப் போகிறோம்?"

" கருப்பு ஜுலை என்பது ஏற்கனவே திருகோணமலையில் நடந்து கொண்டுருந்த கலவரத்தின் திட்டமிடப்பட்ட தொடர்ச்சி. நாங்கள் காரணமல்ல. கவனித்தவர்களுக்குப் புரியும். வட்ட மேஜை மாநாடும், சமாதான ஒப்பந்தங்களும் என்னைப் பொறுத்தவரையிலும் காலவிரயம். கடந்த பாடங்கள் இதைத்தான் உணர்த்துகிறது."

" தமிழர் விடுதலைக்கூட்டணி (அமிர்தலிங்கம்)யின் சந்தர்ப்பவாத அரசியலானது எங்களது விடுதலைப் போராட்டத்தை நிச்சயமாக பின்னுக்குத் தள்ளத்தான் செய்கிறது. திட்டவட்டமான கொள்கைகள் ஏதும் இல்லை. பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை அடிமையாகவே வைக்க முயற்சிக்கின்றார்கள். மேலும் எங்களை முடக்குவதிலும் கவனம் செலுத்துகிறார்கள். இந்த கறுப்பு ஜுலை என்பது தமிழீழம் முழுக்க பரவிக்கொண்டுருக்கிறது. இதை நாங்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்வோம் என்று தடுப்பதில் முனைப்பாக செயல்படுகிறார்கள்"
" இந்தியாவின் ஆதரவும் அனுதாபமும் போதுமானது. எங்களது விடுதலையை நாங்களே வென்று எடுத்துக்கொள்ள மனத்துணிவு இருக்கிறது. தங்களுடைய உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த நாங்கள் தீர்மானிக்கும் தேசிய இராணுவத்தின் உதவியோடு எந்நாளும் சுதந்திரமாய் வாழும் தமிழீழ நாடு வாழப்பட்டால் ஒழிய ஒருபோதும் தமிழர்கள் வாழப்போவதில்லை. மறுப்பவர்கள் கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்காதவர்கள்"

" திருகோணமலை படைதளத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு இன்று வந்து ஆயுத தளவாடங்களை இறக்கிக்கொண்டுருக்கும் அமெரிக்கா நாளைய இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் என்பதில் ஐயமில்லை"

" நாங்கள் கனவு காணும் தமிழீழம் ஒரு சோசிலிச அரசாக அமையும். தனிநபர் சுதந்திரமும், சமத்துவமான சமூக அமைப்பும், ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயக நாடாக மலரும். தங்கள் பொருளாதரத்தையும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் பேணி காப்பதில் அக்கறை கொண்டு விளங்கும். தமிழீழம் என்பது அணிசேரா கொள்கை நாடாக, குறிப்பாக இந்தியாவோடு நேச உறவோடு விளங்கும். இந்து மகா சமுத்திரத்தை அமைதி பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையை கொண்டு விளங்கும். இதை அடைய கால வரையறை இருக்க முடியாது. உலக அரங்கில் உருவாகும் மாற்றத்தைப் பொறுத்து இது அமையும்"

(இத்துடன் ஐந்தாம் பாகம் முடிவடைந்தது)


2009 ஆம் ஆண்டு புடம் போட்டு புதிய பாதையை காட்டிய ஆண்டு.

இலங்கை தமிழர்களின் வரலாற்றில் இனி வரும் ஆண்டுகளில் என்றுமே மறக்க மறக்க முடியாத ஆண்டு.

உலகத்தில் வாழும் அறிவுஜீவிகள் பேசும் பிரபாகரன் ஆளுமை செலுத்திய சர்வாதிகாரம் சரியா என்பதையும், பிரபாகரன் தவிர்த்து மற்ற ஜனநாயக தலைவர்கள், தமிழர்களின் "ஒற்றுமையை" ஜனநாயகத்தை போற்றுகிறோம்", "வளர்க்க விரும்புகிறோம்" என்பவர்களின் அத்தனை "நல்ல விசயங்களையும்" நாம் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு பல பாடங்களையும் உருவாக்கிய உருவாக்கிக்கொண்டுருக்கும் ஆண்டு?

மொத்தமான கொடூரங்கள் கண்முன்னே நடந்தபோதிலும் உலகம் முழுக்க வளர்ந்த நாகரிக மனிதர்களும், தலைவர்களும்,நாடுகளும் எந்த அளவிற்கு தங்களுடைய தனிப்பிட்ட அபிலாஷைசைகளை நிறைவேற்றிக்கொள்ள தயாராய் இருப்பார்கள்? என்பதையும் நமக்கு தெள்ளத்தெளிவாக உணர்த்திய ஆண்டு?

2009 எத்தனை அதிர்ஷ்டம் இல்லாத நிகழ்வுகளை தனிமனிதன் வாழ்விலும், வாழ்வுரிமை போராட்டங்களிலும் ஆளுமை செலுத்தியதைப் போல வரும் 2010 அதி முக்கியமான ஆண்டு.

முதல் தொடக்கப் பதிவில் குறிப்பிட்டது போல நிறைய "செய்திகளையும்", "தண்டனைகளையும்" தரப்போகும் ஆண்டு.

"மாற்றங்கள் என்பது மாறாதது".

இனிய ஆங்கில (2010) வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்வோம்.


