Wednesday, December 18, 2019

FIVE STARS மனிதர்கள் 2019


அமேசான் தளத்தில் 2019 கிண்டில் போட்டிக்காக எழுதப்பட்ட படைப்புகளுக்கு "எனக்கு பைவ் ஸ்டார் கொடுங்கள்" என்று எழுதியவர்கள் கதறிக் கொண்டு மார்க்கெட்டிங் செய்கின்றார்கள். 

நான் என் 5 முதலாளிகளின் கதை படைப்புக்கு FIVE STARS கேட்க மாட்டேன்.  

கேட்கவும் விரும்பவில்லை. படிங்க என்று சொல்வது என் கடமை. படிப்பது என்பது அவர்கள் விருப்பம் சார்ந்தது.  படித்து முடித்தவுடன் என்ன தரம் என்று தீர்மானிப்பது என் திறமையின் அடிப்படையில் கிடைப்பது.  

சிலர் மூன்று நட்சத்திரம் கொடுத்துள்ளனர். சிலர் நான்கு நட்சத்திரம் கொடுத்துள்ளனர். 

ஆனால் பெரும்பான்மையினர் ஐந்து நட்சத்திரங்களைத்தான் கொடுத்துள்ளனர்.  இந்த விமர்சனங்களை இந்த மின்னூல் வழியாகப் பார்க்கலாம். படிக்கலாம்.  


இதன் மூலம் ஒரு படைப்புக்கு எத்தனை விமர்சனங்கள் வந்துள்ளது? எப்படி விமர்சனம் எழுத வேண்டும்? எத்தனை விதமான பார்வைகள் உள்ளது என்பதனை உங்களால் உணர்ந்து ஆச்சரியப்பட முடியும்.

()()()()()



சொந்த வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, இணைய வாழ்க்கை மூன்றும் வெவ்வேறானது. ஒவ்வொரு இடத்திலும் நாம் கடைப்பிடிக்கும் கொள்கையென்பது மாறுதலுக்கு உட்பட்டது என்று கருதிக் கொள்பவர்கள் தான் இங்கே அநேகம் பேர்கள் உள்ளனர். 

அதாவது எழுதும் எழுத்து வேறு.  தான் வாழும் வாழ்க்கை வேறு என்பதில் மிகத் தெளிவாக வரையறை வைத்துள்ளனர்.  

புனைப் பெயருடன், தன் சுயரூபத்தை எந்த இடத்திலும் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாமை, ஆனால் உலகத்திற்கே அறிவுரை சொல்பவர்களாக இருப்பவர்கள் என்று நான் கவனித்த பலரும் பல பாடங்களை மறைமுகமாக உணர்த்தியுள்ளனர்.  இந்த வருடத்தில் நான் வாசித்த இவர்களின் எழுத்துக்கள் வழியே எனக்கு இவர்கள் ஆச்சரியத்தைத் தந்தனர். 

சொல்லும் செயலும் வேறல்ல.  உள்ளத்தில் உள்ளதே எழுத்தே மாறும் என்று ஒவ்வொருமுறையும் தங்கள் செயல்பாடுகள் மூலம் எனக்கு நம்பிக்கையளித்தனர். 

()()()()()

ஐந்து நட்சத்திரக் குறியீட்டை நான் இவர்களுக்கு வழங்குகிறேன்.

காரணங்களையும் எழுதியுள்ளேன்.

()()()()()


இணைய உலகத்தில் என்னை விட வயதில் மூத்தவர்களை அதிகம் கவனிப்பதுண்டு.  அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் ஆழ்ந்து உள்வாங்குவதுண்டு. அவர்களின் இடைவிடாத செயல்பாடுகளையும், சலிப்பின்றி அவர்கள் நேரத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்துகின்றார்கள் என்பதனையும் கணக்கில் எடுத்துக் கொள்வேன்.  அவர்கள் வயதில் நம்மால் இப்படிச் செயல்பட முடியுமா? என்பதனையும் அவ்வப்போது யோசித்துப் பார்ப்பேன்.  அந்த வகையில் இவர் எனக்கு அதிக அளவு நம்பிக்கை அளிப்பவர். 

