Showing posts with label பெண்னே நீ யார்? தொடர்கதை. Show all posts
Showing posts with label பெண்னே நீ யார்? தொடர்கதை. Show all posts

Sunday, December 12, 2010

ஒரு தாயின் மரண சாசனம்

புதிதாக படிக்கத் தொடங்குபவர்கள் இதை சொடுக்கி படித்து விட்டு தொடர்ந்தால் நலமே விழைவு.

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

ஐந்தாம் பகுதி


பிரிந்து போன மகளுக்கு இறந்து போன அம்மா எழுதியது.

நம் இருவருக்குமிடையே இருக்கும் இடைவெளியை நிரப்பக்கூடியதாய் இந்த கடிதம் இருக்குமென்று நம்பி இதை எழுதத் தொடங்குகின்றேன். 

என்னுடைய விருப்பமில்லாமல் பதினைந்து வயது இடைவெளியை எவரும் பொருட்படுத்தாமல் திருமணம் என்ற அலங்கோலம் நடந்த போது முதல் முறையாக இறந்தேன். ஆண்மையற்ற ஓழுக்கமற்ற கணவனுடன் வாழ்ந்த ஒவ்வொரு இரவுமே செத்துக் கொண்டுருந்தேன். உடலால் மட்டுமே வாழ்ந்த என் வாழ்க்கையில் உன் வருகையும் நீ என்னை புரிந்து கொண்ட பிறகு தான் உண்மையிலேயே வாழத் தொடங்கினேன்.  

ஆனால் இதைபடிக்கும் போது இந்த உடல் கூட நெருப்பில் கலந்து சாம்பலாய் மாறிப் போயிருக்கும். ஆனால் நீ சுவாசிக்கும் காற்றில் கலந்து உன்னையே கவனித்துக் கொண்டுருக்கும் உன் அம்மாவை இதை படித்து முடித்த பிறகாவது புரிந்து கொள்ள முயற்சிப்பாயா மகளே?

இன்னும் சில மணி நேரத்திலோ அல்லது சில நாட்களிலோ நான் இருக்கப் போவதில்லை. என்னுடைய நோயின் தாக்கம் எனக்கான விடுதலையை தெளிவாக புரியவைத்திருக்கிறது. என்னுடைய உயிர்ப்பறவை இந்தக் கூட்டிலிருந்து சிறகடிக்கப் போகின்றது.  

நீ என்னருகே இல்லை என்ற எந்த வருத்தமும் இல்லை. எவரையும் சார்ந்து வாழாமல் என் உதவி இல்லாமலேயே நீ சென்ற உயரம் என்பது என்னால் நம்ப முடியவில்லை. உச்சியில் இருக்கும் உன்னை உச்சி முகர்ந்து முத்தமிட ஆசை. இந்த அம்மாவின் வார்த்தைகளை படித்து முடித்த பிறகாவது என்னை நினைத்து பார்ப்பாயா மகளே?

இந்த கடிதம் ஏதோவொரு சமயத்தில் உன் கைகளில் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏராளமான கேள்விகளை சுமந்து கொண்டுருக்கும் உனக்கு என்னுடைய இந்த வார்த்தைகள் சில புரிதல்களை உருவாக்கக்கூடும். இது நான் சேர்த்த சொத்துக்களை இட்டு நிரப்பிய வார்த்தைகள் அடங்கிய உயில் சாசனம் அல்ல. 

ஆனால் என் கருவில் சுமந்து உயிர் மூச்சில் வைத்துப் பார்த்த உன்னை இழந்து விட்டேனோ என்ற ஆதங்கத்தில் அவசரமாய் எழுதுகின்றேன்,  அவசரமாய் என்னை விட்டு நீ பிரிந்தாலும் நான் எதிர்பார்த்ததை விட ஏராளமான ஆச்சரியத்தை எனக்கு தந்துள்ளாய். நான் உன் அப்பாவை முழுமையாக புரிந்து கொண்ட தருணத்தில் கணவன் என்ற மனிதனை எதிர்க்காதே முற்றிலும் புறக்கணித்து விடு என்று வாழத் தொடங்கினேன். 

நான் வாழ்ந்த வாழ்க்கையை போலவே நீயும் அதையே கடைபிடித்து என்னை கலங்க வைத்து விட்டாயே மகளே?

உன் அப்பாவுக்கும் எனக்கும் நடந்த பாதி விசயங்களை உன் பார்வைக்கு படாமல் மறைத்து வைத்தேன்.  காரணம் பசுமரத்தாணி போல பதிந்து விட்டால் உன் பார்வையும் வாழ்க்கையும் மாறிவிடுமோ என்ற அச்சத்தில் தான் அவ்வாறு செய்தேன். நேர்மறை எண்ணங்களை விட எதிர்மறை எண்ணங்கள் தான் ஏராளமான தாக்கத்தை உருவாக்கும். 

உன் எதிர்கால வாழ்க்கையை முன்னிட்டு தான் என்னுடைய குடும்ப வாழ்க்கையில் சகிப்புத்தன்மையை அதிகமாக வளர்த்துக் கொண்டேன்.  பலமுறை நீ என்னிடம் கேட்ட வெளியேறிவிடலாமென்ற நோக்கத்தையும் இதனால் தான் புறக்கணித்தேன்.   இன்றைய உலகம் விஞ்ஞான சமூக மாற்றத்தில் மனித இனம் பெருமையாக வளர்ந்திருந்தாலும் அடிப்படை மனித குணாதிசியங்கள் மாறவில்லை, மிருகங்களை விட கேவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் ஆணாதிக்க உலகில் ஒரு பெண்ணால் அத்தனை சீக்கீரம் வெளியே வந்து விட முடியாது. ஒரு பெண்ணின் எல்லைகள் என்பது ஒரு வட்டத்திற்குள் தான் இருக்கும் என்பது போன்ற பல விசயங்களை நான் எப்படி புரியவைத்தாலும் உன்னால் புரிந்து கொள்ள முடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை மகளே?

ஆனால் உன் அப்பா அறுபது வயது கிழவனுக்கு பணத்துக்கு ஆசைப்பட்டு உன்னை தாரை வார்க்க நினைத்த போது தான் எனக்குள் இருந்த அத்தனை தயக்கத்தையும் உடைத்துக் கொண்டு உன்னையும் அழைத்துக் கொண்டு திருப்பூருக்குள் நுழைந்தேன். நம் இருவரையும் இனிதே வரவேற்ற திருப்பூர் நீ என்னை விட்டு பிரிந்து போவதற்கும் காரணமாக இருந்து விட்டதடி மகளே?

திருப்பூர் ரயில் நிலையத்தில் நம்மை நோக்கி வந்த காவல்துறையினர் கையில் சிக்கினால் விசாரனையில் தொடங்கி விபரமாக கையாண்டு விடுவார்கள் என்ற நோக்கத்தில் கதர்ச்சட்டை ஆசாமியிடம் வலிய சென்று பேசினேன். அவர் சட்டை மட்டும் தான் கதராக இருந்தது. உள்ளே இருந்த இதயம் காமுகனாக இருந்தது. உன்னை அமர வைத்து விட்டு அவர் அறைக்குச் சென்ற போது அவர் போட்ட ஒப்பந்தத்தை நீ கேட்டால் துவண்டு விடுவாய் என்று மறைத்தேன். 

அடுத்த மூன்று மாதத்தில் நான் வேலை தேடிச் சென்ற நிறுவனங்களில் வேலை கிடைத்தது. ஆனால் பார்த்த வேலைகளோடு நான் எதிர்பார்க்காத வேலைகளும் செய்ய வேண்டியதாக இருந்தது. அவர்கள் மேல் தவறில்லை. என்னைக் காத்துக் கொள்ள வெளியேறிய போதும் கல்வி அறிவு இல்லாமல் தகுதியான வேலைகளில் அமர முடியாது என்பதை புரிந்து கொண்டேன். பல பெண்களின் வாழ்க்கையும் ஒவ்வொரு இடத்திலும் அலங்கோலமாகத்தான் இருக்கிறது மகளே?

சிலர் விருப்பம் இல்லாத போது கூட நிர்ப்பந்தம் மூலம் மாற்றப்படுகிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் பலருக்கும் வேறு வழியில்லாமல் இதிலும் ஒரு விதமான சகிப்புத்தன்மையை கடைபிடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் இயல்பாக வாழும் பெண்களும் பலரும் இருக்கிறார்கள். ஆனால் நான் பார்த்தவரைக்கும் அவர்களுக்கு கிடைக்கும் மன உளைச்சல் வேறு வழியே வந்து தாக்கிக் கொண்டே தான் இருக்கிறது.  மொத்தத்தில் தொழில் நகரங்களில் ஒவ்வொரு பெண்ணுமே நரக வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். 

அழகு கவர்ச்சி போன்ற சொல்லுக்கு தகுதியான பெண்களின் உண்மையான திறமைகள் சமூகத்தில் இரண்டாம் பட்சமாகி விடுகின்றது என்பதை அப்போது தான் முழுமையாக புரிந்து கொண்டேன். 

ஜாதி,மதம், நாடு, மொழி, இனம் என்ற பாகுபாடு பார்க்காத ஒரு சொல் இந்த பாலூணர்வு உணர்ச்சிகள் தான். பருவநிலை பொறுத்து புணர்ந்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விடும் மிருகத்தையும் மனித இனத்தையும் என்னால் ஒப்பிட்டு பார்க்கவே முடியவில்லை. வெவ்வேறு ஆசைகளுக்கு அடிபணிந்து அலங்கோல வாழ்க்கை வாழும் பெண்கள் ஒரு பக்கம். 

வெறியை மனதில் வைத்துக் கொண்டு வெளிவேஷம் போடும் ஆண்கள் மறுபக்கம். இரண்டுக்கும் நடுவில் வாழும் எண்ணிக்கை சொற்பானது. 

என் அழகும், இளமையும் உன் அப்பாவுக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது.  ஆனால் என்னுடைய தொழில் வாழ்க்கை போராட்டத்தில் அதுவே என்னை பலவிதங்களிலும் படாய் படுத்தி எடுத்தது.  பல காமாந்த ஆண்களிடம் தப்பி வந்த எனக்கு மூச்சு வாங்கத் தொடங்கியது.  வேறுவழியே தெரியாமல் மீண்டும் அந்த கதர்ச்சட்டையிடம் தான் அடைக்கலம் தேடிப் போனேன் மகளே?

நான் எதிர்பார்த்ததை விட என்னை நன்றாகவே வைத்துக் கொண்டார். உன் அப்பா எனக்கு பிரச்சனையாக இருந்ததைப் போல அவர் குடும்ப வாழ்க்கையில் தொடக்கம் முதலே அவர் மனைவியே அவருக்கு எதிரியாக இருந்து தொலைக்க அவரும் ஏதோவொன்றை தேடிக் கொண்டுருப்பதை புரிந்து கொண்டேன். எங்களுக்குள் உருவான தொடர்பில் உன்னுடைய அடிப்படைத் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடிந்தது. அதுவே உன் சிறகுகளை பலப்படுத்த உதவியது.  நீ அவருடன் சேர்த்து என்னை நம் வீட்டில் வைத்துப் பார்த்த போது கூட நான் வெட்கப்படவில்லை. 

நீ எந்த நோக்கத்தில் எங்களைப் பார்த்து இருப்பாய் என்பதைப் பற்றி கூட நான் கவலைப்படவில்லை. தியாகம் என்ற வார்த்தையை இந்த இடத்தில் நான் எழுதிவைத்தால் நீ சிரித்து விடுவாய்.  ஒழுக்கம் தவறிய பாதையில் நான் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த வார்த்தைக் கொண்டு எழுதி வைத்தாலும் படிப்பவர்களின் பார்வையில் நான் ஏளனமாகத்தான் தெரிவேன். ஆனால் என் நோக்கமென்பது உன்னைச் சுற்றியே இருந்ததால் என் எல்லையை தீர்மானித்துக் கொண்டு அவரையே சார்ந்திருக்கத் தொடங்கினேன். சரி தவறு என்ற வார்த்தைகளோ, விவாதம் செய்யவோ எனக்கு விருப்பமில்லை. உன் அப்பா என்ற ஆண் தொடங்கி வைத்த பயணம். ஆனால் மற்றொரு ஆண் மூலம் அது முடிவடைந்ததாக கருதுகின்றேன். எல்லோருமே இந்த பாதையை தேர்ந்தெடுக்கலாமா என்ற கேட்பாய்? அவரவர் சூழ்நிலை? அவரவர் அனுபவம்? அதற்கான பலன்களையும் அவர்களே தான் அனுபவிக்க வேண்டும். மற்றொரு பெண்ணின் சாபமா? அல்லது என்னுடைய விதி முடிய வேண்டிய நேரமா தெரியவில்லை. அதையும் நான் உணர்ந்து கொண்டேன். 

ஆனால் இந்த உலகில் நமக்கு முன்னால் வாழ்ந்த பலரின் தியாகத்தால் தான் நீயும் நானும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருக்கிறோம் என்பதை நீ உணர்வாயா மகளே?  

அம்மா நேர்மையாக வாழ்ந்திருந்தால் எப்படியிருக்கும்? என்பது நீ யோசிப்பது புரிகின்றது.  வேறொன்றும் நடந்திருக்காது. நீயும் என்னைப் போலவே ஏதோவொரு நிறுவனத்தில் அடிமட்ட ஊழியராக உள்நுழைந்து உன்னை நீ நிரூபித்துக் காட்டுவதற்குள் உன்னையே இழந்துருக்கக்கூடும்.  நான் பார்த்த தொழில் வாழ்க்கை அனுபவத்தில் ஒரு பெண்படும் பாடுகளை வைத்தே இந்த முடிவுக்கு வந்தேன்.  எந்த வகையில் பார்த்தாலும் பெண்களுக்கு கல்வி தான் முதல் ஆயுதம்.  அதற்குப் பிறகு தான் மற்றது எல்லாமே என்பதை புரிந்து கொண்டேன்.  அதனால் தான் நான் உன்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டு உன் பாதையைக் காட்டி ஒதுங்கிக் கொண்டேன்.  நீ என்னைப் பற்றி, என் வாழ்க்கையைப் பற்றி யோசித்தே மன உளைச்சல் அடைந்தால் உன் இலக்கை நீ எப்படி அடைவாய் மகளே?

பேசாத வார்த்தைகளும், மௌனமும் உருவாக்கும் சக்தி என்பதை ஒரு பெண் புரிந்து கொண்டால் எப்படி மாறுவாள் என்னைப் போலவே நீயும் உதாரணமாய் தெரிகின்றாய்.  ஆனால் அவற்றை நேர்மறை எண்ணமாக மாற்றிக் கொண்ட நீ எனக்கு மகள் அல்ல.  என தாய் போலவே மாறி என்னை தவிக்க வைத்து விட்டாய் மகளே?

