Tuesday, December 17, 2019

Blog, Facebook,Twitter... அப்புறம் வேறு ஏதேனும் உண்டா? - 2019


2002 தான் முதன் முதலாக இணையம் எனக்கு அறிமுகமானது.  நான் 1992 முதல் ஆயத்த ஆடைத்துறையில் உற்பத்தி பிரிவில் தான் இருந்தேன்.  முதல் முறையாக 2002 ஆம் ஆண்டு சேர்ந்த நிறுவனத்தில் அலுவலகம் தொடர்பான வேலையில் விரும்பி சேர்ந்தேன்.  அந்தப் பதவிக்குப் பெயர் (Senior Merchandiser) சீனியர் மெர்சன்டைசர்.  வெளிநாட்டில் இருப்பவர்களுடன் உரையாடுவது, மின் அஞ்சல் வழியாகத் தினமும் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான அனைத்து விசயங்களையும் நாம் நிறைவேற்ற வேண்டும். 

எனக்குத் தட்டெழுத்துப் பயிற்சி உண்டு.  மூன்று மாதம் கணினி பயிற்சியும் திருப்பூரில் கற்று இருந்தேன். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு அது தேவைப்படாது. 2000க்கு முன்னால் திருப்பூரில் கணினி என்பது பரவலாக இல்லை.  குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்தது.  2000க்கு பிறகு முழுமையாக மாறத் தொடங்கியது.


எனக்கு முதன் முதலாக மின் அஞ்சல் என்றால் என்ன? எப்படிச் செயல்படுகின்றது? நாம் ஆங்கிலத்தில் எப்படிக் கடிதம் எழுத வேண்டும். எப்படி அனுப்ப வேண்டும்? போன்ற நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தவர் அஸ்ஸாமிலிருந்து வந்து பணியாற்றிக் கொண்டிருந்த இளம் பெண். என் பதவிக்கு நாலைந்து உதவியாளர் இருந்தார்கள். அதில் இவரும் ஒருவர்.  மிக அழகாக இருந்தார். அதை விட எளிமையாக எனக்குப் புரிய வைத்தார்.

என்னைப் போல என்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களை அந்தப் பெண்ணுக்கு நூல் விட்டுக் கொண்டிருந்தனர். நான் பல தொழில் நுட்ப சமாச்சாரங்களை அந்தப் பெண் மூலம் கற்றுக் கொண்டேன். சில மாதங்களில் திருமணம் என்று அஸ்ஸாம் போய்விட்டார்.

இப்படித்தான் தான் என் இணையப் பயணம் தொடங்கியது. 

அடுத்த பத்தாண்டுகளில் கணினி தான் என் முதல் மனைவி என்கிற ரீதியில் மாறியது. என் தினசரி வாழ்க்கையில் தினமும் 12 மணி நேரம் கணினியுடன் உறவாட வேண்டியதாக மாறியது. இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது.

2007 ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் வந்து அமர்ந்த போது ஏதோவொரு நாள் வேறு எதையோ ஒன்றைத் தேடிக் கொண்டிருந்த போது தமிழ்மணம் என் பார்வையில் பட்டது.  கணினியில் தமிழ் மொழியா? என்று ஆச்சரியமாகப் பார்த்து என் கடமைகளில் அதனை மறந்து போய்விட்டேன்.  2009 ஆம் ஆண்டு தான் முழுமையாகத் தமிழ் இணையத்தில் நுழைந்தேன்.  இன்று வரையிலும் தொடர்கின்றது.

வலைப்பதிவில் மட்டும் கவனம் செலுத்தினாலும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இருந்தேன்.  ஆனால் செயல்படவில்லை.  எழுதும் பதிவுகள் இணைக்கும் அளவிற்கு உருவாக்கி வைத்திருந்தேன்.  

கூகுள் ப்ளஸ் என்னளவில் வசதியாக இருந்தது.  முழுமையாக அதில் இருந்தேன். செயல்பட்டேன்.  40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் புழங்கும் ஆலமரத்தடி அரட்டைகள் நடந்தது.  எப்போதும் போல வம்பிழுப்பது, வாங்கிக் கட்டிக் கொண்டது, எதிரிகளை சம்பாதித்துக் கொண்டது, ஏளனங்களைத் தவிர்த்து ஒதுங்கியது என நல்லதும் கெட்டதும் கலந்து பல அனுபவங்கள் கிடைத்து.  

