Friday, November 22, 2013

நம் கனவுகளின் நாயகன்


இன்று வரையிலும் பலரும் புலம்பிக் கொண்டுதான் இருக்கின்றனர். "என் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை" என்று. 

சிலரோ "நான் தமிழ் மணம் பக்கம் சென்று மாதங்களாகி விட்டது" என்கிறனர்.

இன்னும் சிலரோ "ஃபேஸ்புக் வந்தவுடன் வலைபதிவுகளுக்கு இருந்த மவுசு போய் விட்டது" என்கின்றனர்.

நீண்ட கட்டுரைகளைப் படிக்கத் தற்போது எவரும் விரும்புவதில்லை போன்ற அத்தனை புலம்பல்களையும் மீறி நாள்தோறும் புதியவர்கள் தனக்கென்று வலைபதிவுகளை உருவாக்கி தமிழிலில் எழுத முயற்சிப்பதும் நடந்து கொண்டேதானிருக்கின்றது. 

உண்மையான பொறியை அடைகாத்து வைத்திருந்தவர்களுக்கு வலைபதிவு என்பது மகத்தான வரமே. அத்தகைய பொறி இல்லாதவர்களுக்கு எப்போதும் போல பொழுது போக்கில் ஒன்று. 

தமிழ் வலைபதிவுகளில் த ம முன் அல்லது த ம பின் என்று தான் பார்க்க வேண்டியுள்ளது.இப்போது பயன்பாட்டில் உள்ள ஓட்டரசியலுக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் த ம 7 அல்ல என்பதை நினைவில் வைத்திருக்கவும். 

ஒவ்வொரு திரட்டிக்கும் உண்டான மரியாதையென்பது இன்றுவரையிலும் தனித்துவமாகத்தான் உள்ளது. இத்தனை களேபரத்திற்கிடையே தமிழ்மணம் திரட்டிக்கான ஆதரவென்பது புழுதியும் சகதிகளுக்கிடையே புதுச்செடி போலத்தான் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. 

தமிழ்மணம் உருவாகி பத்து வருடங்களுக்கு அருகே வந்து விட்டது. 

என்னைப் போலக் கணினியுடன் நாள் முழுக்க வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்களுக்கே இப்படி ஒரு உலகம் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளத் தெரியாமல் இருந்த கொடுமையைப் போல இன்னமும் பெரும்பான்மையான மக்களுக்குத் தமிழிலில் மின் அஞ்சல் அனுப்ப முடியும் என்பது கூடத் தெரியாத அளவுக்குத் தான் கற்றறிந்த கூட்டம் நாள் தோறும் இணையத்தில் புழங்கிக் கொண்டிருக்கின்றனர். 

நான் எழுதத் தொடங்கியது முதல் இன்று வரையிலும் திரட்டிகளில் இணைப்பதென்பது பெரிய சவாலாகத் தெரிந்ததில்லை. வேறெந்த பிரச்சனைகளும் உருவானதும் இல்லை. திரட்டி சார்ந்த அதீத மயக்கமும் உருவாகவில்லை. 

இன்று வரையிலும் என் மேல் தனிப்பட்ட அக்கறை கொண்ட தமிழ்வெளி குழலி, சர்ச்சையில் சிக்காத இன்ட்லி, தொடக்கம் முதல் இன்று வரையிலும் சர்ச்சைகளுடனே பயணப்பட்டு வரும் தமிழ்மணம். என என் எழுத்துக்களைப் பலரின் பார்வைக்குப் பட வைத்துக் கொண்டிருக்கும் மூன்று திரட்டிகளுக்கும் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். 

திரட்டிகள் மட்டுமே நம்மை அடையாளம் காட்டும் என்கிற நிலை இன்று மாறிவிட்டது. ஏனைய பிற சமூக வலைதளங்கள் ஏராளமாக உள்ளது. ஏதோவொரு வழியின் மூலம் இன்று உங்கள் தளத்திற்கு ஒருவரை வரவழைத்து விட முடியும். ஆனால் வந்தவர்களை நிரந்தரமாகத் தக்க வைப்பதில் தான் உங்களின் தனித்திறமை இருக்கின்றது. இந்தத் திறமை இருப்பவர்களுக்குத் திரட்டிகள் தேவையில்லை என்கிற ரீதியிலும் இருக்கின்றார்கள். "ஆற்றில் பாதி சேற்றில் பாதி" என்பவர்களும் இருக்கின்றார்கள். 

