Wednesday, January 09, 2019

இவர் (தான்) நம் கடவுள்முனைவர்.சாம் பிட்ரோடா (Dr. Satyanarayan Gangaram Pitroda) 

கடந்த பதினைந்து வருடங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப சாதனைகள் ஆகியவற்றால் இன்று இந்தியாவில் எல்லோரது கைகளிலும் செல்பேசி. போகுமிடங்கும் மக்கள் செல்பேசியில் பேசிக்கொண்டே செல்கிறார்கள் அல்லது SMS அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். ! இன்று இந்தியாவில் உள்ள செல்பேசிகளின் எண்ணிக்கைகள் கிட்டத்தட்ட 60 கோடி. 

ஆனால்.. 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்பை (Telecommunications infrastructure) காயாலன் கடைக்கு ஒப்பிடலாம். ஒருவர் வீட்டில் கருப்பு கலரில் ஒரு தொலைபேசி இருந்தால் அவர் மிகப் பெரிய பணக்காரர் அல்லது பெரிய அரசு அதிகாரி. அந்த தொலைபேசியில் பெரும்பாலும் டயல் டோனுக்கு பதில் “கொர்” என்ற சத்தம்தான் வரும் அல்லது வேலை செய்யாது. நீண்ட தூர (STD/ISD) அழைப்பு வசதிகள் கிடையாது. வெளி ஊர்கள் மற்றும் வெளி நாடுகளுக்குப் பேச வேண்டுமானால் டிரங் கால் (Trunk Call) பதிவு செய்து விட்டு மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டும். 97% சதவீத கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்பு கிடையாது. இப்படி இருந்த இந்திய தொலைபேசித்துறையை 1984-ஆம் ஆண்டு சி-டாட், C-DOT (Centre for Development Telematics) என்ற இந்திய அரசின் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கி தலைமைப் பொறுப்பேற்று வழி நடத்தி ஆறு ஆண்டுகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி திரும்பிய பக்கமெல்லாம் PCO (Public Calling Office) எனப்படும் பொது தொலைபேசி நிலையங்கள் அமைத்து, கிராமங்களில் தொலைபேசி இணைப்பங்களை நிறுவி தொலைபேசியை சாமன்ய மக்கள்களும் உபயோகிக்கும் சேவையாக மாற்றி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் சாம் பிட்ரோடா. எல்லோராலும் டாக்டர்.சாம் என்று அன்போடு அழைக்கப்படுபவர். 

சாம் பிட்ரோடா, 1942 ஆம் ஆண்டு மே 4ம் தேதி ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள டிட்டலார்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் குஜராத் மாநிலத்திலிருந்து ஒரிஸ்ஸாவிற்கு குடி பெயர்ந்து வந்த ஓர் தச்சு ஆசாரி (carpenter). அவர் நடத்தி வந்த கடையில் வந்த வருமானத்தில் தன்னுடைய 8 குழந்தைகளையும் பள்ளியில் படிக்க வைத்தார். சாம் 11 வயதில் குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். 22 வயதில் மாகாராஸ்டிரா சாய்ராவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் (Physics) முதுகலைப் பட்டம் பெற்றவுடன் அவரது தந்தை கொடுத்த $400 டாலர் பணத்துடன் 1964 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று சிகாகோ நகரில் உள்ள Illinois Institute of Technology கல்லூரியில் மின்சாரத்துறை முதுகலை (M.S in Electrical Engineering) பட்டப்படிப்பில் சேர்ந்தார். எல்லா இந்திய மாணவர்களைப்போலப் பகுதி நேர வேலை பார்த்து அதில் கிடைத்த பணத்தைக்கொண்டு படிப்பை முடித்தார். சிகாகோவில் உள்ள GTE என்ற நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து 1974 ஆம் ஆண்டு வரை GTE நிறுவனத்தில் எண்ணியல் மின்விசையமைப்பு (Digital Switching) என்ற துறையில் ஆராய்ச்சி பொறியாளராக பணியாற்றினார். 

அவர் கண்டுபிடித்த ஆராச்சிகளுக்காக வாங்கிய வடிவமைப்புகள் (Patents) முப்பதுக்கும் மேல். இந்தக் காலகட்டத்தில் அவர் ஒரு இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டு அமெரிக்க குடியுரிமையும் (US Citizenship) பெற்று தனது பெரும்பாலான சகோதர சகோதரிகளையும், பெற்றோர்களையும் அமெரிக்காவிற்கு அழைத்துக்கொண்டு விட்டார். 

சாம் தனது தந்தையாரின் அறிவுரையின்படி 1974 ஆம் ஆண்டு இரண்டு அமெரிக்க நண்பர்கள் கொடுத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு வெஸ்காம் ஸ்விட்சிங் (Wescom Switching, Inc) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 20 வடிவமைப்புகளை (Patents) கண்டுபிடித்து, ஆறு ஆண்டுகள் கழித்து அந்த நிறுவனத்தை ராக்வெல் (Rockwell) என்ற நிறுவனத்திடம் விற்றதின் மூலம் அவருக்குக் கிடைத்த பணம் $4 மில்லியன் டாலர்கள். டாக்டர்.சாம் 38 வயதில் ஒரு அமெரிக்க கனவு சுயமுனைப்பு கோடிஸ்வரர் (American dream self-made millionaire). 

1981 ஆம் ஆண்டு சாம் விடுமுறைக்காக இந்தியா வந்து ஒரிஸ்ஸாவில் உள்ள அவருடைய சொந்த கிராமத்திற்கு சென்றிற்கும் வேளையில் அங்கிருந்து ஒரு முக்கியமான காரணத்திற்காக அமெரிக்காவிற்கு தொலைபேச வேண்டிய நிலைமை. ஆனால்.. அந்தக் கிராமத்திலிருந்து அவரால் தொலைபேச முடியவில்லை. விடுமுறை முடிந்து அமெரிக்கா திரும்பி வந்தவுடன் மனமெல்லாம் இந்தியாவைப்பற்றித்தான். அவருக்கே தன்னைப்பற்றி ஒரு குற்றவுணர்வு. 38 வயதில் தொலைத்தொடர்பு துறையில் 50க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை (Patents) கண்டு பிடித்து கோடிஸ்வரனாக ஆகிவிட்டேன். 