Monday, December 28, 2009

பிரபாகரன் முன் (3)

" சிங்கள மன்னன் விஜயன் வங்காளத்தில் இருந்து வந்த வழித்தோன்றலில் மூலமாக வந்தவர்கள் தான் நாங்கள்.  நாங்களும் ஆரியர் தான்"  பின்னால் ஆட்சிக்கு வரப்போகும் பிரேமதாசா சார்க் மாநாட்டில் கூறியது.  யஸ்வின் குணரத்னே என்பவர் பண்டாரா நாயகா பண்டாரம் என்ற தமிழர் இனத்தில் இருந்து வந்தவர் என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெயவர்த்னே 300 ஆண்டுகளுக்கு முன் சோழ மண்டலத்தில் இருந்து வந்த செட்டியார் என்ற இனத்தில் இருந்து வந்தவர் என்று ஹிந்த என். ராம் (1989) மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதுவே ஓர் அளவிற்கு எல்லை மீறி ஜெயவர்த்னே மூக்கை இந்திரா காந்தி மூக்கோடு ஒப்பிட்டு பேசும் அளவிற்கு வந்தது. அதையும் தாண்டி அமிர்தலிங்கம் மூக்கோடு ஒப்பிட்டு நீ தமிழனே இல்லை? என்கிற அளவிற்கு போய் முடிந்தது.

சிங்களர்களின் பெரும்பான்மையினர் தென்னிந்தியர்கள் தான்.  இவர்கள் சிங்களப் பெருமையை மீட்டெடுப்பது என்பது சுத்த சாணித்தனம் (Bull Shit) என்று கிண்டல் செய்தவர் 1954/55ல்  இலங்கைப் பிரதமாக இருந்த சர்.ஜான் கொதலவால என்பவர்.  ஆனால் ஒவ்வொரு சிங்கள தலைவர்களும், புத்த குருமார்களும் தங்களுடைய இனத்தூய்மை திரிபுடன் படைக்கப்பட்ட "மகாவம்சம்" மூலமாக தங்களை நிலைநாட்டிக் கொள்வதில் மிகக் கவனமாக இருந்ததுள்ளனர்.

இது ஒரு புறம் என்றால் தமிழ்த்தலைவர்கள் தொடக்க கால வரலாற்றைப் பார்த்தாலும் சரி , இலங்கை என்பது இரண்டு மக்களும் ஒன்றாக அமைதியுடன் வாழவேண்டிய பூமி என்று "தரிசன" பார்வை மூலம் பார்த்த தொடக்க கால இனவாதி தலைவர்களும் அப்போதைய ஐரோப்பிய பெண்மணிகளை திருமணம் செய்து (ஆங்கிலேயர்கள் உருவாக்கி வைத்திருந்த சிறப்பு சலுகை) அவர்களின் வழித்தோன்றலாக வந்து, மேல்நாட்டு கலாச்சாரம், மொழி, பழக்கவழக்கங்கள் என்று மேல்தட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.  அதுவே கடைசியாக அஹிம்சை வழியில் போராடிய தந்தை செல்வா வரைக்கும்.  தந்தை செல்வா மலேசியாவில் ஈப்போவில் பிறந்தவர்.  கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர். மிகப்பெரிய கல்வியாளர்.  வாதப்புலி. செல்வக்குடிமகன்.  காந்திக்கு இணையாக இன்று வரைக்கும் இலங்கை மக்களால் பார்க்கப்படுபவர்.

ஆனால் தந்தை செல்வா கூறிய "தனி நாடு தான் இனி தமிழர்களுக்கு" என்று கூறியதற்கு முன்பே இந்த தமிழீழத்தை குரல் எழுப்பியவர் அப்போது தந்தை செல்வாவில் தமிழரசு கட்சியில் இருந்த  நவரத்னம் என்பவர்.

" இப்போதாவது நாம் விழித்துக்கொள்வோம்.  டட்லி சேனநாயகா, பண்டாரா நாயகா,  இப்போது சீறீமாவோ பண்டாரா நாயகா என்று வந்தவர்கள் அத்தனை பேரும் நம்மை ஏமாற்றி விட்டனர்"  என்று தொடக்கத்திலேயே குரல் எழுப்பியவர்.  ஆனால் தந்தை செல்வாவின் செல்வாக்கு அவரின் குரலை அமுக்கிவிட்டது.  பின்னாளில் இதே இந்த தந்தை செல்வா வருந்தி மன்னிப்பு கேட்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது.  அப்போதைய தலைவர்கள் சுந்தரலிங்கமும், நவரத்னமும் தெளித்த விதைகள் தான் பின்னாளில் உருவான சிவகுமரன் முதல் தொடங்கி கட்சியில் இருந்து விலகிய தங்கத்துரை, குட்டிமணி உருவாக்கிய TELO முதல் பின்னாளில் தனியாக ஆளுமை செலுத்தும் அளவிற்கு வளர்ந்த (LTTE) பிரபாகரன் வரைக்கும்.  இவர்கள் உருவாக்கிய பாதையில் வந்து சேர்ந்த மொத்த இளைஞர்களும் சிங்கள ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கல்வி "தரப்படுத்துதல்" மூலமாக பாதிக்கப்பட்டு பாதியில் படிப்பை விட்டவர்களும், வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களும்.  ஆயுதப் பாதையை மறைமுகமாக வளர்த்தவர்களும் சிங்கள ஆட்சியாளர்களே.

