Thursday, December 31, 2009

பிரபாகரன் இறுதி மொழி

பிரபாகரன் தொடங்கிய ஆயுதப் போராட்டத்தை தாண்டி, பதுங்கு தாக்கு என்ற கொரில்லா முறையில் இருந்து மாறி, இராணுவ தாக்குதல்கள் என்ற முறைப்படியான போராட்டம் தொடங்கும் இந்த காலகட்டத்தில் அவருடைய புரிதல்களையும், உண்டான நிகழ்வுகளில் இருந்து அவருக்கு உருவான தாக்கத்தையும் அவருடைய பிரபாகரன் "மொழியை கண்டுணர்ந்து" ஈழ முதலாம் யுத்தத்தில் நுழைவோம்.

" தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச் சின்னமானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால்தான் எமது இயக்கத்திற்கு விடுதலைப்புலிகள் என்று பெயரிட்டேன். புலிச்சின்னமானது தமிழ் தேசியத்தின் புத்தெழுச்சியை உருவகப்படுத்துகிறது. அத்துடன் கொரில்லா யுத்த முறையையும் புலிச்சின்னம் குறித்து நிற்கிறது"

"இந்த போராட்ட அனுபவங்கள் எனது இலட்சியத்தை ஆழமாக வலுப்படுத்தி இருக்கின்றன. எனது பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கின்றன. இந்த நீண்ட போராட்டத்தின் பின் இந்த கருப்பு "ஜுலைக்குப் பிறகு தமிழ் மக்களின் சகல பிரிவினரையும் ஒரே இலட்சியத்தின் கீழ் ஆட்சியாளர்கள் இணைத்து உள்ளனர்"

" என்னுடைய கொரில்லா போராளியின் வாழ்க்கை துயரமும், விரக்தியும் கலந்தது. நாங்கள் தேர்ந்தெடுத்த ஆயுத பாதை என்பது மிகச் சரியானது என்பதை கடந்த 12 ஆண்டுகளில் உணர்ந்துள்ளோம். மக்களும் இப்போது அதை உணரத் தொடங்கியுள்ளனர்."

" உமா மகேஸ்வரனுக்கும் எனக்கும் உண்டான பிரிதல் என்பது தனிப்பட்ட விரோதம் அல்ல. ஒரு புரட்சி இயக்கத்தின் தலைவர் மொத்தமாக ஒழுக்கம் சார்ந்த விசயங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒழுக்கம் குறைந்து, குழப்பம் மலிந்து மொத்தமும் கொள்கைகள் அத்தனையும் சிதைந்து போய்விடும். உமா மகேஸ்வரனை இயக்கத்தின் தலைவராக நியமித்தவன் என்ற முறையிலும், மத்திய குழுவின் தீர்மானத்தின்படியும் வெளியேற்ற வேண்டிய கட்டாயம்"

" 2,9,1982 நான் எழுதிய கடிதத்தின்படி மொத்த மற்ற இயக்கங்களுடன் சேர்ந்து செயல்பட தயாராய் இருப்பதையும், ஆனால் நீண்ட கால செயல் அடிப்படையில் இருக்க வேண்டிய அவஸ்யத்தையும் தெரிவித்த போதிலும், அவர்கள் விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டுவதை விட சொல்லுக்கும் செயலுக்கும் இடையே உள்ள வித்யாசத்தை விலக்கி செயல்பட்டுருந்தால் மகிழ்ச்சி"

" சாதாரண இயல்பான வாழ்க்கை வாழ ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். நான் அந்த வாழ்க்கை வாழ விரும்பவில்லை. மேலும் மற்ற இயக்கங்களுடன் என்னுடைய மேலாதிக்கம் இணைந்து செயல்பட முடியாமை இருப்பதாகக் கூறுவது எல்லாம் திட்டமிட்டு சொல்லக்கூடிய குற்றச்சாட்டு. நாங்கள் பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்பவர்கள் அனைவரும் பகிர்ந்து அளிக்கக்கூடிய ஒரு சமாதான உடன்படிக்கை தொடக்கம் முதலே ஏற்படுத்திக்கொடுத்து இருந்தால் நாங்கள் ஏன் ஆயுதம் தூக்கப் போகிறோம்?"

" கருப்பு ஜுலை என்பது ஏற்கனவே திருகோணமலையில் நடந்து கொண்டுருந்த கலவரத்தின் திட்டமிடப்பட்ட தொடர்ச்சி. நாங்கள் காரணமல்ல. கவனித்தவர்களுக்குப் புரியும். வட்ட மேஜை மாநாடும், சமாதான ஒப்பந்தங்களும் என்னைப் பொறுத்தவரையிலும் காலவிரயம். கடந்த பாடங்கள் இதைத்தான் உணர்த்துகிறது."