ஆனால்.. என் தாய்நாட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்க வேண்டிய தொலைபேசி கட்டமைப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இந்திய தொலைபேசித்துறை மேல்நாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் காலாவதியான இயந்திரவியல் விசைமாற்றிகளை (Mechanical Switches) கோடிக்கணக்கான பணம் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்பு பற்றி எந்த ஒரு தொலைநோக்கு திட்டமும் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான DOT (Department of Telecommunications)யிடம் இல்லை. இந்த நிலைய மாற்ற வேண்டும் மனதில் ஒரு உறுதி எடுக்கிறார். 

****** 

சாம் சிகாகோ நகரிலிருந்து இந்திய தொலைபேசித்துறை (DOT-Department of Telecommunications) நிறுவனத்தின் தலைவர் அவர்களுக்கு தன்னைப்பற்றியும், இந்திய தொலைத்தொடர்பின் கட்டமைப்புக்குச் செய்ய வேண்டிய செயல் திறன்கள் பற்றி ஒர் கடிதம் எழுதினார். ஆனால்.. அந்தக் கடிதத்திற்கு எந்தப் பதிலும் வரவில்லை. மீண்டும் ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அதே கதைதான்.... நோ பதில். தனது முயற்சியில் சளைக்காமல் மூன்றாவது கடிதம் எழுதினார். மூன்றாவது கடிதத்திற்கு DOT தலைவரிடமிருந்து பதில் வந்தது. அதில் தன்னை டில்லியில் வந்து நேரில் பார்க்குமாறு எழுதியிருந்தார். இதற்கு எடுத்துக்கொண்ட காலம் ஏழு மாதங்கள்! 

சாம் உடனே சிகாகோவிலிருந்து கிளம்பி டில்லி வந்து DOT தலைவரைப் பார்த்து தனது செயல் திட்டங்களை விளக்கிக் கூறினார். அதைக் கேட்டு மிகவும் வியப்படைந்த DOT தலைவர், உங்கள் திட்டங்கள் அருமையானவை. ஆனால் அதற்கு நிறையச் செலவுகள் ஆகும். நிறையக் கொள்கை அளவிலான மாற்றங்கள் (Policy Changes) தேவை. அதற்கான அதிகாரம் எனக்கும் கிடையாது, தொலைத்தொடர்பு அமைச்சருக்கும் கிடையாது என்றார். 

“அப்படியென்றால் அந்த அதிகாரம் யாரிடம் உள்ளது?” என்று கேட்டார் சாம். 

“பிரதமர்” 

“நான் பிரதமர் இந்திரா காந்தியை சந்திக்க வேண்டும். உடனே ஏற்பாடு செய்து கொடுங்கள்” என்றார் சாம். 

இதைக்கேட்டு ஒரு கணம் அதிர்ச்சியாகிவிட்டார் DOT தலைவர். 

என்னடா இவன் தொடர்ந்து லெட்டர் எழுதி இம்சை கொடுக்கிறானேன்னு கூப்பிட்டு பேசுனா, சர்வ சாதாரணமா பிரதமரிடம் அழைத்துக்கொண்டு போன்னு சொல்றான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார். ஆனால 39 வயது சாமின் இளமை, அவருடைய சாதனைகள், அவருடைய கண்களில் இருந்த ஒரு வெறி ஆகியவற்றைத் தெரிந்துகொண்ட DOT தலைவர் என்னால் முடிந்த வரை ஏற்பாடு செய்கிறேன். ஆனால் உடனே முடியாது, பல நாட்கள் ஆகலாம் என்கிறார்.

 ”பரவாயில்லை நான் ஒரு மாதம் வரை டில்லியில் தங்கும் திட்டத்தோடுதான் வந்துள்ளேன். வெயிட் செய்கிறேன்” என்றார் சாம். 

DOT தலைவர் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி சாமிற்கு இரண்டு வாரங்கள் கழித்து பிரமதர் இந்திரா காந்தியிடம் பேசுவதற்கு 10 நிமிடங்கள் அப்பாயின்மெண்ட் வாங்கிக் கொடுத்தார். 

ஆனால் சாம் எனக்கு 10 நிடங்கள் போதாது. 10 நிமிடங்களில் ஒன்றும் தெளிவாக எடுத்துக் கூற முடியாது. ஒரு மணி நேரம் வேண்டும் என்றார்.

என்னடா இவனோடு ஒரே தொல்லையா போச்சே என்று நினைத்துக்கொண்டே பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது பிரதமர் அலுவலகம் முடியாது என்று கூறிவிட்டது.

 சாம் DOT தலைவருக்கு மிக்க நன்றி கூறிவிட்டு, பிரதமரிடம் ஒரு மணி நேரம் அப்பாயின்மெண்ட் கிடைக்கும்போது எனக்குத் தெரியப்படுத்துங்கள் நான் திரும்பி வருகிறேன் என்று தெரிவித்துவிட்டு சிகாகோ திரும்பி வந்துவிட்டார். 

பிரதமரிடம் கிடைத்த 10 நிமிட அப்பாயின்மெண்டை வேண்டாமென்று கூறி திரும்பிச் சென்ற சாமின் உறுதி DOT தலைவருக்கு அவரின் மேல் மேலும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. தனது நண்பர்களின் உதவியுடன் சாமைப்பற்றியும் அவருடைய செயல் திட்டங்கள் பற்றியும் அப்போது தொழில் நுட்பங்களில் அதிக ஆர்வம் கொண்ட பைலட்டாகா பணியாற்றிக் கொண்டிருந்த ராஜீவ் காந்தியிடம் கொண்டு சேர்த்தார். 

