Wednesday, December 09, 2009

மாவீரர் தினமும் புலிகளின் நிறமும்

சிறீமாவே பண்டாரா நாயகா ஆட்சி.  சிங்கள தீவிரவாத ஜனதா விமுக்தி பெரமுணா (1971) உருவான நேரம். இந்தியா பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் நாட்டை சுதரந்திர நாடாக மாற்றிய தாக்கம்.

யாழ்பாண தமிழ் மாநாட்டை காரண காரியங்கள் ஏதும் இல்லாமல் சூறைக்காற்று போல் அமைதியாய் கூடியிருந்த மக்களை சின்னபின்னாபடுத்தி சிதறடிக்க காரணமாக இருந்த காவல்துறை அதிகாரி சந்திரசேகராவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட கொடுமை.
மேலே உள்ள ஒவ்வொரு புள்ளியும் சேர்ந்து யோசிக்க வைத்து ஒன்றாக மொத்த இளைஞர்களையும் ஆயுதப்புள்ளியாக மாற்றிய தருணமிது.  தொடக்கத்தில் உரிமை வேண்டும் , தமிழர்களின் தீர்வு என்றெல்லாம் வாதாடிக்கொண்டுருக்கும் காகிதப்புலிகளின் பார்வையில், " இதெல்லாம் சரிப்பட்டு வருமா?"  என்பதாகத்தான் இருந்தது.
ஆயுத எண்ணங்கள் கொண்ட இளைஞர்களுக்கு அந்த தலைவர்கள் அப்போது நடந்த தேர்தலில் தோற்ற போது மொத்தமாக சிந்தனைகளையும் இணைத்து ஒரு முற்றுப்புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியது.

"ஆயுதம் தான் இனி தீர்வு."

பிரபாகரன் என்பவரைக் குறித்து அப்போது யாருக்கும் தெரியாது. ஆனால் அவரால் முதன் முதலாக சுட்டுக்கொல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட யாழ்பாண மேயர் ஆல்பர்ட் துரையப்பா (1975 ஜுலை 27) என்று நிகழ்ச்சிக்குப்பிறகு பரவலாக எல்லோராலும் கவனிக்கப்பட்டவர்.  அப்போது பிரபாகரனுக்கு வயது 20. அதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு வரும் தனித்தனி பாதையில் பலரும் செயல்பட்டுக்கொண்டுருந்தனர்.

பிரபாகரன் தனது ஆயுதப்போராட்டத்தை தொடங்கியது முதல் 38 வருடங்கள் தொடர்ந்து அவருடைய நேரமும் சரியாக ஒத்துழைத்தது. உறுதுணையாக இருந்தது என்றால் அது மிகையில்லை.  பிரபாகரனின் மொத்த வாழ்க்கையில் காவல் துறையில் சிக்கிய ஒரே தருணம் தமிழ்நாட்டில் தி.நகரில். ஆனால் இளைஞர்களின் மொத்த ஆயுதப் போராட்டத்தையும் பிள்ளையார் சூழி போட்டு தொடங்கி வைத்தவர் உரும்பிராய் சிவகுமரன்.

நன்றாக சிங்களம் பேசக்கூடியவர்.  தமிழ் மொழியை வெறியாய் நேசித்தவர். யாழ்பாண தமிழ் மாநாட்டை சீரும் சிறப்புமாக நடத்திக்காட்ட தினந்தோறும் பாடுபட்டவர்.  மாநாட்டுக்கு தொடக்கம் முதல் இடம் தராமல், ஏராளமான பிரச்சனைகளை உருவாக்கி உருக்குலைக்க முயற்சித்த ஆல்பர்ட் துரையப்பாவை மனதில் குறித்து வைத்துருந்தவர். தமிழர் என்றும் தமிழர் நலனே எனக்கும் முக்கியம் என்றும் மொத்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு சார்பாக தன்னை அடிபொடியாக வாழ்ந்து கொண்டுருந்தவர் இந்த ஆல்பர்ட் துரையப்பா. அப்போது யாழ்பாண மேயராக இருந்தவர். சிவகுமரன் என்பவர் அப்போது உருவாகி இருந்த தமிழ் மாணவர் பேரவையில் செயல்பட்டு கொண்டுருந்தவர். முதன் முதலாக சயனை சுவைத்து உயிரை மாய்த்து மொத்த ஆயுதபோராளிகளின் வாழ்க்கையிலும் புதிய பாதையை உருவாக்கியவர்.