" தமிழர் விடுதலைக்கூட்டணி (அமிர்தலிங்கம்)யின் சந்தர்ப்பவாத அரசியலானது எங்களது விடுதலைப் போராட்டத்தை நிச்சயமாக பின்னுக்குத் தள்ளத்தான் செய்கிறது. திட்டவட்டமான கொள்கைகள் ஏதும் இல்லை. பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை அடிமையாகவே வைக்க முயற்சிக்கின்றார்கள். மேலும் எங்களை முடக்குவதிலும் கவனம் செலுத்துகிறார்கள். இந்த கறுப்பு ஜுலை என்பது தமிழீழம் முழுக்க பரவிக்கொண்டுருக்கிறது. இதை நாங்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்வோம் என்று தடுப்பதில் முனைப்பாக செயல்படுகிறார்கள்"
" இந்தியாவின் ஆதரவும் அனுதாபமும் போதுமானது. எங்களது விடுதலையை நாங்களே வென்று எடுத்துக்கொள்ள மனத்துணிவு இருக்கிறது. தங்களுடைய உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த நாங்கள் தீர்மானிக்கும் தேசிய இராணுவத்தின் உதவியோடு எந்நாளும் சுதந்திரமாய் வாழும் தமிழீழ நாடு வாழப்பட்டால் ஒழிய ஒருபோதும் தமிழர்கள் வாழப்போவதில்லை. மறுப்பவர்கள் கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்காதவர்கள்"

" திருகோணமலை படைதளத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு இன்று வந்து ஆயுத தளவாடங்களை இறக்கிக்கொண்டுருக்கும் அமெரிக்கா நாளைய இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் என்பதில் ஐயமில்லை"

" நாங்கள் கனவு காணும் தமிழீழம் ஒரு சோசிலிச அரசாக அமையும். தனிநபர் சுதந்திரமும், சமத்துவமான சமூக அமைப்பும், ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயக நாடாக மலரும். தங்கள் பொருளாதரத்தையும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் பேணி காப்பதில் அக்கறை கொண்டு விளங்கும். தமிழீழம் என்பது அணிசேரா கொள்கை நாடாக, குறிப்பாக இந்தியாவோடு நேச உறவோடு விளங்கும். இந்து மகா சமுத்திரத்தை அமைதி பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையை கொண்டு விளங்கும். இதை அடைய கால வரையறை இருக்க முடியாது. உலக அரங்கில் உருவாகும் மாற்றத்தைப் பொறுத்து இது அமையும்"

(இத்துடன் ஐந்தாம் பாகம் முடிவடைந்தது)


2009 ஆம் ஆண்டு புடம் போட்டு புதிய பாதையை காட்டிய ஆண்டு.

இலங்கை தமிழர்களின் வரலாற்றில் இனி வரும் ஆண்டுகளில் என்றுமே மறக்க மறக்க முடியாத ஆண்டு.

உலகத்தில் வாழும் அறிவுஜீவிகள் பேசும் பிரபாகரன் ஆளுமை செலுத்திய சர்வாதிகாரம் சரியா என்பதையும், பிரபாகரன் தவிர்த்து மற்ற ஜனநாயக தலைவர்கள், தமிழர்களின் "ஒற்றுமையை" ஜனநாயகத்தை போற்றுகிறோம்", "வளர்க்க விரும்புகிறோம்" என்பவர்களின் அத்தனை "நல்ல விசயங்களையும்" நாம் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு பல பாடங்களையும் உருவாக்கிய உருவாக்கிக்கொண்டுருக்கும் ஆண்டு?

மொத்தமான கொடூரங்கள் கண்முன்னே நடந்தபோதிலும் உலகம் முழுக்க வளர்ந்த நாகரிக மனிதர்களும், தலைவர்களும்,நாடுகளும் எந்த அளவிற்கு தங்களுடைய தனிப்பிட்ட அபிலாஷைசைகளை நிறைவேற்றிக்கொள்ள தயாராய் இருப்பார்கள்? என்பதையும் நமக்கு தெள்ளத்தெளிவாக உணர்த்திய ஆண்டு?

2009 எத்தனை அதிர்ஷ்டம் இல்லாத நிகழ்வுகளை தனிமனிதன் வாழ்விலும், வாழ்வுரிமை போராட்டங்களிலும் ஆளுமை செலுத்தியதைப் போல வரும் 2010 அதி முக்கியமான ஆண்டு.

முதல் தொடக்கப் பதிவில் குறிப்பிட்டது போல நிறைய "செய்திகளையும்", "தண்டனைகளையும்" தரப்போகும் ஆண்டு.

"மாற்றங்கள் என்பது மாறாதது".

இனிய ஆங்கில (2010) வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்வோம்.


18 comments:

ஜோதிஜி said...

