Thursday, January 18, 2018

கனவுகளை அவர்கள் கண்டு அடையட்டும்,


படிப்பு முக்கியம்
நல்ல கல்வி நிலையத்தில் இடம் கிடைப்பது முக்கியம்
நல்ல மதிப்பெண்கள் முக்கியம்
நல்ல வேலையும், கை நிறைய சம்பளமும் முக்கியம்.

ஆனால் அதற்கெல்லாம் முன்னால் குழந்தைகள் சந்தோஷமாக மிக முக்கியமாக உயிரோடு இருப்பது மிக மிக முக்கியம். 

அவர்களோடு பேசுங்கள், நேரம் செலவிடுங்கள். உங்கள் கனவுகளை அவர்கள்மீது திணிக்காதீர்கள். அவர்கள் கனவுகளை அவர்கள் கண்டு அடையட்டும், அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் வாழட்டும் 

Give them your love, not your thoughts

 Ramachandran B K கடந்த மூன்றாண்டுகளாகக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு நான் செல்வதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்துள்ளேன். காரணம் பள்ளியில் உருவாகும் மாற்றங்கள், மாறிக் கொண்டே இருக்கும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தின் முறைகள் என்று எல்லாமே என் எண்ணத்திற்கு வினோதமாகவே தெரிந்தது. எப்போதும் மனித மனம் புதிய மாற்றங்களை அவ்வளவு சீக்கிரம் ஏற்காது. 

நான் மாற்றங்களின் காதலன். ஆனால் மனைவி மாறாத வாழ்க்கை வேண்டும் என்று விரும்புவர். ஆனால் அவரிடம் உள்ள நல்ல பழக்கம் என்னவென்றால் என் விருப்பங்களை வெறுப்பது போல நடித்தாலும் அதனைக் குழந்தைகள் விசயத்தில் மட்டும் செயல்படுத்த் தொடங்கி விடுவார். 

சமூகம், அரசியல் போன்ற தளங்களில் அவ்வப்போது நடக்கும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிப்பதுண்டு. அதன் பலன் யாருக்குச் செல்கின்றது? என்பதனையும் கண்காணிப்பதுண்டு. அப்படித்தான் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் கடந்த பத்தாண்டு கால வளர்ச்சியைப் பார்க்கின்றேன். அதிசியதக்க வளர்ச்சி. ஆனால் அதன் பலன்? 

நேற்று முழுவதும் தொழிற்சாலை சார்ந்த பல பிரச்சனைகள். குடிகார, மன நோய், வக்கிரம் சார்ந்த எண்ணங்களின் வெளிப்பாடுகளை உள்ளே வைத்துக் கொண்டு உள்ளே வரும் தொழிலாளர்கள் உரிமைகளைப் பற்றிப் பேசினார்கள். நான் அந்த உரிமைக்குப் பின்னால் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கிக் கொண்டிருந்த போது நினைவூட்டல் அழைப்பாக இன்று பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று மகள் அழைத்தார். 

வேண்டா வெறுப்பாக மதியம் கூடச் சாப்பிட மனம் இல்லாமல் மனைவியுடன் அங்கே சென்ற போது மருத்துவமனையில் நோயாளிகள் வரிசை போலப் பலரும் அமர்ந்திருந்தனர். மருத்துவர் போலப் பெற்றோரை மாணவ மாணவியரை வைத்து 500 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்? எல்லாப் பாடங்களிலும் 100 எடுக்க வேண்டும்? என்று ஜெப ஆராதனைக்கூட்டம் போல ஆசிரியர் நடத்திக் கொண்டிருந்தார். மற்றொரு கொடுமையையும் பார்த்தேன். மற்றொரு பள்ளி தலைமையாசிரியர் எவரெல்லாம் குறைவான மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்களோ? அவர்களை, அவர்களின் பெற்றோர்களைக் காளி கோவில் பூசாரி போல மாறி பேசிக் கொண்டிருந்தார். வெறுப்பாய், வியப்பாய் பார்த்து ஒரு பக்கம் அமர்ந்திருந்தேன். 

மகள்கள் மூன்று பேர்களிடமும் அதிகம் பேசவில்லை. காரணம் அவர்கள் மேல் சென்ற வருடம் முக்கால்சதவிகிதம் நம்பிக்கை இழந்து இருந்தேன். இந்த வருடம் பாதிக்கு பாதி நம்பிக்கை இழக்க வைத்து இருந்தார்கள். 

