Saturday, December 21, 2013

ஊரெல்லாம் மினுமினுப்பு 2013 .

கடந்த சில மாதங்களில் பல முறை ஊர்ப்பக்கம் சென்று வந்த போது இந்த வருட மாறுதல்களை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அதில் சிலவற்றை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன். 
மிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து என்பது முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது. பேரூந்து நிலையத்திலிருந்து வண்டி கிளம்பும் வரைக்கும் ஓட்டுநரும், நடத்துநரும் கூவிக்கூவி அலைத்தாலும் மக்கள் கட்டணம் அதிகமென்றாலும் தனியார் பேரூந்துகளில் பயணம் செய்வதைத் தான் விரும்புகின்றார்கள்.  

திருப்பூர் முதல் திருச்சி வரைக்கும் செல்லும் வண்டிகளில் பாதித் தூரம் கடந்த பின்பு தனியார் பேரூந்துகள் நிறுத்தாத இடங்களில் நிற்கும் மக்கள் மூலம் அரசு வண்டிகளில் மக்கள் கூட்டம் சேர்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு போக்குவரத்துத் துறை அமைச்சர்களும் தற்போது தொழில் அதிபர்களாக மாறியுள்ளனர். 

ற்போது பயன்பாட்டில் உள்ள பொதுப் போக்குவரத்துத் துறை பேரூந்துகளை காயலான் கடையில் விற்றால் கூட ஐம்பதாயிரம் கூடத் தரமாட்டார்கள். பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் டயர் பழுதுபட்டு நின்று விடுகின்றது. வாகனங்களில் இருக்க வேண்டிய ஸ்டெப்னி, புது டயர்கள் இது போன்ற வசதிகள் எதுவும் இல்லை. பயணித்தவர்களை அடுத்து வரும் வண்டிகளில் ஏற்றி அனுப்பி விடுகின்றார்கள். மழை பெய்யும் போது பேரூந்தின் உள் பகுதி முழுக்க ஓழுக ஒட்டுநர் பகுதி மட்டும் கொஞ்சம் நனையாமல் இருக்கின்றது. 

திருச்சி முதல் காரைக்குடி வரை செல்லும் சாலைகள் அனைத்தும் புதுப்பெண் போல மினுமினுப்பாய் அழகாய் இருக்கின்றது. தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் மூலம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. மக்கள் பயணிக்கும் பொதுப் போக்குவரத்துதுறை வாகனங்கள் மட்டும் மணிக்கு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றது. நாம் பார்க்கும் மற்ற வாகனங்கள் குறைந்தபட்சம் மணிக்கு என்பது கிலோமீட்டர்க்குக் குறைவில்லாமல் வேகத்தில் நம்மைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. 

ரு நகர்புறத்தில் தொடகும் உள்ளடங்கிய கிராமங்கள் பலவற்றுக்கும் சாலை வசதிகள் சிறப்பாகப் போடப்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் பயணித்தாலும் சுங்கவரி கட்டணம் இல்லாமல் பயணிக்க முடியாது. கையில் காசிருந்தால் மட்டுமே இனி தனி நபர்கள் வைத்திருக்கும் வாகனங்களில் பயணிப்பது சாத்தியமாக இருக்கும். 
ரங்களே தேவையில்லாத தமிழ்நாடாக மாறியுள்ளது.தேசிய நெடுஞ்சாலை வசதிகளின் உபயத்தால் பயன்படாமல் கிடந்த நிலங்களின் விலைகளும் தாறுமாறாக ஏறியுள்ளது. விற்பவர்களைவிட இடைத்தரகர்கள் கடந்த சில வருடங்களில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். 

ர்நாடகாவில் மழை பெய்து உபரி நீராக அவர்களுக்குத் தேவையற்றதாக மாறும் போது மட்டும் திருச்சி பகுதிகளில் பல இடங்களில் தண்ணீரைப் பார்க்க முடிகின்றது. குளித்தலை பகுதிகளில் வாங்கும் வாழைப்பழத்தின் அளவு மிக மிகச் சிறியதாக மாறியுள்ளது. 

யணித்த பாதையில் சாலையின் இருபுறத்திலும் பல இடங்களில் கட்டப்பட்டுள்ள தனியார் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கைகள் அதிகமாக இருந்தாலும் கடந்த சில வருடங்களில் கூட்டம் சேராத காரணத்தால் பணிபுரியும் ஆசிரியர்களை "ஆள்பிடிக்கும்" வேலைக்குப் பள்ளி நிர்வாகத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். 
"நூறு நாள் வேலைத்திட்டம்" சமூகத்தில் வேறொரு புதிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது.கிராமத்தில் வசதியுள்ளவர்களை தடுமாற வைத்துள்ளது. அதிக நிலம் வைத்திருப்பவர்களுக்கு ஆள் கிடைக்காமல் தடுமாறுகின்றார்கள். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்தத் திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. கையில் காசு புழங்கியதும் அவர்களின் சிந்தனைகளும் மாறியுள்ளது. தங்களுக்கான உரிமைகள் முதல் உணர்வுகள் வரைக்குமுண்டான அத்தனை விசயங்களிலும் கவனம் செலுத்தி பேசத் தொடங்கியுள்ளனர். ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றார்கள். 

