Tuesday, June 26, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 3


அப்போது +2 படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பில் என் டெஸ்க் ல் என்னருகே இருந்தவன் பெயர் ஜம்புலிங்கம். சரியான முரடன். படிப்பில் சுமார் ரகம். நான் செய்ய முடியாத சாகச வேலைகளை எல்லாம் அவன் தினமும் வகுப்பில் செய்து கொண்டிருப்பான். அவன் சார்பாகப் பல முறை நானும் மாட்டிக் கொண்டதுண்டு. 

ஏதோவொரு பிரச்சனை ஒன்று உருவானது.

"வாங்க ஸ்ட்ரைக் பண்ணலாம்" என்று அனைவரையும் வெளியே அழைத்துக் கொண்டு வந்து விட்டான். பெண்களையும் சேர்த்து மொத்தம் முப்பது பேர்கள். நான் குதுகலமாகவே இருந்தேன். 

அப்போது விலங்கியல் ஆசிரியர் நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்தார். அவர் பெயர் டி.குமரேசன். கடா மீசை. புல்லட்டில் வருவார். எடுத்தவுடன் கை நீட்டி விடுவார். பள்ளியில் அவரிடம் அடிவாங்காதவர்களே குறைவு. என்னை அவருக்கு ரொம்பவே பிடிக்கும். காரணம் அக்காக்கள், அண்ணன்கள் அனைவரும் அவரிடம் தான் படித்தார்கள். என்னையும் படிக்கக்கூடியவன் பட்டியலில் வைத்திருந்தார். 

அவர் வருவதைப் பார்த்து நான் பின்னால் நின்று கொண்டேன். வந்தவுடன் என் பெயரைச் சொல்லி அவன் எங்கே? என்று கேட்டார். நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன். சட்டையைக் கொத்தாகப் பிடித்து விட்டார் ஒரு அறை. "ஸ்ட்ரைக்கா பண்றே? போய் உங்கப்பனைப் போய்க் கூட்டிக்கிட்டு வா?" என்று எத்தி ஒரு உதை விட எனக்குச் சப்தநாடியும் அடங்கி விட்டது. 

அவர் அடித்ததற்காக அல்ல. அப்பா என்ற பெயரைச் சொன்னதற்காக. 

அவர் இவரை விடப் பெரிய ஆளு. உங்களை வாத்தியார் கூட்டிக்கிட்டு வரச் சொன்னார்? ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ளே காட்டுத்தனமாக அடிவிழத் தொடங்கும். 

டக் கென்று டிகே விடம் "சார் இவன் தான் எங்களைக் கூட்டிக் கொண்டு வந்தான்" என்று கதறி அழுது அப்புறம் உள்ளே சென்றது தனிக்கதை. 

கல்லூரி வந்து தான் ஆசிரியர்களிடம் அடிவாங்கியது நின்றது. ஆனால் கல்லூரி வந்த போதிலும் அப்பா கொடுத்த பூஜைகள் எப்போதும் போல நடந்து கொண்டே தான் இருந்தது. ஒன்றும் பேசவே முடியாது. பேசவும் கூடாது. பேசப் பேச ஆயுதங்கள் மாறிவிடும். 

இவற்றை மகள்களிடம் அவ்வப்போது சொல்வதுண்டு. கடந்த மூன்றாண்டுகளாக அவர்கள் எதையும் காதில் வாங்குவதே இல்லை. குறிப்பாக ஆசிரியர்கள் குறித்துப் பெரிய அளவுக்குக் கண்டு கொள்வதே இல்லை. எனக்கு வருத்தமாகவும் குழப்பமாகவும் இருந்தது. இந்த வருடம் பள்ளி தொடங்குவதற்கு முன்பு போய்ப் பழைய ஆசிரியர்களைப் பார்த்து விட்டு வாங்க. நன்றி சொல்லிட்டு வாங்கன்னு அனுப்பி வைத்தேன். அவர்கள் போக மாட்டேன் என்றார்கள். 

கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தேன். 