இரண்டு பேர்கள் படிக்கும் வகுப்பறை ஆசிரியர் அழைத்தார். அவர் எப்போதும் போல ஒருவர் வாங்கிய 90 சதவிகித மதிப்பெண்கள் குறித்து எனக்குத் தெரியும். போன தடவை சொல்லியிருந்தேன். இந்தத் தடவை சாதித்து உள்ளார் என்று பாராட்டினார். 
மற்றொருவர் 60 சதவிகிதத்திற்குக் குறைவாக இருந்தது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். ஏற்கனவே இரண்டு முறை அவரைச் சந்தித்து இருந்தாலும் நான் எதுவும் பேசாமல் கையெழுத்துப் போட்டு விட்டு வந்து விட்டேன். மற்றொருவர் படிக்கும் வகுப்பாசிரியரிடம் பேச வில்லை. ஆனால் இந்த முறை இரண்டு ஆசிரியர்களிடமும் பத்து நிமிடம் பேசிய போது இரண்டு பேருமே மிரண்டு விட்டனர். 

சுருக்கமாக. 

இவர்களுக்கென்று ஒரு கனவு உள்ளது. அந்தக் கனவு நாங்கள் உருவாக்கவில்லை. அது மூன்றாம் வகுப்பில் அவர்களே எங்களுக்குச் சொன்னது. அதற்கான ஆயத்த ஏற்பாடுகளை என் அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெற்றோர்களின் கடமையாக எங்கள் பணியைத் தொடங்கி விட்டோம். ஆனால் இவர்கள் அதற்கு உழைக்கத் தயாராக இல்லை. தன்னை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. மாறிக் கொண்டே வரும் வயது, உருவாகும் எண்ணங்கள் ஒரு புறம் காரணமாக இருந்தாலும் தன்னை எப்படி நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு நான் மனைவி எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தாலும் அதனைப் புறக்கணிக்கவே விரும்புகின்றார்கள். 

ஆண்களை விடப் பெண்கள் அழகாக இருப்பதை விடத் தெளிவாகத் தன்னை உணர்ந்து இருப்பது முக்கியம். தனக்கான அடையாளத்தைக் கண்டு கொள்வதும், அதனைத் தக்க வைத்துக் கொள்வதும் அதை விட மிக முக்கியம். ஆனால் இவர்கள் சுகவாசியாக இருக்கத் தான் விரும்புகின்றார்கள். சிறிய வயதில் பெற்றோர்கள் வன்முறை பிரயோகம் செய்தால் அது காலம் முழுக்க மனதில் தழும்பாக இருக்கும் என்பதால் அன்பால் திருத்திவிட முடியும் என்ற என் நம்பிக்கை நாளுக்கு நாள் போய்க் கொண்டேயிருக்கின்றது. இதற்குப் பின்புலமாக உள்ள முக்கியக் காரணம் இங்குள்ள ஆசிரியர்கள். அவர்கள் மதிப்பெண்கள் குறித்த அக்கறை செலுத்துகின்றார்கள். அதற்கு இவர்களைத் தயார் படுத்த வேண்டிய அவசியங்களை உணர்த்தாமல் வெறுமனே படி என்று சொல்லி விட்டு நகர்ந்து விடுகின்றார்கள். புறக்காரணிகளை அவர்கள் விளக்குவதில்லை. காரணம் அவர்களுக்கே வெளியே என்ன மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றது? என்பதே தெரியவில்லை.

எங்கள் வீட்டில் இரண்டு பேர்கள் நீங்க விரும்பிய ரேங்க் ஹோல்டர் என்ற பெருமையைப் பெற்று இருக்கின்றார்கள். ஆனால் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் இவர்களின் தனித் திறமைகள் எந்த அளவுக்குச் சிறப்பாக இருந்ததோ அவையெல்லாம் இப்போது மழுங்கி இவர்களை விழுங்கி தின்று விட்டது. கடமைக்காக வெறுப்புடன் இவர்கள் அணுகும் பாடங்களால், உணர்ந்து கொள்ள முடியாத, வளர்த்துக் கொள்ள முடியாத சிந்தனைகளால் இவர்கள் எதிர்காலத்தில் போட்டித் தேர்வில் என்ன சாதிக்க முடியும்? என்று நம்புகின்றீர்கள் என்று சொல்லிவிட்டு வீட்டில் எனக்கும் என் மகள்களுக்கும் நடக்கும் உரையாடல்கள், பகிர்ந்து கொள்ளும் அரசியல், பத்திரிக்கை, வீடியோ, டிவி, கலாய்ப்புகள் போன்றவற்றைச் சொல்லி நிறுத்தினேன். 

