Monday, December 23, 2019

தமிழகத்தை ஆளும் திரைகள் 2019


இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு ரசிகர் அதிகம்.  அதிகம் என்பதனை விட மொத்தத் தமிழகமும் அப்படித்தான் உள்ளது என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம்.  விருப்பங்கள் மாறலாம். ஆனால் ஒவ்வொருவரின் ஆசைகளை, கனவுகளைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இங்கே திரைப்படங்கள் தான் தீர்மானிக்கின்றது என்று சொன்னால் அது மிகையல்ல. கட்சி, ஆட்சி, கொள்கை என்று சகல இடத்திலும் மூன்று திரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றது.  சின்னத்திரை (தொலைக்காட்சி), வண்ணத்திரை (திரைப்படம்) தொடுதிரை (அலைபேசி). இந்தத் திரைகள் இப்போது நெடுங்கால நட்பில் விரிசலை உருவாக்குவதோடு நிரந்தர எதிரிகளாகவும் மாற்றி விடுகின்றது.

திரைப்படம் என்ற தமிழ் வார்த்தை என்பது கெட்ட வார்த்தையாக மறந்து போன சொல்லாக மாறிவிட்டது.  சினிமா என்பது தான் இப்போதைக்குத் தமிழ்ச் சொல். இதுவே தமிழர்களிடம் இயல்பான சொல்லாக மாறிவிட்டது. 2019 ஆம் ஆண்டு முழுவதும் புத்தகங்கள் வாசித்த அளவிற்குத் திரைப்படங்களும் பார்த்தேன். தயாரிப்பாளர் போட்ட முதலீட்டைக் காப்பாற்றிய படம், மரண அடி வாங்கிய படம், விமர்சனம் சிறப்பு. ஆனால் வெகுஜன மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது போன்ற கலவையான பல படங்களையும் பார்த்தேன்.  எதனையும் முன்முடிவோடு பார்க்கவில்லை. விமர்சனம் இப்படிச் செய்துள்ளார்கள் என்று நோக்கத்திலும் பார்க்கவில்லை.

மகள் ஒவ்வொரு படத்தின் டீசரையும், விமர்சனங்களையும் இணைய தளத்தில் பார்த்து விட்டு என்னிடம் விவாதிப்பார்.  நான் உடனே அந்தப் படத்தின் முதலீடு தொடர்பான விசயங்களைத் தேடிப் பிடித்துப் படிப்பதுண்டு.

வீட்டில் தொலைக்காட்சி இல்லை.  மகள் கிரிக்கெட் விழா நடந்த போது ஹாட் ஸ்டார் வேண்டும் என்றார். அதில் படங்களும் அவ்வப்போது பார்ப்பதுண்டு. இப்போது பிரபல்யமாக வளர்ந்து கொண்டிருக்கும் வெப் சீரிஸ் தொடர்களையும் பார்ப்பதுண்டு. எதுவும் என்னைக் கவரவில்லை.  ஆர்ட்டிகிள் 15 பார்க்க வேண்டும் என்பதற்காக நெட்ப்ளிக்ஸ் சேர்ந்துள்ளேன்.  நெட்ப்ளிக்ஸ் மாதச் சந்தா என்பது ரூபாய் 649.  தொடர்ந்து படம் பார்க்க விரும்புவர்களுக்கு மட்டுமே இது இயல்பான தொகை.  மகளிடம் சொல்லியுள்ளேன்.  விடுமுறை முடிந்ததும் இதை நீக்கி விடுவேன் என்று.

திருப்பூரில் உள்ள வசதி படைத்த நண்பரிடம் கேட்டேன்.  உங்கள் மகள்கள் கல்லூரி செல்கின்றார். எத்தனை ரூபாய்க்கு அலைபேசி வாங்கிக் கொடுத்தீர்கள் என்றேன்.  ஒவ்வொருவருக்கும் 13 000 என்றார்.  ஏன் ஒரு கிண்டில் வாங்கிக் கொடுத்தால் இருவரும் பல புத்தகங்கள் படிப்பார்களே? உங்களுக்கும் படிப்பது பிடிக்கும் தானே? என்று கேட்டேன்.  அதில் மாதம் மாதம் கிண்டில் அன் லிமிட்டில் பணம் கட்ட வேண்டும் அல்லவா? நமக்குத்தான் பிடிஎப் வடிவத்தில் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றதே? என்று பதில் அளித்தார். அலைபேசி சேவைக்கு யாராவது இலவச சேவை கொடுப்பார்களா? என்று மனதிற்குள் யோசித்துக் கொண்டேன். ஆனால் கேட்கவில்லை.

