பினாமி என்ற வார்த்தையை அரசியல் உலகில் கேட்டு இருப்பீர்கள். ஆனால் தொழில் உலகத்திலும் உண்டு. ஆனால் இந்தத் தொழில் உலகத்தில் உறவினர் வட்டங்களுக்குள் முடிந்து விடும். ஆனால் இங்கு குறிப்பிட்ட சில முதலாளிகள் மட்டும் உறவுக்கு அப்பாற்பட்டு சிலரை தன் உள்வட்டத்தில் மகளுக்குச் சமமாக வைத்திருக்கின்றார்கள். அப்படி ஒரு உயர்நிலையில் இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
இவர் பணியாற்றிய நிறுவனத்தில் நான் நுழைந்த போது, இவருடன் அடுத்தச் சில வாரங்களில் பழகிய போதும், என்னை விட உயர்நிலையில் இருந்த போதும் என் மேல் அன்பு பாராட்டினார். என் மேல் கொண்ட கூடுதல் அக்கறை வைத்து வழிகாட்டியாக இருந்தார். அன்றைய சூழ்நிலையில் அதிக முன் கோபம், வேகம் என்று இருந்தவனை மறைமுகமாக மாற்றக் காரணமாக இருந்தார். குறுகிய காலத்தில் அவர் உரையாடலின் வாயிலாக என் மேல் கொண்ட அன்பினை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. சில மாதங்களில் முழுமையாக இவரைப் பற்றிப் புரிந்து கொண்டேன். அவர் இருந்த நிலையில் கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாரிக்க வாய்ப்புகள் அவர் வாசல் தேடி வந்த போதும் சுய ஒழுக்கம் என்பதனை உயிர் மூச்சாக வைத்திருந்தார்.
நேர்மை, உண்மை, சத்தியம் என்ற வார்த்தையின் பொருள் இன்றைய காலகட்டத்தில் வலுவிழந்து விட்டது. ஆனால் இந்த மூன்றின் மூலாதாரம் இவர் தான். முதலாளி வெளிநாட்டில் வசித்தாலும், வாழ்ந்தாலும் அவர் சொத்துக்களைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்புகளைத் துளி கூடச் சஞ்சலம் இல்லாமல் என் கடன் பணி செய்து கிடப்பது மட்டுமே என்று எத்தனைப் பேர்களால் வாழ முடியும் என்பதனை நினைத்துக் கூட முடியவில்லை.
இவர் அதிகமாக எழுதுவதில்லை. குடும்ப நிகழ்வுகள், புகைப்படங்கள் போன்றவற்றை நினைத்த நேரத்தில் பதிவிடுவார்.
இப்போது கோவையில் இந்தியா முழுக்கத் தெரிந்த, முக்கியமான ஒரு நிறுவனத்தில் மிகப் பெரிய பதவியில் அமர்ந்துள்ளார். சேர்ந்த நிறுவனத்தில் மிகக் குறுகிய காலத்திற்குள் நம்பிக்கை பெற்று குறிப்பிட்ட தொகை வரைக்கும் இவரே கையொப்பம் இடும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.
தொழில் வாழ்க்கையில் நிறுவனங்கள் மாறும் போது அந்தத் தொடர்பு அப்படியே காற்றில் கரைந்து விடும். சாதகம், பாதகம் பொறுத்து தொடர்பு எல்லைக்கு உள்ளே, வெளியே என்று இருக்கும். ஆனால் இவர் இன்னமும் என் தொடர்பில் இருக்கின்றார். என் வாசகராக இருக்கின்றார். தீவிரமான திமுக அபிமானி. ஆனால் இதை வைத்து இவரை அவ்வப்போது கலாய்ப்பதுண்டு. துளிகூட அசரமாட்டார். லாகவமாகக் கையாள்வார்.
இவரை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
வாழ்வில் நாம் கடைப்பிடிக்க விரும்பும் நேர்மை என்ற சொல் வெறும் வார்த்தையல்ல. அது நாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட அவஸ்தை. அப்படித்தான் இப்பொதுள்ள சமூகம் சொல்கின்றது.
மனைவி, உறவினர்கள், நண்பர்கள், தொழில் சார்ந்த உறவுகள் எவரும் நமக்குச் சிலை வைக்க விரும்புவதில்லை. ஆனால் மன தைரியத்தைச் சிதிலமாக மாற்றி விடும் வல்லமை கொண்டவர்கள். இவரிடம் கற்றதும் பெற்றதும் ஏராளம். ஆனால் இன்று வரையிலும் நான் இருக்கும் பதவியில் ஆரோக்கியமாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஒரு காரணம்.
என் குழந்தைகளுக்கு என் பாவங்கள் சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் வாழும் என் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள் ஏராளமாக இருந்தாலும் இவர் எப்படி வாழ்கின்றார்? எப்படி வாழ்ந்தார்? ஏன் நம்மால் வாழ முடியாது என்ற எண்ணத்தில் தான் இத்தனை வருடங்கள் இங்கே உள்ள தொழில் நகரக் குப்பைக்குள் மன தைரிய மாளிகை கட்ட முடிந்ததுள்ளது.
அந்த மாளிகை விலைமதிப்பற்றது. அதன் அர்த்தம் நூறு கோடி பெறுமான தொழில் சாம்ராஜ்யத்தை என்னை நம்பி ஒப்படைக்கும் வல்லமை கொண்டது.
நன்றி ஆசான். Senthil Kumar Subramanian
5 comments:
vaalthukal aya.
போற்றுதலுக்கு உரியவர்
நலமுடன் வாழ இறையை வேண்டுகிரேன்...
இவ்வாறாக, அரிய மனிதர்களை அறிமுகப்படுத்தும் விதம் பாராட்டுதற்குரியது.நீங்கள் எழுதும் இவர்களைப் போன்றோரின் வாழ்க்கை முறையினை சற்றே யோசிப்பேன். நாமும் அவ்வாறு பாராட்டும் அளவு செய்து வருகிறோமா என்ற சிந்தனை வரும். சில நல்லனவற்றை கடைபிடிக்கிறோம் என்ற எண்ணம் மனதிற்குள் திருப்தியைத் தரும். சிலவற்றில் இன்னும் திருந்தவில்லையே என நினைக்கும்போது என்னை நினைத்து வேதனைப்படுவேன். நல்ல பாடம் தருகின்ற பதிவு.
உங்களுடன் ஒரு நாள் முழுக்க இருப்பேன். அந்த எண்ணம் விரைவில் நிறைவேறும். அதன் பிறகு உங்களைப் பற்றி என் பார்வை எழுத்தில் வரும். நிச்சயம்.
Post a Comment