மன மாச்சரியங்கள் இன்றி, எழுதுபவர்களை ஆதரிப்பது, மொய் வை. நான் மொய் வைக்கின்றேன் என்ற பச்சப்புள்ள விளையாட்டு இல்லாமல், முழுமையாக வாசித்து, உள்வாங்கி சில வரிகள் விமர்சனமாக எழுதினாலும் அதில் இருக்கும் வெளிப்படைத்தன்மை, நேர்மை போன்றவைகள் எனக்கு எப்போதும் ஆச்சரியத்தைத் தந்து கொண்டேயிருந்தது. தொடர்ந்து, இடைவிடாமல் இயங்கிக் கொண்டேயிருக்கின்றார். 

இது சரி, இது தவறு, இதை எழுத வேண்டுமா? இவையெல்லாம் தேவையா? இவற்றைப் படிப்பார்களா? இதை ஏன் எழுத வேண்டும்? இதை எழுதினால் நம்மைப் பற்றி வாசிப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? போன்ற எந்த மனத்தடையும் இல்லாமல் தனக்குத் தோன்றியவற்றை, தனக்குத் தெரிந்ததை எழுதிக் கொண்டே இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள் அய்யா.  

2020 உங்கள் மனதில் உள்ள நிறைவேறாத ஆசைகள், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் ஆண்டாக மலரட்டும். தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.


என்னுடன் பழகும் நபர்களின் பெயர்கள் என் கடந்த வாழ்க்கையில் தொடர்புள்ளவர்களாக இருந்தால் அவர்கள் மேல் சற்று கூடுதல் கவனம் செலுத்துவேன்.  ஜம்புலிங்கம் என்றொரு பெயர் எனக்கு 11 ஆம் வகுப்பில் அறிமுகமானது.  பக்கத்து ஊரிலிருந்து என் பள்ளிக்கு மாறி வந்து இருந்தான்.  நல்லவன். ஆனால் அக்மார்க் முரடன்.  அவனுடன் சேர்ந்து, அவன் செய்யச் சொன்னதையெல்லாம் செய்து வாரம் ஒரு முறை எங்கள் விலங்கியல் ஆசிரியர் குமரேசன் அவர்களிடம் நான் அடி வாங்கிக் கொண்டேயிருந்தேன்.  33 வருடங்களாக அவன் தொடர்பு இல்லை. இவர் பெயர் அறிமுகமாகும் போதெல்லாம் எனக்கு அவன் முகம் என் ஞாபகத்திற்கு வந்து கொண்டேயிருக்கும். 

எனக்கு ஒரு சந்தேகம் என்றால் இவரை அழைத்துப் பேசி விடுவேன். நேரில் சந்தித்து உள்ளேன். இவர் வெர்சன் 1.0 என்றால் நான் வெர்சன் 2.0.  காரணம் உலகமே வெறுக்கும் அத்தனை குணாதிசயங்களும் இருவரிடமும் ஒருங்கே அமைந்துள்ளது.  

காலம் தவறாமை. ஆங்கிலத்தில் பெர்பெக்சனிஸ்ட் என்பார்கள்.  எதையும் தெளிவாக யோசிப்பது.  எதையும் விளையாட்டுத் தனமாக அணுகாமல் இருப்பது. தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பது.  ஏதோவொரு வகையில் சமூகத்திற்குப் பலன் உள்ள காரியங்களை மட்டுமே செய்து கொண்டிருப்பது. பணம், பதவி, புகழ் போன்றவற்றுக்கு மயங்காமல் இருப்பது.  பணியில் இருக்கும் போது, இல்லாத போதும் முடிந்தவரை நேர்மையாகவே வாழ்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வாழ்வது. தன் குடும்ப பொறுப்புக் கடமைகளை மிகச் சரியாக நிறைவேற்றுவது. தன் வாரிசுகளுக்கு முன் உதாரணமாக வாழ்வது.  அவர்களுக்கு ஆசானாக, நண்பனாக, வழிகாட்டியாக இருப்பது.  தொடர்ந்து அவர்களுக்குப் பாதைகளைக் காட்டி ஊக்குவித்துக் கொண்டேயிருப்பது என்ற பல பரிணாமங்களை இவரிடம் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன். 