உன்னுடைய பார்வையில் நான் ஆசை நாயகியோ அல்லது வாழ்க்கையின் அசிங்க நாயகியோ எதுவாகயிருந்தாலும் நான் கவலைப்படவில்லை. என்னைப் பொறுத்தவரையிலும் ஆத்மார்த்தமாக வாழ்ந்து அமைதியாக இப்போது உன்னிடமிருந்து நான் விடைபெறுகின்றேன். என்னுடைய இலக்கென்பது நான் பட்ட துன்பங்கள் உன்னை வந்து சேரக்கூடாது. உன் வாழ்க்கையாவது சிறப்பாக இருக்க வேண்டும். அதனால் தான் விட்டுப் போன உன் கல்வியில் உன்னை கவனம் வைக்கச் சொன்னேன். ஆனால் படிக்கும் கல்வி மட்டும் ஒழுக்கத்தை தந்து விடாது. வளர்ப்பு, சூழ்நிலை என்ற பல காரணிகள் உண்டு. இதற்கு மேலாக சுய சிந்தனைகள் கூர்படுத்தப்பட வேண்டும். ஆனால் இவற்றை நான் புரியவைக்க வாய்ப்பு கொடுக்காமலேயே நீயே சுயம்புவாய் மாறி இன்று உயரத்தில் இருப்பதை நினைத்து பெருமையாய் இருக்கு மகளே?

என்னுடைய அசிங்க பக்கங்களை உன்னிடம் காட்டாமல் அமைதி காத்தேன். உனக்குள் இருக்கும் கோபங்கள் நியாயமானது தான். ஆனால் எல்லா நியாயங்களுக்குப் பின்னாலும் ஒரு சிறிய அளவு அநியாயமும் கலந்து தான் இருக்கும் மகளே? உள்ளூர் பார்வையில் நான் உணர்ந்த வாழ்க்கையில் நான் எழுதும் இந்த எழுத்துக்கள் உலகப் பார்வையை பார்த்துக் கொண்டுருக்கும் உனக்கு புரிவதில் சிரமம் இருக்காது., சரி தானே மகளே?

நேர்மை, உண்மை, சத்தியம், ஒழுக்கம் போன்ற பல வார்த்தைகள் இன்று வலுவிழந்து கொண்டுருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் காரணங்கள். அவசர உலகில் ஆறுதல் சொல்லக்கூட கூலி கேட்கும் உலகில் நான் அடைக்கல்ம் புகுந்த கதர்ச்சட்டை என்னை கண்ணியமாகவே வைத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு உருவான குடும்ப, தொழில் வாழ்க்கை சூறாவளியை பொருட்படுத்தாமல் என்னை கவனமாக பாதுகாத்தார். 

என்னை விட உன் வளர்ச்சியில் அக்கறை காட்டினார்.  அவையெல்லாம் நீ அறியாதது. ஆனால் இந்த அன்பு தான் அவருக்கு இறுதியில் வினையாக மாறியது. வாகன விபத்தில் மாட்டிய அவரை "செத்து தொலையட்டும்" என்று புறக்கணித்த அவர் மனைவியை விட நான் பெருமைபடக்கூடியவள் தான். தகவல் கிடைத்த நான் அவசரமாய் அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது தான் எங்களின் விதியின் விளையாட்டு நேரமும் அங்கிருந்து தான் தொடங்கியது. அவசர உதவிக்காக நுழைந்த அவருக்கு சுத்தம் செய்யாத ஊசியை அவசரமாய் குத்தி இலவசமாய் எய்ட்ஸ் என்ற உயிர்க் கொல்லியை வழங்கியவர்களை என்ன சொல்வாய்?

அவருடைய ஆள் அம்பு சேனைகள், பணபலம் என்று பின்னால் வந்து நின்றாலும் அவர் அறியாமல் எனக்குக் கொடுத்த அந்த உயிர்க் கொல்லியை சுமந்தபடி வாழும் சூழ்நிலையில் மாறிப் போனேன். அவர் சில மாதங்களுக்கு முன் உலகை விட்டு சென்று விட்டார்.  இதே இப்போது நானும் அவர் சென்ற காலடி தடத்தை நோக்கி சென்று கொண்டுருக்கின்றேன் மகளே?

நான் இதுவரைக்கும் உனக்கு அறிவுரை என்று எதுவுமே சொன்னதில்லை. நீயும் அதுபோன்ற சூழ்நிலையை உருவாக்கியதும் இல்லை.  நீ சென்று கொண்டுருக்கும் உயரங்களை பலர் மூலம் நான் கேட்டறிந்து என் துயரங்களை மறந்த நாட்கள் பல உண்டு. உன்னுடைய ஒழுக்கமும், அயராத உழைப்பும் பணத்தைக் கொடுத்தது. நீ பெற்ற வசதிகளை அனுபவிக்கும் பொருட்டு நான் உன்னைத் தேடி வரவில்லை. என் நோய் குறித்து உன்னிடம் சொல்லி மன்னிப்பு கேட்கவே வந்தேன். ஆனால் உன்னுடைய புறக்கணிப்பை சந்தோஷமாகவே ஏற்றுக் கொண்டு திருமபி வந்தேன். உனக்கு வாழ்த்த வார்த்தைகளை தேட வேண்டிய அவஸ்யமில்லாமல் உன் ஆளுமையைப் பார்த்து அதிசயமாய் திரும்பி வந்தேன். உன்னை சுமந்த இந்த வயிற்றுக்கு வாலிப சந்தோஷத்தை தந்தது மகளே?

இறைவன் உன்னோடு இருந்து உன்னை காக்க வேண்டும் என்று வாழ்த்த மாட்டேன். கட உள் என்பது உள்ளே தான் இருப்பது.  நீ அதை உணர்ந்ததோடு உன்னையும் அறிந்து உலகத்தையும் புரிந்து நீ வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை நான் நினைத்துப் பார்க்காத ஒன்று. 

நீ அடுத்த ஜென்மத்தில் எனக்கு அம்மாவாக வர வேண்டும் மகளே? உன் வயிற்றில் நான் பிறக்க வேண்டும் தாயே?

இதற்கு மேல் எழுத என்னால் எழுத முடியவில்லை.  எழுதாத வார்த்தைகள் ஆயிரம் பக்கத்தில் சொல்ல வேண்டியதற்கு சமமடி மகளே. 

விடைபெறுகின்றேன்.

உன் அம்மா. (இந்த உறவை இன்னமும் மனதில் வைத்திருப்பாய் தானே?)

ரயில் வெளிச்சத்தில் படித்து முடித்து விட்டு அந்த காகிதத்தை அவரிடம் கொடுத்தேன்.  

இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. திருப்பூர் ரயில் நிலையம் மூன்று மொழிகளில் எங்கள் இருவரையும் வரவேற்றது.  அவருக்கான வாகனம் வந்து நின்றது.  என் வாகனத்தை நோக்கி நகர்ந்த போது என் பெயர் சொல்லி அழைத்தார். 

அடுத்த அரைமணி நேரம் ஆள் அரவமற்ற அந்த ரயில் நிலைய முகப்பில் வேறு சில விசயங்களையும் பேசினார்.  நான் வீட்டுக்கு என்னுடைய வாகனத்தில் வந்து கொண்டுருந்த போது அவர் என்னிடம் பேசிய விசயங்களை நினைத்துப் பார்த்தேன்...........

"ஆண் என்பவன் எல்லா இடங்களிலும் அவனுக்கு பிடித்த சூழ்நிலை அமைந்திருந்தால் தன் பாரத்தை இறக்கி வைத்து விடுவான்.  அறிமுகம் இல்லாதவர், அச்சப்படக்கூடியவர் என்பதைப் பற்றி பிறகு தான் யோசிப்பான். ஆனால் பெண் என்பவள் அத்தனை சீக்கிரம் எந்த இடத்திலும் வெளியே காட்டிக் கொள்வதில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்கள் குறித்த அச்சமும் சமூகம் குறித்த பயமும் இன்னும் பல காரணங்களால் தன்னை அத்தனை சீக்கிரம் வெளியே காட்டிக் கொள்வதில்லை". 


"ஆனால் பெண் என்பவளை எந்தவிதமாக பார்த்தாலும் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணுமே அன்புக்கு ஏங்குபவளாகத்தான் இருக்கிறாள். தன்னை புரிந்து கொள்ள எவராவது கிடைக்க மாட்டார்களா? என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.  தன்னை குறுக்கிக் கொண்டு வாழும் ஆணோ பெண்ணோ ஏதோவொரு சமயத்தில் மொத்தமாக தன்னைப் பற்றி எவரிடமோ கொட்டிவிடுவதுண்டு."  

"ஆனால் எனக்கு அதற்கான சந்தர்ப்பந்தங்கள் அமைந்ததுமில்லை. உருவாக்க விடுவதுமில்லை.  நீங்கள் ரயிலில் ஏறி அமர்ந்ததும் உங்கள் மனைவியிடம் குழந்தைகளிடம் பேசிய வார்த்தைகளை உங்களை அறியாமல் கவனித்த போது என் மனோரீதியான கவனம் உங்கள் மேல் விழுந்தது. " 

"நான் சார்ந்திருக்கும் பல நிறுவனங்கள் என்னை பல விதங்களிலும் கண்காணித்து இருக்கிறார்கள். எந்த இடத்திலும் சிறு இடைவெளி கூட இல்லாமல் என்னை இட்டு நிரப்பி விடுவதுண்டு."  

"எந்த நிறுவனத்தில் நுழைந்தாலும் என் உள்ளாடை முதல் தெரியும் இடுப்பு வரைக்கும் அளவெடுக்கும் வரைக்கும் ஆண்கள் பலரையும் பார்த்திருக்கின்றேன்.  

நீங்கள் நல்லவரா? என்று எனக்குத் தெரியாது.  ஆனால் முயற்சித்துக் கொண்டுருப்பது மட்டும் புரிகின்றது." 

"அம்மா இறந்து ஒரு வருடம் ஆகி விட்டது.  பல நிறுவனங்களில் நான் பார்க்கும் பெண் குழந்தைகளுக்கு மட்டும் கல்விக்கான கட்டண வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்துக் கொண்டுருக்கின்றேன்.  காரணம் ஆண்கள் என்பவர்களுக்கு எந்த சூழ்நிலையும் சாதகமாக அமையும் அல்லது உருவாக்கிக் கொள்ளலாம். " 

"ஆனால் பெண்களுக்கு சற்று கடினம் தான். இது இந்தியா மட்டுமல்ல.  நான் பார்த்த வெளிநாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது. பெண்கள் எழுதலாம், ஆடலாம், பாடலாம், படிக்கலாம்.  பிடிக்காத கணவன் என்றால் வெளியேறி தனக்கான வாழ்க்கையை வாழலாம். ஆனால் எத்தனை லாம் போட்டாலும் அவர்களின் முழுமை என்பது ஏதோவொரு வகையில் ஆண்களைச் சார்ந்து தான் இருக்கிறது. " 


"ஒரு பெண்ணின் தனிப்பட்ட சாதனைகள் என்பது குறைவு. உலகை புரட்டிப் போட்ட புரட்சியாளர்கள் முதல் உலகை அச்சுறுத்தும் விஞ்ஞானம் வரைக்கும் அத்தனையும் இந்த உலகத்திற்கு தந்தவர்கள் ஆண்கள் தான். தன்னை உணர்ந்து தனிமையில் சாதித்த பெண்கள் வரிசையில் ரேடியம் கண்டுபிடித்த பெண்மணியைத் தவிர எனக்கு வேறு யாரும் நினைவில் வரவில்லை. "

"எழுத்தாளராக, விஞ்ஞானியாக, அதிகாரியாக, அரசில் உயர்பதவியிலும் கூட இருக்கலாம். ஆனால் அவருக்கு பினனாலும் முன்னாலும் ஒரு ஆண் பார்வை இருந்து கொண்டேதான் இருக்கிறது. உடல் வலிமை மட்டுமல்ல உள்ளத்தின் வலிமையும் என் பார்வையில் ஆண்களிடம் தான் அதிகமாக இருக்கிறது. ஆண்கள் எத்தனை ஆபத்தானவர்கள் என்பதையும் நான் அறிவேன்.  இவ்வளவு அறிவீலிகளா? என்பதையும் பல இடங்களிலும் பார்த்து இருக்கின்றேன். "

"ஒரு ஆண் தன்னை எந்த சூழ்நிலையிலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும்.  அதற்கான வாய்ப்புகளையும் அவர்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.  ஆனால் பெண்கள்? 

ஒவ்வொரு பெண்ணுமே தன்க்கு பிடித்த சூழ்நிலை, தான் விரும்பும் குணாதிசியம் உள்ள கணவன் காதலன் என்று ஆசைகளால் அவஸ்த்தைப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். அமைதியைக் கையாண்டு கவிழ்த்து விடும் ஆண்களைப் போலவே அத்தனையும் இழந்தாலும் திருந்தாத பெண்களையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்."

"நான் சந்திக்கும் நபர்களில் ஆண், பெண் என்ற பேதம் பார்த்து பழகுவதில்லை.  ஆனால் சூழ்நிலையை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை வைத்து தான் அவர்களை மதிப்பீடு செய்கின்றேன்."   

மரணத்தினால் பாவங்கள் அழியும் அந்த
மரணத்தினால் பல சாபங்கள் தீரும்...  

நாகமணியின் அம்மா குறித்து யோசித்த போது நான் சமீபத்தில் கோவை மின் மயானத்தில் கேட்ட பாடல் என் நினைவுக்கு வந்தது.  யோசித்தபடியே வீட்டுக்குள் நுழைந்த போது தூங்கிக் கொண்டுருந்த என் குழந்தைகளின் மேல் பார்வையை ஓட விட்டேன்.  சில எண்ணங்களும் ஒரு சில வைராக்கியமும் எனக்குள் உருவானதை என்னால் உணர முடிந்தது.




முற்றும்

Friday, December 10, 2010

வழியா இல்லை பூமியில்?

இதன் முந்தைய தொடர். 

தொடரப்போகும் அடுத்த பகுதியுடன் இந்த தொடர் நிறைவடைவதால் இந்த பதிவு சற்றே நீள்பதிவு.




எங்களை நோக்கி வந்துகொண்டுருந்த ரயில் நிலைய காவல் அதிகாரியைப் போலவே நாங்கள் இருந்த சிமெண்ட் பெஞ்சை நோக்கி மற்றொரு நபரும் எங்களருகே வந்து நின்றார். எனக்கு படபடப்பாய் இருந்தது. நடைமேடையில் கண்ணுகெட்டிய வரைக்கும் யாருமில்லை. எறிந்து கொண்டுருந்த குழல் விளக்கு வெளிச்சத்தில் நாங்கள் இருவரும் பளிச்சென்று தெரிந்தோம். எங்களருகே சுமை தூக்கும் தொழிலாளர்கள் சிலர் நின்று கொண்டுருந்தனர். நாங்கள் அங்கிருந்த நிலையை எவர் பார்த்தாலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.  காரணம் அடுத்த ரயில் வருவதற்கு நீண்ட நேரம் இருந்தது.  நான் சூழ்நிலையை புரிந்து கொண்டது போலவே அம்மாவும் புரிந்து கொண்டு தயாராகயிருந்தார். இந்த இரவு நேரத்தில் ரயில் நிலையத்தை விட்டு எங்களுக்கு வேறெங்கும் செல்லவும் வாய்ப்பில்லை.

