Friday, June 24, 2011

முற்றுகைக்குள் இந்தியா --4

சென்ற அத்தியாயத்தில் இந்தியா இலங்கையில் உருவாக்கிய தொழில் ஒப்பந்தங்கள் மூலமும், அங்கே கொண்டு போய் கோடி கோடியாய் கொட்டிய தொழில் முதலீடுகளின் மூலம் அள்ளிக்குவித்த லாபங்களைப் பார்த்தோம்.  இயல்பாகவே நமக்கு ஒரு சந்தேகம் வர வேண்டும்.  நம் நாடு தான் அங்கே பலமான பட்டறையை போட்டுருக்கே?.  அப்புறம் எதுக்கு இலங்கை சீனா ஆதரவைத் தேடி ஓடுகின்றது? 

நாம் ஏன் பயப்படவேண்டும்?

அங்கேதான் வில்லங்கமே தொடங்குகின்றது.

உலகில் பார்வையில் அப்பாவியாகத் தெரியும் ரணில் விக்ரமசிங்கே எப்படி தந்திரமாக காய் நகர்த்தி கருணாவை விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு வெளியே கொண்டு வந்தாரோ அதைப்போலவே அவரின் ஆட்சியில் தான் பல விசயங்களை மறைமுகமாக செய்யத் தொடங்கினார்.  சந்திரிகா அதிபராகவும் ரணில் பிரதமராகவும் வந்த போது இருவரும் வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு பாதைகள் என்று சென்று கொண்டிருந்தாலும் இருவருக்கும் ஒரு விசயத்தில் மட்டும் ஒத்த கருத்து உண்டு.

நாம் சிங்களர்கள்.  இது சிங்கள நாடு.  இந்த நாட்டை சிங்களர்கள் மட்டுமே ஆள வேண்டும்.

கொஞ்சம் அசந்தாலும் தமிழர்கள் நம் தலைமேல் மொட்டை அடித்து மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்தும் தடவி விடக்கூடும் என்பதில் மிகவும் கவனமாகவே இருந்தார்கள்.

இந்த காலகட்டத்தில் தான் அதிக அளவு சர்வதேச ஒப்பந்தங்களை இருவரும் பறந்து பற்ந்து போய் கொண்டு வந்து இறக்கினார்கள். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு.  காரணம் கடந்த முறை ஆட்சியில் இருந்து சந்திரிகா அம்மையார் போட்ட ஆட்டத்தில் இருந்த மொத்த கஜானாவும் போர் பக்கம் கொண்டு கொட்டிவிட,  கொட்டி கவிழ்த்த பானை போலவே இலங்கை நிதியம் இருந்தது.

தமிழர்களை அப்புறம் பார்த்துக் கொள்வோம்.  முதலில் கடன் வாங்க வேண்டும்.  அதற்கு போர் நிறுத்தம் வேண்டும்.  ஒவ்வொருவரும் நாம் சென்றாலே கதவை சாத்துகிறார்கள்.  இப்போதைய சூழ்நிலையில் அதட்டிக் கேட்கவும் முடியாது என்ற இந்த எண்ணமே சந்திரிகாவையும் ரணிலையும் ஒரே புள்ளியில் கொண்டு வந்து சேர்த்தது.


காரணம் தொடக்கம் முதல் இலங்கையில் உள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்தியா என்றாலே பச்சை மிளகாய் போலவே இருக்கும் போல?    2002 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரணில் சீன பெட்ரோலிய நிறுவனமான SINOPEC ஐ உள்ளே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். ரணிலின் நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான (Ceylon Petroleum Corporation – CPC) 1070 பெட்ரோல் விநியோக மையங்களை சீனாவுக்கு கொடுப்பதே ஆகும். இந்த திட்டத்தை வாஜ்பாய் அரசு கடுமையாக எதிர்த்தது.  இந்த இடத்தில் தான் ராஜிவ் காந்தி ஈழ மக்களுக்காக போட்டப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்த வாசகங்கள் இந்தியாவுக்கு உதவியது.  இதைத்தான் இந்திய அரசு ரணிலுக்கு சுட்டிக்காட்டி மிரட்டியது.  திருகோணமலையில் உள்ள எண்ணெய் கலங்களை இந்தியாவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ய ரணில் சீனாவுக்கு முழுமையாக கொடுக்க எண்ணிய திட்டம் கைவிடப்பட்டது. குறிப்பிட்ட சதவிகிதம் சீனாவுக்கு வழங்கப்பட்டது.

சிங்களர்களை நம்ப முடியுமா?