சிவகுமரனின் முதல் குறி தமிழ் மாநாட்டை சீர்குலைத்த காவல் அதிகாரி சந்திரசேகரா.  முயற்சித்த போது அப்போது துப்பாக்கி வேலை செய்யவில்லை. முதன் முதலாக நேருக்கு நேர் ஆயுதம் பேசத்தொடங்கி விட்டது என்று ஆட்சியாளர்கள் மொத்தமாய் இளைஞர்கள் அத்தனை பேரையும் அள்ளி போட்டுக்கொண்டு போய் கொள்ளி வைக்காத விதமாய் கொடூரம் காட்டிய தருணம் அது.  யாழ்பாண கைலாசப்பிள்ளையார் கோவிலுக்கு அருகே குடியிருந்தவரை சந்திர சேகராவை தினமும் கவனித்த சிவகுமரன் கையால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி செயல்படாத காரணத்தால் அவரை ஜீப்பில் இருந்து இறக்கி கத்தியால் கொல்லவும் முடியவில்லை.  காரணம் உடன் வந்தவர்கள் ஓட்டம் பிடித்த காரணத்தால் வெற்றிகரமான தோல்வி.

தலைமறைவான சிவகுமரனை பிடித்துக்கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் என்று அரசாங்கத்தால் அறிவிப்பு (1974) வெளியிடப்பட்டதும் இவருக்குத் தான். கோப்பாயில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க முற்பட்ட போது தப்பிக்க சயனைடை உண்ண ஆனால் காவல்துறையால் காப்பாற்றப்பட்டு யாழ்பாண மருத்துவனையில் வைத்துருந்த போது இறுதியில் சிகிச்சை பலன் அளிக்காமல் அப்போது இறக்கும் தருவாயில் சிவகுமரன் சொன்ன வாசகம்.

"துரோகிகளால் ஏமாற்றப்பட்டு விட்டேன்."

1975 ஜுன் மாதம் உயிர் பிரிந்து சவ ஊர்வலத்தில் கூடிய மொத்த இளைஞர்கள் கூட்டத்தின் கண்களிலும் ஒரு புதிய ஒளி பரவத்தொடங்கியது. "செய் அல்லது செத்துமடி."  காகிதப் புலிகளின் அறிவுரை எடுபடாமல், மாறி ஆயுதப்புலிகளின் வளர்ச்சியும் தொடர்ந்தது.

பிரபாகரன் வாழ்க்கையில் இந்த சிவகுமரன் நிகழ்வுகள் ஒவ்வொன்று ஆழப்பதிந்த பாடங்கள்.  உடன் இருப்பவர்களின் துரோகம், ஆயுத அறிவு, அதன் முக்கியத்துவம் என்று தன்னை உருமாற்றிக்கொண்ட காலம் அது.

ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் என்று தொடக்கம் பெற்று வளர்ந்த சூழ்நிலையில் யாழ்பாணத்தில் இராணுவ முற்றுகையில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த கம்பர் மலையைச் சேர்ந்த சத்தியநாதன் என்ற சங்கர் இறந்த நாளே பிரபாகரனால் கொண்டாடப்படும் வருட (நவம்பர் 27) மாவீரர் தினம். இறந்த வீரர்களுக்கு அஞ்சலி.  அப்போதைய நிகழ்வுகளை படம் பிடித்துக்காட்டும் மாவீரர்களின் சார்பான உரை. தமிழர்களின் பரம்பரியான நடுகல் முறை உருவாக்கி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள்.

இராணுவ தாக்குதலில் படுகாயமடைந்த சங்கர் என்று சத்தியநாதனை உயிர் பிழைக்க தமிழ்நாடு அழைத்து வரப்பட்ட போதும் 1982 நவம்பர் 27 அன்று வீரமரணம் அடைந்தார்.  இவர் இறந்த நாளை பின்னாளில் மாவீரர் தினம் என்று பிரபாகரனால் அறிவிக்கப்பட்டது. 1982ல் இறந்த சங்கர் மரணத்தை 1989 அன்று தான் மாவீரர் தினம் என்று பிரபாகரனால் உருவாக்கப்பட்டது.

பிரபாகரனால் இறந்த மாவீரர்களில் மரணத்தை கடைசி வரைக்கும் அங்கரிகப்படாத ஒரே நபர் இராஜிவ் காந்தி படுகொலையில் ஈடுபட்டு இறந்த பெண்(1991 மே 21) தனு.

பிரபாகரன் இயக்கம் தொடங்கி முதல் 2004 டிசம்பர் வரைக்கும் (ஆதாரம் சூரியப்புதல்வர்கள்) களப்பலியில் மாவீரர்கள் ஆண்கள் 13995 பெண்கள் 3875, கரும்புலிகள் ஆண்கள் 192 பெண்கள் 69 மற்ற எல்லைப்படைவீரர்கள் 280 பேர்கள்.

