Wednesday, June 22, 2011

முற்றுகைக்குள் இந்தியா 2

இலங்கையில் பிரதமராக 1978 பிப்ரவரி 4 அன்று பதவிக்கு வந்தவர் ஜே.ஆர். ஜெயவர்த்னே. 

முதலில் இவரைப் பற்றி புரிந்து கொள்வோம்.

இவரது மூன்னோர்கள் 17 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து இலங்கையில் குடியேறிய செட்டியார் வம்சத்தை சேர்ந்தவர்கள். 18 ஆம் நூற்றாண்டில் சிங்கள வம்சமாக மாறி குடும்ப பெயராக ஜயவர்த்னே என்ற பெயரைப் பெற்று அதுவே தங்களது குடும்பப் பெயராகவும் வைத்துக் கொள்கின்றனர்.  19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களுக்கு சேவகம் புரிந்து(?) கௌரவம் பெற்ற டொன் ஏட்ரியன் விஜேஸிங்ஹ ஜயவர்த்ன 1830 ல் இறந்த போது தம்பி முதலியார் என்றும் அழைக்கப்பட்டார்.  இவரது வழித்தோன்றலில் வந்த ஜெயவர்த்னே அரசியலில் நுழைந்த போது தன்னை பௌத்தராக மாற்றிக்கொண்டார். 


இவரின் முழுப்பெயர் (Junius Richard Jayewardene ) ஜுனியஸ் ரிச்சர்ட்ஜெயவர்த்னே.  இவரது தந்தை இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர். சேனநாயகா உருவாக்கிய முதல் அமைச்சரவையில் ஜெயவர்த்னே நிதி அமைச்சராக இருந்தவர். முப்பது வருடங்கள் காத்திருந்து இந்த பதவியை அடைந்தவர். அரசியலில் துரதிஷ்டசாலியாகவே கடைசிவரைக்கும் வாழ்ந்த டட்லி சேனநாயகாவிற்குப் பிறகு ஆட்சியை பிடித்தவர்.  ஆட்சியை பிடித்ததும் தமிழர்கள் குறித்து எந்தப் புகார் பட்டியல் வந்தாலும் உடனே "அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று தான் தொடங்கி வைப்பார்.  உருவாகும் கலவரங்கள் முடிவுக்கு வரும் போது தமிழர்களின் சொத்தும், வாழ்வாதாரமும் சூறையாடப் பட்டு இருக்கும். 

ஒரே பாதை. ஒரே கொள்கை.   

இவர் இரண்டு முறை ஆட்சியில் இருந்த போதும் தமிழர் எதிர்ப்பு என்ற தனது கொள்கையை மாற்றிக்கொள்ளவே இல்லை. இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் தாங்கள் கொண்டுள்ள இனவாத கொள்கையில் எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது என்பதை மற்றவர்களுக்கு உணர்வு பூர்வமாக வாழ்ந்து காட்டியவர்.  கடைசி வரைக்கும் தன்னை சிறப்பான சிங்களத் தலைவராக காட்டிக் கொண்ட இவரைப் போல இலங்கை வரலாற்றில் வேறு எவரும் இருப்பார்களா என்பது சந்தேகமே?  

ஈழ அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தமிழரும் நேரிடையாக மறைமுகமாக சிங்கள தலைவர்களுக்கு தங்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்து அவர்களை வளர்த்துள்ளனர்.

சேனநாயகா அரசாங்கத்தில் தனது அந்தர்பல்டி கொள்கையின் மூலம் அமைச்சராக இருந்த வர் ஜீஜீ.பொன்னம்பலம்.

இவர் தான் இன்றைய அரசியல்வாதிகளுக்கு முன்னோடி.