இதற்கு மேல் இந்தப் புத்திசாலி தமிழர்களை யோசிக்க விட்டால் ஆபத்து என்று திருவாளர் சுந்தர் பிச்சை அதற்கு திண்டுக்கல் பூட்டு ஒன்று வாங்கி நிரந்தரமாக மூடிவிட்டார்.  பறவைகள் பிரிந்தன.  

பலர் அச்சப்பட்டு ஃபேஸ்புக் பக்கம் வராமல் ட்விட்டர் பக்கம் இருந்து சேவை ஆத்திக் கொண்டிருக்கின்றார்கள்.  சிலர் பேஸ்புக்கில் இருந்தாலும் அடக்கி வாசிக்கின்றார்கள் அல்லது வெறுமனே வேடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வலைப்பதிவில் எழுதியவர்கள் தான்.

இப்போது எவரும் எழுதுவதில்லை.  நான்கு வரிகள் எழுதி இந்தியாவிற்குச் சம உரிமை, சமூகநீதி வாங்கிக் கொடுத்தே தீருவேன் என்று தாங்கள் வாழும் நாட்டிலிருந்தபடியே தமிழர்களின் நன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பாஜக எதிர்ப்பது உடல் நலத்துக்கு நல்லது. குறிப்பாக கிட்னிக்கு நல்லது என்று கங்கணம் கட்டிக் கொண்டு போராளி அவதாரம் எடுத்துள்ளனர். குறிப்பிட்ட சிலர் மட்டும் தனிப்பட்ட உரையாடலில் இன்னமும் இருக்கின்றார்கள்.  அதீத புத்திசாலிகள் தசாவதார வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருப்பதால் என் தடத்தை நான் மாற்றிக் கொண்டேன்.

இன்றும் ட்விட்டர் பக்கம் செல்வதுண்டு.  ஆனால் தினமும் செல்வதில்லை.  காரணம் அந்த உலகம் வேறுவிதமாக உள்ளது.  90 சதவிகித போலிப் பெயர்கள்.  அனாதைகள் அபயக்குரல் எழுப்புவது போல ஒரே கூக்குரல்கள். இதற்கு மேலாக ட்ரெண்ட்டிங் என்ற மாயாஜாலம். "நீயெல்லாம் பத்துக் காசுக்குக் கூட லாயக்கு படமாட்டாய்" என்று நம்மை நம் பெற்றோர்கள் ஒரு காலத்தில் திட்டியிருப்பார்கள் அல்லவா? 

அத்தனை பேர்களையும் ட்விட்டரில் பல ரூபங்களில் பார்க்கலாம்.  

இந்த வார்த்தைகள் வயதானதால், அந்தத் தொழில் நுட்பத்தைப் புரிந்து கொள்ளாமல் வரும் புலம்பல் என்று எண்ணிவிட வேண்டாம். காரணம் அங்குள்ள அல்கரிதம் அப்படித்தான் உள்ளது. அப்படிப்பட்ட உரையாடல்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது.  பெரியார் தான் தெய்வம் என்று சொல்லும் கட்சியில் இருக்கும் முக்கிய பிரபல்யம் நடத்தும் பள்ளிகளில் ஒவ்வொரு விஜயதசமி அன்று பள்ளியில் மாணவர்கள் சேர்க்கப்படும் என்பதனை மகிழ்ச்சியாக அறிவிப்பார். இது போலப் பல வினோதங்களை அங்கே நம்மால் பார்க்க முடியும்?

ஆனால்....

உலக அளவில் உள்ள பிரபல்யங்கள், நம் நாட்டின் தேசிய, மாநில அரசியல் பிரமுகர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், சமூக சிந்தனையாளர்கள், ஊடகங்கள், பத்திரிக்கைகள், பலதரப்பட்ட சர்வதேச, தேசிய, மாநில நிறுவனங்கள் என்று அனைவருக்கும் அங்கு ஒரு கணக்கு உண்டு.  ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கணக்கு இருக்கும்.  எல்லாவற்றையும் கவனிக்க, கண்காணிக்க முடியும்.  மற்ற செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும்.  

