Saturday, December 14, 2013

அடக்கினாலும் அழித்தாலும் நம்பர் 1.


இந்த வருடம் நடந்த முக்கிய நிகழ்வுகளை அதில் சிலவற்றை மட்டும் இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் பதிவு செய்து விடுகின்றேன். 

நான் சென்ற பயணத்தில், கலந்து கொண்ட விழாக்களில், தனிப்பட்ட உறவு சார்ந்த நிகழ்ச்சிகளில், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது நான் தவறாமல் பார்த்த ஒரு முக்கிய நிகழ்வு அலைபேசி சேவைகளின் பயன்பாடு. 

ஒவ்வொருவரும் தாங்கள் வைத்திருக்கும் அலைபேசியைத் தேவை இருக்கின்றதோ இல்லையோ? அதனை நோண்டிக் கொண்டே இருப்பது என்பது ஒரு பழக்கமாகவே மாறியுள்ளது. மற்றொரு ஆச்சரியம் இந்தப் பழக்கம் இயல்பான பழக்கம் போலவே மாறியுள்ளது. 

காரணம் தாங்கள் வைத்திருக்கும் அலைபேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆகா இது நல்லது தானே? நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் தானே? என்று உங்களுக்கு எண்ணம் வரக்கூடும்.  ஆனால் நான் பார்த்த வரைக்கும் 90 சதவிகிதம் பொழுது போக்கிற்காக மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகின்றார்கள். 

இந்த முதல் தலைமுறையின் இணைய செயல்பாடுகள் அடுத்து வரும் தலைமுறைக்கு மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புவோம். அப்போது தான் நான் படித்த பத்திரிக்கை செய்திகள் இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருந்தது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி 

2013 - 14 ஆம் ஆண்டுக் காலாண்டு (ஏப்ரல் முதல் ஜுன் வரை) ஒட்டுமொத்தமாக இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 17.65 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 89 சதவிகிதம் அதிகம்.  தனியார் வழங்கும் அலைபேசி சேவை வழியாக இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இது 

பாரதி ஏர்டெல் 26.16 சதவிகிதம் 
வோடபோன் 23.34 சதவிகிதம் 
ஐடியா செல்லுலார் 18.94 சதவிகிதம் 
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் 16.25 சதவிகிதம். 

போட்டியில் உள்ள மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்களிப்பும் ஒற்றை இலக்க எண்ணில் தான் உள்ளது. 

இதில் குறிப்பிடத்தக்க ஆச்சரியம் என்னவென்றால் கேபிள் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவோர் இன்று வரையிலும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் சேவையைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இதன் 60.13 சதவிகிதத்தை மற்ற எந்தத் தனியார் நிறுவனமும் தொட, தொடர முடியவில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் 11.86 சதவிகிதத்தோடு இரண்டாம் இடத்தில் உள்ளது. ஏனைய மற்ற நிறுவனங்கள் இந்தச் சேவையில் ஒற்றை இலக்க எண்ணில் மட்டுமே உள்ளது. 

கடந்த ஏழு ஆண்டுகளாக வீட்டில் பி.எஸ்.என்.எல் சேவையைத் தான் பயன்படுத்திக் கொண்டு வருகின்றேன். தொடக்கத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக அற்புதமான சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த கால கட்டத்தில் தனியார் சேவையை நான் பயன்படுத்தியிருந்தால் என் பாதிச் சொத்தை எழுதி வைத்திருக்க வேண்டியிருக்கும். 

இன்று வரையிலும் அலைபேசி சேவையின் மூலம் இணையத்தை அணுகியதில்லை. அதற்கான தேவையும் வந்ததும் இல்லை. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை நம்மை ஆண்டுக் கொண்டிருக்கும் "பொருளாதார மேதைகள்" நிரம்பிய அரசு எப்படி நசுக்கியது? என்பதை இந்தக் காணொளி காட்சியைப் பார்த்து புரிந்து கொள்ளுங்களேன்.