தமிழ்நாட்டைப் போலவே இலங்கை தமிழர்களிடத்திலும் சாதீய ஈடுபாடும், தாழ்த்தப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மொத்தமும் அடக்கி ஆண்ட விதமும் இங்கே குறிப்பிடவேண்டும்.  காரணம் தமிழன் எங்கு வாழ்ந்தாலும் சுத்த தமிழன் தான்.  எந்த சந்தேகமும் இல்லை.

1984 வரைக்கும் இந்த இலங்கைப் பிரச்சனையில் மக்களுடன் போய் பேசி, அவர்களுடைய அடித்தட்டு மக்கள் வரைக்கும் பழகி கேட்டு உண்மையான தீர்வுக்கு பாடுபட்டவர் என்கிற வகையில் இந்திரா காந்தி காலத்தில் தூதராக செயல்பட்ட ஜி.பார்த்தசாரதி குறிப்பிடத்தக்கவர்.  மொத்த மலையக தமிழர்கள் என்று தொடங்கி அத்தனை தமிழர்களிடமும் தமிழில் பேசி இறுதியாக இணைப்பு சி என்ற வழிமுறையை உருவாக்கியவர்.  அவருடைய பங்களிப்பு எந்த அளவிற்கு இருந்தது என்றால், " இனி இவர் இலங்கைக்கு வந்தால் நாங்கள் பேசத் தயாராக இல்லை"  என்று ஜெயவர்த்னே கூறும் அளவிற்கு?

இதே போல் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் ஜெயவர்த்னே கூறியதும் குறிப்பிடத்தக்கது.

" இலங்கையுடன் இந்தியா தெளிவான புரிந்துணர்வுடன் இருந்தாலும் தென்னிந்தியாவில் தீவிரவாத ஆதரிப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல"  என்று எள்ளும் கொள்ளுமாக வெடித்து சீறீனார்.

சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் போது பிரதமர் நேரு " இது என்ன சுத்த நான்சென்ஸ்"  என்று பொறுப்பை தட்டிக்கழித்ததும், அப்போது இருந்த தமிழக பக்தவச்சலம் " எத்தனை பேர்களை இங்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று எண்ணிக்கை ரீதியாகவே இந்த இலங்கைப் பிரச்சனையை பார்த்ததும் அன்று முதல் இன்று வரையிலும் இந்திய தமிழ்நாட்டு ஒத்துழைப்பு இந்த அளவில் தான் இருக்கிறது.

சாஸ்திரி ஒப்பந்தம் முதல் ராஜபக்ஷே ஒப்பந்தங்கள் வரைக்கும் இந்த தமிழர்களின் பிரச்சனைகள் மொத்தமும் தமிழ் மொழி, தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி, இலங்கையின் உண்மையான பிரச்சனையை புரிந்து கொள்ள என்று சம்மந்தப்பட்டவர்கள் என்று பார்த்தால் ப.சிதம்பரம், பின்னால் ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வுக்குழுவில் தலைமைப் பொறுப்பில் இருந்த டி.ஆர். கார்த்திகேயன்.

ராஜிவ் காந்தி இலங்கை பிரச்சனையில் நுழைந்த போது பணியை ஒப்படைத்தது ப. சிதம்பரத்திடம்.  ஆனால் ப. சிதம்பரத்திடம் பிரபாகரனை கொண்டு போய் சேர்க்க காரணமாக இருந்தவர் புலவர் புலமைபித்தன். இது போக டி.என்.சேஷன் மூலமாக " நீங்கள் இலங்கை சென்று அமைதிப்படை ஏன் அடிவாங்குகிறது? என்ன தான் அங்கு நடக்கிறது?  உண்மை நிலவரத்தைத் தாருங்கள்"  என்று டி.ஆர். கார்த்திகேயனிடம் பணி ஒப்படைக்கப்பட்ட போது அவர் கொடுத்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.

1. விடுதலைப்புலிகளை சேர்க்காமல், கலந்து ஆலோசிக்காமல் இலங்கைப் பிரச்சனையில் தீர்வு கண்டு விட முடியாது.

2.  பேசியபடி உண்மையான அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை என்பதைவிட கொடுக்கும் எண்ணத்திற்குக்கூட ஆட்சியாளர்கள் தயராக இல்லை. அமைதிப்படையை வாபஸ் வாங்கிக்கொள்வதே சிறந்தது என்கின்ற அளவிற்கு தீர்க்கதரிசனமாய் செயல்பட்டார்.

இலங்கையில் இந்தியா சார்பாக தூதரகத்தில் பணியாற்றிக்கொண்டுருந்த வடக்கத்தியர்க்கு மொத்தமாக உள்ளே நடக்கும் பிரச்சனைகள் முழுவதும் அப்போது தான் புரிந்த கொடுமையும் நடந்தது.  தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் ப. சிதம்பரத்தின் கருத்து இதே போல் இருந்தது.  ஆனால் இவர்களைத் தாண்டி மிகப்பெரிய லாபி டெல்லியில் அன்றும் இன்றும் என்றும் இருந்து கொண்டே இருப்பதால் எந்த தமிழனும் தலையிட்டாலும் இறுதியில் தலைவலி திருகுவலியாகத் தான் முடியும் துர்பாக்ய நிலைமை.  அதனால் இன்றுவரையிலும் தேர்தல் சமயத்தில் மட்டும் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல வாய்ச்சவடாலில் கழிந்து விடுகின்றது.

