Friday, April 12, 2013

10. வெந்து தணிந்தது தீவு


ஸ்பானீஷ், டச்சு, போர்த்துகீசியர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் வணிக நோக்கத்திற்காக ஒவ்வொரு நாட்டிற்குள் சென்றாலும் சூரியன் அஸ்தம்பிக்காத நாடு என்ற பெருமையை பெற்று இருந்த பிரிட்டன் மட்டும் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருந்தது இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.  

மற்றவர்கள் வணிக நோக்கத்தையும் மீறி,  சரியான விலை கொடுக்காமல் ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல், எதிர்த்தவர்களை நடுக்கடலில் கொண்டு போய் தள்ளி அழிப்பது  வரைக்கும் அத்தனை அக்கிரமத்தோடு மதம் சார்ந்த அத்தனையையும் மக்கள் மீதி திணிக்கத் தொடங்கினார்கள். 

ஆனால் ஆங்கிலேயர்கள் வணிகம் முக்கியம்.  அத்துடன் மதம் என்பது அதுவொரு கிளைநதி.  உள்ளே அதுபாட்டுக்கு தனியாக நடந்து கொண்டுயிருக்கும். வெளிப்படையாக தெரியாது. 

உலகத்திற்கே இன்று வரை அவர்கள் மிகச் சிறந்த ராஜதந்திரிகளாக ஏன் இருந்துகொண்டுருக்கிறார்கள்? என்பதற்கு இதை விட வேறு உதாரணம் நமக்குத் தேவையா?

தொடக்கத்தில் இலங்கையின் உள்ளே ஆங்கிலேயர்கள் நுழைந்த போது அப்போது பிரிட்டனுக்கு ஹாலந்துக்கும் போர் நடந்து கொண்டுருந்தது.  இதன் (1782) எதிரொலியாக ஆங்கிலேயர்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட படையின் மூலம் திருகோணமலையில் இறங்கி கைப்பற்றினாலும் மீண்டும் 1795 ஆம் ஆண்டு தான் உள்ளே நுழைந்தனர்.  

இலங்கையில் இருந்த பொக்கிஷ புதையலை இறைவன் மற்றவர்களுக்காகவா படைத்தான்?  

அது போக இயற்கை கொடையாக படைத்து இருக்கும் திருகோணமலை துறைமுகம். யோசித்தவர்கள் செயலில் இறங்கினர்.

1796 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இலங்கையில் டச்சுக்காரர்கள் பிரித்து வைத்திருந்த மூன்று பகுதிகளையும் கைப்பற்றியதோடு, மற்ற பகுதிகளையும் (கிபி 1776 பிப்ரவரி) முழுமையாக கைப்பற்றினார்கள்.  

கைப்பற்றப்பட்ட பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியின் சென்னையில் கவர்னராக இருந்த ஹோபர்ட்  பிரபு என்பவரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது..  ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஆளுமைக்குள் மொத்த இலங்கையையும் கொண்டு வந்தாலும் முறைப்படியான நிர்வாக அமைப்பை கொண்டு வருவதில் அவசரம் காட்டவில்லை.

அப்போது ஐரோப்பாவில் பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியன் படையெடுப்பென்பது அன்றைய சூழ்நிலையில் பீதியை கிளப்பிக் கொண்டுருந்து. 

பெரிய நாடுகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள பகீரப்பிரயத்தனத்தில் இருந்தன. 

தங்களுடைய ஆளுமையில் இருந்த நெதர்லாந்தை பெற்றுக்கொண்டு இலங்கையை கொடுத்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது.  இது தொடர்பாக உருவாகும் செலவினங்களுக்காக முறைப்படி ஆட்சி அதிகாரம் ஆளுமையை உருவாக்காத ஆங்கிலேயர்கள், தேவைப்படும் நிதிக்காக இலங்கையின் உள்ளே ஒரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்தினார்கள். 

ஏதோ ஒரு வகையில் உள்ளே இருந்து நிதியை திரட்டுவது. 

பசுமைப்பூமியில் வேறு என்ன இருக்க முடியும்.  

அன்றைய சூழ்நிலையில் தென்னை மரங்கள் தான் அதிகமாக இருந்தது.  

