Thursday, October 17, 2013

கூடையே கடையாகி


"சாமி பழம் வாங்றீங்களா........."

வீட்டுக்கு வெளியே குரல் கேட்க ஆர்வமாய் எட்டிப்பார்த்தேன். 

"அந்த கிழவிக்கிட்ட ஏதுவும் வாங்காதீங்க. வரவர விலையை அதிகமாக்கிக்கிட்டே போகுது" என்ற மனைவியின் குரலையும் மீறி வேகமாக வாசலை நோக்கிச் சென்றேன்.

பாட்டி வாசலுக்கு வெளியே தலையில் கூடையோடு நின்று கொண்டிருந்தார். காலை வெயில் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது.

உள்ளே வாங்க பாட்டி என்றாலும் வரமாட்டார்.  நாம் வாங்குவோம் என்று தெரிந்தால் மட்டுமே கூடையை வாசல்படியில் இறக்கி வைப்பார்.  வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்து விடுவார்.  ஒரு பதில் வார்த்தை இருக்காது.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை வேளையில் தவறாமல் வந்து விடுவார்.  மெலிந்த  ஒல்லியான உடம்பு. பொக்கை வாய் நிறைய வெற்றிலைச் சாறு உதட்டு ஓரம் வழிந்து கொண்டிருக்கும். சுருங்கிய புடவையும் கசங்கிய ஜாக்கெட்டுமாய் கருப்பு நிறத்தில் அவரின் களையான முகம் தனித்து தெரியும்.  காந்தி நகர் முழுக்க சுற்றி வருவதை பார்த்துள்ளேன். தொடக்கத்தில் இவர் மேல் எந்த ஈர்ப்பும் உருவாகவில்லை. 

ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரைக்கும் எத்தனையோ பேர்கள் எங்கள் சந்தில் ஏராளமான பொருட்களை வந்து விற்றுக் கொண்டே தான் இருக்கின்றார்கள். தொடக்கத்தில் காய்கறிகள் மூன்று சக்கர வண்டியில் வந்து தள்ளிக் கொண்டு வந்து விற்றுக் கொண்டிருந்தார்கள். தற்போது டிவிஎஸ் 50 ல் மேலே ஒரு கூடை, பக்கவாட்டில் இரண்டு புறமும் தொங்கிக் கொண்டிருக்கும் சாக்குப் பைகள் மூலம் கொண்டு வந்து ஒரு இடத்தில் நிறுத்தி கத்தி ஒவ்வொருவரையும் வரவழைத்து விடுகின்றனர். 

மீன்களை கொண்டு வருபவர்கள் அங்கேயே அறுத்து  தண்ணீர் வாங்கி சுத்தம் செய்தும் கொடுத்து விடுகின்றனர். சிலர் கீரைகளை மட்டும்.  

மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என்பதையெல்லாம் தாண்டி இது தனிமனித வியாபாரம். இன்று பெரிய நிறுவனங்கள் கடைபிடிக்கும் 'டோர் டெலிவரி'என்பதை நம்மவர்கள் பல நூற்றாண்டுகளாகவே செய்து கொண்டிருக்கின்றார்கள். 

எளிய மனிதர்கள் வாழ இங்கே ஏராளமான தொழில்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. ஏராளமான உழைப்பும் அளவான நம்பிக்கையும் இவர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. 

ஒவ்வொருவிதமான சந்தைக்குப் பின்னாலும்   ஓராயிரம் நம்பிக்கைகள். 

கொட்டும் மழை கொளுத்தும் வெயில் எதுவும் இவர்களுக்கு பொருட்டல்ல. அதிகாலையில் குளிருக்கு பயந்து போர்த்திக் கொண்டு படுக்கும் மனிதர்களுக்கு இவர்களின் உழைப்பு தெரியாது. ஆனால் இவர்களிடம் பேரம் பேசி வாங்கும் போது தான் பலரின் சிக்கனம் என்ற பெயரில் ஒளிந்துள்ள சின்னப்புத்தி வெளியே தெரிய வரும்.

ஆனால் பாட்டி கொஞ்சம் கெட்டி.  அதற்கு மேல் உசாரான பார்ட்டியும் கூட. வாய் வார்த்தைகள் பட்டாசாக வெடிக்கும்.  தயவு தாட்சணயம் இருக்காது. பலருக்கும் உடனே கோபத்தை வரவழைத்து விடும்.  