வட கிழக்கு மகாணங்களில் வாழும் மொத்த தமிழ்மக்களும் காலை எழுந்து இரவு வரைக்கும் ராணுவ வீரனை, அவர்களின் துப்பாக்கியயை பார்த்துக்கொண்டு வாழ்க்கையை கடத்துவது அன்றாட நிகழ்வாக விட்டது.  காரணம் சிங்கள ஆட்சியாளர்கள் உருவாக்கிய 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் 9 பேருக்கு ஒரு ராணுவ வீரன் என்கிற ரீதியில்.  அந்த அளவிற்கு அச்சமும், அயர்ச்சியும் நிறைந்த தமிழர்களின் வாழ்க்கை. இந்த நிலைமை 1983ல் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 1700 கோடி என்பதில் இருந்து 2006ல்  6950 கோடி வரைக்கும் உயர்ந்து நாலில் ஒரு பங்கை இராணுவத்திற்கு கொண்டு போய் கொட்டும் அளவிற்கு இந்த இன அழிப்பு வெகு ஜோராக நடந்து கொண்டு இருக்கிறது.

உள்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இத்தனை பிரச்சனைகள் என்றால் தமிழக மீனவர்களுக்கு இன்று வரையிலும் சொல்லி மாளாத துன்பங்கள்.  வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை முதல் தனுஷ்கோடி வரைக்கும் அமைந்த கடல்பகுதிக்கு பாக் நீரிணை என்று அழைக்கப்படுகிறது.  இதற்கு இந்தப்பெயர் வந்தது மற்றொரு சுவையான சம்பவம்.  அப்போது ஆண்டு கொண்டுருந்த (1975 முதல் 1763 வரை) ஆங்கிலேய கவர்னர் ராபர்ட் பாக் என்பவர் அதிரடியாக தன்னுடைய பெயரை சூட்டியதும் அதுவே இன்று வரை நிலைத்து இருப்பதும் நாம் அவருக்கு செலுத்தும் விசுவாசம் தானே?

மொத்த 175 கடற்கரை கிராமங்களும் ஏறக்குறைய நான்கு லட்சம் மீனவர்களுக்கும் கச்சத்தீவு ஒப்பந்தப்படி அந்தோணியார் கோவிலில் வழிபடலாம், மீன்வலைகளை உலர்த்திக்கொள்ளலாம் என்று ஆயிரெத்ட்டு லாம் என்றாலும் அன்றாடம் பார்த்துக்கொண்டுருக்கும் கோர காட்சிகளும் வாய் மௌனியாக இருக்கும் வல்லரசும், வால்பிடிப்பவர்களுக்கும் இந்த தமிழ்நாட்டு மீனவர்களும் பிரபாகரன் போல தீவிரவாதியாகத் தான் தெரிகிறார்கள் போல?

மும்மை தீவிரவாதி கசாப் கூட நான் மும்பைக்கு வந்தது திரைப்பட வாய்ப்பு கேட்டு என்பதாக தெளிவாக பேசும் போது இந்தியா என்ற நாடு வல்லரசா இல்லை எப்போதுமே வாய் மூடிய அரசா? என்று சராசரி இந்தியனின் மனசில் ஒலித்துக்கொண்டுருக்கும் கேள்விகள் எங்கே கொண்டு போய்விடுமோ?

Sunday, December 27, 2009

பிரபாகரனுக்கு முன் (2)

" அமைதிக்கான கதவு திறந்து இருந்தது.  ஆனால் ஆயுதப் பாதை என்பது மொத்தத்தையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டது"   என்ற மொத்தமான குற்றச்சாட்டை இதில் கோர்த்துப் பார்க்கலாம்.

1948 ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட வன்முறை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு காரணங்கள் கொண்டு மாற்றம் பெற்றதாக வந்து உள்ளதே தவிர ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் உள்ள "தமிழர் அழிப்பு" என்ற நோக்கம் மிகத் தெளிவாக இருந்து இருக்கிறது.

சுதந்திரத்திற்கு முன்பு 1915 என்று தொடங்கி அதுவே சுதந்திரம் பெற்ற பிறகு 1956, 1958,1961, 1974, 1979, 1981 என்று ஒவ்வொன்றும் மொத்த தமிழனத்தையும் நிர்மூலமாக்கி விட்டது.  எந்த அளவிற்கு?

தொடக்கத்தில் பூர்வகுடி தமிழர்கள், முஸ்லிம் மக்கள் என்று சேர்ந்து இருந்த தமிழன மக்கள் தொகையும்  தமிழர்களின் எண்ணிக்கை 35 லட்சம் பேர்கள். இந்திய அன்று இருந்த மொத்த சிங்களர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் சற்று அதிகமானது தான்.

ஆனால் ஒவ்வொரு கலவரத்தின் போது அழிக்கப்பட்ட தமிழர்களும், சூறையாடப்பட்ட சொத்துக்களும், வலுக்கட்டாயமாக சிங்கள குடியேற்றமும் என்று தொடர்ந்து தொடங்கி இன்று மொத்தமாக தமிழர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மாற்றம் பெற்றுள்ளது. ஆனால் மொத்த கலவரங்களிலும் அதிகமாக பாதிக்கப்பட்டது 15 முதல் 40 வயதுக்கும் இடையே உள்ள மக்கள் தான் அதிகம்.  தொடர வேண்டிய தலைமுறையே அழிந்து வழியில்லாமல் போய்விட்டது.

2005 ஆம் ஆண்டு பிரான்ஸில் இருந்து வெளியிடப்பட்ட (தமிழர் மனித உரிமைகள் மையம்) அறிக்கையை சற்று பார்த்தால் இதன் மொத்த கோரமும் புரியும்.