காரணம் தொடக்க சங்ககால பாடல்களில் ஈழத்தவர் என்றால் தென்னை மரம் ஏறுபவர்கள் என்ற அர்த்தத்தை குறிப்பதால் அதுவே காலப்போக்கில் ஈழம் என்பதும் தென்னை சார்ந்ததாகவே மாறிவிட்டது என்பது வரலாற்றுப் பக்கங்கள் சொல்வதைப் போல தென்னை வைத்திருந்தவர்கள் மேல் மரத்திற்கு வரி (1796) என்று ஒரு புதிய கணக்கை தொடங்கி வைத்து கடைசியில் தோல்வியில் முடிந்து ஒரு வருடத்தில் அதை திரும்பப் பெற்றனர். 

இலங்கையின் மொத்த ஆளுமைப் பொறுப்பையும் இங்கிலாந்து மன்னர் வசம் (1798) ஓப்படைக்கப்பட்டது. 

நிர்வாகமென்பது மன்னரின் பிரதிநிதிகள் வசம் ஒப்படைக்கப்பட்டாலும், வர்த்தகம் தொடர்பாக தேவைப்படும் மேற்கொண்டு செயல்பட வேண்டிய அதிகாரங்களை சென்னையில் இருக்கும் கிழங்கிந்திய கம்பெனி மூலம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஹாலந்து நாட்டுடன் (1802) ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த உடன்படிக்கையின் படி டச்சு ஆதிக்கத்தில் இருந்த மற்ற அத்தனை பகுதிகளும் பிரிட்டன் குடியேற்றப்பகுதியாக அறிவிக்கப்பட்டு ஆங்கிலேயர்களின் ராஜபாட்டை தொடங்கியது. 

தொடக்கத்தில் ஆங்கிலேயர்களால் (1803) உருவாக்கப்பட்ட வரைபடத்தின் படி அன்றே ஈழத் தமிழர்களின் தாயகம் என்பதை வடக்கில் சிலாவ், கிழக்கில் மடாவ்ச்சி, தெற்கில் படவில்குளத்தில் இருந்து திருகோணமலை  மாவட்டம், மட்டக்கிளப்பு மாவட்டம் என்பது வரைக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுடன் புத்தளக் கரையோரப் பகுதியையும் உள்ளடக்கிய பகுதியாகும்.  இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 32 சதவிகிதம் ஆகும்.  மேலும் இலங்கையின் மொத்தக் கடற்பரப்பில் 60 சதவிகிதம் இந்த தமிழர் தாயகத்தில் அடங்கியிருந்தது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கும்புக்கன் ஆறு, வடமேற்கு மாகாணத்தின் மகா ஓயாவும், அதன் இரு எல்லைகளாக் காட்டப்பட்டு மகாவலி கங்கை, படிப்பனை ஆறு, கந்தளாய்க்குளம், ஜான் ஓயா, அருவி ஆறு போன்ற ஆற்றுப் படுகைகளும் அதன் எல்லைப் பிரதேசமாகக் காட்டப்பட்டுள்ளது.   

இது தான் பின்னாளில் சிங்களர்கள் கையில் ஆங்கிலேயர்களால் ஓப்படைக்கப்பட்டது.

ஆனால் ஆங்கிலேயர்கள் ஆளுமைக்குள் மொத்த இலங்கையும் வந்துவிட்டாலும் கூட உள்ளே அப்போதும் கூட உள்ளே முடியாட்சி இருந்தது முதல் ஆச்சரியம் என்றால் சிங்கள மன்னராக இருந்த அவர் உண்மையிலேயே தமிழர் என்பது அடுத்த மகத்தான அதிசயம் 

ஹாலந்து படைகளுடன் மோதி அவர்களை வென்று, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த போதும் அவர்களுக்கு சிம்ம செப்பமனமாக இருந்த (1790) குலசேகர வைரமுத்து பண்டார வன்னியன் என்ற தமிழ் மன்னன் சிறப்புடன் இருப்பதும் மொத்தத்திலும் மறுக்கமுடியா வரலாற்றுத் தடங்கள். 