எங்களருகே வந்து நின்றவருக்கு நாறபது வயது இருக்கலாம். கதர் வேஷ்டி கதர் சட்டை அணிந்து அந்த நடு இரவிலும் அப்போது தான் குளித்து வந்தவர் போலிருந்தார். அவரின் பணக்காரத் தோற்றத்தை என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. எங்களருகே வேறு எவரும் இல்லாததால் அம்மாவிடம் வந்து நின்றார். வரவேண்டிய ரயிலைப்பற்றி கேட்டுக் கொண்டுருந்தார்.  அம்மாவுக்கு அது குறித்து தெரியாது என்பதைக் காட்டிக் கொள்ளாமல் அறிமுகமானவர் போலவே அவருடன் சற்று தள்ளி நின்று உரையாடிக் கொண்டுருந்தார். 

அம்மாவை நோக்கி வந்த காவல்துறையினர் என்னருகே வந்து நின்றனர். சற்று நேரம் என்னைப் பார்த்து விட்டு "எங்கம்மா போறீங்க" என்றார் அதோ அம்மா என்று பொதுப்படையாக நான் கையை காட்ட சரிசரியென்றபடி நகர்ந்தார். . என மூச்சே அப்போதுதான் மீண்டும் சீரானது..  இயல்புக்கு மாறாக அம்மா அந்த கதர்சட்டையுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டுருப்பதை பசி மயக்கத்திலும் தூக்க கலக்கத்திலும் கவனிக்கும் ஆர்வமில்லாமல் அருகே இருந்த சிமெண்ட் பெஞ்சில் சோர்வாக சாய்ந்திருந்தேன். கடைசியில் அவர் ஒரு அட்டையை அம்மாவிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார். அம்மா சிரித்தபடியே என்னை நோக்கி வந்து கொண்டுருந்தார். 

பேசி விட்டு சென்றவர் எங்களின் மொத்த வாழ்க்கையையும் திசை திருப்பப் போகின்றார் என்பதை அறியாமல் என்னருகே வந்தமர்ந்த அம்மாவிடம் "தூக்கம் வருதும்மா" என்றேன்.

விடியும்வரையிலும் அம்மா என்னை படுக்கவைத்துக் கொண்டு முழித்துக் கொண்டுருந்தார். அருகில் இருந்த கழிப்பறையில் சுத்தம் செய்து கொண்டு கதர்ச்சட்டை கொடுத்துச் சென்ற நிறுவனத்திற்கு காலை பத்துமணிக்கு சென்ற போது அந்த நிறுவனத்தின் பிரமாண்டம் பயமுறுத்துவதாக இருந்தது.  ஏறக்குறைய ஆயிரம் பேர்களாவது பணிபுரிந்து கொண்டுருக்கக்கூடும்.  வரவேற்பறையில் அம்மா கொடுத்த அட்டையைப் பார்த்த போது ஒருவர் உடனடியாக அந்த கதர்ச்சட்டை அறைக்கே அழைத்துச் சென்றார்.  ஏற்கனவே சொல்லிவைத்திருப்பார் போல.. என்னை வரவேற்பரையில் உட்கார வைத்து விட்டு அம்மா மட்டும் உள்ளே சென்றார்.

எங்களது வாழ்வில் அதிர்ஷ்ட கதவுகள் திறந்தது. அதே சமயத்தில் துயரத்தின் சூறைக்காற்றும் ஜன்னல் வழியே புகத் தொடங்கியது.  

வெளியே வந்த அம்மா சிரித்துக் கொண்டே வந்தாலும் "அனுபவம் இல்லாமல் வேலையில் சேர்க்க முடியாது" என்ற செய்தியோடு வந்த போது எனனுடைய பயம் அதிகமானது.  அம்மாவின் தன்னம்பிக்கையை நான் அறிந்திருந்த போதிலும் அப்போதுள்ள சூழ்நிலையில் எங்கள் கையில் அதிகப்படியான பணமேதுமில்லை.  ஆனால் அம்மாவின் அசாத்தியமான துணிச்சலில் அன்றே ஒரு தங்கும் விடுதி அமைந்தது...வேலைக்கு சென்று கொண்டுருக்கும் பெண்களுக்கான விடுதி.  

அம்மா சில தொலைபேசி எண்களை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக யாருடனோ பேசிக்கொண்டுருந்தார்.  எனக்கு எதிலும் ஆர்வமில்லாமல் அறைக்கு தூங்கப் போய்விட்டேன்.  இரவு நேரத்தில் அறைக்கு வந்த அம்மா கையில் சாப்பாடும் மற்ற அத்யாவ்ஸ்ய பொருட்களும் இருந்தது.

மூன்று மாதங்கள் கடந்த போது அம்மா எனக்குச் சொன்ன அறிவுரைகள் அத்தனையும் அவருக்கும் சொல்லும் அளவிற்கு மாறிப் போகத் தொடங்கியது. இடையே சற்று வசதியான வீட்டுக்கு குடி புகுந்தோம். அம்மா தொடக்கம் முதலே என்னை வேலைக்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டேன். 

சில சமயம் நடுஜாமத்தில் வந்து சேருவார்.  அரைத்தூக்கத்தில் இருக்கும் எனக்கு அம்மாவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் புதிதாக இருந்தது. அதை வேறு விதமாக எனக்கு புரியவைத்தார்

"இரண்டு வருடங்கள் உனக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றேன்.. அதற்குள் விட்டுப் போன படிப்பை முடித்து விடு.. மற்ற திறமைகளையையும் கற்றுக் கொள், அம்மாவைப்பற்றி கவலைப்படாதே.  நீ என்னுடன் நிறைய பேச வேண்டும் என்று நினைப்பது எனக்குப் புரிகிறது.  அதற்கான சமயங்கள் வரும் போது பேசுவோம்.  இப்போது உன் வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம். அதை விட நீ உன் காலில் தனித்து நிற்பது அதை விட முக்கியம் " என்றார். .

என்னால் அம்மாவை எதிர்க்கமுடியவில்லை.

வீட்டுக்கு அருகில் இருந்தவர்களோடும் பழக முடியவில்லை. பெரும்பாலும் குடும்பத்துடன் காலையில் அவசரமாக வேலைக்குச் சென்று விட்டு இரவு வீட்டுக்கு திரும்புபவர்களாக இருந்தார்.  எவர் தலையாவது தென்பட்டால் சிரித்துக் கொண்டே அறிமுகம் செய்து கொள்ள முயற்சித்தாலும் அவர்கள் பேச விரும்பும் திரைப்படம் நெடுநதொடர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாத காரணத்தால் ஒதுங்க வேண்டியதாக இருந்தது.  

வேறுவழியில்லை என்பதாக மறுபடியும் புத்தகமும் கையமுமாக மாறத் தொடங்கினேன். இப்போது அம்மா கூட என்னுடன் அதிகம் பேசுவதில்லை. அம்மாவின் வேறுபட்ட நடவடிக்கைகளையைம் கேள்விகளாக கேட்க மனமில்லாமல் என்னை மாற்றிக் கொண்டேன். 

ஆனால் எனக்குள் இருந்த உறுத்தல்கள் வெறும் கேள்விகளாகவே இருந்தது.  

அம்மா சொன்னபடியே தவறவிட்ட படிப்பை அஞ்சல் வழியே படித்தபடியே திருப்பூருக்குள் இருந்த "கார்மெண்ட் டெக்னாலஜியை" சான்றிதழ் படிப்பாக படித்து முடித்தபோது முழுமையாக இரண்டு வருடங்கள் கடந்துபோயிருந்தது. இடையே கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள், ஆங்கிலப்பயிற்சி என்று அம்மா சொன்னபடியே என்னை வளர்த்துக் கொண்டுருந்தேன். 

ஒரு நாள் அந்த பூகம்பம் எங்கள் வீட்டைத்தாக்கியது. 

எப்போதும் அம்மா வேலைக்குச் சென்றபிறகு தான் நான் வெளியே செல்வதுண்டு.   நான் பயின்றுகொண்டுருந்த வகுப்புகள் முடித்து வீட்டுக்கு வர மாலை நேரமாகிவிடும்.  அன்று காலை வகுப்புகளை முடித்துவிட்டு வயிற்று வலியின் காரணமாக மதியமே வீட்டுக்குள் திரும்பிய போது வீட்டுகள் அம்மாவுடன் அந்த கதர்ச்சட்டை நபரும் இருந்ததை பார்த்த போது நான் தேடிக்கொண்டுருந்த பல கேள்விகளுக்கும் அம்மா எனக்காக செலவழித்துக்கொண்டு பணத்திற்கான விடைகளுக்கும் அர்த்தம் புரிந்தது.

இரண்டு நாட்கள் அம்மாவுடன் நான் பேசவில்லை. 

எதுவும் கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளவில்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை. அம்மா இரவு நேரங்கழித்து வந்த காரணத்தால் உள்ளே தூங்கிக் கொண்டுருந்தார். மனம் வெறுமையாயிருக்க அருகேயிருந்த பூங்காவிற்கு செல்ல விரும்பி எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த சந்தின் வழியே நடந்து கொண்டுருந்தேன்.

தூரத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி தான் வந்த டாக்ஸிகாரருடன்  சண்டை போட்டுக் கொண்டுருந்தார்.  பலரும் சுற்றிலும் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டுருந்தனர்.  நான் அவர்களை கடந்து செல்ல முற்பட்ட போது அங்கு நடந்து கொண்டுருந்த உரையாடல்களை ஓரளவுக்கு என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது.  குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லாமல் அந்த பெண்மணியை அலைக்கழித்துக் கொண்டுருந்த ஓட்டுநருடன் சண்டை போட்டுக் கொண்டுருந்தார்..  

ஆனால் ஆண்டவன் எனக்கென்றே அனுப்பி வைத்த ஜீவன் என்பதை அறியாமல் ஏதோவொரு துணிச்சலில் அந்த பெண்மணி அருகில் சென்று "நான் ஏதும் உங்களுக்கு உதவுமுடியுமா என்று பார்க்கின்றேன்" என்று கேட்டேன். சண்டை போட்டுக் கொண்டுருந்தவர் என்னுடைய ஆங்கிலப் பேச்சைக் கேட்டு மொத்தமாக இந்தியாவைப்பற்றி ஒரு பாட்டு பாடித்தீர்த்தார்.

அவர் ஸ்வீடனிலிருந்து இந்தியா வந்திருந்தார். அவர் ஸ்வீடீஸ் கலந்து பேசிய ஆங்கிலத்தை புரிந்து கொள்ள தனிப்பயிற்சி தேவைப்பட்டது. ஓட்டுநரை அனுப்பிவிட்டு அவருக்கு வேறொரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்து நகர்ந்த போது என் கையை பிடித்துக் கொண்டார். 

"இன்று ஒரு நாள் மட்டும் என்னுடன் இருக்க முடியுமா?" என்றார். 

காரணம் அந்த அளவிற்கு நொந்து போயிருந்தார் என்பதோடு மொழிப் பிரச்சனை வேறு அவரை பயமுறுத்திக் கொண்டுருந்தது. அவர் பேசும் ஸ்வீடீஸ் கலந்த ஆங்கிலம் கேட்பவர்களுக்கு புது தேவபாஷை போலவேயிருந்தது. காரில் சென்று கொண்டுருந்த போது என்னைப் பற்றி விசாரித்தார்.  குறிப்பாக நான் வாங்கியுள்ள "கார்மெண்ட் டெக்னாலஜி" படிப்பை மனதில் குறித்துக் கொண்டு அவர் செல்ல வேண்டிய நிறுவனங்களுக்கு என்னையும் சேர்த்து அழைத்துக் கொண்டு சென்றார்.  இரவில் அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் என்னை தங்க முடியுமா? என்று கேட்ட போது முதல் முறையாக அம்மாவை விட்டு தங்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.  

அவருக்கு ஏதோவொரு வகையில் என்னை பிடித்து விட்டது.  என்ன காரணம் என்று தெரியவில்லை.  அதிர்ஷ்டமா? அல்லது எனக்கு வரவேண்டிய வாய்ப்புக்கான நேரமா என்று புரியாமல் அன்று இரவு முழுவதும் அவருடன் உரையாடிக் கொண்டுருந்தேன்.  அப்போது தான் அவரைப் பற்றி முழுமையாக புரிந்து கொண்டேன். ஒரு முழநீள பெயருடன் இறுதியில் மரியா என்று முடிந்த அவரின் பெயரை சுருக்கமாக மரியா என்று அழைக்கச் சொன்னார்.

மரியா சமீபத்தில் இந்த துறையில் நுழைந்ததும், அறிமுகம் இல்லாமல் திருப்பூர் வந்ததும் போன்ற பலவிசயங்களை பகிர்ந்து கொண்டார்.  ஸ்வீடனின் ஒரு தங்கும் விடுதியில் வரவேற்பாளர் பதவியில் இருந்த மரியா கணவர் இறந்த பிறகு ஏதாவது சாதிக்க வேண்டுமென்று நோக்கத்தில் இந்த ஆடைத்தொழிலை தேர்ந்தெடுத்து இறுதியாக இந்தியா வந்து சேர்ந்திருக்கிறார். 

பங்களாதேஷ், பாகிஸ்தான் என்பதை மத நாடாக புரிந்துகொண்டு சீனாவுக்கு சென்று தரமில்லாத விசயங்கள் பரிசாக கிடைக்க "போதுமடா சாமி" என்று பலரிடம் கேட்டு திருப்பூர் பற்றி கேட்டு வந்து இருப்பதை புரிந்து கொண்டேன். ஸ்வீடனில் அவர் இருந்த குறிப்பிட்ட பகுதியில் ஆடைக்கான சந்தை நல்ல விதத்தில் இருந்தாலும் சரியான நபர்கள் இல்லாத காரணத்தால் பக்கத்து நாடுகளில் இருந்தது வாங்கி கொள்ளை லாபத்திற்கு விற்றுக் கொண்டுருப்பதையும் அவர் பேச்சின் மூலம் புரிந்து கொண்டேன்.  