ராஜீவ் காந்தி சாமைப் பற்றி விபரங்களைச் சேகரித்து கொடுக்குமாறு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தையும், RAW-விடம் கேட்டிருக்கிறார் (Background and Security checks) 

சாம் டில்லியிலிருந்து சிகாகோ திரும்பி ஆறு மாதங்களாகியும் DOT தலைவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்பதால் ராக்வெல் (Rockwell) நிறுவனத்தில் அவருடைய துணைத் தலைவர் (Vice President) வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். 1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சாமிற்கு பிரதமர் அலுவகத்திலிருந்து அவருக்குப் பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒரு மணி நேர அப்பாமெண்ட் பற்றிய தகவல் வருகிறது. 

பிரதமர் அலுவகத்திற்கு தனது வருகையை உறுதி செய்து தகவல் அனுப்பிவிட்டு பிரதமருடனான சந்திற்பிக்கு தேவையான பிரசண்டேசன் சிலைடுகள் (Presentation slides) தாயார் செய்யும் வேலைகளில் இறங்கி விட்டார். 

1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் டில்லிக்கு வந்து பிரதமரை சந்திக்க சென்றார். அங்குப் போனால் பிரதமர் இந்திரா காந்தி, அவருடைய பக்கத்தில் ராஜீவ் காந்தி மற்றும் காபினெட் மந்திரிகள் அந்த கான்பரன்ஸ் அறையில். தன்னைப் பற்றி அறிமுகப் படுத்திக்கொண்டு இந்திய தொலைத்தொடர்பின் கட்டமைப்பின் அவசியம், அதற்கான தொலைநோக்கு திட்டம் பற்றிய தனது பேச்சை தொடர்ந்தார். இந்திரா காந்தி மற்றும் அமைச்சர்களிடமிருந்து சரமாரியான கேள்விகள். எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதிலளித்து விளக்குகிறார். அவர் அளித்த தொலைநோக்கு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: 

1. இந்தியாவின் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியா தன்னுடைய சொந்த தொழில்நுட்பத்தில் எண்ணியல் மின்நிலைமாற்றிகளை (Digital Switches) தயாரிக்க வேண்டும். 

2. இந்திய தொலைப்பேசித்துறை காலாவதியான தொழில்நுட்ப இயந்திரவியல் நிலைமாற்றிகளை (Mechanical Switches) இனிமேல் வாங்கக்கூடாது 

3. இந்தியா தன்னுடைய சொந்த தொழில்நுட்ப எண்ணியல் மின்நிலைமாற்றிகள் சந்தைக்கு வரும்வரையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பெரு நகரங்களின் தேவைக்கு மேல் நாட்டு நிறுவனங்களிலிருந்து விலை அதிகமானாலும் எண்ணியல் மின்நிலைமாற்றிகளை வாங்க வேண்டும் 

ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. 

கூட்டம் முடிந்தவுடன் ராஜீவ் காந்தி வந்து சாமின் கைகளைக் குலுக்கி, கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்து இந்த சந்திக்க நான்தான் ஏற்பாடு செய்தேன் என்கிறார். தன் வயதுடைய இளைஞரான ராஜீவ் காந்தியை நன்றியுடன் பார்க்கிறார் சாம் (ராஜீவ் சாமைவிட இரண்டு வயது இளையவர்). ஒரு ஆழமான நட்பின் தொடக்கம்.......!! 

********** 

ராஜீவ் காந்தியுடனான அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு சாமும் ராஜீவும் அடுத்த சில நாட்களில் பல முறை சந்தித்துப் பேசி நெருங்கிய நண்பர்களானார்கள். பிரதமர் இந்திரா காந்தியுடன் நடந்த சந்திப்பு முடிந்த ஒரு சில மாதங்களில் மத்திய மந்திரிசபை சாம் தலைமையில் இந்திய தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிலையத்தை (C-DOT, Centre for Development of Telematics) அமைக்க 50 கோடி நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்தது. 

1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் C-DOT டில்லியில் தொடங்கப் பட்டது. சாம் பிரதமர் இந்திரா காந்தியிடம் கீழ்க்கண்ட உறுதிமொழிகளை அளித்தார். 

C-DOT தொடங்கி மூன்று வருடத்திற்குள் 128 தொலைபேசி இணைப்புகள் கொண்ட முதல் தாணியங்கி கிராமப்புற எண்ணியல் நிலைமாற்றி தொலைபேசி இணைப்பகத்தை (128 Lines Rural Automatic Exchange) உற்பத்தி செய்து விடுவோம். 

ஐந்து வருடத்திற்குள் நகரங்களுக்குத் தேவையான 10,000 தொலைபேசி இணைப்புகள் கொண்ட எண்ணியல் நிலைமாற்றி தொலைபேசி இணைப்பகத்தை (10,000 Lines Multi Base Module Digital Exchange) உற்பத்தி செய்து விடுவோம். 

சாமின் பெற்றோர்கள் சிகாகோவில் சாமுடன் செட்டிலாகிவிட்டார்கள். சாமின் குழந்தைகள் சிகாகோவில் படித்துக் கொண்டிருந்தார்கள். எனவே சாமின் குடும்பம் சிகாகோவிலிருக்க சாம் மட்டும் டில்லிக்கு வந்து C-DOT பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தனக்கு அளிக்கப்பட்ட ஒரு காரியதரிசியுடன் சாம் 1984 ஆகஸ்ட் மாதம் C-DOTன் பணிகளைத் தொடங்கினார். சாம் தனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனால் அரசாங்க நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க முடியாது என்ற விதிமுறையின்படி சாம் பெற்றுக்கொண்ட சம்பளம் ஆண்டு ஒன்றுக்கு ஒரு ரூபாய். 