2009 தமிழர்களின் தடங்கள்


(1) 2009


APJ அப்துல்கலாம்

எனக்கும் ஒரு கனவு உண்டு.

கல்வியால், உழைப்பால், திறமையால், முயற்சியால் உயர்ந்தவர். இறுதியில் உச்சத்தை அடைந்தவர்.

இன்றுவரைக்கும் உழைத்துக்கொண்டு இருப்பவர். அறிவியல் ஆன்மிகம் இரண்டையும் இரண்டு கண்களாக பார்ப்பவர். மத துவேசம் இல்லாதவர். சைவ உணவு பழக்கவழக்கத்தைப் போல சாத்யமான, சாத்வீக வழிமுறைகளை முன்னெடுத்துச்சென்று கொண்டுருப்பவர். இளையர்கள் வணங்கக்கூடிய நிலையில் இருக்கும் வாழும் மகாத்மா.

ஜோதிஜி said...

(2) 2009

AR. ரஹ்மான்

ஓலியின் வேகம்.

உழைப்பால், திறமையால், முயற்சியால் உயர்ந்தவர். உச்சத்தை அடைந்து இன்னும் உயரந்து கொண்டுருப்பவர்.

உயர உயர பறந்த போதிலும் புதிரான தத்துவங்கள் சொல்லி பயமுறுத்தாமல், பேசாமலே உலகத்தில் உள்ள அத்தனை பேர்களின் உள்ளங்களிலும் சிம்மசானம் இட்டு அமர்ந்தவர். காரணம் வெறுப்பை விலக்கி அன்பை தேர்ந்தெடுத்த காரணத்தால். குறுகிய காலத்தில் இவர் அளவிற்கு உயர்ந்தவரும், அடைந்த பெருமைகளும் இனி எவரும் முடியுமா? என்பதை யோசிக்க வைத்தவர்.

ஜோதிஜி said...

(3) 2009

கமலஹாசன்

எல்லையில்லா வானம்.

அரைநூற்றாண்டு என்பது சராசரி கலைஞன் என்ற பார்வையில் எட்ட முடியாத உயர்ம். சாத்யமில்லாதவற்றை கூட சகலகலா வல்லவனாக சாதித்துக் காட்டியவர். சகல துறைகளில் இருப்பவர்களுக்கும் தன்னை பின்பற்றியே ஆக வேண்டும் என்று தன்னை கலைக்காக அர்பணித்தவர்.

ஜோதிஜி said...

(4) 2009

ப. சிதம்பரம்

அனுபவமே சிறந்த ஆசான்.

தவறில் இருந்து பாடம் கற்காவிட்டாலும் தவிர்கக முடியாத மனிதர்.

சுதந்திரத்திற்குப் பிறகு உருக்குலைந்து கிடந்த இந்திய உள் துறையை முடிந்தவரைக்கும் ஓழுங்கான துறையாக மாற்றம் அளிக்க தன்னை இந்த முறை அர்பணித்துக்கொண்டவர். ஆங்கிலம் விரும்பும் அத்தனை தமிழர்களும் இவர் பேசும் ஆங்கிலத்தையும், உடனடியாக அதை தமிழாக மாற்றும் எளிய அந்த அழகு மொழியையும் இந்த ஹார்டுவேரிடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஜோதிஜி said...

(5) 2009

பா.ராகவன்/பத்ரிசேஷாத்ரி

அறிவே தெய்வம்

எழுத்தின் மூலமும், கிழக்கு பதிப்பகம் மூலமும் அணைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று நூல்களை முக்கியத்துவம் கொடுத்து முன் எடுத்து சென்று கொண்டுருப்பவர்கள், தமிழ் எழுத்துலகில், புதிய அத்தியாயம் படைத்துக்கொண்டுருப்பவர்கள். என்னுடைய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.

வாழ்ந்த சரித்திரத்தின் பின்னால் உள்ள தந்திரங்களும், வீழ்ந்த சரித்திரத்தின் மூலம் உள்ள புரிந்துணர்வை உருவாக்கும் வரலாறு என்பது நமக்கு ஆசான் மட்டுமல்ல. நாம் வாழ முடியாத காலத்திற்குண்டான பாடங்களும்.

ஜோதிஜி said...

(6) 2009

அதிகாரவர்க்கம்

காசே தான் கடவுளடா

கடைநிலை ஊழியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரைக்கும் தங்களுடைய கடமைகளை மட்டும் செய்து கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களாய் இன்று வரைக்கும் வாழ்ந்துகொண்டுருக்கும் அத்தனை பேர்களும். கண்களுக்குத் தெரியாமலே வெகு ஜன பரபரப்பு ஊடகங்களுக்குத் தங்களை காட்டிக்கொள்ளாமலே தங்களுடைய கடமைகளை செய்து கொண்டுருக்கும் அந்த அசாதாரணமான மகாத்மாக்கள், இந்தியாவின் மொத்த (உழுத்துப்போன) ஜனநாயக கோட்பாடுகளை இன்னமும் உயிர்ப்புடன் மறைமுகமாக வாழ வைத்துக்கொண்டுருக்கும் மொத்த கண்ணியவான்கள்.