"நீங்கெல்லாம் கடையிலே போய் தூசியையும் தராசுல எடை போட்டு வாங்குறவுங்க. நல்லது சொன்னா உங்களுக்கு புரியாது" என்பார்.

ஆனால் எனக்கு அவரின்  வியாபார அணுகுமுறைகளை விட அவரின் அளவு கடந்த நம்பிக்கைகள் தான் அதிக ஆச்சரியத்தை தந்தது. அதுவே தான் அவர் மேல் ஈர்ப்பை உருவாக்கியது. இந்த வார்த்தைகள் என் மனைவிக்கு எப்போதும் எரிச்சலை உருவாக்கும்.

"இப்படி வாய் பேசுனா யார் வாங்குவா?" என்றால் அதற்கும் பதில் உடனே வந்து விழும்.

"மனசுல சுத்தமா இருக்குறவுங்க வார்த்தைகள் எப்போதுமே அப்படித்தான் வரும் சாமி" என்பார். 

 "இல்லை பாட்டி காலம் மாறிக்கிட்டே இருக்கு.  நீங்களும் மாற வேண்டாமா" என்றால் "காலம் மாறினாலும் இன்னமும் வாயில தானே சாப்புடுறோம்" என்று பட்டென்று தெறித்து வரும் வார்த்தைகளைக் கண்டு நான் சிரித்து விடுவேன். 

வாசலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அவர் தலையில் சுமந்திருக்கும் அந்த கூடை தான் எனக்கு அதிக ஆச்சரியத்தை தரும். 

பெரிய அகன்ற கூடை. அந்த கூடையின் பலத்திற்காக சாணியால் மெழுகப்பட்டு கெட்டியாக மாற்றப்பட்டு இருந்தது. சாணி நன்றாக உலர்ந்திருந்த காரணத்தால் எந்த வாடையும் இருக்கும்.  கூடையின் எந்த பின்னலும் வெளியே தெரியாது.  

மொத்தத்தில் மேலேயிருந்து கீழே போட்டாலும் உள்ளேயிருக்கும் பொருட்கள் சிதறி விழுமே தவிர கூடைக்கு எந்த சேதாரமும் உருவாகாத அளவுக்கு பலமாக இருந்தது.  அதுவே தான் அந்த கூடைக்கு அதிக கனத்தை உருவாக்கியும் இருந்தது.

"கொஞ்சம் இறக்கி வை சாமி" என்றார்.

எனக்கு மூச்சு வாங்கியது. ஏறக்குறைய 25 கிலோ அளவுக்கு உள்ளே பழங்கள் இருந்து.  ஆப்பிள், சப்போட்டா, சோளக்கதிர் என்று ஒவ்வொன்றும் தனித்தனி பைகளில் கட்டப்பட்டு இருந்தது.

கூடையை இறக்கிய எனக்கு மூச்சு பிடிப்பு வந்து விடுமோ? என்று பயமாய் இருக்க, பாட்டி வியர்வையை துடைத்துக் கொண்டு "எதை சாமி எடுத்துக்குறீங்க" என்றார்?

அவர் முகத்தில் எந்த களைப்பும் தெரியவில்லை. கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூட தோன்றாமல் கொண்டு வந்த பழங்களை நம்மை வாங்க வைக்க வேண்டும் என்பதிலேயே அவரின் தொடர்ச்சியான வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருந்தன.  

பழங்களை விட அவர் பேச்சைத் தான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

பெரிய கடைகளில் உள்ள பழ விலைகளை விட ஒவ்வொன்றுக்கும் ஐந்து முதல் பத்து ரூபாய் வரைக்கும் அதிகம் வைத்திருந்தார். எனக்கு அவர் விலைகள் பெரிதாக தெரியவில்லை. அவரின் இந்த வயதின் உழைப்பும், அந்த உழைப்பு குறித்த எந்த பெருமிதமும் இல்லாத தன்மையும் தான் அதிக யோசனைகளை உருவாக்கியது.

மெதுவாக பேச்சைச் தொடங்கினேன்.  ஆனால் வெட்டி வார்த்தைகளை அவர் விரும்பவில்லை என்பதை நறுக்குத் தெறித்தார் போல் வந்து விழும் வார்த்தைகளில் இருந்து உணர முடிந்தது.

