Monday, December 16, 2019

ஜெப் Jeff Bezos என்ற வியாபாரி


ஜெப் Jeff Bezos என்ற வியாபாரி தமிழுக்குச் செய்த தொண்டுள்ளம் பற்றி குறிப்பிட முடியுமா?

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னால் கடந்த 72 ஆண்டுகளில் மத்தியில் பல ஆட்சிகள் வந்து போய் இப்போது மோடி பிரதமராக இருக்கின்றார். வந்தமர்ந்த கட்சிகளும், இதுவரையிலும் பணிபுரிந்த மத்திய அரசின் அதிகாரிகளும் தமிழை மட்டுமல்ல ஒவ்வொரு மாநில மொழியையும் ஒவ்வொரு நிலையிலும் புறக்கணிக்க வேண்டும் என்பதில் தான் குறியாக இன்று வரையிலும் உள்ளனர். கட்சிகள், ஆட்சிகள் மாறியுள்ளது.  ஆனால் காட்சிகள் மாறவில்லை. இன்று சமஸ்கிருதம் முன்னெடுக்கப்படுகின்றது. 

உன்னை அடிமையாக்க விரும்புகிறேன். அதற்கு முன்னால் உன் தாய் மொழியை கொன்று முடித்து விடுகிறேன் என்ற இந்த எதேச்சிகாரப் போக்கில் இருந்து மாநில மொழிகள் தப்பித் தடுமாறி தட்டுண்டு தத்தமது மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டே வருகின்றது.  ஆங்கிலத்தை பேசத் தெரியாதவர்கள், கற்றுக் கொண்டாலும் சரிவர கையாளாகதவர்கள் கணவான்களாக இருப்பது நம் நாட்டின் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாக இருப்பதால் தமிழர்களுக்கு உலகம் முழுக்க மவுசும் மரியாதையும் உள்ளது.
2019 ஆம் ஆண்டு அமேசான் நடத்தும் கிண்டில் போட்டியில் ஹிந்தி மற்றும் தமிழிலில் மட்டுமே எழுதுபவர்களுக்கு போட்டி நடத்துகின்றார்கள். தொழில் நுட்ப வசதிகள் மூலம் தமிழ் மொழியை உலக மொழியாக மாற்றும் கடமையில் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

நாம் தயாராக இருக்கின்றோமா? என்பது தான் இங்கே முக்கியக் கேள்வி? 

நான் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எந்த புத்தகங்களையும் இதுவரையிலும் படித்ததே இல்லை. நான் புத்தகங்கள் படிக்க விரும்புவது இல்லை என்பவர்களை விட நான் புத்தக வடிவில் மட்டுமே படிக்க விரும்புகிறேன் என்பவர்கள் அதிகம்.  நான் வாசிக்க விரும்புகிறேன். 

ஆனால் இந்த தொழில் நுட்பம் வசதியாக இல்லை என்பது மற்றொருபுறம்.

அடிப்படைக்காரணம் மனத்தடை. 

கிண்டில் போட்டியில் கலந்து கொள்பவர்கள் விமர்சனத்திற்காக, ஸ்டார் ரேட்டிங் வாங்க வேண்டும் என்பதற்காக நான் இலவசமாக தந்துள்ளேன். படிக்க வாருங்கள் என்று கூவிக்கூவி அழைக்கும் போக்கு இந்த வருடத்தில் அதிகம் உருவாகியுள்ளது.

வியப்பாக உள்ளது.  நான் இணைய தளம் வாயிலாக கதைகள், கட்டுரைகளை படிக்கவே விரும்பமாட்டேன் என்பவர்களைப் பற்றி நாம் கண்டு கொள்ள வேண்டாம். ஆனால் நான் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். புத்தகமாக வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்பவர்களை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்வோம். 

நான் கவனித்த வரையிலும் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் கூட நூறு ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தான் இருக்கின்றார்கள். புத்தகங்கள் என்பது இலவசமாகக் கொடுத்தால் படிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது. ஒரு படம் பார்க்க, உணவகம் சென்றால் குறைந்தபட்சம் செலவளிக்கும் தொகையை தங்களுக்குப் பிடித்த, தங்களை முழுமையாக மாற்ற உதவும் புத்தகத்திற்கு செலவளிக்க மனமில்லாதவர்களைப் பார்க்கும் வியப்பாகவே உள்ளது.

கிண்டில் கருவி என்பது மாயமந்திரம் அல்லது. அதுவொரு மந்திரச் சாவி. என்ன விலையில் என்ன வசதிகளில் கிடைக்கின்றது? எப்போது தள்ளுபடி விலையில் தருகின்றார்கள்? மாதத் தவணை திட்டத்தில் தருகின்றார்கள் போன்ற அனைத்தையும் உங்கள் தேடல் மூலம் கண்டு கொள்ள முடியும்?  

சமீபத்தில் என் நண்பர்கள் என் கோரிக்கையை ஏற்று நானும் இந்த வசதிகளைப் பார்த்து விட்டு புதிதாக கிண்டில் கருவி வாங்கி விட்டேன்.

இத்தனை வசதிகளா? இத்தனை நாளும் தெரியாமல் இருந்து இருக்கிறேனே? என்று அங்கலாய்ப்புடன் பகிர்ந்து கொண்டவர்கள் சில பேர் உள்ளனர்.  தாங்கள் வைத்துள்ள கிண்டில் செயலியை தரவிறக்கம் செய்து நானும் வாசிக்கத் துவங்கி விட்டேன் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டவர்கள் சில பேர்கள் உள்ளனர்.

நான் கிண்டில் அன் லிமிட் ல் உள்ளேன்.  மாதம் ரூபாய் 166.  இலவசம் என்பதற்காக ஏங்கி நிற்க வேண்டியதில்லை.  எத்தனை புத்தகங்கள் என்ன விலையில் இருந்தாலும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். படித்தவுடன் திருப்பி அனுப்பி விட்டு அடுத்த புத்தகத்தை வாங்கிக் கொள்ள முடியும்.

நீங்கள் இந்த திட்டத்தில் சேரும் போது முதல் 30 நாட்கள் முழுமையாக இலவசம். பணம் கட்டத் தேவையில்லை. உங்கள் வங்கிக் கணக்கை அமேசான் கிண்டில் திட்டத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு ரூபாய் மட்டும் எடுத்துக் கொள்வார்கள்.  இரண்டாவது மாதம் முதல் நீங்கள் குறிப்பிட்ட தேதியில் ரூபாய் 166 கழித்துக் கொள்வார்கள்.  நீங்கள் வேறு எதையும் பற்றி அலட்டிக் கொள்ளவே தேவையில்லை.

இணையத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்போம். குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு திரும்பிப் பார்த்தார் யார் யாருக்கோ லைக் கோட்டு, ஷேர் செய்து, வம்பிழுத்து, வாங்கி கட்டிக் கொண்டு, தடை காலம் எப்போது நீங்கும்? நம் ஐடி எப்போது கிடைக்கும்? என்று மன உளைச்சலுடன் இருந்து இங்கு நாம் இருந்தது முழுக்க வெட்டி என்ற எண்ணம் உருவாகாமல் இருக்க உருப்படியாக ஏதாவது ஒன்றை இன்றே தொடங்குங்கள்.

கணவான் லோச்சும் ஹிந்தி மொழியைக் காட்டிலும் இந்த முறை தமிழ் நெடுங்கதை மற்றும் குறுங்கதை போட்டியில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகம்.  இதில் ஹிந்திவான்கள் கையை வைக்க முடியாது. எரிச்சலாகப் பார்க்க முடியும்.  அவ்வளவு தான்.  காரணம் அவர்கள் எப்போது மற்றவர்கள் மேல் குதிரை ஏறியே சுகமாக வாழ்ந்து பழகியவர்கள்.  அவர்கள் நம் மொழியை வளர்ப்பார்கள். உதவுவார்கள் என்று கற்பனை காணாதீர்கள்.

அமேசான் முதலாளி மற்றும் தொழில்நுட்பக்குழு செய்து கொண்டிருப்பது வியாபாரம் என்றாலும் இது அடுத்த நம் தமிழ் தலைமுறைக்கான ஊட்டச் சத்தையும் சேர்த்தே நமக்குத் தருகின்றார்கள் என்பதனையும் நினைவில் வைத்திருக்கவும்.

வாசித்ததில் ரசித்தது............

தம்பி மேவி

அமேசான் செய்திருக்கும் தரமான சம்பவம்..திநகர் பஸ் ஸ்டண்ட் வெளி ல நின்னு மூலம் , விரை வீக்கம் சிகிச்சை நோட்டீஸ் கொடுக்குற ஆளு மாதிரி எல்லா எழுத்தாளரையும் மாத்தினது தான்.

எல்.ஐ.சி. ஏஜெண்ட்ட விட கர்ண கொடூரமா துரத்துறாங்க இந்த பென் டூ பப்ளிஷ் இலக்கியவியாதி எழுத்தாளர்ஸ்.

*****

யார பாத்தாலும் எட்டு புள்ளி கோலம் போடுறது எப்படிங்குறளவுல புக்க போட்டுட்டு ...அந்த இம்சைக்கு ரேட்டிங் கொடுங்க.... கமெண்ட் போடுங்கன்னு விரட்டுறாங்க.

கொஞ்ச நாளுக்கு தலை ல முக்காடு போட்டுகிட்டு தான் சுத்தணும் போல.

••••••3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

கிண்டில் பயன்படுத்தி வருகின்றேன்
புத்தகத்தைக் கையில் வைத்துப் படிப்பதைப் போன்ற உணர்வுதான் வருகிறது

ஜோதிஜி said...

உங்கள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைங்க.

கிரி said...

தமிழ் நிச்சயம் முன்னேற்றம் அடைந்துள்ளது பல இந்தி அடக்குமுறைகளையும் மீறி.

"கொஞ்ச நாளுக்கு தலை ல முக்காடு போட்டுகிட்டு தான் சுத்தணும் போல."

ஹி ஹி ஹி இதற்கு பயந்து தான் இந்த வேலைகளில் இறங்குவதில்லை.