Thursday, November 28, 2013

வலைக்காடு

ஆயிரத்து இருநூறு மதிப்பெண்களுக்கு ஆயிரத்து இருநூற்றி ஐம்பது மதிப்பெண்கள் பெற்று விட மாட்டானா தன் பிள்ளை? என்று ஏங்குகிற பெற்றோர்களைத் தான் பார்க்க முடிகிறது. இந்தப் பொது ஆசை, கல்வியை எந்த அளவு கீழே கொண்டு போய்த் தள்ளுகிறது என்பதை அவர்களின் பெரும்பாலோர் கொஞ்சமும் அறிந்திருக்க நியாயமில்லை. 

இத்தகைய சூழலில் ஏன் என் பிள்ளைகளை மதிப்பெண்கள் கொண்டு அளவிடுகிறீர்கள்? என்று ஒரு தந்தை கேட்கிறார் என்பது ஆச்சரியத்தை மட்டுமல்ல, மகிழ்ச்சியையும் சேர்த்தே நம்மிடம் அழைத்து வருகிறது, 

குறைவான மதிப்பெண்கள் பெறுகிற குழந்தை ஒருவனின் தந்தை இப்படிக் கோபப்படுகின்றார் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு அதில் எதுவும் இல்லை. ஆனால் எண்ணூறுக்கு எழுநூற்றி என்பது மதிப்பெண்கள் பெற்றிருக்கும் ஒரு குழந்தையின் தந்தை மதிப்பெண் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு உரத்த குரலெடுத்துக் கேட்கின்றார் என்றால் அவரைக் கொண்டாட வேண்டாமா? 

அதுவும் அவருக்கு வலை ஒன்றிருந்து அதில் கல்வி குறித்து அவரளவில் நியாயம் எனப் பட்டவற்றை வெளிப்படையாக எழுதுகிறார் என்றால் அவரைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை நாம் இயங்கிக் கொண்டிருக்கும் தளங்களில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற நியாயமான ஆசையில் தான் அவரது வலைதளத்தை அறிமுகம் செய்கிறேன். 

அவர் "ஜோதிஜி". அவரின் வலை "தேவியர் இல்லம்". 

ஒரு நாள் முழுக்க விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையிடம் "ஏன்டா படிக்கலையா"? என்று கேட்டால் "நாளை டெஸ்ட் இல்லை என்று சொல்வான்." இதைச் சொல்லிவிட்டு ஜோதிஜி சொல்கின்றார். 

"குழந்தைகளை டெஸ்ட்டுகள் தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன". 

இதற்குள் போவதற்கு முன் ஒரு விசயத்தைச் சொல்லி விட வேண்டும். 

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு டெஸ்ட் இல்லாத நாட்கள் அபூர்வமானவை. ஒவ்வொரு நாளும் நாலைந்து டெஸ்ட்டுகள் அவர்களுக்கு. ஆகக் குழந்தைகள் விளையாடுகின்றார்கள் என்றால் அவர்களுக்கு அடுத்த நாள் டெஸ்ட் இல்லை என்று அர்த்தம். இதைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் அவர்களுக்கு டெஸ்ட் இல்லையென்றால் அடுத்த நாள் விளையாட முடியும். இன்றைய சூழலில் குழந்தைகள் எப்பொழுதாவது தான் விளையாட முடியும் எனில் "மாலை முழுவதும் விளையாட்டு" என்ற பாரதியின் கனவு பொய்த்துப் போகாதா என்ற ஆதங்கத்தோடு இவரது வலை விவாதிக்கின்றது. 

பரிட்சைக்காவும், பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் இன்றைக்குக் கல்வி 
என்றாகிப் போன கவலையைப் பகிர்வதோடு பிரகாசம் என்பது கூட உடனடி வேலை வாய்ப்பு என்கிற அளவில் சுருங்கிப் போனதே  என்றும் கவலைப்படுகின்ற வலையாகத் தேவியர் இல்லம் இருக்கின்றது. 

மனிதர்களை உருவாக்கக்கூடிய கல்வி ஊழியக்காரர்களை உருவாக்குவதோடு சுறுங்கிப் போகிறதே என்பதில் அவருக்குள் அக்கறை நியாயமாகவே படுகிறது. பாடத்திட்டங்களின் கட்டமைப்பு குறித்தும் இந்த வலை சன்னமாகப் பேசுகிறது. பாடத்திட்டத்திற்கு அப்பால் பாடங்கள் போதிக்கப்படுவதில்லை என்றும் ஜோதிஜி இந்த வலையில் கவலைப்படுகின்றார். 

குழந்தைகளைப் பேசவிடாமலும், கேள்வி கேட்கவிடாமலும் மனனம் செய்து வாந்தியெடுக்க வைக்கும் இன்றைய கல்வி முறையை ஏறத்தாழ இந்த வலையின் அனைத்து பக்கங்களிலும் சபித்தவாறே பயணிக்கின்றார் ஜோதிஜி. 

போக. ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் தேர்ச்சி அறிக்கையில் கையொப்பமிட பெற்றோரை பள்ளிக்கு வரச்சொல்வார்கள். அது பல இடங்களில் செம காமெடியாக இருக்கும். எனக்கே இப்படிப்பட்ட ஒரு அனுபவம் நேர்ந்தது. 