இவர் தான் பின்னால் வந்த கொரில்லா போர்த் தந்திரங்களின் பிதாமகன்.


14 comments:

viyasan said...

//காரணம் தொடக்க சங்ககால பாடல்களில் ஈழத்தவர் என்றால் தென்னை மரம் ஏறுபவர்கள் என்ற அர்த்தத்தை குறிப்பதால் அதுவே காலப்போக்கில் ஈழம் என்பதும் தென்னை சார்ந்ததாகவே மாறிவிட்டது///

ஈழம் என்றால் த‌ங்க‌ம், யானை என்ப‌வ‌ற்றையும் குறிக்கும், நீங்க‌ள் குறிப்பிட்ட‌ ச‌ங்க‌கால‌ பாட்டின் வ‌ரி அல்ல‌து அந்த‌ ச‌ங்க‌ இல‌க்கிய‌த்தின் பெயர் உங்க‌ளுக்குத் தெரியுமா, த‌ய‌வு செய்து முடிந்தால் அதைக் குறிப்பிட‌வும்.

வவ்வால் said...

ஜோதிஜி,

இந்தப்பதிவெல்லாம் முன்னரே எழுதினது ,மீள்ப்பதிவா வருவதாக சொன்னீர்கள்,ஆனாலும் அச்சு,பிச்சுனே இருக்கே, இதனால் தான் முந்தைய இரு பதிவுகளில் எதுவும் சொல்லவில்லை.

வரலாற்று பதிவு இப்படிலாம் எழுதினா நம்பகத்தன்மையே இருக்காது.

# ஈழம் என்பதற்கு பொதுவாக பனை மரம், தென்னையும் சொல்லலாம், கேரளாவில் ஈழத்தவர் என்ற சமூகம்ம் உண்டு ,கள்ளு இறக்கும் தொழில் செய்பவர்கள். தமிழ்நாட்டில் நாடார்கள், முன்னர் பனையேறிகள் எனவும் சொல்வதுண்டு. நாராயண குரு புகழ்ப்பெற்ற ஈழத்தவர்.

இத்தொடர்பில் ,இலங்கைக்கும் ஈழம் எனப்பெயர் வந்திருக்கலாம்.elam என ஹீப்ரு வழி வந்த சொல்லும் உண்டு, எலாமைட் என்ற மொழியும்.உண்டு, elam என்பவரின் வழித்தோன்றல்கள் எலாமைட் என யூத புராணம் சொல்லுது,அவர்கள் நாடு elam, இன்றைய இரான் பகுதியில் இருந்தது. elam என்றால் ஹீப்ருவில் "உயரமான,உயர்ந்த" என பொருள், தென்னை,பனை மரம் எல்லாம் கூட உயரமாக இருக்கும், எனவே அப்படிக்கூட ஈழம் என்ற சொல் உருவாகி இருக்கலாம்.

ஜோதிஜி said...

இன்னும் இரண்டு அத்தியாயங்கள் வரை இருவரும் பொறுத்துக் கொள்ளவும். அதன் பிறகு நான் படித்த புத்தகங்கள் குறித்து எழுதி வைத்து விடலாம் என்று நினைக்கின்றேன். இது எழுதி ஏறக்குறைய மூன்று வருடங்கள் ஆகி விட்டது. நானே ஒரு வாசகன் மனப்பான்மையில் இப்போது தான் படித்துப் பார்க்கின்றேன்.

நம்பகத்தன்மையில் என்ன குறைவு என்று சொன்னால் பரவாயில்லை.

அப்புறம் வவ்வால் எப்போதும் ஒரு குற்றாச்சாட்டு என் மேல் வைப்பீர்கள். தொடர்போல இல்லாமல் துண்டு துக்கடா போல (ஏற்கனவே மின்சாரம் தொடர்) இருக்கிறது என்பீர்களே. இந்த தொடர் எப்படி உள்ளது. அப்புறம் வீக்கிபீடியா செய்திகள் போலவே உள்ளது என்று வேறு சொல்லி இருக்கீங்க.

புரிதலுக்காக கேட்கின்றேன்.

Unknown said...

நல்ல தகவல்

arul said...

very niceinformation about origination of srilanka

வவ்வால் said...

ஜோதிஜி,

நல்ல வேலை எப்பப்பார்த்தாலும் குறை சொல்லிக்கிட்டுனு சொக்காயை புடிக்காம விட்டீங்களே, நான் அதிகம் எதிர்ப்பார்க்கும் இடத்தில் தான் குறைகளை சொல்வேன் ,இல்லைனா ஹி...ஹீ அப்படினு போய்விடுவேன் :-))

chronologoy of events என்பது போல தான் இத்தொடர் போகுது,எந்த இடத்திலும் ஒரு வரலாற்று ஆய்வாக செல்லவில்லை. மேலும் ஆங்காங்கே ஒரு "லாங் ஜம்& ஹை ஜம்ப்" வேறு அடிப்பதாக எனக்கு தோன்றுகிறது :-))

ஒரு கட்டுரை ஒரு சில கேள்விகளை மானசீகமாக எழுப்பி அதற்கு பதில் அளிக்க வேண்டும்(கேள்விப்பதில் வடிவத்தை சொல்லவில்லை)

அப்படிப்பார்த்தால் இலங்கை எப்படி அடிமையானது, எப்படி இனப்பிரச்சினை உண்டானது என்பதற்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை, சம்பவங்களை "logically interpredate" செய்து ஆசிரியரின் கூற்றாக சொல்லப்படுதலும் வேண்டும்.

விக்கிப்பீடியா செய்திகள் போல ஏன் இருக்குனு சொன்னேன் என்றால் விக்கிப்பீடியாவில் இருப்பது தான் அதிகம் இருக்கு, அதில் சொல்லாமல் விட்டதை நீங்களும் சொல்லாமல் விட்டு விடுகிறீர்கள்,ஒரு வேளை முன்னரே நான் விக்கியெல்லாம் படித்துவிட்டதால் வந்த விளைவோ என்னமோ :-))

நம்பகத்தன்மையை குறைக்கும் விதமாக ஆங்காங்கே , சில முரண்கள் வெளிப்படையாக தெரிகிறது, கொஞ்சம் டீடெயிலாக சிலவற்றை சொல்லியிருக்கலாம்.

//(1790) குலசேகர வைரமுத்து பண்டார வன்னியன் என்ற தமிழ் மன்னன் சிறப்புடன் இருப்பதும் மொத்தத்திலும் மறுக்கமுடியா வரலாற்றுத் தடங்கள்.

இவர் தான் பின்னால் வந்த கொரில்லா போர்த் தந்திரங்களின் பிதாமகன்.//

கெரில்லா யுத்த முறை எல்லாம் இதற்கு முன்னரே பயன்ப்பாட்டில் இருக்கும் ஒன்று, அவுரங்க சீப் காலத்தில் சிவாஜி எல்லாம் கெரில்லா யுத்த முறையில் சண்டைப்போட்டாச்சு.கெரில்லா யுத்தம் என்ற பெயர் தான் பின்னாளில் சூட்டப்பட்டதே ஒழிய அம்முறை யுத்தம் 6 ஆம் நூற்றாண்டுகாலத்தியது. சீனர்கள்,அரேபிய பாலைவன நாடோடி குழுக்கள் எல்லாம் இப்படியான சண்டையை தான் காலம் காலமாக போட்டுக்கொண்டிருந்தார்கள்.

//இது எழுதி ஏறக்குறைய மூன்று வருடங்கள் ஆகி விட்டது. //

அப்போ தெரிஞ்சதை வைத்து எழுதினாலும் பின்னர் மீண்டும் வெளியிடும் போது மேம்படுத்த பட்டிருக்க வேண்டாமானு எனக்கு கேள்வி வருது :-))
-------------

இந்திய வரலாறோ,இலங்கை வரலாறோ எல்லாமே பொதுப்புத்தியில் பள்ளிக்கூட பாடம் போலவே நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது,பொதுவாக புழங்கும் வரலாற்று நூல்கள் தவிர்த்து ,பிறவற்றையும் படித்து மீண்டும் ஒரு வரலாற்றை தொகுத்தால் பல வரலாற்று பிம்பங்கள் நொறுங்கும்,சொல்லாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டவை நிறைய இருக்கு, இதற்கு தனியாக ஆதாரங்கள் எல்லாம் தேடத்தேவையேயில்லை இதுவரையில் நமக்கு சொல்லப்பட்ட வரலாற்றின் சில விவரங்கள் முரணாகத்தெரியும் அவற்றை அலசினாலே பல உண்மைகள் வெளிப்படும்.

