Saturday, February 03, 2018

நட்பை வளர்க்கும் நண்பன்நான் யாருக்கெல்லாம் விசுவாசமாக இருக்க முடியும்? என்று பட்டியலிட்டால் குடும்பம் முதல் இடத்தில் வந்து நிற்கும். அதன் பிறகு சூழ்நிலை பொறுத்து மாறும். அதில் முக்கியமாகச் சுயநலமே இடம் பிடிக்கும். தொழில் நகரம் என்பது புலி மான் வாழும் வேட்டைக்காடு. வேட்டையாடுதல் என்பது வளர்ச்சியின் அறிகுறி. பாவம், பரிதாபம், கருணை என்பது போன்ற வார்த்தைகள் தடை செய்யப்பட்டதாகவே எல்லா இடங்களிலும் இருக்கும்.

ஆனாலும் முடிந்தவரைக்கும் நேர்மை என்பதற்கு மதிப்பு இருப்பதில்லை. 90 பேர்களின் சிந்தனை ஒரு மாதிரியாகவும் 10 பேர்களின் சிந்தனை நல்லொழுக்கம் சார்ந்ததாகவும் இருந்தால் அது கிண்டலுக்கும் கேலிக்கும் உரியதாகவே இருக்கும். இது தான் தற்போதைய சமூகத்தின் நிலை. ஆனால் ஒத்த சிந்தனைகள் கொண்ட நட்புகள் அறிமுகம் ஆவதும் அது தொடர்ந்து இருப்பதும் நாம் செய்த புண்ணியம் என்றே நினைத்துக் கொள்வதுண்டு. அப்படிப்பட்டவர் இவர்.

ஆனால் இவர் ஒரு அக்மார்க் கொள்கைவாதி. ஈழம் சார்ந்த விருப்பங்கள் எங்கள் இருவரையும் ஒன்றிணைத்தது. தொடர்ந்து இயங்க வைத்தது. உரையாட வைத்துச் சந்திக்க வைத்தது. நம்பிக்கை பரஸ்பரம் வளர்த்தெடுத்தது. அவருக்காக நான் செய்தது இதுவரையிலும் எதுவுமே இல்லை. ஆனால் அவர் எனக்காகச் செய்தது என்பது பட்டியலிட முடியாத அளவுக்கு நீளம்.

இந்த வருடத்தின் தொடக்கத்தின் என் நீண்ட நாள் கனவான பன்னாட்டு நிறுவன வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. புறக்கணித்துத் திரும்ப வந்த போது முதல் முறையாக என் மேல் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தார். சரி, பிறகு ஆறுதல் படுத்திக் கொண்டுவிடலாம் என்று காத்திருந்தேன். மீண்டும் ஆசுவாசம் அடைந்து அடைகாக்கும் முட்டை போல என்னைப் பாதுகாத்தார்.

இருவரும் உணர்ச்சிப் பூர்வமான சிந்தனைகளில் இருந்து இந்த வருடம் தான் வெளியே வந்துள்ளோம். ஒவ்வொரு அரசியல் நிகழ்வுக்குப் பின்னாலும் உள்ள கள எதார்த்தம், எவரெல்லாம் திட்டமிடுகின்றார்கள்? எப்படிச் செயல்படுத்துகின்றார்கள்? எங்கே தொடங்குகின்றார்கள்? எப்படி வெகுஜன பார்வைக்குக் கொண்டு வருகின்றார்கள்? தருணத்தை எப்படி உருவாக்குகின்றார்கள்? எதற்காகக் காத்திருக்கின்றார்கள்? அடையக்கூடிய லாபங்கள்? வாங்கும் சக்தி உள்ள மக்கள் கூட்டத்தின் இழப்புகள் என்ன? போன்றவற்றை உரையாடும் அளவுக்கு இப்போது தான் இந்த வருடம் தான் எங்கள் இருவரின் எண்ணங்கள் மாறியுள்ளது.

உதவி என்பதனை செய்து விட்டு மறந்து விடும் இயல்பு உள்ளதால் இவர் நண்பர்கள் கூட்டத்தின் மூலம் இவர் கற்றதும் பெற்றதும் ஏராளம். நன்றாக எழுதுவார். ஆனால் உலக மகா சோம்பேறி. காரணங்களை அடுக்குவார். நான் கடந்து சென்றுவிடுவதுண்டு.

ஞாயிறு கூட வேலையிருக்கும் திருப்பூர் வாழ்க்கையில் வீட்டுக்கு வந்ததும், இன்று எழுதியே ஆக வேண்டும் என்ற சூழலில், எழுதும் கடமையில் மூழ்கி விடும் எனக்கும், அப்புறம் பார்த்துக்கலாம் ஜி என்று உரையாடும் இவருக்கும் அவ்வப்போது ஏட்டியும் போட்டியும் உருவானாலும் கூடப் பாம்பன் பாலம் (தொடக்கத்தில்) கட்ட உதவிய அந்தச் சிமெண்ட் போல ஏதொவொரு பந்தம் போட்டு கட்டியிருப்பதால் எட்டு ஆண்டுகளாக என்னை அவரும் கடல் தாண்டி வாழும் அவரை நானும் பரஸ்பரம் மாயக் கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

2017 வாழ்த்துகள் சொல்ல மாட்டேன். இறுக்கி அணைத்து ஒரு உம்மா. சரியா. இராஜ ராஜன்
2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரிய நண்பர்

ஆதி said...

வாழ்த்துகள் இருவருக்கும்