ஆனாலும் இணைய வாசிப்பை விட அச்சு ஊடகத்தைத்தான் நான் இன்று வரையிலும் விரும்புகின்றேன். 

அச்சு ஊடகத்திற்கு இன்று மிகப் பெரிய சவாலாக இணைய வாசிப்பு உருவாகிக் கொண்டிருக்கின்றது என்ற புலம்பலைத் தாண்டியும் இன்று வரையிலும் வெகு ஜன இதழ்களின் வாசிப்பாளர்களின் ஆதரவு குறைந்துள்ளதே தவிர நின்றுவிட வில்லை. குறைவு என்பதற்கான காரணம் இணையம் அல்ல. நீக்கமற ஊடுருவிய தொலைக்காட்சியே.

இந்த இடத்தில் தான் இணைய வாசிப்பின் சூட்சமத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 

தொழில் ரீதியாகக் கணினியுடன் நாள்தோறும் உறவாடிக் கொண்டு இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த இணைய வாசிப்பு சாத்தியம். அதுவே அவர்களின் சூழ்நிலைகள் மாற இணைய வாசிப்பென்பது கடினமே. ஒரு பத்திரிக்கையை கடந்த ஐந்தாண்டுகளாக ஒருவர் படித்துக் கொண்டிருப்பது சாத்தியமே. தமிழ்நாட்டிற்குள் எங்குச் சென்றாலும் அவரால் வாங்கி விட முடியும். வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் வளராத தொழில் நுட்பத்தில் இங்கே பலதும் சாத்தியமில்லை. 

கணினி மையத்தில் சென்று இவர் எழுதியதைப்படித்தால் தான் எனக்கு வேலையே ஓடும்  என்கிற நிலையில் தானா நம்மவர்கள் வாசிப்பு புலியாக இருக்கின்றார்கள்? 

இங்கே "நிரந்தர வாசகர்" என்பது வெறுமனே பொம்மலாட்டம். 

வந்து போய்க் கொண்டிருப்பவர்களை வைத்து தான் இணையம் வளர்நது கொண்டிருக்கின்றது. மற்றபடி வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு தமிழ் இணையம் என்பது மிகப் பெரிய வரப்பிரசாதமே. அதுவும் கூட தமிழர்களுக்கு பொழுதுபோக்கிற்கு மட்டுமே பயன் பட்டுக் கொண்டிருக்கிறது.

பலசமயம் நாம் இதற்குள் வருவதற்கு முன் எவரெல்லாம் இங்கு இருந்தனர்? எப்படியெல்லாம் இந்தத் தமிழ் இணையம் வளர்ந்தது என்பதைப் பல சமயம் ஆராய்ந்து பார்ப்பதுண்டு. 

திரட்டி என்ற வடிவம் அறிமுகமாவதற்கு முன் எழுதிக் கொண்டிருந்தவர்கள், குழும மின் அஞ்சலில் கும்மியடித்தவர்கள், உரையாடிக் கொண்டிருந்தவர்கள், வம்பு உருவாக்குவதை மட்டுமே கொள்கையாக வைத்திருந்தவர்கள், இலக்கிய ஆசான்கள், லேகிய மேதைகள், தாதாக்கள், என்று இணையத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் எவரும் இன்று காணாமல் போய்விட்டார்கள். அல்லது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 

வயதானவர்களுக்கும் இளைஞர்களும் ஒரு பெரிய இடைவெளி உருவாகுமே? இதைப் போலத்தான் இணையத்திலும் ஒவ்வொரு வருடத்திலும் மாறுதல்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவரின் தனிப்பட்ட கருத்து ரீதியான கொள்கைகள் காலாவதியாகிப் போகின்றது. சூடம் போலக் கரைய வைத்து விடுவதால் எண்ணங்களும் மாறிவிடுகின்றது. பொருளாதார நிர்ப்பந்தங்கள் அவரின் மூர்க்கத்தனத்தைக் குறைந்து விடுகின்றது. 

