Saturday, June 04, 2011

இதை முழுமையாக கேட்டால் உங்கள் தலைசுற்றும்

தமிழ்நாட்டு தமிழர்கள் சரியாக செயல்பட்டு தங்களது எதிர்ப்புகளை காட்டியிருந்தால் ஈழத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த மிகப் பெரிய இனப்படுகொலை நடந்து இருக்காது.  இன்று வரைக்கும் தமிழ்நாட்டில் ஈழம் குறித்து முழுமையாக தெரிந்தவர்கள் ஐந்து சதவிகிதம் கூட இருப்பார்களா என்பது சந்தேகமே.  சமீப காலமாகத்தான் ராஜபக்ஷேவின் ஒவ்வொரு இரவும் உறங்க முடியாத இரவாக நீண்டு கொண்டேயிருக்கிறது. காரணம் ஐ.நா. சமீபத்தில் வெளியிட்டுள்ள போர்க்குற்ற அறிக்கையும் அதை வைத்துக் கொண்டு இந்தியா முதல் அமெரிக்கா வரைக்கும் செய்து கொண்டிருக்கும் தில்லாலங்கடி வேலைகளும்.  

இதற்கு முக்கிய காரணம் ஈழம் குறித்து அதன் பிரச்சனைகளை குறித்து தெளிவாக புரியவைப்பவர் இன்று வரைக்கும் தமிழ்நாட்டில் எவருமில்லை.  தங்களின் சுயலாபத்திற்காகவே இந்த ஈழ மக்களின் அவல வாழ்க்கையை தங்கள் ஓட்டு அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். சமீப தேர்தலில் சீமானின் தாக்கத்தை திமுக உணர்ந்தார்களோ இல்லையோ காங்கிரஸ் நன்றாக உணர்ந்து இருக்கக்கூடும். 

ஆனால் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அத்தனை பேர்களும் வெவ்வேறு தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பதைப் போல மற்றொரு வெளியே தெரியாத காரணமும் உண்டு. தமிழ்நாட்டில் ஈழம் என்ற பெயரை வைத்துக் கொண்டு எவரவர் ஒன்று சேர்கிறார்களோ அவர்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது யார் தெரியுமா?  

ஈழத்தில் உள்ள உளவுத்துறை.  

நம்ப கடினமாக இருக்கிறதா?  உண்மையும் இதுவே. 

இதற்காகவே தமிழ்நாட்டில் ஏற்கனவே இந்த புனிதப் பணியை செய்து கொண்டிருந்தவர் தூதராக இருந்த அம்சா.  இப்போது இந்த பணியை அவரின் சார்பாளர்களாக இங்குள்ள பல தமிழர்களே செய்து கொண்டு முன்னணியில் இருக்கிறார்கள்.  

சீமான் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை காவல்துறை பத்திரிக்கைக்கு தெரிவிப்பதற்கு முன்பே பலருக்கும் அழைத்து சொன்னவர் நடிகர் எஸ்வீ.. சேகர்.  

இந்திய அரசாங்கத்தை விட ஈழ அரசாங்கம் இன்று வரையிலும் இங்குள்ள கைக்கூலிகள் மூலம் இந்த காரியத்தை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.  நாங்கள் ஈழ மக்களுக்கு ஆதரவாளர் என்று சொல்லிக் கொண்டு இந்த பிரச்சனை பெரிய அளவுக்கு தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்பதை பல நபர்கள் சிங்கள அரசாங்கத்திடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு இங்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

ஈழம் குறித்து ஒரே நேர்கோட்டில் வந்து நின்று ஒற்றுமையாய் நிற்காமல் வெவ்வேறு பாதையில் சென்று கொண்டு நீ பெரியவன் நான் பெரியவன் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம் என்றால் இன்று வரைக்கும் குறிப்பாக முந்தைய கலைஞர் அரசாங்கமும், மத்திய மாநில உளவுத்துறையும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஒன்றும் நடக்காததைப் போல நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள் என்பதை விபரம் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.  

ஆனால் சோனியா அரசாங்கம் பல வகையில் மகிந்த ராஜபக்ஷேவுக்கு உதவியது தெரியுமே தவிர இதற்குப் பின்னால் உள்ள சர்வ தேச அரசியல் எத்தனை பேர்களுக்குத் தெரியும்.  