ற்பொழுது உணவு, உடை இரண்டுக்கும் எவரும் கஷ்டப்படவில்லை. உறைவிடம் என்பதற்கு மட்டுமே "தங்களுக்கென்று ஒரு வீடு" என்ற கனவில் பலரும் இருக்கின்றார்கள். பஞ்சம் என்ற வார்த்தையின் தன்மை அறியாத புதிய தலைமுறைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். வெகு விரைவில் தண்ணீர்ப் பஞ்சம் மட்டுமே பல புதிய திருப்பங்களை இங்கே உருவாக்கக்கூடும். 

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்ற பழமொழி பழங்கதையாகி விட்டது. தனித்த சிந்தனைகளில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்துகின்றார். தொழில் நுட்ப வசதிகளும், அலைபேசி, தொலைக்காட்சி வசதிகள் மிகப் பெரிய தாக்கத்தை மக்களிடம் உருவாக்கியுள்ளது. 
றவுகளில் சிதைவு என்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. மன அழுத்தமும், கவலைகளும் அதிகமானாலும் நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு அங்கத்தினராகவே ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்."தாங்கள் விரும்பியதை அடைய வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற எண்ணம் மெதுமெதுவாக ஒவ்வொருவரின் மனதிலும் உருவாகிக் கொண்டிருக்கின்றது. 

ணம் தவிர்த்து வேறு எதையும் பேசுவது யோசிப்பது தவறென்ற எண்ணம் நடுத்தரவர்க்கத்தின் தகுதியான குணமாக மாறியுள்ளது. விளம்பரங்கள் தான் ஒவ்வொரு சந்தையையும் தீர்மானிக்கின்றது. வாங்கும் பொருட்கள் தரமில்லையென்றாலும் அடுத்த விளம்பரத்தின் மூலம் வேறொரு பொருளின் மூலம் உருவாகும் நாட்டம் நட்டத்தை உருவாக்கினாலும் எவரும் அதனை யோசித்துப் பார்ப்பதில்லை. அதற்கான நேரமும் இல்லை. 
சிறிய நகர்ப்புற பகுதிகள், கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களால் "எம்.ஜி.ஆர் மேலிருக்கும் பாசத்தைத் தங்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை" என்கிறார்கள். இரட்டை இலை சின்னம் என்பது அவர்களின் ஆழ்மனதில் நீக்கமுடியாத இடத்தில் உள்ளது. ஆனால் "ஜெயலலிதா தகுதியானவர் இல்லை" என்பதில் மட்டும் தெளிவாக இருந்தாலும் சின்னத்தின் தாக்கத்தால் அவர்களால் மாற்றுக்கட்சி குறித்து யோசிக்க முடியவில்லை. 
டித்தட்டு,கிராமப்புற மக்களிடம் இன்று வரையிலும் கலைஞரால் எந்த நல்ல அபிப்ராயத்தையும் உருவாக்க முடியவில்லை. 
ள்ளடங்கிய கிராமங்களில் இன்னமும் அரசியலை வெட்டி அரட்டைக்காக விவாதிக்கின்றார்கள். இன்றைய உண்மையான நிலவரங்கள் எவருக்கும் தெரியவில்லை. தொலைக்காட்சி என்றால் சினிமாவுக்கு மட்டும் தான். 
ற்று விபரம் தெரிந்தவர்களும் அரசியல் குறித்துத் தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அபிப்ராயங்கள் வைத்துள்ளார்களே தவிர அரசின் ஊழல் குறித்தோ, அதிகப்படியான விபரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லை. 
விலைவாசி உயர்வை கவலைப்பட்டு ஒவ்வொருவரும் பேசுகின்றார்கள். அதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணங்கள் குறித்துக் கேட்டால் சொல்லத் தெரியவில்லை. 
மேலே என்றால் காங்கிரஸ் தான் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால்  பீ சிதம்பரத்தைப் பற்றிப் பேசினால் கெட்ட வார்த்தைகளில் திட்டுகின்றார்கள். 
ரேந்திர மோடி குறித்து முழுமையாக கிராமம் அளவுக்கு வந்து சேரவில்லை. அரசியல்வாதிகளை எவரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால் நமக்கேன் வம்பு? என்று ஒதுங்கிப் போய்விடவே விரும்புகின்றார்கள். 