ஜோதிஜி said...

(7) 2009

தடம் மாறாத பாதை.

சரியானது, தவறானது என்ற நோக்கத்திற்கு அப்பாற்பட்டு தங்களுடைய ஈழ ஆதரவு கொள்கைகளை முன் எடுத்துச் சென்று கொண்டுருப்பவர்கள். தங்களுடைய கோட்பாடுகள் மூலம் தங்களால் முடிந்த அளவிற்கு அவரவர் வழியில் விமர்சனத்தைக் கண்டு அஞ்சாமல் முயன்று கொண்டுருப்பவர்கள். நம்பிக்கைகளை விதைத்துக்கொண்டுருப்பவர்கள். இன்று வரைக்கும் போராடிக்கொண்டுருப்பவர்கள்.

பழ.நெடுமாறன்,நக்கீரன் கோபால்,கொளத்தூர் மணி, ராமகிருஷ்ணன்,,சீமான்.

ஜோதிஜி said...

(8) 2009

படம் அல்ல பாடம்.

வணிகம் சார்ந்த ஆசைகள் சூழ்ந்த வாழ்க்கையில் தானும் புரிந்து கொள்ளாமல், தன்னை சார்ந்தவர்களையும் புரிந்து கொள்ளாமல் புரிதல் இல்லாமல் வாழும் வாழ்க்கையில் இழந்து போன அமைதியும், பாதிக்கப்படும் குழந்தைகளின் மனோநிலையையும் வெகு சிறப்பாக படைப்பாக்கி, வணிக நீச்சலிலும் ஜெயித்து, தங்க தாமரை விருது பெற்ற பசங்க படமும் இயக்குநர் பாண்டிராஜ் என்ற சமான்ய கிராம இளைஞனின் மனோதிடம் இன்றும் என்றும் நினைவில் நிற்கும்

ஜோதிஜி said...

(9) 2009

முத்தமிழ் அறிஞர், கலைஞர் மு. கருணாநிதி

கவிஞர் வைரமுத்து சொன்ன வாசகம்.

மீன் தான் வாழும் குளத்தில் உள்ள அழுக்குகளை உண்டு தன்னையும் வளர்த்துக்கொண்டு சுத்தப்படுத்துகிறது.

அவர் பாராட்டுரையாய் சொன்ன இந்த வாக்கியத்தை வைத்துக்கொண்டு நாமே நம்முடைய புரிந்துணர்வை உருவாக்கிக்கொள்ளலாம்.

ஜோதிஜி said...

(10) 2009

எழுதத் தொடங்கிய கடந்த ஆறு மாதங்களில் என்னுடைய இரண்டு தளங்கள் வாயிலாக வந்த வாசித்த 28324 பேர்களுக்கும், தொடர்ந்து கொண்டுருப்பவர்களும், இணைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும், ஒவ்வொரு கால கட்டத்திலும் என்னை ஊக்குவித்தவர்களும், தவறுகளை திருத்தி வழி நடத்தியவர்களும், விமர்சனம் ஏதும் இல்லாமல், முகம் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக வாசித்துக்கொண்டுருப்பவர்களுக்கும், முகம் தெரியாத போதும் தூரத்தில் இருந்து என்னை என் வளர்ச்சியில் அக்கறை செலுத்திக்கொண்டுருக்கும், உங்கள் அத்தனை பேர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

உங்களின் அத்தனை நோக்கங்களும்,ஆசைகளும் இந்த 2010 ஆம் ஆண்டில் நிறைவேற தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.

புலவன் புலிகேசி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

நன்றியும் வாழ்த்துகளும் புலவன் புலிகேசி.

Thenammai Lakshmanan said...

நல்ல பகிர்வு ஜோதிஜி

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது சரி

புத்தாண்டு வாழ்த்துக்கள்

சுடுதண்ணி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

தொடர்ந்து எழுதுங்கள் :).

ஜோதிஜி said...

நன்றி தேனம்மை மற்றும் சுடுதண்ணி. வாழ்த்துகள்.

லெமூரியன்... said...

மிக அருமையான பகிர்வு ஜோதிஜி.....!

மாற்றங்களை நோக்கியே ஒவ்வொரு நொடியும் பயணம்....!

மாற்றங்களை எதிர் பார்ப்போம் தோழர்...!


ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே...!

Thoduvanam said...

பதிவுகள் மிக அருமை.
ஆழ்ந்து சிந்திக்க வைப்பவை .
மேலும் தொடர வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

நன்றி காளிதாஸ் அய்யா.