Tuesday, May 03, 2011

கல்வி -- பலமான ஆயுதம்

1899 ஜுன் 6

திட்டமிட்டபடி மறவர்கள் அதிகாலை வேலையில் சிவகாசியின் நான்கு புறமும் சூழந்து கொண்டனர். இப்படி ஒரு பெரிய கலவரம் நடக்கப் போகின்றது என்பதை எதிர்பார்த்து நாடார்களும் தயாராகவே இருந்தனர். முந்தைய நாட்களில் வெளிப்புறங்களிலிருந்து படுக்கை விரிப்புக்குள் சுற்றி முடிந்தவரைக்கும் பலவிதமான ஆயுதங்களை கடத்தி வந்திருந்தனர். அத்துடன் அதிக அளவில் துப்பாக்கிகளையும் கொண்டு வந்திருந்தனர். மறவர்கள் வரும் பாதையில் மரங்களை வெட்டி பல தடுப்புகளை உருவாக்கி வைத்திருந்தனர். சில இடங்களில் வருபவர்கள் தங்கள் கூட்டத்திற்குள் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே வெறுமனே விட்டு வைத்திருந்தனர். 

தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த என்றொரு பாவத்தை தவிர வேறொன்றும் அறியாத சமூகத்தின் ஒரு சான்று இந்த புகைப்படம். முட்டிக்கு மேல் அணிய வேண்டும். மேலாடை கட்டாயம் கூடாது.

வசதியாய் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் முன்னேற்பாடாக தங்கள் பணம், நகை போன்றவற்றை வெவ்வேறு இடங்களில் கொண்டு போய் பதுக்கி வைத்தனர். ஏழை மக்களை, வயதானவர்களை நகரின் மத்திம பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பான வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். ஒரு வாரத்திற்கு முன்பாகவே பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பான் வெவ்வேறு இடத்திற்கு அனுப்பி வைத்தனர். உள்ளேயிருக்கும் மற்ற பெண்களுக்கு பாதுகாப்பாக தெற்கு ரத வீதியில் அரண் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 

அரண் போன்ற பகுதியில் உயரத்திலிருந்து கீழே பார்க்கும் மறவர்கள் மேல் வீசி எறிய வேண்டி மிளகாய்ப் பொடி, கற்கள், கொதிக்கும் எண்ணெய் போன்றவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். மறவர்கள் வருவதை தெரியப்படுத்த உயரமான பகுதிகளில் சிறுவர்களை அமர வைத்திருந்தனர். தொலைவில் இருந்து வருபவர்களை கண்காணிக்க தொலைநோக்கி கருவிகளும் வழங்கப்பட்டு இருந்தது. 

இது போன்ற ஒரு சம்பவம் நடக்கப் போகின்றது என்பதாக ஏராளமான புகார் மனுக்கள் அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியாளராகவும், மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த வெள்ளையர் ஸ்காட் அவர்களிடம் போய்ச் சேர்ந்தது.  அவரோ தேவைப்படும் அத்தனை முன்னேற்பாடுகளை செய்து வைத்துள்ளோம் என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விட்டார். இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க ஆச்சரியம் என்னவென்றால் திருநெல்வேலியைச் சுற்றிலும் இருந்த ஒவ்வொரு கிராமத்து தலைவர்களும் நாடார்களுக்கு எதிராகவே இருந்தனர். இவர்களைப் போலவே அதிகாரியாக இருந்த ஸ்காட் கூட நாடார்களின் கோரிக்கைகளை செவிமடுக்கவில்லை. நாடார்களை எதிர்த்த அத்தனை பேர்களும் ஆதிக்க சாதியாளராக இருக்க வெள்ளையர்கள் இவர்களிடம் பெயருக்கென்று உறுதிமொழி வாங்கிக் கொண்டு நகர்ந்து விட்டனர்.  மறவர்களின் ஆட்டம் மே மாதம் 23ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தொடங்கியது. அங்கிருந்த நாடார்களின் சொத்துக்களை கொள்ளையடித்து அவர்களை ஊரில் இருந்து வெளியேற்றியதோடு சிவகாசியை நோக்கி முன்னேறிச் சென்றனர். 

இப்போது நமக்கு ஒரு கேள்வி எழவேண்டும்.  ஏன் மறவர்களுக்கு இத்தனை ஆத்திரமும் கோபமும் நாடார்கள் மேல்? அதற்கு வெள்ளைச்சாமி தேவரைப் பற்றி இந்த இடத்தில் சுருக்கமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவஸ்யமாகும்.