வந்ததும் ஆளாளுக்கு என்னை எகிறத் தொடங்கினார்கள். "நாங்கள் சொன்னோம்லே? அவர்கள் எல்லாரும் சம்பளத்துக்கு வேலை பார்க்க வருகிறார்கள். நீங்க தான் பெரிசா நினைத்துக்கொண்டு இருக்கீங்கன்னு" சொல்ல என்ன நடந்தது? என்று கேட்டேன். 

"இந்த வருசம் புத்தகம் ரொம்பவே கடினமாக உள்ளது. நீங்க எல்லாம் எப்படித்தான் படிக்கப் போகிறீர்களோ?" ன்னு பயமுறுத்துகிறார்கள்? என்று சொன்னார்கள். அப்போது பாடப் புத்தகங்கள் எதுவும் கொடுக்கவில்லை. பள்ளி திறந்து ஒரு வாரம் கழித்துத்தான் கொடுத்தார்கள். பாடப்புத்தகம் இல்லாமல் பாடமும் நடத்தினார்கள். ஆனால் தவறாமல் ஒவ்வொரு ஆசிரியர், ஆசிரியைகளும் கடினம் என்ற வார்த்தையை ஒப்பிக்க எனக்கு எரிச்சலாகி விட்டது. 

வீட்டில் ஒருவருக்குக் கணக்குப் பாடம் என்றால் வேப்பங்காய் போலவே இருக்கும். அவருக்குக் கணக்குப்பாடம் டியுசன் சொல்லிக் கொடுக்க முடியுமா? என்று கேட்டு வர ஒரு ஆசிரியையின் வீட்டுக்கு அம்மையாருடன் சென்று இருந்தேன். மகளின் பலம் பலவீனம் பற்றி நன்றாகவே புரிந்து வைத்து ரொம்பவே அழகாகப் பேசினார். 

ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. "இரண்டு நாள் கழித்து உங்கள் மகளிடம் சொல்லிவிடுகின்றேன்" என்று சொல்லி எங்களை அனுப்பி வைத்தார். வீட்டுக்கு வந்தவுடன் ஒரு மகளிடம் அவர் எந்த அளவுக்கு நல்லவராக இருக்கின்றார்? தெரியுமா? என்று புகழ்ந்து பேச ஒரு மகள் சொன்னார். "அப்பா இப்போது நியூஸ் ரீல் ஓடுகின்றது. இரண்டு நாள் சொல்லியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் அப்போது தெரியும்?" என்று பீடிகையுடன் நக்கல் செய்தார். எனக்கு அப்போதும் குழப்பமாகவே இருந்தது. 

இரண்டு நாள் கழித்து ஒருவர் பள்ளியில் இருக்கும் போது அந்த ஆசிரியையிடம் போய்க் கேட்டது போது அவர் சொன்னது.

"சரிடா... நான் பள்ளிக்கூடம் முடிந்ததும் ஹோம் டியுசன் போறேன்டா. உங்கப்பா சொல்ற மாதிரி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த முடியாது. இருபது பேர்கள் படிக்கின்றார்கள். நாங்கள் இரண்டு பேர் பார்ட்னர் போட்டு டியுசன் நடத்துறோம். வாரத்துக்கு இரண்டு நாள். மாதம் 500 ரூபாய். கேட்டுட்டு வந்து சொல்லு. நான் ஹோம் டியுசன் முடித்து விட்டு அவங்களைப் பார்ப்பேன்" என்று சொல்லி அனுப்பி உள்ளார். 

இதை வந்த போது சொன்ன மகள் ஒருவர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு இருந்தார். 

"நீங்க நாங்கள் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் படித்த போது இருந்த மிஸ் மாதிரி இப்ப இருக்கிற மிஸ்களை நினைக்குறீங்க. அவர்கள் எப்படிச் சம்பாரிக்கலாம்ங்றதுல தான் குறியா இருக்குறாங்க? நாங்கள் சொன்னா நீங்க உங்கள் பழைய செண்டிமெண்ட் கதைகளை எடுத்து விடுகிறீர்கள்" என்று கலாய்த்தார். 

அப்போது தான் அங்கே உள்ள ஒவ்வொரு மிஸ்களையும் பற்றி வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றினார். வருத்தமாகவே இருந்தது. 