எனக்கு குடும்பத்துடன் திரையரங்கம் செல்வது பிடிக்கும். காரணம் மகள் ஒருவருக்கு இது திருவிழாக் கொண்டாட்டம்.  படிப்பதிலிருந்து அவருக்கு விடுதலை. ஆனால் என்னால் முழுமையாக இவர்களுடன் படம் பார்க்க மனம் ஒன்றுவதில்லை. காரணம் என் விருப்பங்கள் வேறு.  ஒரு படத்தை பிணக்கூறாய்வு போலவே பார்ப்பேன். காரணம் இந்தத் தொழிலில் நான் இருந்துள்ளேன். இந்தத் துறையில் பல்வேறு துறையில் இருப்பவர்களுடன் இன்றும் தொடர்பில் உள்ளேன். 

ஒரு படம் முழுக்க தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் பணியாற்றி உள்ளேன். நான் பணிபுரிந்த முதலாளியின் சார்பாக நிதி மற்றும் நிர்வாகம் முழுமையாகப் பார்த்துள்ளேன். படப்பிடிப்பு முழுமையும் கவனித்துள்ளேன். அங்குள்ள கீழ்மட்டத் தொழிலாளர்கள் முதல் மேல் மட்டச் சுகவாசிகள் வரைக்கும் அனைத்தும் தெரியும். பின்னால் உள்ள வலியும் வேதனையும் முழுமையாகத் தெரியும். 

தயாரிப்பாளர்களை எப்படி மொட்டையடிக்கின்றார்கள் என்பது தொடங்கி இயக்குநர்களிடம் பல ஆண்டுக் காலம் பல விதத் திறமைகளுடன் பணியாற்றி வாழ்நாள் முழுக்க எவ்வித அங்கீகாரமும் பெறாமல் வாழும் பல இளைஞர்களையும் அறிந்தே உள்ளேன். மாய உலகத்தை மட்டுமே நம்பி தங்கள் வாழ்க்கையை இழந்தவர்கள், இழந்து கொண்டிருப்பவர்களின் பல கதைகளை நான் அறிவேன். எவ்விதத் திறமைகளும் இன்றி தன்னுடன் இருப்பவர்களை வைத்து அவர்கள் திறமைகளைப் பயன்படுத்தி வாய் வார்த்தை ஜாலங்களால், உடன் புரியக்கூடியவர்களின் திறமைகளினால் வாழக்கூடிய இயக்குநர்களையும் அறிந்தே வைத்துள்ளேன்.  

விதி, நேரம், கர்மா, சுழி, வாங்கி வந்த வரம் போன்ற அத்தனை வார்த்தைக்குப் பின்னால் உள்ள வீபரித ஆச்சரியங்களை இந்தத் துறையில் உள்ளவர்கள் மூலம் முழுமையாகப் புரிந்து கொண்டேன்.

மகள்களுக்காகத் திரையரங்கத்தில் கஷ்டப்பட்டு உட்கார்ந்து வர வேண்டும் என்பதற்காகவே பலமுறை நான்கு பேர்களையும் சகலவிதமான மரியாதையுடன் அனுப்பி வைத்து அழைத்து வந்து விடுவதுண்டு.  

இரண்டு மாதங்கள் கழித்து முறைப்படி உரிமை பெற்ற மலேசியா நிறுவனங்கள் மூலம் குறுந்தகடு தயாரிக்கப்பட்டு திருப்பூர் கடைகளில் கிடைக்கின்றது.  துல்லியமான ஒலி ஒளி தரத்துடன் கிடைக்கும்.  மகள்கள் விருப்பத்தின் அடிப்படையில், என் விருப்பங்களையும் சேர்த்துக் கொண்டு ஒரே சமயத்தில் மொத்தமாக வாங்கி வந்து விடுவதுண்டு. 