ஜோதிஜி said...

படித்தவுடன் சிரிப்பு வந்து விட்டது.

1. விக்கி பீடியா வில் இது வரை தலித் மக்கள் குறித்த ஒரு கட்டுரையின் குறிப்புகளுக்காகவே மட்டும் ஒரு முறை படித்துள்ளேன். அங்குள்ள நடை எனக்கு பிரச்சனையாக உள்ளது.

2. முதல் முறையாக எழுதத் தொடங்கிய போது சேகரித்த குறிப்புகள் அனைத்தும் வெறும் தகவல்களாகவே இருக்க அதை கொஞ்சம் கொஞ்சமாக செப்பனிட்டு அதை சுவராசியமாக சொல்ல முற்பட்டு பாதி தகவல்களை இழக்க நேர்ந்தது.

3. வியாசன் கேட்ட அந்த சங்க காலப்பாடல் கூட எழுதி வைத்திருந்தேன். ஒரு புத்தகத்தில் இருந்து எடுக்க வேண்டுமானால் அதை எளிதாக இங்கே உடனடியாக குறிப்பிட்டு வைத்து விடலாம். எத்தனை புத்தகங்கள் என்று எனக்கே நினைவில்லை.

4. நீங்கள் சொல்லும் நம்பகத்தன்மை குறித்து எனக்கு எப்போதும் அச்சமில்லை. காரணம் ஈழத்தமிழர் வியாசன் தான் முகம் காட்டியுள்ளார். புலம் பெயர்ந்தோர் ஒரு நாளைக்கு 500 பேர்களுக்கு மேல் படித்துக் கொண்டிருப்பதால் தவறான தகவல்களை கொடுத்தால் கொலவெறி ஆட்டத்தை நிகழ்ச்சியிருப்பார்கள்.

5. உங்கள் கட்டுரைகளில் சார்வாகன் எழுத்தில் முழுக்க முழுக்க ஆதார தகவல்களுக்கு முக்கியம் கொடுத்து நீங்கள் இருவரும் எழுதுவது வழக்கம். நான் அதில் இருந்து சற்று வேறுபட்டு இருக்கவே விரும்புகின்றேன். அது உங்கள் பார்வையில் தவறானதாக தெரிந்த போதிலும் கூட.

6. வலையில் சங்க கால இலக்கியம் குறித்து தேட முற்பட்ட போது வந்து விழுந்த ஏராளமான கட்டுரைகள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அனைத்து முனைவர் பாணியில் உள்ள கட்டுரைகள். எத்தனை பேர்களால் உள்வாங்க முடியும்? ஒரே ஒரு வியாசன், குட்டிப்பிசாசு,சார்வாகன்,வவ்வால் தான் வலையில் இருப்பார்கள். ஆனால் இவர்களைத் தாண்டியும் ஒரு சுவராசியத்திற்காக பலரும் படிக்க வைக்க வேண்டும் என்பதன் முயற்சி தான் என் எழுத்து என்பதை பல முறை சுட்டிக் காட்டியுள்ளேன். அதற்காக அடிப்படை உண்மைகள் மறைத்து புதிய கண்டுபிடிப்புகள் போல எதையும் காட்ட விரும்புவதும் இல்லை.

7. சில அல்ல பல தவறுகள் என் எழுத்தில் தெரியலாம். எழுதுபவனுக்கு ஒரே ஒரு நோக்கம் தான். அவன் உள் வாங்கியதைப் பற்றித் எழுத்தாக கொண்டு வர முடியும். ஆனால் படிப்பவர்கள் பல ஆயிரம் பார்வைகள் கொண்டவர்கள். அதற்குத்தான் பின்னூட்ட வசதிகள் உள்ளது. இக்பால் செல்வன் அதைத்தான் இங்கே செய்து கொண்டு இருக்கின்றார். நானும் அவர் மூலம் நிறைய தெரிந்து கொள்கின்றேன்.

