Tuesday, July 17, 2018

நாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12


சவுக்குச் சங்கர் குறித்து எனக்குத் தீரா ஆச்சரியமுண்டு. அவர் தளத்தைத் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் அனைத்து கட்டுரைகளையும் வாசித்துள்ளேன். சாதாரண நிறுவனங்களில் இருக்கும் உள் அரசியல் குளறுபடிகளைக் கண்டு மனம் சோர்ந்து போகும் சமயங்களில் இவரையும் பலமுறை நினைத்துக் கொள்வதுண்டு.

திரைப்படங்களில் மட்டுமே சாத்தியப்படும் பல விசயங்களை இவர் செய்து காட்டியிருப்பதற்குப் பின்னால் இவர் எதையெல்லாம் இழந்திருக்க வேண்டும்? என்பதனை பல முறை யோசித்ததுண்டு. இவரின் சொந்த விசயங்களைப் பற்றி இணையத்தில் பகிர்ந்ததும் இல்லை. ஆனால் இவரின் வாழ்க்கை அனுபவத் தொகுப்பின் வாயிலாகக் காவல்துறை, நீதிமன்றம் என்ற இரண்டு துறைகளைப் பற்றி அதன் இருட்டுப் பக்கங்களைப் பற்றிப் புத்தகமாக எழுதியுள்ளதை வாசித்து முடித்த போது மனதில் உருவான தாக்கம் மறைய அடுத்த இரண்டு நாள் ஆனது.

அரசியல்வாதிகளுக்கு மனசாட்சி தேவைப்படாது. அரசு எந்திரத்திற்கு ஆன்மா என்பது தேவையில்லை. அதிகாரிகளுக்குக் கட்டளையை நிறைவேற்றுதல். தன்னைத் தக்க வைத்துக் கொள்ளுதல். உருவாகும், உருவாக்கும் வாய்ப்புகள் மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ளுதல் என்பது தான் இங்கே காலம் காலமாக நடந்து கொண்டு வரும் நிகழ்வு. இதற்கு நாம் அழைக்கும் பெயர் ஜனநாயகம். இதனைத்தான் இங்கே மக்களாட்சி என்கிறோம்.

இந்தக் கட்டமைப்புக்குள் சாதாரணக் கீழ்மட்ட அரசு ஊழியராகப் பணிபுரியும் ஒருவர் நாம் இவற்றைச் சகித்துக் கொள்ளக்கூடாது, நடந்து கொண்டிருக்கும் தவறுகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்று தன்னால் ஆன முயற்சிகளை மறைமுகமாகச் செய்யும் போது உருவான தலைகீழ் மாற்றங்கள் தான் இன்று இவரை எழுத்தாளர் ஆக மாற்றியுள்ளது. இணையத்தில் நண்பர்கள் அளவுக்கு எதிரிகளையும் உருவாக்கியுள்ளது. பெயரைச் சொன்னாலே பலருக்கும் அலறும் அளவுக்கு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் காவல் நிலையம் வரைக்கும் செல்ல வேண்டியிருந்தாலும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தவிர்க்கவே பார்ப்பார்கள். காரணம் அதன் அமைப்பு அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் காவல் நிலையத்தில் உள்ளே நுழைந்து அங்கு அவர் எதிர்கொள்ளும் கேள்விகளும், கேலிகளும் தாண்டி முதல் தகவல் அறிக்கை பெற்று விட்டால் கூட அதுவே மிகப் பெரிய சாதனை. பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு அலையும் அலைச்சலில் கிடைக்கும் அனுபவங்கள் அடுத்தவர்கள் அங்கே போகாமல் இருக்க வைக்கின்றது.