ஆனால் இந்தியாவைப்பற்றி அவருடைய நண்பர்கள் பலரும் சொல்லக்கேட்ட பயங்கர கதைகள் பயமுறுத்துவதாக இருக்க தள்ளிப்போட்டுக் கொண்டுருந்த பயணம் சில நாட்களுக்கு முன் இங்கே கொண்டு வந்து சேர்த்துள்ளது. அதுவே இன்று என்னுடனான பாதிவழி சந்திப்பு வரைக்கும் நடந்து முடிந்து விட்டது.. அவர் தங்கியிருந்த விடுதியில் அறிமுகமான அத்தனை நிறுவனங்களும் மரியா போன்ற தொடக்க முயற்சிகளை ஏளனப்படுத்திவிட விடுதியில் இருந்த சிலரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

வெளிநாட்டுப் பெண்மணியாக இருந்தாலும் ஒவ்வொரு காசையும் பார்த்து பார்த்து செலவழிக்கும் குணாதிசியம் விடுதியில் இருந்தவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  கண்டும் காணாமல் ஒதுங்கி விட்டனர்.  மனம் தளராத விக்கிரமாதித்தியாய் தனிப்பட் முறையில் வெளியே வந்து வண்டி பிடித்து வந்துள்ளார் எனபதைக் கேட்ட போது அவரின் துணிச்சல் என்னை வெகுவாக கவர்ந்தது.

அதுவே என் தொடர்பை அவருக்கு உருவாக்கிக் கொடுக்க "தெய்வமே நன்றி" என்று என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார்.

நானும் அதே சூழ்நிலையில் தான் இருந்தேன்.  ஆனால் நான் காட்டிக் கொள்ளவில்லை.


நான் அவருடன் விடுதியில் தங்கியிருந்த போது அம்மா என்னை தேடிக் கொண்டுருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. என்னுடைய அலைபேசி  விடாமல் அடித்துக் கொண்டுருந்த போதும் நான் எடுக்கவில்லை.  மரியா கேட்ட போது நண்பர்களின் அழைப்பு என்று மாற்றிப் பேசிய பொய் என்பது கடைசி வரைக்கும் பல விதமாக மாற்றி சொல்லி வைத்தேன். என்னுடைய குடும்பத்தினர் வெளியூரில் இருக்கிறார்கள் என்பதாக அவரை நம்ப வைத்து ஜெயித்தேன். 

காரணம் அம்மாவுக்கும் எனக்கும் இடையே இவர் நுழைந்து என் மனதை மாற்றிவிடுவோரோ என்று பயம் எனக்குள் இருந்தது. நள்ளிரவு வரைக்கும் விட்டு விட்டு அம்மா அடித்துக் கொண்டுருந்த அலைபேசி நான் இரண்டு முறை தவிர்த்த போதும் கூட மறுபடியும் அடித்துக் கொண்டுருந்தார். இறுதியாக அந்த நள்ளிரவில் "என்னைத் தேடாதே. நான் இனிமேல் வரமாட்டேன்" என்று குறுஞ்செய்தி கொடுத்த பிறகே நின்றது. 

என் மனதில் அம்மா மேலிருந்த வன்மத்தை அன்று தான் புரிந்து கொண்டேன். அவருக்கும் எனக்கும் இருந்த இடைவெளியை நான் பேசிக்கொண்டுருந்த வெளிநாட்டு பெண்மணியின் எதிர்கால திட்டங்கள் நிரப்பக்கூடியதாக இருந்தது.  

மொத்தத்தில் மரியாவுக்கு திருப்பூர் தவிர இந்தியாவில் மற்ற பகுதிகளுக்கும் செல்லக்கூடிய நம்பிக்கையான ஆள் ஒருவர் தேவையாக இருந்ததை புரிந்து கொண்டேன்.  அம்மா எனக்கு கற்றுக் கொடுத்திருந்த அசாத்தியமான மனதைரியம் அன்று கை கொடுத்தது. நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விசயங்களையையும் என்னால் சாதிக்க முடியுமென்று மரியாவை நம்ப வைத்து அதிலும் வெற்றி பெற்றேன். 

அம்மாவை பல விதங்களிலும் வெறுத்த அளவிற்கு என்னால் மனதளவில் மறக்க முடியாமல் மறுகிக் கொண்டுருந்தேன். ஆனால் என் பிடிவாதமே முன்னால் நின்றது. நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் அம்மாவின் குணாதிசியமே மேலோங்கி நின்றது. நான் ஈடுபட்ட ஒவ்வொரு முயற்சிகளையும் அம்மாவை நினைத்துக்கொண்டே ஈடுபட்டேன். 

அடுத்த மூன்று நாட்களும் மரியாவுடன் விடுதியில் தங்கியிருந்தேன். மரியா மூலம் நான் கற்றுக் கொண்ட பல விசயங்கள் ஏராளமான புதிய நம்பிக்கையை உருவாக்கியது. அதுவே, அடுத்த ஒரு வருடத்திற்கு எனக்கு உதவியாய் இருந்தது.  மரியா எனக்கு அளித்த பொறுப்புகளுடன் அவர் கொடுத்து விட்டுச் சென்ற பணத்தை வைத்துக் கொண்டு அலுவலகமும் வீடுமாய் இருந்த அமைப்பில் திருப்பூரில் மீண்டு என் புதிய இரண்டாவது வாழ்க்கையை தொடங்கினேன். 

இடையே ஒரு முறை அம்மா நான் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு வந்து அழைத்தார். தவிர்க்கப் பார்த்தேன்.  என்ன காரணமென்றே எனக்குத் தெரியவில்லை.  மொத்தத்தில் என் அம்மாவாக இல்லாமல் வேறொரு ஜீவனாகத் தெரிந்தார். . 

"உன்னுடன் ஒரு மணி நேரம் மட்டும் பேச வேண்டும்" என்றார். நான் மறுத்து விட்டேன். ஆனால் அம்மா என்னை திட்டாமல் நகர்ந்தது இயல்புக்கு மாறாய் இருந்தது. அம்மா கெஞ்சிய வார்த்தைகளுக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை.  மொத்தத்தில் நான் அவரை பொருட்படுத்தவேயில்லை. கடைசியாக செல்லும் போது ஒன்றைச் சொல்லிவிட்டு சென்றார். 

"என் மனப்பாரம் குறைந்தது.  இனி நீ ஜெயித்து விடுவாய்" என்றார். 

அப்போது அதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. 


உலகில் மிக வலிமையான ஆயுதமென்பது புறக்கணித்தல்.  வார்த்தைகளும் ஆயுதங்களும் கொடுக்காத வலியை புறக்கணித்தல் என்பது பல மடங்கு வலிமையானதாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன்.  ஆனால் நான் எத்தனை தவறான முடிவை எடுத்தேன் என்பதை அம்மா இறந்த பிறகு என் கைகளுக்கு வந்த அவரின் கடித மரண சாசனம் என்க்கு உணர்த்தியது.

ஒவ்வொரு சமயத்திலும் நான் கற்றுக் கொண்ட தொழில் அனுபவங்கள் என்னை அடுத்தபடிக்கு எளிதாக நகர்த்திக் கொண்டுருந்தது. மொத்ததில் என்னுடைய தொழில் வாழ்க்கையின் முதல் வருடம் மரியா என்னிடம் எதிர்பார்த்ததை விட அற்புத பாதைக்கு கொண்டு செலுத்தியது. மரியாவிற்கு என் அசாத்தியமான உழைப்பு கொடுத்த லாபங்கள், நான் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடித்த ஓழுக்க விதிகள், நிறுவனங்களை கையாண்ட விதங்கள் என்று ஏராளமான ஆச்சரியக்குறிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மரியாவுக்கு உருவாக்கிக் கொண்டுருந்தது.

என்னுடைய கேள்விக்குறியான வாழ்க்கை சூத்திரத்தை மொத்தமாய் மாற்றியது. குறிப்பபிட்ட காலகட்டத்திற்குள் மரியா என்னுடன் தொழிலுக்கு அப்பாற்பட்டு மிகவும் நெருங்கியிருந்தார்.. 

நான் ஸ்வீடன் நிறுவனத்தில் மூன்றாவது ஆண்டாக பணியில் இருந்த போது என்னைச் சுற்றியிருந்த ஆள் அம்பு சேனைகள் வளர்ந்த போதிலும் கூட என் தனிமை கூட்டை உடைத்துக் கொண்டு வரவில்லை. எவர் மீதும் அன்பில்லாமல் எந்த இலக்குமில்லாமல் அன்றாட கடமைகளும் வாழ்க்கையின் அதன் போக்கிலேயே போய் கொண்டுருந்தேன்.  

எனக்கு வந்து கொண்டுருந்த எந்த வசதிகளையும் நான் அனுபவிக்க விரும்பவில்லை. ஒவ்வொன்றும் வங்கியில் தூங்கிக் கொண்டுருந்தது. ஓய்வு நேரத்தில் கோவையில் மாலை நேர எம்பிஏ படிப்பில் சேர்ந்து அதன் மூலம் என்னை மாற்றிக் கொள்ள முயற்சித்தேன். ஆர்ப்பாட்டமில்லாத என் வாழ்க்கையின் ஆணி வேராக இருந்த அம்மாவிற்குப் பிறகு ஸ்வீடன் பெண்மணி ஆழமாக ஊடுருவினார். 

தொழிலுக்கு அப்பாற்பட்டு என்னை மகள் போலவே பாதுகாக்க அவரின் சாதாரண தொழில் வாழ்க்கையை என்னால் சாம்ராஜ்ய வாழ்க்கையாக மாற்ற முடிந்தது. ஓய்வில்லாத எனது ஒவ்வொரு நாளும் என் வயதின் அதிகரிப்பை உணர்த்தாமல் உருண்டோடிக் கொண்டுருந்தது.  

2009 25 செப்டம்பர் 

அவசர வேலையென்று மரியா அழைத்திருந்தார். நான் ஸ்வீடன் சென்றபிறகு தான் மரியா வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருப்பதை புரிந்து கொண்டேன். அவருக்குள் இருந்த புற்று நோய் அவரை முழுமையாக மாற்றியிருந்தது. தலைமுடிகள் உதிர்ந்து எலும்பும் தோலுமாய் விகாரமாய் இருந்தார். 

அவருக்கு இருந்த நோய்கள் குறித்து எனக்குத் தெரியுமே தவிர இந்த அளவிற்கு கேன்சர் நோயின் தாக்கம் இருக்குமென்பதை அன்று தான் முதன் முதலாக புரிந்து கொண்டேன். எதற்காக நம்மை அழைத்தார்? என்பதை யோசித்துக் கொண்டு மருத்துவமனையில் அவரருகே அமர்ந்திருந்தேன். 

அவரால் அதிகம் பேசமுடியவில்லை.  கண்களில் இருந்து நீர் தொடர்ச்சியாக வழிந்து கொண்டுருந்தது.  தலையணைக்கு கீழே இருந்து ஒரு ஒட்டப்பட்ட கவரை எடுத்து கையில் கொடுத்து விட்டு என் உள்ளங்களையில் முத்தமிட்டார்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  என்னவென்று கண்களால் கேட்ட போது சைகையில் "நீ ஊருக்குச் சென்றதும் பிரித்துப் பார்" என்றார். அதேநாள் இரவில் என் மின் அஞ்சலுக்கு சென்னையிலிருந்த மற்றொரு நபரிடம் இருந்து செய்தி வந்தது. 

சென்னையில் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரைப் போட்டு என் அம்மா இறுதிக் கட்டமாக உயிருக்கு போராடிக் கொண்டுருப்பதாக செய்தி வந்தது. ஆனால் ஸ்வீடனில் உள்ள சூழ்நிலையில் அங்கேயே ஒரு வாரம் இருக்கும்படி உருவாக அம்மா குறித்த விசயங்களை மறந்து போனேன். 

செப் 27 அன்று மரியாவின் ஜீவன் மரண்த்தை தழுவியது.   

அடுத்த மூன்று நாட்கள் என்னால் நகரமுடியவில்லை.  காரணம் மரியா இறக்கும் தருவாயில் பல விசயங்களை செய்து இருப்பதை நான் சென்னை வந்த போது தான் புரிந்து கொண்டேன். மரியா இறந்து போன துக்கத்தை மனம் ஏற்றுக் கொள்ளாமல் தவித்தது.

அவர் கொடுத்த கவர் கூட பிரிக்கப்படாமலேயே இருந்தது. 

வேலைகள் அத்தனையையும் முடித்து ஸ்வீடனிலிருந்த சென்னைக்கு வந்து அம்மா இருப்பதாக தகவல் வந்த மருத்துவனைக்குக் சென்று பார்த்த போது அம்மா இறந்து மூன்று நாட்களாகிவிட்டது என்றனர். 

ஒரு சேவை மையம் அடக்கம் செய்துள்ளார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன்.  அந்த மையத்தைத் தேடிச் சென்றபோது அம்மா கொடுக்கக் சொன்னதாக ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தனர்.  

மரியா இறந்த செப் 26 அன்றே என் அம்மாவும் இறந்து இருப்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன். அழக் கூட தெம்பில்லாமல் தங்கியிருந்த விடுதிக்கு வந்த போது இப்போது என் கையில் இரண்டு கவர்கள் இருந்தது.  மரியா, அம்மா இருவரும் எழுதி வைத்திருந்த கவர்களை அப்போது தான் அடுத்தடுத்து பிரித்தேன்.  

முதலில் மரியா கொடுத்த கவரை.பிரித்து படித்து முடித்த போது அழுவதா சிரிப்பதா என்று தோன்றாமல் எதிரேயிருந்த சுவ்ற்றை வெறித்துக் கொண்டுருந்தேன்.

ஐரோப்பிய யூனியனில் வளர்ந்து கொண்டுருக்கும் மரியாவின் நிறுவனத்தில் 40 சதவிகித பங்குதாரராக என்னை நியமித்திருந்தார். இறுதி முடிவென்பது என்னுடைய ஒப்புதல் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதாக அவர் மகனுக்கு தனிப்பட்ட குறிப்பாக எழுதியிருந்தார். அது தொடர்பாக பல வித ஆவணங்கள் உள்ளேயிருந்தது. .

அடுத்து அம்மாவின் கடிதத்தை எடுத்த போது குற்ற உணர்வில் என் கைகள் நடுங்கிக் கொண்டுருப்பதை என்னால் நன்றாகவே உணரமுடிந்தது.


பிரிந்துப் போன மகளுக்கு இறந்து போன உன் அம்மா எழுதியது என்று அந்த கடிதத்தை தொடங்கியிருந்தார்.

Saturday, December 04, 2010

அனுபவமே ஆசிரியர்

முந்தைய பகுதிகளை தொடர

ஒன்று

இரண்டு

மூன்று

நான்கு

ரயிலில வந்து கொண்டுருந்த போது அம்மாவிடம் பலவிதமாக கேட்டுப் பார்த்தேன். சேலத்திலிருந்து கோயமுத்தூர் செல்லும் ரயிலில் அமர்ந்திருக்கிறோமே தவிர எங்கு செல்கிறோம்? என்ற எண்ணமில்லாமல் தான் இருந்தோம். ஆனால் அம்மாவின் முகத்தில் எந்த வருத்தமும் இருப்பதாக தெரியவில்லை. நான் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தேன்.  ரயிலில் உள்ளே கூட்ட நெரிசல் இடிபாடுகள் முதல் ஒவ்வொருவரும் தங்களின் இடம் பிடிக்க அடித்துக் கொள்வது வரைக்கும் பல காட்சிகள் எங்கள் எதிரே நடந்து கொண்டுருந்தது.

