Thursday, February 01, 2018

விதைகள் விதைக்கும் மனிதர்கள்


சிலருக்கு அறிமுகம் தேவைப்படும். சிலரை அறிமுகம் செய்து வைக்கும் போது அவரின் பிரபல்ய வெளிச்சத்தில் நாமும் குளிர்காய்கின்றோமோ? என்று வாசிப்பவர்களுக்கு எண்ணத் தோன்றும். ஆனாலும் அவர் குறித்த பார்வை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். என் பார்வை என்ன? என்பதனை எப்போதும் வெளிப்படையாக அவ்வப்போது எழுதி வைத்து விடுவதுண்டு.

1990 க்குப் பிறகு தான் சுயசம்பாத்தியம் என்ற வாழ்க்கை அறிமுகமானது. அன்று முதல் காசு கொடுத்து வாரப் பத்திரிக்கைகள் வாங்கிக் கொண்டு வருகின்றேன். இரவல் மூலம் பெறுவதும், நூலகத்தில் சென்று படிப்பது என்பது பிடிக்காது. காரணம் அந்த இதழின் அத்தனை விசயங்களையும் படிப்பதோடு முக்கிய நிகழ்வுகள் என்றால் அதனைக் கத்தரித்து வைத்துக் கொள்வதும், மீண்டும் அதனைத் தகவலுக்காக எடுத்து ஒப்பு நோக்குவதும் உண்டு.

அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் அவர்களின் அறிக்கைகளைத் தொடர்ந்து சேமித்து வைத்திருந்தால் அவர்களின் சுயம் முழுமையும் நமக்குப் புரிய வரும். அவர்களின் மாறிய கூட்டணிக் கதைகளை எடுத்து வைத்திருந்தால் அவர்கள் சொல்லும் கொள்கைகளில் எத்தனை திருப்பங்கள் உருவானது என்பதனையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இவரின் வளர்ச்சியும், வளர்ந்த ஒவ்வொரு நிலையிலும் உழைத்த உழைப்பும், அரசியல் முதல் சமூகம் வரைக்கும் இவர் எழுத்துக்கள் மூலம் உருவாக்கிய தாக்கத்தை நண்பர் ஒருவர் இப்படிச் சொன்னார்.

"அறிவாலயத்தில் இவரைப் பற்றி ஒரு முறை பேச்சு வந்த போது கலைஞர் ஆட்சியைப் பிடிக்க இருக்கச் சமயத்திலும் இவர் எழுதிய கட்டுரைகளை அனைத்தும் பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கக்கூடியதாக இருந்தது " என்றார்.

சலிக்காமல் எழுதுவது, பலவிசயங்களைப் பற்றி எழுதுவது, நம்ப முடியாத அளவிற்கு உழைப்பைக் கொட்டி ஆதார தகவல்களுடன், புள்ளி விபரங்களுடன் தொடர்ந்து எழுதுவது என்பது எத்தனை பேர்களால் முடியும்? என்று யோசித்துப் பார்த்தால் வியப்பாகவே உள்ளது. அதுவும் அரசியல் கட்டுரைகள் என்றால் பத்தோடு பதினொன்றாகக் காகிதமாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. இவரின் எழுத்துக்கள் கத்தரித்து வைத்த தாள்களும், அதே கட்டுரைகள் புத்தக வடிவில் வந்ததையும் சேகரித்து வைத்துள்ளேன். எப்போது படித்தாலும் அப்போது நடந்த நிகழ்வுகளின் தாக்கங்கள் இப்போது நம் முன் நிறுத்துவதாக உள்ளது.

ஈழப் போராட்டத்தில் முதலைக் கண்ணீர் வடிக்காத அரசியல்வாதிகளே இல்லை. ஆனால் இவரின் எழுத்துக்கள் தான் அந்தப் போராட்டத்தின் பல பரிணாமங்களை எவரும் வாசிக்கக்கூடியதாக இருந்தது என்றால் மிகையல்ல. மகாத்மா முதல் மன்மோகன் வரைக்கும் உள்ள நிகழ்வுகளின் சாராம்சங்களை நிச்சயம் பாடப்புத்தகங்களில் வைத்தாலே போதும். மாணவர்களுக்கு இதுவரையிலும் சொல்லப்படாத அரசியல் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.