எல்லாத்துறையிலும், எல்லா நிலையிலும் உள்ளவர்களுக்குப் பணம் என்பது பாடாய்ப் படுத்துகின்றது. இதுவே தலைப்புச் செய்தியாக இருப்பதால் அவரவர் தேவைகள் தான் இங்கே ஒவ்வொருவரையும் உந்தித் தள்ளிக் கொண்டே யிருக்கின்றது. 

நான் மகள் டியுசனுக்காகப் பேசச் சென்ற ஆசிரியை ஒவ்வொரு மாணவர்களின் நிறை குறைகளைப் பற்றித் தெளிவாகவே பேசி அவர்களை எப்படி வழிநடத்த வேண்டும்? என்று சொன்னவர் கடைசியாகச் சொன்னது தான் அதிர்ச்சியாக இருந்தது. "நாங்கள் என்ன சார் செய்ய முடியும்? எங்களுக்கு நாற்பது நிமிடம் தான் ஒரு பீரியட் க்கு இருக்கு. எங்கள் வேலை முடிந்ததும் போய்க்கொண்டே தான் இருக்க வேண்டியிருக்கு" என்றார். 

வேறு சில கேள்விகள் கேட்கத் தோன்றியது. கேட்காமல் வந்து விட்டேன். 

நீட் என்ற வார்த்தை தமிழகத்திற்கு அறிமுகமான பின்பு இங்கு மிகப்பெரிய வணிக சந்தை உருவாகியுள்ளது. பள்ளிகளும், ஆசிரியர்களும் தலைகீழாக மாறியுள்ளனர். பள்ளி முதலில் கேட்பதே நீட் பரிட்சையில் சேர்த்து விடுங்கள் என்பது தான். எங்கு பார்த்தாலும் தட்டியில் விளம்பரங்கள் காணக்கிடைக்கின்றது. தினமும் பத்திரிக்கையில் நுழைவுத்தேர்வு குறித்து, தங்கள் பெருமைகளை பறைசாற்றி தினமும் வந்து கொண்டேயிருக்கின்றது. 

இப்போது ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி டியுசன். வாரத்தில் சில நாட்கள். இது தவிர ஹோம் டியுசன் என்ற பெயரில் (ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 5000) வசதி படைத்தவர்களின் குழந்தைகளுக்கு வீட்டுக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுக்கும் கலாச்சாரத்தில் பல ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளனர். 

முன்பு பதினோராம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படுவதில்லை என்று அதற்கு அரசு பொதுத் தேர்வு என்று கொண்டு வந்து தனியார் பள்ளிக்கூடத்தின் சேட்டைகளை அடக்க இப்போது ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் நடத்தாமல் ஒரு பருவம் முடிந்து பத்தாம் வகுப்பு பாடங்களையே நடத்துகின்றார்கள். அப்பொழுதே பத்தாம் வகுப்பு புத்தகங்கள் கொடுத்து அந்த வருடமே மொத்த பாடங்களையும் நடத்தி முடித்து விடுகின்றார்கள். எந்தப் பாடம் முடிக்காமல் இருக்கின்றார்களோ அதனைக் கோடை விடுமுறையில் வரவழைத்து அதனையும் அப்பொழுதே நடத்தி முடித்து விடுகின்றார்கள். பள்ளி திறந்ததும் தினமும் டெஸ்ட். 

பத்தாம் வகுப்பில் எந்தப் புத்தகமும் வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் எப்போதும் போல பள்ளிக்கட்டணம், புத்தககட்டணம் என்று எல்லாவற்றையும் பள்ளிக்கூடம் வசூலித்து விடுகின்றது. இது தவிர மற்றொரு கொடுமையும் உண்டு. மாலை 7.30 மணிக்கு வரைக்கும் வகுப்பு உண்டு. மாலையில் ஒரு கப் சுண்டல் கொடுக்கின்றார்கள். மாதக்கட்டணம் இரண்டு மடங்காக வசூலித்து விடுகின்றார்கள். 