சேனநாயகா கொண்டு வந்த மலையகத் தமிழர்களை நாட்டைவிட்டு அனுப்ப உதவிய தீர்மானத்திற்கு இவரின் ஒத்துழைப்புக்கு பிரதி உபகாரமாகத்தான்  அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து ஜெயவர்த்தேனே இரண்டாவது முறையாக அதிபராக ஆட்சிக்கு வந்த போதும் ஒரு தமிழர் ஜெயவர்த்னேவுக்கு செய்த உதவி மகத்தானது.  அதுவும் இலங்கை தமிழனத்தின் தந்தையாக போற்றப்படும் தந்தை செல்வாவின் மருமகனும் கனடா பல்கலைகழகத்தில் அரசியல் துறை பேராசிரியாக பணிபுரிந்து ஏ.ஜெ.வில்சன் முயற்சியினால் இலங்கையின் மொத்த அரசியல் அமைப்பும் மாற்றப்பட்டது. 

இவருக்குப் பின்னால் அந்த பட்டத்தை தட்டிக் கொண்டு செல்பவர் சந்திரிகா குமாரணதுங்கேவுக்கு வலதுகரமாக இருந்த லஷ்மண் கதிர்காமர்.  பிரபாரகன் வீழ்ச்சிக்கு முக்கிய பங்காற்றி சர்வதேசத்தையும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஒரே அணியில் கொண்டு வந்தவரும் இவரே ஆவார்.

ஏ.ஜெ.வில்சன் உருவாக்கிக் கொடுத்த புதிய அரசியலமைப்பு சட்டத்தின்படி இதுவரைக்கும் இலங்கையில் பிரதமராக இருந்து ஆட்சி புரிந்தவர்களின் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்னே வானாளாவிய அதிகாரம் படைத்தவராகவும் மாறினார். இதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் அதிபர் பதவி உருவானது. ஜெயவர்த்னே அதிபராக ஆட்சிக்கு வந்த போது இலங்கையின் தேச அரசியல் என்பது மாறி சர்வதேச அரசியலுக்கு நகரத் தொடங்கியது. காரணம் ஏ.ஜெ.வில்சன் மூலம் உருவான அரசியல் அமைப்பு என்பது முற்றிலும் வேறானது. இலங்கையின் சட்ட அமைப்பு இங்கிலாந்து சட்டதிட்டத்தின்படி தான் இருந்தது.  அதை பிரான்ஸ் நாட்டு அரசியல் அமைப்பின்படி மாற்றினார்.

பல அச்சுறுத்தல்களை தமிழர்களுக்கு வழங்க காரணமாக இருந்த சிங்களகளுக்கு மட்டுமே தந்தையாக இருந்த சேனநாயகா போய் இப்போது சிங்கள இனவாத அரசியல் ஞானியாக ஜெயவர்த்னே தனது ஆட்டத்தை தொடங்கினார்.  

1956 ஆம் ஆண்டு முதல் 1977 வரை தேசியமயமாக்கப்பட்ட அரசுத்துறை நிறுவனங்களின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்தையே இலங்கை கடைபிடித்து வந்தது. இதன் காரணமாக மற்ற நாடுகளின் தொடர்பு அதிக அளவு உருவாகாமலேயே இருந்தது. 1977 ஆம் ஆண்டு ஜெயவர்த்னே தங்களது ஐக்கிய தேசிய கட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். இவர் ஆட்சிக்கு வந்த போதே இந்தியா குறித்து ஒரு முடிவோடு வந்திருப்பார் போல.  அதற்கு தகுந்தாற் போல மேற்கித்திய நாடுகளை இலங்கையில் முதலீடுகள் செய்ய வெத்திலை பாக்கு வைத்து அழைக்க ஒவ்வொரு நிறுவனமாக உள்ளே வரத் தொடங்கியது. தமிழர்களுக்கு எதிராக தேவைப்படும் ராணுவ உதவிகளையும் ராஜதந்திர உதவிகளையும் தொடர்பிலிருக்கும் நாடுகளைக் கொண்டே சாதித்து காய் நகர்த்த தொடங்கினார். இலங்கைக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம்?  என்னவொன்று? இந்தியாவுக்கு மாற்று ஏற்பாடாக இருக்க வேண்டும் என்பதான அவரின் கொள்கையை இந்தியா கவனித்துக் கொண்டேயிருந்தது.