வீட்டுக்கு அருகே சற்று தொலைவில் ஒரு கடை இருந்தது. அவர்கள் மாதம் காவல் நிலையத்திற்கு 25.000 கொடுப்பதாகச் சொன்னார்கள்.  பிறகு 35.000 வேண்டும் என்றதும் கடையை மூடிவிட்டார்கள். அடுத்த இடம் மாற்றினார்கள். அங்கே 45.000 வேண்டும் என்றார்களாம்.  இப்போது முதலாளி பார்வையில் நேரிடையாக வெகு தூரத்தில் வைத்துள்ளார். இப்போது மாதம் 50.000 கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  ஏன் புதுப்படம் உடனே சிடியாக கிடைக்கின்றது என்பதற்காக இதனை எழுதத் தோன்றியது.

திருட்டு விசிடி என்பது வேறு.  இணைய தளங்களில் தரவிறக்கம் செய்து வெந்தும் வேகாமல் படம் என்ற பெயரில் சிடி வடிவில் நமக்கு வந்து சேர்வது. நான் இது போன்ற படங்களை வாங்குவதில்லை. படம் என்பது வித்தியாசமான அனுபவம்.  பாகு பலி படங்களை என்ன தான் நீங்கள் வீட்டில் ஹோம் தியேட்டர் வழியாகப் பார்த்தாலும் உங்களுக்குத் திரையரங்க அனுபவம் கட்டாயம் கிடைக்காது.

வலைபதிவில் என்னுடைய பத்தாண்டுக் கால அனுபவத்தில் தொடக்கம் முதல் திரைப்பட விமர்சனம் எழுதுவதற்குப் பெரிய எழுத்தாளர் பட்டாளமே இருந்தது.  காலப் போக்கில் காணாமல் போய்விட்டார்கள். இப்போதும் ஃபேஸ்புக்கில் தாங்கள் விரும்பும் நடிகர்கள் முதல் பழைய, புதிய திரைப்படங்கள் பற்றிய பார்வைகள், தொகுப்புரை, மதிப்புரை என்று விதம் விதமாக எழுதுபவர்கள் ஏராளமான பேர்கள் உள்ளனர்.  எப்போதும் போலச்  சுடச்சுடத் திரைப்பட விமர்சனம் என்று பெரிய குழுவே உள்ளது. வரவேற்பு நிச்சயம் உள்ளது.  ஆனால் இவர்கள் பலரின் நினைவில் இருப்பார்களா? என்று தெரியவில்லை.  அவரவர் வாசிப்பு சுவைக்கேற்ப இங்கே எழுதுபவர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்.

நான் அரசியல் எழுதி வாங்கிக் கட்டிக் கொள்வதைப் போலத் திரைப்பட நடிகர்களைப் பற்றி நண்பர்களை மன வருத்தத்திற்குள்ளாக்கியதும் உண்டு.  இப்போது யோசித்துப் பார்த்தால் என் பார்வை அந்தச் சமயத்தில் அப்படி இருந்தது. இப்போது மாறியுள்ளது. இன்னமும் மாறும். ஆனால் என் எழுத்துக்களால் மன வருத்தமடைந்தவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதில்லை. மனமுதிர்ச்சி இல்லாதவர்களைப் பற்றிப் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. 

சொந்தத் தாய், தகப்பன், மனைவி, குழந்தைகள் மேல் உள்ள பாசத்தை விட தாங்கள் நம்பும் உருவங்கள் மேல் அதிக மரியாதை வைத்துள்ளனர் என்பதனை தாமதமாகவே புரிந்து கொண்டேன்.

எனக்கு அரசியல், திரைப்படம், சமூகம்,வரலாறு, அனுபவம் என் இந்த ஐந்து களமும் பரிச்சயமானது.  எழுதுவதற்கு விருப்பமானதும் கூட. என் கருத்து இது தான் என்று தைரியமாகச் சொல்லும் நிலையில் எழுதிவிட்டு மறந்தும் விடுவேன்.  சிலர் தனிப்பட்ட வன்மத்துடன் உள்ளே வைத்துக் கொண்டு மறுகிக் கொண்டிருப்பார்கள். நான் கண்டு கொள்வதில்லை. இதை எழுதும் போது மிகச் சமீபத்தில் நடந்து நிகழ்வு ஒன்று இப்போது நினைவுக்கு வருகின்றது. இந்தச் சமயத்தில் எழுதிய ஆக வேண்டும் என்று தோன்றுகின்றது.