ஆனால் நீதிமன்றம் இதனை விட வித்தியாசமானது. உள்ளே என்ன நடக்கின்றது? என்பதனை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அதன் அமைப்பு வேறொரு தளத்தில் இயங்குகின்றது. இன்று வரையிலும் இது தான் சரி என்று பிரிட்டிஷார் உருவாக்கிய இத்துப் போன நடைமுறைகளைக் கட்டி காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. காரணம் வெளிப்படையாக, எளிதில் அணுகக்கூடியதாக, புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்பட்சத்தில் அரசாங்கத்தின் கோர முகம் மக்களுக்கு எளிதில் தெரிந்து விடும் அல்லவா? மக்கள் பேசும் மொழியும் அலுவல் மொழியும் வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் எவரும் எதையும் தெரிந்து கொள்ளவும் முடியாது. அதற்காக முயற்சிக்கவும் மாட்டார்கள். அப்படியே முயற்சித்தாலும் காலம் கடந்து போயிருக்கும்.

இப்படித்தான் இங்கே சாதாரண மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுகின்றது. காலம் முழுக்க கையேந்தி வைத்துக் கொண்டிருப்பதே அரசாங்கத்தின் வெற்றியாகவும், நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் வாழ்வதே மக்களின் வெற்றியாகவும் இங்கே உள்ளது.

அதனைத் தான் இந்தப் புத்தகம் உயிருடன் இன்னமும் வாழும் பல அதிகாரிகளின் உண்மை முகம் வழியாக நமக்குப் புரியவைக்கின்றது. 

இரண்டு துறைகளிலும் நல்லவர்கள் விரல்விட்டு எண்ணிச் சொல்லும் அளவிற்கு இருப்பதால் மட்டுமே சங்கர் இந்தப் புத்தகம் எழுதும் அளவிற்கு உயிரோடு இருக்க முடிந்துள்ளது என்பதனை இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.

எழுத்தாளர் என்பவர்கள் எழுதி எழுதிப் பழகியவர்களுக்கு மட்டுமே அதன் சுவராசிய சூட்சமம் கைகூடும் என்பது பொதுவாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் இந்தப் புத்தகத்தை நள்ளிரவு தாண்டியும் வாசித்துக் கொண்டே இருக்கும் அளவிற்கு மனதில் பதட்டத்தை உருவாக்கியதோடு தொடர்ந்து படபடப்பையும் வாசிப்பவனுக்கு உருவாக்கியதில் முழுமையாகச் சங்கர் வெற்றியடைந்துள்ளார்.

இதில் வாசித்துக் கொண்டே வந்த போது மிகவும் ரசித்த விசயம் ஒன்று இதில் உள்ளது.

இப்போது அரசியல் அவதாரம் எடுத்துள்ள டிடிவி தினகரன் மனைவி அனுராதா வீட்டுக்குச் சோதனை போடச் சென்ற போது அவர் கண்ணாடியில் பொட்டு வைத்துக் கொண்டு இயல்பான நின்றதும் இவர்களைக் கண்டதும் சோகமாகத் தன்னை மாற்றிக் கொண்டு அப்பாவியாக நிற்பதும் போன்ற காட்சிகள் வாசிக்கும் போதே அந்த நிகழ்வை யோசித்துப் பார்த்துச் சிரிக்கத் தோன்றுகின்றது.

அதே போல மன்னார்குடி குடும்பம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சங்கரின் தஞ்சாவூர் வீடு எங்கே உள்ளது என்பதனை அறிய அலைந்த சம்பவங்களையெல்லாம் வாசிக்கும் எந்தக் காலமாக இருந்தாலும் காத்திருந்து சங்கறுக்கும் கலையைக் கற்ற அந்தச் சமூகத்தின் செயல்பாடுகள் பெரிதாக ஆச்சரியமளிக்கவில்லை.

இவர்களையும் ஏ1 குற்றவாளி கட்டி மேய்த்துள்ளார் என்பதனைத்தான் ஆச்சரியமாகச் சொல்லத் தோன்றுகின்றது.

சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் அதிர்ச்சியை அளிக்கலாம். பலருக்கும் இதையெல்லாம் தாண்டி வந்து எப்படி இன்னமும் இவர் உயிருடன் இருக்கிறார்? என்றே விபரம் தெரிந்தவர்களுக்கு உடனடியாக மனதில் தோன்றும் அளவிற்கு நடந்த ஒவ்வொரு சம்பவமும் மனதில் கிலியடிக்க வைக்கின்றது.