ஜெயவர்த்னே புண்ணியத்தால் நடத்தப்பட்ட ஜுலை கலவரத்தின் மூலம் ஏறக்குறைய பத்து லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் புலம் பெயர்ந்தனர்.   இது போக இலங்கையின் உள்ளே இருக்கும் மீதியுள்ள தமிழர்களை அடக்கி வைத்திருக்க வேண்டியது அவஸ்யமல்லவா? 

1983 க்குப்பிறகு அமெரிக்காவின் உதவியால் இஸ்ரேலின் பாதுகாப்பு படையான ஷின் பெத் (SHIN BETH)ம், பாலஸ்தீன மக்களை கொல்வதில் கைதேர்ந்த இஸ்ரேலின் உளவுப்படையான மொஸார்ட்டும் (MOSSAD) போன்றவற்றையும் தங்களது இராணுவத்திற்கு பயிற்றுவிப்பாளர்களாக உள்ளே கொண்டு வந்தார். இந்த சமயத்தில் ஜெயவர்த்னே உருவாக்கிய மகத்தான் விசயம் ஒன்று உண்டு.  இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு வரும் எவருக்கும் எந்த விசாவும் தேவையில்லை என்பதன் மூலம் இஸ்ரேலின் டிகிரி தோஸ்தாக மாறினார். இது தவிர இங்கிலாந்து நாட்டின் BRITISH SPECIAL AIR SERVICE  என்ற அமைப்பின் மூலம் தமிழர்கள் வாழும் இடங்களுக்கு அருகே குண்டு வீசி பயிற்சி எடுக்கவும் அனுமதிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் உதவியால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கீனி மீனி சர்விஸஸ் (KEENIE MEENIE SERVICES (KMS) ) என்ற அமைப்புக்கு தனியான சிறப்பம்சம் உண்டு.  அதாவது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கொலை நிறுவனம். தேவைப்படும் சமயத்தில் தேவைப்படும் நபர்களை நோக்கி செலுத்த உதவும் இந்த நிறுவனம் தான் இலங்கை இராணுவத்தின் சிறப்பு பாதுகாப்பு படைக்கு (SPECIAL TASK FORCE) பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள் வளர்ந்து கொண்டிருக்கும் தமிழர் அமைப்புகளை எப்படி நசுக்குவது என்பதை பாடம் எடுப்பதே ஆகும்.  இதே சமயத்தில் தான் தென் ஆப்ரிக்காவில் இருந்து பெருவாரியான இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர்.

மொத்தத்தில் இப்போது ஜெயவர்த்னேவுக்கு தலைகால் புரியவில்லை.  ஆகா இந்தியாவிற்கு எதிரான நாடுகளுடன் நாம் ஒன்று சேர்ந்துவிட்டோம். நமக்கு இந்தியாவின் தயவு தேவையில்லை.  இவர்கள் சொல்வதையும் நாம் கேட்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தில் பெரிய அடி இல்லையில்லை இடி விழுந்தது. 

1987 ஆம் ஆண்டு ஜுன் மாதம் யாழ்பாணத்தை இலங்கை இராணுவம் முற்றுகையிட்ட போது இந்தியா விடுத்த கோரிக்கை எதையும் ஜெயவர்த்னே காதில் வாங்கிக் கொள்ளத் தயாராகயில்லை. இதே சமயம் சர்வதேச அளவில் தன் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று ராஜிவ் காந்தி நினைத்துக் கொண்டிருந்த தருணமும் கூட.  யாழ்பாண மக்களுக்குத் தேவையான உணவு பொட்டலங்களை இந்திய இராணுவ விமானங்கள் வானில் இருந்து போட்டது.  இத்துடன் இன்னோரு கட்டளையும் இந்தியாவிடம் இருந்து ஜெயவர்த்னேவுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. 