ஒருவர் ஏன் தமிழ்மணம் வேலை செய்யவில்லை? என்று உள்பெட்டியில் வந்து கேட்டார்.  அவர் தெரிந்தவர் தானே என்று விளக்கம் கொடுத்தேன்.  என் விமர்சனம் வழியே கேட்பது அவருக்கு மரியாதைக் குறைவு என்று கருதிக் கொண்டார் போலும்.  அதன் பிறகு பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் அவரின் மன விகாரம் தெளிவாகத் தெரிந்தது.  ஒருவர் மின்னூல் வெளியிட்டுள்ளார்.  அங்கே போய் அசிங்கம் செய்து வைத்ததைப் பார்த்தேன்.  ஒருவர் வயதில் வளர்ந்துள்ளார் என்று எப்போதும் நினைத்து மரியாதை கொடுக்காதீர்கள். அந்த வயதுக்குண்டான அனுபவங்களும், மரியாதையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றாரா? என்பதனை அவரவர் எழுத்தின் மூலம் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். 

எண்ணித் துணிவு வேண்டும்.  எதிலும் எப்போதும் கம்பீரம் இருக்க வேண்டும். என் கருத்து இது தான் என்பதனை தன் அடையாளத்துடன் சொல்லும் துணிவு இருக்க வேண்டும். அப்படியான விருப்பம் இல்லாவிட்டால் எவ்வித மனச்சாய்வும் இன்றி வெறுமனே வேடிக்கையாளனாக இருந்து விடுவது உத்தமம். அப்படித் தமிழகத்தில் கம்பீரமாக தாங்கள் நம்பிய கருத்தியல் ரீதியாக வாழ்ந்தவர்கள் தான் பெரியார், அண்ணா, கலைஞர். அதற்காக அவர்கள் பெற்றதும் கற்றதும் ஏராளம்.

நமக்கு எதிரிகள் என்பவர்கள் இங்கு யாருமில்லை. மாற்றுக் கருத்துள்ளவர்கள் நம்மைச் சுற்றிலும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். இருக்கின்றார்கள். நம்முடன் காலம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவிக்கே ஆயிரம் கருத்து வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும்.

மற்றவர்ளுக்கு இருக்கக்கூடாதா என்ன?  வெளிச்சம் மட்டும் இருப்பது உலகமல்ல.

இன்னும் சில ஆண்டுகளில் நிச்சயம் இந்தியா முழுக்க இணைய தள நட்புகளால், அரசியல் ஆதரவு, ஆதரவின்மை அடிப்படையாகக் கொண்டு மாற்றுக் கருத்துள்ளவர்களால் முழுமையான குடும்ப உறவுகளே பாதிக்கப்படும் சூழல் உருவாகப் போகின்றது என்பது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

நான் இந்த வருடம் ஐந்து நட்சத்திரக் குறியீடு வழங்கும் என் விருப்பமான இயக்குநர்கள். மற்றும் படங்கள்.

ஹெச். வினோத் (தீரன் அதிகாரம் ஒன்று)
சீனு ராமசாமி (தர்ம துரை)
ராஜரா ராணி (அட்லி)
எந்திரன் (ஷங்கர்)
கடைக்குட்டி சிங்கம் (பாண்டிராஜ்)
இமைக்கா நொடிகள் (அஜய் ஞானமுத்து)
பாகுபலி (1 / 2) ( எஸ்.எஸ். ராஜமவுலி)
எல்கேஜி  (பிரபு)

இதில் கடைசியாகக் குறிப்பிட்டுள்ள எல்கேஜி படத்தைப் பற்றிச் சொல்ல சில வார்த்தைகள் உண்டு.

படம் வந்து போது நான் கண்டு கொள்ளவில்லை. பலரும் அழைத்துச் சொன்னார்கள்.  ஒரு மாதம் கழித்து சிடி கடையில் கேட்ட போது வந்த 30 சிடியும் அரை மணி நேரத்தில் முன்பதிவு செய்தவர்கள் வாங்கிச் சென்று விட்டார்கள் என்றார்.  அடுத்த நான்கு வாரமும் அழைத்துக் கேட்ட போது இப்படியே தான் பதில் தந்தார்.  ஆச்சரியமாகி விட்டது. சரியாக ஐந்தாவது வாரம் தான் என் கைக்கு வந்து சேர்ந்தது.  கடைக்காரர் சொன்னது. என் கடை வரலாற்றில் இந்தப் படத்திற்குத் திரையரங்கத்திலும் அதே போல சிடி வடிவத்திலும் கிடைத்த வரவேற்பு வேறு எந்தப் படத்திற்கும் இல்லை என்றார்.  அற்புதமான படம்.  தற்காலச் சமூகத்தை கூராய்வு செய்யும் படமும் கூட.