அவர் சற்று நேரம் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மிரண்டு போய் சார் இங்கே வந்து மூன்று வருடங்களில் இப்போது தான் ஒரு பெற்றோர் தன் குழந்தைகளுக்காக இப்படி இருக்க முடியுமா? என்று யோசிக்க வைத்து இருக்குறீங்க என்று பேசிவிட்டு நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். 

மற்றொருவரின் ஆசிரியர் அவர்கள் திறமை எனக்கு உங்களை விட எனக்குத் தெரியும். அவர்கள் பெரிய மனுசி ஆயிட்டாங்க. அப்புறமென்ன? அந்தத் தெனாவெட்டு வரத்தானே செய்யும் என்றார்? 

நானும் மனைவியும் தலைமையாசிரியரை சந்திக்கச் செல்லலாம் என்று மூன்றாவது தளத்திலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். ஒரு மகள் என்னம்மா வீட்டில் சாப்பிட செய்து வைத்துருக்கீங்க? என்றார். மனைவி என் கோபத்தைப் பார்த்து அமைதியாக வந்து கொண்டிருந்தார். தெனாவெட்டு பார்ட்டி அப்பா எனக்கு ஸ்போர்ட்ஸ் இருக்கு நீங்க போய்ப் பாருங்கள்? என்று சொல்லிவிட்டு நகரப் பாருங்கள் என்றார். 

மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் வந்து கொண்டிருந்த போது பள்ளிக்கூடத் தாளாளர் என்னைப் பார்த்துக் கூட்டத்தில் இருந்து தனியே என்னை அழைத்துப் பேசினார். என் ஆதங்கத்தைச் சில வார்த்தைகளில் அவருக்குப் புரிய வைத்தேன். அவர் உங்கள் அப்பாவை எனக்குத் தனிப்பட்ட முறையில் நிறையப் பிடிக்கும். இவரைப் போன்ற பெற்றோர்கள் ஆயிரத்தில் ஒருவருக்குக்கூட அமையாது. ஏன் இப்படி உங்கள் உண்மையான திறமை குறைந்து கொண்டே வருகிறது என்று கால் மணி நேரம் பேசினார். 
இவர்கள் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. 

இரண்டு ஆசிரியர்களிடமும் நான் சொன்னது நான் இவர்களை எந்த விசயத்திலும் கட்டாயப்படுத்த மாட்டேன். அவர்களின் கடமைகள், எதிர்காலக் கனவிற்கு உழைப்புக்குண்டான உழைப்பு பற்றிப் புரிய வைப்பேன். வழிகாட்டியாக இருப்பேன். சாதனையாளர்களாக எதிர்காலத்தில் மாறினால் நமக்குத் தேவைப்படும் அனைத்தும் நம் வீடு தேடி வரும். சாதாரண மனிதர்களாக வாழ ஆசைப்பட்டால் எல்லாப் பொருட்களையும் வாங்க வரிசையில்போய் நிற்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன். 

இந்த முறை அவர்கள் கொடுத்து இருந்த விண்ணப்பத்தில் நான் தலைமையாசிரியரை சந்திக்க வேண்டும் என்று எழுதிய போது மூவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மனதில் பயம் இல்லை. காரணம் கவலைகள் இல்லாத வாழ்க்கை. எது குறித்த அக்கறை இல்லை. காரணம் எவரை மதித்து என்ன ஆகப் போகின்றது. 

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுக்கலாம். அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம். காரணம் சுதந்திரம் என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு சீரழிவுக்குப் பின்னாலும் தனிமனித சுயநலமே மேலோங்கியுள்ளது. 

16 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இன்றைய குழந்தைகளிடம் பெரிய பெரிய கனவு இருக்கிறது, ஆனால் அதனை நோக்கிய முழு முயற்சி, உழைப்பு இல்லாமல் இருக்கிறது. கனவு மட்டுமே கண்டால் போதாது என்பதைப் புரிய வைப்பதுதான் கடினமாக உள்ளது.
நன்றி ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒவ்வொரு பெற்றோரும் படித்து, பின்பற்றப்படவேண்டிய பதிவு.

Unknown said...