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என உள்ளே வருவதும் போவதும் இடையூறாத சுழற்சியில் வருகின்றார்கள். சிலர் நிலைக்கின்றார்கள். 

பலரோ காணாமல் போய் லைக் பட்டனில் அடைக்கலமாகி விடுகின்றார்கள். சிலர் குறிப்பிட்ட சிலரின் பின்னூட்டத்தில் பதில் கொடுத்து "நாங்களும் இருக்கின்றோம்" என்று காட்டிக் கொள்கின்றார்கள். சிலரோ "உங்கள் காலம் பொற்காலம்" என்று கூலி வாங்காமல் கூவிக் கொண்டிருப்பவர்களின் வார்த்தைகளில் திருப்தி பட்டுக் கொண்டு விடுகின்றார்கள்.

இவரை நம்மால் சந்திக்க முடியுமா? என்ற காலங்கள் போய்விடடது. அத்தனை பேர்களும் ஃபேஸ்புக்கில் வந்து அடைக்கலமாகி விட்டதால் கொஞ்சலாம், திட்டலாம், நடிக்கலாம். தற்போது புகழ் என்பது பொது மேடை. காரணம் நவீன தொழில் நுட்பம் தந்த வளர்ச்சி இது.

ஆனால் இன்று வரையிலும் தமிழ்மணத் திரட்டியை திட்டிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் எவரொல்லாம் தமிழ்மணத்தின் மூலம் பலருக்கும் தெரியக்கூடியவராக அறிமுகமானார்களோ அவர்கள் தான் இன்று "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்கிறார்கள். 

இன்று தினந்தோறும் உறவே எங்கள் திரட்டியில் இணைந்து பயன்படுத்துங்கள் என்கிற விளம்பர வாசகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்தத் திரட்டி என்ற வடிவத்தைத் தமிழிலில் முதல் முறையாக உருவாக்கியவரின் முகத்தை நான் நினைத்துக் கொள்வதுண்டு. 

அவரைச் சமீபத்தில் சந்தித்தேன். 

கிராமங்களில் வாழ்ந்தவர்கள் சிம்னி விளக்கு, அரிக்கேன் விளக்கு போன்றவற்றை இன்றும் மறந்திருக்க வாய்ப்பில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் மின்சாரத் தெருவிளக்கில் படித்தவர்களும் அதிகமே. 1879 ஆம் ஆண்டுத் தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்சாரம் நமக்கு இயல்பாக இன்று இருப்பதைப் போல உள்ளடங்கிய கிராமங்கள் வரைக்கும் பயன்பாட்டுக்கு வர நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. 84 வயது வரை வாழ்ந்து எடிசன் இன்று மறைந்து 72 ஆண்டுகள் முடிந்து விட்டது. 

இன்று நாம் மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது எடிசனை நினைத்துக் கொள்கின்றோமோ? 

இன்று தமிழ்நாட்டில் நிலவி கொண்டிருக்கும் மின்தடையை நினைத்து தான் நம் எரிச்சலை காட்டிக் கொண்டிருக்கின்றோம். 

ஒரு கண்டுபிடிப்பின் பரிணாமம் வளர வளர கண்டுபிடித்தவர் அஸ்திவாரம் என்ற நிலையில் மறந்து போய்ப் பயன்பாட்டில் உள்ள நவீனம் மட்டுமே தான் பேசப்படும். இது தான் நவீன தொழில் நுட்பம் உணர்த்தும் பாடம். மற்றக் கண்டுபிடிப்புகளை விட மின்சாரம் என்பதை கண்டுபிடிக்காத பட்சத்தில் உலகம் எப்படியிருக்கும் என்பதை எப்பொழுதாவது யோசித்திருப்பீர்களா? 

இதைப் போல இன்றைய வலைபதிவுகளின் வளர்ச்சியென்பது திரட்டி இல்லாதபட்சத்தில் எப்படியிருக்கும் என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். 

நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எந்த நவீன தொழில் நுட்பமும் நமக்குச் சுகம் தரும் வரையிலும் "இனியெல்லாம் சுகமே " என்று குதுகலிக்கின்றோம். ஒரு மணி நேரம் மின் தடை உருவாக ஆட்சியாளர்களின் மேல் நாம் எரிச்சலை காட்டுவதைப் போலத்தான் நம் பதிவு பலரின் பார்வைக்குப் படாமல் இருக்கின்றதே என்று வலைபதிவுகளைத் திரட்டும் திரட்டிகளைத் திட்டத் தொடங்கி விடுகின்றோம். 

தமிழ் எழுத்துரு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, குழும மின் அஞ்சலில் தங்களின் கருத்துக்களைப் பறிமாறிக் கொண்டிருந்தவர்கள் அடுத்தக் கட்டமாகத் தாங்கள் உருவாக்கிய வலைபதிவுகளில் தங்களின் கருத்துக்களை எழுதத் தொடங்கினர். மேலைநாட்டினர் உருவாக்கிய வலைபதிவின் தன்மையும் படிப்படியாக மாறிக் கொண்டேயிருந்தது. 

ஆங்கிலத்தில் தொடங்கியவர்களின் பயணம் படிப்படியாகத் தமிழுக்கு நகர்ந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு வலைபதிவுகளை உருவாக்கிக் கொண்டு தமிழிலில் எழுதத் தொடங்கினர். 

ஆனால் அது அங்கங்கே சிதறிக்கிடந்த எவருக்கும் பயன்படாத சில்லுகள் போலவே இருந்தது. குறிப்பிட்ட சிலரின் பார்வையில் மட்டும் பட எழுதியவர்களுக்கும் சோர்வு வர இந்தச் சமயத்தில் தான் இந்திய மொழிகளில் முதன் முதலாகத் தமிழுக்கென்று ஒரு திரட்டி இருந்தால் நன்றாக இருக்குமே? என்ற யோசனை ஒருவரின் மனதில் உருவானது. 

அவர் கற்ற எந்திரவியலுக்கும் கணினி சார்ந்த நிரலி மொழிகளுக்கும் எட்டு காத தூரம். ஆர்வமே வழிகாட்டி. அந்த ஆர்வமே அவரை ஓய்வு நேரத்தில் உழைக்க வைத்து இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் திரட்டியின் அஸ்திவாரம் உருவானது. 

தமிழிலில் எழுதிக் கொண்டிருப்பவர்களை ஒருங்கிணைக்க ஒரு திரட்டி இருந்தால் எப்படியிருக்கும் என்ற யோசித்தவரைப் பற்றி நமக்கு எத்தனை பேர்களுக்குத் தெரியும்? 

டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ் வலைபதிவுகளின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு மலர் வெளியிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இதற்கான காரணம் என் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு நாளின் பெரும்பான்மையான நேரத்தை கணினியுடன் கழிப்பவர்களிடம் புத்தக விழா குறித்துத் தெரிவித்த போது வலைபதிவுகள் என்றொரு உலகத்தை எவருமே அறிந்தவர்களாக இல்லை. 

விழா மலர் என்பது செலவு பிடித்த சமாச்சாரமாக இருந்தாலும் நம்மால் முடிந்த ஒன்று என்கிற ரீதியில் இந்த ஆர்வம் மேலோங்க ஆய்த்த பணியைத் தொடங்கினேன். 

என்னுடைய பணிச்சூழல், நண்பர்களின் செயல்பட முடியாத நிலையில் நெருக்கடி உருவானது. ஒரு நள்ளிரவில் கூகுளில் தேடிய போது தான் இந்த வலைபதிவு முதன் முதலாக என் கண்ணில் பட ஆச்சரியமாகி, நாம் எதிர்பார்த்த அத்தனை விசயங்களையும் இவர் எழுதியுள்ளாரே என்று அப்படியே சேமித்து, அவரின் அனுமதி பெற அவரை அழைத்த போது தான் முதன் முறையாக அவரின் அறிமுகம் கிடைத்தது. 