விதி என்பதை ஆழமாய் நம்புகின்றார்கள். அது தான் இன்றைய வாழ்க்கை என்பதை உணர்ந்து வைத்துள்ளார்கள். ஒவ்வொருவரின் மனதில் இறைபக்தி மாற்ற முடியாத இடத்தில் உள்ளது. அதை விட தான் சார்ந்துள்ள சாதிப்பற்று அதிகமாகவே உள்ளது. 
தாங்கள் எதிரே பார்க்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் எவர் மனதில் எந்த மாறுதல்களையும் உருவாக்குவதில்லை. "தன் விதி தன்னை இப்படி வாழ வைக்கின்றது" என்ற கொள்கையே பணக்காரர்கள் மேலும் தவறான வழிகளில் செல்வம் சேர்க்கத் தூண்டுகின்றது. ஏழைகளை மேலும் மேலும் ஏழையாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றது. 
புதுக்கோட்டை ராஜவீதியில் காலையில் ஐந்து மணிக்கு ஒரு பெரிய டீக்கடையில் டீ குடித்து விட்டு அடுத்த ஒரு மணிநேரமும் அங்கு வருபவர்களை (ஏறக்குறைய 100 பேர்கள்) கவனித்தேன். அந்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்த தினந்தந்தியை பார்க்கின்றார்கள். கவனிக்கவும் படிக்கின்றார்கள் அல்ல. குறிப்பிட்ட சிலர் படிக்கும் முக்கியமான விசயமாகத் துணுக்குச் செய்திகளும், சினிமா விளம்பரங்கள் மட்டுமே உள்ளது. அதையும் முழுமையாகப் படிப்பதில்லை. அப்படியே மடித்துக் கூட வைக்காமல் குப்பை போல அருகே போட்டு விட்டு சென்று கொண்டேயிருக்கின்றார்கள். இன்று வரையிலும் தெளிவான உண்மையான வாசிப்பு அனுபவம் இல்லாத தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனைகள் வெறும் கானல் நீரே.
ன் பார்வையில் சிவகங்ககை, புதுக்கோட்டை என்ற இரண்டு மாவட்டங்களில் நான் பள்ளிக்கூடத்தில் படித்த போது மக்கள் எப்படி இருந்தார்களோ இன்றும் சிந்தனையளவில் இருக்கின்றார்கள். கட்டிடங்கள், ஆட்கள், வண்டிகள், வாகனங்கள் என்று பல வகையில் ஒவ்வொரு பகுதியும் மாற்றம் அடைந்துள்ளது. மக்களின் ஆசைகளும் விருப்பங்களும் மாறியுள்ளது. மக்களின் வாழ்க்கை தரம் என்ற பெயரில் அவரவர் கட்டியுள்ள வீடுகளும், தாங்கள் வைத்துள்ள பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு அளவுகோலாகக் கொண்டு தங்களை வெற்றி பெற்ற மனிதராக முன்னிறுத்துகின்றார்கள். 
பொதுச் சுகாதாரம் என்ற வார்த்தையும், பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளும் தமிழ்நாட்டு மக்கள் கற்றுக் கொள்ள இன்னும் கால் நூற்றாண்டு காலம் ஆகலாம். வருகின்ற தலைமுறைகள் மூலம் இந்த மாற்றத்தின் தொடக்கம் இருக்கும் என்றே நம்புகின்றேன். 
"வாழ்வில் உயர மதிப்பெண்கள் மட்டுமே மிக முக்கியம்" என்ற கொள்கையினால் பாடப்புத்தகத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதையோ, மற்றப் புத்தகங்கள் மூலம் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற எண்ணமோ எவர் மனதிலும் இல்லை. அப்படியே ஆசைப்படும் மாணவர்களை ஊக்குவிக்க எவரும் தயாராக இல்லை. எதிர்காலப் பயமே இங்கே ஒவ்வொருவரையும் படாய் படுத்திக் கொண்டிருக்கின்றது. 
வ்வொரு தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இதைப் போலப் பல மடங்கு அரசு மருத்துவமனைகளில் கூட்டம் உள்ளது. ஆனாலும் பலரும் சுகாதரமற்ற சூழ்நிலையில் வாழ்ந்தாலும் ஆரோக்கியமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தன்னைப் பற்றி உணராமலும், தன்னைச் சுற்றிலும் உள்ள சமூகத்தைப் பற்றி உணர வாய்ப்பில்லாமல் இருப்பதால் எந்தக் கவலைகளும் பெரிதாக அவர்களைத் தாக்குவதில்லை. கவலைகள் இல்லாத மனம் இயல்பான ஆரோக்கியத்தை அவர்களுக்கு வழங்குவதால் இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். 
மாறிக் கொண்டே வரும் தொழில்நுட்பங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. ஆனால் அது சினிமா என்ற வடிவமாகத்தான் எடுத்துக் கொள்கின்றார்கள். சிந்திக்கவே பயப்படும் சமூகத்திலிருந்து நாம் உடனடி மாறுதல்களை எதிர்பார்ப்பது தவறு. 
வ்வொரு குடும்பத்தில் உள்ள அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொலைக்காட்சியில் வருகின்ற நெடுந்தொடர்கள் உண்மையான சேவையை புரிந்து கொண்டிருக்கின்றது.  அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.  பேரன், பேத்திகளுடன் சண்டை போட்டுக் கொண்டே தாங்கள் விரும்பும் சேனல்களை மகன், மருமகள் உதவியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மிழகத்தில் மற்ற மாநிலங்களைப் போல சிந்தனை ரீதியான மாற்றம் நிச்சயம் வரும். தங்களால் இனி இங்கு வாழவே முடியாது என்கிற சூழ்நிலை வரும் போது மட்டுமே. அப்போது முதலில் பாதிக்கப்படப் போகும் சமூகம் நடுத்தரவர்க்கமே.