இந்தியாவில் உள்ள அனைத்து I.I.T (Indian Institute of Technology) மற்றும் சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூக்குச் சென்று மாணவர்களிடம் உரையாற்றினார். சாமின் உத்வேக உணர்ச்சி மிகுந்த பேச்சைக்கேட்ட மாணவர்கள் C-DOTல் சேர முன் வந்தனர். இதில் பாதி பேர் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேல் படிப்புக்காக செல்லவிருந்தவர்கள்! ஒரே மாதத்தில் 50 சிறந்த இளம் பொறியிலாளர்களைச் தேர்வு செய்தார் சாம். இப்படி இரவு பகலாக உழைத்து C-DOTஐ உருவாக்கிக் கொண்டிருக்கும்போது இடியென வந்து தாக்கியது அக்டோபர் மாதத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் கொலை! ஆனால் அடுத்த பிரதமர் ராஜீவ் காந்தி! சாமின் நெருங்கிய தோழர். ராஜீவ் பதவி ஏற்றுக்கொண்ட ஒரு மாதம் கழித்து சாமிடம் சொன்னது “நம்முடைய தொலை நோக்கு திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை. எவ்வளவு செலவானும் பரவாயில்லை. நான் துணை நிற்பேன். உங்கள் பயணத்தை தொடருங்கள்”. 

மேல் அதிகாரிகளுக்குச் சார் போடுதல், கூழைக் கும்பிடு போடுதல் போன்ற நிர்வாகத்தால் புரையோடிக் கிடக்கும் அரசாங்க அலுவலகங்கள் உள்ள இந்தியாவில் முதன் முதலில் C-DOT என்ற அரசாங்க நிறுவனத்தில் ”திறந்த பண்பாடு (Open Culture)” என்ற அமெரிக்க பாணி வேலை பார்க்கும் பண்பாட்டைக் கொண்டு வந்தவர் சாம். அதன்படி யாரும் சார் போடுதல் கூடாது, எல்லாரையும் பேர் சொல்லித்தான் கூப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மேல் அதிகாரிகளைப் பார்த்து பாரும் எழுந்து நிற்கக் கூடாது, பயப்படாமல் தைரியமாக மீட்டிங்கில் பேச வேண்டும், தேவையென்றால் சாமை எதிர்த்துப் பேசி கேள்விகள் கேட்க வேண்டும். இவைகள் ஒரு சில உதாரணங்கள். 

மத்திய அரசாங்க நிறுவனங்களுக்குச் சம்பள அடிப்படை உள்ளதால் C-DOT பொறியிலாளர்களுக்கு அதற்கு மேல் கொடுக்க முடியாது என்ற காரணத்தால் சாம் பிற சலுகைகளை அள்ளிக்கொடுத்தார். அவற்றில் ஒரு சில: 

1. C-DOT செலவில் வசிக்க வீடு (C-DOT leased accommodation) 

2. வீட்டிலிருந்து அலுவலகம் போய் வர கார் 

3. 365 X 24 கேண்டினில் இலவச சாப்பாடு 

4. விளையாடி ரிலாக்ஸ் செய்ய இண்டோர் விளையாட்டு அரங்கம் 

5. அலுவலக பயணத்திற்கு விமானப் பயணம். அந்தக் கால கட்டத்தில் I.A.S அதிகாரிகளுக்குக் கூட விமானப் பயணம் கிடையாது. முதல் வகுப்பு ரயில் டிக்கெட்தான். முக்கியமான மூத்த I.A.S அதிகாரிகள்தான் விமானத்தில் பயணம் செய்ய முடியும்.. 

அந்த காலகட்டத்தில் மிகச்சிறந்த தனியார் நிறுவனங்களில் கூட இளம் இஞ்சீனியர்களுக்கு இது போன்ற சலுகைகள் கிடையாது! இந்த சலுகைகள் மற்றும் சாமின் வழிகாட்டுதலில் C-DOT இளம் பொறியாளர்கள் வேலை, வேலை, வேலை என்று ஒருவித வெறியோடு கடுமையாக உழைத்தார்கள். வேலை, சாப்பாடு மற்றும் விளையாட்டு என்று ஒரு கல்லூரி விடுதி போலத்தான் இருக்கும் C-DOT அலுவலகம். சாமுடைய குடும்பம் சிகாகோவிலிருந்ததால் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் சாம் அலுவகத்தில்தான் இருப்பார். இளைஞர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தல், டேபிள் டென்னிஸ் விளையாடுதல், முதுகில் தட்டிக்கொடுத்து வேலை வாங்குதல் என்று ஒரு சக நண்பன், சகோதரன்போல் பழகுவார். C-DOT தலைவர் என்று ஒரு சிறிய பந்தாகூட இருக்காது. 

சாம் மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்கு கொடுத்த வாக்குறுதிப்படி 1987ஆம் ஆண்டு C-DOTன் சொந்த தொழில்நுட்பத்தில் உருவான 128 தொலைபேசி இணைப்புகள் கொண்ட முதல் தானியங்கி கிராமப்புற இணைப்பகம் தாயார்!. இந்த சமயத்தில் C-DOTன் பொறியியலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 500 பேர். சராசரி வயது 25! டில்லி, பெங்களூர் என்ற இரு இடங்களில் அலுவலகங்கள். 

இந்தியாவின் பிரதமரும், தன்னுடைய நண்பருமான ராஜீவ் காந்தி முன்னிலையில் 128 இணைப்புகள் கிராமப்புற தொலைபேசி இணைப்பகம் (128 RAX – Rural Automatic Exchange) வழியாக 1987 ஆம் ஆண்டு தொலைபேசி இந்திய தொலைபேசித்துறை வரலாற்றில் சாதனை நிகழ்த்திக் காட்டினார். 

இந்தக் கிராமப்புற தொலைபேசி இணைப்பகத்தின் முக்கிய அம்சங்கள்: 

1. உறுதியான வடிவமைபு (Rugged Design); குறைந்த மின்சாரத்தில் இயங்குவது (Less power consumption). கிராமங்களில் மின்சாரத் தடைகள் இருக்கும் என்பதால் A/C இல்லாமலேயே வேலை செய்யும். 