ரௌத்திரம் பழகு காணொளி காட்சியின் மொத்த தொகுப்பு இது. சொடுக்க உங்களைச் சுற்றியுள்ள உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையை,அவர்கள் படும் பாடுகளை உணர்த்தும்.


22 comments:

 1. வணக்கம்
  பதிவை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-.

  ReplyDelete
 2. இணைப்பு சிக்கல்கள் இருந்தாலும் பி.எஸ்.என்.எல் மாற்ற மனம் வரவில்லை.எனது கைபேசியிலும் பி.எஸ்.என்.எல். சேவையே உள்ளது. காணொளி மூலம் சில உண்மைகளை அறிய முடிந்தது. நல்ல பதிவு

  ReplyDelete
  Replies
  1. எனக்குத் தெரிந்து பத்தாண்டுகளாக ஏர்செல் எண் வைத்திருப்பவர்கள் எவரும் அந்த எண் மாற்றிப் பார்த்ததில்லை. அதே போல பிஎஸ்என்எல்.

   Delete
 3. வந்ததிலேயே சிறிய பகிர்வு... ஆனால்...

  காணொளி...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ஆனால்................ கோடிட்ட இடங்களை நிரப்புக.

   Delete
 4. bsnl யை மூழ்கடித்து தனியாரை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் கைங்கர்யம் இன்றும் தொடர்கிறது .சமீபத்தில், இலவச அழைப்புகளை குறைத்தது ,பில்லில் 2௦ சத கழிவை 1௦ சதமாக குறைத்தது போன்ற கஸ்டமர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டேதான் உள்ளது !

  ReplyDelete
  Replies
  1. தொழிற்சங்க போராட்டங்கள் கூட தற்போது வலுவிழந்து போய் விட்டது.

   Delete
 5. பி.எஸ்.என்.எல் தான் பயன்படுத்துகிறோம்... சில சமயம் இணைப்பு சிக்கல் இருந்தாலும் மாற்றவில்லை. நீங்கள் சொன்னது போல் தனியார் சேவைகளை பயன் படுத்தினால் பாதி சொத்தை எழுதி வைக்க வேண்டியதுதான்....

  ReplyDelete
  Replies
  1. தொலைபேசித் துறையில் உங்கள் வட்டத்தில் உள்ள ஏஈ அல்லது ஜேஈ என்று எவரையாவது அறிமுகப்படுத்தி வைத்துக் கொள்ளுங்க. நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே போல பல பிரச்சனை. இப்போது குறிப்பிட்டசிலரின் எண்களை வாங்கி வைத்து இருப்பதால் விரைவாக காரியம் நடக்கத் தொடங்கி விடுகின்றது.

   Delete
 6. இன்னும் ஒரு வேதனையான விசயம் சில மணி நேரம் போகும் பிரயானங்களில் கூட பஸ் ,ரயில் சினேகம் இப்போதெல்லாம் அறவே இல்லை முடியாத பெரியவர்கள் மட்டுமே பேசுவார்கள் இல்லாவிட்டால் எல்லோரும் ” நோண்டிங் பிசினஸ்தான் “

  ReplyDelete
  Replies
  1. ” நோண்டிங் பிசினஸ்தான் “

   பலமுறை சிரிக்க வைத்த வார்த்தைகள்.

   Delete
 7. எல்லோரும் head set/hands free மாட்டிக்கொண்டு லூஸு மாதிரி ரோட்டில் தானாகவே பேசிக்கொண்டு போவதை பார்க்கும் போது, சிரிப்பா இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. இதைத்தான் (இவர்களைப் பார்த்து) சிரித்து வாழ வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்களோ?