இதற்காக ஒப்பந்தம் 2002 டிசம்பர் 5 அன்று இலங்கை சிபிசி க்கும் இந்தியாவின் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனுடன் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கை, இந்திய மற்றும் சீனா நிறுவனங்கள் மட்டும் தான் அடுத்த ஐந்தாண்டுகள் பெட்ரோலிய பொருட்கள் விற்க முடியும்.  வேறு எவரும் விற்கமுடியாது. முதல் ஐந்து வருடங்கள் இந்திய நிறுவனத்தின் மீது எந்த வரியும் விதிக்கக்கூடாது. அடுத்துவரும் வருடங்களில் இலங்கையில் நடைமுறையில் இருந்து 35 சதவிகிதத்திற்கு பதிலாக 15 சதவிகிதம் வரியே விதிக்கப்பட வேண்டும். இந்தியாவிலிருந்து ஐஓசி இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரியில்லை.

இதன் தொடர்ச்சியாக திருகோணமலையின் சீன வளைகுடாப் பகுதியில் இருந்த 99 எண்ணெய் கலன்களை நிர்வகிப்பதற்கான உரிமையும் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.  இந்த கலன்கள் இராண்டாம் உலகப் போர் தொடங்கிய காலகட்டத்தில் உருவாக்கப்பட்டதாகும். ஆக மொத்தத்தில் பெட்ரோல் மொத்த வியாபார உரிமையும், சுமார் 100 பெட்ரோல் விநியோக மையங்களும் 2003 பிப்ரவரியில் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது. இது அடுத்த 35 ஆண்டுகளுக்கான உரிமையாகும். இதன் அன்றைய மதிப்பு 375 கோடி. இது தவிர இலங்கையில் பெட்ரோலிய பொருட்களை சேமித்து வைக்கும் அரசு நிறுவனத்தில் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL)  மூன்றில் ஒரு பங்கு உரிமமும் இந்திய நிறுவனமான ஐஓசிக்கு வழங்கப்பட்டது. 

இந்த ஒரு பங்கு உரிமம் கொடுப்பதிலும் இலங்கை அரசு ஒரு தில்லாலங்கடி வேலையைக் காட்டியது. மூன்றில் ஒரு பங்கை வெளிப்படையாக ஏலமிட விருமப இந்தியாவின் நிர்ப்பந்தத்தால் அதையும் நிறுத்தி வைக்கப்பட வேண்டியதாகி விட்டது.  காரணம் வெளிப்படையாக ஏலமிடுவதன் மூலம் இந்த உரிமையை சீன அரசுக்கு கொடுத்து விடலாம் என்ற ரணிலின் எண்ணத்தையும் இந்தியா தவிடுபொடியாக்கியது.

இப்போது பொதுவான ஒரு விசயத்தைப்பற்றியும் பேசிவிடலாம்.

ஏன் இலங்கைக்கு இந்தியா மேல் கசப்பு?  

ஒரே காரணம் தமிழ்நாடு.  இங்கு வாழும் தமிழர்கள்.  

இந்தியா போன்ற நாட்டில் உள்ள ஜனநாயக ஆட்சியில் தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மிக முக்கியமானவர்கள்.  இந்தியாவின் ஒரு பகுதி தமிழ்நாடு.  இதற்கு மேல் தமிழர்கள்.  இந்த பாழாய்போன தமிழினம் தானே இங்கே இன்னும் வாழ்ந்து கொண்டு நம்மை சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  எத்தனை கலவரங்கள் நிகழ்த்திய போதிலும் குறிப்பிட்ட எண்ணிக்கை இருந்து கொண்டேதான் இருக்கிறது.  முழுமையாக அழிக்கவும் முடியவில்லை.  முடியும் போது கஜானாவில் பணமும் இருப்பதில்லை.  இங்கே ஏதாவது ஒன்றால் தமிழ்நாட்டில் சுயநலமாய் பொதுநலமாய் குய்யோ முய்யோ என்ற சப்தம் வேறு வந்து தொலைத்து மொத்தத்தையும் கெடுத்துவிடுகின்றது. இந்திய அரசாங்கம் பம்மி விடுகின்றது. என்ன செய்வது?  இப்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிறுத்தவும் முடியாது.  ஆனால் இவர்களை இங்கே பெரிய அளவில் வளர்த்து விடவும் கூடாது.

இந்தியாவைத் தவிர எந்த நாடுகள் இலங்கைக்குள் உள்ளே வந்தாலும் அவரவர் தொழில் உண்டு லாபம் உண்டு என்று பொட்டியை கட்டிக் கொண்டு சென்று விடுகிறார்கள்.  ஆனால் இந்தியாவிற்கு மட்டும் இது விதிவிலக்காக இருக்கிறது. வாஜ்பாயிடம் எந்த உதவி கேட்டாலும் தமிழ்நாட்டை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கொள்ளைப் புறமாகவே வரச்சொல்கிறார்? எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி?  பேசாமல் இந்தியாவிற்கு மாற்றாக சீனாவுடன் உறவு கொண்டால் தெரு வரைக்கும் ஆயுதங்களை கொண்டு வந்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். கடன் வேறு.  கடனுக்கு வட்டியும் இல்லை.  விலை மலிவும் கூட.  ஆனால் பாழாய் போன இந்தியா ஒவ்வொரு முறையும் உர் என்று பார்த்துக கொண்டேயிருக்கிறதே? 