உங்கள் கவனத்திற்கு
வரும் வாரத்தில் நான் வலைபதிவில் எழுதிய ஈழம் சார்ந்த கட்டுரைகள் மின் நூலாக வெளிவரப்போகின்றது.  ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்.

இது குறித்து விபரங்கள் வரும் பதிவில் வெளியிடுகின்றேன்.

உங்களுக்கும் அது போன்ற எண்ணம் இருந்தால் இந்த இரண்டு தளங்களையும் பார்வையிடுங்கள். வரப் போகும் 2014 ஆம் ஆண்டு உங்களின் படைப்புகள் மின் நூலாக மாற்றம் பெற்ற ஆண்டாக இருக்கட்டுமே?


41 comments:

 1. உங்கள் பார்வையில் தான் எத்தனை எத்தனை சிந்தனைகள்...! (எங்களுக்கு தகவல்கள்...) நன்றி... பாராட்டுக்கள்...

  மின் நூல் சிறப்பாக அமைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. //பொதுப் போக்குவரத்துதுறை வாகனங்கள் மட்டும் மணிக்கு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றது.//

  இல்லையே ... அரசின் ‘டப்பா’ பேருந்துகளும் போட்டி போட்டுக் கொண்டு - மதுரை-திண்டுக்கல் பாதையில் - போவதைப் பார்க்கிறேனே ...!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. இங்கு கேள்வி கேட்டது தப்பு; உங்க பதிவில் வந்து கேட்பது தான் முறை!

   Delete
  3. இல்லையே ... அரசின் ‘டப்பா’ பேருந்துகளும் போட்டி போட்டுக் கொண்டு - மதுரை-திண்டுக்கல் பாதையில் - போவதைப் பார்க்கிறேனே ...!

   அப்ப ஆட்டம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்குமே?

   Delete
 3. [["ஜெயலலிதா தகுதியானவர் இல்லை" என்பதில் மட்டும் தெளிவாக இருந்தாலும் சின்னத்தின் தாக்கத்தால் அவர்களால் மாற்றுக்கட்சி குறித்து யோசிக்க முடியவில்லை.]]

  எம்ஜீயார் ஆரம்பித்த வோட்டுக்கு சத்தியம் என்று முறையில் ஒரு வேளை குடம் கொடுத்த பொது சின்னத்தின் மீது சத்தியம் வாங்கியிருப்பார்!
  __________________
  பின்குறிப்பு:
  சூத்திரனுக்கு படிப்பை கொடுக்காதே--சொன்னது மனு நீதி--நானல்ல!

  ReplyDelete
  Replies
  1. சென்ற பதிவில் ஒரு கேள்வியை கேட்டு இருந்தேன். அதற்கு பதிலை எதிர்பார்க்கின்றேன்.

   Delete
 4. பார்வைகள் + சிந்தனைகள் = ஜோதிஜி .அருமை

  ReplyDelete
 5. தமிழ்நாட்டு மக்கள் கற்றுக் கொள்ள இன்னும் கால் நூற்றாண்டு காலம் ஆகலாம். சான்சே இல்லை. சென்னை சாலையில் நடந்து போகும் போது இயற்கை உபாதைக்கு ஆட்படாமல் இருப்பது என்பது தெய்வ சித்தம்.

  ReplyDelete
  Replies
  1. சிரித்துவிட்டேன். உண்மையும் கூட.

   Delete
 6. அண்ணா...
  ஊருக்குப் போனபோது உங்கள் பார்வை தின்றதை சிறப்பான எழுத்தாக்கியிருக்கிறீர்கள்...