   Delete
 8. காலையில் நடைப்பயிற்சிக்கு வரும்போது கூட சுற்றி வர இருக்கும் இயற்கையை ரசிக்காமல் அலைபேசியில் பேசியபடி வரும் மனிதர்களை என்ன செய்ய?
  BSNL - உடன் எங்களுக்கு மோசமான அனுபவம். அதனால் தனியார் சேவையைத்தான் பயன்படுத்துகிறோம்.
  சாம் பிட்ரடோ கூறியது அதிர்ச்சியைத்தான் அளிக்கிறது. மக்களின் பணம் எப்படியெல்லாம் வீணாகிறது!

  ReplyDelete
  Replies
  1. பிஎஸ்என்எல் அலைபேசி சேவையில் 599 ரூபாய் என்றொரு பிரிவு உள்ளது. என்னைப் போன்ற மணிக்கணக்கான பேசுபவர்களுக்கு வரப்பிரசாதம். என்ன தான் முக்கி முக்கி மாதம் முழுக்க பேசினாலும் இவர்கள் சொல்லும் வரி, மாத வாடகை இத்யாதி போன்றவற்றை கழித்துப் பார்த்தால் நமக்கு கழிவு போக 200 ரூபாய் தான வருகின்றது. அதாவது 750 ரூபாய் மாதக்கட்டணம் வரும். ஆனால் இதையே தனியார் சேவையில் பயன்படுத்தும் போது குறைந்த பட்சம் 1500 ரூபாய் வரும்.

   பல இடங்களில் பிஎஸ்என்எல் டவர் கிடைப்பதில்லை என்றொரு புகார் உண்டு. அதற்கு காரணம் தனியார் இவர்கள் மேல் ஏறி குதிரையாட்டம் நடத்திக் கொண்டிருப்பது. அதற்கு அனுமதிப்பது.

   இணையத்திற்கு 900 ரூபாய் பிரிவு என்று ஒன்று உண்டு. 5 ஜிபி இலவசம். அதன் பிறகு சற்று வேகம் குறைவு. வீட்டில் நான்கு பேர்கள் பயன்படுத்தினாலும் வேகம் குறைந்தபாடில்லை.

   பலரும் குறைசொல்கின்றார்கள். 500 வீடுகள் இணைப்பு வைத்து இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் அத்தனை பேர்களுக்கும் இப்போதுள்ளபடி ஒருவர் தான் ஒன்றன்பின் ஒன்றாக ஏதாவது பிரச்சனை எனில் வந்து பார்க்க வேண்டும். வேறு எவரையும் நியமிக்க அனுமதி இல்லை. அப்புறம் எப்படி சேவை வழங்க முடியும்.

   என் கணக்குப்படி இந்த வருடம் 9500 கோடி ரூபாய் நட்டம் என்றார்கள். எல்லாப்புகழும் தயாநிதி மாறனுக்குத்தான் போய்ச் சேர வேண்டும். தொடங்கி வைத்தார். பலரும் இப்போது தொடர்கின்றார்கள்.

   இன்னும் சில வருடங்கள் இந்த சேவை இருக்கும். அப்போதும் மூச்சு வாங்கினாலும் மண்ணில் போட்டு மூடி விடத் தயாராக இருக்கின்றார்கள்.

   கடைசியாக ஒன்று. தனியார் சேவைக்கும் பிஎஸ்என்எல்சேவைக்கும் உள்ள முக்கிய ஒரு வேறுபாடு.

   ஒருவரிடம் நாம் பேசத் தொடங்கும் போது மீட்டர் ஓடத் துவங்கும். பத்து நொடிகள் பேசினாலும் தனியாரைப் பொறுத்தவரையிலும் ஒரு கால் தான். ஆனால் பிஎஸ்என்எல் பொறுத்தவரையிலும் நாம் வைத்துள்ள கட்டண அளவின் படி தனித்தனியாக பிரிக்கின்றார்கள். நாம் எத்தனை நொடிகள் பேசுகின்றோமோ அதன்படி தான் கட்டணம். ஆனால் தனியார் சேவையில் அடித்து கழித்துக் கட்டு என்கிற கதை. இங்கே மறைமுக கட்டணம் எதுவும் இல்லை. அங்கே எல்லாமே மறைமுகமாக நடக்கும் கொள்ளை தான். மக்களுக்கு வேறு வழியில்லை என்பதால் அங்கே செல்ல நிர்ப்பந்தம் உருவாக்கி நகர்த்திக் கொண்டேயிருக்கின்றார்கள்.