கைது சித்ரவதை சம்பவங்கள் 1,12,246 பேர்கள்

கொலைச் சம்பவங்கள் 54,053 பேர்கள்

காணாமல் போனவர்கள் 25,266 பேர்கள்

பாலியல் வன்முறைச் சம்பவங்கள் 12,437 பேர்கள்

இடப் பெயர்வு 23,90,809 பேர்கள்

காயம் பட்டோர் 61,132 பேர்கள் ( ஆதாரம் எரிமலை மே 2005)

தொடக்ககால அமெரிக்கா, ஆஸ்திரேலியா போலவே பூர்வகுடிகளை அழித்து தங்களை நிலைநாட்டிக் கொண்டதைப் போல ஒவ்வொரு சிங்கள தலைவர்களும் தங்களுக்குள் ஆட்சி அதிகாரத்திற்கு அடித்துக்கொண்டார்களே தவிர "தமிழர் ஒழிப்பு" என்று இந்த ஒரு விசயத்தில் மொத்தத்திலும் ஒற்றுமையாக இருந்து தீர்க்கதரிசனமாய் செயல்பட்டு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் தெரிந்தே செய்த தவறு, ஒழிப்புக்காக மொத்த அரசாங்க பணத்தையும் கொண்டு போய் கொட்டி வளராத இலங்கையாக இன்று வரையிலும் மாற்றம் பெற வைத்தமையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

"சிங்களர்கள் மட்டும் வாழ வேண்டியவர்கள்.  இது சிங்கள நாடு.  இங்கு பௌத்தமே சமயம்.  சிங்களமே மொழி"  என்று கருத்தில் கொண்டு செயல்பட்டவர்கள் கடைசியில் இறக்குமதியாகும் ஆயுதங்கள் அனைத்தும் இன்றைய ராஜபக்ஷே தன்னுடைய சொந்த நிறுவனமாக லங்கா லாஜிஸ்டிக்ஸ் மூலமாகவே இறக்குமதி செய்யும் சூறையாடலும் நடந்து கொண்டு, தங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு தான் விரும்பிய சிங்கள இனத்தையும் இவர்கள் வாழ வைக்கவும் முடியவில்லை.

ஜெயவர்த்னே காலத்தில் இருந்த அமைச்சர் லலித் அதுலத் முதலி தொடக்கத்தில் கப்பல், போக்குவரத்துறையில் தான் இருந்தார்.  அவரை என்று பாதுகாப்பு துறைக்கு அமைச்சராக ஜெயவர்த்னே(1984) கொண்டு வந்தாரோ அன்று முதல் குருவுக்கு ஏற்ற சிஷ்யன் போல ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்தார்.

இவருடைய காலத்தில் இங்கிலாந்தில் இருந்து (Keny Meeny Service) என்ற தனியார் பாதுகாப்பு நிறுவன மக்கள் வரவழைக்கப்பட்டு இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்டு புதிய பாதையை உருவாக்கினார்.  இதே காலகட்டத்தில் அமெரிக்காவின் உதவி என்பது தனியான பாதையில் பயணித்துக்கொண்டு இருந்த இராணுவத்திற்கு அதிக போஷாக்கு போல இருந்து கொலை வெறி தாண்டவங்கள் நடத்தினார்கள்.  அப்போது ஜெயவர்த்னே கொடுத்த பேட்டி (லண்டன் ரைம்ஸ்) இங்கு குறிப்பிடத்தக்கது.

"தமிழர்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்தைத் தவிர மற்ற எதையும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லா நிலையில், இராணுவத் தீர்வொன்றை நோக்கியே தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி செயல்பட்டு வருகிறார்"

இந்திரா காந்தி (1983) இந்தியாவின் ஆளுமைக்குள் இலங்கை இருக்க வேண்டிய அவஸ்ய அவசர காரணங்களை முன்னிட்டு இந்த பிரச்சனைகளை தலையிட்டு பிவி நரசிம்மராவ், ரொமேஷ் பண்டாரி, பார்த்தசாரதி, ப,சிதம்பரம் வரைக்கும் போராடிப் பார்த்த போது கூட அது இறுதியில் தோல்வியில் தான் முடிந்தது.  காரணம் ஏற்கனவே டட்லி (1965) செல்வா ஒப்பந்தம், பண்டார நாயகா செல்வா ஒப்பந்தம் போல், வெறும் காகித தீப்பந்தமானது.

பிரபாகரன் தன்னுடைய இராணுவ போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் (1984) இந்த காலகட்டத்தில் அது வரையிலும் இலங்கையில் சுதந்திரம் பெற்று  35 வருடங்களில் பாடுபட்ட அத்தனை தலைவர்களும் அஹிம்சை வழியில் நம்பிக்கை கொண்டு போராடியவர்கள்.  முடிந்த வரைக்கும் முட்டிப் பார்த்தவர்கள்.  ஆனால் இறுதியில் சிங்கள தந்திரத்தில் முட்டி பெயர்ந்து ஒதுங்கியவர்கள்.  ஓலமாய் மாற்றம் பெற்றுக் கொண்டு வந்த மொத்த தமிழர்களின் சராசரி வாழ்க்கையை அவர்களால் ஒரு அளவிற்கு மேல் காப்பாற்ற முடியவில்லை.  இதுவே தந்தை செல்வா " தனிநாடு என்று கேட்காமல் பெரிய தவறு செய்து விட்டேன்" என்று புலம்பும் அளவிற்கு.
இந்தியாவில் "காந்திய போராட்டம்" என்பது ஆங்கிலேயர்களை ஆச்சரியப்படுத்திய வழிமுறைகள்.  மொத்தமாக இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டுருந்தார்களே தவிர ஆங்கிலேயர்களின் கடவுள் என்று மதிக்கப்படும் மன்னர் கூட காந்தியை வரவழைத்து மரியாதை செய்த பழக்கம் உள்ள பண்பாடு நிறைந்தவர்கள் ஆங்கிலேயர்கள்.