2. உலகிலேயே கிராமங்களுக்காக குறைந்த (128 Lines) தொலைபேசி இனணப்புகள் கொண்ட மிகச் சிறிய முதல் தானியங்கி எண்ணியல் நிலைமாற்றி இணைப்பகம் (Digital Automatic Exchange) 

3. பல வடிமைப்புகள் (Patents) கொண்டது 

அடுத்து செய்ய வேண்டியது, இந்தக் கிராமப்புற தொலைபேசி இணைப்பகத்தை இந்திய தொலைபேசி கட்டமைப்பில் சோதனை செய்து (Field Trial) , அதிக அளவில் உற்பத்தி செய்வது (Mass Production). ஆனால் அதற்கு காத்திருந்தன இந்திய அரசாங்க ஊழல் அதிகாரிகளின் எதிர்ப்புகள். அந்த எதிர்ப்புகளை சாம் எப்படிச் சமாளித்தார்?

 ******** 

தொலைபேசித்துறை (DOT) உயர் அதிகாரிகள் மேல் நாட்டு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்த நிறுவனங்கள் கொடுக்கும் காலாவதியான இயந்திரவியல் விசைமாற்றிகளையும் மற்ற உபகரணங்களையும் வாங்கிக்கொண்டிருந்தார்கள். C-DOT மற்ற அரசாங்க நிறுவனங்களைப் போல் சொன்ன நேரத்தில் எதையும் முடிக்க மாட்டார்கள், கொஞ்ச நாட்களில் மூடி விடுவார்கள் என்று நினைந்திருந்தார்கள். 

ஆனால், சாம் மூன்று ஆண்டுகளுக்குக் குறைவாக 128 Lines RAX உற்பத்தி செய்து காட்டியபோது மிரண்டு விட்டார்கள். காரணம்... C-DOT மிடமிருந்து எண்ணியல் விசைமாற்றிகளை தொலைபேசித்துறை வாங்கினால் அவர்களுக்கு லஞ்சம் கிடைக்காது! எனவே C-DOT 128 Lines RAX இணைப்பகத்தை தொலைபேசித்துறை கட்டமைப்பில் சோதனை செய்ய (Filed Trial) தாமதப்படுத்துதல், தேவையானவற்றை செய்து கொடுக்காமல் இழுத்தடித்தல் போன்ற பல தொல்லைகளை C-DOTக்கும் சாம் அவர்களுக்கும் தொலைபேசித்துறை உயர் அதிகாரிகள் கொடுத்தார்கள். 

சந்தையில் போட்டித்தன்மை இருந்தால்தான் எண்ணியல் விசைமாற்றிகளின் விலை குறைவு, சந்தை ஆற்றல் (Market Efficiency) ஆகியவை மேம்படும் என்று சாம் யோசித்து C-DOT-ன் எண்ணியில் விசைமாற்றிகளை பொதுத்துறை மற்றும் L&T, WS Industries போன்ற தனியார் நிறுவனங்களுக்கு C-DOT தொழில்நுட்பத்தை ராயல்டி (Royalty) அடிப்படையில் விற்கும் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதற்கு தொலைபேசித்துறை உயர் அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

 ITI (India Telephone Industries) எனப்படும் பெங்களூரில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்திடம்தான் C-DOT தனது எண்ணியல் விசைமாற்றி தொழில்நுட்பத்தைக் கொடுக்க வேண்டும். ITI மட்டும்தான் C-DOT எண்ணியல் விசைமாற்றிகளை தயாரிக்க வேண்டும் என்று கூறினார்கள். ITI பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற ஒரு ஆற்றலற்ற (Inefficient) நிறுவனம். ITI-யிடம் கொடுத்தால் அவர்கள் ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்பது தொலைபேசித்துறை உயர் அதிகாரிகளின் கணக்கு (என்னா... ஒரு வில்லத்தனம்!). ஆனால் சாம் ஒரு போதும் முடியாது என்று கூறிவிட்டார். 

தொலைபேசித்துறை அதிகாரிகள் கொடுக்கும் தொல்லைகளை ராஜீவ் காந்தியிடம் எடுத்துக் கூறினார் சாம். அதற்கான தீர்வு என்ன என்று ராஜீவ் சாமிடம் கேட்டார். இந்தியாவில் உள்ள அனைத்து தொலைபேசி சார்ந்த நிறுவனங்களான DOT (Department of Telecommunications), TEC (Telecommunication Engineering Centre), C-DOT (Centre for Development of Telematics), ITI (Indian Telephone Industries) ஆகியவற்றையெல்லாம் Telecom commission எனற ஒரு அமைப்பின்கீழ் கொண்டு வர வேண்டும் என்றார். 

உடனே ராஜீவ அப்படியே செய்து விடலாம்... நீங்களே Telecom commission தலைவர் ஆகி விடுங்கள் என்றார். மேலும் ராஜீவ் ”நீங்கள் அமெரிக்க குடிமகன் (American Citizen), இதற்கு மந்திரிசபையில் பலத்த எதிர்ப்பு இருக்கும். நீங்கள் அமெரிக்க குடியுரிமையை கொடுத்து விடுங்கள். உங்களுக்கு காபினெட் மந்திரி அந்தஸ்தில் Scientific Advisor to Prime Minister என்ற பதவி கொடுக்கிறேன்” என்றார். அரசாங்க அதிகாரிகளின் எதிர்ப்பைச் சமாளித்து தனது செயல் திட்டங்களைச் செயல்படுத்த ராஜீவ் சொல்வதுதான் சரியான வழி என்று முடிவு செய்து 1987 ஆம் ஆண்டு தனது அமெரிக்க குடியுரிமையை கொடுத்துவிட்டு பிரதமரின் அறிவியல் ஆலோசகர் (Scientific Advisor to Prime Minister) மற்றும் தொலைபேசித்துறை குழு (Telecom Commission) தலைவர் என்ற பதவிகளை ஏற்றுக்கொண்டார். சாமின் மனைவியும், குழந்தைகளும் டில்லிக்கு வந்து .சேர்ந்தார்கள்.

