Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Monday, November 18, 2013

நாம் எழுதுவது சரியா?

கடந்த இரண்டு வருடங்களாகப் பதிவுலகில் பல பெரியவர்கள் என் கண்களுக்குத் தெரிகின்றார்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் தனக்கென்று ஒரு அடையாளத்தை நிறுவ முற்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றேன். 

அவர்களின் ஓய்வுப் பொழுது என்பது எவருக்கும் தொந்தரவு இல்லாமலும் இது வரையிலும் அவர்களுக்குக் கிடைக்காத சுதந்திரமும் கிடைக்கின்றது. எழுதும் பதிவுகள் மூலம் அங்கீகாரமும் கிடைக்கின்றது. 

இந்தச் சமயத்தில் தமிழ் எழுத்துக்கள் கணினி வரை வராமல், வளராமல் இருந்திருந்தால் என்னவாயிருக்கும் என்பதை யோசித்துக் கொள்வதுண்டு!. 

"உங்களால் மறக்க முடியாத நாள்"? என்று ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும் போது நம்மிடம் உள்ள சுக, துக்க நாள் ஏதோவொன்று நம் நினைவுக்கு வரும். 

நான் ஆறேழு வருடத்திற்கு முன்பு அலுவலகத்தில் இருந்த போது ஏதோவொரு தேடலில் என் கணினியில் தமிழ் எழுத்துக்கள் தெரிந்த போது நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. எந்த நாள் என்று கூடத் துல்லியமாக நினைவில்லை. இன்றும் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. 

கடந்த நான்கு வருடங்களில் என் எழுத்துக்கள் அச்சு ஊடகங்கள், புத்தக வடிவம் என்ற எத்தனையோ கடந்து வந்த போதிலும் கூகுள் தேடலில் தமிழ் மொழி வார்த்தைகள் வைத்து இன்று எதைப்பற்றி வேண்டுமானாலும் தேட முடியும் என்கிற அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதைப் பார்க்கும் இதற்காக உழைத்தவர்களை நினைத்துப் பார்க்கத் தோன்றியது. 

என் தேடல் தொடங்கியது....... 

பலவிதமான தளங்கள் என் பார்வையில் பட்ட போதிலும் சில வாரங்களுக்கு முன் பார்த்த படித்த தளம் ஒன்று முக்கியமானது. 

நான் வேர்ட்ப்ரஸ் ல் எழுதத் தொடங்கிய பிறகு ஆச்சரியங்கள் மாறி இயல்பான நிலைக்கு வந்த பின்பு தமிழ் மொழி குறித்த உண்மையான ஆர்வமே எனக்குள் உருவானது. 

எழுதத் தொடங்கிய முதல் மூன்று மாதத்தில் என்னைப் போலவே எழுதிக் கொண்டிருக்கும் உள்ளூர் நண்பர் உங்கள் எழுத்து நடையைப் பார்த்து நானும் மொழியின் தன்மையை மாற்றியுள்ளேன். அழகான தமிழ்வார்த்தைகளை நானும் அறிமுகம் செய்து வைக்க முயற்சிக்கின்றேன் என்றார். 

அப்போது அவரின் பாராட்டு எனக்குப் பெரிய அங்கீகாரமாகவே தெரிந்தது. 

ஆனால் எழுதும் போது அவசரத்தில் வரும் பிழைகள், தெரிந்தாலும் பணிச்சூழல் காரணமாகவும், பொறுமையின்மையினாலும் அதைக் கண்டும் காணாமல் நகர்த்திய சூழ்நிலைகள் என்று கடந்து வந்த இந்த ஐந்தாம் ஆண்டில் திடீரென்று ஒரு நாள் இந்தத் தளம் என் கண்ணில் பட்டது. 

ஏற்கனவே இந்தத் தளத்தைப் பார்த்து இருந்த போதிலும் இவர் உருவாக்கிய இந்த மென்பொருள் தான் அதிக அதிர்ச்சியைத் தந்தது.

காரணம் இதில் என் பழைய பதிவுகளைத் தூக்கிப் போட்டுச் சோதித்த போது தமிழ் மொழியைப் பற்றி நீ பேசத் தகுதியான ஆளா? என்று கேட்பது போல இருந்தது. 

நம் நாட்டில் உள்ள சாதிப்பிரிவினைகளை எதிர்காலத்தில் பொருளாதரக் காரணிகள் மாற்றி விடும் என்று உறுதியாக நம்புகின்றேன்.

சாதி ரீதியான பாகுபாடுகளைப் போலப் பணக்காரன், நடுத்தரவர்க்கம், ஏழை, பரமஏழை என்ற நான்கு வட்டத்திற்குள் நின்றே தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இது என் தனிப்பட்ட கருத்து. 

ஆனால் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வரும் ஒவ்வொரு துறை சார்ந்த தொழில் நுட்பமும் என்ன மாதிரியான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பதை எவராலும் இறுதியிட்டு கூற முடியாத நிலையில் தான் இருக்கின்றோம். இந்த மாத அறிமுகமென்பது அடுத்த மாதம் புதிதாக வந்த ஒரு தொழில் நுட்பம் அதைக் காணாமல் போக்கி விடுகின்றது. 