துவேச மனப்பான்மையை தங்களுடைய வியாபரத்திற்கு பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, நீண்ட கால கொள்கைகளுக்கு புதைபொருளாக, மறைபொருளாக வைத்து செயல்பட்டார்களே தவிர சிங்களர்கள் போல் அப்பட்டமாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.  இந்த ஒரே காரணமும் மொத்த மக்களுக்கும் காந்தியின் மேல் நம்பிக்கை வைத்தது.  இதற்கு மாற்றுப்பாதையான நேதாஜி வழிமுறைகளும் ஒரு நெருக்கடியை கொடுத்துக்கொண்டே இருந்தது.

ஆனால் சிங்களர்களை வெறியேற்றுவதும், வெட்டித்தனமான வழியில் அவர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கிக் கொடுப்பதும் என்று தொடங்கி அவர்களின் அறிவையும் வளர்க்க எவரும் துணியவில்லை.  துணிந்த JVP  போன்ற இயக்கங்களையும் சிங்கள ஆட்சியாளர்கள் விட்டு வைக்கவும் இல்லை.

வெறியை மட்டும் மூலதனமாக வைத்து மேலே வந்தவர்கள் ஒரு அளவிற்கு மேல் அதற்கு அடிமையாக போய்விட மிச்சமுள்ள பார்த்துக்கொண்டுருந்த தமிழ் இளையர் கூட்டம் "ஆயுதம் தான் இனி தீர்வு" என்ற எண்ணம் வந்ததில் ஆச்சரியம் இல்லை.

காரணம் அன்று அஹிம்சையில் வழியில் வந்தவர்கள் ஏறக்குறைய முட்டுச்சந்தின் இறுதியில் வந்து நின்று கொண்டுருந்ததும், வழி தேடிக்கொண்டுருந்தவர்களும், வலியுடன் வாழ்ந்து கொண்டுருந்தவர்களும், இந்த ஆயுதப்பாதையாவது வழி காட்டுமா? என்று ஏங்கிக்கொண்டு மொத்த தமிழ் மக்களும் குழம்பிப்போயிருந்த காலம் அது.

Thursday, December 24, 2009

பிரபாகரனுக்கு முன் (1)

இதுவரை நடந்த நிகழ்வுகளை கோர்த்து பார்க்கலாம்.  மாலையா இல்லை மண்டை ஓடா என்பது புரியும்?

தமிழர்களுக்கு இனி உரிமை என்பது சிங்கள ஆட்சியில் கிடைக்காது.  "தனி நாடு தான் இனி தீர்வு" என்று தொடக்கப்புள்ளியை உருவாக்கியவர் பிரபாகரன் அல்ல.  அஹிம்சை வழியில் போராடிக்கொண்டுருந்த தந்தை செல்வா புகழ்பெற்ற " வட்டுக்கோட்டை தீர்மானம்" மூலம் முன்மொழிந்தார்.

இதற்காக, தான் கூட்டணி மூலம் பெற்ற பாராளுமன்ற பதவியை உதறித் தள்ளி தமிழர்கள் ஆதரவோடு மீண்டும் வெற்றி பெற்ற போது அவரே இதை முழுமையாக உணர்ந்து வெளியே சொன்ன உன்னதமான லட்சியம் அது.

இவரை பின்பற்றி வந்த அமிர்தலிங்கம் தந்தை செல்வா அளவிற்கு முழுமையான அர்பணிப்பு உணர்வோடு இல்லாவிட்டாலும் கூட தன்னால் ஆன, தனக்கும் சாதகமான வழிமுறைகளோடு முடிந்தவரைக்கும் ஆட்சியாளர்களோடு போரிட்டுக்கொண்டுருந்தார்.

வாதம், பிரதிவாதம் நீண்டு கொண்டுருந்ததே தவிர அரக்க சிந்தனையாளர்களை அமைதி வழிப் போராட்டம் தீர்வுக்குண்டான பாதையை நோக்கி நகர்த்துவதாக தெரியவில்லை.

அமைதி வழியில் போராடிக்கொண்டுருந்தவர்களை எந்த அளவிற்கு சிங்கள ஆட்சியாளர்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதையெல்லாம் ஊன்றி கவனித்துப் பார்த்தால் எவருமே பிரபாகரனின் பாதை தவறு என்று எவரும் சொல்ல மனம் துணியாது.

மாவட்ட அபிவிருத்தி (1981) தேர்தலும், ஜெயவர்த்னே திட்டமிட்டு உருவாக்கிய கலவரங்களும் என கொளுந்து விட்டு எறிந்து கொண்டுருந்த தருணத்தில் பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் பதவியை நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் கொண்டு வந்து அவமானப்படுத்திய போதும் கூட அமிர்தலிங்கம் அமைதியைத் தான் விரும்பினார்.

