Friday, December 06, 2019

வாழ்க ஜனநாயகம்.

நிகழ்வு 1

நேற்று சேலத்தில் மத்திய அரசாங்கத்தின் பங்களிப்போடு நம் அரசாங்கம் துணையோடு நுண்ணியிரி சேகரிப்பு மையம் தொடங்க இடம் பார்த்து பல கட்ட ஆய்வு முடித்து நேற்று முறைப்படி அந்த வேலையைத் தொடங்க அதிகாரிகள் வந்துள்ளனர். அதுவரையிலும் ஒருவரும் மூச்சு கூட விடவில்லை. நேற்று திடீரென்று அந்தப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் எதிர்ப்பு என்பதோடு அதிகாரிகளை சிறைப்படுத்தி, பொக்லைன் எந்திரங்களையும் பிடித்து வைத்துக் கொண்டனர். அதிகாரிகள் சமாதானப் பேச்சு நடத்தி அதற்குப் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் சென்று விட்டனர்.

நிகழ்வு 2

சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் தென்னம்பாளையம் அருகே அலைபேசி கோபுரம் இங்கே அமைக்கக்கூடாது என்று அந்தப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வந்த தனியார் ஊழியர்களை விரட்டியடித்தனர். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் கோபுரம் அமைப்பது ஒரு தனியார் வீட்டில் உள்ள சும்மா கிடக்கும் இடம். அவருக்கு இதன் மூலம் நிரந்தர வருமானம் கிடைக்கும். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த மக்கள் எங்கள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். அவர் அனுமதி கொடுத்தாலும் நாங்கள் இங்கே கோபுரம் அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் என்று மொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்க வந்த ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.

நிகழ்வு 3

சில மாதங்களுக்கு முன்பு விளைநிலங்களின் வழியே உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கக்கூடாது. நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் நிலம் பாதிக்கப்படுகின்றது என்று அரசியல்கட்சி துணையோடு ஆர்ப்பாட்டம் செய்து அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.

நீங்கள் தினசரி செய்தித்தாளைத் திருப்பினால் ஏதோவொரு பக்கத்தில் இதுபோன்ற செய்திகளை நிச்சயம் நீங்கள் வாசிக்க முடியும்.

ஜெ ஆட்சியில் இருந்த போது மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கினார். கட்டாயப்படுத்தினார். வீடு கட்ட அனுமதி கொடுக்கும் போது அதிகாரிகள் வலியுறுத்தினார்கள். அதற்காக இடம் ஒதுக்கச் சொன்னார்கள். ஏற்கனவே இருக்கும் வீடுகளில் அதனை மேம்படுத்த ஆலோசனை வழங்கினார்கள். அப்படி செயல்படுத்தாமல் இருந்த வீடுகளில் உள்ளே நுழைந்து உருவாக்க கட்டாயப்படுத்தினார்கள். ஆச்சரியமாக நிலத்தடி நீர்மட்டம் பரவலாக உயரத்தொடங்கியது. அடுத்தடுத்து அதனை அரசாங்கம் கைவிட்டது. கண்டுகொள்ளாமல் இருக்க மக்கள் எப்போதும் போல பழைய குருடி கதைத் திறடி.

இப்போது சென்னையில் வெளியே உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர்மட்டம் உயர்ந்து அதன் கொள்ளவை முழுமையாக எட்டியுள்ளது. எடப்பாடி நல்லவரா? கெட்டவரா? ஆட்சி செய்யத் தெரிந்தவரா? தொலை நோக்குத் திட்டப்படி செயல்படத் தெரிந்தவரா? என்பது தனியாக பேச வேண்டிய விசயம். ஆனால் மனிதருக்கு நீர் ராசி இருக்கும் போல. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது.

மதுராங்கம் எரியில் நிறைந்த தண்ணீரை அதிகாரிகள் திறந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உருவானபின்பு தண்ணீரை திறந்த விட இப்போது சென்னை புறநகர்ப் பகுதி முழுக்க கட்டிய வீடுகள் அனைத்து வெள்ளக்காட்டில் தத்தளிக்கின்றது. சிலரின் பேட்டியைப் பார்த்தேன்

குழிக்குள் வீடு கட்டி உள்ளனர். வயலுக்குள் வீடு கட்ட ரியல் எஸ்டேட் மக்கள் விற்று விட்டு சென்று விட்டனர். அதிகாரிகள் காசை வாங்கிக் கொண்டு அனுமதி கொடுத்து விட்டனர். எந்த வரைமுறையும் இல்லை. இப்போது அரசாங்கம் எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை என்ற புலம்பல் புராணம்.