சேமித்த கட்டுரைகளை அச்சில் கொண்டு வர முடியாத அளவுக்கு அதில் உள்ள எழுத்துரு அமைப்புச் சிக்கலில் கொண்டு வந்து நிறுத்திய போது நண்பர் காட்டிய அசாத்திய உழைப்பால் விழாவில் மலராக வந்தது. இந்தத் தளத்தில் பக்கவாட்டில் நிரந்தரமாக வைத்தேன். 

என்றாவது ஒரு நாள் இவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 

அமெரிக்காவில் இவர் பணிபுரிந்த சமயத்தில் உருவாக்கிய தமிழ்மணம் 2003 இறுதியில் தொடங்கிய உழைப்பின் பலன் 2004 இறுதியில் வடிவம் பெற்றது. இன்று இதன் பரிணாம வளர்ச்சியில் சூடான இடுகையில் நாம் வந்து விட முடியுமா? என்ற ஏக்கத்தையும் உருவாக்கியுள்ளது. முதல் இருபதுக்குள் நாம் இல்லையா? என்று துக்கத்தையும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. 

தற்போது கோவையில் வாழ்ந்து கொண்டிருப்பவர் உறவினர்களின் விசேடங்களுக்குத் திருப்பூர் வந்து போய்க் கொண்டிருப்பது தெரிந்த போதிலும் நான் உங்களைச் சந்திக்க ஆவலாய் உள்ளேன் என்று தகவல் மட்டும் சொல்லியிருந்தேன். 

அவர் ஒவ்வொருமுறையும் வந்து போய்க் கொண்டேயிருந்தார். தரிசனம் மட்டும் கிடைத்தபாடில்லை. சில சமயம் அவர் இங்கு வந்திருந்த போது அவர் அழைப்பு விடுத்தும் என்னால் சந்திக்க முடியாத சூழ்நிலை. சில வாரங்களுக்கு முன் சந்தர்ப்பம் சரியாக அமைந்தது. அப்போது தான் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த தொழில்நுட்பம் சார்ந்த பல விசயங்களைக் கேட்டேன். 

பத்தாண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகள் சார்ந்த பல பதிவுகள் என் கண்ணில் காட்டினார். 

அவரைச் சந்தித்த போது குறிப்பாகத் தமிழ்மண தொடக்கக் கால வளர்ச்சி, சந்தித்த சவால்கள், கிடைத்த ஆதரவு போன்றவற்றைத் தான் அதிகம் கேட்டேன். அப்போது தான் கீழ்க்கண்ட இணைப்புகளை என் பார்வைக்குத் தந்தார். 

இது குறித்து முழுமையாக எழுதுவதை விட ஒவ்வொரு பகுதியிலும் வந்துள்ள பின்னூட்டங்களில் உள்ள வார்த்தைகளைப் படிக்கும் பொழுதே இவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

வலைபதிவில் எழுதி, ஓட்டு வாங்கி, பலரின் பார்வையில் பட்டு, ஹிட்ஸ் என்ற வார்த்தையோடு சிநேகம் கொண்டாடி, விளம்பரங்கள் மூலம் சம்பாரிக்க முடியுமா? என்று யோசிப்பவர்களுக்கும் 

எழுதக் கற்றுக் கொண்டதும் எழுத்தாளர் ஆசை உருவாகி நம் படைப்புகள் வெகுஜன இதழ்களில் வந்து விட முயற்சிகள் செய்பவர்களுக்கும், 

வலைபதிவில் எழுதியதை புத்தகமாக்கி நானும் எழுத்தாளர் தான் என்று சொல்லிக் கொள்பவர்களும்

ஏதோவொரு வகையில் இவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.  