கிஷோர் 12 ஆம் வகுப்புப் படித்த போது அவனது ஆங்கில ஆசிரியரைப் பார்க்க வரிசையில் ஒரு ஆளாய் நின்றிருந்தேன். 188 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். அவனது ஆசிரியர் ஒரு இளைஞர். எனக்குப் பாடமே நடத்தினார். ஆறு மாதங்களாக 12 ஆம் வகுப்பிற்குப் பாடம் நடத்தும் அவர் 22 ஆண்டுகளாக (அதே பள்ளியில் இரண்டு ஆண்டுகள்) 12 வகுப்புக்கு ஆங்கிலம் நடத்தும் எனக்கு வகுப்பு எடுக்க வேண்டிய சூழல். எதுவும் பேசாமல் "சரிங்க சார்" என்று சொல்லி கையொப்பமிட்டு வந்தேன். 

இது கூடப் பரவாயில்லை. பெற்றோர் கூட்டம் என்பார்கள். ஆனால் தயார் போனால் அப்பா இல்லையா? என்பார்கள். ஏன் தாய் என்பவள் பெற்றோர் இல்லையா? 

என் மகள் மனைவி வேலை பார்க்கும் பள்ளியில் தான் படிக்கிறாள். அவளது தேர்ச்சி அறிக்கையில் நான் தான் கையொப்பமிட வேண்டும். அம்மாவிடம் வாங்கிக்க என்றால்" சிஸ்டர் திட்டுவாங்க" என்கிறாள். 

தலைமை ஆசிரியை உள்ளிட்டு எல்லா ஆசிரியர்களும் பெண்களாகவே இருக்கும் ஒரு பள்ளியிலேயே இது தான் நிலைமை எனில் எங்கே போய் முட்டிக் கொள்வது? இத்தகைய கேவலமான ஆணாதிக்க மனோபாவத்தை எதிர்த்து ஜோதிஜி இன்னமும் எழுதுவார் என்றே எதிர்பார்க்கின்றேன். 

சேவை என்ற நிலையிலிருந்த கல்வி இன்றைய சூழ்நிலையில் வணிகமயமாகிப் போயுள்ளது. இன்றைய கல்வி ஏறக்குறைய மளிகைக்கடையில் துவரம்பருப்பு போய் வாங்குவது போல் உள்ளது. இன்றைய ஆசிரியரின் நிலையென்பது மளிகைக்கடையில் உள்ள ரேக்கில் துவரம்பருப்புப் பொட்டலத்தை எடுத்து தர வேண்டிய நிலையில் தான் உள்ளது. இதை இன்னமும் இவர் புரிந்து எழுத வேண்டும் என்பது நேயர்களின் விருப்பம். 

இந்த வலையில் நான் முக்கியமானதாகக் கருதும் மற்றொரு தலைப்பு "தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்கள்" என்பது ஆகும். 

இன்றைய ஆங்கில வழிக் கல்வி என்பது பாட்டியையும் பேரப் பிள்ளைகளையும் எப்படி அந்நியப்படுத்துகின்றது என்பதை அழகாக விளக்குகின்றது. இயற்கை மருத்துவம் குறித்து, வவ்வால் விலங்கா? என்பது குறித்து இப்படி ஏராளமாக இந்த வலையில் உள்ளது. கல்வியை மட்டுமே நான் எடுத்துக் கொண்டேன். 

அவசியம் பார்க்க வேண்டிய வலை. பாருங்கள். 

நன்றி புதிய தரிசனம் மாதமிருமுறை இதழ்

விமர்சனம் எழுதியவரின் பெயர் திரு. இரா. எட்வின் 

(தலைமையாசிரியர். பெரம்பலூர்)

வாசிக்க  


7 comments:

Anonymous said...

Very Nice... Biggest and Best List High Page Rank DoFollow Forums - Learn Anything Now

கரந்தை ஜெயக்குமார் said...

திரு இரா.எட்வின் அவர்களை நன்கறிவேன். ஒரு முறை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது. தேர்வுகளை மையமாகக் கொண்டு நடைபெற்று வரும் கல்வி முறை ,முற்றிலுமாக மாற்றப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். ஆசிரியர் என்ற முறையில் எனது கருத்தும் அதுவே,
நன்றி ஐயா

அறிவியல் தமிழ் said...

நமது கல்வி மாணவர்களின் மனப்பாடம் செய்யும் திறனை அதிகரிப்பதை தான் முதன்மையாக செய்கிறது. அதிலும் தாய்மொழி அல்லாத வேறு மொழியில் ஆரம்ப கல்வி இன்னும் படுமோசம்.இது மாணவர்களை படித்ததை தேர்வில் கக்கும் கிளிப்பிள்ளைகளாக ஆக்கி கொண்டிருக்கிறது. தன் பிள்ளை 800 க்கு 750 மதிப்பெண் வாங்கினாலும் மீதம் 50 மதிப்பெண் என்ன ஆச்சு என்று பிள்ளையை அடிக்கும் மனம் கொண்ட பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

படிப்பது அதை அப்படியே அச்சுமாறாமல் எழுதுவது மதிப்பெண் வாங்குவது தான் கல்வி என்றால் கணனிகள் தான் சிறந்த மாணவர்கள் என்று சொல்ல வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

வெகு சிறப்பாக விமர்சித்துள்ளார் திரு. இரா. எட்வின் அவர்கள்... விரைவில் நாம் அவரை சந்திப்போம்...

”தளிர் சுரேஷ்” said...

விமர்சன பகிர்வுக்கு நன்றி! அழகாக விவரித்துள்ளார்!

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

நல்ல விசயம் மெல்லத்தான் மலரும் .ஆனால் போகாது என்பது போல இன்னும் உங்களுக்கு உயரம் இருக்கிறது .

Unknown said...

அணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.