எது உண்மை? எது பொய் என்பதனை எளிதில் ஒப்பீட்டுப் பார்த்துக் கொள்ள முடியும்.  எந்த அளவுக்கு உயரத்தில் இருந்தாலும் அவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்க முடியும். பல சமயம் பதில் வாங்க முடியும். இந்திய ரயில்வே துறை, இந்திய வெளியுறவுத்துறை போன்றவைகள் மிகச் சிறப்பாக பாஜக ஆட்சியில் ட்விட்டரைப் பயன்படுத்துகின்றார்கள்.  நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கின்றார்கள்.

உங்கள் வார்த்தைகளைக் கவனம் எடுத்து மதிக்கின்றார்கள். 72 வருட இந்தியச் சுதந்திரத்திற்குப் பின்னால் உள்ள இந்தியாவில் இப்போது தான் முதல் முறையாக இந்தியப் பிரதமர் தமிழ் மொழியில் ட்விட்டரில் எழுதுகின்றார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழில் ட்விட்டர் செய்தியாக அறிக்கை தருகின்றார்.  மிகப் பெரிய ஆச்சரியம். சாதனையும் கூட.  

ஆனால் எத்தனை பேர்கள் இந்த நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்துகின்றார்கள்? என்பது மில்லியன் டாலர் கேள்வி. இங்கு எது முக்கியம்? எது பொழுதுபோக்கு? என்பது வரையறையின்றி மாறிவிட்டது.

மக்களைப் பாதிக்கும் விசயங்களைப் பற்றி எவரும் விவாதிக்க மாட்டார்கள். நித்தி என்ற பொறம்போக்கு (அவரே சொன்ன பெயர் இது) பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் விரல்கள் வலிக்க மனித உரிமை குறித்து எழுதி அடித்துத் தள்ளிக் கொண்டிருப்பார்கள்.

என் வலைப்பதிவு தலைப்பு ஒவ்வொன்றும் இயல்பாக ட்விட்டரில் இணைந்து விடுகின்றது.  ஃபேஸ்புக் பக்கம் கொண்டு செல்ல விரும்புவதில்லை.

கடந்த பத்தாண்டுகளில் மொத்தமாகப் பார்த்தால் ட்விட்டரில் செயல்பட்ட நேரங்களை மணிக் கணக்கில் கொண்டு வந்து விடலாம். இருந்தாலும் இன்றைய நிலையில் அதனையும் என் கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துள்ளேன்.

ஃபேஸ்புக்கில் கடந்த பத்தாண்டுகளாக இருக்கின்றேன் என்று என் பழைய ஃபேஸ்புக் பதிவுகள் சொல்கின்றது.  ஆனால் முழுமையாக முழுத் தீவிரமாக 2019 ஆம் ஆண்டு தான் செயல்படுகிறேன். இதுவொரு ட்விட்டரிலிருந்து வேறுபட்ட உலகம். வினோதமான மனிதர்களைக் கொண்ட உலகமிது.

இதனை இப்படித்தான் என்னளவில் பிரித்து வைத்துள்ளேன்..  

தீவிர பாஜக ஆதரவாளர்.  அதி தீவிர பாஜக எதிர்ப்பாளர் என்று இரண்டு விதமாகப் பிரிகின்றார்கள்.  இதற்குள் மோடியின் தீவிர ஆதரவாளர். பாஜக ஆதரவாளர். ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். பிராமணச் சாதி ஆதரவாளர், இந்து மத ஆதரவாளர், அதிமுக ஆதரவாளர் என்று வகைவகையாக இருக்கின்றார்கள்.  மோடியின் எதிர்ப்பு பட்டியலில் வருபவர்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்.

பெரியார் ஆதரவாளர், கலைஞர் ஆதரவாளர், அண்ணா ஆதரவாளர், திக ஆதரவாளர், திமுக ஆதரவாளர், காங்கிரஸ் ஆதரவாளர், கம்யூனிஸ்ட் ஆதரவாளர், ஸ்டாலின் ஆதரவாளர், உதயநிதி ஆதரவாளர் என்று பிரிக்க முடியும்.  

இதற்குப் பிறகு வேறு சில  பிரிவுகள் உண்டு.  

