காங்கிரஸ் கட்சி.
இந்திரா காந்தி அம்மையார் குறித்த பல விமர்சனங்கள் இருந்தாலும் அத்தனையும் தாண்டி அவருக்குள் இருந்த தீர்மானமான கொள்கை முடிவுகள் இந்தியாவை பல படிகளேனும் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் சென்றது என்பதும் உண்மை. திடீர் தலைவராகவோ, திட்டமிடுதல் இல்லாமல் வந்த அமரர் ராஜீவ் காந்தி போலவோ இல்லாமல் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் உதவியாளர் போலவே செயல்பட்டு அரசியலின் ஒவ்வொரு படியையும் கடந்து மேலே வந்தவர்.
வாரிசு என்றொரு குற்றச்சாட்டு எத்தனை உண்மையோ அதையும் உடைத்து தன்னுடைய ஆளுமையை நிரூபித்த மகா பெண்மணி. இந்திரா காந்தி இருந்த போது அவருடன் இருந்த மற்ற முக்கிய தலைவர்கள் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை அரசியல் நோக்கர்களைத் தவிர இப்போது போல அவ்வளவு சீக்கீரம் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. காரணம் இந்திரா ப்ரியதர்ஷிணி சகலவிதங்களிலும் வியாபித்திருந்தார்.
குறிப்பாக வெளிநாட்டுக் கொள்கைகளில் பங்களாதேஷ் முதல் ஈழம் வரைக்கும் சுயமாக சிந்தித்து முடிவு எடுத்த சாதனைப் பெண்மணி.
நான் வாழ்ந்த பகுதியில் எந்த தேர்தல் வந்தாலும் மாநிலத்திற்கு இரட்டை இலை. மத்தியில் கைச் சின்னம். இதுதான் தராக மந்திரமாகவே இருந்தது. காங்கிரஸை தூற்றுவதும் பழிப்பதும் ஏறக்குறைய ஒரு பாவச் செயல் போலவே கருதப்பட்டது.
ஆனால் காலங்கள் உருண்டோடி காவுகள் பல வாங்கி வந்து நிற்கும் இன்றைய காங்கிரஸ் கட்சியின் நிலைமை? அந்தோ பரிதாபம்?
ஈழம் சார்ந்த கொள்கைள் முதல் இன்றைய வெட்கக்கேடான வெளியுறவுக் கொள்கைகள் வரைக்கும் அத்தனையும் சிக்கல் மேல் சிக்கலாகி சின்னாபின்னமாக்கி சிதறுண்டு போய்க்கிடக்கிறது. டம்மி பிரதமரை வைத்துக் கொண்டு கும்மியாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த மத்திய காங்கிரஸ் கட்சியை சீமான் எதிர்ப்பது ஈழத்தில் நடந்த அக்கிரமத்திற்காக மட்டுமே. ஆனால் என்னுடைய பார்வையில் இந்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த சில நிகழ்வுகளையும் பார்த்து விடலாம்.
சாய்நாத் ஹிந்து பத்திரிக்கையில் எழுதிய இந்த விபரங்கள் இன்றைய சாதனை காங்கிரஸ் கட்சியின் சாதனைப் பட்டியல் சிலவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன்?
2005-06 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - 3,74,937 கோடி ரூபாய். (இது, 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையைவிட 2 மடங்கு)
இப்போது நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - ரூ.88,263 கோடி.
இப்படி பெரும் தொகையை தொழில் நிறுவனங்களுக்கு ரத்து செய்த பிரணாப் முகர்ஜி, விவசாயத் துறைக்கான ஒதுக்கீட்டில் ரூ.5568 கோடியை வெட்டி விட்டார். பயிர்ப் பாதுகாப்புக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் மட்டும் குறைக்கப்பட்ட நிதி ரூ.4,447 கோடி.
பெரும் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை தள்ளுபடி செய்தது மட்டுமல்ல, இனி எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய சுங்கவரியைக் கட்டத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்ட தொகை - ரூ.48,798 கோடி! (நாடு முழுதும் பொது விநியோகத் துறையான ரேஷன் கடைகளுக்கு ஓராண்டுக்கு செலவிடப்படும் தொகையில் இது பாதி)
அப்பல்லோ போன்ற ‘நட்சத்திர ஓட்டல்’ தரத்தில் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நவீன மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய, இந்த நிதி நிலை அறிக்கையில் விலக்காக அளிக்கப்பட்டுள்ள சுங்கவரித் தொகை ரூ.1,74,418 கோடி.
இந்த மருத்துவமனைகளில் 30 சதவீத படுக்கைகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி, சிகிச்சை அளிப்பதாக இந்த நிறுவனங்கள் பொய் கூறி அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுகின்றன. உண்மையில் அப்படி எந்த இலவச சிகிச்சையும் இங்கே வழங்கப்படுவது இல்லை.
இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீர்வை வரி - ரூ.1,98,291 கோடி. (கடந்த ஆண்டு - ரூ.1,69,121 கோடி)
தொழில் வருமான வரி, சுங்க வரி, தீர்வை வரி - ஆக பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை என்று 2005-2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தமாக வழங்கப்பட்ட வரிச் சலுகை - ரூ.21,25,203 கோடி. (21 இலட்சத்து 25 ஆயிரத்து 203 கோடி. 2ஜி அலைக்கற்றை ஊழலைவிட 12 மடங்கு அதிகம்)
இப்படி கோடிகோடியாக தொழில் திமிங்கலங்களின் வயிற்றில் கொட்டும் இந்த காங்கிரஸ் ஆட்சி தான். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்க நிதி இல்லை என்று கை விரிக்கிறது. உணவுக்காக வழங்கப்படும் நிதி உதவியை குறைக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்கும் மத்திய மாநில அரசுகள் உள் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதில்லை.
மற்ற ஊர்களில் எப்படியோ? திருப்பூரில் தொடக்கத்தில் மின்சாரத்தடை இரண்டு மணி நேரமாக இருந்தது. இப்போது ஒரு நாளைக்கு சராசரியாக 6 மணி நேரமாக மாறியுள்ளது. உள்ளே இருக்கும் நிறுவனங்களுக்கே மின்சாரம் வழங்க முடியா சூழ்நிலையில் இருப்பவர்கள் தான் பன்னாட்டு நிறுவனங்களை ரத்தினக்கம்பளம் போட்டு வரவேற்கிறார்கள்.வருகின்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம்.அத்துடன் குறிப்பிட்ட வருடங்களுக்கு வரிவிலக்கு.
காரணம் என்ன?
எச்சில் பொறுக்கிகள் தங்கள் மேல் விழும் எலும்புத் துண்டுகளை கவ்வ தயாராக இருப்பதால் நம் இந்தியாவை இன்று பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகவே இப்போதுள்ள மத்திய அரசாங்கம் மாற்றியுள்ளது, இந்த பட்ஜெட்டில் உள்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு நிதியமைச்சர் பிரணாப் கொடுத்த மற்றொரு அன்புப் பரிசு கலால் வரி பத்து சதவிகிதம்.
ஜட்டி, பனியனை தயாரித்து நிறுவனத்தை விட்டு வெளியே கொண்டு வர வேண்டுமென்றால் 100 ரூபாய்க்கு பத்து ரூபாயை வரியாக கட்டி ரசீது வாங்கி விட்டு தான் வெளியே கொண்டு போக வேண்டும். இது போன்று ஒவ்வொரு துறைக்கும் இவர்களின் அன்புப் பரிசு உண்டு.
கற்பனை செய்து பாருங்க. நம்மை ஆளும் அரசாங்கம் நம் மக்களை வாழவைக்கவா? இல்லை அழித்து முடித்து அடுத்த நாட்டு கையில் ஓப்படைக்கவா?
இந்த 2011 தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள 63 நாயன்மார்களை ஒழித்துக் கட்ட சீமானின் நாம் தமிழர் இயக்கம் உருவாக்கிய காணொளி தமிழ்நாடு முழுக்க சென்றடையுமா? என்று தெரியவில்லை. நல்ல வேளை மொத்த பிரச்சனைகளுடன் ஈழப்பிரச்சனைகளையும் சேர்த்து இடையிடையே சீமானின் பேச்சும் கலந்துள்ள இந்த 20 நிமிட காணொளியை பார்க்கின்ற இளைஞர்களுக்கு, குறிப்பாக முதன் முறையாக ஓட்டுப் போடுகின்றவர்களை பாதிப்படைய வைத்தாலே முழு வெற்றி தான்.
நிச்சயம் இது போன்ற இளைஞர்கள் மற்றும் முடிவெடுக்க யோசித்துக் கொண்டிருப்பவர்கள், ஒவ்வொரு முறையும் வாக்குச் சாவடிக்குச் செல்லாமல் இருப்பவர்கள் என்று குறிப்பிட்ட சதவிகிதம் யோசித்தாலே போதுமானது.
ஆனாலும் சீமான செய்ய வேண்டிய வேலையின் பாதி அளவை ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தங்கபாலு செய்து முடித்து விட்டார்.
காரணம் காந்திஜியின் தண்டி யாத்திரையில் கலந்து கொண்ட வழித்தோன்றலான தங்கபாலு மனைவி ஜெயந்திக்கு இந்த முறை சீட்டு கிடைத்துள்ளது. தங்கபாலூவின் கைபேசியை தூக்கிக் கொண்டு வரும் தாமோதரனுக்கும், கார் கதவை திறந்து விடும் சிவலிங்கம் போன்ற தியாகச் செம்மல்களுக்கு சீட்டு கிடைத்துள்ள காரணத்தால் இப்போது தங்கபாலு வசிக்கும் வீட்டு சந்துக்கே கூட காவல் போட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.
ஆனால் இவர்களை விட முக்கியமான ஒரு பிரமுகர் உண்டு.
கிருஷ்ணகிரி வேட்பாளர் ஹசீனா சையத். இவர் செய்து கொண்டிருந்த தொழில் தங்கபாலுவின் தொலைக்காட்சியில் அழகுக்கலை நிகழ்ச்சியை வழங்குவது.
ஆகா புல்லரிக்குது.
தங்கபால் காங்கிரஸ்க்கு பால் ஊற்றியதற்கு நன்றிங்கோ.
இந்த காணொளியை பகிர்ந்து கொண்ட தெகா மற்றும் ராஜாகீர்த்திக்கு நன்றி.