தமிழக ஊடக ஆசிரியர்கள், நிருபர்கள் என்று அத்தனை பேர்களும் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய அறிவு சார் தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பது மொத்தத்திலும் சிறப்பு.  ஆனால் சமகால மாற்றங்களை உள்வாங்காமல், விரும்பாமல் இன்னமும் அவர் போக்கிலேயே போய்க் கொண்டிருப்பது எனக்கு வருத்தம் என்பதனை அவரிடமே பலமுறை உரிமையுடன் சுட்டிக் காட்டியுள்ளேன்.  அய்யா நீங்கள் கோகினூர் வைரம்.  ஆனால் கண்காட்சியில் வைத்திருந்தால், பாதுகாப்புடன் இருப்பதால் பார்ப்பவர்கள் அனைவரும் பிரமிப்புடன் பார்ப்பார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ? அதனை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று எவருக்கும் தோன்றாது.  அதை அணியும் ஆபரணமாக மாற்றும் போது தானே அதன் மற்றொரு பரிணாமம் மக்களுக்குப் புரிய வரும்.  

நீங்கள் தினமும் வாசிக்கும் உலக செய்திகளை மசாலா கலந்து ஊடகங்களில் தொடர்ந்து எழுதிப் பாருங்கள்.  தினமும் 50 பேர்கள் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க உங்கள் வாசலில் வந்து நிற்கக்கூடும்.  உங்களுக்கு மசாலா பிடிக்காது.  எனக்கு அசைவ உணவில் காரத்தோடு சரியான மசாலா சேர்த்து சுவையுடன் கொடுப்பவர்களுக்கு என் (சேர்க்கப் போகும்) சொத்தைக்கூட எழுதி வைக்க விருப்பப் படுவேன். உங்களுக்கு ஆசிர்வாதம் வழங்க எவரும் தேவையில்லை. காரணம் உங்கள் வாழ்க்கையே ஆசிர்வாதம் தான். வாழ்த்துகள்.


திருப்பூரில் சுரேஷ் என்ற தம்பி என் நெருக்கமான தொடர்பில் இருக்கின்றார். 

சென்னையில் அலைபேசி உரையாடல் மூலம் ராம்கி என்ற ராமகிருஷ்ணன் நட்பில் இருக்கின்றார்.  

வலையுலகத்தில் பெரும்பாலான நண்பர்களுக்குக் குறிப்பாக ரஜினிகாந்த் மேல் பற்றும் பாசமும் கொண்டவர்களுக்கு கிரி என்றால் நன்றாகவே தெரியும். 

இந்த மூவரிடமும் நான் பார்த்த ஒரே ஆச்சரியப்படத் தக்க ஒற்றுமை என்னவென்றால் ஒரே தொனியில் ரஜினி குறித்துப் பேசுகின்றார்கள். ஒருவருக்கொருவர் தொடர்பில்லை என்றாலும் மூவரின் சிந்தனைகளும் ஒற்றைப் புள்ளியில் வந்தே நிற்கின்றது. வியப்பாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கிறது.  

சில தினங்களுக்கு முன் சுரேஷ் பேசும் போது உங்கள் மனைவியை நீங்கள் எந்த அளவுக்கு விரும்புகின்றீர்களோ அந்த அளவுக்கு நான் என் தலைவனை விரும்புகிறேன் என்கிறார்.  இதே வார்த்தைகள் இந்த மூவரிடமும் வெவ்வேறு தொனியில் வெளிப்படுகின்றது.  மனிதர்களின் உளவியலை நான் ஓரளவுக்குக் கரைத்துக் குடித்தவன்.  ஆனால் இந்த இடத்தில் தடுமாறிப் போய் நிற்கிறேன்.

காமராஜரை, அண்ணாவை, மோடியை, கலைஞரை, எம்ஜிஆரை, இந்திராவை, ராஜீவை ஆதரிப்பவர்களுக்கு பல்வேறு காரணங்கள் உண்டு. வெவ்வேறு பாதையில் தான் இருக்கின்றார்கள். முடிவில் எனக்குப் பிடிக்கும் என்பார்கள். ஒன்றோடு ஒன்று சேராது. ஒருவர் மற்றவர்களுடன் இணைய மாட்டார்கள். ஆனால் ரஜினி விசயத்தில் மொத்தப் பேர்களும் ஒரே விதமாக யோசிக்கின்றார்கள்.