அதிகாரமுள்ள இரண்டு பதவிகள் சாமிடம் இருந்ததால் அரசாங்க அதிகாரிகளின் தடைகளை தவிடுபொடியாக்கிவிட்டு முன்னேறினார். 

தடை போட்ட உயர் தொலைபேசித்துறை அதிகாரிகளைப் பெண்டு நிமித்தினார். சாம் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர் என்பதால் எல்லா மந்திரிகளும், தலைவர்களும் சாமிடம் மரியாதையாக நடந்து கொண்டார்கள். சாம் தனது திட்டப்படியே C-DOT எண்ணியல் விசைமாற்றிகள் மற்றும் தொலைபேசி அனுப்புதல் (Telecom transmission) உபகரணங்கள் தயாரிக்கும் உரிமைகளை ராயல்டி அடிப்படையில் 40 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கினார். 

128 RAX கிராமப்புற தொலைபேசி இணைப்பகம் தொலைபேசித்துறை கட்டமைப்பில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் 256 RAX கிராமப்புற தொலைபேசி இணைப்பகமும் தயாராகி சோதனை செய்யப்பட்டது. 40 நிறுவனங்கள் இந்த கிராமப்புற தொலைபேசி இணைப்பககங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கின. இந்தியாவில் உள்ள கிராமங்கள்தோறும் கிராமப்புற தொலைபேசி இணைப்பககங்கள் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டன. 

1988 ஆம் ஆண்டில் சிறிய நகரத்துக்கான 512 Lines SBM (Single Base Module) தொலைபேசி இணைப்பகம் ரெடி. பெரிய நகரத்துக்கான 10,000 lines தொலைபேசி இணைப்பகம் குறித்த 5 ஆண்டுகளில் முழுவதுமாக தாயார் ஆகவில்லை. ஆனால் அதன் நகல் (Prototype) தாயாராக இருந்தது. 1989 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள அல்சூர் (Ulsoor) தொலைபேசி இணைப்பகத்தில் C-DOT-ன் 10,000 Lines தொலைபேசி இணைப்பகதின் சோதனை (Field Trial) தொடங்கியது. இதன் சிறப்பு என்னவென்றால் 1000 தொலைபேசி இணைப்புகள் தொடங்கி தேவைக்கேற்ப Base Module-களை இணைத்து 10,000 இணைப்புகள் வரை கொண்டு செல்லலாம். 

இந்தக் காலகட்டத்தில் டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் மேல் நாட்டு நிறுவனங்களிடமிருந்து எண்ணியில் நிலைமாற்றிகள் வாங்கி தொலைபேசித்துறையின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் STD/ISD தொலைதூர சேவைகள் தொடங்கப்பட்டன. நகரங்களில் PCO (Public Calling Office) எனப்படும் மஞ்சள் நிற பொது தொலைபேசி நிலையங்கள் அமைக்கப்பட்டன. PCO அமைக்க ஊனமுற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. வருமானத்தில் PCO உரிமையாளர்களுக்கு 20% கமிசன் கொடுக்கப்பட்டது. 

இவ்வாறாக சாமின் திட்டங்கள், கனவுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேறிக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வாழ்க்கையில் எப்போதும் வெற்றிகள் மட்டும் கிடைத்துக் கொண்டிருக்காது. தோல்விகள், சோதனைகள் எல்லோருக்கும் வரும். அது கடவுளின் நியதி.... Law of Average! 1989 ஆம் ஆண்டில் சாமிற்கு மிகப் பெரிய சோதனை வந்தது. அதன்பின் ஏற்பட்ட தொல்லைகள், மன அழுத்தங்களால் சாமின் 48 வயதில் 1990 ஆம் ஆண்டு மிகப்பெரிய மாரடைப்பு (Massive Heart Attack)..... ஏன்? 

********* 

1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. வி.பி.சிங் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றியது. கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருக்ஷ்ணன் தொலைத் தொடர்பு மந்திரியானார். சாம் தனது அறிவியல் ஆலோசகர் (Scientific Advisor to Prime Minister) பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தொலைத் தொடர்பு குழு தலைவர் அரசியல் சாராத பதவி (Non political appointment) என்பதால் இந்தப் பதவியை ராஜினாமா செய்ய வில்லை. தான் தொடங்கிய திட்டங்களை முழுமையாக முடிக்க வேண்டும் என்று தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். 

சாம் அவர்கள் ராஜீவின் நண்பர் என்பதை மனதில் கொண்டு தொலைத் தொடர்பு மந்திரி உன்னிகிருக்ஷ்ணன் சாமிற்கு பல தொல்லைகள் கொடுத்தார். ஆனால் சாம் அவற்றைக் கண்டு கொள்ளாமல் தனது திட்டங்களைத் தொடர்ந்து செயல் படுத்தும் வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பல மாதங்கள் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தும் தாங்கிக் கொண்டு ராஜினாமா செய்யாமல் வேலை பார்க்கும் சாமை பார்த்து கோபம் கொண்டு சாம் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி விசாரணைக் கமிசன் அமைத்தார் உன்னிகிருக்ஷ்ணன். 