இந்த நேரத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்கள் சம்பளத்தில் கூடுதலாகக் கொஞ்சம் வழங்கப்படுகின்றது. முன்பு பத்தாம் வகுப்பில் ஒரு மாணவர் ஆண்டு இறுதித் தேர்வில் நூற்றுக்கு நூறு எடுத்தால் அந்தப் பாடம் நடத்தும் ஆசிரியருக்கு ஒரு தங்கக்காசு வழங்கினார்கள். இப்போது அது மாறி ரூபாய் 200 என்று கொண்டு வந்து விட்டார்கள். 

பள்ளி ஒரு பக்கம். ஆசிரியர்கள் மறு பக்கம். நடுவில் இணைக்கும் ஒரே சங்கிலி காசு.பணம்.துட்டு. இதற்குள் இருக்கும் மாணவர்கள் தங்களை இழந்து விடாமல் தங்கள் எல்லைகளைத் தொட தனக்குத் தானே தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். 

கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தற்போது யாரிடமும் தேவைக்கு மீறி எதுவும் பேசுவதே இல்லையாம். கோபி க்கு வரும் போது உறவுக்கூட்டங்கள் கூடச் சங்கடப்படுகின்றார்களாம். அவர் இனி அரசியல்வாழ்க்கை நமக்கு இருக்காது என்பதனை தெளிவாகவே உணர்ந்து இருப்பார் போலும். 

இதுவரையிலும் அரசியல்வாழ்வில் செய்த பாவக் கணக்குகளை இந்த முறை செய்து கொண்டிருக்கும் செயல்பாடுகள் மூலம் ஓரளவுக்கு நிவர்த்தி செய்து கொண்டிருக்கின்றார் என்றே சொல்லத் தோன்றுகின்றது. 

கல்வித்துறையில் ஊழல் இருக்கத்தான் செய்கின்றது. முன்பு பெருங்குழாய் உடைந்து ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இப்போது கசிந்து கொண்டிருக்கின்றது. உதயச் சந்திரன் அவர்களும் தனக்கு கொடுத்த எல்லை வகுக்கப்பட்ட பாடத்திட்டம் உருவாக்குதல் என்ற நிலையில் இருப்பதால் இருவரும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இருப்பது தற்போதைய சூழலில் மிகப் பெரிய மாற்றங்களை படிப்படியாக உருவாக்கிக் கொண்டே வருகின்றது. 

ஆனால் உதயச்சந்திரன் பாடுபட்டு, ஒருங்கிணைத்து, பஞ்சாயத்து ஏதும் உருவாகாமல் உருவாக்கிய புதிய பாடத்திட்டம் ஓரளவுக்குப் பரவலாகப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. 

இவரின் இலக்கு அடுத்த மூன்று வருடத்தில் தமிழக மாணவர்கள் எந்த நுழைவுத் தேர்வு என்றாலும் தங்கள் திறமையைக் காட்டுவார்கள். நம் தமிழக மாணவர்கள் விரைவில் தனித்துத் தெரிவார்கள் என்று சொல்கின்றார். ஆனால் இந்த ஆசிரியர்களிடம், பள்ளிக்கூடங்களிடம் இருந்து மாணவர்களை யார் காப்பாற்றப் போகின்றார்களோ? 


https://www.youtube.com/watch?time_continue=294&v=BUSWyP8l2hEஎனது பத்தாவது மின் நூல் (தரவிறக்கம் செய்ய)

50 வயதினிலே

13 comments:

Avargal Unmaigal said...

தமிழகத்தில் நுழைவு தேர்வுக்கு படிப்பதுதான் பாஸ் ஆகுவதுதான் கல்வி என்ற நிலை ஆகிவிட்டது போல இருக்கிறது....அடுத்த ஜெனரேஷன் சிந்திக்க முடியாத ஒரு ஜெனரேஷனாக ஆகிவிடும் என நினைக்கிறேன்

கரந்தை ஜெயக்குமார் said...