தொடக்கத்தில் இருந்த தமிழர் மாணவப் பேரவை , TNT (Tamil New Tigers) என்று மாற்றம் பெற்று 1978 ஆம் ஆண்டு வெளிப்படையாக LTTE (Liberation Tigers of Tamil Ealam) தமிழீழ விடுதலைப் புலிகள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இடையே பல படிகள் கடந்த இயக்கமும் பிரபாகரன் வாழ்க்கையும்.  நோக்கமும், திசையும் மாறவில்லை.  ஆனால் உடன் வந்த அத்தனை பேர்களும் மாற்றம் பெற்றனர்.

மொத்தமாக ஆயுதப்பாதையை தேர்ந்தெடுத்த இளைஞர்களில் இறுதிவரையிலும் பிரபாகரன் ஆளுமை அதிகமாக இருந்த போதிலும் இருந்த மற்ற இயக்கங்கள்

1. உமா மகேஸ்வரன் என்ற முகுந்தன் (PLOT) தமிழீழ விடுதலைக்கழகம்.
Peoples Liberation Organisation of Tamil Eelam.

பிரபாகரனை தொடக்கம் முதல் கவர்ந்தவர். போராளி இயக்கம் என்பது மக்களை சென்றடைந்து மக்கள் ஆதரவு வேண்டுமானால் உலகளாவிய பார்வையுடன் நீண்ட காலம் பலன் அளிக்கக்கூடிய திட்டங்களுடன் செயல்பட வேண்டும் என்றவர்.  சரளமாக ஆங்கிலத்தில் எழுத பேச தெரிந்தவர். ஊர்மிளா என்ற பின்னால் வரப் போகும் பெண் பிரச்சனையால் பிரிந்தவர்.

2. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Ealam People Revolutionary Liberation Frton EPRLF) பத்பநாபா.

3. ஈழப் புரட்சி அமைப்பு (Eelam Revoulutionary Organisation)  EROS  பாலகுமார்

4. தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organisation) TELO சிறீ சபாரெத்திரனம்

5. தமிழீழ விடுதலை இராணுவம் (Tamil Ealam Liberation Army) TELO காஸ்ட்ரோ

6. தமிழீழ இராணுவம் (Tamil Ealam Army) TEA தம்பிப்பிள்ளை மகேஸ்வரன்

7. தமிழீழத் தேசிய முன்னணி (National Liberation Front of Tamil Eealam) NLFT இது ஒரு குழுவாக செயல்பட்டது.

இது தவிர ஏறக்குறைய தோன்றி மறைந்து கொண்டுருந்த மற்ற 30 இயக்கங்கள்.

இலங்கை தமிழர்களின் வரலாற்றில் ஆங்கிலேயர்கள் காலத்தில் அருணாச்சலம் தொடங்கி ஜீஜீ பொன்னம்பலம் வரைக்கும்.
இனவாதிகள், தந்தை செல்வா தொடங்கி அமிர்தலிங்கம் வரைக்கும் மிதவாதிகள்.  பிறகு பிரபாகரன் போன்ற இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட "ஆயுதம் என்றே இனி தீர்வு" என்று கொண்ட கொள்கையினால் இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் தீவிரவாதிகள்.

"தீவிரவாதம் என்பது மட்டுமே இனி ஒரே தீர்வு" என்று யார் உருவாக்கினார்கள்?

சிங்களர்களுக்கு தொடக்கம் முதலே ஒரே பாதை? ஒரே ஒரு காரணம்?

இது சிங்கள நாடு.  சிங்களர்களால் ஆளப்பட வேண்டிய நாடு.  ஆனால் தமிழ் தலைவர்கள் என்று உள்ளே வந்தவர்கள் பலநோக்கம். பல பாதை.  பூர்வகுடி ஒரு பக்கம்.  மலையக தோட்டத் தமிழர்கள் ஒரு பக்கம்.

அன்று அவர்களின் பாதையும் வதையில் தான் முடிந்தது.  வதைபட்டவர்கள் தலைவர்கள் அல்ல.  அப்போதும் அப்பாவி மக்கள் தான்.  சொத்து இழந்து, உயிர் இழந்து, கற்பிழந்து என்று மொத்தமாய் அத்தனை உரிமைகளையும் இழந்தார்கள்.  எந்த விடியலும் தோன்றவில்லை.  காரணம் சிங்கள ஆதிக்கம் என்பது அத்தனை கொடூரமாக இருந்தது. இன்று வரையிலும் அது மட்டும் தான் இருக்கிறது.
ஆனால் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பிறகு மக்களும் இறந்தார்கள்.  கொண்ட கொள்கையாளர்களும் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு அடித்துக்கொண்டு இறந்தார்கள்.