நான் பட்டியலிட்டுள்ள படங்கள் எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பிடித்த படங்கள். பல முறை திரும்பத் திரும்பச் சலிக்காமல் பார்த்த படங்கள்.  நாம் வாசிக்கும் புத்தகம் மீண்டும் வாசிக்கும் போது முதல் முறை வாசித்த ஆர்வம் இருந்தால் எழுத்தாளர் வெற்றி பெற்றுள்ளார் என்று அர்த்தம்.  அதே போல ஒரு படத்தை பத்தாவது முறைப் பார்க்கும் போது அந்தப் படம் புதிய செய்திகள் சொல்லும் படமாக இருந்தால் அது என்னைப் பொருத்தவரையிலும் இயக்குநர்  தன்னுடன் பணியாற்றும் ஒவ்வொரு துறைகளையும் கவனமாகக் கையாண்டு தன் கற்பனைத் திறனைப் படைப்பாக  மாற்றித் நமக்குத் தந்துள்ளார் என்றே கருதுவேன்.

மேலும் இந்தப் படங்களின் சிறப்பு என்னவென்றால் 

1. எந்தப் படத்தின் நகலும் அல்ல. அப்படியே இருந்தாலும் அது குறித்து நான் கண்டு கொள்வதில்லை.

2. பொருளாதார ரீதியாகத் தயாரிப்பாளரை, விநியோகஸ்தர்களை, திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சிப் படுத்திய படங்கள்.  அதாவது இயக்குநரின் அறிவு வணிக ரீதியாகவும் அங்கீகாரத்துடன் கூடிய வெற்றியும் பெற்றுள்ளது என்று அர்த்தம். இது தான் முக்கியம்.  ஒரு படைப்பாளி தம் திறமையை காசாக்க தெரியவேண்டும். மக்கள் விரும்பக்கூடியதாகவும் மாற்றத் தெரிந்து இருக்க வேண்டும்.

3. விமர்சன ரீதியாகவும் பலரின் பாராட்டுக்களையும் பெற்ற படம். மூன்று விதமாக பிரிக்கின்றார்கள். ஏ பி சி என்கிறார்கள்.  அனைத்து இடங்களிலும் வெற்றிக் கொடி நாட்டியது.

4. குடும்பத்துடன் சங்கோஜம் இல்லாமல் பார்க்கக்கூடிய படம்.

5. நான் இந்தப் படங்களை எத்தனை முறை பார்த்து இருப்பேன் என்று எண்ணிக்கை சொல்ல முடியாத அளவுக்கு பிரேம் பை பிரேமாகப் பார்த்து ரசித்துள்ளேன். குறிப்பாக தீரன் அதிகாரம் ஒன்று இன்னும் 25 வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் ரசிக்க முடியும். இந்தப் படங்கள் எந்த வருடத்தில் வெளியானது என்பதனை விட இந்த வருடம் இந்தப் படங்கள் என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.


5 முதலாளிகளின் கதை (திருப்பூர் கதைகள்5 முதலாளிகளின் கதை - விமர்சனங்கள்


மூன்று நாட்களுக்கு இலவசமாக வாசிக்கக் கிடைக்கும் மின்னூல்
4 comments:

Rathnavel Natarajan said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

பரியேறும் பெருமாள் - போல இன்னும் சில உள்ளன (எனது விருப்பத்தில்...!)

ஜோதிஜி said...

அந்தப் படமும் எனக்குப் பிடித்து இருந்தது. இந்தப் பட்டியலில் மகள்கள் மூவருக்கும் தனித் தனியாக பிடித்த பட்டியல், மனைவிக்குப் பிடித்த பட்டியல் என்று வித்தியாசமாக உள்ளது. ஆனால் இந்தப் படங்கள் எங்கள் அனைவருக்கும் (சண்டை சச்சரவு இல்லாமல்?) பத்து முறைக்கு மேல் (ஒற்றுமையுடன்) பார்த்தாலும் அலுப்பைத் தரவில்லை.

G.M Balasubramaniam said...

தமிழ்நாட்டைவிட சினிமா பார்ப்பதில் ஆந்திரர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றே நினைக்கிறேன்