மே 17 இயக்கம் மூலம் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் திருமுருகன் போன்றவர்கள் எந்த உணர்ச்சிக்கும் அடிபணியாமல் (நடந்து முடிந்த தேர்தலின் போது வெளியே இவர் இருக்கக்கூடாது என்பதற்காக இவரை முடக்கிப் போட்டு இருந்தார்கள்) இவர் உரையாற்றும் இந்த காணொளியை கேட்டுப் பாருங்க.

ஏற்கனவே ஐ.நா. வெளியிட்டுள்ள போர்க்குற்ற அறிக்கையைப்பற்றி என் பார்வையில் எழுதி இருந்தேன். திருமுருகன் அளவுக்கு சர்வதேச நிகழ்வுகளைப் பற்றி ஊன்றி கவனிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் நான் எழுதிய விசயங்களை இந்த காணொளியை கேட்ட போது நான் எழுதிய விசயங்கள் சரியாகவே உள்ளது என்பதை உணர்ந்த போது எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. 

இந்திரா காந்தி ஏன் ஈழப் பிரச்சனையில் தலையிட்டார்?

இந்த இனப்படுகொலையில் அமெரிக்காவின் இரட்டை வேடம்?

இந்திய உளவுத்துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம்?

ஈழத்தில் அமைதி திரும்பிய காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள்?

எம்.கே.நாராயணன் குறித்த உண்மையான விசயங்கள்?

போன்ற பல விசயங்களை இந்த காணொளி மூலம் உணர்ந்து கொள்ளமுடியும்.

இந்த மே 17 இயக்கத்தைப் பற்றி எனக்கு தெரிவித்த நண்பர் கும்மி, சிங்கள இராணுவத்தினரால் தினந்தோறும் பாதிக்கப்படும் மீனவர்களுக்காகவும், உணமையாகவே களத்தில் இறங்கி வெளியே தெரியாத பல உருப்படியான காரியங்களை செய்து கொண்டிருப்பவர். இவருடன் பேசும் போது வலைபதிவுகளில் ஈழ ஆதரவாளர் என்று சொல்லிக் கொண்டு பலரும் செய்து கொண்டிருக்கும் செயல்பாடுகளையும் , சமயம் வரும் போது தப்பித்துக் கொள்ளும் நபர்களைப் பற்றியும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

காலம் எல்லாவற்றையும் எப்போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்காது. எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு உண்டு.  நேரம் வரும் போது நாம் அணைவரும் பல விசயங்களையும் பலரின் உண்மையான முகங்களையும் பார்க்கத்தான் போகின்றோம். .

நம் முயற்சிகள் தீர்வுகளை நோக்கி நகர்த்த உதவவேண்டும்.  இல்லாவிட்டால் குறைந்தபட்சம் தீர்வுகளை நீர்த்துப் போகச் செய்யாமல் கேவலமான செயல்களை செய்யாமல் ஒதுங்கியிருக்க வேண்டும். 

16 comments:

 1. நேரம் வரும் போது நாம் அணைவரும் பல விசயங்களையும் பலரின் உண்மையான முகங்களையும் பார்க்கத்தான் போகின்றோம். .//

  காலம் எத்தனையோ விசயங்களை புரட்டி போட்டு, உண்மையை தக்க வைத்து சென்றிருக்கிறது. கைக் கூலிகளின் வயிற்று கழுவலையா உரித்துக் காமிக்காது... அல்லக்கைகள் காற்றில் ஊசலாடித் திரியும் நாப்கின்களைப் போன்றவர்களல்லவா?

  //கேவலமான செயல்களை செய்யாமல் ஒதுங்கியிருக்க வேண்டும். //

  இது மாதிரி பிழைக்கன்னே ஒரு பொறப்பும் எடுத்திருக்காய்ங்களே!! :(

  ReplyDelete
 2. """ஈழம் குறித்து ஒரே நேர்கோட்டில் வந்து நின்று ஒற்றுமையாய் நிற்காமல் வெவ்வேறு பாதையில் சென்று கொண்டு நீ பெரியவன் நான் பெரியவன் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம் என்றால் .....""

  வைகோ -சீமான்-பழ நெடுமாறன்-தமிழருவி மணியன் -நல்ல கண்ணு -போன்ற ஈழ ஆதரவளர்கள் ஒரு கோட்டில் பயனிக்காதது(நீ பெரியவன் நான் பெரியவன்)
  நம்மை -எதிரிகளிடமிறிந்து காத்துக்கொள்ள முடியாதது நம் குற்றமே.....
  ஒன்றுபட்டால் ஒன்று பட்டால் உண்டு தமிழர் வாழ்வு ....