மிக அழகாக, நேர்த்தியாக, தரமாக, பொருந்தக்கூடிய விலையில் தந்துள்ள கிழக்குப் பதிப்பகம் Badri Seshadri அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்தப் புத்தகத்தை நிச்சயம் சட்டக்கல்லூரி மாணவர்களும், காவல் துறையில் பணியில் சேர வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்களும் அவசியம் படிக்க வேண்டும்.

காரணம் உள்ளேயிருக்கும் ஆன்மா அழுகிப் போய்விடக்கூடாது என்ற சங்கல்பத்தை இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் அவர்களுக்கு ஏதொவொரு வகையில் உணர்த்தியே தீரும். குறிப்பிட்ட சிலரால் மட்டுமே இந்த இரண்டு துறைகளின் மேல் பொது மக்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது. அதனையும் சங்கர் அங்கங்கே குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் நான் முக்கியமாக அறிந்து கொண்ட ஒன்று கலைஞர் குறித்த அவர் ஆளுமை பற்றிய புரிதல்.

ஆட்சியில் இல்லாத போது போராடிக் கொண்டிருந்ததைப் போல ஆட்சியில் இருந்தாலும் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டே தான் இருந்துள்ளார். அதன் மூலம் உருவான பல அனர்த்தங்களைச் சங்கர் சில இடங்களில் மட்டும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவரின் வலைதள வீச்சின் காரம் இதில் குறைவு. ஆனால் வாசிப்பவனை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர விடாமல் கெட்டியாகப் பிடித்து அடுத்தடுத்து நகர வைக்கும் சூட்ச எழுத்தாள திறமையை அனாயாசமாகக் கைப்பற்றி வெற்றிக் கொடியை நாட்டியுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் குறை என்று பார்த்தால் குறிப்பிட்ட இடங்களில் ஜம்ப் ஆகி அதனைப் பற்றி முழுமையாக விவரிக்காமல் சென்று விடுவது இயல்பாகப் பல இடங்களில் உள்ளது. ஒரு வேளை சங்கர் Shankar Aஇதன் தொடர்ச்சியாக அடுத்தப் புத்தகம் எழுதினால் இன்னமு😋ம் தைரியமாகப் பல விசயங்களைச் சுட்டிக் காட்டுவார் என்று நம்புகிறேன். 😁

8 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நியாயவான்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போதும் அவர்களுடைய எண்ணங்கள் இவ்வாறாக நூல்கள் வாயிலாக இன்னும் நேர்மையாக வந்துகொண்டிருக்கின்றன என்பதை நினைக்கும்போதும் மனது நிறைவாக உள்ளது. நூலைப் படித்ததோடு மட்டுமன்றி நுணுக்கமாக அதனைப் பற்றி நீங்கள் எழுதியுள்ள விதம் சிறப்பாக உள்ளது.

செந்தில்குமார் said...

Several time his blog blocked by officials but his followers register in same name with small diffrence and run.Amazing peeson

Rathnavel Natarajan said...

நாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12 -
சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் அதிர்ச்சியை அளிக்கலாம். பலருக்கும் இதையெல்லாம் தாண்டி வந்து எப்படி இன்னமும் இவர் உயிருடன் இருக்கிறார்? என்றே விபரம் தெரிந்தவர்களுக்கு உடனடியாக மனதில் தோன்றும் அளவிற்கு நடந்த ஒவ்வொரு சம்பவமும் மனதில் கிலியடிக்க வைக்கின்றது.


மிக அழகாக, நேர்த்தியாக, தரமாக, பொருந்தக்கூடிய விலையில் தந்துள்ள கிழக்குப் பதிப்பகம் Badri Seshadri அவர்களுக்கு மிக்க நன்றி. - இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

ஸ்ரீராம். said...

இந்தப் புத்தகம் வாசிக்க வேண்டும் என்று ஏற்கெனவே குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் குறிப்புகள் 'சீக்கிரம் வாங்கிப் படி' என்று தூண்டுகிறது.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

உண்மை தான். எல்லா சூட்சமமும் தெரிந்தவர்களை வழிக்கு கொண்டு வருவது கடினம்.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

அவசியம் படிக்கவும்.