   பார்க்கலாம்.

   Delete
 9. ” யானை படுத்தாலும் குதிரை மட்டம்தான்” என்ற கருத்தினை உள்ளடக்கிய கட்டுரை. நன்றாக இருக்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தங்களது சுயநலத்திற்காக அரித்துக் கொண்டு இருக்கிறார்கள் காரணம் அரசியல்தான். ஆரம்பத்தில் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியல் இருந்தது. அப்புறம் நாட்டுக்கும் தங்கள் வீட்டுக்கும் என்று காரியம் பார்த்தார்கள். இப்போது நாட்டைப் பற்றியே கவலை இல்லை. எல்லாமே தங்கள் வீட்டுக்குத்தான் என்று அரசியல் போய்க் கொண்டு இருக்கிறது.  ReplyDelete
  Replies
  1. மிக மிகத் தெளிவான விமர்சனம்.

   Delete
 10. அண்ணனிடம் இருந்து மிகச் சிறிய பகிர்வு...
  ஆனால் எப்பவும் போல் அண்ணனின் அழகான... கருத்துக்களை அடக்கிய பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. விவரங்களின் தேவையைப் பொறுத்தே அளவு உருவாகின்றது குமார்.

   Delete
 11. இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட தேசத்தில் லாபமீட்டவல்ல தொழில்நுட்பத் துறைகளில் தனியாரின் முதலீடே அவசியமில்லை, ஏனெனில் நம் மக்கள் மாதம் மாதம் புதுசு புதுசு என விலையைப் பற்றி கவலையின்றி கண்மூடிக் கொண்டு சொத்தை அழிக்கும் கூட்டமல்ல, திட்டமிட்ட நுகர்வு கலாச்சாரத்தை உடையோர், அவருக்கு குறைந்த விலையில் நிறைவான சேவை, அவ்வளவே. லாபம் ஈட்டவல்ல தொழிற்துறைகளில் தனியாரையும், பின்னர் அந்நியரையும் உள்ளே விட்டமை, பன்னாட்டு முதலாளித்துவத்தின் நரித்தனமும், உள்ளூர் களவாணிகளின் பேரவாவும் தான் காரணம். சிக்கன சேவைகளில் அறிமுகம் செய்து மக்களை பயன்படுத்தவிட்டு கொஞ்ச நாளில் அவற்றைக் களைந்து பணம் பிடுங்கும் தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம், மக்களைச் சுரண்டி கொள்ளை லாபம் அடிக்கும் அயோக்கியத்தனம்.

  ஒருக்கட்டத்தில் வேறு வழியில்லாமல் நம்மை தனியாரை நாடும்படியாக திணிக்கப்பண்ணுவார்கள். அப்போது நம்மிடம் பிடுங்கப்படும் லாபங்கள் நேராக அந்நிய முதலாளிகளின் பாக்கேட்டுக்குள் போகும், இதன் மூலம் நமது பணமதிப்பும் இறங்கும், ஒட்டுமொத்தத்தில் நம் அரசியல்வாதிகள் அந்நிய முதலாளிகளின் மற்றும் அவர்களின் சகாக்களான உள்ளூர் மாபியாக்களிடம் சில பல கூட்டிக்கொடுப்புக்கள் செய்து நல்ல கமிசன் பார்ப்பார்கள்.

  --- விவரணம் ---

  ReplyDelete
  Replies
  1. இது தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது.

   Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.