  ReplyDelete
 3. ஜோதிஜி, தமிழனுக்கு எதிரிகளை விடவும் துரோகிகள் தான் அதிகம் போலும். பதிவுலகில் தான் இப்படி என்றால் இப்போ நேராயுமா!!!

  காணொளி பார்க்கவில்லை. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

  ReplyDelete
 4. //நடந்து முடிந்த தேர்தலின் போது வெளியே இவர் இருக்கக்கூடாது என்பதற்காக இவரை முடக்கிப் போட்டு இருந்தார்கள்//

  பிரச்சாரத்தின் கடைசி நாளில்தான் கைதும் மற்ற சம்பவங்களும் நடைபெற்றன. அதற்கு முன்னர் காங்கிரஸ் போட்டியிட்ட மற்றத் தொகுதிகளில் பிரச்சாரங்களை செம்மையாக முடித்திருந்தனர். பிரச்சாரத்தின்போது காங்கிரசுக்கு எதிராக மே 17 இயக்கத்தினர் வெளியிட்ட 24 பக்க புத்தகம் பல்வேறு அமைப்புகளாலும் பிரதியெடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

  ReplyDelete
 5. //தமிழ்நாட்டு தமிழர்கள் சரியாக செயல்பட்டு தங்களது எதிர்ப்புகளை காட்டியிருந்தால் ஈழத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த மிகப் பெரிய இனப்படுகொலை நடந்து இருக்காது. //

  சரியாக செயல்பட்ட தருணங்கள் பலவுண்டு. அவை அனைத்தும் ஆட்சியாளர்களால் லாவகமாக திசைதிருப்பப்பட்டன.

  ReplyDelete
 6. //இல்லாவிட்டால் குறைந்தபட்சம் தீர்வுகளை நீர்த்துப் போகச் செய்யாமல் கேவலமான செயல்களை செய்யாமல் ஒதுங்கியிருக்க வேண்டும். //

  நெஞ்சில் உரமுமின்றி
  நேர்மைத் திறமுமின்றி
  வஞ்சனை சொல்வாரடி - கிளியே
  வாய்ச்சொல்லில் வீரரடி!

  ஊக்கமும் உள்வலியும்
  உண்மையில் பற்றுமில்லை
  மாக்களுக்கோர் கணமும் - கிளியே
  வாழத் தகுதியுண்டோ?

  கூட்டத்திற் கூடிநின்று
  கூவிப் பிதற்றலன்றி
  நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே
  நாளில் மறப்பாரடீ!

  அச்சமும் பேடிமையும்
  அடிமைச் சிறுமதியும்
  உச்சத்திற்க் கொண்டாரடி - கிளியே
  ஊமைச் சனங்களடீ!

  சொந்த சகோதரர்கள்
  துன்பத்தில் சாதல் கண்டும்
  சிந்தை இரங்காரடி கிளியே
  செம்மை மறந்தாரடி கிளியே!

  ReplyDelete
 7. ////ஈழம் குறித்து ஒரே நேர்கோட்டில் வந்து நின்று ஒற்றுமையாய் நிற்காமல் வெவ்வேறு பாதையில் சென்று கொண்டு நீ பெரியவன் நான் பெரியவன் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம் என்றால்// இந்த நிலை மாற அவேண்டும் என்பதே எமது வேண்டுதல்

  ReplyDelete
 8. நம் முயற்சிகள் தீர்வுகளை நோக்கி நகர்த்த உதவவேண்டும். இல்லாவிட்டால் குறைந்தபட்சம் தீர்வுகளை நீர்த்துப் போகச் செய்யாமல் கேவலமான செயல்களை செய்யாமல் ஒதுங்கியிருக்க வேண்டும்.

  ReplyDelete
 9. ஜோதிஜி!யதேச்சையாகவே பதிவுக்கு வந்தேன்.இந்தப் பதிவைக் காண்பதற்கு முன்பு முந்தாநாள் வெள்ளிக்கிழமை திருமுருகன்,பால் நியுமன் போன்றவர்களின் கருத்தரங்க காணொளி காண நேர்ந்தது.தளம் பொங்குதமிழ்.

  வெறுமனே அரசியல் சார்ந்த நகர்வுகளாய் இல்லாமல் அறிவு பூர்வமாக கருத்துக்களை முன் வைக்கும் தமிழ் உணர்வாளர்களும் இருக்கிறார்கள் என்று தெரியும் போது நம்பிக்கைகள் பிறக்கின்றன.