  இந்த முறை அந்த பீ சிதம்பரத்துக்கு பட்டுப் பாதாம்பரம் விரிக்க நம்ம மாவட்டத்து மக்கள் விரும்பவில்லை... இந்த முறை அந்த மாடு அங்கு விலைபோகாது... ஒருவேளை சென்ற முறை தோல்வியை வெற்றியாக்க கொடுத்த விலையைக் கொடுத்தால் மட்டுமே மக்கள் ஏமாறலாம்...

  மின்னூலாக மாற்ற இருப்பதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. குமார் தமிழ்நாட்டின் தேர்தல் கலாச்சாரம் என்பது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் குமார். தேர்தலுக்கு முந்தைய மூன்று நாட்களில் இங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ராஜீவ் காந்தி படுகொலையை நினைத்துப் பாருங்கள். ஒருவரின் இறப்பு ஒருவருக்கு வாழ்க்கையை கொடுத்துள்ளது.

   Delete
 7. //"வாழ்வில் உயர மதிப்பெண்கள் மட்டுமே மிக முக்கியம்" என்ற கொள்கையினால் பாடப்புத்தகத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதையோ, மற்றப் புத்தகங்கள் மூலம் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற எண்ணமோ எவர் மனதிலும் இல்லை. அப்படியே ஆசைப்படும் மாணவர்களை ஊக்குவிக்க எவரும் தயாராக இல்லை. எதிர்காலப் பயமே இங்கே ஒவ்வொருவரையும் படாய் படுத்திக் கொண்டிருக்கின்றது.// - இன்று பெண்கள் மலரில் தோழி எழுதிய கவிதை படித்தேன் அது நினைவிற்கு வந்தது...

  யாருக்கு?

  இரண்டாவது பாட வேளையில்
  தலைவலி எனச் சொல்லி
  அமர்ந்திருந்த நேரத்தில்,
  'என்னாச்சு? தண்ணி வேணுமா மிஸ்?"
  நீர் போத்தலை எடுத்து வந்தான்
  எப்போதும் பெயிலாகும் முத்து.
  " கொஞ்சம் தைலம் தடவுறீங்களா?"
  கணித உபகரண பெட்டியிலிருந்த
  குட்டி டப்பாவை எடுத்து வந்தான் சபரி.
  கேண்டீனில் காபி வாங்க வரட்டுமா?"
  பரபரத்த கால்களுக்கு அனுமதி
  கோரிய கேள்வியுடன் அருண்.
  என் மெல்லியப் புன்னகை
  அவர்களின் ஆவலுக்கு
  இரை போட்டிருக்க கூடும்.
  கற்றலில் பின் தங்கிய அந்த
  மாணவர்களின் தோழியாயிருந்தேன்,
  சில நிமிடங்களுக்கு.
  முதல் மதிப்பெண் எடுக்கும் பாலாஜி
  இப்போழுதும் ஆழ்ந்திருந்தான் தன்
  புத்தகத்தினூடே..
  கற்பித்தலை தாண்டி இப்போது
  கவனம் செலுத்த வேண்டியது
  இவர்களுக்கா, அவனுக்கா?
  -------------

  மதிப்பெண் எடுக்கும் எந்திரமாய் செய்து கொண்டிருப்பதில் தொலைந்து போக கூடும் மனிதம்..!

  ReplyDelete
 8. மின் நூலுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. திருச்சி முதல் காரைக்குடி வரையான பாதை சிறப்பாக இருப்பதற்கான காரணமும் என்ன?
  அது போக அந்த பீ-யை அவ்வளவு போல்ட்-ஆ போடவேண்டிய அவசியமும் என்ன? ரொம்பவே நாறுது!

  ReplyDelete
  Replies
  1. வேறென்ன காரணம்? எங்க ஊருப்பக்கம் இருக்குறவுங்க எல்லாருமே ரொம்ப ரொம்ப நல்லவங்க. யாரும் பயணத்தில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் அஜீஸ்.

   இந்த நாற்றம் இந்த தேர்தலோடு போயிட்டா நல்லதுங்கோ.

   Delete
 10. உங்கள் பதிவை தமிழ்நாடு – 2013 ஒரு மீள்பார்வை எனலாம்.
  போக்குவரத்து, அரசு பேருந்துகள், சாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், அரசியல், சுகாதாரம் என்று ஒரு சர்வே செய்து இருக்கிறீர்கள்.


  // தனியார் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கைகள் அதிகமாக இருந்தாலும் கடந்த சில வருடங்களில் கூட்டம் சேராத காரணத்தால் பணிபுரியும் ஆசிரியர்களை "ஆள்பிடிக்கும்" வேலைக்குப் பள்ளி நிர்வாகத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். //

  இன்னும் கொஞ்ச நாட்களில் தனியார் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரிகளை அவர்களே மூடிவிட்டு வேறு தொழில் பார்க்க சென்று விடுவார்கள். தனியார் பள்ளிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மட்டும் இருக்கும்.