பத்தாண்டுகளாக இணையத்திலிருக்கும் எனக்கு இவரின் இணைய தளம் வடிவமைப்பு போலவே எதையும் முன் உதாரணமாகச் சொல்லத் தோன்றவில்லை.  இவர் எழுத்து இருபது வயதுக்குக் கீழே உள்ளவர்கள் விரும்பிப் படிக்கும் தற்கால எளிமை, சுருக்கம், நேர்மை என்று மூன்றுமே கலந்தது.  சொல் தான் செயல்.  செயல் தான் சொல். சொல்லும் செயலும் தான் என் எழுத்து. இவரிடம் இதைப் பற்றிக் கேட்டால் இதற்கும் ரஜினி தான் காரணம் என்பார்.

சிங்கப்பூரிலிருந்து ஊருக்குத் திரும்பி வந்தால், அதுவும் நல்ல நிலையிலிருந்து தமிழ்நாட்டில் இனி இருந்து விட வேண்டும் என்று கிளம்பி வந்தால் குடும்பத்தில் இருப்பவர்களே துரத்தி அடிப்பார்கள். ஆனால் மீண்டும் தன்னை சென்னை வாழ்க்கையில் பொருத்திக் கொண்டது, தன் குடும்பம், ஊர், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் அனைவருக்கும் செல்ல டார்லிங் போலவே இருப்பார் போல. 

என் எழுத்தை என் மூத்த அக்கா மட்டும் இன்னும் தினமும் வாசித்துக் கொண்டு வருகின்றார்.  ஆனால் இவரின் வாசகர்கள் ஒரு படை பட்டாளமே உறவினர் வட்டத்திற்குள் இருப்பது தான் சாகித்திய அகடாமி வாங்கிய பெருமை போல் உள்ளது.  வாழ்த்துகள் கிரி.  

வாழும் வரைக்கும் இதே போல மாறாத கொள்கையுடன் மங்காப் புகழுடன் சங்கே முழங்கு என்று வாழ எங்கள் தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.


என் டாலர் நகர விழாவிற்கு வந்தார்.  தொடக்கம் முதல் என் எழுத்துக்கு இவர் மட்டுமல்ல குடும்பமே தீவிர வாசகர்கள். மாதத்தில் ஒரு முறையாவது பேசி விடுகின்றோம்.  இவர் வீட்டுக்குச் சென்றுள்ளேன். சாப்பிட்டுள்ளேன்.  திணறத் திணறக் கவனிப்பதில் அலாதி பிரியம்.  இது எனக்கு மட்டுமல்ல.  வருகின்ற ஒவ்வொருவருக்கும் இதே ராஜ மரியாதை உண்டு.  

இது தவிர உலகம் முழுக்க இருப்பவர்களுக்கு இவர் வலையுலக என்சைக்ளோபீடியா. என்ன உதவி கேட்டாலும் செய்து கொடுத்து விடுகின்றார். அதுவும் சொந்தத் தொழில் கடமைகளை மறந்து அதன் பின்னால் சென்று விடுகின்றார். திட்டு வாங்குகின்றார். திருத்த முயல்கிறேன். சிரித்துக் கொள்கின்றார். 

நேர்மை, சேவை மனப்பான்மை என்பது நம்முள் பாசாங்கு இல்லாமல் இயல்பாக வந்து விட்டால் அதனை உங்களால் இறப்பு வரைக்கும் மாற்றிக் கொள்ளவே முடியாது. திருவள்ளுவரின் பிராண்ட் அம்பாஸிடர். ஒரு வேளை வாசுகி இன்று உயிரோடு இருந்தால் இவரை வாங்க கொழுந்தனாரே என்று தான் அழைப்பார். 

ஒன்று இவரை இவர் மகள் திருத்த வேண்டும். அல்லது வரப் போகும் மருமகன் உதைக்க வேண்டும்.  காரணம் என் தானைத்தலைவன், உலகமே வியந்து போற்றும் ஒப்பற்ற, மாசற்ற, மாணிக்கமாக வாழும் எங்கள் சிங்கம் மோடியைக் கலாய்ப்பதில் இவருக்கு அலாதி விருப்பம்.  பயபுள்ளையை கோர்த்து விட வேண்டும்.  எங்கள் ஜன்டாவுக்கு கடிதம் எழுத வேண்டும். 