ஜோதிஜி said...

அப்போ தெரிஞ்சதை வைத்து எழுதினாலும் பின்னர் மீண்டும் வெளியிடும் போது மேம்படுத்த பட்டிருக்க வேண்டாமானு எனக்கு கேள்வி வருது :-))

நீங்கள் சொல்வது போல நான் செய்ய வேண்டுமென்றால் நிச்சயம் இந்த கட்டுரைகள் மறுபடியும் இங்கே வெளியிட இன்னும் ஒரு வருடம் ஆகலாம். தொடக்கத்தில் இருந்த ஆர்வமும் அக்கறையும் நேரமும் இப்போது கிடைப்பது என்பது வாய்ப்பே இல்லை.

வவ்வால் said...

ஜோதிஜி,

சிர்ப்பு வந்துச்சா ரொம்ப நல்லதாப்போச்சு, எனக்கும் சந்தோஷம் தான் :-))

// புலம் பெயர்ந்தோர் ஒரு நாளைக்கு 500 பேர்களுக்கு மேல் படித்துக் கொண்டிருப்பதால் தவறான தகவல்களை கொடுத்தால் கொலவெறி ஆட்டத்தை நிகழ்ச்சியிருப்பார்கள்.
//

இங்கே தான் தப்பா கணிக்கிறிங்க,நம்ம மக்கள் பெரும்பாலும் நாம ஏன் இதை சொல்லி மனஸ்தாபம் உருவாக்கனும்னு ரொம்ப பொலைட்டா, சைலண்டாகப்போயிடுவதே வழக்கம்.

அதுவும் இந்த டிரெண்ட் இப்போ ரொம்ப அதிகமா போயிடுச்சு, பதிவ எழுதினவர்களும் சரி விமர்சனத்தை விரும்புவதில்லை,நல்லப்பதி,அருமை தொடருங்கள்னு சொல்வதையே விரும்புகிறார்கள்,அப்படி பின்னூட்டம் போட்டால் தான் நல்லவன்னு சொல்றாங்க :-))

ஒரு காலத்தில் சூரியன் நிலையா இருக்க பூமி சுத்திவருதுன்னு எழுதினால் கூட,எப்படி சூரியன் நிலையா இருக்குனு எழுதலாம்னு சொக்காய புடிக்கும் நக்கீரர்கள் உலாவிய தமிழ் பதிவுலகம் :-))

// இவர்களைத் தாண்டியும் ஒரு சுவராசியத்திற்காக பலரும் படிக்க வைக்க வேண்டும் என்பதன் முயற்சி தான் என் எழுத்து என்பதை பல முறை சுட்டிக் காட்டியுள்ளேன்//

ஹி..ஹி நானும் பல முறை "நீங்க சுவாரசியப்படுத்தும்" விததத்தை குறிப்பிட்டு இருக்கிறேன் :-))

சுவாரசியப்படுத்துவது அவசியம் தான்,ஆனால் நீர்த்துப்போகாமல் செய்ய வேண்டும்.

என்ன செய்ய நம்ம மக்களுக்கு வீரபாண்டிய கட்ட பொம்மன் வரலாற்றை விட." மஞ்சள் அரைத்தாயா "வசனப்புகழ் வீரபாண்டியன் படம் தான் புடிக்குது :-))

நானும் இப்பதிவு வரலாற்றுப்பதிவென்று நினைத்து தான் பொங்கிட்டேன்,இனிமே சரியா புரிஞ்சுப்பேன் :-))

ஜோதிஜி said...

அதுவும் இந்த டிரெண்ட் இப்போ ரொம்ப அதிகமா போயிடுச்சு, பதிவ எழுதினவர்களும் சரி விமர்சனத்தை விரும்புவதில்லை,நல்லப்பதி,அருமை தொடருங்கள்னு சொல்வதையே விரும்புகிறார்கள்,அப்படி பின்னூட்டம் போட்டால் தான் நல்லவன்னு சொல்றாங்க :-))

நான் அவன் இல்லை. நான் காரஞ்சாரமான விமர்சனங்களை விரும்புகின்றேன் எதிர்பார்க்கின்றேன் நானும் வளர வேண்டாமா?

