Wednesday, January 31, 2018

விதைகள் முளைக்கும் தருணம்


உறவுகள், தனிப்பட்ட நண்பர்கள், நான் இருக்கும் தொழில் சார்ந்த தொடர்புகளில் என்பது சதவிகித பேர்களுக்கு நான் எழுதக்கூடியவன். பரவலாக என் எழுத்துக்கள் வாயிலாகச் சென்று சேர்ந்தவன் என்பது யாருக்கும் தெரியாது. எவரிடமும் சொல்வதும் இல்லை.

யோசிப்பு, வாசிப்பு இந்த இரண்டையும் வெறுக்கக்கூடிய தொழில் சூழல் ஒரு பக்கம். மற்றொருபுறம் ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? என்று புத்திசாலித்தனமாக யோசிக்கும் பெரும்பான்மையினர் மறு பக்கம். குறிப்பாக அரசியல் குறித்து எழுதும் போதெல்லாம் ஏன் எதிரிகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சுயபாதுகாப்பு அறிவுரைகள் வந்து தாக்கும்.

பொருளியல் உலகில் பணம் சேர்த்தவர்கள் மட்டுமே வெற்றியாளன். கலைகளை விரும்புபவர்கள் கலாவதியானவர்கள்.

ஆறாம் வகுப்பு முதல் இயல்பாக வாசிக்கத் தொடங்கிய மனம் இன்று வரையிலும் நின்று விடவில்லை. விட்டு விட்டு வரும் சாரல் மழை போல மனதைக் கழுவிக் கொண்டேயிருக்கின்றது. சிந்தனையில் தெளிவும், சோர்வு வரும் போதெல்லாம் மருத்துவர் போல உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றது. மன ஆரோக்கியத்தை மேம்படுத்தியுள்ளது. இன்று வரையிலும் இருபது வயது இளைஞன் போல அன்றாட நடவடிக்கையில் வேகத்தைத் தந்து கொண்டிருக்கின்றது. மருந்து, மாத்திரை இல்லாத வாழ்க்கை வாழ முடிந்துள்ளது.

பல எழுத்தாளர்களை வாசித்துக் கொண்டே வந்த எனக்கு ஒருவர் மறைமுகமாக உன்னாலும் எழுத முடியும்? என்ற கதவை திறந்து வைத்தார். அவர் எழுத்தாளர் பா. ராகவன். ( Pa Raghavan )அது வரைக்கும் வாசித்த நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் யோசிக்க வைத்தார்கள். இவர் ஆச்சரியப்படுத்தினார். இந்தத் துறைகளைப் பற்றியெல்லாம் எழுத முடியும்? என்ற நம்பிக்கையூட்டினார். ஒரு இயக்குநரின் படம் நன்றாக உள்ளது என்றால் அவருக்குப் பின்னால் முப்பது துறைகளின் உழைப்பு இருக்கும்.

ஆனால் ஒரு எழுத்தாளரின் வெற்றிக்குப் பின்னால் அவர் ஒருவரின் உழைப்பு மட்டுமே இருக்கும். நம்ப முடியாத வேகத்தையும், வேகத்திற்குள் ஆச்சரியப்படத்தக்க வார்த்தைகளின் கோர்வையும், சிக்கெடுத்து சீவிய தலையைப் போலத் தெளிவான சுகமான நான்கு வழித்தடம் நெடுஞ்சாலை பயணம் போல இவரின் எழுத்துக்கள் என்னை அதியசமாகத் தொடர்ந்து படிக்க வைத்துக் கொண்டேயிருந்தது. கற்றுக் கொண்டேயிருந்தேன். இலக்கியம் என்ற போர்வையில் லேகியம் விற்காமல் ஒன்பதாவது படிக்கும் மகள் வாசிக்கும் அளவிற்கு அவரின் எழுத்துக்கள் என் புதிய பாதையை எனக்குக் காட்டியது.

இவர் எழுதிய ஒவ்வொரு புத்தகத்தின் வாயிலாக என் நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

எழுதித்தான் பார்க்கலாம் என்று தொடங்கிய பயணம் இன்று எட்டு வருடங்கள் கடந்து விட்டது. நான் எழுதிய வலைபதிவுகளில் உள்ள கட்டுரைகளை அடங்கிய மின்னூல்கள் ஒருதளத்தின் வாயிலாக மட்டும் 2,50,000 பேர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது. என் முதல் புத்தகம் டாலர் நகரம் 1500 பிரதிகள் விற்றுள்ளது. மாதத்தில் நாலைந்து பேர்களாவது படித்து விட்டு விமர்சனத்தை மின் அஞ்சல்வாயிலாகத் தெரிவிக்கின்றார்கள்.