இதை சாம் சற்றும் எதிர் பார்க்கவில்லை. கோடிக் கணக்கில் அமெரிக்காவில் சம்பாதிக்கக்கூடிய வேலையை விட்டு விட்டு இந்தியாவிற்குத் திரும்பி வந்து ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு இரவு பகலாக தாய்நாட்டிற்கு உழைத்த என் மீதா ஊழல் குற்றச்சாட்டு என்று வேதனையில் துடித்தார் சாம். இதன் பலன் 1990 ஆம் ஆண்டில் தனது 48 வயதில் சாமிற்கு பெரிய மாரடைப்பு (Massive Heart Attack)

இந்தியா முழுவதும் உள்ள விங்ஞானிகள், பேராசிரியர்கள், தொலைத் தொடர்பு பொறியிலாளர்கள் கொதித்துப் போய் அரசங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சாமிற்கு நான்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சாம் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா கூறி தொலைத்தொடர்பு மந்திரி உன்னிகிருக்ஷ்ணன் மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு வி.பி.சிங்கின் அரசாங்கம் ஆட்சியை இழந்தது. சந்திரசேகர் காங்கிரஸ் ஆதரவில் பிரதமரானர். பை பாஸ் அறுவை சிகிச்சை முடிந்து பல மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு 1991 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தொலைத் தொடர்பு குழு தலைவர் பணிக்குத் திரும்பினார். 

ஆனால் 1991 ஆம் ஆண்டு மே மாதம் தனது உற்ற தோழன் ராஜீவ் காந்தி கொலையால் சாம் மிகவும் மனமொடிந்து போய்விட்டார். நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அப்போதைய தொலைத் தொடர்பு மந்திரி ராஜேக்ஷ் பைலட்டிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு 1991 ஆம் ஆண்டு இறுதியில் குடும்பத்துடன் சிகாகோவிற்கு திரும்பிச் சென்று விட்டார் சாம். 

சிகாகோவிற்கு திரும்பி வந்தபிறகு சில காலம் ஓய்வெடுத்து விட்டு C-SAM, Inc என்ற நிறுவனத்தை தொடங்கி இன்றும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு டாக்டர். மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் இந்திய அறிவுசார் ஆணையத்தை (National Knowledge Commission) அமைத்து அதன் தலைவராக சாம் அவர்களை தலைவராக நியமித்தார். 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அறிவுசார் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி 300-க்குக் மேற்பட்ட பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்தார். 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கின் அறிவியல் ஆலோசராக (Scientific Advisor to Prime Minister) ஆக பணியாற்றி வருகிறார். 

இந்திய அரசு 2009 ஆம் ஆண்டு சாம் அவர்களுக்கு “பத்மபூசன்” விருது வழங்கி கவுரவித்தது. 

••••••••••••••••••

கட்டுரையை எழுதியவர் என் நெருங்கிய நண்பர் ரவி.  வெட்டிக்காடு என்ற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இன்று தொலைதொடர்பு சார்ந்த சர்வதேச நிறுவனத்தில் இயக்குநராக சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றார். இந்தக் கட்டுரை மொழிமாற்றம் செய்யப்பட்டது அல்ல. இவர் தனது சொந்த அனுபவங்களின் வாயிலாக எழுதப்பட்டது. ஐந்து பகுதிகளாக வெளியிட்டு இருந்தார்.  நான் செம்மைபடுத்தி ஒரே பகுதியாக மாற்றியுள்ளேன்.

1. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சாம் அவர்கள் தொலைத் தொடர்பு குழு தலைவராக பணியாற்றிய போது அவரது அலுவகத்தில் புது கணினியை நிறுவி Novell LAN கணினி கட்டமைப்பில் இணைத்து சாம் அவர்களுக்கு Novell LAN கணினி கட்டமைப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று இந்த 22 வயது சிறியவன் விளக்கியிருக்கிறேன். சாம் அவர்களுடன் பணியாற்றிய போது ஏற்பட்ட பிரமிப்புகளுக்கு தனி பதிவு தேவைப்படும். சாம் அவர்கள் தொடங்கிய C-DOT நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று எண்ணி C-DOT-க்கு விண்ணப்பம் செய்து தேர்வாகி 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்தில் C-DOT, Bangalore-ல் சேர்ந்தேன். 

2. இந்திய தொலைத் தொடர்பு கட்டமைப்புக்கு வெவ்வேறு கால கட்டத்தில் ஒரு துளி பங்காற்றியிருக்கிறேன் 

1992-1992 ஆம் ஆண்டுகளில் C-DOT-ல் பணியாற்றியபோது C-DOT முதல் 10,000 தொலைபேசி இணைப்புகள் இணைப்பகம் சோதனையில் (Field Trial) பணியாற்றியது. மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பல C-DOT எண்ணியல் 500-2000 Lines தொலைபேசி இணைப்பகங்களை நிறுவியிருக்கிறேன் 

1998 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் கட்டணம் இல்லா (Toll Free ) தொலைபேசி சேவையை அறிமுகப் படுத்திய புராஜக்டில் C-DOT-டோடு இணைந்து பணியாற்றியிருக்கிறேன் 

2006-2007 ஆம் ஆண்டுகளில் ரிலையன்ஸ் தொலைபேசி நிறுவனத்தின் Voice Over IP கட்டமைப்பை வடிவமைத்தவர்களில் நானும் ஒருவன் (Architect) 
2008 ஆம் ஆண்டு முதல் BSNL, MTNL, Reliance Communications, Bharti AirTel போன்ற நிறுவனங்களுக்கு அடுத்த தலைமுறை கட்டமைப்பு (Next Generation Networks) என்ற தொழில் நுட்பத்திற்கு ஆலோசகராக (Consultant) பணியாற்றி வருகிறேன். 

19 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

வெட்டிக்காடு ரவி ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் தேவை என்று கூகிள் பிளஸ்சில் பகிர்ந்து கொண்டிருந்த நாட்களில் தாமாக வந்து உதவிய நல்லுள்ளத்துக்குச் சொந்தக்காரர் என்பது இந்தச் சமயம் நினைவுக்கு வருகிறது.