அன்புள்ள ஜோதிஜி
இரண்டு பெண் குழந்தைகளின் தகப்பன் என்ற முறையில் என்னால் உங்களது எண்ணங்களை புரிந்து கொள்ள முடிகிறது. நான் இருப்பது வளைகுடா நாட்டில், என்னுடைய பெரிய பெண்ணை முதலில் ஸ்கூலில் சேர்த்து தொடர்ந்து 3 வருடமும் போராடி முடிவில் கைய தூக்கி விட்டேன். ஏட்டு படிப்பில் மனப்பாடம் செய்து படித்தால் போதாது, புரிந்து படிக்க வேண்டும். புரிய வைக்க முயற்சி செய்யுங்கள் என்றால் இளக்காரமாக பார்க்கப்பட்டேன்.
99% பெற்றோர்கள் சொல்வதை கேட்டு கொள்ளும்போது, என்னுடைய கோரிக்கை எரிச்சல் படுத்தி இருக்கலாம். மேலும் முக்கால்வாசி ப்ராஜெக்ட் அவர்கள் மட்டும் செய்ய கூடியதாக இருக்காது, நாம்தான் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில மட்டும் நான் எனது பிடிவாதத்தை தளர்த்தி கொள்ளாமல், முயற்சித்ததில் அவர்கள் செய்ய கூடிய வரையில் ப்ராஜெக்ட் கொடுக்க படுகிறது.
நீங்கள் குறிப்பிட்டது போல் மாற்றம் என்பது அவர்களை பொறுத்தமட்டில் மிகவும் கடினம். கூடுதலாக வேலையோ அல்லது முயற்சியோ செய்ய இயலாமை.
துரதிர்ஷ்டவசமாக நான்தான் எனது என்ன ஓட்டத்தினை மாற்றி கொள்ள வேண்டியுள்ளது. கூடுதலாக முயற்சிப்பது சிறப்பான முடிவினை எட்டும் என்பதனை புரிய வைக்க முயற்சித்து கொண்டே இருக்கிறேன். காலம் தன் பதில் சொல்லும்.

Amudhavan said...

நம்மைச் சுற்றிலும் எல்லாமே ஏறுக்கு மாறாக இருக்கும்போது பள்ளி மட்டுமே சரியாக இருக்கவேண்டும் அப்போதுதான் மற்ற எல்லாமும் சரியாக இருக்கும் என்று நினைப்பது சரியானதுதான். ஆனால் சரியான தலைமை என்பது மட்டுமே போதாது என்பதுதான் நிதர்சனம். என்னுடைய உறவினர் ஒருவர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியையாக இருக்கிறார். சில சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில் ஆர்வமுள்ளவராக இருக்கும் அவர் சொன்ன ஒன்று. 'இந்த மாணவிகளின் பெற்றோர்களை எப்படித் திருத்துவது என்பதே புரியவில்லை.அவர்களின் வளர்ச்சிக்கு இவர்கள்தாம் பெரிய முட்டுக்கட்டைகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு தினசரி பதில் சொல்வதிலேயே என்னுடைய காலம் ஓடிக்கொண்டிருக்கிறது'.............

ஜோதிஜி said...

பொதுவாக நான் எழுதும் இது போன்ற முக்கியமான அனுபவ பகிர்வுகள் நிச்சயம் வாசிப்பவர் யாராவது ஒருவர் வீட்டில் அப்படியே நடந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் கடந்த ஏழு ஆண்டுகளாக இப்படித்தான் யாராவது ஒருவர் வந்து விமர்சனத்தின் வாயிலாக தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து கொள்வர். இந்த முறை நீங்கள். நன்றி கார்த்தி. என்னைப் போல ஒருவர். வாசிக்கும் போது மகிழ்ந்தேன்.

ஜோதிஜி said...

நூறு சதவிகிதம் உண்மை. நான் இங்கே பார்த்துக் கொண்டிருப்பது அதே தான் .

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

என் மகள்களிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இது. மகிழ்ச்சி ஆசிரியரே.

அது ஒரு கனாக் காலம் said...

Actually, I should write to you in tamil, pardon me. You know I have only one daughter , I always treated her like a devathai , in the young age taken her to all the fine arts program, bhajans etc., ( and daily to a park ). As she was growing up , she started sinking into her own world , which is also beautiful. We decided to put her to hostel, so after a Cinderella kind of life in Dubai , she was transported to ramaskrishna mission, where you have to get up 5 a.m, serve food to others , wash your cloths , and in between you also do some studies ( she wouldn’t enter a bathroom if it is wet – that was a sea change.) But one thing, she never complained to us, cried , or made a big scene . And whenever I went to see her in the hostel, those days are memorable, one such occasion I saw mamootry’s best movie varsham ( please see it if possible ) . One year in that school, due to other reasons, we have shifted her to an international school ( where the scene is entirely different , language is fiffrent ( F is intentional ) . As u said , the marks are a big question mark ?. We both hope she picks her career path , develop interest etc., I forgot to say , despite my interest in music , for some reason , I never understood /followed / enjoyed a English song . My daughter listens only to English songs, and they seems to know the lyric as well.