இவர் மட்டும் எவரின் நன்றியையும் எதிர்பார்க்காமல் என்னுடைய தொழில் மூலம் உருவாகும் பிரச்சனைகளைக் சமாளிக்க ஏழெட்டு கணினி மொழிகளைக் கற்று வைத்துள்ளேன் என்று எதார்த்தமாக சொல்லிக் கொண்டு எது குறித்த ஆசையுமில்லாத மனிதராக நகர்ந்து சென்றவரை வினோதமாகப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தேன்

தமிழ்மணம் உருவானது தொடர்பான இவரின் முழுமையான அனுபவங்கள் குறித்து அறிந்து கொள்ளவலைப்பதிவுகளுக்காக ஒரு மேடைத்தளம்

துல்லியமான தமிழாக்கம்

தமிழ்மணம் தளத்துக்கு தொடுப்புக் கொடுங்கள்

தமிழ்மணத்தின் முதல் 100 நாட்கள்

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி


வாசிக்க

தமிழ்மணம் நட்சத்திரம் அறிமுகம்
20 comments:

phantom363 said...

From my own experience I would agree with you 100% on both your points. First, it is easy to get a visitor to one's website. But really to keep him coming back, you have write of a quality level that excites him. Suffice to say, that in Tamilmanam, on an average day, there are only two or three sites I visit. Most of them repeat the same formula over and over again and it becomes a chore to visit them. As a Tamilian living abroad for over 40 years, since 1973,the internet is a blessing beyond words. Till 2000 I missed out the happenings of Tamil Nadu. The biggest loss I now feel, is the Ilayaraja experience. After MSV it was Rahman, and the loss is mine. But I live in Toronto, amidst our Sri Lankan cousins, who are more devoted to the language and culture than us Indian Tamils. So not only we get now regular visit by artistes but also magazines and movies - the same day these are released in Chennai. God Bless them. God Bless all the readers and the author of this website. - rajamani

துளசி கோபால் said...

காசி ஆறுமுகம் அவர்களுக்கு பணிவான நன்றியும் ஏராளமான வாழ்த்துகளும் சொல்லிக்கொள்வது என் கடமை.

2004 ஆம் வருடம் தமிழ்மணம் அரங்கேறியதும், என் வலைப்பூவைத் தொடங்க நான் அவரைப் படாதபாடு படுத்தியிருக்கேன். முகம் சுளிக்காமல் கலப்பை பிடிக்கக் கற்றுக்கொடுத்தார். அன்று ஆரம்பித்ததை இன்னும் தொடர்வதே அவருக்கு நான் காண்பிக்கும் மரியாதை.

அவரைச் சந்திக்கும் விருப்பம் இன்னும் கைகூடவில்லை. அடுத்த பயணத்தில் நடக்குமா என்று பார்க்கணும்.

Anonymous said...

வெறும் டயரிக் குறிப்புகளிலும், கல்லூரி மலர்களிலும் எழுதிய என்னை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பன் ப்ளாக்கில் எழுதேன், என்றான் அங்கு போய் பார்த்தால் தலை வால் ஒன்றும் புரியவே இல்லை. அப்புறம் ஆர்குட்டில் எழுதினேன், ட்விட்டரில் எழுதினேன். பேஸ்புக் கணக்கை 2008-யில் உருவாக்கியும் அதை வைத்து என்ன செய்யிறது என மூடிவிட்டேன். அப்புறம் இணையத்தில் காலச்சுவடு, திண்ணை போன்றவைகளை வாசித்தேன். அப்புறம் தான் வலைப்பதிவு பக்கம் வந்து, எப்படியோ தமிழ்மணம் வந்தேன். அதுவும் வாசிப்பதோடு சரி, எதோ கட்டணம் என்றெல்லாம் இருக்கவே, இதில் சேர காசு வேண்டும் போல என்று தான் இந்த ஆண்டு வரை நினைத்திருந்தேன். நிச்சயம் தமிழ்மணம் வந்த பின் பல பதிவர்கள் பதிவுகள் வாசிக்கத் தொடங்கினேன். அதுவும் தமிழ்மணத்தில் வரும் 80% செய்தி தளங்கள், சினிமா, கவிதை, இப்படி உப்புச்சப்பில்லாதவை ஒரு குறிப்பிட்ட தளங்களே உண்மையான எழுத்த அனுபவத்தை தந்தது. சென்னையில் உள்ளவரை அச்சு எழுத்துகளையே வாசித்தேன். மாதம் ஒரு புத்தகம், வாரம் 2,3 இதழ்கள், தினமும் 2 செய்தி தாள்கள் என வாசிப்பேன். வெளிநாடு வந்த பின் அவற்றை ரொம்ப் மிஸ் பண்ணினேன். நல்ல வேளை மூட்டைக் கட்டிய வலைப்பதிவை திறந்து தமிழ்மணம் கண்டு, அப்படியே பேஸ்புக் பக்கமும் போய், எதோ ஆசுவாசமாக உள்ளது. தமிழ்மணத்தின் பின் இவ்ளோ சங்கதிகள் உள்ளதை இப்போது தான் அறிந்து கொண்டேன். தொகுத்தளித்ததுக்கு நன்றிகள். வலையில் தொடர்ந்து வாசிக்கும் தளங்களில் இத் தளமும் ஒன்று! நன்றாக எழுதுகின்றீர்கள். கணனியில் வேலை இல்லை என்பதால் அதன் முன் அமர்ந்து எழுத வாய்ப்பு குறைவு, வாரம் ஒரு பதிவாவது எழுதணும் அது தான் இப்போதைய எண்ணம், நிறைய விசயங்களை இணையம் சார்ந்த நுணுக்கங்களை அறியணும். வழிகாட்டினால் தெரிந்து கொள்வேன். நன்றிகள்!