  // "நூறு நாள் வேலைத்திட்டம்" சமூகத்தில் வேறொரு புதிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது.கிராமத்தில் வசதியுள்ளவர்களை தடுமாற வைத்துள்ளது. அதிக நிலம் வைத்திருப்பவர்களுக்கு ஆள் கிடைக்காமல் தடுமாறுகின்றார்கள். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்தத் திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. கையில் காசு புழங்கியதும் அவர்களின் சிந்தனைகளும் மாறியுள்ளது. தங்களுக்கான உரிமைகள் முதல் உணர்வுகள் வரைக்குமுண்டான அத்தனை விசயங்களிலும் கவனம் செலுத்தி பேசத் தொடங்கியுள்ளனர். ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றார்கள். //

  நிலவுடமையாளர்கள் "நூறு நாள் வேலைத்திட்டம்" மீது பழியைப் போட்டு த்ப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். உண்மையில் அவர்கள் அந்த தொழிலாளர்களை மதிப்பதில்லை, கூலி சரியாக கொடுப்பதில்லை, அடிமைத்தனத்தை எதிர்பார்க்கிறார்கள். இப்போதுள்ள தலைமுறை இவற்றை விரும்புவதில்லை. இந்த "நூறு நாள் வேலைத்திட்டம்" வருவதற்கு முன்பே பலரும் வேலை தேடி திருப்பூர் போன்ற ஊர்களுக்கு சென்று விட்டார்கள்.


  அரசியலைப் பற்றி சரியாகச் சொன்னீர்கள். கிராம மக்கள் மட்டுமன்றி நகர மக்களும் திமுக கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் செய்த அட்டூழியங்களை இன்னும் மறக்கவில்லை.
  ஆனாலும் கிராமத்து மக்களுக்கு தெரிந்தது எல்லாம் உதயசூரியன், இரட்டை இலை, கை – சின்னங்கள்தான். அதுமட்டுமல்ல இங்குள்ள சில அரசியல் கட்சிகள் குதிப்பதைப் போல, இலங்கைத் தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து யாரும் ஓட்டு போடுவதில்லை. அடுத்தமுறை கிராமத்து பக்கம் செல்லும்போது கிராமத்து ஆள் ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள். நானும் அடிக்கடி கிராமத்துப் பக்கம் போகிறவன்தான்.


  // பொதுச் சுகாதாரம் என்ற வார்த்தையும், பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளும் தமிழ்நாட்டு மக்கள் கற்றுக் கொள்ள இன்னும் கால் நூற்றாண்டு காலம் ஆகலாம். வருகின்ற தலைமுறைகள் மூலம் இந்த மாற்றத்தின் தொடக்கம் இருக்கும் என்றே நம்புகின்றேன். //

  பொதுசுகாதாரம் இப்படி இருப்பதற்கு காரணம், பொதுக் கழிப்பிடங்கள் இருக்கும் அசுத்தமான நிலைமைதான். ஒவ்வொரு ஊரிலும் எப்போதும் சுத்தமான கழிப்பிடங்களை அதிகம் கட்டி, மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்தால் மட்டுமே மாற்றம் நிகழும்.

  மின்நூல் குறித்த தகவல் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. தங்கள் நூலை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.  ReplyDelete
  Replies
  1. நன்றி.

   என் பார்வை திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை இந்த நான்கு மாவட்டத்தின் அடிப்படையில் மட்டுமே. குறிப்பாக புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மக்களின் மனோபாவத்தை பதிவு செய்துள்ளேன்.

   விரிவான விளக்கமான விமர்சனத்திற்கு நன்றிங்க.

   Delete
 11. பேரூந்தில் தொங்கியவாறு செல்லும் மாணவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம், மனம் சுமையாகிறது ஐயா. இந்நிலை என்று மாறுமோ.
  மின்நூல் குறித்த தகவல் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. தங்கள் நூலை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க. நகர்ப்புறங்களில் பெரும்பாலான பேரூந்துகளில் மாணவர்களின் பயணம் இப்படித்தான் உள்ளது.

   Delete
 12. பணம் தவிர்த்து வேறு எதையும் பேசுவது யோசிப்பது தவறென்ற எண்ணம் நடுத்தரவர்க்கத்தின் தகுதியான குணமாக மாறியுள்ளது. விளம்பரங்கள் தான் ஒவ்வொரு சந்தையையும் தீர்மானிக்கின்றது. வாங்கும் பொருட்கள் தரமில்லையென்றாலும் அடுத்த விளம்பரத்தின் மூலம் வேறொரு பொருளின் மூலம் உருவாகும் நாட்டம் நட்டத்தை உருவாக்கினாலும் எவரும் அதனை யோசித்துப் பார்ப்பதில்லை. அதற்கான நேரமும் இல்லை. உங்கள் பார்வையில் தான் எத்தனை எத்தனை சிந்தனைகள்...! Great G.....