இதே போல ஒவ்வொரு புத்தகமும் பள்ளி, கல்லூரி மாணவர்களால் படிக்கப் பட வேண்டிய புத்தகம். பெரியோர்களே தாய்மார்களே தொடர் போல மற்றொரு எழுத முடியுமா? அதன் பேச்சுக் கோர்வையாக மாற்றிப் பலரின் காதுக்கும் கொண்டு சேர்த்த விதம் ஆச்சரியமளித்தது. எளிய வார்த்தைகள், இயல்பான நடை. உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் லாவகம் என எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின், ஆளுமைகளில் இவருக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு.

இன்னமும் உடன்பிறப்புகளால் வைகோ ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டாலும் பொறாமையும், அசூயையும் நிறைந்த ஊடக வெளிச்சத்தை முழுமையாகத் தன் மேல் பாய்ச்சி கொள்ளாமல், அடுத்தத் தலைமுறைகளை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றுவதில் இருந்தே சொல்லும் செயலும் ஒரே மாதிரியாக வாழும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியும்.

அறுபது வயதுக்கு மேலே தோன்றக்கூடிய ஞானம், எழுதக்கூடிய விசயங்கள் அனைத்தையும் பாதி வயதில் முடித்து விட்டார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழும் இவரின் வாழ்க்கையில் இனி எதிர்காலத்தில் எழுத எண்ண இருக்கும் என்று நினைத்துக் கொள்வதுண்டு.

இந்த வருடம் முழுக்க என்னைத் தன் எழுத்துக்களால், பேசிய ஒலித் தொகுப்பு பேச்சுக்களால் என்னை ஆக்கிரமித்தவர்.

ஒரு நிறுவனத்தின் பதவியை அடைந்ததும் பலருக்கும் செல்லும் பாதை குறித்த எண்ணங்கள் மாறிவிடும். ஆனால் ஒவ்வொரு வாரமும் புதிதாகப் பிறப்பது போல ஏறக்குறைய 34 வருடங்கள் தன்னை நிரூபித்துக் கொண்டேயிருப்பது என்பது வாங்கி வந்த வரமாகத் தெரிகின்றது. நாம் இவரைப் போல எழுத முடிவதில்லை என்று பலமுறை யோசிக்க வைத்தவர். சில சமயம் அவசரகதியில் வந்து விழும் கட்டுரைகளைத் தவிர்த்து நிச்சயம் 90 சதவிகித கட்டுரைகள் எந்தக் குறையும் இல்லாமல் வாசிக்க, சிந்திக்கத் தூண்டுவதாகவே உள்ளது.

முகநூல் பதிவுகளில் எதைப் பதிவேற்ற வேண்டும்? எப்படிக் கையாள வேண்டும்? என்பதனை இவர் மூலமாகவும் பலவற்றை இந்த வருடம் கற்றுக் கொண்டேன்.

எந்நாளும் நலமாய் வாழ வாழ்த்துகள்.

#2017 அடுத்து வரும் தலைமுறைகளுக்கு விதைகளை ஊன்றிக் கொண்டிருப்பவர் Thirumavelan Padikaramu🙋‍♂️




4 comments:

Rathnavel Natarajan said...

அருமையான அறிமுகம். நன்றி.

Amudhavan said...

ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் அரசியல் பற்றி எழுதுவதற்கு நிறையப்பேர் இருந்தார்கள். ஏன்? கொஞ்ச நாட்களுக்கு முன்புகூட சின்னக்குத்தூசி இருந்தார். ஆனால் தற்சமயம் வெகு சொற்பமானவர்கள் மத்தியில் ஒலிக்கும் சிறப்பான குரல் திருமாவேலனுடையது. ஒரு சில பாணி திரும்பத் திரும்ப வருகிறது என்ற ஒன்றைத் தவிர தற்காலத்திய அரசியல் நிகழ்வுகளை நடுநிலைப் பார்வையுடன் எழுதுகின்ற ஒரே பேனா இவருடையதுதான்.

அப்பாவு இரவிச்சந்திரன் said...

முற்றிலும் உண்மை. அவரின் "பெரியோர்களே, தாய்மார்களே" என்ற ஒலிவடிவ பேச்சைக்கேட்டு அசந்துவிட்டேன். ஆழ்ந்த நுண்ணறிவு, எளிய நடை, மேற்கோள்கள், எந்தவித சார்போ, பாகுபாடோ, பயமோ இன்றி உண்மையை உரத்துக்கூறும் நேர்மையாளர். வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

மிக்க நன்றி.