இப்போது நாம் அடுத்து இராமநாதபுர மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் முக்குலத்தோர் பிரிவில் வருகின்றவர்கள் இந்த இடத்தில் பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் இவர்கள் அறிமுகம் ஆகின்றார்கள். காரணம் இருக்கிறது.  இப்போது அரசியல்வாதிகள் மத்தியில், குறிப்பிட்ட அரசியல் கட்சியில் இவர்களின் ஆதிக்கம் அதிகம்.  இவர்களைப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் ஏராளமாய் கொட்டிக் கிடக்கின்றது.  வேகமும், வீரமும், கோபமுமாய் வாழ்ந்த இவர்களின் வாழ்க்கை தற்போது ஓரளவுக்கு சகஜநிலைக்கு மாறியுள்ளது என்பதை எடுத்துக் கொள்ளலாமே தவிர இன்றும் கிராமப்புறங்களில் இவர்களின் ஆதிக்கம் தான் அதிகம்.  முக்குலத்தோர் என்பது மூன்று பிரிவுகளைக் கொண்டது.  கள்ளர், மறவர், அகமுடையார் என்பதாகும்.  விலாவாரியாக பிறகு பார்ப்போம்.  இப்போது நாம் தேவரிடம் செல்வோம். 

வெள்ளைச்சாமி தேவர்.  

இப்போது ஜாதி அரசியல் வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இவரை தெரிந்து இருக்குமா என்பது சந்தேகமே? 


இவர் தான் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தாத்தாவின் பெயர் தான்  வெள்ளைச்சாமி தேவர். வெள்ளைச்சாமி தேவிரின் அப்பா பெயரும் முத்துராமலிங்கமே.  கமுதியில் உள்ள பசும்பொன் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்.  தனது தந்தை முத்துராமலிங்கத் தேவர் உருவாக்கி வைத்திருந்த மிகப் பெரிய சொத்துக்கு சொந்தகாரர். மொத்தில் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த மறவர் இன மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிக் கொண்டிருந்தார். மறவர் இன மக்களைப் போலவே மற்ற இன மக்களும் தன்னை மதிக்க வேண்டும் என்ற வெள்ளைச்சாமி தேவரின் கொள்கையில் தான் நாடார்களும் மறவர்களுக்கும் உண்டான விரிசலின் தொடக்க அத்தியாயம் உருவானது.  

இதே காலகட்டத்தில் இவரைப் பார்க்கும் மற்ற இன மக்கள் தங்கள் தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு அல்லது கீழே இறக்கி மரியாதை செய்வது வழக்கம். ஆனால் நாடார் இன மக்கள் இது போன்ற விசயங்களை கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாகவே நாடார் இனமக்களுக்கு வேலை செய்து கொண்டிருந்த வண்ணார் இன மக்களை நாடார்களுக்கு வேலை செய்யக்கூடாது என்று மறைமுக கட்டளை பிறபித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக சுற்றியுள்ள கிராமத்து மக்கள் நாடார்களுடன் எந்த வரவு செலவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதிலிருந்து தொடங்கி பல நாடார்களுக்குண்டான எதிர்ப்பு சமாச்சாரங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். உச்சகட்டமாக மறவர்கள் தாங்கள் தெருவில் பார்க்கும் நாடார்கள் அணிந்திருந்த பூணூலை அறுத்து அவற்றை இறந்தவர்களுக்கு கைவிரல்கள், கால் கட்டைவிரல்களில் கட்டுவதைப் போல கட்டி பழித்துக் காட்டினர். 

ஏறக்குறைய 16 மாதங்கள் இதுபோலவே நடக்க இறுதியில் எதிர்ப்பு வலுக்க வெள்ளைச்சாமி தேவர் கைது செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை பெற்ற பிறகே இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.. இவற்றைப்பற்றி மேற்கொண்டு பல விபரங்களை தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.  

ஆனால் இப்போது நடக்கப் போகும் கலவரத்திற்கு காரணகர்த்தாவாக இருக்கும் மறவர்களை அடக்க வெள்ளைச்சாமி தேவருக்கு நாடார் சங்கத்திலிருந்து ஒரு வித்யாசமான கடிதம் அனுப்பப்பட்டது.

"4000 பேர்களுக்கு தலைவராக இருக்கும் வெள்ளைச்சாமி தேவர் உண்மையிலேயே மறவராக இருந்தால் நாடார்களை தாக்குவதற்கு மறவர் கூட்டம் பகலில் வர வேண்டும்.  எந்த இடம் என்பதையும் தெரிவிக்கவும். நாங்கள் தயாராக இருக்கின்றோம்" என்று கடிதம் எழுதி அனுப்பி வைத்தனர்.