தனபாலன் 2020 ஆம் ஆண்டில் உங்கள் மகள் மூலம் நீங்கள் இழந்த, உங்களுக்கு இதுவரையிலும் கிடைக்காத, நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து விதமான சுகமும் செல்வமும் கிடைக்கத் தேவியர் இல்லத்தின் சார்பாகப் பிரார்த்தனை செய்கிறேன். வாழும் நாள் வரைக்கும் உங்கள் மனைவி அடைய நினைத்த அனைத்து மகிழ்ச்சியும் அவர் வாழ்க்கையில் நடக்க வேண்டும். 

காரணம் நம்மைப் போன்ற பாதிக் கிறுக்கர்களுக்கு வந்து அமைகின்ற மனைவிமார்கள் அனைவரும் போன ஜென்மத்தில் ஏதோ தவறு செய்த காரணத்தால் மட்டுமே அவர்கள் இப்போது மிகச் சரியாக அவர்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்.  

நாம் இப்படியே மகிழ்ச்சியாக இருக்கின்றோம்.


மிக நன்றாகத் தெரிந்தவர்களின் இவரும் ஒருவர். சந்தித்துப் பேசியுள்ளேன். சண்டை போட்டுள்ளேன். மன வருத்தத்தில் பிரிந்துள்ளேன். சேர்ந்துள்ளோம். ஒற்றைக் கருத்தில் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து இயங்கியுள்ளோம். எதிரெதிர் துருவர் ஈர்க்கும் என்பது இவருக்கும் எனக்கும் பொருந்தும்.

காரணம் இவரின் பார்வை தேசியப் பார்வை. இந்தியா குறித்துக் கவலைப்படுவார். ஆனால் என் பார்வை தமிழகம்.  தமிழர்களைப் பற்றி மட்டுமே யோசிப்பேன்.  

இரண்டாவது நிலையில் மட்டுமே டெல்லி அரசியலைப் பற்றி யோசிப்பேன். 

இவரின் உடல் நலன் குறித்து மிகுந்த அக்கறையுண்டு.  ஆனாலும் இன்று வரையிலும் இயங்குகின்றார்.  நான் தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் இவர் தளத்திற்குத்தான் முதலில் செல்கிறேன்.  மதியம் மீண்டும் செல்வேன். 

காரணம் எனக்குச் சரியாகத் தீனி போடுபவர் இவர் தான்.

என் விருப்பங்கள் அனைத்தையும் இவர் தான் இந்த வருடம் நிறைவேற்றினார்.  நண்பர் ஏற்கனவே எழுதியிருந்தார்.  காப்பி பேஸ்ட் என்றார்.  ஆனால் மொத்தமாக ஒரே இடத்தில் சோர்த்து அதற்கு தன் விளக்கங்களைக் கொடுத்து, வாசிப்பவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பாரோ என்ற அச்சமின்றி, தான் நம்பும் கொள்கைகளை, தான் விரும்பும் விசயங்களைத் தினமும் சலிப்பின்றி எழுதுவது என்பது தவம் செய்வது போன்றது.  இதைத்தான் ஒரு தளம் அல்ல.  இரண்டு தளங்கள் வாயிலாகச் செய்து கொண்டிருக்கின்றார். 

என்னை விட வயதில் மூத்தவர். மரியாதைக்குரியவர்.  

நீங்கள் 2020 ஆண்டில் பரிபூரண ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்று எங்கள் தேவியர் இல்லத்தின் சார்பாக அகிலமெங்கும் நிறைந்திருக்கும் பேராற்றல் பெருங்கருணையிடம் சமர்ப்பிக்கின்றேன்.

தொடர்ந்து விமர்சனம் எழுதி ஆதரித்துக் கொண்டிருப்பவர்கள், தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், என் எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் உலகமெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் வாழ்விலும் புதிய அத்தியாங்கள் 2020 ஆம் ஆண்டு மலர வேண்டும் என்று முன்கூட்டிய வாழ்த்துகள் இன்றே எழுதி வைத்து விடுகிறேன்.  அனைவருக்கும் என் வாழ்த்துகள்.


(அடுத்த மூன்று நாட்களுக்கு இலவசமாக படிக்க முடியும்)


16 comments:

KILLERGEE Devakottai said...