ஐயா இன்றைய நிலைக்குக் காரணம், பெற்றோர்களே என்பது எனது தனிப்பட்டக் கருத்து,
தாங்கள் படிக்காததைத் தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று பேராசைப்பட்டு, பிள்ளைகளின் மனநிலை அறியாமல், அறிந்தாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல், தங்களது இலட்சியங்களைப் பிள்ளைகளின் மேல் திணிக்கிறார்கள்.
காலையில் ட்யூசன், மாலையில் ட்யூசன், சனி ஞாயிறு ட்யூசன் என்று தங்கள் பிள்ளைகளைக் கல்வி கற்கும் இயந்திரங்களாகவே மாற்றுகிறார்கள்.
மேலும் பள்ளிகளைப் பொறுத்தவரை, தேர்ச்சி சரவீதம்என்ற அளவுகோலை வைத்துத்தான் பள்ளியின் தரத்தினை மதிப்பிடுகிறார்கள். ஆனால் இதே அளவுகோலை வைத்து, கல்லூரிகளிளை, பொறியியல் கல்லூரிகளை அளவிடுகிறார்களா என்றால் இல்லை.
ஏன் இந்த வேறுபாடு?
இன்றைய நிலையில், கொஞ்சம்கூட பாதுகாப்பு இல்லாத நிலையில், பணிப் பாதுகாப்பு சிறிதும் இன்றிப் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டும்தான்.
மாணவர்களைக் கண்டிக்கக் கூட இயலாது,
தண்டிக்க இயலலே இயலாது.
மாணவர் ஒரு ஆசிரியரைச் சுட்டிக் குறை கூறினான் என்றால், அந்த ஆசிரியரின் கதி அதோ கதிதான்.
எல்லா துறைகளிலுமே,பணம் பணம் என்று அலைவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
அதுவும் தனியார் பள்ளிகள் என்றால், குறைந்த ஊதியம், குடும்பத்தை நடத்தியாக வேண்டும். எனவே தனியே ட்யூசன் எடுத்துச் சம்பாதிக்கத்தான் பார்ப்பார்கள்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலும் ட்யூசன் எடுப்பதில்லை. அதற்கான நேரமும் அவர்களுக்குக் கிடையாது.
தினமும் மாலைநேரப் பயிற்சி வகுப்பு,
விடுமுறை நாட்களிலும் சிறப்புப் பயிற்சி வகுப்பு என அரசு, மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் காலம் ஓடுகிறது.
இதுதான் ஐயா என்னைப் பொறுத்தவரையில் இன்றைய நிலைமை

கரந்தை ஜெயக்குமார் said...

சில எழுத்துப் பிழைகள் நேர்ந்து விட்டன
மன்னிக்கவும்

Avargal Unmaigal said...

///மாணவர்களைக் கண்டிக்கக் கூட இயலாது,
தண்டிக்க இயலலே இயலாது. ///


மாணவர்களை கண்டிப்பது தண்டிப்பது ஆசிரியர் வேலை அல்ல அவர்களுக்கு சொல்லி தருவதுமட்டும்தான் நம் வேலை....அதாவது நாம் எந்த பாடத்தை சொல்லி தருகிறோமோ அதை அவர்களுக்கு விளங்கஸ் செய்வது மட்டும்தான் ஆசிரியர்களின் வேலை... அதை அந்த மாணவன் கேட்டு படிக்கா விட்டால் அது அவன் மற்றும் பெற்றோரின் பிரச்சனை...

கரந்தையார் சொல்வது அந்த கால பள்ளிகளுக்கு பொருந்தும் இந்த கால பள்ளிகளுக்கு அல்ல...

Avargal Unmaigal said...

இங்கே அமெரிக்காவில் மாண்வர்களை தண்டிப்பது இல்லை.....மாணவன் சரியாக படிக்கவில்லை என்றால் பெற்றோர்களுக்கு அவன் நிலையை எடுத்து விளக்கிவிடுவார்கள். மாணவர்களுக்கு எக்ஸ்ட் ரா ஹெல்ப் தேவை என்றால் அல்லது மாணவன் குறைந்த மதிப்பெண் எடுக்கிறான் என்றால் இங்குள்ள ஆசிரியர்கள் அவர்களுக்கு உதவி தேவை என்றால் அந்த டீச்சர் அந்த மாணவனுடன் சேர்ந்து லஞ் சாப்பிட்டு விட்டு அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்கிறார்கள்..