தமிழ்த் தேசியம் ஆதரவாளர்.  இதற்குள் சீமான் ஆதரவாளர், ஈழ ஆதரவாளர் போன்றோர்கள் வருகின்றார்கள். 

கடைசியாக வருவது தான் வெடிகுண்டு முருகேசன் பார்ட்டிகள். இவர்கள் வெளிப்படையாகச் செயல்படுகின்றார்கள். குழுவாகப் பக்கம் அமைத்துச் செயல்படுகின்றார்கள்.  இது தவிர க்ளோஸ்டு குரூப் என்கிற ரீதியில் (உள்ளே நுழைய வேண்டுமென்றால் அவர்கள் உங்களை அனுமதித்தால் மட்டுமே அதற்குள் நுழைய முடியும். உள்ளே என்ன நடக்கின்றது? எதைப் பேசுகின்றார்கள் என்பது வேறு யாருக்கும் தெரியாது) செயல்படுகின்றார்கள். இதில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகம் சார்ந்த சாதியைச் சார்ந்தவர்கள் ஒரு பக்கம்.  மற்றொருபுறம் பாமக போன்ற மற்ற சாதிச் சமூகம்.

கட்டக் கடைசியாகச் சினிமா தான் என் உயிர் மூச்சு என்று அதனைப் பற்றி மட்டுமே யோசிப்பவர்கள் எழுதுபவர்கள் என்பது தனிக் கோஷ்டி.

தலைசுற்றுகின்றதா?

ஆனால் இதுவரையிலும் நான் எந்தப் பஞ்சாயத்திலும் சிக்கவில்லை. எவரும் என் ஐடி ரிப்போர்ட் செய்யவில்லை. முடக்கப்படவில்லை.  அந்தத் தளத்திற்கு ஏற்ப அதில் செயல்படுகின்றேன். பெரும்பாலான  அங்கே எழுதும் விசயங்களை வலைப்பதிவிற்குக் கொண்டு வந்தும் விடுகிறேன்.  ஆனால் இங்கே ஆத்மார்த்தமாக எழுதும் எந்த விசயங்களையும் அங்கே கொண்டு போய்ச் சேர்ப்பதில்லை. 

அது வேறொரு உலகம்.  குப்பைகள் சூழ்ந்த உலகம்.  நாம் மாஸ்க் போட்டுத்தான் உtலவ முடியும். இல்லாவிட்டால் மூச்சுத் திணறிவிடும். சில ஆண்டுகளுக்கு முன் புனைப் பெயர்களில் தான் ஃபேஸ்புக்கில் பெரும்பாலான மக்கள் இருந்தனர்.  படிப்படியாக களை எடுக்கப்பட்டு, முடக்கப்பட்டு இப்போது 80 சதவிகிதம் சொந்தப் பெயரில் இயக்குகின்றார்கள்.  உலக அளவில் ஒவ்வொரு அரசாங்கமும், பன்னாட்டு நிறுவனங்களும் தற்போதைய நடைமுறையாக உங்களைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் இணைய தளத்தை எதற்காக பயன்படுத்துகின்றீர்கள் என்பதனை ஆராய்ச்சி ரீதியாக எடுத்து விடுகின்றார்கள்.  பலருக்கும் இது தான் அடிவயிற்றில் பீதியைக் கிளப்பி விடுகின்றது.

ஃபேஸ்புக்கில் கண்ணியவான்களும் உள்ளனர்.  கலங்கரை விளக்கம் போல வழிகாட்டுபவர்களும் உள்ளனர். அறிந்து கொள்ள வேண்டிய, ஆச்சரியப்படத்தக்க வகையில் செய்திகளைப் பற்றித் தொடர்ந்து எழுதுபவர்களும் உள்ளனர். ஊடகங்களில் பணியாற்றுபவர்களுடன் உரையாட முடியும். அவர்களின் மற்றொரு முகத்தையும் நம்மால் பார்க்க முடியும்.

ஃபேஸ்புக் என்பது செயற்கை நுண்ணறிவு மூலம் மட்டுமே கவனிக்கப்படுகின்றது. கண்காணிக்கப்படுகின்றது. உங்களை ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் எழுதுவது அவர்களுக்குப் பிரச்சனையாக உள்ளது என்றால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாகக் குழுவாகச் சேர்ந்து ஒரே சமயத்தில் ரிப்போர்ட் செய்தால் உங்கள் ஐடி முடக்கப்பட்டுவிடும். 