//உலகமே வியந்து போற்றும் ஒப்பற்ற, மாசற்ற, மாணிக்கமாக வாழும் எங்கள் சிங்கம் மோடி//

உங்களுக்கு மோடி தானைத்தலைவனாக இருக்கட்டும் அதை மறுப்பதற்கு எனக்கு உரிமை இல்லை "உலகமே வியந்து போற்றும்" இதை சொல்ல எப்படி 'உங்களது'மனசாட்சி இடம் கொடுக்கிறது ?

என் மனதில் விசயமுள்ள பதிவாளர்கள் வரிசையில் நீங்கள் எப்போதும் இருக்கின்றீர்கள்.

மற்றபடி பதிவை ரசித்தேன் நண்பரே...

திண்டுக்கல் தனபாலன் said...

பிரார்த்தனைக்கு நன்றிகள் பல...

எனக்கென்னமோ இதுவரை இரு விசயங்களில் மட்டும் ஈடுபாடே வந்ததில்லை...

1. சாப்பாடு
2. பணம்

அப்புறம் உலகில் உள்ள அனைத்து தானைத்தலைவன்களுக்கு என, ஒரு பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன்... கடிதம் எழுதும் போது இலவச இணைப்பாக சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்... ஹிஹி...!

ஜோதிஜி said...

உலக அரசியலை நீங்கள் உற்றுக் கவனித்தால் மோடி என்பவர் யார் என்பது உங்களுக்குப் புரியும் மீசைக்கார நண்பா. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். பாகிஸ்தானை தன் பங்காளியாக வைத்துள்ளது சீனா. பாகிஸ்தான் நாட்டின் தரை வழியாக பைப் லைன் போடுவது முதல் பல விசயங்களை செய்ய நினைக்கின்றது சீனா. இதனால் பாகிஸ்தான் என்ன செய்தாலும் கண்டு கொள்வதில்லை. எனவே நேற்று ஐநா சபையில் காஷ்மீர் விசயத்தில் மோடி அரசு செய்தது தவறு என்று ஒரு மசோதவை தாக்கல் செய்து பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்று சொல்லியது. போன மாதம் தான் இங்கு இட்லியும் கெட்டிச் சட்னியும் தின்று விட்டுச் சென்றார் சீன அதிபர். உலக துரோக வரிசையில் சீனர்களை முதலிடம் கொடுக்கலாம். அந்த அளவுக்கு அவர்கள் எண்ணம் கேடு கெட்ட எண்ணம். மன்மோகன் ஆட்சியில் தலையைக் குனிந்து கொண்டு ஐநா சபையில் கதறுவார்கள். இப்போது என்ன நடந்தது தெரியுமா? அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டுமல்ல மற்ற நாடுகள் அனைத்து இந்தியாவின் உள் நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடக்கூடாது என்று மண்டையில் கொட்டு வைத்து உட்கார வைத்து விட்டார்கள். சீனா ஆய் போய் விட்டது. கழுவ ஆள் இல்லாமல் நாறிக் கொண்டு இருக்கின்றதாம். நீங்கள் இங்கே திமுக செய்து கொண்டிருக்கும் அரசியலை வைத்து தனபாலன் போல ஏதேதோ கற்பனை செய்து கொண்டு இருக்கீங்க. உலக அரசியல் என்பது சாதாரணமானது இல்லை நண்பா. கண் இமைக்கும் நேரத்தில் காவு வாங்கி விடும். மோடியைக்கூட தகர்த்து விடுவார்கள். நினைவில் இருக்கட்டும். இப்போது உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு மரியாதையே கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

KILLERGEE Devakottai said...

இவ்வருடத்தின் உலகின் சிறந்த தலைவர்கள் 100 வரிசையில் முதல் நபராக வேண்டாம் நூற்றுக்கு வெளியே நிறுத்தி விட்டார்களே...

ஏன் ஜி வயிற்றெரிசலை கிளப்புறீங்க... குடிக்க கஞ்சி இல்லாமல் மனுஷன் செத்துக்கிட்டு இருக்கான்.... இவங்கே சந்திரனுக்கு ராக்கெட் விட்டு உலக அரங்கில் பேர் வாங்குறாங்களாம்...


குறிப்பு - எந்த அரசியல் தலைவனுக்கும் நான் அடிமை கிடையாது நண்பரே...

