Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Thursday, February 13, 2020

அட்டைக்கத்திகள்


சமீபத்தில் நடந்த தொலைக் காட்சி விவாதங்களில் பேசியவர், இப்போது இந்தச் சூழலில் நடிகர் விஜய் தைரியமாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.

"நான் நேர்மையாக வரி கட்டி வாழ்பவன். இதனைக் கடந்து சட்டப்படி நிரூபித்து வருவேன் என்று சொல்ல வேண்டும்" என்றார்.

அப்படி அறிக்கை விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

லண்டன் வரைக்கும் நோண்டுவார்கள்.

அடுத்த 5 படங்களின் சம்பளத்தொகையையும் அபராதமாகக் கட்ட வேண்டியிருக்கும்.

கம் மென்று அடக்கி வாசித்து ஜம் என்று போஸ் கொடுக்கின்றார்.

படம் போட்டு பயத்தை மாற்றிக் காட்டிவிட்டார்.

நடிகர்கள் யதார்த்தவாதியாகத்தான் இருக்கின்றார்கள்.

கூடும் இளையர்களின் கூட்டம் தான் பாவம். 😏




Monday, December 23, 2019

தமிழகத்தை ஆளும் திரைகள் 2019


இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு ரசிகர் அதிகம்.  அதிகம் என்பதனை விட மொத்தத் தமிழகமும் அப்படித்தான் உள்ளது என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம்.  விருப்பங்கள் மாறலாம். ஆனால் ஒவ்வொருவரின் ஆசைகளை, கனவுகளைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இங்கே திரைப்படங்கள் தான் தீர்மானிக்கின்றது என்று சொன்னால் அது மிகையல்ல. கட்சி, ஆட்சி, கொள்கை என்று சகல இடத்திலும் மூன்று திரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றது.  சின்னத்திரை (தொலைக்காட்சி), வண்ணத்திரை (திரைப்படம்) தொடுதிரை (அலைபேசி). இந்தத் திரைகள் இப்போது நெடுங்கால நட்பில் விரிசலை உருவாக்குவதோடு நிரந்தர எதிரிகளாகவும் மாற்றி விடுகின்றது.

திரைப்படம் என்ற தமிழ் வார்த்தை என்பது கெட்ட வார்த்தையாக மறந்து போன சொல்லாக மாறிவிட்டது.  சினிமா என்பது தான் இப்போதைக்குத் தமிழ்ச் சொல். இதுவே தமிழர்களிடம் இயல்பான சொல்லாக மாறிவிட்டது. 

Thursday, December 12, 2019

ரஜினிகாந்த் என்ற சிவாஜிராவ்

உங்களுக்கு ரஜினிகாந்த்தைப் பிடிக்குமா? பிடிக்காதா? என்று எனக்குத் தெரியாது.

ஆனால் சராசரிப் பெண்களைப் போல ஆசைப்படாத, ஆசைகள் அதிகம் இல்லாத என் மனைவிக்குப் பிடித்த ஒரே நபர் ரஜினிகாந்த்.

பலசமயம் என்ன காரணம்? என்று நானும் மகள்களும் கேட்டுள்ளோம். எனக்குப் பிடிக்கும் என்பதோடு நிறுத்திக் கொள்வார். அவர் அரசியலுக்கு வந்தால் நான் அவருக்கு ஓட்டுப் போடுவேன் என்று சொல்லியுள்ளார். அவருக்குப் பிடிப்பதால் வேறு அப்பீல் வேண்டுமா? முதல் நாள். முதல் காட்சி என்பதனை ஒவ்வொரு முறையும் நிறைவேற்றி விடுவதுண்டு.

Tuesday, July 03, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 6


சென்ற வாரத்தில் காலா படம் பார்த்தோம். 

பிறை இன்று தெரியுமா? தெரியாதா? என்ற குழப்பம் உருவான போது பள்ளி விட்ட விடுமுறை இவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. காலை முதல் திட்டமிட்டு என்னை மாலை வரவழைத்து அழைத்துச் சென்றார்கள். 

மாலை 6.15 க்குப் படம் தொடங்கும். நான் மட்டும் 6.10 க்குத்தான் திரையரங்கத்தின் உள்ளே சென்றேன். அப்போது மொத்தமே 30 பேர்கள் தான் இருந்தார்கள். இடைவேளை விடும் போது பார்க்கலாம் என்று காத்திருந்தேன். ஆனால் கடைசி வரைக்கும் 50 பேர்களைத் தாண்டவில்லை. 

காலா படம் வெளியான தினத்தில் சென்னையில் இருந்தேன். மாலைக்குள் சென்ற வேலை அனைத்தும் முடிந்து விட நண்பர் கையில் மூன்று இலவச சீட்டுக்கள் இருந்தன. அழைத்தார். வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். வீட்டில் அம்மையாரின் அதிகபட்ச ஆசையான ரஜினியின் படத்தை ஒவ்வொரு முறையும் திரையரங்கில் சென்று பார்ப்பது என்ற கொள்கையின் காரணமாக என்பதனை நண்பரிடம் சொன்ன போது சிரித்தார். 

இயக்குநர் ரஞ்சித் உடன் நேரிடையாக சந்தித்து பேசியுள்ளேன். திரை உலகில் நான் சந்தித்த மற்றவர்களை ஒப்பிடும் போது ரஞ்சித் எதார்த்தவாதியாக எனக்குத் தெரிந்தார். நான் இந்தத் தளத்தில் இப்படித்தான் இயங்கப் போகின்றேன் என்பதில் தெளிவாகவே இருந்தார். தன் பலத்தையும் பலவீனத்தையும் உணர்ந்தே இருந்தார். 

நெருங்கிய தம்பி ஒருவன் அவர் குழுவில் அவருடன் நெருக்கமான வட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றான். சென்னையில் இருந்த போது அவனுடன் பேசினேன். ஐம்பது சதவிகிதம் மக்கள் கூட (அவருக்கென்று உள்ள ரசிகர் கூட்டம் குறிப்பாகக் குழந்தைகள், விடலைகள்) திரையரங்கம் வரவில்லை. வருகின்ற மாதிரி சூழலும் சாதகமாகத் தெரியவில்லை என்றான். தமிழர்களின் எதிரி என்ற பிம்பம் உருவாக்கப்பட்டு அது ஊதிப் பெருக்கப்பட்டு அது வெற்றியும் அடைந்து விட்டது என்றான். 

ரஜினியின் தோல்வியை விட ரஞ்சித்தின் தோல்வியைக் கொண்டாடத்தான் இங்கே அதிகம் பேர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள். இப்போது வெளிப்படையாக மொத்த கோடம்பாக்கமும் ரஞ்சித் வைத்துப் படம் எடுக்கக்கூடாது என்பதனை பலர் வெளிப்படையாகவே எழுதத் தொடங்கி உள்ளனர். 

பிராமணியம் குறித்து எப்போதும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசுவதில்லை. இதன் இரண்டுக்கும் உள்ள நுண் அரசியலைத் தெரிந்து கொண்டவர்களால் மட்டுமே ரஞ்சித் போன்றவர்கள் தன் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள எந்த அளவுக்குப் பாடுபட வேண்டும் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். 

படம் என்கிற வகையில் பார்த்தால் ரஞ்சித் வென்றுள்ளார். ரஜினியும் வென்றுள்ளார். ரஜினியின் படங்களில் நீண்ட நாளைக்குப் பிறகு நடித்துள்ளார் என்கிற வகையில் மிகவும் சிறப்பாகவே உள்ளது. 

கரணம் தப்பினால் இது பிரச்சாரப் படமாக மாறிவிட வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனையும் தாண்டி வர்த்தரீதியான நிலையில் சரியாகவே தொகுக்கப்பட்டுள்ளது. வசனத்தை ரஞ்சித்துடள் மூன்று பேர்கள் எழுதியுள்ளார்கள். பல இடங்களில் ரஜினி எப்படி இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்தார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு வசனங்கள் கத்திமுனை போலக் குத்திக் கிழிக்கின்றது. இணை இயக்குநர், துணை இயக்குநர்கள் என்று அதிகமான பேர்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார் ரஞ்சித். 

ரஜினி போலவே நடித்த ஒவ்வொருவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து கதைக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். முக்கியமாக வில்லனாக வந்த நானா பட்கேர் நடிப்பைப் பார்க்கும் வியப்பாக இருநத்து. வேறு எவரையும் இந்த இடத்தில் இவருக்குப் பதிலாக வைத்து நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். 

ஆச்சரியம் என்னவென்றால் இயக்குநர் ரஞ்சித் க்கு நடிகர்களிடம் கதை சொல்லத் தெரியாது. அவர் தனது திரைக்கதை வடிவத்தை அவர்களிடம் வாசிக்கச் சொல்லி அதன் மூலம் தான் புரியவைப்பாராம். ஆனால் ஒரு இயக்குநராகக் காட்சியமைப்பில் அவர் எந்த அளவுக்கு இந்தப் படத்தில் பணிபுரிந்துள்ளார் என்பதனைப் பார்க்கும் போது நிச்சயமாகத் தமிழகத்தில் கொண்டாடப்பட வேண்டிய கலைஞன் என்பதில் சந்தேகமே இல்லை. 

படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரைக்கும் அதன் தயாரிப்பு சார்ந்த செலவுகளைத் தான் அதிகம் கவனித்துக் கொண்டு வந்தேன். செய்திகளில் வாசித்ததன் மூலம் முதல் இருபது நாட்கள் மட்டும் தாராவியில் எடுத்துள்ளார்கள். மற்ற நாட்கள் அனைத்து இங்கே அரங்கம் அமைத்து தான் எடுத்துள்ளார்கள். காரணம் பெரும்பாலான காட்சிகளில் ஒவ்வொரு ப்ரேமிலும் குறைந்தபட்சம் நூறு தலைகளாவது தெரிகின்றது. இது தவிரக் காலா வின் குடும்பம் ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். 

படத்தின் செலவு என்பது (ரஜினிகாந்தின் சம்பளம் அறுபது கோடி என்கிறார்கள். இதன் அடிப்படையில் 150 கோடிக்கு விற்பனையாகி இருக்க வேண்டும் என்று கணக்கீடு செய்தார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் விற்ற 51 கோடியே போணியாகவில்லை) நடித்த நடிகர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் தான் பெரிய தொகையாக உள்ளது. உருவாக்கப்பட்ட தாராவி அரங்கம் என்பது அதுவொரு பெரிய செலவு. 

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மட்டுமே பெரிய ஜனத்திரளை வைத்துத் தான் நினைக்கும் அளவிற்குத் தான் நினைத்தபடி எளிதாக விரைவாக வேலை வாங்கக்கூடியவர் என்று பெயர் எடுத்துள்ளார். அவரைப் போலவே இவரும் வென்றுள்ளார். 

கடந்த சில படங்களில் ரஜினிகாந்த் குடும்ப உறுப்பினர்கள் இவரின் ஒவ்வொரு படத்திற்கும் விளம்பரம் மூலம் வரும் வருவாயை நேரிடையாகத் தங்கள் நிர்வாகத்தின் கீழ் எடுத்துக் கொண்டார்கள். காலா மூலம் 50 கோடி ரூபாய் எடுத்துள்ளார்கள். வெளிநாட்டு விற்பனை உரிமையும் பெரிய அளவுக்குப் போணியாகவில்லை. ஈழத் தமிழர்கள் முழுமையாகவே புறக்கணித்து உள்ளதாகத் தெரிகின்றது. 

பாலு மகேந்திரா அறிமுகம் செய்யும் கதாநாயகிகள் மேல் எப்போதும் எனக்குப் பெரிய ஈர்ப்பு உண்டு. ஷோபா, அர்ச்சனா, மௌனிகா தொடங்கி இதில் நடித்துள்ள ஈஸ்வரி ராவ் வரைக்கும். ஒப்பனை தேவைப்படாத அழகி. கடந்த ஏழு வருடங்களாக நடிப்புப் பக்கம் வராமல் குடும்ப வாழ்க்கையில் இருந்த ஈஸ்வரி ராவ் அற்புதமாக ஜொலிக்கின்றார். 

ரஜினி போன்றவர்களை வேலை வாங்குவதே கடினம். சில எல்லைகளைத் தாண்ட முடியாது. ஆனால் ரஞ்சித் தான் விரும்பிய அளவுக்கு ரஜினியை பல எல்லைகளை உடைத்து அவரின் பழைய நடிப்பாற்றலைக் கொண்டு வந்துள்ளார். 

ரஜினியின் தனிப்பட்ட பலவீனங்களைக் கடந்து தமிழகம் அவருக்குக் கொடுத்துள்ள சூப்பர் ஸ்டார் என்ற கௌரவத்தை, கட்சி, மதம், சாதி கடந்து அவருக்கு இருந்த ரசிகர் பட்டாளத்தை அவராகவே கெடுத்துக் கொள்வார் என்று நினைத்தே பார்த்து இருக்க மாட்டார். காலச்சூழல் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக அவர் பேசிய பேச்சு கொட்டிக் கவிழ்த்து விட்டது. கடந்த 30 வருட உழைப்பை சில உளறல்கள், பேச்சுகள் ஒரு பெரிய வணிக லாபத்தை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டது. 

ஆன்மீகத்தை மற்றவர்களை விட இவர் தான் அதிகம் பேசுகின்றார். ஆனால் இவரின் உடல் மொழி பொதுவிடங்களில் அதற்கான தகுதியை, ஆன்மீகம் மூலம் பெறும் அமைதியான சுபாவத்தை இவர் வளர்த்துக் கொள்ளவில்லை என்பதனை அப்பட்டமாக உணர்த்திக் காட்டியது. படத்தில் பேசும் ஏழைப்பங்காளன் வசனத்திற்கும் நிஜவாழ்க்கையில் அப்பட்டமாக எதிராக இருப்பதையும் அவர் அறியாமல் வெளிப்படுத்திய சூழலில் கோமாளி போலவே ஆக்கப்பட்டுள்ளார். 

ரஜினி அடுத்தப் படத்தில் நடிக்க டார்ஜிலிங் சென்று விட்டார். ரஞ்சித் தனது அடுத்த ஹிந்திப்பட வேலையில் இறங்கி விட்டார். நம் மக்கள் இன்னமும் காலா வின் குறியீடுகள் குறித்து எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள். 


Thursday, October 06, 2016

விரும்பியபடி செயல்படு - மாவீரன் கிட்டு


திரைப்படத்துறையில் சார் என்ற வார்த்தை மிக முக்கியமானது. ரஜினி சார், கமல் சார், விஜய் சார் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் சார் என்ற வார்த்தை தான் நம் காதில் விழும். அவரவர் இருப்பு மற்றும் மார்கெட் நிலவரம் பொறுத்து இந்த மரியாதை கூடும் குறையும். ஒரு தயாரிப்பாளரின் பின்னால் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் பல தரப்பட்ட நிகழ்வுகளைப் பொறுமையாக ரசித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றேன். 

சமயம் வரும் போது "டாலர் நகரம்" போல இந்த திரைப்படத்துறையில் இது வரையிலும் வெளியே தெரியாத பல விசயங்களைப் பற்றி எழுதுவேன். 

க்டோபர் 1 2016 மாலை வேளையில் சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நான் பணியாற்றும் நிறுவனத்தின் துணை நிறுவனமான "ஏசியன் சினி கம்பைன்ஸ்" (Asian Cine Combines) முதல் தயாரிப்பான "மாவீரன் கிட்டு" படத்தின் முன்னோட்டக் காட்சி (டீசர்) வெளியிட்டு விழா நடைபெற்றது. இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் உடன் படத்தில் பங்கெடுத்த அனைவரும் கலந்து கொண்டனர். எங்கள் ஆயத்த ஆடை நிறுவன தயாரிப்பான காலர் சட்டையை 2500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் (SPONSOR) அணிந்து கலந்து கொண்டனர். 

வாசிக்க, எழுத நேரம் என்பதே இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் என் எழுத்துப் பணி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. ஆனால் சமீப காலமாகக் குழந்தைகளுடன், மனைவியுடன் செல்ல சண்டை போட ஞாயிற்றுக்கிழமையை ஒதுக்கி வைத்து விடுகின்றேன். விழாவில் கலந்து கொண்ட (மாவீரன் கிட்டு படத்தின் கதாநாயகி) நடிகை ஸ்ரீதிவ்யா அணிந்த வந்த "முழு கருப்பு கவுன்" குறித்து மனைவியுடன் விஸ்தாரமாகப் பேச குழந்தைகள் நக்கல் நையாண்டியுடன் என்னுடன் சேர்ந்து மனைவியை ஓரண்டை இழுக்கக் கடைசியில் நான் வெள்ளைக் கொடியை பறக்க விட வேண்டியதாகி விட்டது. 

கேரளாவின் எந்தப் பகுதிக்குள்ளும் மகிழ்வுந்து பயணத்தின் போது ரசிக்கக் காடு சார்ந்த இடங்கள் நிறைய உண்டு. ஆனால் திருப்பூர் முதல் சென்னை வரை ஆறு மணி நேரப் பயணத்தில் பகல் நேரமாக இருந்தாலும் இரவு நேரமாக இருந்தாலும் ரசிக்க ஒன்றுமே இல்லை என்பது நிதர்சனம். பொட்டல் காடுகளும், ஒழுங்கற்ற நகர்ப்பகுதிகளும், பல இடங்களில் கும்மிருட்டும், அத்துவானக்காடும் என ரசிக்க முடியாத ஊராக தமிழ்நாடு மாறிக் கொண்ட வருகின்றது. சுங்கவரி என்பது ஒவ்வொரு மனிதரையும் ரத்தம் சுண்ட வைக்கும் கொள்ளைக்கூட்ட சாம்ராஜ்யமாக உள்ளது. இது குறித்து விரிவாக எழுத வேண்டும். 

டீசர் வெளியிட்டு நிகழ்வுக்குப் பலருக்கும் அழைப்பு விடுத்து இருந்தேன். விழாவில் முன் வரிசையில் அமர்ந்து இருந்த காரணத்தால் முழுமையாகப் பலரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் வாக்குறுதியைக் காப்பாற்றிய கார்டூனிஸ்ட் பாலா, உண்மைத்தமிழன் சரவணன், சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் அகலிகன், ராஜா என சிலரை அவசர நேரத்தில் சந்தித்துப் பேச வாய்ப்பு அமைந்தது. 

ருகின்ற ஆயுத பூஜை அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒரு பிரிவான புதுயுகம் நிகழ்ச்சியில் மாவீரன் கிட்டு குறித்துக் கலந்துரையாடல் படப்பிடிப்பு நடந்தது. இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரோடு எங்கள் நிறுவன நிர்வாக இயக்குநர் தயாரிப்பாளர் ஐஸ்வேர் சந்திரசாமி அவர்களும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி சிறப்பாக வந்துள்ளது.


ங்கள் நிறுவன படமாக இருந்தாலும் ஏற்கனவே பாடல் பதிவின் போது கேட்ட பாடலின் அடிப்படையில் நிச்சயம் இந்தப் படத்தின் பாடல் தமிழர்கள் மத்தியில் ஒரு மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருக்கும் என்று என் பார்வையை எழுதியிருந்தேன். அதே போல டீசர் வெளியிட்டு விழாவின் போது அந்த எண்ணம் இன்னமும் வலுவானதாக மாறியது. எப்பேற்பட்ட பிரபலமாக இருந்தாலும் ஒரு சிலருடன் தான் நம்மால் உண்மையான உணர்வுடன் பேச முடியும். அப்படிப்பட்ட ஒருவர் தான் இயக்குநர் பா. ரஞ்சித். அவருடன் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நான் அவரை புரிந்து கொண்டது இப்படித்தான்.

எண்ணமும் செயலும் சொல்லும் ஒரே மாதிரியாக இருக்கும்படி தன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்கின்றார். மேடையில் ஏறி பேசிய போதும் அவரை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது.  இந்த விழா குறித்து காணொலித் தொகுப்பை விரைவில் வெளியிடுகின்றேன்.

மாவீரன் கிட்டு டீசர் குறித்து விழாவின் சிறப்பு அழைப்பாளர் மெட்ராஸ் மற்றும் கபாலி பட இயக்குநர் பா. ரஞ்சித் பின்வருமாறு கூறினார். 


"  
நம்முடைய வெற்றி என்பது நம்முடைய எதிரிகள் கூட வேறு வழியே இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வெற்றி இந்தப் படத்திற்கு கிடைக்கும் என்று நம்புகின்றேன்" என்றார். 

நீங்களும் இந்த முன்னோட்டக் காட்சியை பார்க்கும் போது புரியவரும்.