பயணங்களில் அலைபேசி வாயிலாகப் படிக்க வாய்ப்பு இருப்பதால் மின் நூல்கள் அதிக நபர்களால் விரும்பப்படுகின்றது என்பதனை தாமதமாகப் புரிந்து கொண்டேன். உருவான, உருவாகிக் கொண்டிருக்கும் நவீன தொழில் நுட்ப முன்னேற்றங்கள் மூலம் மாறிய வாழ்க்கை முறைகள் ஏதோவொரு விதமாகப் பலருக்கு அங்கீகாரத்தையும் சேர்த்து தந்து விடுகின்றது. உருவான தொழில் நுட்ப அலையைப் பொழுது போக்காகப் பயன்படுத்தாமல் சரியாகப் பயன்படுத்திக் கொண்டோம் என்ற திருப்தி எப்போதும் எனக்குண்டு.

ஆனால் என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து, அதன் மூலம் கவரப்பட்டு, நம்மாலும் எழுத முடியும் என்று ஒருவர் யோசித்தது கூட எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.

அவர் பணிபுரியும் சூழல் என்பது எந்திரங்களுடன் உறவாடி, கண்களுக்குச் சோர்வு அளிக்கக்கூடிய, கண்களைப் பதம் பார்க்கக்கூடிய வெல்டிங், மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒருவர் பணியாற்றிக் கொண்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டு உள்ளார் என்பது ஆச்சரியத்தின் உச்சம். இதை விட மற்றொரு நம்ப முடியாத அதிசயம் என்னவென்றால் எழுதுவதற்கு இடம், சூழ்நிலை, வசதிகள் முக்கியமல்ல. அது உள்ளார்ந்த ஈடுபாடு தான் தன் திறமைகளை வெளியே கொண்டு வரும் என்பதனை எனக்கு மறைமுகமாக உணர்த்தியுள்ளார். 

பொருளாதாரச் சிக்கலின் காரணமாக வெளிநாட்டு வாழ்க்கை. மனைவி குழந்தைகளைப் பிரிந்து வாழும் வாழ்க்கை. வாழ் நாள் முழுக்கச் சொல்ல முடியாத ஏக்கத்தையும், பகிர முடியாத தன் உணர்வுகளைத் தன் எழுத்தின் வாயிலாகக் கடத்திக் கொண்டிருக்கின்றார். கற்றுக் கொண்ட எழுத்துத் திறமையைத் தான் வைத்துள்ள அலைபேசி வாயிலாக எழுதுகின்றார்.

கட்டுரைகள் வாயிலாக, புனைவு, அபுனைவு என்பதன் அர்த்தம் தெரியாத போதும் கூடச் சரியான வார்த்தைக் கோர்வைகளுடன், சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லக் கற்றுள்ளார். நான் எழுதக் கற்றுக் கொள்ள எழுதத் தொடங்கிப் பல மாதங்கள் கழித்து வசப்பட்டது. ஆனால் இவருக்கே மிகக் குறுகிய காலத்திற்குள் வசமானதற்குக் காரணம் ஒன்றே ஒன்று. வாழும் சூழ்நிலையைக் காரணம் காட்டாமல் இருக்கும் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டது தான்.

இதுவரையில் நேரில் சந்திக்காத போதும் கூட உறவாய் உணர்வுடன் நெருங்கிய தம்பிக்கு நிறையப் பிரியங்களும் அதிகமான ஆசீர்வாதங்களும். விரைவில் எழுத்து வானம் வசப்பட வாழ்த்துகள்.

#2017 நம்பிக்கை நட்சத்திரம் ***** Jose H Jose


4 comments:

Amudhavan said...

நீங்கள் தொடர்ந்து நடைபோடுங்கள் ஜோதிஜி. ஒரு சில அரசியல் காரணங்கள் உங்களை அவ்வப்போது தடுமாற்றத்திற்குள்ளாக்கினாலும் தொடர்ச்சியாக மனம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடப்பேன் என்ற நேர்மை பிடித்திருக்கிறது. அதேபோல நீங்கள் தொடர்ந்து பா.ராகவனையும் ஜோஸையும் தூக்கிப்பிடித்து வருகிறீர்கள். இருவருமே அதற்குரிய பண்புகளோடு இருக்கிறார்கள் என்பதுதான் இங்கே முக்கியம்.

Rathnavel Natarajan said...

அருமையான அறிமுகம். நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

பா.ராகவன் படித்து வியந்திருக்கிறேன் ஐயா
அருமையான மனிதரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்
நன்றி ஐயா

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

சாதனையாளர்களை அறிமுகப்படுத்தும் விதம் அருமை.