ஜோதிஜி said...

நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களால் ஐந்து நட்சத்திரக் குறியீடு பெற்றவர்கள், அதற்கான முழுத்தகுதியினையும் பெற்றவர்கள்.

கிரி said...

"சொல் தான் செயல். செயல் தான் சொல். சொல்லும் செயலும் தான் என் எழுத்து"

தன்னடக்கமாகவோ பெருமையாகவோ சொல்லவில்லை.. உண்மையாகவே இப்படி தான் இருக்கிறேன்.. இதில் ஒரு சுயநலமும் உள்ளது. பொய் சொல்ல வேண்டிய தேவையில்லை. எவரை பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

அன்னைக்கு அப்படி எழுதினீங்க இப்ப.. இப்படி பேசுறீங்க என்று யாரும் என்னை கேட்டதில்லை. இது எனக்கு மிகப்பெரிய சுதந்திரம்.

"இவரிடம் இதைப் பற்றிக் கேட்டால் இதற்கும் ரஜினி தான் காரணம் என்பார்."

உண்மை தான்.. இவரிடம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். என்னுடைய பக்குவத்துக்கு இவரே முக்கிய காரணம்.

நான் பேஸ்புக் பயன்படுத்திடுவதில்லை என்பதால் WhatsApp ஸ்டேட்டஸில் போடுவது என் உறவினர்கள் பலரை அடைந்து உள்ளது.. நண்பர்களின் மனைவிகள் கட்டுரை பற்றி கூறும் போது மகிழ்ச்சி.

நன்றி ஜோதிஜி.

G.M Balasubramaniam said...

இப்போதெல்லாம் ஐந்து முதலாளிகளின் கதையை மார்க்கெடிங் செய்ய அதிக முயற்சி தெரிகிறதோ

G.M Balasubramaniam said...

2019 ம் ஆண்டைய ஃபைவ் ஸ்டார் மனிதர்களில் என்னையும் ஒருவனாக கண்டதற்குநன்றி ஜி அது நான்தானே

ஜோதிஜி said...

நன்றி ஆசிரியரே.

ஜோதிஜி said...

நண்பர்களின் மனைவிகள் கட்டுரை பற்றி கூறும் போது மகிழ்ச்சி....... இதைத் தான் பொதுவாசகர்கள் உங்களுக்கு அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொன்னீங்களோ?

ஜோதிஜி said...

ஆனால் நீங்கள் கடைசி வரைக்கும் படிப்பதே இல்லை என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறதோ?

ஜோதிஜி said...

நீங்களா என்று தெரியவில்லை. அதில் இணைப்பு கொடுத்துள்ளேன். உள்ளே சொடுக்கிப் போனால் யார் என்று தெரியும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பிற பணிகள் காரணமாக இப்பதிவினை தாமதமாக இன்றுதான் கண்டேன். இத்தகைய தகுதிக்கு நான் பொருத்தமாக இருக்கின்றேனா என்று சுயமதிப்பீடு செய்து பார்க்கிறேன். இன்னும் எழுதவேண்டியுள்ளது, வாசிக்க வேண்டியுள்ளது, சாதிக்க வேண்டியுள்ளது, மேம்படுத்திக்கொள்ள வேண்டியள்ளது என்ற அடிப்படையில் நேர்மறை எண்ணங்கள் செயல்கள், எழுத்துகள் என்ற பின்புலத்தில் ஓர் இலக்கில் தொடர்ந்து பயணிக்கிறேன். உங்கள் கோணத்தில் நீங்கள் அனுமானிப்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். 25 ஆண்டு களப்பணியும், ஆய்வுப்பணியும், 35 ஆண்டு அலுவலகப்பணியும் பிற சூழல்களும் எனக்குத் தந்த பாடமே என்னுடைய சீரான பயணத்திற்குக் காரணம். உங்களின் அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது. நன்றி.

ஜோதிஜி said...

இப்போது உங்கள் நேயர் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன். 2019 பாஜக குறித்த கட்டுரையை இப்போது தான் வெளியிட்டேன். உங்கள் விமர்சனம் தான் என்னை எழுத வைத்தது.

ஜோதிஜி said...

2020 உங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும் என்று நம்புகிறேன்.