ஒவ்வொருவரும் தங்களுக்கான இருப்புகளை தக்கவைத்துக் கொள்ள போராடிக் கொண்டுருப்பவர்களாக எனக்குத் தெரிந்தார்கள்.  ஆனால் எங்களின் நிலை சற்று வித்யாசமாக இருந்தது. இருப்பைத் தேடியா? இல்லை விடுதலையை நோக்கியா?  என்று புரியாமல் அவர்களை கவனித்துக் கொண்டுருந்தேன். நான் அம்மா கூட அதிகமாக வெளியே எங்குமே போனதில்லை. அம்மா வருடத்தில் ஒரு நாள் வெளியே சென்றுருப்பாரா என்பதே ஆச்சரியம் தான். காரணம் அவருக்கு அதற்கான வாய்ப்புகளும் குறைவு. ஊருக்குள் இருந்தாலும் எங்கள் வீடு ஏற்க்குறைய கச்சத்தீவு போலவேயிருந்தது. எனக்கு விபரம் தெரிந்து வெளியுலகத்தை முழுமையாக பார்த்தது அன்று தான்..

பள்ளியை விட்டால் வீடு என்று நான் வாழ்ந்துகொண்டுருந்த வாழ்க்கையில் எங்களின் எந்த உறவினர்களும் வீட்டுக்கு வர மாட்டார்கள்.  அம்மாவின் உறவினர்களைக்கூட அப்பா வரவிடமாட்டார்.  மீறி வந்தாலும் அடுத்த முறை அவர்கள் வராத அளவிற்கு என்ன செய்யவேண்டுமோ அதை தெளிவாக செய்து விடுவார். அம்மாவும் அது குறித்து அலட்டிக் கொள்வதில்லை.  நான் பள்ளியில் எவரிடமும் மனம் விட்டுப் பேசுவதில்லை. காரணம் என்னுடன் எவரும் பழகத் தயாராய் இல்லை என்பது தான் உண்மை.  என்னுடைய உடைகளும் சுவராஸ்யமற்ற பேச்சுகளுக்கும் எவரையும் கவரவில்லை.

என்னுடன் பழகிக் கொண்டுருந்த தோழிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவுலகம் இருந்தது. அதில் ராணியாக மகாராணியாக தங்களை உருவகப்படுத்திக் கொண்டு உள்ளும் புறமும் அதுவாகவே தங்களை மாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.  நிஜத்திற்கும் அவர்களின் நடவடிக்கைகளும் முற்றிலும் எதிர்மாறாய் இருந்தது. அது குறித்து எவரும் கவலைப்படவில்லை. பழகிய ஒவ்வொருவருமே தங்களின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கப் போகின்றது என்பதாகத்தான் நம்பி வாழ்ந்து கொண்டுருந்தார்கள்.

அது போன்ற எண்ணங்கள் எப்போதும் வருவதேயில்லை. அதற்கு காரணம் என் அம்மா.

"அன்றைய பொழுதின் கடமைகளை மட்டும் செய்து விடு. அதற்கான பலன்கள் வரும் நேரத்தில் வந்தே தீரும்" என்று அடிக்கடி சொல்லுவார். அதுவே எனக்கு பல விதங்களிலும் உதவியாய் இருந்தது. வகுப்பறையே கோவிலாய், நடக்கும் தேர்வுகளை திருவிழாக்கள் போல் நினைத்துக் கொண்டு வெறித்தனமாய் படித்த காரணத்தால் என்னுடைய முதல் மதிப்பெண்களுக்கு அருகே வேறு எவரும் வரமுடியவில்லை.  என்னுடைய ரேங்க் அட்டையில் அம்மா தான் கையெழுத்து போடுவார்.  அப்பா எகத்தாளமாக சிரித்துக் கொண்டே போய்விடுவார்.

ஆனால் இப்போது எனக்கு அம்மா மேல் சற்று கோபமாக இருந்தது.  கையில் பணமேதுமில்லை.  ஆனால் முகம் முழுக்க மகிழ்ச்சியாய் என்னருகே அமர்ந்திருந்தார்.  அவர் கண்கள் மட்டும் ஜன்னல் வழியே தெரிந்த ஆகாயத்தை சந்தோஷமாக பார்த்துக் கொண்டுருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  மறுபடியும் கேட்டேன்.


"அம்மா இப்ப நாம் எங்கே போகிறோம்"  சிரித்துக் கொண்டே சொன்னார்.
"எவ்வளவு தூரம் இந்த ரயில் போகுதோ அது வரைக்கும் போவோம்" என்றார்.
"டிக்கட் ஏதும் வாங்கலையே?" என்றேன் 
"எவரும் கேட்காத வரைக்கும் சந்தோஷம்.  கேட்கும் போது அப்போது பார்த்துக் கொள்ளலாம்" என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆழ்கடல் பேரமைதி போலவே வீட்டில் இருந்த அம்மாவின் வாயிலிருந்து இப்போது மெலிதாய் பழைய திரைப்பட பாடலின் ஹம்மிங் வந்து கொண்டுருந்தது.  இவர் நம் அம்மா தானே? என்று நான் அவரை கிள்ளிப் பார்த்தேன்.  சிரித்துக் கொண்டே என் பக்கம் பார்த்தார். பொறுக்க முடியாமல் மறுபடியும் அதே கேள்வியை கேட்டேன்

"என்னம்மா இன்றைக்கு இவ்வளவு சந்தோஷமாயிருக்கீங்க. எத்தனையோ முறை நானே உங்களை திட்டியிருக்கேன்.  எங்கேயாவது போயிடலாங்ற மாதிரி கூப்பிட்டுருக்கேன்.  அப்ப ஆயிரெத்தெட்டு தத்துவங்கள் சொல்லி என்னை மாற்றி விடுவீங்க.  ஆனால் இப்ப என்ன நடந்ததுன்னு கூட சொல்லாம எங்கே போறோம்ன்னு கூட எண்ணமில்லாமல் பாட்டு பாடிக்கிட்டு இருக்கீங்க?" என்றேன்.

சப்தமாக சிரித்தார்.

அருகிலிருந்த கூட்டத்திற்கு திடீரென்று என் அம்மா சிரித்த விதம் ஒரு மாதிரியாக இருந்துருக்க வேண்டும்.  அத்தனை பேர்களும் எங்களை வினோதமாக பார்த்தார்கள்.  எனக்கு சற்று கூச்சமாகவும் எரிச்சலாகவும் இருந்தது.  ஆனால் அம்மாவின் சந்தோஷத்தைப் பார்த்து எனக்குள்ளும் அந்த அலைபரவிக் கொண்டுருந்தது. நீண்ட நாளைக்குப் பிறகு நான் பார்த்த. அவரின் முக மலர்ச்சி எனக்குள் ரொம்பவே சந்தோஷத்தை உருவாக்கியது..

என் தோளில் கை போட்டுக் கொண்டு மற்றொரு கையால் என் தலையை ஆதரவாய் தடவினார். அம்மாவின் பக்கவாட்டில் தலையை சாய்த்துக் கொண்டேன். அவர் உடம்பின் உஷ்ணமும், துடித்த இதய ஒலிகளும் எனக்கு வேறொரு அனுபவத்தை தந்தது.

அழுதுவிடுவோனோ என்று பயம் வந்தது. அம்மா அடிக்கடி சொல்லும் "பெண்கள் எதற்காகவும் எப்போதும் அழக்கூடாது."  என்று வாசகம் என் மனதில் வந்து போனது. கோழிக்குஞ்சு போல அவருடன் ஒட்டிக் கொண்டேன். என் காதுக்குள் மெதுவாக கிசுகிசுத்தார்.

"நாம் கப்பல்ல பயணம் செய்துக்கிட்டுருக்கேன்னும் வச்சுக்க. நடுக்கடலில் திடீர்ன்னு கப்பல் மூழ்கப்போகுதுன்னு நம்மிடம் சொல்றாங்க.  நாம் என்ன செய்வோம்? ஐய்யோ இந்த கடல் ஆழம்ங்றதும் உள்ளே சுறா திமிங்கலங்கமெல்லாம் இருக்குறதுங்றதும் நமக்கு மறந்து போயிடும்.  எப்படியும் நாம் உயிர் பிழைத்தே ஆக வேண்டுங்ற மனநிலைக்கு வெறியோட தண்ணீர்ல குதித்து விடுவோம்."

"அப்புறம் தான் நமக்குத் தெரியாத நீச்சல் அப்ப தெரிந்த மாதிரி நமக்கு கைகொடுக்கும்.  தத்தக்காபித்தக்கான்னு கைகால அடிச்சு நீந்தி ஏதேவொரு மரக்கட்டை கிடைக்குதான்னு பார்க்க ஆரம்பிப்போம்.  சில சமயம் நமக்கு அதிர்ஷ்டம் உதவும்.  பல சமயம் நம்ம உழைப்பும் தைரியமும் நம்மை கரை சேர வைக்கும்.  நாமும் இப்ப கரையைத் தேடித்தான் போய்க்கிட்டுருக்கோம்.  உனக்கு விருப்பம்ன்னா என்னோட வா?  இல்லைன்னா நீ மறுபடியும் வீட்டுக்கே போயிடு" என்றார்.

பேசி முடிப்பதற்கு முன்பே கோபத்தில் அவரின் இடுப்பில் மெல்ல கிள்ளிவைத்தேன்.

என்ன? என்பது போல என்னைப் பார்த்தார்

பதில் பேசாமல் வேறுபக்கம் முகத்தை திருப்பிக்கொண்டுருந்த என்னை ஆதரவாய் அவர் முகத்தின் பக்கம் திருப்பி பேசினார்.

"என்ன நடந்ததுன்னு மனதைப் போட்டு குழப்பிக்காதே?  இனி என்ன நடக்கனும்ன்னு மட்டும் யோசிப்போம்.  சில விசயங்களை இப்போதைக்கு நீ தெரிஞ்சுக்காம இருக்குறது நல்லது தான் மகளே.  இதுவரைக்கும் நீ பார்த்த அசிங்கமான உலகத்தை விட இனிமேல் நீ பார்க்கப்போற உலகத்தில் அசிங்கத்தை விட அக்கிரமம் தான் அதிகமாகயிருக்கும். நீ இதுவரைக்கும் உனக்குள்ளே வளர்த்துக்கிட்டுருக்க அத்தனை கட்டுப்பாடுகளும் உன்னை விட்டு உடைத்து வெளியே வரப் பார்க்கும்."

"உன் வயசுக்கேத்த ஹர்மோன்களும் அடம் செய்துக்கிட்டே தான் இருக்கும்.  புத்திக்கும் மனதுக்கும் நடக்கிற சண்டையைத் தாண்டி வர்ற பெண்களும் ஆண்களும் ரொம்ப குறைவு.  நீ தான் அடிக்கடி வந்து சொல்லுவீயே.? பள்ளிக்கூடத்துல உன்னோட தோழிகள் செக்ஸ் புக் வைத்துக் கொண்டு படிக்கிறார்கள்ன்னு சொல்லியிருக்கீறீயே? உனக்கு மட்டும் ஏன் ஆர்வம் இல்லாம அவங்கள விட்டு ஒதுங்கிப் போனாய்?"  என்று கேட்டு விட்டு என்னைப் பார்த்தார்.

அவர் சொன்ன போது தான் அந்த சம்பவம் என் நினைவிற்கு வந்தது. பள்ளியில் என்னருகேயிருந்த தோழியின் புத்தகத்திற்குள் ஒரு பெரிய ஆங்கில புத்தகம் இருக்க ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டுருக்க இவள் எதை இத்தனை ஆர்வமாக படிக்கிறாள்? என்று எட்டிப்பார்த்த போது என் நெஞ்சு திடும்திடுமென்று அடித்தது. முழுமையான நிர்வாண பாடங்கள்,  நான் பார்த்தது கூட தெரியாம்ல் அவள் அந்த படங்களை பாடங்கள் போல பார்த்துக் கொண்டுருந்தாள்.

என்னால் அன்று முழுவதும் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. முதன் முதலாக பார்த்த பாதிப்பை கடந்து வர இரண்டு நாட்கள் ஆனது.  வீட்டுக்கு பின்புறம் இருக்கும் திறந்தவெளி குளியறையில் பக்கத்து வீட்டு பையன் திடீரென்று எட்டிப் பார்த்த போது திட்டத்தெரியாமல் மயங்கி விழுந்து கிடந்தேன்.  அப்போதும் அம்மா கோப்ப்படாமல் சிரித்துக் கொண்டே என்னை மாற்றினார்.  மறுநாள் அந்த பையன் என் எதிரே நக்கலாக சிரித்துக் கொண்டே சென்ற போது என் கண்களில் வந்த நீரைப் பார்த்து அம்மா சொன்னது வேறு விதமாக இருந்தது.

"காட்டுக்குள் சிங்கம் புலியோடு வாழ்வது தான் மானும் மற்ற மிருகங்களும்.  ஒவ்வொரு மானும் உயிர்பயத்தில் வாழ்ந்துகொண்டேயிருந்தால் எப்படி அது பிழைத்து வாழும்.  எல்லோரையும் மனிதர்களாக பார்க்காதே.  நரி, நாய், பன்றிகளை விட கேவலமான மனிதர்கள்தான் இங்கு அதிகம்.  குளியலைறையில் மேலே தென்னங்ககீற்று வைத்து மறைத்து விட்டேன்.  இப்ப இதை பெரிதாக நாம் மாற்றினால் உன் அப்பாவே நமக்கு எதிராக இருப்பார்.  புரிந்து கொள். இதைத்தான் உனக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன்.  நம்மைப் போன்றவர்கள் ஒவ்வொரு நிமிடமும் மிக கவனமாக இருக்க வேண்டுமென்று" என்றார்

அம்மா பேசுவது பலமுறை எனக்கு புரிந்ததில்லை. எல்லாவற்றையும் பூடாகமாகவே சொல்லிவிட்டு சென்று விடுவார்.  நச்சரித்துக் கேட்டால் "உன் அனுபவம் உனக்கு கற்றுக் கொடுக்கும்." என்பார். அலுத்துக் கொண்டு நகர்ந்து விடுவேன். இப்போது அம்மா என்னிடம் கேட்ட பள்ளித்தோழிகள் படித்த செக்ஸ் புத்தகத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்பது போல அவரைப் பார்த்தேன்.

"அதற்கும் இதற்கும் என்னம்மா சம்மந்தம் " என்றேன்

"ஒவ்வொன்றுக்கும் மற்ற ஏதோ ஒன்றுக்கும் இந்த உலகில் நிச்சயம் சம்மந்தமுண்டு. நீ செக்ஸ் புத்தகம் பற்றி கேட்ட போது எனக்கு பெரிதான ஆச்சரியமில்லை.  காரணம் அதை என்னிடம் வந்து பேச விரும்புகிறாய் என்கிற அளவிற்கு என்னை நம்புகிறாய் என்ற விதத்தில் தான் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்."

"நீ ஒவ்வொன்றும் என்னிடம் வந்து பேசிவிட்டு நகரும் போது உனக்காகவே நான் வாழ்ந்தாக வேண்டுமென்ற வைரக்கியம் எனக்குள் வளர்ந்து கொண்டேயிருந்தது. இப்பக்கூட மனசுக்குள் உன்னைக் குறித்த கவலைகள் தான் எனக்குள் அதிகமாகயிருக்கு.   இப்பக்கூட நான் கிளம்பி வெளியே வந்ததுக்கு நீ தான் முக்கிய காரணம். என்ன ஏதென்று இப்ப எனக்கிட்டே கேட்காதே?  என்னைப் போல குப்பைகள் சேராத மனமாக உன்னுடைய சிந்தனைகளாவது இருக்கட்டும்" என்றார்.

                                                                                                                                                                                                                                            வயிறு கிள்ளியது.  அம்மாவிடம் கேட்ட மனமில்லை.  அருகில் தின்று கொண்டுருந்தவர்களை பார்த்துக் கொண்டுருந்தேன்.   அம்மா என் முகத்தை வைத்து புரிந்து கொண்டார்.

"பசிக்குதா" என்றார்.  சிரித்துக் கொண்டே "இல்லை" என்றேன்.

"பொய் சொல்லாதே என் புள்ளையின் பசி எனக்குத் தெரியாதா?" என்றார்.

என் பசியைப் பற்றி தெரிந்த உங்களுக்கு நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஏன் பதில் சொல்ல மாட்டுறீங்க.  மனதிறகுள் நினைத்துக் கொண்டேன்.  ஆனால் வாய்விட்டு கேட்கவில்லை.

ரயில் நின்றது. பேச்ச சுவராஸ்யத்தில் வெளியே கவனிக்கவில்லை.  பக்கத்தில் இருந்தவர்கள் திருப்பூர் வந்து விட்டது. இறங்குலாமென்று அருகில் இருந்தவர்களை அவரசப்படுத்திக் கொண்டுருந்தார்கள்.  அம்மா என்ன நினைத்தாரோ தெரியவில்லை.  "கீழே இறங்கு" என்றார்.

மூன்று மொழிகள் எங்களை வரவேற்றது.

திருப்பூர் உங்களை இனிதே வரவேற்கிறது.

ரயில் கிளம்பிச் சென்று விட்ட போதும் நடைமேடையில் யாருமேயில்லை. அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் நாங்கள் இருவர் மட்டுமே அமர்ந்திருந்தோம்.  மேலே தெரிந்த கடிதகாரத்தில் நள்ளிரவு இரண்டு மணியை இரண்டு முட்களும் ஒப்பந்தம் போட்டு சப்தமாக டங் டங் என்றது..

எங்களை வெகு நேரமாககவனித்துக் கொண்டுருந்த ஒரு ரயில்வே காவல் துறை அதிகாரி எங்களை நோக்கி வந்து கொண்டுருந்தார்

Tuesday, November 30, 2010

அப்பா மாற்றிய பாதை

உலகத்தில் பிரபஞ்ச ரகஸ்யத்தை கூட கண்டு பிடித்துவிடுகிறார்கள்.  ஆனால் எத்தனை பேர்கள் தங்களின் அப்பாவைப் பற்றி முழுமையாக உண்மையாக புரிந்திருக்கிறார்கள்? 

பாதி காலம் பயம். மீதி கொஞ்சம் வெறுப்புமாய் வாழ்ந்து வெளியே வந்து விட்ட பிறகு தான் முழுமையான அவரவர் அப்பா குறித்த புரிதலின் ஆரம்பமே தொடங்குகிறது.   நான் அப்பாவாக ஆன பிறகு தான் என் அப்பாவைப் பற்றி முழுமையாக யோசிக்க ஆரம்பித்தேன். 

என் அப்பாவை விரும்பத் தொடங்கிய போது அவரும் இல்லை. அவரின் நினைவுகளை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக வாழ முயற்சித்துக் கொண்டுருக்கின்றேன். 

ஆனால் இவர் இப்போது அப்பாவைப் பற்றி மூச்சு விடாமல் பேசத் தொடங்கிய பிறகு கொட்டித் தீர்க்கட்டும் என்று அமைதியாய் கேட்டுக் கொண்டுருந்தேன். அவரின் நீண்ட உரையாடலை முடிவுக்கு கொண்டு வந்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவானது.   அமைதியாய் இருந்தேன்.

பேசத் தொடங்கினார்.

" நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது சில சமயம் என் அம்மா பள்ளிக்கு வருவார். நானும் அம்மாவும் பள்ளிக்கு வெளியிருக்கும் மரத்தடியில் வெகு நேரம் பேசிக்கொண்டுருப்போம்.  அப்போது தான் அவர் முகத்தில் புதிய மலர்ச்சி தெரியும். சிறையை விட்டு பறவைப் போல அவர் பேச்சில் உற்சாகம் வழிந்தோடும். 

அம்மா பொதுவாக வீட்டில் இருக்கும் போது அதிகமாக பேசமாட்டார்.  ஆனால் நான் எந்த விசயத்தைப் பற்றி அவருனுடன் பேசினாலும் அவரின் தெளிவான கருத்தை எடுத்து வைப்பார். அதிகமாக படிக்கவில்லையே தவிர அவராகவே உணர்ந்த விசயங்களை நகைச்சுவையாக எடுத்து வைப்பார். 

எங்கள் இருவரையும் சேர்த்து பார்க்கும் என் தோழிகள் " யாரிவர்?  உன்னோட அக்காவா?" என்று கேட்பார்கள். 

"அந்த அளவிற்கு அம்மா எப்போதுமே வசீகரமாய் இருப்பார்.  ஆடம்பர சேலைகளோ பெரிதான நகைகள் இல்லாத அவரின் முகம் எப்போதும் புன்னகையுடன் தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் காலையில் குளித்து பெரிய திலகமிட்ட பிறகே தன்னுடைய அன்றாட கடமைகளை தொடங்குவார்.  அப்பாவும் அம்மாவும் எங்கேயும் சேர்ந்து போய் நான் பார்த்ததேயில்லை. "

"அம்மாவிடம் பல முறை கேட்டுருக்கின்றேன்.  சிரித்துக் கொண்டே மழுப்பி விடுவார்.  ஆனால் குடும்ப விசயங்களைத் தவிர மற்ற எல்லா விசயங்களையும் என்னுடன் பேசிக் கொண்டேயிருப்பார். வீட்டில் என்னுடன் அதிகமாக பேசும் நேரமே தம்பியும் அப்பாவும் இல்லாத நேரமாகத்தான் இருக்கும். என்னுடைய தம்பியை ஒரு அளவிற்கு மேல் அம்மாவால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை மெதுவாக புரிந்து கொண்டேன்.  காரணம் அவன் எப்போதுமே அப்பாவுக்கு பிடித்த பையனாக இருந்த காரணமே அவனிடம் ஒவ்வொரு கெட்ட பழக்கங்களும் வீடு வரைக்கும் வர ஆரம்பித்தது.. அதுவே ஏராளமான பிரச்சனைகளும் கொண்டு வந்து சேர்த்தது.  . அப்பாவிடம் இது குறித்து கேட்ட முடியாது.  அவர் ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்.  

"அவன் ஆம்பிளை அப்படித்தான் இருப்பான்." என்று சொல்லிவிடுவார்..

"எனக்கு என் அம்மாவிடம் பிடித்த விசயமே, எது குறித்தும் புலம்புவதேயில்லை.  பல சமயம் எனக்கு சாப்பாடு கட்டிக் கொடுக்க வீட்டில் ஒன்றுமேயிருக்காது.  அவசரமாய் பக்கத்து டீக்கடையில் ஏதோ ஒன்றை வாங்கி பொட்டலத்தை என் பையில் திணித்து அனுப்பி வைத்து விடுவார். அம்மா என் மேல் வைத்திருந்த நம்பிக்கைதான் பல சமயம் என் பசியை போக்கியிருக்கிறது." 

"நானும் அம்மாவைப்போலவே இருக்க முயற்சிப்பேன்.  ஆனால் என் முகவாட்டம் அவருக்கு என் எண்ணங்களை காட்டி கொடுத்து விடும். பள்ளியில் மற்றவர்கள் அணிந்து வரும் உடைகளும், தோழிகளின் அலட்டல் பேச்சுக்களையும் வந்து சொல்லும் போது அம்மா ஒரே வார்த்தையில் சொல்லுவார்."

"உலகில் அனுபவிக்க வேண்டிய விசயங்கள் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.  நம்முடைய ஆசைகளைப் போலவே.  ஆனால் அதற்கான தகுதிகளை நீ அடைய வேண்டுமானால் நம்மைப் போன்றவர்களுக்கு கல்வி வேண்டும். நீ ஓரு அளவிற்கு மேல் வளர்ந்த பிறகு இந்த சுகமெல்லாம் தூசி என்று கருதும் நாள் வரும். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு.  உன் கவனத்தை வேறு எதிலும் மாற்றாதே" என்பார். 

எனக்கு சற்று எரிச்சலாக இருந்தாலும் புரிந்தது போல் தலையாட்டிவிட்டு மனதுக்குள் மறுகிக் கொள்வேன்.

"வீட்டில் அப்பா உருவாக்கும் ஒவ்வொரு சண்டைகளுக்கு வெவ்வேறு காரணங்கள்.  ஆனால் மொத்தமாக பார்த்தால் அவரின் ஆண்மையற்ற வீராப்பு தான் முதன்மையாக இருக்கும்.  ஓமக்குச்சி நரசிம்மன் போல உள்ள தோற்றத்தில் அவரின் குடியும் பீடிப்பழக்கமும் நிரந்தர நோயாளியைப் போலவே வைத்திருக்க அம்மாவின் வசீகரத்தை அவர் தன்னுடைய தாழ்வு மனப்பான்மையாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார்."

"எனக்கு இது மெதுவாக புரிந்தாலும் அம்மாவிடம் கேட்க முடியாது.  கேட்கும் போதெல்லாம் என் அம்மா ஒரே வார்த்தையில் என்னை அடக்கி விடுவார்.  

"ஆம்பிளைங்றவங்க முன்னபின்ன தான் இருப்பாங்க.  அது என்பாடு.  உன்னோட வேலை படிக்கிறது மட்டும் தான்.  அதில் மட்டும் கவனமாயிரு" என்று அது குறித்து தொடர்ந்து பேச விடமாட்டார்.  பல முறை என் தம்பியே என் புத்தகங்களை ஒழித்து கிழித்து வேறு பக்கம் தூக்கி எறிவது வரைக்கும் நாங்கள் இருவருமே வீட்டுக்குள் நரக வாழ்க்கை தான் வாழ்ந்தோம்.  

பலமுறை அம்மாவுடன் சண்டை போட்டுருக்கின்றேன்.  " எங்கேயாவது போய் விடுவோம்.  இந்த நரகம் போதுமென்று" அழைத்த போதிலும் அம்மா தெளிவாகச் சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. 

" இக்கரைக்கு அக்கறை பச்சை.  நீ நினைப்பது போல பெண்கள் தனியாக வாழ்வது சுலபமில்லை.  படிப்பது, வாசிப்பது, கேட்பது என்பதற்கும் நிஜத்திற்கும் உள்ள வித்யாசத்தை நீ போகப் போக புரிந்து கொள்வாய்" என்று அன்பாக மிரட்டி மாற்றி விடுவார். 

 "அப்பாவின் ஒரே பிரச்சனை அவரின் தாழ்வு மனப்பான்மை.  அவரால் கடைசி வரைக்கும் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை.  அவரின் தொடர்ச்சியான தொழில் தோல்விகளும், இழந்த சொத்துக்களும், உடல்நலம் குன்றியது என்று எல்லாநிலையிலும் அம்மா கூடவேயிருந்தார்.  ஆனால்...................."

நிறுத்திவிட்டு என்னை பார்த்து புன்னகைத்தார். 

இப்போது ரயில் இடையில் வந்து கொண்டுருந்த மற்றொரு ரயிலுக்காக இருட்டுக்குள் நின்று கொண்டுருந்ததை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கழிப்பறைக்கு செல்பவர்கள் வந்து சிலர் எங்களுடன் நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டுருநத்ர்கள். அவரின் பேச்சு தடைபட்டது. எங்கள் இருவரையும் கவனித்த சிலர் சற்று தள்ளிப் போய் நின்று கொண்டு பார்த்துக் கொண்டுருந்தார்கள்.  எதுவும் நடக்கின்றதா என்ற அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் அவர்களும் தங்களின் படுக்கைக்குச் சென்றனர். 

ரயில் நகரத் தொடங்கியது.  தொடர்ந்தார்.

"ஒரு தடவை அப்பா உடம்பு சரியில்லாம வீட்டுக்குள் இருமிக்கிட்டே படுத்துருந்தார். நான் வெளியே திண்னையில் உட்கார்ந்து படித்துக் கொண்டுருந்தேன்.  அப்பாவின் தொடர்ச்சியான இருமல் கேட்க நான் வேகமாக உள்ளே ஓட அம்மா என்னை தடுத்து படிக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.  அப்பாவின் கோப வார்த்தைகளும், அவர் இருமலை மீறி அம்மாவிடம் சண்டை போடுவது வரைக்கும் என்னால் கேட்க முடிந்தது.  சற்று நேரம் மயான அமைதி.  ஆனால் அம்மா என்னை நோக்கி வெளியே வந்த போது கையில் என்னுடைய பள்ளிக்கூட பைக்கட்டு மூட்டைகளுடன் மற்றொரு சிறிய பையில் தேவையான துணிகளும் இருந்தது..

" இனி இந்தாளுகூட வாழமுடியாது. வா நாம வேற எங்கேயாவது போய் பிழைத்துக் கொள்வோம்" என்று என் பேச்சை எதிர்பார்க்காமல் என் கையை பிடித்துக் கொண்டு ஏறக்குறைய தரதரவென்று இழுத்துக் கொண்டு நடந்தார்.  வந்து நின்ற பேரூந்தில் ஏறி ரயில்நிலையத்துக்கு வந்தோம். 

அது கோயமுத்தூர் செல்வதாக அருகே இருந்தவர்கள் சொன்னார்கள்.  டிக்கெட் கூட எடுக்காமல் அமர்ந்திருந்த அம்மாவை அப்போது தான் முதல் முறையாகப் பார்ப்பது போல பார்த்தேன். 


காரணம் அவர் முகத்தில் அப்படியொரு ரௌத்திரம் தெரிந்தது.  இதுவரைக்கும் அம்மாவின் முகத்தில் நான் கோபத்தின் சாயலைக்கூட பார்த்ததில்லை, ஆனால் இப்போது முற்றிலும் புதிய மனுஷியாக தெரிந்தார். என்ன நடந்தது என்று நான் கேட்ட போது "சமயம் வரும் போது சொல்கின்றேன்" என்று தன்னை இயல்பாக மாற்றிக் கொள்ள முயற்சித்தார். 

ரயில் ஓடத் தொடங்கியது.  எங்களின் வாழ்க்கைப் பாதையும் மாறத் தொடங்கியது.

Sunday, November 28, 2010

கதை சொல்லும் நேரமிது

நாகரிக வாழ்க்கை தோன்றியிராத ஆதிவாசிகளுக்கு உரையாடல்கள் தேவையில்லாமல் இருந்தது. அவர்களுக்கு வாழ்க்கை முழுக்க அவர்கள் எழுப்பிக் கொண்டுருந்த சப்தங்களே போதுமானதாக இருந்துருக்கக்கூடும்..  ஓஓஓஓஓ........ ஆஆஆ....... போன்ற சப்தங்களே அவர்களின் வாழ்க்கை முழுக்க பரவியிருந்தது. இந்த சப்தங்களே அவர்களின் மொத்த வாழ்க்கைக்கும் தேவையான உரையாடல்களை ஒழுங்கு படுத்தியிருந்தது. 

தாங்கள் வாழ்ந்த குகை போன்ற அமைப்பில் இருந்த பெண்களுக்கு வேட்டைக்குச் சென்ற தங்களுடைய தலைவன் திரும்பி வரும் வரைக்கும் எவருடன் பேசியிருப்பார்கள்? ஒவ்வொரு பெண்ணும் வாழ்ந்த அந்த பேரமைதி அவர்களுக்கு எதை கற்றுக் கொடுத்துருக்கும்?

உரையாடல் கலை நாகரிகத்தை விரைவுபடுத்தியிருக்கிறது என்ற உண்மையைப் போலவே அவஸ்யமற்ற உரையாடல் இரு நாடுகளை பகையாளியாகவும் மாற்றி விடுகின்றது என்பதும் உண்மை தானே? 

சாதரண மனிதர்கள் எம்மாத்திரம்? 

கடி எழுத்துக்களை சொந்தம் கொண்டாடும் மனிதர்கள் விரும்பும் நொடி நேர புகழ் வரைக்கும் தறி கெட்டு தனக்காக கூட்டத்தை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படித்தான் இந்த உரையாடல் கலை இன்றைய தினத்தில் பன்முகத் தன்மையோடு வளர்ந்து கொண்டேயிருக்கிறது. பல வித அர்த்தம் கற்பித்து தரங்கெட்டும் போகத்தொடங்கி விடுகிறார்கள்..

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உரையாடல் என்பது கலை மட்டுமல்ல.  ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய திருப்புமுனையை உருவாக்குவதாக இருக்கிறது.  அதுவும் எதிரெதிர் பாலினம் என்றால் கரம் சிரம் புறம் பார்க்க வேண்டியதாய் உள்ளது.  கண்கள் எங்கே கவனிக்கிறது என்பதில் தொடங்கி பேசும் கருத்துக்கள் எங்கங்கே தாவுகின்றது என்பது வரைக்கும் ஆண் பெண் இருவருக்கும் மறைமுக கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது.

ஏறக்குறைய அவஸ்த்தை உரையாடல்களை தாண்டி தங்களுக்கான இருப்பை இருவருமே தக்க வைத்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.

பாலியல் தொழிலாளியின் மகள் என்பதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் என் கண்களையே பார்த்துக் கொண்டுருந்தார். எனக்கு அவர் கூறிய அந்த செய்தி பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை என்பது உண்மை.  நம்ப கடினமாகயிருந்தாலும் அது தான் முற்றிலும் உண்மை.  

ஒருவரின் அந்தரங்கத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை உடைசல் இருக்கலாம்.  அத்தனையையும் கவனித்து பிறகு பழக வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் காட்டுக்குள் சென்று வாழ வேண்டியது.  ஆனால் என்னுடைய பார்வையில் வேறுவிதமாக தெரிந்தார்.  

ஒரு அமைப்பை உடைத்து வந்த புதிய மனுஷியாகவே தெரிந்தார்.  ஆனால் நான் அதைக் காட்டிக் கொள்ள வில்லை.  காரணம் அவர் என்னை இப்போது அதிகமாக கவனித்துக் கொண்டுருப்பது தெரிந்தது. 

அவர் நான் என்ன செல்லப் போகின்றேன் என்பதில் ஆர்வமாய் இருப்பது போல தெரிய நான் பேச்சை மாற்றுவதில் குறியாக இருந்தேன்.

"சரிங்க. அப்புறம்?" என்று பொதுவாக பேசிவைக்க அவர் முகம் மாறுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  பட்டென்று வெடித்தார்.

"இப்ப உங்க பார்வையில வேறுவிதமா தெரிகிறேனா? "  என்றார்.

உரையாடல் தடம் மாறிக்கொண்டுருப்பதை புரிந்து கொண்டேன். கேட்க விருப்பமில்லையென்றாலும் பிரச்சனை.  கேட்டாலும் உச் கொட்டியே ஆக வேண்டிய அவஸ்யம்.  இதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடலாமென்று பேசத் தொடங்கினேன்.

"நாம் ரெண்டு பேரும் கடந்த இரண்டு மணி நேரமா பேசியிருப்போம. அதற்குள் உங்களின் முப்பது வருட அனுபவத்தையும் நான் எப்படி புரிந்து கொண்டுருப்பேன்னு நினைக்கிறீங்க?" 

அவர் பதில் சொல்ல எத்தனிக்க அமைதி படுத்தி விட்டு தொடர்ந்தேன்.

"ஒரு நாடு அல்லது ஒரு தலைவனின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டால் நமக்கு எத்தனையோ விசயங்கள் கிடைக்கும்.  உங்களின் சோகம், துக்கம் போன்றவற்றை என்னுடன் பகிர்ந்து கொள்வதில் என்ன பெரிதான பிரயோஜனம் இருக்கப் போகின்றது.  குறைந்தபட்சம் நீங்கள் சொன்னமாதிரி ரொம்ப நாளா தேடிக்கிட்டுருந்த புரிந்துணர்வு உள்ள ஆணாக நான் தெரிவதால் ஒரே மூச்சில் எல்லாவற்றையும் கொட்டிவிட பாக்குறீங்கன்னு நினைக்கின்றேன்."  

"நீங்களே உங்களுக்கு நெருக்கமான நபர்களிடம் போய் சொல்லிப்பாருங்க. யாரும் நம்ப மாட்டாங்க.  நானே போய் ஒரு பெண் அறிமுகமான கொஞ்ச நேரத்தில் சொந்தக் கதை சோகக்கதையை பகிர்ந்துகிட்டார்ன்னு யார்க்கிட்டேயும் சொல்லமுடியுமா?  நான் சொன்னாக்கூட என் நண்பர்கள் என்ன சொல்வார்கள்.  பெண் என்பதை மனதில் வைத்துக் கொண்டு கடைசியில் என்ன நடந்தது என்று வேறு வித அர்த்தத்தில் கேட்டு அர்த்தபுஷ்டியாய் பார்ப்பார்கள்" என்றேன்.

அவரின் வேகம் மட்டுப்பட்டது போல் தெரிந்தது. 

சற்றுநேரம் வெளியே ஓடிக் கொண்டுருந்த காட்சிகளை பார்த்துக் கொண்டுருந்தார். மெல்லிய வெளிச்சத்தில் அவர் கண்களில் வடிந்து கொண்டுருந்த நீரைப் பார்த்து சற்று தர்மசங்கடமாக இருந்தது. 

காயப்படுத்தி விட்டோமோ? என்று ஆற்றாமையாக இருந்தது. மனம் முழுக்க இருந்த அவரின் ஆதங்கத்தை ஏதோவொரு வழியில் இறக்கிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். ஏராளமான அவஸ்த்தையான சிந்தனைகள் அவருக்குள் இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  அவரின் கண்ணீரைக் குறித்து கேட்டாலோ அது இன்னமும் அதிகப்படுத்துவதாக மாறிவிடும். 

அழுகை என்பது எனக்குப் பிடிக்காத விசயம்.  அதுவும் பெண்கள் கண்களில் இருந்து பொல பொலவென்று வரும் கண்ணீர் எனக்கு எப்போதும் எரிச்சலைத்தான் ஏற்படுத்தும். அவருக்கு ஆறுதல் சொல்ல விரும்பாமல் இருக்கைக்கு திரும்பி வந்து பைக்குள் வைத்திருந்த திண்பண்டங்களை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தேன்.  

"எனக்கு நொறுக்குத்தீனி பழக்கமுண்டு.  உங்களுக்குண்டா?" என்றேன்.

நான் அவரை இயல்பு நிலைக்கு மாற்று விரும்புவதை புரிந்து கொண்டு சிரித்து விட்டார். நான் நீட்டியதில் இருந்து முறுக்கை எடுத்துக் கொண்டார்.

மெதுவாக அவரை இயல்பு நிலைக்கு மாற்றி முடிந்த போது அவரின் கதை சொல்லும் நேரமும் தொடங்கியது.

"நம்முடைய முன்னோர்கள் குறித்து நமக்குள் எத்தனையோ விடை தெரியாத கேள்விகள் இருக்கும்.  ஆனால் எனக்கு முன்னால் என் குடும்பத்தில் இருந்த மூன்று தலைமுறைகளைப் பற்றி தெரிந்த போது வியப்பாகத்தான் இருந்தது. காரணம் எங்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக தவறாமல் வந்து கொண்டுருந்த குடிப்பழக்கம்.


தாத்தாவின் அப்பாவுக்கு கள்ளு என்றால் கொள்ளைப்ப்ரியம். ஆனால் தாத்தாவிற்கு சாரயமே போதுமானதாக இருந்தது.  ஆனால் என் அப்பாவுக்கு விஸ்கியை குடித்தால் தான் பொழுதே விடியும். அந்த அளவிற்கு மொடாக்குடியராக இருந்தார்." 

"எங்களின் குலத்தொழிலே இந்த துணிகளோடு தான் இருந்தது. கைத்தறி சேலைகள் முதல் பட்டுப்புடவை வரைக்கும் தாங்களே வடிவமைப்பு செய்வது வரைக்கும் தொழில் ரீதியாக நல்ல நிலையில் தான் மூன்று தலைமுறையும் இருந்தது.  ஆனால் அப்பாவிடம் தொழில் வந்த போது உருவான தொழில் போட்டிகளிலிருந்து அவருக்கு மீண்டுவரத் தெரியவில்லை. அவருக்கு மற்றொரு பிரச்சனை. என் அம்மாவின் அழகு.  எங்கள் வீட்டுக்கு எவரும் எளிதில் வந்து விட முடியாது.  அப்பா தொழில் மேல் வைத்திருந்த கவலைகளை விட அம்மா குறித்து தனக்குள் வைத்திருந்த மாய பிம்பங்கள் தான் அதிகமாகயிருந்தது.  அதுவே எதற்கெடுத்தாலும் சந்தேகம் என்ற மாய வலைக்குள் அப்பாவை சிக்க வைத்துவிட்டது. என்னுடைய பள்ளி காலங்களில் ஒவ்வொரு நாளும் அம்மாவின் காயங்களைப் பார்த்தபடியே தான் சென்று கொண்டுருந்தேன்.  அதன் தாக்கம் என்னை பலவிதங்களிலும் படுத்தி எடுத்தது.  என்னுடைய ஒரே தம்பியிடம் கூட இவற்றை என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அவனும் ஏறக்குறைய அப்பாவின் மறு உருவமாகவே இருந்தான்." 

"பெண் என்பவள் அடுக்களைக்குள் இருப்பவள் என்ற அவர்களின் ஆணாதிக்க கருத்தை என்னால் உடைக்க முடியவில்லை. ஆனால் அம்மாவின் பார்வை வேறுவிதமாக இருந்தது.  எந்த பிரச்சனைகளையையும் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்." 

"அவரின் நோக்கமெல்லாம் என்னை கல்வி ரீதியாக மிகப் பெரிய இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். பட்ட காலிலே படும் என்பது போல பத்தாவது வந்த சேர்ந்த போது என்னைச் சுற்றி வந்து கொண்டுருந்த பையன்களின் பேச்சும் செயல்பாடுகளும் அப்பாவை ரொம்பவே யோசிக்க வைக்க என் படிப்பையும் நிறுத்தி விட்டார்."

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார். 

நான் கூர்ந்து கவனிக்கிறேனோ என்பதை கவனிப்பது புரிந்தது. எந்த வியப்புக்குறியும் எனக்குள் இல்லாததைப்பார்த்து அவரின் முகத்தில் வித்யாச ரேகைகள் தெரிந்தது.  நான் கவனித்த போதிலும் வெறுமையாக போலித்தனமாக சிரித்து வைத்தேன்.  ஆறுதல் சொல்வேன் என்று நினைத்துருப்பாரா தெரியவில்லை. ஆனால் வேறுவிதமாக புரிந்து கொண்டுள்ளார் என்பதை அவரின் கேள்வி உணர்த்தியது.


"ஏன் ஆண்கள் எல்லோருமே பெண்கள் என்பவர்கள் ஒரு சின்ன வட்டத்திற்குள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்" என்றார்

நான் பதில் சொல்ல முயற்சிப்பதற்குள் "என் அப்பா குணாதிசியத்தை தெரிந்து கொண்டு அப்புறம் உங்கள் கருத்தைச் சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் அவர் அப்பாவைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

அது பாஸ்பரஸ் குண்டாக இருந்தது.

Saturday, November 27, 2010

பெண் நட்பூ

நட்பு, தோழமை, ப்ரியம், பரஸ்பர புரிந்துணர்வுகள் போன்ற பல வார்த்தைகள் சம காலத்தில் வலுவிழந்து கொண்டுருக்கிறது. ஒவ்வொருவரும் போட்டியாளர்களாக மாறி வரும் உலகில் புனிதமான உறவுகளுக்குண்டான அர்த்தங்களும் மாறிக் கொண்டே வருகின்றது..

ஒரே தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் சொத்துக்காக அடித்துக் கொள்வது முதல் பாரபட்சம் காட்டும் பெற்றோர்கள் வரைக்கும் அவரவருக்குண்டான அவஸ்ய தேவைகளை மனதில் வைத்துக் கொண்டு போலித்தனமாக முகமூடி அணிந்து கொண்டு தான் இந்த வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டுருக்கிறார்கள். 


ஒவ்வொரு சமயத்திலும் பள்ளி முதல் கல்லூரி வரையிலுமான நான் பழகி வந்த நண்பர்களை அவ்வப்போது நினைத்துப் பார்த்துக் கொள்வதுண்டு.  முதல் வகுப்பு முதல் பத்து வரைக்கும் என்னுடன் ஒரே பெஞ்சில் இருந்த கோவிந்தராஜனை விட ஒன்பதில் அறிமுகமான மாதவனுடன் அதிகம் நெருக்கமாய் பழகி ஆழமான வேருடன் கிளை பரப்பி நிற்க முடிந்துருக்கிறது.  அதுவே இருவரையும் பல நிலைகளிலும் ஒன்று சேர வைத்திருக்கிறது. இடையில் புகுந்த சிலரால் இருவரையும் பகையாளியாகவும் மாற்றி இருக்கிறது.

அற்ப காரணங்கள் இருவரையும் புரட்டிப் போட்டு தடம் மாறி வெவ்வேறு பாதையில் போய்க் கொண்டுருந்தாலும் இருவரிடத்திலும் இருக்கும் ஆழமான அன்பு மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. இருவருமே இன்று வரையிலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடித்துக் கொண்டுருந்த போதிலும் கூட.

அவனுடன் கடந்த பத்து வருடங்கள் பேச்சு வார்த்தை இல்லையென்ற போதிலும் ஊரில் இப்போது கூட மற்றவர்களிடத்தில் " ஏன்டா அவன் என்னமோ எழுதிக்கிட்டு இருக்கானாம்ல" என்று மற்றவர்களிடம் கேட்டு இந்த வலைதளத்தை படிக்க முடியா சூழ்நிலையில் வேறொரு வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டுருக்கின்றான். 

மனதிற்குள் இருக்கும் ஆசையை வெளியே காட்டிக் கொள்ளாமல் அங்கலாய்ப்பது வரைக்கும் அவனின் ஏக்கம் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டுருக்கிறது. ஆனால் அளவாய் நிதானமாய் என்னுடன் இருந்த கோவிந்த்ன் இந்த வலை எழுத்துக்களை சமீபத்தில் உள்நுழைந்து படிக்க ஆரம்பிக்க இன்று "உன்னை நினைத்து பெருமையாய் இருக்கு" என்பது வரைக்கும் புரிந்துணர்வாய் தொடர்ந்து கொண்டுருக்கிறான். 

எந்த இடத்திலும் எதிர்பார்ப்பு அதிகம் இல்லாத போது உருவாகும் அன்பு என்பது சாகும் வரைக்கும் நம்மோடு தான் இருக்கும். சாசுவதமென்பது நம் கையில் மட்டுமே.  சாகாவரம் கூட நம்முடைய வாழ்க்கை முறையில் தான் இருக்கிறது..பழமொழிகள், அறிவுரைகள் என்பதைவிட ஒவ்வொருவரின் அனுபவங்கள் கொடுக்கும் பாடத்திற்கு இணையான வேறு ஏதும் உலகில் உண்டா?

இரு நபர்களை ஒன்று சேர்க்க ஓராயிரம் காரணங்கள் இருக்கலாம்..  திரைப்படம், பாடல்கள், ஓவியம், அரட்டை, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், மற்ற கெட்ட பழக்கங்கள் என்று ஒரே பாதையில் இரு நபர்களை கொண்டு வந்து சேர்க்கும். ஆனால் இருவரும் பிரிவதற்கான காரணங்களை பட்டியலிட தேவையிருக்காது. பணமும் மனமும் தான் காரணமாகயிருக்கிறது. 

நான் ரயில் பயணத்தில் சந்தித்த பெண்ணுக்கும் எனக்கும் முன் பின் பழக்கமோ வேறெந்த வகையிலும் அறிமுகமோயில்லை.அவருடன் நான் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவானதற்கு முக்கிய காரணம் திருப்பூர். 

திருப்பூர் சார்ந்த நபர் என்றதும் அந்த எண்ணம் இயல்பாகத் தோன்றியது. நான் பேசத் தொடங்கியதும் அதுவே தொடர்பு எல்லைகளுக்கு அப்பாலும் தொடர்ச்சியாக நீட்டித்துக் கொண்டு செல்ல இந்த ஆடை உலகமே காரணமாக இருந்து.

அரட்டை என்பதில் தொடங்கி இருவருக்குள்ளும் இருந்த ஏராளமான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது வரைக்கும் முடிவில்லாத நிலையாக போய்க் கொண்டுருந்தது. அவர் என்னைப் பற்றி விசாரித்து முடித்ததும் அவரின் அறிமுகம் தொடங்கியது. அப்போது தான் அவரின் தற்போதைய நிலை குறித்து புரிந்து கொள்ள முடிந்தது 

அவரின் பெயர் நாகமணி. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஆடைகள் பிரிவின் இந்திய பிரதிநிதியாக பணியாற்றிக் கொண்டுருக்கிறார். .உலக நாடுகளை சுற்றி வருவதென்பது இவரைப் போன்றவர்களுக்கு உள்ளூர் சுற்றுவது போல. வாங்கும் சம்பளம் பெரும்பாலும் அமெரிக்கன் டாலரில் தான் இருக்கும்.  வரி பிரச்சனையில்லாத வாழ்க்கை.  வாங்கும் சம்பளத்தை வசதிக்ளுக்காக தொலைக்க வேண்டிய அவஸ்யமில்லாமல் எல்லாவிதங்களிலும் வீடு தேடி வரும் வாழ்க்கையை பெற்றவர்.

இது போன்ற பணிகளில் இருப்பவர்கள் வானத்தில் இருந்து குதித்த தேவ தூதர்கள் போலவே இங்கு நடந்து கொள்வார்கள்.

இரண்டு காரணங்கள். 

ஒன்று இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இவரைப் போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள்.  மற்றொன்று இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெளிநாட்டு கலாச்சாரத்தை ஒத்ததாகவே இருக்கும்.  நம்மவர்களுக்கு பிடிக்க சொல்லவா வேண்டும்.  வாய் கொப்பளிக்கக்கூட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேட்கும் இவர்களின் நடவடிக்கைகள் நான் ஏற்கனவே அறிந்ததே.

என்னுடைய அனுபவத்தில் வட நாட்டு இந்தியர்களைத் தான் இது போன்ற பதவிகளில் அதிகம் பார்த்துருக்கின்றேன். நம்மவர்கள் இருந்தாலும் அல்லக்கை நொல்லக்கை போலவே தான் இருப்பார்கள். ஒவ்வொருவரும் டெல்லி மும்பாயிலிருந்து பல ஆண்டுகள் திருப்பூர் வந்து போய்க் கொண்டு இருந்தாலும் அல்லது இங்கேயே அலுவலகம் வைத்திருந்தாலும் வாயிலிருந்த ஆங்கிலம் மட்டுமே கொப்பளித்துக் கொண்டுருக்கும்.

தமிழ் பேசத் தெரிந்தாலும் மறந்தும் கூட வந்து விடாது.  ஆனால் தனக்கான பிச்சைக்காசை கேட்கும் போது குழைவில் வரும் மழலைத் தமிழைக் கேட்க நம் காதுகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

ஆனர்ல் அந்த பெண்ணின் உரையாடல் அவரின் பதவி குறித்து நான் மனதில் வைத்திருந்த அத்தனைக்கும் எதிர்மாறாய் இருந்தது. 


அவர் பேசிய வார்த்தைகளில் அவஸ்யமில்லா தருணங்களைத் தவிர ஆங்கில வார்த்தைகளை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அளவிற்கு பாசாங்கு இல்லாமல் பேசிக் கொண்டுருந்தார்.

எங்களின் உரையாடல்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தது. 

உள்ளேயிருந்த மற்ற நான்கு பேர்களும் வயதானவர்களாக இருந்த காரணத்தால் அவர்களின் உறக்கம் என்னை யோசிக்க வைத்தது. ஆனால் அவர் மடை திறந்த வெள்ளம் போல உற்சாகமாக ஒருக்களித்து படுத்தபடியே என் முகம் பார்த்து பேசிக் கொண்டுருந்தார்.  ரயில் பெட்டியின் உள்ளே எறிந்து கொண்டுருந்த மெல்லிய வெளிச்சத்தில் காற்றில் அவரின் கற்றை சுருள் முடிகள் புதுக் கவிதைகளை எழுதிக் கொண்டுருந்தது. அவரின் இயல்பான தமிழும் எதார்த்தமான வார்த்தைகளும் எனக்குள் இருந்த அவர் குறித்த சந்தேகங்களை அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தது.  

பன்னாட்டு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் தந்திரங்கள், தரம் குறித்த எதிர்பார்ப்புகள், திருப்பூரில் வாழ்ந்தவர்களின் சரித்திரங்கள், வீழ்ந்தவர்களின் தரித்திர பட்டியலுமாய் இருவரின் பேச்சுகளும் தண்டவாள ரயில் போல ஓரே மாதிரியான சீரான வேகத்தில் ஓடிக் கொண்டுருந்தது. அவரின் உலக அறிவுக்கும் என்னுடைய உள்ளூர் அறிவுக்கும் பெரிதான இடைவெளிகள் தோன்றாமல் இருக்க இருவருமே மனதிற்குள் வியப்புக்குறியை குறித்துக் வைத்துக் கொண்டுருந்தோம். 

பேச்சு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. 

சொந்த வாழ்க்கை பகிர்தல் தொடங்கியது. வெவ்வேறு பாலினமாக இருந்தாலும் ஏதோவொரு நம்பிக்கை இருவருக்கும் பொதுவானதாக இருக்க அதுவே அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியாய் இருந்தது. 

குடும்பம், குழந்தைகள் என்று பேசத் தொடங்கிய போது அவரின் முகமும் மாறத் தொடங்கியது.  தொடங்கியதும் தொடர விரும்பியதும் அவராக இருந்தாலும் தொழில் குறித்து உரையாடிய போது இருந்த அவரின் வேகம் சற்று மட்டுப்படத் தொடங்கியது.  நான் உணர்ந்து ஒதுங்க நினைத்த போதிலும் பெண் குழந்தைகள் என்றதும் அவர்களைப் பற்றி மிக ஆர்வமாய் விசாரிக்கத் தொடங்கினார். இது போன்ற குறுகிய பயணங்களில் உருவாகும் நட்பென்பது வினோதமானது.  சில சமயம் வீபரீதம் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்து விடும். 

ஜெம் கிரானைட் வீரமணி அவர்கள் ஒரு விமான பயணத்தில் தன அருகே அமர்ந்திருந்த பெண்ணுடன் உரையாடத் தொடங்கியதன் விளைவே அமெரிக்காவின் பிரபல்ய கட்டிடத்திற்கு கிரானைட் கல் பதிக்கும் ஒப்பந்தம் கிடைத்ததாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.  ஆனால் என்னுடைய நண்பர் ஒருவர் வாழ்க்கையில் நடந்து மற்றொருமொரு விபரீத சம்பவம் இந்த சமயத்தில் என் நினைவில் வந்து போனது. 

என்னுடைய நண்பர் நாககோவிலிருந்து திருப்பூருக்கு வந்து கொண்டுருந்தார். பேரூந்து இருக்கையில் அவர் அருகே அமர்ந்த நபரும் திருப்பூர் என்பதால் இருவரும் மிகுந்த சந்தோஷமாகவே பரஸ்பரம் பலவற்றையும் பறிமாறிக் கொண்டு வந்து இருந்திருக்கிறார்கள். . பகவான் வேறொரு வகையில் தன் விளையாட்டை தொடங்க ஆரம்பித்தது வினை. 

என்னுடைய நண்பர் பேச்சு வாக்கில் தனக்கு பிடித்த ஸ்டார் நடிகர் பெயரை வெகு சிலாக்கியமாக பேச பேரூந்தில் அறிமுகமானவருக்கும் பயங்கர சந்தோஷம்.  காரணம் அவர் அந்த நடிகரின் வெறியர்.  கேட்கவா வேண்டும்.  சொந்தக் கதை சோகக்கதையிலிருந்து தடம் மாறி அந்த ஸ்டார் நடிகரின் கதையின் உள்ளே நுழைய இருவரும் கட்டிபிடி வைத்தியர்களாக மாறிவிட்டனர். இடையே ஒரு பேரூந்து நிறுத்தத்தில் வண்டி நின்றது.  அறிமுகமான நண்பர் கட்டாயப்படுத்தி என் நண்பரை உள்ளே இருந்த டாஸ்மார்க் கடைக்கு அழைத்துச் செல்ல இருவரும் உற்சாகத்தில் மிதக்க அவர்கள் வந்த பேரூந்து இவர்களை காணாமல் கிளம்பி விட்டது.  

அடித்த மப்பில் இருவரும் நடிகரைப் பற்றி பேசிக் கொண்டே செல்ல என் நண்பர் தெரியாத்தனமாக ஒரு வார்த்தையை விட்டு விட்டார்.  ஸ்டார் நடிகரின் பழைய வாழ்க்கையில் திருச்சி விமான நிலையத்தில் அந்த நடிகர் மன அழுத்தத்தில் இருந்த சமயத்தில் நடந்த நிகழ்வுகளை பேசத் தொடங்கி விட மப்பு உச்சத்தில் இருந்த நண்பருக்கு கோபம் தலைக்கேறி விட்டது. வாக்குவாதம் தொடங்கி, தொடர்ந்து முற்றி முடிந்த போது ஐந்து நிமிடத்தில் உடைத்த பீர் பாட்டில் என் நண்பரின் கையில் நுழைய உயிர் தப்பினால் போதும் என்று திருப்பூர் வந்து சேர்ந்தார். 

நான் கேட்டு முடித்த போது நண்பர் வருத்தப்படுவாரே என்று வெளியே வந்து சிரித்து விட்டு மீண்டும் மீண்டும் அடக்க முடியாமல் வாயில் தண்ணீர் குடிப்பது போல நடித்து புரையேற்றத்துடன் அவர் அருகில் நின்று ஆறுதல் சொன்னேன். இதை மனதில் நினைத்துக் கொண்டு அந்த பெண்ணிடம் வேறு விதமாக கேட்டேன். 

"உங்களுக்கு நிச்சயம் காலையில் நிறைய வேலைகள் இருக்கும்.  தூங்குங்களேன்" என்றேன்.

அதற்கு அவரின் பதில் வேறுவிதமாக இருந்தது.

"அது என்ன உங்கள் குடும்பத்தைப் பற்றி பேசி விட்டு என் குடும்பக் கதையைக் கேட்க விரும்பமில்லையா?" என்றார்.

ஆமாம் இல்லை என்று சொல்லத்தெரியாமல் மையமாக புன்னகைத்தேன்.
அவரே தொடர்ந்தார். 


"உங்களுக்கு விருப்பம் என்றால் வாசல்படிக்கு அருகே சென்று பேசலாமா?" என்றார்

பயமும் படபடப்புமாய் ரயில் பெட்டியின் இரண்டு வாசலுக்கும் நடுவில் எதிர் எதிரே நின்று கொண்டுருந்தோம்.  

ரயிலின் வேகம் பன்மடங்கு அதிகமாயிருந்தது. இரண்டு பக்கமும் வெளியே தெரிந்து கொண்டுருந்த வெளிச்சம் இருட்டு, ரயில் சத்தம், என்று அத்தனையும் ஒரு கணம் என் காதில் கேட்கவில்லை.  காரணம் அந்த பெண்மணி வீசிய வெடிகுண்டு.

வெடிகுண்டு வந்து என்னைத் தாக்கியது.

"என் அம்மா ஒரு பாலியல் தொழிலாளி" என்று தொடங்கினார்..