சமீபத்தில் நான் ரசித்த பிரிவினைகளை உடைத்த தொழில்நுட்ப காணொளி காட்சியும் இதைத்தான் எனக்கு உணர்த்தியது. 

தமிழ் எழுத்துருவை கணினி மொழியில் உருவாக்கியவர்கள், உருவாக்க காரணமாக இருந்தவர்கள், அதனைப் பல வகையில் மேம்படுத்தியவர்கள், மேற்கொண்டு வளர்த்தவர்கள், பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள், எளிமைப்படுத்தியவர்களைப் பற்றிய தேடல் கடந்த ஒரு மாதமாக மனதில் ஓட நான் பார்த்த படித்த தளங்களைப் பற்றித் தனியாக எழுதுகின்றேன். 

ஆனால் இவர் உருவாக்கிய நாவி என்ற இந்த மென்பொருள் என்னைப் போன்ற அவசர மனிதர்களுக்கும்,தொடர்ந்து பதிவு எழுதிக் கொண்டு இருப்பவர்களுக்கும் முக்கியமாக உதவக்கூடியது. மொழிக் குழப்பம், எழுத்துப்பிழைகளை இனம் கண்டு பிடிக்கத் தெரியாமல் இருப்பவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் மிக மிகப் பயன் உள்ளதாக இருக்கும்.  நான் எழுதிய கடந்த நாலைந்து பதிவுகளை எழுதி முடித்த பிறகு இந்த நாவியில் போட்டு பரிசோதித்த பிறகே வலையில் ஏற்றுகின்றேன்.

இந்த மென்பொருள் வளரும் நிலையில் இருந்தாலும் கூட இப்போது அளிக்கும் சேவை என்பதே பல வகைகளில் பலன் உள்ளதாக உள்ளது.

மற்றொரு ஆச்சரியம், 

இன்று தமிழ் எழுத்துரு குறித்துத் தீவிரமாக இணையத் தளத்தில் (மட்டும்) விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தமிழ்மொழியின் காலத்தை 2500 வருடங்கள் என்று உத்தேசமாகக் கணக்கிடுகின்றார்கள். 

ஆனால் இன்று வரையிலும் இந்த மொழியின் தோற்றுவாய் குறித்து ஆதாரப்பூர்வமான தகவல்கள் நம்மிடம் இல்லை. காரணம் எந்த ஆவணமும் நம்மிடமும் இல்லை. 

தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா அவர்களின் முயற்சியில் தொடங்கி இன்று வரையிலும் தமிழ் மொழிக்காகத் தனிப்பட்ட நபர்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் அல்லது ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த மொழி வளர காரணமாக இருந்துருக்கின்றார்கள். 

இதே போல நீச்சல்காரன் தனக்குப் பெயர் வைத்துக் கொண்டுள்ள இந்த நண்பரும் தமிழ் மொழிக்காகத் தொழில் நுட்ப ரீதியாகப் பல அற்புதமான வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார். 

ஒவ்வொரு காலகட்டத்திலும் வியாபாரிகள், பிழைப்புவாதிகள் என இரண்டு கூட்டத்திடமும் சிக்கியிருந்த இந்த மொழியை எவரோ ஒருவர் தன்னலமற்றுத் தங்கள் வாழ்க்கையை இழந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாகக் கணினியில் தமிழ் மொழி வளர்ந்த வரலாற்றிலும் நான் படித்த கட்டுரைகள் வாயிலாக இதைத் தான் கவனித்தேன். 

ஆனால் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் எவரும் தங்கள் வாழ்க்கையை இழக்காமல் தாங்கள் பணிபுரியும் சூழலுக்கிடையே இதிலும் ஆர்வம் செலுத்தி தமிழ் மொழியைக் கணினி மொழியாக மாற்றியுள்ளனர்.

அதிகப்படியான நண்பர்கள் கணினித்துறைக்கு அப்பாற்பட்டு வேறு துறையில் இருந்து கொண்டு தங்கள் சுய ஆர்வத்தின் மூலமே இந்த தொழில் நுட்ப அறிவை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதை இங்கே குறிப்பிட்டு ஆக வேண்டும்.

ஒவ்வொரு சமயத்திலும் உருவான போட்டித் சூழலில் அவரவருக்குத் தெரிந்த வகையில் பல விதமான எழுத்துருக்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கி இன்று "வலிமையானது வெல்லும்" என்கிற ரீதியில் இன்று எவர் வேண்டுமானாலும் தனக்கு வசதியான மென்பொருள் மூலம் தமிழ்மொழியில் கணினி வழியே, கைபேசி மூலம் உலகத்தில் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் உரையாட முடியும் என்கிற நிலைக்கு வளர்ந்துள்ளோம். 