அரசாங்கம் உத்தரவு இல்லாமல் இங்குள்ள மக்கள் எதையும் செய்ய மாட்டார்கள். செய்யத் தயாராகவும் இல்லை. கட்டாயம் இல்லாமல், கண்டிப்பு இல்லாமல் இவர்கள் மாற மாட்டார்கள். வீட்டுக்குள் ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்றால் கூட அரசாங்கம் ஆப்பு வைத்து விடுமோ என்ற பயம் இருந்தால் மட்டுமே வேண்டா வெறுப்பாக செடியை நட்டு வைப்பார்கள். இல்லாவிட்டால் வீட்டைச் சுற்றியுள்ள இடம் முழுக்க சிமெண்ட் தரை அமைத்து தங்கள் பெருமையை அதன் மூலம் காட்ட முடியுமா? என்று பார்ப்பார்கள்?

காரணம் இங்கு எல்லாமே கௌரவம்? எல்லாமே அந்தஸ்த்து. சாதி முதல் மகன் படிக்கும் பள்ளி வரை.

அரசியல்வாதிகள், அதிகாரிகளை விட ஒவ்வொரு தனி மனிதர்களின் மனமும் Corrupt ஆகி வெகு நாளாகி விட்டது. காரணம் அவர்களின் பொருளாதார நிலை வளர்ந்து விட்டது. முன்பு போல பசி, பட்டினி, பஞ்சம் எதுவும் இல்லை. தேவைக்கு அதிகமானவைகள் எல்லாமே இங்கு உண்டு. இப்போது தங்கள் ஆண்ட சாதி என்று காட்டிக் கொள்ளவும், எதன் மூலம் எப்போதும் வருமானம் பார்க்க வாய்ப்புண்டு என்பதில் தான் பலருக்கும் ஆர்வமுள்ளது. அப்படி உள்ளவர்களை அனுசரித்து நடக்க விரும்புகின்றார்கள்.

இதனால் தான் எங்கள் பகுதிக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க வரவில்லை என்று வெட்கமில்லாமல் தெருவில் வந்து நின்று சாலை மறியல் செய்து போராட்டம் செய்யத் துணிவு வந்துள்ளது.

இந்தப் போராட்டங்களைச் செய்யக்கூடியவர்கள் அவரவர் வீட்டில் இருக்கும் இடங்களில் ராஜா ஒரு செடி நட்டு வளர்த்தால் என்ன? என்று கேட்டுப் பாருங்கள்? அடிக்க வந்து விடுவார்கள். ஒரு அம்மையாரிடம் இதே போல கேட்டு விட்டு திட்டு வாங்கி வந்தேன். தினமும் குப்பை கூட்ட நீ வருகிறாயா? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்

புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, காரைக்குடி இதனைச் சுற்றியுள்ள மொத்த கிராமங்களையும் ஒரு சுற்று சுற்றி வந்தேன். இங்கு எல்லா இடங்களிலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தான் காய்கறிகள் செல்கின்றது. திருப்பூரில் நான் உண்ணும் சுவையான காய்கறிகள் எங்கள் ஊரில் இல்லை. எனக்கு இங்கே கிடைக்கும் எதுவும் அங்கே கிடைக்கவில்லை என்பது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

இங்கே கடல் மீன்கள் நூறு ரூபாய்க்கு என்னால் வாங்க முடிகின்றது. அங்கே சந்தையின் போது 500 ரூபாய்க்கு கிடைக்கின்றது. அதுவே சாதாரண நாட்களில் ஒரு கிலோ 800 ருபாய்க்கு கிடைக்கின்றது.

தமிழக கிராமங்களில் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் வளர்ச்சிக்குப் பெயர் என்ன தெரியுமா? 

வீக்கம்.

வெடிக்கும் போது ஒரு நாள் புரியும்?

தமிழக அரசியல்வாதிகள் பாவம். அவர்களைத் திட்டாதீர்கள். காரணம் அவர்கள் தேர்தலுக்குத் தேர்தல் அவர்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகை எகிறிக் கொண்டேயிருக்கிறது.

அதனைக் கவனிப்பார்களா? மக்களைப் பற்றி யோசிப்பார்களா?

வாழ்க ஜனநாயகம்.

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

வாழ்க ஜனநாயகம்.

இங்கே பல விஷயங்கள் பொது நலம் இல்லாமல் தனிநபர்/நபர்களின் நலம் கருதியே நடக்கிறது ஜோதிஜி.

ஜோதிஜி said...

மனிதன் மாறிவிட்டான். மரத்தில் ஏறி விட்டான்.

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி