Saturday, July 28, 2018

நாட்டு நடப்பு - தொல்லை தொடர்பு குறிப்புகள் - 15




சில மாதங்களுக்கு முன் நான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மோடம் பழுதாகி விட்டது. அப்போது தொடர்ந்து ஒரு வாரம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குச் சென்ற போது கற்றதும் பெற்றதும்.

ரிசையில் காத்திருந்து, மீண்டும் மீண்டும் அலைந்து, தவமாய் தவமிருந்து என்று சொல்லக்கூடிய வகையில் பெற்ற பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பைப் பெற்ற அந்த நாள் இன்றும் என் நினைவில் உள்ளது. இன்று வரையிலும் இதே அரசாங்கச் சேவையைத்தான் வீட்டில் பயன்படுத்தி வருகின்றேன். வீடுகள் மாறும் போது கதறடிப்பார்கள். ஆனாலும் விட்டுவிடவில்லை. கடந்த பத்தாண்டுகளில் தனியார் நிறுவனங்கள் அலைஅலையாக உள்ளே வந்தது. ஆனாலும் என் பார்வை வேறு பக்கம் திரும்பவில்லை. அலைபேசி சேவை வந்தது. பல ஆண்டுகளாகத் தான் இன்று வரையிலும் செல்ஒன் சேவையைத்தான் பயன்படுத்தி வருகின்றேன்.

காரணம் நம்பகத்தன்மை. ஆனால் லாபம் கொழிக்கக்கூடிய ஒரு பொதுத்துறை நிறுவனத்தை எந்த அளவுக்கு அரசியல்வாதிகளால் தங்களின் சுயநல லாபத்திற்கு சீரழிக்க முடியும் என்பதற்கு பிஎஸ்என்எல் மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.

மாதக்கட்டணம் கட்டுவதற்காக நீண்டடட வரிசையில் காத்திருக்க வேண்டும். ஏதோவொரு சூழலில் பழுதாகிவிட்டது என்ற நிலையிலும் நம் உயிர் போய் உயிர் திரும்பி வரும் அளவிற்கு சாகடிப்பார்கள். உள்ளே பணிபுரிபவர்களிடம் சென்று நம் அவசரத்திற்குச் சென்று பேச முடியாது. ராஜபுத்திர வம்ச மன்னர்கள் போல செயல்படுவார்கள். பொறுத்துக் கொள்ள வேண்டும். பிடிவாதமாக வெளியேறாமல் இருந்த சூழல் இப்போது படிப்படியாக மாறிக் கொண்டே வருகின்றது. பிஎஸ்என்எல் சேவையை மற்றும் செல் ஒன் சேவைகளை பயன்படுத்திக் கொண்டு வரும் வாடிக்கையாளர்களை நீங்களாகவே வெளியே சென்று விடுங்கள்? என்கிற அளவிற்குத் தான் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு உணர்த்துகின்றது.

ன்றைய சூழலில் பிஎஸ்என்எல் நாளுக்கு நாள் மக்களுக்கு உதவும் வண்ணம் நிறையச் சேவைகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றார்கள். பல அற்புதமான திட்டங்கள் பொது மக்களின் பார்வைக்குச் செல்வதே இல்லை. தனியார் நிறுவனங்கள் போல மறைமுக கட்டணம் ஏதுமில்லை. தற்போது ஜிஎஸ்டி அறிமுகமான பின்பு அந்தத் தொகை மட்டும் தான் அதிக அளவு வருகின்றது. மற்றபடி நாம் பயன்படுத்தும் கட்டணம் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே உள்ளது. ஆனால் கட்டமைப்பை சரியாக நாளுக்கு நாள் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மொத்த நிர்வாகமும் உள்ளது. ஆனால் மத்திய அரசாங்கம் எப்படியாவது தனியார் கைக்குக் கொடுத்து விட வேண்டும் என்பதில் தான் உறுதியாக உள்ளது?

ளர்ந்து கொண்டேயிருக்கும் தொழில் நுட்ப வசதிகளைத் தனியார் துறை நிறுவனங்கள் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டு அடுத்தகட்டத்திற்கு வளர்ந்து கொண்டேயிருக்கின்றார்கள். ஆனால் இந்தத்துறையில் எந்த நவீன வசதிகளும் வாடிக்கையாளர்களுக்கு வந்து சேர்வதே இல்லை. எல்லாமே அறிக்கைகளாகவே உள்ளது.

ணிபுரியும் ஊழியர் சொன்ன வார்த்தைகள் இது. "தனியார் நிறுவனங்கள் வியாபாரம் செய்கின்றார்கள். நாங்கள் மக்களுக்குச் சேவை செய்கின்றோம். நீங்கள் அவர்களிடம் போய் சேவையை எதிர்பார்த்தால் அது உங்களின் தவறு " என்றார். எதார்த்தமான உண்மை.


பிஎஸ்என்எல் பயன்படுத்தும் பெரும்பாலான மிண்ணணு உபகரணங்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. தரம் என்பது குப்பையாக இருந்தாலும் யாரோ ஒரு அதிகாரி அல்லது அந்த லாபி வட்டத்திற்கு பெரும் லாபமாக உள்ளது. இதன் மூலம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் அடிமட்ட ஊழியர்கள் செய்த வேலைகளையே திரும்பத் திரும்பச் செய்ய வேண்டியதாக உள்ளது என்று புலம்புகின்றார்கள். இன்றைய சூழலில் சீனா இல்லாவிட்டால் இந்தியா என்பது இல்லாமல் போய்விடுமோ? என்கிற அளவுக்குத்தான் இங்கே உள்ள ஒவ்வொரு துறையும் உள்ளது என்பது தான் உண்மை. கணவன் மனைவியின் அந்தரங்க செயல்பாட்டினைத் தவிர்த்த மற்ற அன்றாட செயல்பாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் சீனப் பொருட்களே உள்ளது.  இது தான் வல்லரசு இந்தியா.

ந்தத் துறையில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் அரசாங்கத்தின் மேல் அதிக அளவு ஆத்திரமாக இருக்கின்றார்கள். எங்கள் நிறுவனத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசாங்கம் நடத்துகின்றது. பல ஆண்டுகளாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை என்பதே முதன்மையான குற்றச்சாட்டு. ஆள் பற்றாக்குறை ஒரு பக்கம். தனியார் நிறுவனங்களுக்குத் துணை போகும் பெரிய அதிகாரிகளின் அட்டகாசங்கள் மறுபக்கம்.

னியார் நிறுவனங்கள் இன்று வரை 4ஜி என்று விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டேயிருக்கின்றார்கள். ஆனால் இன்று வரையிலும் பிஎஸ்என்எல் க்கு 4ஜி கொடுக்கப்படவே இல்லை. ஏலத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு நிதி ஒதுக்கப்படவே இல்லை.

காங்கிரஸ் ஆண்டபோது இந்தத் துறைக்கு வந்தமர்ந்த அமைச்சர்கள் குறிப்பாக தயாநிதி மாறன் தொடங்கி ஒவ்வொருவரும் தங்களின் சுயலாபத்திற்காக மொத்த சேவையின் சீரழிவைத் தொடங்கி வைக்க இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

டிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பிஎஸ்என்எல் தங்களின் அடித்தளத்தை அதன் கட்டுமானத்தை உருவாக்கி வளர்த்து இந்தியா முழுக்க எந்த இடத்திற்குச் சென்றாலும் பேச முடியும் என்ற சூழலை உருவாக்கி வைத்திருந்தது. ஆனால் இவர்கள் உருவாக்கி கோபுரங்களை இன்று தனியார் நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் அவலச் சூழல் காரணமாக பிஎஸ்என்எல் சேவை என்பது சந்துக்குள் சிக்கிய பூனை போல கதறிக் கொண்டு இருக்கின்றது.

ரசாங்கம் வியாபாரத்தில் இருக்கக்கூடாது. வியாபாரம் என்பது தனியார் கைகளில் தான் இருக்க வேண்டும் என்பது புத்திசாலி முதலீட்டாளர்கள் நமக்குப் பாடம் நடத்துகின்றார்கள். இதனால் சேவை என்பது மாறி கொள்ளை என்ற வார்த்தை கடந்த பத்தாண்டுகளில் தனியார் அலைபேசி வாடிகைக்கையார்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உண்மையாகும்.

பிஎஸ்என்எல் ல் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் வருத்தமுடன் பலவற்றை பகிர்ந்து கொண்டார். "இப்பொழுதே பாதி நிர்வாகம் ரிலையன்ஸ் கைக்குப் போய்விட்டது. அடுத்தமுறை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் வேளையாக இந்தத் துறையை அவர்களிடம் கொடுத்து விடுவார்கள். எனக்குப் பணி ஓய்வு பெற இன்னமும் 10 ஆண்டுகள் உள்ளது. நான் என்ன செய்யப் போகிறேன்? அவர்கள் வந்தால் என்னை வைத்திருப்பார்களா? என்று தெரியவில்லை" என்று சொன்னார்.

நான் அந்தப் பெண்மணி சொன்னதை முழுமையாக நம்பவில்லை. ஆனால் கடந்த பத்து நாட்களில் நடந்த சில நிகழ்வுகள் அது உண்மைதான் என்று எனக்கு உணர்த்தியது.

நண்பர் ஒருவருக்கு அழைத்து இருந்தேன். அவர் ரிங்டோனாக ஒரு பாடலை வைத்திருந்தார். அவர் நான் அழைத்த போது என் அழைப்பை எடுக்கவில்லை. நானும் அடுத்து இடைவெளி விட்டு அழைக்கலாம் என்று விட்டு விட்டேன். அப்போது எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. நீங்க கேட்ட பாடலை நீங்கள் தேர்ந்தெடுத்த காரணத்தால் உங்கள் ரிங்டோனாக மாற்றி உள்ளோம் என்று நான் தேர்ந்தெடுக்காமல் என் அனுமதி இல்லாமல் என் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

நாம் அது தேவையில்லை என்று குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க முயற்சித்த போது அடுத்தடுத்து வேறு எந்தநத பாடல்கள் வேண்டும் என்று ரிலையன்ஸ் வாடிக்கையார் சேவை மையத்தில் இருந்து வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது. சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.

ன்றாக சோதித்துப் பாருங்கள். தற்போதைய சூழலில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அரசாங்க சேவை சார்ந்த வாடிக்கையாளர் இலவச தொலைப்பேசிக்கு அழைத்துப் பாருங்கள். தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என்று சொல்லும் போதே அது இயல்பாகவே துண்டிக்கப்பட்டு விடும். அதே போல வாடிக்கையாளர் பேச ஊழியருடன் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்குப் பல கோல்மால்கள் செய்து வைத்து உள்ளார்கள்.

அதாவது உன்னிடமிருந்து உன் கண் எதிரே நாங்கள் திருடத்தான் செய்வோம். சேவை என்பதனை எல்லாம் எதிர்பார்க்காதே. நீ குறிப்பிட்ட சேவைகளை பயன்படுத்தாமல் இருந்தால் கூட நாங்கள் அதற்கான பணத்தை எடுத்துக் கொள்வோம். இப்படித்தான் ஒவ்வொரு துறையும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் வங்கி குறித்து நான் பெற்ற அனுபவங்களைத் தனியாக எழுதுகிறேன்.

மீபத்தில் ஏர்செல் மூடப்பட்டபின்பு அதில் இருந்த வாடிக்கையாளர்களில் குறிப்பிட்ட சதவிகித மக்கள் செல்ஒன் மற்றும் பிஎஸ்என்எல் சேவைக்கு வந்து சேர்ந்து விட ஏற்கனவே நெருக்கிக்கொண்டு நிற்கும் சேவை தற்போது கூட்ட நெரிசலில் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றது. இப்போது வீட்டுக்குள் இருந்தால் கூட நாட் ரீச்சபிள் என்று தான் வருகின்றது. யாராவது அழைத்தால் வெட்ட வெளியில் வந்து நின்று அல்லோ அல்லோ என்று அல்லோலியா கோஷ்டி போல கத்த வேண்டியுள்ளது.

காரணம் தனியார் நிறுவனங்களுக்கு வங்கிக் கடனும் கொடுத்தும், பிஎஸ்என்ல் உருவாக்கி வைத்துள்ள கட்டமைப்பையும் தாரை வார்த்து அமைச்சர்களும் அதிகாரிகளும் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணத் தொகை வருடந்தோறும் நிலுவையாகவே காட்டப்படுகின்றது. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வார்த்தை இப்போதைக்கு நம் நாட்டின் தொலை தொடர்பு சேவைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

காலையில் நம் அவசரத்தின் பொருட்டு ஒன்பது மணிக்கு பிஎஸ்என்எல் அலுவகத்திற்குச் சென்றாலும் ஒவ்வொரு ஊழியரும் பத்து மணிக்கு உள்ளே வருகின்றார்கள். பலர் பத்தரை மணிக்குத்தான் உள்ளே வருகின்றார்கள். சரியாக மாலை நாலரை மணி சமயத்தில் வீட்டுக்குக் கிளம்பி விடுகின்றார்கள். இதற்கிடையே தேநீர், சாப்பாடு, புகைப்பது என்று கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் முழுமையாக மூன்று மணி நேரங்கள் தங்கள் பணியைச் செய்வார்களா? என்று சந்தேகமாக உள்ளது.

குறிப்பிட்ட பதவியில் உள்ளவர்கள் சங்க செயல்பாட்டின் அடிப்படையில் தாதாவாக உள்ளே இருக்கின்றார்கள். பெரிய அதிகாரிகள் கூட அவர்களை வேலை வாங்க முடியாது என்பது தான் உண்மை. ஒவ்வொரு துறையில் உள்ளவர்கள் சரியாக பணி புரியாவிட்டாலும் கூடச் சங்கத்தின் மூலம் தான் பேசிக் கொள்கின்றார்கள். நேரிடையாக திட்ட முடியாதாம். அப்புறம் அதுவே பெரிய பஞ்சாயத்தாக மாறிவிடுமாம்.

ரசாங்கத்தின் கொள்கை திட்டங்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கொள்ளை, பணிபுரியும் ஊழியர்களின் தான்தோன்றித்தனம் என்று நான்கு புறமும் சூறாவளி போல இந்தத்துறையைச் சூழ்ந்து தாக்கிக் கொண்டிருந்தாலும் மக்கள் இந்தச் சேவையைத்தான் பயன்படுத்துவேன் என்று பிடிவாதமாக இருப்பது தான் இப்போது அரசாங்கத்திற்குச் சவாலாக உள்ளது.

வட இந்தியாவில் பல இடங்களில் தனியார் நிறுவனங்களின் சேவை இருக்காது. ஆனால் உத்தரகாண்ட் சென்ற போதும் அங்கிருந்து நண்பர் என்னை அழைத்துப் பேசி இருக்கின்றார்.

ப்போது ஒவ்வொருவர் வீட்டிலும் ஏழெட்டுச் சிம் கார்டு வைத்து இருக்கின்றார்கள். தனியார் அலைபேசி சேவை என்றாலும் ஒவ்வொன்றிலும் இரண்டு வைத்து உள்ளனர். சில உறவினர்களின் எண்கள் என்று குறைந்தது பத்து என்கிற அளவிற்கு அலைபேசியில் சேமித்து வைக்க வேண்டியதாக உள்ளது. புதிய எண்ணில் இருந்து அழைக்கும் போது நாம் எடுக்காவிட்டால் அது புதுப் பஞ்சாயத்தை உருவாக்கி விடுகின்றது. மக்களுக்குத் தேவை என்பதற்கும் ஆடம்பரம் என்பதற்கும் உண்டானதற்கும் வித்தியாசம் புரிபடுவதே இல்லை.


டிஜிட்டல் இண்டியா, கேஷ்லெஸ் இண்டியா விரும்பிய பிரதமருக்கு இவையெல்லாம் கண்களுக்குத் தெரியாதா? என்று நண்பரிடம் கேட்டேன்.

ஒரு கடிதம் வாயிலாக மோடிக்குத் தெரியப்படுத்துங்கள் என்கிறார்.

எந்த மொழியில் அவருக்கு எழுதுவது? எப்போது அவர் இந்தியாவில் இருப்பார்? என்பதே குழப்பமாக இருப்பதால் எழுதுவதைத் தள்ளிப் போட்டிருக்கின்றேன்.

12 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நான் முதன் முதலில் வாங்கிய சிம் பி.எஸ்,என்.எல், தான் ஐயா. இன்று வரை அதே எண்தான்.
பி.எஸ்.என்.எல் இல் இருக்கும் இலட்சக்கணக்கான ஊழியர்கள், இந்நிறுவனத்தைத் தனியார் வசம் ஒப்பபடைக்க விட மாட்டார்கள் என நம்புவோம் ஐயா

Amudhavan said...

பிஎஸ்என்எல்லின் தரமான சேவை என்பது வீடுகளிலிருந்த கருப்பு டெலிபோன்களுடன் முடிந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.'நாங்கள் ஒன்றும் நிறுவனம் நடத்த இங்கே பிரதம மந்திரியாய் உட்கார்ந்துகொண்டிருக்கவில்லை' என்ற முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் வார்த்தைகள்தாம் சமயங்களில் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.

தி.தமிழ் இளங்கோ said...

சொல்வதற்கு ஏதும் இல்லை. பல பொதுத்துறை நிறுவனங்களை, சீர்திருத்தம் என்ற பெயரில், கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்கச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஜோதிஜி said...

ஆனால் செயல்படாத நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள் என்றே நினைக்கின்றேன். அப்புறம் அதனை தனியார் பக்கம் நகர்த்தி விட எளிதாகவே இருக்கும். கடந்த பத்தாண்டுகளாக இந்தத் துறையில் ஆள் நியமனம் இல்லவே இல்லை.

ஜோதிஜி said...

இந்தியாவில் ஒரு பிரதமர் குறித்த பாடங்கள் அடங்கிய குறிப்புகள் பாடப் புத்தகத்தில் கொண்டு வரப்பட்டு (ஆந்திராவில்) நீக்கப்பட்ட பெருமை நரசிம்மராவுக்குத் தான் கிடைத்தது.

ஜோதிஜி said...

நேரம் இருக்கும் போது என்னை அழைக்கவும். நன்றி.

G.M Balasubramaniam said...

பொதுத்துறை நிறுவனங்கள் கோவில்களுக்குச்சமம் அவற்றைமேம்படுத்தாமல் செயலிழக்கச்செய்வது சரியல்ல இங்கு பெங்களூரில் எங்களுக்கு பி எஸ் என் எல்லின் சேவை சிறப்பாகவே இருக்கிறதுஒரு முறை சாலைகளை வெட்டிப்போட்டதால் ப்ராட் பாண்ட் சேவை தடை பட்டது தடை பட்ட நாட்களுக்கு ரிபேட் கொடுத்தார்கள்

Rathnavel Natarajan said...

நாட்டு நடப்பு - தொல்லை தொடர்பு குறிப்புகள் - 15 - திரு ஜோதிஜி அவர்களின் அருமையான கட்டுரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு ஜோதிஜி

கிரி said...

ஜோதிஜி நான் 2003 ல் BSNL பயன்படுத்திக்கொண்டு இருந்த போது கட்டணத்தை செலுத்த மிக சிரமமாக இருந்தது. கூட்ட நெரிசல், அவையல்லாமல் பல கேள்விகள் குடைச்சல்கள் என்று வெறுத்து போய் இருந்தேன்.

பின் இவற்றில் இருந்து விடுபட ECS கொடுத்தேன். அதன் பிறகு ஒரு பிரச்சனையுமில்லை.

பின்னர் 2004 / 2005 வாக்கில் ஏர்டெல்க்கு மாறி விட்டேன். சிறப்பான சேவை, இன்று வரை இதே எண் தான் பயன்படுத்துகிறேன்.

எதுவும் குறை இருந்தால் முடிந்தவரை உடனடியாக சரி செய்து தருகிறார்கள், குறைந்த பட்சம் பதில் அளிக்கிறார்கள்.

எனக்கு பிரச்சனையை ஏர்டெல் சரி செய்யாமல் சென்று விட முடியாது. அவர்களை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று தெரியும். எனவே, ஏர்டெல் தான் இன்றுவரை. சிறப்பான சேவை.

இன்று வரை என்னை ஏமாற்றி ஒரு ருபாய் கூட பிடிங்கியதில்லை. அப்படியே தவறு நடந்து இருந்தாலும், திரும்ப பெற்று விடுவேன். அடுத்த மாத Bill ல் சரி செய்து விடுவார்கள்.

ஜோதிஜி said...

தனியார் நிறுவன சேவையில் இந்த அளவுக்கு நீங்க சாதித்ததும் உங்கள் பணத்தை இழக்காமல் இருப்பதும் மிகப் பெரிய ஆச்சரியமே. நான் இதுவரையிலும் தனியார் சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு வந்ததே இல்லை. நிறுவனங்கள் அளிக்கும் சிம் மட்டுமே தனியார் சேவை.

ஜோதிஜி said...

வாசிக்கும் போதே ஆச்சரியமாக உள்ளது.

ஜோதிஜி said...

நன்றி