ராஜீவ் காந்தியின் ஆரம்பநாட்கள், 1984 சீக்கியர்நாட்களில் படுகொலை, போபால் விஷவாயு விவகாரங்கள் நீங்கலாக, இந்த தேசத்தை மாற்றவேண்டுமென்கிற துடிப்புடன் இருந்தவைதான்! பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவுடன் ஒரு இணக்கமான உறவைக் கொண்டிருந்தவர், 1988 இல் சீனாவுக்குப் போன முதல் பிரதமர் என்பதெல்லாம் நல்ல விஷயங்கள் தான்! ஆனால் குடம் பாலில் விஷம் அளந்த மாதிரி Bofors விவகாரம் எல்லாவற்றையும் கலைத்துப்போட்டு விட்டது!

G.M Balasubramaniam said...

சாம் பிட்ரோடா பற்றிய அரிய தகவல்கள் ஆனால் எல்லாவற்றுக்கும் அடிக்கல் நாட்டியவர்களை அடியோடு மறந்து தன்னால்தான் இவை நிகழ்கிறது என்று சொன்னாலும் சொல்லலாம்

KILLERGEE Devakottai said...

சாம் போன்ற நல் இதயம் படைத்தவரை இந்த சுயநல அரசியல்வாதிகள் எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறார்கள்.

இன்றைய இளைய தலைமுறையினர் அலைபேசியோடு அலைவதின் அடிப்படை காரணவாதி திரு. சாம் அவர்கள்தானே...

இவரை எத்தனை மக்கள் அறிந்து இருக்கிறோம் ?

நாட்டுக்கு எதையுமே செய்யாத இன்றைய அரசியல்வாதிகள் மக்களிடம் பிரபலமடைந்து விடுகின்றார்களே...

இப்படி நடப்பதால்தான் படித்தவர்கள் ஆதரிக்கும் அமெரிக்காவை நோக்கி படை எடுக்கின்றார்கள்.

கல்பனா சாவ்லாவை குறை சொல்லும் அரைவேக்காடுகளின் பதில் என்ன ?

தியாகங்கள் அங்கீகரிக்கப்படா விட்டாலும் பரவாயில்லை உதாசீனப்படுத்தக்கூடாது. இது சாம் அவர்களின் வாழ்வில் நிறைய நடந்து இருக்கிறது.

கில்லர்ஜி தேவகோட்டை

திவாண்ணா said...

good article.

த. சீனிவாசன் said...

சாம் அவர்களின் சேவைகளை அறிந்து கொள்ள இப்பதிவு பெரிதும் உதவியது.

சாம் அவர்களும் அவரது நண்பர் கார்ல் அவர்களும் இந்தியாவில் இன்றும் செய்து வரும் சேவைகளைப் பற்றி இருவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இங்கே.

ஆங்கிலத்தில்
https://archive.org/download/CodeSwaraj/satyagraha.archive.en.pdf

தமிழில்
http://freetamilebooks.com/ebooks/code_swaraj_tamil/


திண்டுக்கல் தனபாலன் said...

அபாரமான தகவல்...

திரு சாம் அவர்களை நினைத்தால் வேதனையாக உள்ளது...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அற்புதமான கட்டுரை.bsnl அலுவலர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்அபாரமான தேடல். தேடி எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி ஜோதிஜி சார்.

Rathnavel Natarajan said...

இவர் (தான்) நம் கடவுள்
- திரு ஜோதிஜி அவர்களின் தொலைத்தொடர்பின் மின்னல் வேக முன்னேற்றம் பற்றிய சற்று பெரிய பதிவு - திரு சாம் பிட்ரோடா அவர்களைப் பற்றிய விரிவான பதிவு -அரசாங்க நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க முடியாது என்ற விதிமுறையின்படி சாம் பெற்றுக்கொண்ட சம்பளம் ஆண்டு ஒன்றுக்கு ஒரு ரூபாய். திருமதி இந்திரா காந்தியும் திரு இராஜிவ் காந்தி அவர்களும் இந்த முன்னேற்றத்துக்கு தலையாய காரணகர்த்தாக்கள் - இந்த விரிவான கட்டுரையை எழுதியவர் திரு ரவி.வெட்டிக்காடு அவர்கள், திரு ஜோதிஜி அவர்களின் நண்பர் - இந்த அருமையான கட்டுரையை நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி, திரு ரவி.வெட்டிக்காடு

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சாம் அவர்களைப் பற்றி படித்துள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன். கட்டுரையை எழுதியவருக்கும், அதனை சுருக்கித் தந்த உங்களுக்கும் நன்றி.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

உங்கள் விமர்சனம் பார்த்து குரியன் பதிவை இரண்டாக பிரித்துள்ளேன். நன்றி.

ஜோதிஜி said...

வாய்ப்பே இல்லை முரளி. முக்கால்வாசி பேர்களுக்கு இவரைப் பற்றித் தெரியாது.

ஜோதிஜி said...

இக்கட்டான சூழலில் இவரைப் பற்றி தேடித் தேடி படித்தேன். நாம் அனுபவிப்பது ஒன்றுமே இல்லை என்று தோன்றியது தனபாலன்.

ஜோதிஜி said...

அடுத்து குரியன் குறித்த ஒரு பதிவு வெளியிட்டுள்ளேன். நண்பர் ஒருவர் அது குறித்த புத்தகம் பற்றி மின் அஞ்சலில் கேட்டுள்ளார். தகவல் குறித்து அந்தப் பதிவில் தெரிவிக்கவும் சீனிவாசன்.

ஜோதிஜி said...

நன்றி.

ஜோதிஜி said...

ஏறி மிதித்து வருவதும் வந்ததும் அவற்றை அழிப்பதும் மறப்பதும் நம் நாட்டின் சாபக்கேடு நண்பரே.

ஜோதிஜி said...

வருடந்தோறும் நவம்பர் 26 பத்திரிக்கைகள் கூட மறந்து விட்டது.

ஜோதிஜி said...

உங்கள் விமர்சனத்திற்கும் உங்கள் பதிவில் வலையேற்றியதற்கும் மிக்க நன்றிங்க.

Kgum17 said...

ஏற்கனவே கேள்விபட்டுள்ளேன். விரிவாக அவரின் சேவை கண்டு ஓரு salute.