இந்தச் சமயத்தில் மற்றொரு விசயத்தை நினைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது. 

நாங்கள் மொழி 'இனக் காவலர்கள்' என்று சொல்லியவர்களும், 'தமிழே என் மூச்சு'என்றவர்களும் எவருமே இது போன்ற பணிகளில் தங்கள் சுண்டுவிரலைக்கூட நகர்த்தவில்லை.

அரசு சார்ந்து செயல்பட்ட மொழித்துறை அமைப்புகளும், இதற்கென உருவாக்கப்பட்ட குழுவினர்களின் செயல்பாடுகளும் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவான செயல்பாடுகளையே சாதித்துக் காட்டியுள்ளனர்.  இன்று வரையிலும் முழுமையாக கலைச்சொல் அகராதியை உருவாக்க முடியாமல் இருப்பதே இதற்கு சான்று. அருகே உள்ள கர்நாடகா நம்மை விட பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இது போன்ற அமைப்புகள் தனிப்பட்ட நபர்களின் புகழைப் பரப்பவும், துதிபாடிகளை வளர்க்கவும், ஒதுக்கிய பணத்தை சுருட்டவும் மட்டுமே உதவியது.

இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது.

சுய ஆர்வமுள்ள தொழில் நுட்ப வாதிகளால் மட்டுமே இன்று "தமிழ் காலம் கடந்தும் வெல்லும்" என்கிற நிலைக்கு வளர்ந்துள்ளது. 

தமிழ் எழுத்துரு உருவாக்கம் என்பது தேவைப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளது. தமிழிலில் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்குக் கூட அவர்கள் தேர்ந்தெடுக்க நிறைய (மென்பொருட்கள்) வாய்ப்புகள் உள்ளது. 

மீதி இருப்பது இரண்டே இரண்டு வேலைகள் மட்டுமே. 

ஒன்று மொழி மாற்றி. மற்றொன்று ஓசிஆர் மென்பொருள். 

தமிழ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்றுவதும் உண்டான தொழில் நுட்பத்தில் நாம் தொடக்க நிலையில் தான் இருக்கின்றோம் என்றே நினைக்கின்றேன். கூகுள் வழங்கும் சேவை என்பது ஜுனுன் தமிழ் என்றே அழைக்கப்படுகின்றது. 

ஒவ்வொருவரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கும் சர்வதேச ஆங்கில மொழிக்கு உண்டான மரியாதையைப் போல ஒரு மாநில மொழி அடைவது கடினம் என்றாலும் உலகமெங்கும் பரவியிருக்கக்கூடிய ஆங்கிலம் தெரியாத தமிழர்களுக்கு இந்தச் சரியான மொழி மாற்றி மென்பொருள் வரும்பட்சத்தில் ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் உள்ள எல்லைக்கோடு அழிக்கப்படும் என்றே நம்புகின்றேன். 

இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. 

ஓசிஆர் என்பதன் வளர்ச்சி தமிழ் மொழியில் சோதனை முயற்சியில் தான் உள்ளது. மேம்பட்டு வளரும் போது அத்தனை ஆவணங்களும் அழியாமல் பாதுகாக்கப்படமுடியும். 

கணினி சார்ந்த துறையில் வல்லுநராக இருப்பவர்கள் இரண்டு ரகமாக உள்ளனர். 

ஒன்று பணிபுரியும் நிறுவனத்திற்கு விசுவாசமாக இருந்து தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்பவர்கள். தமிழர்களாக இருந்தாலும் பணிபுரியும் சூழல் தந்த பொருளாதார வளர்ச்சியின் காரணமாகத் தங்களைக் கணவானாக மாற்றிக் கொண்டவர்கள். 

ஆனால் தமிழ் மொழியின் சூட்சமம் குறித்து அறியாமல், தான் கற்று வைத்துள்ள அறிவியல் படிப்புகளோடு இயல்பாக வளர்த்துக் கொண்ட தொழில் நுட்ப அறிவின் காரணமாகப் பலரும் இந்த மொழியின் வளர்ச்சியில் பிரமிக்கத் தக்க பங்களிப்பை செய்துள்ளனர். 

அனுபவ படிப்பு மூலம் கற்றுக் கொண்ட கணினி சார்ந்த அறிவையும் வைத்து இன்று தன்னை மொழி ஆர்வலாக வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே உழைத்துக் கொண்டிருக்கும் நண்பர் நீச்சல்காரனனுக்கு என் வாழ்த்துகள். 

நீச்சல்காரன் தமிழ்மொழி குறித்த தொழில் நுட்பம் சார்ந்த கட்டுரைகள், அவரின் ஈடுபாடு, அவர் கற்ற தொழில்நுட்பத்தை இந்த மொழிக்காகச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அவரின் உழைப்புக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு இந்த மென்பொருளை பரவலாக்கம் செய்ய உதவலாமே? 







தொடர்புடைய பதிவுகள்

இதற்குத் தானே ஆசைப்பட்டாய்?