  அடுத்த பின்னூட்டத்தில் தொடர்கிறேன்.

  ReplyDelete
 10. சென்ற பின்னூட்ட தொடர்ச்சி....

  திருமுருகன் உரையைக் கேட்டதும் எனக்கு மிகுந்த வியப்பு.சீனா,அமெரிக்க,புவியியல் பற்றிய அனைத்தையும் கூறியதும் அதனை விட தற்போது நீங்கள் சொல்லிய படி ராஜபக்சே....தமிழில் எப்படி சொல்றதுன்னு தெரியல...அதனால he is feeling the pinch now என்பதால் வரும் காலம் ராஜபக்சேவை ஏதாவது ஒரு கூட்டுக்குள் அடைக்கும் சாத்தியங்கள் இருக்கிறது.அது எந்த விதத்தில் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.தற்போது தமிழ் ஐக்கிய கூட்டணியுடன் பேச்சு வார்த்தையும் என்று இறங்கி வருவதன் காரணம் கூட இலங்கை அரசுக்கு தேவையான விதத்தில் ஈழப்பிரச்சினையை எப்படி தீர்வுக்கு கொண்டு வரலாம் என்ற நோக்கமாகவோ அல்லது இதோ பேச்சு வார்த்தைகள் நடத்துகிறேன் பேர்வழியென்ற கண் துடைப்பாகக் கூட இருக்கலாம். ஒரு வேளை பேச்சு வார்த்தை என்ற கால கட்டத்தில் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது நம் முன் நிற்கும் கேள்வி என்பது பற்றி சொல்லியிருந்தார்.

  பின்னூட்டம் இன்னும் நீளும் காரணம் கொண்டும் இதனை பதிவில் முன் வைக்கலாமே என்ற எண்ணத்தில் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 11. //வைகோ -சீமான்-பழ நெடுமாறன்-தமிழருவி மணியன் -நல்ல கண்ணு -போன்ற ஈழ ஆதரவளர்கள் ஒரு கோட்டில் பயனிக்காதது(நீ பெரியவன் நான் பெரியவன்)
  நம்மை -எதிரிகளிடமிறிந்து காத்துக்கொள்ள முடியாதது நம் குற்றமே.....
  ஒன்றுபட்டால் ஒன்று பட்டால் உண்டு தமிழர் வாழ்வு ....//

  சத்யகுமாரின் பின்னுட்டத்திலிருந்து இன்னுமொன்று தோன்றியது.சுப.வீரபாண்டியனும் கூட நல்ல தமிழ் உணர்வாளர்தான்.ஆனால் அவர் சிறை அனுபவங்களுக்குப் பிறகு தி.மு.க சார்பு நிலையென்ற நிலையில் விலகி விட்டார்.

  ஆனால் வைகோ -சீமான்-பழ நெடுமாறன்-தமிழருவி மணியன் -நல்ல கண்ணு போன்றவர்கள் ஒரே குடையின் கீழ் ஈழ ஆதரவை பிரகடனப்படுத்துவதிலும் இணைந்து பணியாற்றுவதிலும் என்ன பிரச்சினையென தெரியவில்லை.தமது கொள்கை, எதிர்காலம் என்று கட்சி அரசியலில் அவரவர் கட்சியென்று செயல்பட்டாலும் சில நிகழ்வுகளுக்கு ஒருமித்து குரல் கொடுப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சினையென புரியவில்லை.

  ReplyDelete
 12. //நம் முயற்சிகள் தீர்வுகளை நோக்கி நகர்த்த உதவவேண்டும். இல்லாவிட்டால் குறைந்தபட்சம் தீர்வுகளை நீர்த்துப் போகச் செய்யாமல் கேவலமான செயல்களை செய்யாமல் ஒதுங்கியிருக்க வேண்டும்.//

  சரியான மற்றும் பொதுவான கருத்து.

  ReplyDelete
 13. அருமையான பதிவு
  பல விஷயங்களை தெளிவு படுத்தியது.
  நன்றி

  ReplyDelete
 14. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

  ReplyDelete
 15. நானும் அப்படித்தான் இங்குள்ள அரசியல்வாதிகளை நம்பி

  மிகவும் பாதிப்படைந்துவிட்டேன்
  மேலும் விபரங்களுக்கு

  எனது பிளாக்கரை பார்க்கவும்
  http://kenakkirukkan.blogspot.com/

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.