நம்பியூரில் இருந்து அதிகாலையில் பேரூந்து வழியே திருப்பூரில் பெரியார் காலணி நிறுத்தத்தில் வந்திறங்கி அவரின் வியாபாரம் தொடங்குகின்றது. சிறிய வீடுகள், பெரிய குடியிருப்புகள் தொடங்கி ஒவ்வொரு சந்து என இந்த பெருஞ்சுமையை சுமந்து கொண்டு வந்தவரின் உழைப்பு எனக்கு ஆச்சரியமல்ல.  

ஆனால் ஓய்வெடுக்கவேண்டிய வயதில் உழைத்து வாழ வேண்டியிருக்கிறதே என்ற அங்கலாய்ப்பு அவரிடம் கொஞ்சம் கூட இல்லை என்பது தான் எனக்கு வியப்பைத் தந்தது.

கூடை நிறைய பழங்கள் இருந்தாலும் எப்போதும் போல இப்படித்தான் தொடங்குவார்.

"கொண்டு வந்த ஆப்பிள் முடிந்து விட்டது.  சப்போட்டா கொஞ்சம் தான் இருக்கு. அடுத்த சந்துக்கு போனா இதுவும் முடிந்து விடும்" என்று சொல்லிக் கொண்டே நாம் வாங்க விரும்புகின்றோமா இல்லையா என்று ஆழம் பார்ப்பதிலே அவரின் குறி இருக்கும்.

நிச்சயம் ஒரு நாளைக்கு அவருக்கு எல்லாச் செலவும் போக இருநூறு ரூபாய் அளவுக்கு கிடைக்கும்.  பாட்டியிடம் எதையும் வாங்காமல் பேசினால் வார்த்தைகளை பிடுங்க முடியாது என்பதற்காக சப்போட்டா பழத்தை எடுத்துக் கொண்டு "உங்க பசங்க என்ன செய்றாங்க?" என்றேன்.

"நம்பியூர்ல மில்லில் வேலைக்கு போறாங்க சாமி" என்றார்.

"அப்புறம் எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை. வயசான காலத்திலே வீட்லே இருக்க வேண்டியது தானே?" என்றேன்.

"மகன் சாம்பாத்தியம் சாப்பாட்டுக்கு சரியாப் போகுது. பேரனுங்க படிப்புச் செலவை நான்தான் பாத்துக்குறேன்"  என்றார்.

***************

(இந்த பதிவுக்கு இணையத்தில் படம் தேடிக் கொண்டிருந்த போது தலையில் சுமந்து விற்கும் மனிதர்களைப் பற்றி ரெங்கசாமி எழுதிய மின்நூல் கண்ணில் தென்பட்டது.  அவர் எழுதிய தலைப்பையே இதற்கும் வைத்துள்ளேன்.  இந்த புனைவு அல்லது சிறுகதை திருப்பூரில் பத்திரிக்கை துறையில் இருக்கும் நண்பர் திரு மணி அவர்கள் சமீபத்தில் தொடங்கியுள்ள வணக்கம் திருப்பூர் என்ற உள்ளூர் பத்திரிக்கைக்காக எழுதப்பட்டு பிரசுரமானது)


24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// "மனசுல சுத்தமா இருக்குறவுங்க வார்த்தைகள் எப்போதுமே அப்படித்தான் வரும் சாமி" ///

உண்மை உண்மை + சிறிது கோபத்துடனேயே வரும்... நேர்மையான உழைப்பின் வலி...

பாட்டிக்கு என்னவொரு பொறுப்பு... தன்னம்பிக்கை...!

பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

நல்ல கதை அண்ணா...
பத்திரிக்கையில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்.

எம்.ஞானசேகரன் said...

மீண்டும் அனுபவம் கதை வழியே வழிந்நிருக்கிறது. எனக்கும் விலை அதிகமானாலும் இப்படி பிளாட்பாரக் கடைகளிலும், தலையில் சுமந்து விற்கிறவர்களிடமும் வாங்கப் பிடிக்கும். என் மனைவியோ கஞ்சத்தனமாய் பேரம் பேசிக்கொண்டிருப்பார்!

கோவை நேரம் said...