Unknown said...

கனவு நாயகன் திரு .காசி ஆறுமுகம் அவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி !
நான் ஓராண்டிற்கு முன்புதான் தமிழ் மணத்தில் இணைந்தேன் .இன்றுடன் ஒரு லட்சம் 'ஹிட்ஸ் 'களை தொடுவதற்கு முக்கிய காரணமே தமிழ் மணம் தான் !என் நன்றியை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் .
தமிழுக்கு மிகப் பெரிய சேவை செய்த அவரின் எளிமை வியக்க வைக்கிறது .பதிவர் திருவிழாவில் அவரைக் கௌரவப் படுத்த வேண்டியது பதிவர்கள் நம் அனைவரின் கடமை என நினைக்கிறேன் !
வாழ்க வளமுடன் !

திண்டுக்கல் தனபாலன் said...

காசி ஆறுமுகம் அவர்களின் சேவைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

பல புதிய / பழைய தளங்கள் இன்னும் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைத்தும் பலருக்கும் (ஓட்டுப்பட்டையாக) வேலை செய்வதில்லை... உதவிக்கு : dindiguldhanabalan@yahoo.com

நேரம் கிடைக்கும் போது (மின் வெட்டு அப்படி...!) தளத்தை .com ஆக மாற்றி இணைத்தும் தருகிறேன்... புதியவர்களுக்கு மிகவும் உதவும்...

Raja said...

Anna,
Please check the hyper link "காசி - KASI ARUMUGAM".it's not working

/Raja

ஜோதிஜி said...

Thanks. Pls Now Check

டிபிஆர்.ஜோசப் said...

தமிழ்மண திரட்டியின் சேவை அளவிடமுடியாதுதான். அதில் சந்தேகமேயில்லை. எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் சுமார் பத்தாண்டுகாலம் எவ்வித கட்டணமும் இல்லாமல் பதிவுகளை திரட்டி என்னைப் போன்ற சாமான்யர்களுக்கும் வாசகர்களையும் நண்பர்களையும் பெற்றுத்தந்தது தமிழ்மணம்தான்.

kamalakkannan said...

தமிழ்மணத்தை தவிர இதுவரை வேறு எந்த திரட்டியையும் இதுவரை நான் உபயோகித்து இல்லை .

”தளிர் சுரேஷ்” said...

தமிழ் மண திரட்டியின் பிதாமகரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி! மின்சாரம் தடைபட்டுவிட்டது! பிறகு பார்க்கிறேன்! நன்றி!

எம்.ஞானசேகரன் said...

தமிழ்மண திரட்டியின் மூலம் வரும் வாசகர்களும் மிக அதிகம். மிகவும் சிரமப்பட்டுதான் இணைத்தேன். கத்துக்குட்டி அல்லவா? ஆனால் அப்புறம்தான் என் பதிவை பலரின் பார்வைக்கு கொண்டுசெல்ல முடிந்தது. தமிழ்மணத்திற்கும் உருவாக்கிய காசி அவர்களுக்கும் அவரை பெருமைப்படுத்திய உங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

” நம் கனவுகளின் நாயகன் “ – பொருத்தமான தலைப்புதான்.