"மகனே இந்திய இராணுவத்தை எதிர்த்தாய் தொலைச்சுப்புடுவேன். மீறி ஏதாவது ஏடாகூடம் என்றால் இந்தியா போர் தொடுக்கவும் தயங்காது?"

வேறென்ன செய்ய முடியும்.  ஜெயவர்த்னே கப்சிப்.  அடி மேல் அடி வைத்து ஒவ்வொன்றும் இடியாய் நகர்த்தி ஒரு வழியாக பிரபல்யமான (1987 ஜுன் 27) இந்திய இலங்கை ஒப்பந்தம் ஜெயவர்த்னே மற்றும் ராஜிவ் காந்திக்கு இடையே கையெழுத்தானது. 


இதைப்பற்றி ஏற்கனவே விபரமாக பழைய பதிவுகளில் எழுதியிருந்தாலும் இப்போது ஐந்து மதிப்பெண வினாவுக்குத் தேவைப்படும் பதிலைப் போல பார்த்த விடலாம். 

இலங்கைக்குள் இந்தியா தனது இராணுவத்தை அனுப்பும்.  உள்ளே இருக்கும் போராளிகளின் ஆயுதங்களை இந்திய இராணுவமே களையும் பணியில் ஈடுபடும். முக்கியமாக இலங்கை இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டு படைகளுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.  உள்ளே இருக்கும் மற்ற நாட்டுப் படைகளையும் உடனடியாக அனுப்பி வைத்துவிட வேண்டும். இது தான் இந்தியாவின் முக்கிய அம்சங்கள்.  இதற்குப் பிறகே உள்ளே உள்ள தமிழர்கள் நலம், இணைப்பு, வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி போன்ற மற்ற அத்தனையும்.

அப்போது தான் ஜெயவர்த்னே புரிந்து கொண்டார்.  இந்தியா காலைச் சுற்றிய பாம்பல்ல.  கழுத்தை சுற்றியுள்ள பாம்பு.  இந்த இடத்தில் மற்றொரு உண்மையையும் ஜெயவர்த்னே அப்போது தான் உணர்ந்து கொண்டார்.  இந்தியா தலையிட ஆரம்பித்தவுடன் மற்ற நாடுகள் அத்தனையும் பின்வாங்க ஆரம்பிக்க இந்தியாவின் தலையாட்டி மொம்மையாக ஜெயவர்த்னே மாறிப்போனார்.  ஆனால் இறுதியில் ஜெயித்ததென்வோ ஜெயவர்த்னே தான்.

1990 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறியதும் இலங்கை அரசு 1957 ஆம் ஆண்டு முதல் சீனாவுடன் கொண்டிருந்த நட்பு காலகட்டங்களை தூசி தட்டத் தொடங்கியது.  1993 ஆம் ஆண்டு தென் மேற்கு இலங்கையில் உள்ள கல்லே பகுதியில் உள்ள கப்பற்படை தளத்தில் சீனாவின் நோரிங்க்கோ நிறுவனம் [China North Industries Corporation (NORINCO)] மிகப் பெரிய ஆயுதக்கிடங்கு ஒன்றினை திறப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் இலங்கைக்குத் தேவையான அத்தனை ஆயுதங்களையும் இந்த கிடங்கிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். இந்த கிடங்கைத் தவிர இலங்கை வேறு எவரிடமும் வேறெந்த ஆயுதங்களும் வாங்கிக் கொள்ளக்கூடாது.  மேலும் அத்யாவ்ஸ்யமாக வேறெதும் ஆயுதங்கள் வெளியே வாங்க வேண்டுமென்றால் எழுத்துப் பூர்வ அனுமதி பெற்றுருக்க வேண்டும். மேலும் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை இந்த ஒப்பந்தத்தை புதுப்பித்தாக வேண்டும். இந்த இடத்தில் நாம் யோசிக்க வேண்டிய ஒரு விடயம் உண்டு.  எதற்கும் சிரிக்காத மத்தியில் இருந்த நரசிம்மராவ் அரசு இதை கண்டு கொள்ளவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நோரிங்க்கோ நிறுவனத்தை இலங்கைக்குள் கொண்டு வந்த விதத்தில் ஜெயவர்த்னே வாழ்நாள் சாதனையாக பீற்றிக் கொண்டார். இதன் அதி நவீன சாதனங்களை சீனாவிடமிருந்து இலங்கை பெற்று விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்ட போதிலும் 1990 வாக்கில் பிரபாகரன் கையே ஓங்கியிருந்தது என்பதை இங்கே குறிப்பிடுவதில் தவறில்லை.