தேர்தல் என்பது ஒரு வகையில் ஜெயவர்த்னேவுக்கு கண்துடைப்பு.  வேலை தொடங்குவதற்கு முன்பே தன்னுடைய படைபட்டாளங்களை கொண்டு போய் இறக்கி இருந்தார்.  கண் அசைவு கிடைத்ததும் காரியங்களும் நடைபெற மொத்த தமிழர்களின் வாழ்க்கையும் கண்ணீரில் மூழ்கியது.

வாத பிரதிவாதங்களுக்கிடையே தீர்மானத்தை கொண்டு வந்த நெவில் பெர்ணாண்டோ என்பவர் சொன்ன வாசகம் இங்கு குறிப்பிடத்தக்கது.

"காலிமுகத் திடலில் கமுக மரத்தில் கட்டி இரண்டாக கிழிக்கும் மரண தண்டனையை அமிர்தலிங்கத்திற்கு வழங்க வேண்டும்"

சொன்னது மட்டுமல்லாமல் அவருடன் மற்ற உறுப்பினர்கள் அடிக்க கையை ஓங்கிக்கொண்டு பாய்ந்து வந்தார்கள்.  தொண்டைமான் கத்திய கத்தல் எவர் காதிலும் விழுவதாக தெரியவில்லை.  இது தான் அமைதி வழியின் உச்சமும் சொச்சமும்.  காரணம் அவர்கள் சிங்கத்தை புணர்ந்து வந்த சிங்களர்கள்.  அன்றும் இன்றும் என்றும் இப்படித்தான் இருப்பார்கள்.
சிவகுமரன் தொடங்கி வைத்த ஆயுதப் பாதையும் அமைதியாக கூட்டப்பட்ட தமிழ் மொழி மாநாட்டில் சிங்களர்கள், காவல்துறையினர் வேண்டுமென்றே உருவாக்கிய கலவரத்தின் விளைவாகத்தான் தொடக்கம் பெற்றது.  மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு என்றதும் ஆயுதப்பாதையின் தீவிரம் அதிகரித்தது.  ஆனால் சிவகுமரன் அதிர்ஷ்டம் என்பதற்கு சற்று கூட சம்மந்தம் இல்லாமல் பிறந்தவர்.  அவருடைய முயற்சிக்கு ஆயுதமும் ஒத்துழைக்கவில்லை.  உடன் இருந்தவர்களின் காட்டிக்கொடுப்பும் ஒரு காரணமாக இருந்து அவர் வாழ்க்கையும் முடிவு பெற்றது.

தொடர்ந்து வந்த குட்டிமணி ஜெகன், தங்கதுரை தொடங்கிய TELO அமைப்பும் கடைசியில் காட்டுக்கொடுப்பு மூலம் தான் ஒரு முடிவுக்கு வந்தது. இதில் சம்மந்தப்பட்ட இருவர்.

சீறீ சபாரெத்தினம், பிரபாகரன்.  ஆனால் இன்று வரையிலும் இதற்கு பின்னால் உள்ள விசயங்களையும் எந்த சரித்திரப்பக்கங்களும் பதிவு செய்யவில்லை.

ஜெயவர்த்னே, சாகடிக்கப்பட்ட சிங்கள இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி என்ற போர்வையில் மொத்த சவ ஊர்வலத்தை வெறியேற்றும் ஊர்வலமாக மாற்றி வெலிக்கடை சிறை முதல் மொத்த தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத கருப்பு ஜுலையை அறிமுகப்படுத்தினார்.

பிரபாகரன் தாக்கிய இராணுவ வாகனங்களும், சாகடிக்கப்பட்ட வீரர்கள் என்றாலும் இதற்குப்பின்னால் நடந்த நிகழ்வுகள் மொத்தத்திலும் கொடுமையானது.  அதுவே ஜெயவர்த்னே எப்படிப்பட்டவர் என்பதையும், தருணத்தை எதிர்பார்த்து காத்து கொண்டுருந்ததையும் நமக்கு புரியவைக்கும்.

இறந்த ராணுவ வீரர்களை சவப்பெட்டியில் வைத்து கொண்டு வராமல், சாக்கு மூட்டை போல இது தான் சிதைந்த கோரமான நம்முடைய வீரர்கள் என்று ஊர்வலமாக நடத்தி வெறியேற்றி தான் நினைத்ததை சாதித்து தமிழ் மக்களுக்கு மறக்க முடியாத அந்த கருப்பு ஜுலையை அறிமுகப்படுத்தினார்.

ஆனால் கருப்பு ஜுலை மூலம் ஜெயவர்த்னே தன்னை அறியாமல் போராளிகளுக்கு மறைமுக உதவியை செய்தார் என்றால் அது மிகையில்லை.  காரணம் இந்த ஜுலை கொடூரத்திற்குப் பிறகு தான் உலகம் முழுக்க பரவியிருந்த மொத்த புலம் பெயர்ந்த தமிழிர்களின் ஆர்வமும், ஆத்திரமும் ஒன்றாக கலந்து போராளிக்குழுக்களுக்கு தங்களால் முடிந்த பண உதவியை செய்யத் தொடங்கினார்கள்.  இதன் தொடர்ச்சியாக ஆன்டன் பாலசிங்கம் பிரபாகரன் சார்பாக முன் எடுத்துச் சென்ற அத்தனை முயற்சிகளும் சாதமாகத் தொடங்கியது.  பணவரவு அதிகரிக்க, தனிப்பத்திரிக்கை,வானொலி,பிரசுரங்கள், புத்தகங்கள் என்று தொடங்கி அதுவே நேரிடையான ஆயுத கொள்முதல் என்று வரைக்கும் பல்கிப் பெருகியது.  கடைசியில் ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கு என்று கப்பல் வணிகத்தையும், சொந்த கப்பல்கள் என்று வரைக்கும் நீண்டது.

தொடக்ககால விடுதலைப்புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும் எத்தனை தான் சர்வாதிகாரம் என்ற நோக்கில் பார்த்தாலும் அந்த சூழ்நிலையை அவருக்கு மறைமுக உணர்த்த காரணமாக இருந்தவர்கள் உள்ளே இருந்தவர்கள்.

கொள்கை என்பதை வைத்துக்கொண்டு கொலை கொள்ளையில் ஈடுபட்டவர்களும், கொள்கையாளர்கள் தன்னுடைய இருப்பை முதலில் உறுதிபடுத்திக்கொள்ளும் முக்கியவத்தை பிரபாகரன் உணர்த்திய போதெல்லாம் எள்ளி நகையாடினார்கள்.   அப்போது உணர்ந்தவர்கள் யாருமில்லை.  உணராதவர்கள் கூட அவரும் சேர்ந்து போக தயாராகவும் இல்லை.  வெட்டிப்பேச்சு, அரட்டை, விவாதம், ஒழுக்கக்கேடு போன்றவற்றில் மிக உறுதியாக இருந்ததும், அதுவே பலருக்கும் வெறுப்பாக தோன்ற பிரபாகரன் ஆளுமையும் தோற்றமும் மெதுமெதுவாக வளரத் தொடங்கியது.

தொடக்கத்தில் இயக்கத்தில் தோன்றிய பிரிவினையின் போதும், கருத்து வேறுபாட்டின் போதும் இலங்கையில் இருந்த கிறிஸ்துவ பாதிரிமார்களின் பங்கு அளவிடற்கரியது.  முடிந்தவரைக்கும் இயக்க ஒற்றுமையை உணர்த்த முற்பட்டார்கள்.  பிரபாகரன் வாழ்வில் கடைசி வரையிலும் அவர்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் நேரிடையாக மறைமுகமாக செய்தார்கள்.

பிரபாகரன் சர்வாதிகாரி என்று தொடக்கத்தில் அவருடன் ஒன்றாக சேர முடியாதவர்களும், பிரிந்தவர்களும் தொடங்கிய தொடக்க கால அவர்களின் மொத்த இயக்கமும் ஜனநாயகப் பாதையில் என்று சொல்லிக்கொண்டாலும் அங்கும் ஆயிரெத்தெட்டு புழுத்துப்போன குற்றச்சாட்டுக்கள்.  இதுவே உமா மகேஸ்வரனை அவருடன் இருந்த ஓட்டுநர் ஒருவரே கொல்லும் அளவிற்கு கரை கடந்து போனது. பிரபாகரனும், உமா மகஸ்வரனும் சென்னையில் வைத்து ஆன்டன் பாலசிங்கம் முன்னால் வைத்து பிரிந்து கொண்ட தருணம் தொடங்கி கடைசி வரையிலும் பிரபாகரன் எதிலும் குறிக்கிடவில்லை.  அவருக்கு நன்றாக தெரியும்.  இவர்கள் விரும்பும் ஜனநாயகமே இவர்களுக்கு பாடம் கற்பிக்கும் என்று.

அவரவருக்கு தன்னுடைய இருப்பும், தான் என்ற நோக்கமும் இருந்தாலும் இவர்கள் மொத்தமாக குற்றம் சாட்டிய பிரபாகரன் "ஆமாம். நான் சர்வாதிகாரி தான்" என்று தைரியமாக சொல்லிக்கொண்டு வெளியே சென்றும் தன்னை சார்ந்து வந்தவர்களை வைத்து தனியாக ஒரு இராணுவ ராஜ்ஜியமே அமைக்கும் அளவிற்கு வளர முடிந்தது.

தொடங்கியது முதல் ஒரே நோக்கம். கொள்கை. தீர்மானம்.  மாறவே இல்லை.

தன்னுடைய ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகள் போலவே தன்னுடைய இருப்பவர்களையும் அந்த அளவிற்கு கவனமாக பாதுகாத்து பயணித்தார்.  கொள்கைகளுக்கு தனி மனித ஒழுக்கம் மிக முக்கியமானது என்பதை நடந்து நிகழ்வுகள் மூலம் கற்றுக் கொண்டார்.  கற்றுக் கொடுத்துக் கொண்டே வந்தார்.  முரண்பட்டவர்கள் கதையும் முடிக்கப்பட்டது.

மொத்தமாக பல பாதைகளில் பயணித்து வந்த போராளிகளின் கொந்தளிப்பு வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட குட்டிமணி தங்கதுரை போல, உச்சகட்டமாய் மாற (1983) அதே காலகட்டத்தில் மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பித்தலும் நடந்தது.

ஆட்சியாளர்களுக்கு நாங்கள் யார்? என்பதை உணர வைத்த தருணம் அது.

இதை நாங்கள் தான் செய்தோம்.  இந்த வெற்றிக்கு நாங்கள் தான் காரணம் என்று உள்ளுக்குள் இருந்த ஒவ்வொரு இயக்கத்திடமும் குடுமிபிடி சண்டை.  அப்போதும் இதில் சம்மந்தப்படாமல் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தவர் பிரபாகரன்.   ஜனநாயகத்தையும் சர்வ அதிகாரத்தையும் நன்றாக புரிந்தவர்.