இராமநாதபுரம் ராஜாவின் பெயர் ராஜா எம். பாஸ்கர சேதுபதி. இவர் ஆளுமைக்குள் இருந்த பகுதிகளில் கமுதியும் ஒன்று. இவரும் மறவர் இனத்தை சேர்ந்தவரே. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த ஊரில் வாழ்ந்தவர்கள் ஏழாயிரத்திற்கும் குறைவான பேர்களே இருந்தனர். கமுதியைச் சுற்றிலும் இருந்த கிராமங்களில் மறவர்களே அதிகமானோர் வாழ்ந்து வந்தனர். இந்த பகுதியில் செயல்பட்டு வந்த வியாபாரங்கள் பெரும்பாலும் முஸ்லீம் மற்றும் நாடார்களையே சார்ந்து இருந்தது. நாம் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த கால கட்டத்தில் நாடார்கள் தங்களை பிராமணர்கள் போலவே மாற்றிக் கொண்டு செழிப்பான முறையில் வாழ்ந்து வந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ராஜாவின அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வந்தது. நாடார்கள் திருவிழா காலங்களில் வழிபாடு சம்மந்தமான விருந்தொன்றை கமுதி பகுதியில் வைக்க ராஜாவின் அறக்கட்டளைக்கு அனுமதி கேட்டு எழுதியிருந்தனர். 

நாடார்கள் ஆலய பிரவேசம் செய்யாமல் குறிப்பிட்ட விசயங்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்தது. ஆனால் இது போன்று ஒவ்வொன்றாக எல்லை மீறிக் கொண்டிருந்த நாடார்களின் பழக்கவழக்கங்களினால் வெள்ளைச்சாமி தேவர் நாடார்களுக்கு எதிர்ப்பு அணி ஒன்றை மெதுவாக உருவாக்கிக் கொண்டிருந்தார். காரணம் பொருளாதார ரீதியாக வளத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த நாடார் இன மக்கள் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார் என்பதே உண்மையாகும். இதே வாய்ப்பு சிவகாசி கலவரம் மூலம் லட்டாக வந்து சேர்ந்தது.  நாடார்கள் அனுப்பி கடிதமும் வந்த சேர எறிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல கலவரத்தீ கொளுந்து விட்டு எறியத் தொடங்கியது.

சிவகாசியில் நடந்த கலவரம் சுமார் இரண்டு மணி நேரம் மட்டுமே நடந்தது.  கொள்ளையிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதற்காக மறவர்கள் தங்களுடன் 12 மாட்டு வண்டிகளையும் கொண்டு வந்து இருந்தனர். 886 நாடார்களின் வீடு அழிக்கப்பட்டது. சுமார் 21 நாடார்கள் கொல்லப்பட்டு இருந்தனர்.  

கலவரம் முடிந்த பிறகே சொல்லிவைத்தாற் போல் வெள்ளையர் ஸ்காட் வந்து இறங்கினர். இந்த கலவரம் மேற்கொண்டு நகர்ந்து மறவர்களின் அடுத்த இலக்கு விருதுநகராக இருக்கக்கூடும் என்பதற்காக 50 சிப்பாய்களை அங்கு அனுப்பி வைத்தார். இதே ஸ்காட் தன்னுடைய பொறுப்புகளை தனக்கு கீழேயிருந்த அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு, சென்னை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு இருந்த விசாரனை கமிஷன் அதிகாரியிடம் மற்ற பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஆளை விட்டால் போதுமென்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார்.  

காரணம் மறுபடியும் மறவர்கள் சிவகாசியை மற்ற பகுதிகளை மீண்டும் வந்து தாக்குவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகும் வண்ணம் தென்காசியில் தொடங்கி செங்கோட்டைப் பகுதியில் நுழைந்து தாக்கத் தொடங்கினர்.  ஒவ்வொரு தாக்குதல்களும் மிருகத் தனமாக இருந்தது. இந்த இடத்தில் ம்ற்றொரு ஆச்சரியம் மதம் மாறிய நாடார்களின் வீடு தாக்கப்படவில்லை. அடையாளம் வைத்து தாக்குவது அப்போதே இருந்து இருக்கிறது. ஜுலை மாதம் கலவரம் முடிவுக்கு வந்த போது 150 கிராமங்கள் கலவரத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட இராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்தது.  கலவரம் நடந்த ஆறு வார காலத்தில் 2000 பேர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரிக்க தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டவர்கள் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டனர்.  ஏழு பேர்களுககு மரண தண்டனை அளிக்கப்பட்டது.  குற்றவாளிகளில் ஒருவர் கூட நாடார்களின் பெயர் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக் விசயமாகும். இவர்கள் வைத்திருந்த பொருளாதாரம் காப்பாற்றியதா இல்லை தெளிவான திட்டமிடுதலா போன்ற குறிப்புகள் தென்படவில்லை.