  ReplyDelete
 13. பலவிஷயங்களை பற்றிய உங்கள் பார்வைகளை பகிர்ந்துள்ளீர்கள். உங்கள் ஆதங்கம், கவலை எல்லாம் புரிகிறது. இருந்தும் என்ன செய்வது என்று தெரியவில்லை. பேருந்தில் தொங்கும் மாணவர்கள் மனதில் பெரும் கவலையை ஏற்படுத்துகிறார்கள்.
  தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள் போலவே தனியார் பேருந்துகளும்.
  விளம்பரங்கள் மக்களை மாயையில் தள்ளுகிறது. சொந்த வீடு என்ற பலவீனத்தை வைத்து காசு பார்க்கிறார்கள் (ஒரு அம்மணி விளம்பரத்தில் பத்தே பர்சென்ட் என்கிறார்!)
  இதைபோல சின்னக் குழந்தைகளை வைத்து விளம்பரங்கள்!
  யாருக்கும் எதற்கும் நேரமில்லை என்பதுடன் திருப்தி இல்லாத வாழ்க்கை.
  சினிமாதான் எல்லாமே.

  ReplyDelete
  Replies
  1. ஆகா குழந்தைகள் மூலம் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் விளம்பரங்களைப் பற்றியும், குறிப்பாக குழந்தைகள் வைத்து நடத்தப்படும் பல தரப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் எழுத முடியும். ஆனால் இந்த வருட பதிவுகளை எழுதி முடித்தாகி விட்டது. இடைவெளி விட்டு எழுதும் போது பார்க்கலாம்.

   திருப்தி இல்லாத வாழ்க்கை என்றாலும் எவரும் திரும்பிப்பார்க்க விரும்புவதில்லையே? முடிந்தால் இதன் உளவியல் காரணங்களை கொஞ்சம் நீங்க எழுதலாமே?

   உங்கள் அனுபவமும் அதிகம். எழுதவும் முடியும்.

   Delete
  2. இன்றுதான் உங்களின் இந்த பதில் பார்த்தேன். எனக்கும் ஒரு assignment கொடுத்திருக்கிறீர்கள்! உங்களைப் போல தைரியமாக எழுத முடியுமா, தெரியவில்லை. நிச்சயம் முயற்சிக்கிறேன்.

   Delete
 14. Very acute observations. Opened my eyes to today's Tamil Nadu. Always a wonder, our State and Culture. I would also like one more observation if you dont mind - thanks to Facebook and Internet, atleast for myself, I find that I have so much to read especially current affairs and so many different thoughts. I confine myself only to Tamil Nadu and even with this I find I find myself in a race to catch up. This is truly a great age to live - this technology driven information age. ... and I live on the other side of the world..Canada. :) Thank You.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்வது சரிதான். தொழில்நுட்ப காலம் தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் பலதரப்பட்ட தொழில் நுட்பத்தில் எதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்? எது நமக்குத் தேவை? அதை எப்படி நாம் பயன்படுத்துவது என்பதை உணர்ந்து தனக்கு தன் வாழ்க்கைக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே.

   அலைகள் போல அடித்து போய்க் கொண்டிருக்க தப்பிப் பிழைத்தவர்கள் வாழ தகுதியானவர்களாக மாறுவர்.

   Delete
 15. மின்னூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் ஜி!

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் கூட்டத்தில் சேரப்போறீங்க. நினைவில் இருக்கட்டும்.

   Delete
 16. நாட்டு நிலைமையை படம் பிடித்து பாடம் நடத்தீடு்டீ்ஙக.

  ReplyDelete
 17. " இன்னும் சில வருடங்களில் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் பயணித்தாலும் சுங்கவரி கட்டணம் இல்லாமல் பயணிக்க முடியாது."

  ஆமாங்க.. இது ரொம்ப நியாயமாக இருக்கிறது. இதை காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் செம கொள்ளை அடித்துக் கொண்டுள்ளார்கள்.

  விரிவாக தொகுத்து உள்ளீர்கள் ஜோதிஜி. ரொம்ப நன்றாக இருந்தது.

  தமிழக அரசியல் பற்றி பேசினாலே சலிப்பாக உள்ளது. எந்த முன்னேற்றமும் தமிழ் நாட்டில் இல்லை. ஜெ என்ன தான் பன்னுறாங்க என்றே தெரியலை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கிரி. அலுப்பு, அச்சம் இந்த இரண்டும் எந்த காலத்திலும் கூடவே கூடாது என்பது என் கருத்து. அப்படி உருவானால் முழுமையாக ஒதுங்கி விட வேண்டும். நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இது. தமிழ்நாட்டில் எத்தனை பேர்களுக்கு கிடைக்கும்? முடிந்தவரைக்கும் முயற்சிப்போம். விமர்சனங்கள் வந்தாலும் ஏற்றுக் கொண்டு நகர்வோம்.