நிச்சயம் ஈழத்தலைவர்கள் இப்படித்தான் யோசித்து இன்று வரைக்கும் இந்தியா மேல் வெளியே காட்டிக் கொள்ளமுடியாத கசப்பை கடைவாயில் வைத்திருக்கக்கூடும்.


ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் வியாபார ரீதியான எத்தனையோ உறவுகள், புரிந்துணர்வுகள் இருந்த போதிலும் இராணுவ ரீதியான எந்தவித முன்னேற்பாடுகள், உதவிகள் என்பது நடைபெறவேயில்லை.  இந்திய அமைதிப்படை திரும்பி 1990 முதல் 2003 வரைக்கும் பெரிதான அளவில் இல்லை என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். அதிலும் ராஜிவ் காந்தி கோர மரணத்திற்குப் பிறகும் கூட பெரிய அளவில் ஒரு முன்னேற்றமும் இல்லை. 1993 ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியில் இருந்த போது விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பலான எம்.வி.அஹாத் தினை இந்திய கப்பற்படை மறித்து மூழ்கடித்தது போன்ற ஒரு சில நிகழ்வுகள் மட்டுமே நடந்து கொண்டிருந்தது.


வாஜ்பாய் அரசாங்கத்திடம் இலங்கை அரசு ஆயுதங்கள் கேட்ட போதிலும் கூட இங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாகிஸ்தானிடம் வாங்கிக் கொள்ளுங்க என்று வாஜ்பாய் ஒதுங்கியே இருந்தார்.  ஆனால் யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகளால் இலங்கை இராணுவம் சுற்றி வளைக்கப்பட்ட பிறகே ரோந்து கப்பலான SLN SAYURA வழங்கப்பட்டது.

இதைப் போலவே 1990 முதல் 2003 வரைக்கும் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் இலங்கைக்குச் செல்லவில்லை.  முதல் முறையாக 2003 ஆம் ஆண்டு இந்திய கப்பற்படையின் தலைவர் அட்மிரல் மாதவேந்திர சிங் இலங்கைக்கு செல்ல திட்டம் வகுக்கப்பட்டது. 

சிங்களத் தலைவர்கள் தான கெட்டிக்காரர்களாச்சே? 

இதே சமயத்தில் பாகிஸ்தான் முப்படைத் தளபதியும், கார்கில் போருக்குத் தலைமை தாங்கியவருமான ஜெனரல் முகம்மது அஜிஸ் கான் தனது ஏழு நாள் சுற்றுப்பயணத்தை இலங்கையில் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்வில்லை. மோப்பம் பிடித்த இந்தியா கப்பற்படை தலைவர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. அப்போது இந்தியா கொடுத்த மிரட்டலில் இலங்கை ஆட்சியாளர்கள் சாக்குபோக்குச் சொல்லி சமாளித்தாலும் உள்ளே கருவிக்கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை.

சிங்களர்கள் இந்தியாவை "நண்பேண்டா" என்றார்கள்?  எப்போது?

மன்மோகன் சிங் பிரதமராக வர "எல்லாமே" சிறப்பாக நடைபெறத் தொடங்கியது.

7 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
கடுமையான உழைப்பு.
வாழ்த்துக்கள்.

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...

ஈழம்பீடியா

Charles said...

உங்கள் எழுத்துக்கு பரம ரசிக வாசகனாகிவிட்டேன் ஜோதிஜி. ஒவ்வொரு கட்டுரைக்குமான உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கின்றது. தொடரட்டும் உங்கள் சீரிய பணி...

ஜோதிஜி said...

நன்றி ரத்னவேல் தொப்பி.

சார்லஸ் ஏன் இரண்டு இடுகைகளை உருவாக்கி வைத்தும் ஒன்றுமே எழுதாமல் இருக்கீங்க. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

தாராபுரத்தான் said...

புத்தகமாக போட்டு தருவீங்களா..

ஜோதிஜி said...

வருக தொப்பி, ரத்னவேல் அய்யா,

தாராபுரத்தான்

குறிப்பிட்ட விசயங்களை மட்டுமே எழுத எண்ணி இப்போது இது இழுத்துக் கொண்டே செல்கின்றது. ஆனால் நிச்சயம் தெளிவான முறையில் இதை கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணியுள்ளேன். பார்க்கலாம். இறுதியில் மற்றவர்களின் கருத்துக்களை கருத்தில் கொண்டு முய்ற்சிப்போம்.