மாணவனுக்கு பிரச்சனை ஏதாவது இருந்தால் ஒவ்வொரு பள்ளிகளிலும் கவின்சிலர் என்ரு ஒருவர் இருப்பார் அவரிடம் அனுப்பி கவுன்சிலிங்க் செய்வார்கள்

Anonymous said...

எல்லாவற்றையும் தனியார்மயமாக்குவதுதான் காங்கிரஸ், பிஜேபி மற்றும் பெரும்பாலான கட்சிகளின்/அரசுகளின் கொள்கை. அதில் கல்வி மருத்துவம் இரண்டையும் தனியார்மயமாக்குவது தவறு என்றாலும் தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் டியூஷன் நடத்துவது அதில் பணம் சம்பாதிப்பது எல்லாம் சந்தை மயப்படுத்தப்பட்ட கல்வி சூழலில் தவறே இல்லை. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவு, பணி பாதுகாப்பு இல்லை, வேலை சுமை கூடுதல், பென்ஷன் கிடையாது எனும் நிலையில் அவர்கள் டியூஷன் நடத்தி வருவாய் ஈட்டுவதில் என்ன தவறு? அதிலும் தெளிவாக தனிப்பட்ட கவனம் செலுத்த முடியாது என்று முன்பே கூறுவதால் அவர்களால் முடியாத ஒன்றை சொல்லி ஏமாற்றவும் இல்லை என்பதே ஆறுதலான விஷயம்.

ஜோதிஜி said...

நீங்க சொல்வது சரி தான். நானும் எந்த இடத்திலும் இது தவறான செயல் என்று எழுதவும் இல்லை. ஆனால் ஆசிரியர் தொழில் தான் இந்த சமூகத்தில் மிக முக்கியமானது. மொத்த சமூகத்தின் நல்லதும் கெட்டதும் அவர்கள் கையில் தான் உள்ளது. அவர்கள் வருவாய் ஈட்டும் போது சில அறநெறிகளை அதில் கடைபிடிக்கலாம் என்பதே என் ஆதங்கள். நன்றி. (ஏன் தெளிவாக அழகாக எழுதிவிட்டு பெயர் தெரியக்கூடாது என்ற காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.)

ஜோதிஜி said...

ஆசிரியர், கல்வி குறித்து நான் பதிவிடும் போதே உங்கள் நினைப்பு இயல்பாக வந்து விடுகின்றது. இது போன்ற சமயங்களில் தான் உங்களின் ஆழமான விமர்சனம் வெளிப்படுகின்றது. இதற்காகவாவது கல்வி குறித்து நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகின்றது.

ஜோதிஜி said...

தலைவரே அது போல இங்கே வருவதற்கு இன்னும் 50 வருடங்கள் ஆகக்கூடும்.

ஜோதிஜி said...

சூழ்நிலையில் வென்று வருவது எப்படி? இது தான் இப்போதைய கல்விச்சூழல்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு திருந்துகிற அமைச்சராவது இருக்கிறாரே...! சந்தோசம்...!

கரந்தை ஜெயக்குமார் said...

மாணவர்களை தண்டிப்பது ஆசிரியரின் வேலை அல்ல என்பது உண்மைதான். மாணவர்களைத் தண்டிப்பது ஆசிரியர்களின் நோக்கமும் அல்ல. சிறு சிறு தண்டனைகளின் மூலமும், கண்டிப்பின் மூலமும். அன்பின் வழியாகவும் திருத்துவதற்கு வாய்ப்பு ஒரு காலத்தில் இருந்தது.
ஆனால் ஆசிரியரால் நம்மைத் தண்டிக்க இயலாது, முடியாது என்பது, இன்றைய மாணவர்களுக்குத் தெரிந்திருப்பதுதான் இன்றைய பிரச்சினை.

ஜோதிஜி said...

இந்த ஆட்சி கட்டாயம் இன்னும் மூன்று வருடங்கள் தொடர்ந்து இருந்தால் நிச்சயம் கல்வித்துறையில் கடந்த 15 வருடங்களாக செய்யாத மாற்றங்கள் அனைத்தும் செய்து முடித்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.