சுவாரசியப்படுத்துவது அவசியம் தான்,ஆனால் நீர்த்துப்போகாமல் செய்ய வேண்டும்.

கவனத்தில் கொள்கின்றேன்.

நானும் இப்பதிவு வரலாற்றுப்பதிவென்று நினைத்து தான் பொங்கிட்டேன்,இனிமே சரியா புரிஞ்சுப்பேன் :-))

இந்த நக்கல் தானே வேண்டாங்றது.

வவ்வால் said...

ஜோதிஜி,

//நான் அவன் இல்லை. நான் காரஞ்சாரமான விமர்சனங்களை விரும்புகின்றேன் எதிர்பார்க்கின்றேன் நானும் வளர வேண்டாமா?//

இந்த உண்மை எனக்கு தெரிஞ்சு தானே ,இங்கே இப்புடி ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கேன் :-))

நான் சொன்னது இப்போதைய டிரெண்டை. அந்த டிரண்டுக்குள்ள நீங்க இல்லை,இருந்திருந்தா என்னை எப்போவோ தாளிச்சு இருக்க மாட்டிங்க :-))

உங்கப்பொறுமையின் பெருமையை எல்லாருக்கும் தெளிவா காட்டவே அடியேன் கலாய்ச்சுகிட்டு இருக்கேன்,ஹி..ஹி திருவிளையாடல் புராணம் எல்லாம் படிச்சிருப்பீங்களே :-))

எப்படிலாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு அவ்வ்!

# நிங்க வரலாற்று பதிவே இல்லைனு சொன்னா மட்டும் அப்படியே போயிடுவமா என்ன, தேடி வந்து கரைச்சல் பண்ணுவோம்ல :-))

ஜோதிஜி said...

வியாசன் மற்றும் வவ்வால் கவனத்திற்கு.

இன்று மதியம் நேரம் கிடைத்தது. ஒரு கடமையை முடிக்க இந்த பின்னூட்டம்.

கடந்து வந்த 11 அத்தியாங்களில் நான் எழுதியுள்ள பல ஆதாரப்பூர்வமான சரித்தி குறிப்புகளின் நம்பகத்தன்மையின் பெரும்பாலும் இந்த புத்தகத்தில் இருந்து தான் அதிகபட்சம் எடுத்து கையாண்டுள்ளேன்.

புத்தகத்தின் பெயர் இலங்கையில் தமிழர்
ஒர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு

பொ-ஆ.மு 300 முதல் பொ.ஆ 1200 வரை

எழுதியவர் பெயர் கா. இந்திரபாலா.

ஜோதிஜி said...

இந்த புத்தகம் கிடைக்குமிடம்

3 (12) மேகை வினாயகர் தெரு, வடபழனி, சென்னை 26

இலங்கையில்

361 டேம் தெரு
கொழும்பு.

இந்நூலாசிரியர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில்1960 முதல் 1975 வரலாற்றுப் பேராசிரியராக பணிபுரிந்தவர். தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்துக் கொண்டு இருப்பவர். இந்த பெண்மணி 1984 ல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதலாவது தென்கிழக்கு ஆசியவியல் பேராசிரியாக நியமனம் பெற்றவர்.

ஜோதிஜி said...

அற்புதமான பெண்மனி. கடுமையான தனது 15 வருட தொல்லியல் ஆராய்ச்சிகள் மூலம் இந்த புத்தகத்தின் ஆங்கிலவடிவத்தை எழுதி அதன் பிறகு இந்த தமிழ் நூலை படைத்துள்ளார்.

இந்த நூலில் பின் இணைப்பாக கொடுத்துள்ள நூற் பட்டியல் ஏறக்குறைய 200 இருக்கலாம்.


சென்னையில் இருந்து நண்பர் வாங்கி அனுப்பிய நூல் இது.

நான் எழுதிய ஒவ்வொரு விசயத்திற்கும் முழுமையான ஆதாரங்கள் உள்ளது என்பதற்காக இந்த குறிப்பு. வேறு ஏதும் சந்தேகம் இருந்தால் இருவரும் கேட்கலாம்.