//குறிப்பிட்ட சிலரின் பார்வையில் மட்டும் பட எழுதியவர்களுக்கும் சோர்வு வர இந்தச் சமயத்தில் தான் இந்திய மொழிகளில் முதன் முதலாகத் தமிழுக்கென்று ஒரு திரட்டி இருந்தால் நன்றாக இருக்குமே? என்ற யோசனை ஒருவரின் மனதில் உருவானது. //

உண்மைதான். மனதில் உருவான யோசனையை தமிழ்மணம் என்று உருவாக்கித் தந்த சகோதரர் காசி - KASI ARUMUGAM அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றி! அவர் ஆற்றிய பணிக்கு தமிழக அரசு அவரை கௌரவிக்க வேண்டும்.

அவர் செய்த தொண்டினை அவரது புகைப்படத்தோடு பதிவினைத் தந்த சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி!
'பரிவை' சே.குமார் said...

ஒரு அருமையான நபரைப் பற்றிய அழகான கட்டுரை அண்ணா...
தமிழ் மணத்தின் செயல் பாராட்டுதலுக்குரியது.

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://www.eraaedwin.com/2013/11/blog-post_23.html

கரந்தை ஜெயக்குமார் said...

எட்வின் அவர்களின் வலை தளத்தின் மூலமாகவே தங்களை அறிந்தேன். இதுவரை தங்களின் தளத்தினை அறியாமல் இருந்ததற்கு வருந்துகின்றேன். இனி தொடர்வேன். நேரமிருக்கும்பொழுது எனது தளத்திற்குத் தங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
http://karanthaijayakumar.blogspot.com

Kasi Arumugam said...

ஜோதிஜி, உங்கள் அன்பு கண்டு மிகுந்த மகிழ்ச்சி. . வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

Amudhavan said...

ஜோதிஜி, பணி மிகுதியால் அன்றைய தினமே பார்த்து, சரி பிறகு படித்துக்கொள்ளலாம் என்று நகர்ந்துவிட்ட இந்தப் பதிவினை இன்றைக்குத்தான் பார்த்தேன்.
இணையத்தில் உலா வருபவர்களுக்கு மிக முக்கியமான பதிவாக இது விளங்குகின்றது. திரு காசி ஆறுமுகம் அவர்கள் தமிழ் மொழிக்காக செய்திருக்கும் 'திரட்டி' சாதனை ஒன்றும் சாதாரணமானது அல்ல. அவர் மீது இதுநாள்வரை புகழ் வெளிச்சம் படாதது ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கிறது. அவர் தமக்கு விளம்பரம் வேண்டாமென்று கூச்சப்பட்டு ஒதுங்கினாலும் இழுத்து வந்து நிறுத்தி அவரைச் சிறப்பிக்க வேண்டும்.
உரியமுறையில் அவரை கௌரவிக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் தமிழகஅரசுக்கு இருக்கிறது.
பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்திடம் சொல்லி அடுத்த பெரியதொரு நிகழ்வில் அவருக்கான சிறப்புக்களைச் செய்யுமாறு அதன் தலைவரிடம் சொல்கிறேன்.
சரியான முறையில் அழகான வகையில் அவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கும் பாராட்டுக்கள்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

Ranjani Narayanan said...

அசாதாரண முயற்சி. ஒருவரது உழைப்பில் எத்தனை பேர் பலன் பெறுகிறார்கள் என்பது வியப்பான விஷயம். இனிமேல் தான் அவரது பதிவை முதலிலிருந்து படிக்க வேண்டும். தமிழ் வலைபதிவர் ஒவ்வொருவரும் திரு காசி அருமுகத்திற்குக் கடமைப்பட்டிருகிறோம்.

எனது நன்றியும், வாழ்த்துக்களும் உங்களுக்கும், திரு காசி ஆறுமுகம் அவர்களுக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...