ஜோதிஜி said...

நன்றி சுந்தர். நீங்க சொல்வது அனைத்தும் முற்றிலும் உண்மை. வலைபதிவில் எழுத முடியவில்லை என்று தினந்தோறும் ஏதாவது ஒன்றைப் பற்றி கூகுள் ப்ளஸ் ல் எழுதிக் கொண்டு வருகிறேன். குறிப்பாக குடும்ப நிகழ்வுகள் சார்ந்த விசயங்களை. நிச்சயம் அதனை மறுபடியும் வலைபதிவில் வலையேற்றுவேன். நீங்கள் இங்கே பேசிய விசயங்களைப் பற்றி சிலவற்றை எழுதி உள்ளேன். இதில் குறிப்பாக ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் கிடைக்கும் தனி மனித ஒழுக்கம் சார்ந்த விசயங்கள் மட்டும் போதுமானது அல்ல. அதே போல இன்டர்நேஷனல் பள்ளி பழக்கவழக்கங்கள் குறித்து நீங்க எழுதியது உண்மை. நான் இங்கே இவர்களை வளர்த்துக் கொண்டிருப்பது ராமகிருஷணா மிஷன் சொல்லித்தரும்விசயங்களை. ஆனால் இவர்கள் பள்ளி மற்றும் வெளியில் உள்ளவைகள் அனைத்தும் வேறு விதமாக உள்ளது. இந்த இடைவெளி தான் மிகுந்த தடுமாற்றத்தை உருவாக்குகின்றது. அது தான் என் கேள்வியும் பார்வையும் உள்ளது.

தனிமரம் said...

பள்ளிகள் பல கனவுகான உழைப்பை தொடர்ந்து கொடுக்க முனவருவதும் இல்லை என்பதும் பெரும் குறையே ஜீ!

Unknown said...

சிந்தனைக்கு உரிய தூண்டுகோள் உங்கள் பதிவு!

ஜோதிஜி said...

உண்மைதான்.

ஜோதிஜி said...

மிக்க நன்றி அய்யா.

Natarajan said...

ஒரு மூன்றாம் வகுப்பு மாணவன்
வகுப்பு இரண்டு வரை தமிழ் வழி கற்றவன், குக்கிராமத்தில்
பெருநகரத்துக்கு குடியேறிவிட்டான்

பெற்றோர்கள் பெரும்பாலான இந்தியர்கள் போல ஏழைகள்
“ மகனாவது மேலே வரட்டும்” என்ற எண்ணத்தில் மூன்றாவது வகுப்பில் அவனை ஆங்கில வழிக் கல்விக்கு தள்ளினார்கள்

ஏன் ? என்று கேட்டேன்
என் மகனும் ஆங்கிலம் பேசுவான், மற்றவர்கள்போல
, என்றாள் தாய்

‘பத்து பாத்திரம் கழுவி ஆங்கிலப் பள்ளிக்கு மாதா மாதம் அழுகிறாள்
கழுவுவது பத்து வீடுகளில் , நூறு பாத்திரத்துக்கு மேல்.

அந்த அழகியச் சிறுவனிடம்
‘One thousand two hundred and twenty two ‘ எண்ணாக எழுதச் சொன்னேன்
எழுதினான்
1000,222
அதிர்ச்சியாக உள்ளதா ?

மீண்டும் அவனிடம்
‘ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டு ‘ எழுது என்றேன்
எழுதினான்
1,222
முதலில் ஏன் தப்பா எழுதினாய் ?
நீங்க விவரமா சொல்லணும் , என்றான்
நமக்கு விவரம் பத்தாது

அவன் தாயை அழைத்து , அடுத்த ஆண்டு அவனை தமிழ் வழிப் பள்ளியில் சேர்க்கச் சொன்னேன். உனக்கு பணமும் மிச்சம் ஆகும்
ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்றுக் கொடுப்பார்கள் , கவலை கொள்ள வேண்டாம், என்றேன்


ஜோதிஜி said...

நன்றி நடராஜன். நீங்கள் சொன்ன முற்றிலும் உண்மை. நான் இங்கே என்னைச் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்பதும் அதுவே.