   Delete
 18. போன இடங்களை, பார்த்த இடங்களை....சொந்தப் பார்வையிலிருந்து சமூகப் பார்வை வரை - நோட்டமிட்டபடியும், சிலவற்றின் மீது உங்கள் கருத்துக்களும், வேறு சிலவற்றின் மீது எந்தவிதக் கருத்துக்களும் இன்றி வெறும் புகைப்படத்தைப் போன்ற பார்வையையும் செலுத்திய இந்தப் பதிவு வெறும் துணுக்குகள் போலத் தோன்றினாலும் பல இடங்களில் படிக்கிறவர்களைத் துணுக்குற வைக்கும் காரியத்தையும் செய்திருக்கின்றன.

  சொல்கிற எல்லாவற்றின் மீதும் நம்முடைய கருத்தை ஏற்றித்தான் சொல்லவேண்டும் என்பதில்லை. சிலவற்றை நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே சொல்லிச் சென்றுவிட வேண்டும். அதனைப் படிக்கிறவனின் பார்வையில் அதுபற்றிய தோற்றமோ கருத்தோ ஏற்பட வேண்டும், அப்படி ஏற்படுத்துவதே ஒரு நல்ல எழுத்தாளனின் அடையாளம் என்பது என்னுடைய கருத்து. இதற்கேற்ப பல இடங்கள் இங்கே அமைந்துள்ளன.

  அரசியல் பற்றியும் எம்ஜிஆர் பற்றியும் இரட்டை இலை பற்றியும் ஜெயலலிதா பற்றியும் நீங்கள் சொல்லியிருக்கும் செய்திகள் முக்காலும் உண்மை.
  இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பொதுஅறிவிலும் சரி, செய்திகள் சென்று சேரும் தொழில்நுட்ப விஷயங்களிலும் சரி, படிப்பறிவிலும், பத்திரிகைப் படிக்கும் (அல்லது 'பார்க்கும்' என்றே வைத்துக்கொள்ளுங்களேன்)பழக்கத்திலும் சரி, வெளியாகும் பத்திரிகைகளின் எண்ணிக்கைகளிலும் சரி, கர்நாடகத்தை விட மிகமிக அதிகமாக முன்னேறியுள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆனால் கர்நாடகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் தங்களைச் சுற்றி நடக்கும் அரசியல் சம்பவங்களை வைத்து அவற்றைக் கணித்துத்தான் தேர்தலில் ஓட்டுப் போடுகிறார்கள். இத்தனை விஷயங்களில் 'முன்னேறியிருக்கும்' மாநிலமாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் மட்டும் சில முரட்டுப்பிடிவாதங்களை வைத்துக்கொண்டு தங்களுக்குத் தாங்களே பட்டை நாமம் போட்டுக்கொள்ளும் காரியத்தைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.
  2013 - பற்றிய உங்களின் சிந்தனைத் தொகுப்பைச் சிறப்பாக வழங்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. தூங்கப் போகும் சமயத்தில் வாசித்த இந்த மறுமொழி என்னை தூங்க விடாமல் செய்யும் போல. காரணம் இந்த வரிகள்.

  தமிழ்நாட்டில் மட்டும் சில முரட்டுப்பிடிவாதங்களை வைத்துக்கொண்டு தங்களுக்குத் தாங்களே பட்டை நாமம் போட்டுக்கொள்ளும் காரியத்தைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

  இதை எழுதி வைத்துள்ள மற்றொரு பதிவில் புத்தக விற்பனை குறித்து அதன் சந்தை குறித்து எழுதிய போது வேறு விதமாக எழுதி வைத்துள்ளேன். ஆச்சரியம்.

  படிக்கிறவனின் பார்வையில் அதுபற்றிய தோற்றமோ கருத்தோ ஏற்பட வேண்டும், அப்படி ஏற்படுத்துவதே ஒரு நல்ல எழுத்தாளனின் அடையாளம் என்பது என்னுடைய கருத்து.

  மிக்க நன்றி. காரணம் என் மனதில் இருந்த வார்த்தைகள் எழுத்தில் கடைபிடிக்கும் கொள்கையும் கூட. பலருக்கும் இது குறித்து என் மேல் எரிச்சல் இருந்தாலும் இன்னமும் தடம் மாறாமல் இதன் வழியே தான் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

  இந்த வருடம் உங்களைப் போன்றவர்களிடமிருந்து அதிகப்படியான அங்கீகாரம் எனக்கு கிடைத்து விட்டதோ என்ற பயமும் மனதில் உள்ளது.


  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.