வணக்கம் நண்பரே...சுவாரஸ்யமாய் படித்துக்கொண்டே வந்தேன்.ஆனால் கடைசியில் கதை முடிவுறாதது போலவே இருக்கிறது...

Unknown said...

உழைப்பு உயர்வு தரும்.. நன்றி..

”தளிர் சுரேஷ்” said...

சுவையான கதை! இறுதியில் இன்னும் கொஞ்சம் ட்விஸ்ட் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது! நன்றி!

Ranjani Narayanan said...

கூடை சுமந்து வரும் பாட்டி எங்களின் சிறுவயது ஸ்ரீரங்கம் நாட்களை நினைவுக்குக் கொண்டு வந்தார். அங்கும் இதுபோலத் தான் ஒரு பாட்டி - அரியநாச்சி என்று பெயர். மாம்பழங்கள் கொண்டு வருவார். அந்த வயதில் இவர்களைப் பற்றி சிந்தித்ததே இல்லை. இன்று ரொம்பவும் சிந்திக்க வைத்துவிட்டார்.
புனைவு என்று சொல்ல முடியாத நிஜக்கதை!
பத்திரிகையில் பிரசுரம் ஆகியதற்கு பாராட்டுக்கள்!

நிகழ்காலத்தில்... said...

சிறுகதை என்பதைவிட அனுபவம் என்பது பொருத்தம்.. அந்த அளவிற்கு எழுத்து நடை..வாழ்த்துகள்

உஷா அன்பரசு said...

எங்கள் வீட்டில் இப்படி உழைத்து பிழைக்கிறவர்களிடம் பேரம் பேச மாட்டோம். அவர்கள் லாபம் பார்ப்பது ஐந்தோ பத்தோ அதில் என்ன பெரிதாக குறைந்துவிட போகிறது நமக்கு? ஒரு ஏழைக்கு செய்த உதவி போலும் இருக்கும்... அவர்கள் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரமாகவும் இருக்கும். இப்படி தெருவில் தலையில் கூடை சுமந்து பூ, பழம் விற்கும் வயதான பெண்மணிகளிடம் என் அம்மா வாங்குவதோடு அவர்களுக்கு அந்த நேரத்திற்கு பசியின் களைப்பை அறிந்து எதாவது சாப்பிடறியாம்மா? என்று கேட்டு வீட்டில் இருக்கும் உணவை கொடுப்பார். இந்த நல்ல பண்பினை என் அம்மாவை பார்த்து நானும் கற்று கொண்டேன்.

ஜோதிஜி said...

வயதானவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய உள்ள தனபாலன். சோர்ந்து போகும் சமயங்களில் நாம் தெரிந்து கொள்ள நடமாடும் புத்தகங்கள் இவர்கள்.

ஜோதிஜி said...

நன்றி குமார்.

ஜோதிஜி said...

அது கஞ்சத்தனம் அல்ல. மனைவியர்கள் தான் நம் குடும்பத்து வங்கிகள்.

ஜோதிஜி said...

முடிவல்ல ஆரம்பம் ஜீவா. உழைக்க வலு இருக்கும் வரையிலும் தான் உறவுகள் என்பதற்கு மரியாதை என்பதை குறியீடாக சொல்ல வந்தேன்.

ஜோதிஜி said...

பத்திரிக்கையில் வந்த தலைப்பே இதே தான். நன்றி புனிதா.

ஜோதிஜி said...

தொடர்கதை போல கொண்டு போக வேண்டும். பிரசுரத்தில் இதுவே எடிட் செய்யப்பட்டே வந்தது.

ஜோதிஜி said...

இவர் மட்டுமல்ல. 90 வயது உள்ள ஒரு முதியவர் தேங்காய் மட்டும் வாரந்தோறும் கொண்டு வருவார். கணக்கு கூட போடத் தெரியாது. ஆச்சரியமாக இருக்கும். எனக்கு பயந்து கொண்டே வீட்டில் இது போன்ற பல நபர்களுக்கு நிதி மந்திரி ஆதரவு கொடுப்பார்.

கடைசியில் விலை அதிகம் என்று புலம்பல் தனியாக.

ஜோதிஜி said...

நன்றி சிவா

ஜோதிஜி said...