ஏறக்குறைய 19 ஆம் ஆண்டு பிற்பகுதிகளில் அல்லாடிக் கொண்டிருந்த நாடார்களின் சமூக வாழ்க்கை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்தது போலிருந்தது.  காரணம் அரசாங்கத்தில் பின்தங்கிய வகுப்பினர் பெறக்கூடிய சலுகைகளை அனுபவித்து வந்தபோதிலும் மதம் மாறிய நாடார் இன மக்கள் பெற்றுக் கொண்டிருந்த கல்வி வசதிகளைப் பார்த்த நாடார் இன மக்கள் முதல் முறையாக தங்கள் இனமக்களின் கல்விக்கான விசயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். 

கிறிஸ்துவ மதபோதகர்களின் சார்பாக பாளையங்கோட்டையில் உள்ள புனித யோவான் கல்லூரி போன்று பல இடங்களிலும் தொடங்க வேண்டும் என்று ஆரம்ப கட்ட ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.

ஆனால் இராமநாதபுரத்தில் ஆறு நகர நாடார்கள் வியாபாரத்தில் முன்னேறிய பிறகு உறவின் மூலம் கிடைத்த மகமையின் மூலம் முதன் முதலாக திறந்தது தான் விருதுநகர் ஷத்திரிய வித்யாசாலை (1885) உயர்நிலை பள்ளியாகும். இதுவே தொடர்ந்து 1910 ஆம் ஆண்டு நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டு கல்வி கூடங்களில் அணைத்து இடங்களிலும் நிறுவவதில் முழுமூச்சாக இறங்கி அடுத்தடுத்த முன்னேற்ங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வாழ்ந்த நாடார் இனமக்களின் சமூக வாழ்க்கை குறிப்புகள் இத்துடன் முடிவுக்கு வருகின்றது.  இவர்களின் வேறு சில குணாதிசியங்களை, வெள்ளையர் ஆட்சி காலத்தில் இவர்கள் பொருளீட்ட உதவிய சாராய தொழில்கள், மற்ற தொழில்கள், இவர்களின் முரண்பட்ட நியாயங்கள், கோவில்களுக்கு அடித்துக் கொண்ட இவர்களின் வாழ்க்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் இடையிடையே பார்க்க வேண்டிய அவஸ்யம் உள்ளது. 

அடுத்த பஞ்சாயத்து? விரைவில்.?

7 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தொடர்ந்து படித்து வருகிறேன்.
வாழ்த்துக்கள் திரு ஜோதிஜி.

saarvaakan said...

அருமை நண்பரே
தொடருங்கள்.கொஞ்சம் ,ஆதாரங்கள் சுட்டிகளாகவோ ,புத்தகங்கள் குறித்தோ அளித்தால் மிக்க நல்லது.நன்றி.

தாராபுரத்தான் said...

ஆகா..விறுவிறுப்பா போகுதுங்க.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உணர்வுவயப்பட்டு, தவறான வழிமுறை காட்டும் தலைமையைப் பின்பற்றினால் அதோ கதி தான்..

ஜோதிஜி said...

உணர்வுவயப்பட்டு, தவறான வழிமுறை காட்டும் தலைமையைப் பின்பற்றினால் அதோ கதி தான்..

நல்ல விமர்சனம். துரதிஷ்டவசமாக இன்று தமிழ்நாட்டின் நிலைமையும் இதேதான்.

வருக தாராபுரத்தான், ரத்னவேல்.

சார்வாகன் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளுங்க.

http://rajavani.blogspot.com/ said...

வளர அழிப்பதும் அழிக்க வளர்வதும் எங்கும் இயல்புதான் போல அன்பின் ஜோதிஜி.

Anonymous said...

ஒரு சமூகம் உயர்வு நிலைப் பெற அவர்கள் முதலில் கவனிக்க வேண்டியது கல்வி, இரண்டாவது பொருளியல், மூன்றாவது மத சமூக அந்தஸ்து ....

என்னைப் பொறுத்தவரைக்கும் அடக்கப்பட்டு கிடந்த ஒரு சமூகம் முன்னேறியது என்றால் அது நாடார்கள் மட்டுமே எனலாம்.

அவர்களின் வரலாற்றை சொன்னவிதம் அருமை. ஆனால் உங்களுக்கு இந்த தகவல் எல்லாம் எங்கிருந்து தான் கிடைக்கின்றதோ எனவும் தோன்ற வைக்கின்றது.

அருமை சகோ. தொடருங்கள் ...