"எனக்கு உயிர் முக்கியம் தான்.  ஆனால் உயிரை விட தமிழ் மக்களின் சுதந்திரம் பெரிது.   நீர்த்துப் போகச் செய்யும் எந்த செயல்பாடுகளையும் அனுமதிக்க மாட்டேன் "

ஒவ்வொரு கால காட்டத்திலும் தான் கொண்டு வாழ்ந்த கொள்கை சரி என்று கருதிக்கொண்டு பிரபாகரன் கொன்ற பட்டியல் மிக நீளம். காரணம் அவர் எதிர்பார்த்த " சுதந்திர சமரசம் என்பது மக்களுக்கு இறுதி தீர்வாக இருக்க வேண்டுமே தவிர இடைக்கால தீர்வாக இருக்கக்கூடாது.  நடந்த பாடங்கள் மொத்தமும் உணர்த்துவது இனி தமிழர்களும் சிங்களர்களும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் வாழ முடியாது. தனி நாடு தான் ஒரே தீர்வு" என்பதில் மொத்த உறுதியாய் இருந்தார்.

அப்போது வாழ்ந்த தந்தை செல்வா போன்ற தமிழ் தலைவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பங்களிப்புகளை செய்த போதிலும் எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தை அவரால் கொடுக்க முடியவில்லை.  அவரே பின்னாளில் தனிநாடு என்ற கோரிக்கை வைக்காமல் ஏமாந்து விட்டோம் என்று புலம்பியது தனிக்கதை.  பின்னால் வரும் அமிர்தலிங்கம் போன்றவர்களும் அதே நிலைமை.

உமா மகேஸ்வரன், அமிர்தலிங்கம், மாத்தையா என்று ஒவ்வொருவர் இறப்புக்கு பின்னாலும் ஆயிரம் காரணங்கள்.  சில காரணங்கள் தெளிவாக நமக்கு உணர்த்துவது பால பாடமான தமிழர்களின் ஒற்றுமையின்மையும் சுயநலமும்.

சுய நலத்தினால் விலை போய்க் கொண்டுருப்பவர்களையும், தரமற்றவர்களையும், கொள்கையாளர்கள் என்று சொல்லிக்கொண்டு கொலை கொள்ளை வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டுருப்பவர்களையும் பார்த்துக்கொண்டு இருந்தவரால் இவர்கள் இனிமேலும் இருந்தால் நம்முடைய பாதையும் கேள்விக்குறியாக கேலிக்குறியாக இருந்து விடும் என்பது அவருக்கு அவராலே உணர்த்தப்பட்ட நீதி வாக்கியம் நிறைய யோசிக்க வைத்தன் விளைவே சகோதர யுத்தங்கள்.  ரத்தச் சகதிகள்.

என்ன நடந்தது? ஏன் நடந்து?  ஆனால் அதற்கு முன்னால் பிரபாகரன் கடந்த வந்த 20 வருட வாழ்க்கையின் அடிப்படை சூத்திரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.  "சர்வாதிகாரம் தான் சிறந்தது" என்று எந்த தலைவரை முன்னோடியாக தேர்ந்தெடுத்து பின்பற்றினார்.  அதிக கல்வி அறிவு இல்லாத அவரை எந்த வாசிப்பு அனுபவம் உயர்த்தியது போன்றவற்றை அவரது நேர்காணல்களை உணர்ந்து கொண்டு தொடர்வோம்...........

3 comments:

மீன்துள்ளியான் said...

/பிரபாகரனால் இறந்த மாவீரர்களில் மரணத்தை கடைசி வரைக்கும் அங்கரிகப்படாத ஒரே நபர் இராஜிவ் காந்தி படுகொலையில் ஈடுபட்டு இறந்த பெண்(1991 மே 21) தனு.//

enna kaaranam

Thenammai Lakshmanan said...

மாவீரர் தினம் பற்றிய பதிவு அருமை

ஆனால் நடு நிலையோடு எழுதக் கூடியவர் நீங்கள் என உணர்கிறேன் ஜோதிஜி

தொடர்ந்து படித்து வருகிறேன்

அருமையான தகவல்கள்

புலவன் புலிகேசி said...

//இலங்கை தமிழர்களின் வரலாற்றில் ஆங்கிலேயர்கள் காலத்தில் அருணாச்சலம் தொடங்கி ஜீஜீ பொன்னம்பலம் வரைக்கும்.
இனவாதிகள், தந்தை செல்வா தொடங்கி அமிர்தலிங்கம் வரைக்கும் மிதவாதிகள். பிறகு பிரபாகரன் போன்ற இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட "ஆயுதம் என்றே இனி தீர்வு" என்று கொண்ட கொள்கையினால் இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் தீவிரவாதிகள். //

அப்பட்டமான உண்மைகள்....