ஆனால்.......?

4 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
உங்களது உழைப்பு முழுவதும் இருக்கிறது.
தொடர்ந்து படித்து வருகிறேன்.
வாழ்த்துக்கள்.

ஹேமா said...

முன்னையோர்களை எல்லாம் கிண்டிக் கிளறுறீங்க ஜீ.பொறுமையாத்தான் வாசிக்கணும்.ஆமா..என்னதான் பண்ணியிருக்கப்போறாங்க.அதுவும் தமிழனுக்கு !

http://thavaru.blogspot.com/ said...

அன்பின் ஜோதிஜி அறியாதவை அறிகிறேன்.

Bibiliobibuli said...

ஜோதிஜி, நான் ஏற்கனவே சொன்னது போல் உங்கள் இந்தப் பதிவுகளை மேலோட்டமாகப் படித்துவிட்டு ஓர் coutrsey கருதி பின்னூட்டம் இடும் விஷயமல்ல. ஒவ்வொன்றாய் நிதானமாய் படிக்கிறேன். நான் அங்கே, இங்கே என்று பகுதி, பகுதியாய் படித்ததை ஓர் தொகுப்பாய் இப்போது படிக்கிறன். நான் ஈழத்தில் இருந்த காலத்திலேயே இஸ்ரேல் இலங்கைக்கு செய்த உதவிகள் பேசப்பட்டன.

இந்திரா காந்தி அரசியலுக்கும், இந்தியாவின் மற்றவர்களின் மாறிவரும் உலக அரசியல் அணுகுமுறைக்கும் உள்ள வேறுபாடுகளுக்கு இலங்கை சிறந்த உதாரணம். இந்தியா பற்றிப் பேசி எனக்கும் வெறுப்பாகிவிட்டது. இப்போதைக்கு அதை தவிர்க்கிறேன்.

தமிழர்களை வைத்தே தமிழர்களை அவர்களின் விடுதலைப்போரை அழிப்பது இலங்கை மட்டுமல்ல இந்தியாவும் தான். அது எப்படி என்பதை அன்ரன் பாலசிங்கம் நிறையவே ஆவணப்படுத்தியிருக்கிறார். உங்களுக்கு அந்த வாசிப்பு உலகின் மிகச்சிறந்த இந்திய ஜனநாயகத்தில் சாத்தியமா தெரியவில்லை!!! அதில் என்னை ஆச்சர்யப்படுத்திய ஓர் விடயம் தந்தை செல்வாவின் இன்னோர் மகன் சந்திரஹாசனின் இந்திய ரா வுடனான பங்களிப்பு. இப்படி நிறைய சொல்லலாம். ஏற்கனவே அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதியதை மீள ஒப்பிப்பது போலாகும்.

இதையெல்லாம் ஓர் புத்தகமாக கொண்டுவந்தால் பலரை சென்றடையும். நீங்கள் ஈழத்துக்காய் உழைத்ததுக்கும் மனதளவில் ஏனும் ஓர் திருப்தி இருக்கும்.