நீங்கள் சொல்வது உண்மை தான். நாங்களும் இவர்களைப் போன்றவர்களுக்கு சிலவற்றை செய்கின்றோம். குழந்தைகளுக்கு இவர்களின் வாழ்க்கைப்பாடுகளை சொல்லும் போது அவர்களுக்கு சிலவிதமான அக்கறையும் புரிதலும் உருவாகின்றது என்பதும் உண்மை. நன்றிங்க.

ஜீவன் சுப்பு said...

@ கோவை நேரம் ...

அனுபவத்திற்கு முடிவேது பாஸ் ....!

ஜீவன் சுப்பு said...


// "இல்லை பாட்டி காலம் மாறிக்கிட்டே இருக்கு. நீங்களும் மாற வேண்டாமா" என்றால் "காலம் மாறினாலும் இன்னமும் வாயில தானே சாப்புடுறோம்"//

நறுக் ....!

ஜோதிஜி said...

வாங்க சுப்பு

kavirimainthan said...


மிக நல்ல பதிவு ஜோதிஜி.

இப்படிப்பட்ட விஷயங்கள் பரவ வேண்டும்.
மனதில் ஈரம் வேண்டும். குணநலன்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

சகோதரி உஷா அன்பரசு எழுதி இருந்தாரே -

"எங்கள் வீட்டில் இப்படி உழைத்து பிழைக்கிறவர்களிடம்
பேரம் பேச மாட்டோம். அவர்கள் லாபம் பார்ப்பது
ஐந்தோ பத்தோ அதில் என்ன பெரிதாக குறைந்துவிட
போகிறது நமக்கு? ஒரு ஏழைக்கு செய்த உதவி போலும் இருக்கும்... அவர்கள் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரமாகவும் இருக்கும். இப்படி தெருவில்
தலையில் கூடை சுமந்து பூ, பழம் விற்கும் வயதான பெண்மணிகளிடம் என் அம்மா வாங்குவதோடு
அவர்களுக்கு அந்த நேரத்திற்கு பசியின் களைப்பை
அறிந்து எதாவது சாப்பிடறியாம்மா? என்று கேட்டு
வீட்டில் இருக்கும் உணவை கொடுப்பார்."

இது தான் பண்பாடு. அவர் வீட்டில் அவரது அம்மா
செய்வதை எங்கள் வீட்டில் நானும் என் மனைவியும்
விருப்பத்தோடு செய்கிறோம் ... ( திருச்சியில்,
ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதெல்லாம்...எங்கள்
பேத்திக்கு பள்ளி விடுமுறை வரும்போதெல்லாம் !-
ஆமாம் சென்னையில் இத்தகையவர்களை எங்கே
பார்க்க முடிகிறது ? )

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

Rathnavel Natarajan said...

கொட்டும் மழை கொளுத்தும் வெயில் எதுவும் இவர்களுக்கு பொருட்டல்ல. அதிகாலையில் குளிருக்கு பயந்து போர்த்திக் கொண்டு படுக்கும் மனிதர்களுக்கு இவர்களின் உழைப்பு தெரியாது. ஆனால் இவர்களிடம் பேரம் பேசி வாங்கும் போது தான் பலரின் சிக்கனம் என்ற பெயரில் ஒளிந்துள்ள சின்னப்புத்தி வெளியே தெரிய வரும்.

அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.

Rathnavel Natarajan said...

ஒரு மூதாட்டி 80 வயதுக்கு மேல் இருக்கும். வாழைப்பழம் விற்க வருவார்கள். அவர்கள் ஒரு விபத்தில் சிக்கி வீட்டில் இருக்கிறார்கள் என்றார்கள். நாங்கள் வீடு தேடிச் சென்று பார்த்து 50 ரூபாய் கொடுத்து விட்டோம். மிகவும் மறுத்து வாங்கிக் கொண்டார்.
சிகிச்சைக்கு பின்பு மீண்டு வந்து பழ வியாபாரத்திற்கு வந்து விட்டார். அந்த 50 ரூபாய்க்கு கொஞ்சம் கொஞ்சமாக பழம் கொடுத்து விட்டார். பழம் வாங்கினாலும், மேலும் கொஞ்சம் கொடுத்து கொடுத்து நன்றி கடனை தீர்த்து விட்டார். எங்களுக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவம். நன்றி திரு ஜோதிஜி.