இங்கு இன்னமும் பல நிறுவனங்கள் பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்கி மன நலம் உடல் நலத்தில் அக்கறை கொண்டு தினந்தோறும் வேலை தொடங்குவதற்கு முன்பு கூட்டுப் பிரார்த்தனைகளின் மூலம் தங்களது உற்பத்தியை தொடங்குகிறார்கள்
பல்வேறு இடங்களில் இருந்து அரக்க பறக்க காலை எட்டு மணிக்குள் ஓடி வந்து சேர்பவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஆசுவாசம் அளித்துஅவர்களின் இழந்த நம்பிக்கைகளை ஒரு சேர மீட்டுத் தரக்கூடும் என்று நம்பிக்கையின் தொடக்கம்.
நூலில் இருந்து துணியாக மாறுவது என்பது வரைக்கும் அதுவொரு தனியான உலகம். அலைச்சலும், வேதனையும், பயமுமாக மாறி மாறி இறுதியில் நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு துணிவோடு நடக்க வேண்டிய சாகச பயணம். வெட்டப்பட் வேண்டிய துணியாக உள்ளே வந்து தேவைப்படும் உருவமாக மாற அதன் பயணத்தை இப்படித்தான் தொடங்குகிறது.
வருடத்தில் 365 நாட்களா? எங்களுக்குத் தெரியாதே? ஞாயிறு தான் எப்போதும் எங்களுக்கு தீபாவளி. காரணம் அன்று தான் தலைகுளிக்க ரெண்டு சொம்பு கூட ஊத்திக் கொண்டு அமைதியாய் குளிக்க முடியும். தைப்பது எந்திரங்கள் அல்ல. எங்களின் மனமும் எந்திரமாகித் தான் போய்விட்டது. உலகின் எந்தப் பகுதியில் இருப்பாரோ? உடுத்தும் போது இந்த இடத்தில் பிடிக்கிறது என்று திட்டுவாரோ?