செயற்கை நுண்ணறிவு மூலம் எப்படி அல்கரிதம் எழுதப்பட்டு உள்ளதோ அதற்கு உகந்த மொழியில் பலரும் சேர்ந்து எழுதி அனுப்பினால் கதவு சாத்தப்பட்டுவிடும்.

தினமும் பலரும் பாதிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றார்கள். 

சிலர் இதற்கு அடிமையாகி என்னால் மீள முடியவில்லை. வேறு வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் வெளியேறுகிறேன் என்று சொல்லிவிட்டுச் செல்பவர்களும் உண்டு. எதைப் படிக்க வேண்டும்? எப்படி எழுத வேண்டும்? எந்தப் படங்களை அங்கு வலையேற்ற வேண்டும்? நாம் யாருடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது தான் ஃபேஸ்புக்கில் முக்கியமானதாகக் கருதுகிறேன்.

இன்றைய சூழலில் ஃபேஸ்புக் என்பது சக்தி வாய்ந்த ஆயுதம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதனை விட வாட்ஸ்அப் என்பது அணுகுண்டு போலச் சக்தி வாய்ந்தது.

வாட்ஸ் அப் அறிமுகமான போது எனக்கு இது வேண்டவே வேண்டாம் என்று ஒரு வருடம் முழுக்க ஒதுங்கி ஓடிக் கொண்டேயிருந்தேன்.  நிறுவனங்களில் இது தொடர்பாகப் பல பிரச்சனைகள் உருவானது.  நான் பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் நிறுவனம் கொண்டு வந்து நிறுத்தியது.  வேண்டா வெறுப்பாக உள்ளே வந்தேன்.  

இப்போது முழுக்க முழுக்க பலவிதங்களில் வெளிநாட்டுத் தொடர்புகளுக்கு உதவி செய்கின்றது. பொழுது போக்கு சமாச்சாரங்கள், ஃபார்வேர்டு செய்திகள், குட்மார்னிங் போன்ற செய்திகள் எவரும் அனுப்ப மாட்டார்கள். குறிப்பாக உறவினர்கள்.  அப்படி ஒரு வேளை எனக்கு வந்து சேர்ந்தால் அடுத்த சில நாட்களுக்குக் காய்ச்சல் வந்து விடும் அளவிற்கு அன்பாகப் பேசி விடுவது என் வாடிக்கை.  

குரூப்பில் சேர்த்தால் சம்பந்தப்பட்டவரை அழைத்து உடனே அன்புப் பரிசு கொடுத்து விடுவதுண்டு.  உங்களுக்கு இது கொடுமையாகத் தெரியலாம்.  எந்த நாட்டிலிருந்து எந்த நேரத்தில் எவர் எந்தச் செய்தியை அனுப்புவார்களோ? அது எத்தனை எம்பி உடைய கோப்பாக இருக்குமோ? என்று காத்திருக்கும் தொழிலில் இருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.  இது போன்ற தொழில் நுட்பம் எவ்வளவு பெரிய வரப்பிரசாதமென்று?

மகள்கள் வளர்ந்து விட்டார்கள். அவர்களுக்குத் தனியாக அலைபேசி எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை.  கல்லூரி போகும் போது வாங்கிக் கொள்ளுங்கள். அதுவரையிலும் என் அலைபேசியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளேன். 

நமக்கென்று எந்த அந்தரங்கமும் இல்லை என்பதால் அவர்கள் குழு அமைத்துக் கும்மியடிக்கின்றார்கள். எல்லாமே என் பார்வையில் படுகின்றது.

சிரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது.  

நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.  வாட்ஸ் அப் ல் ஸ்டேடஸ் என்று அமைப்பு உள்ளது.  எனக்கு அது குறித்துத் தெரியாமல் இருந்தது. உள்ளே போவேன். செய்திகளைப் பார்ப்பேன். படிப்பேன். வெளியே வந்து விடுவேன்.

பேச வேண்டியவர்களுடன் பேசுவேன்.  முடிந்துவிடும்.  

இவர்கள் ஸ்டேட்டஸ் ஆராய்ச்சி செய்து என்னிடம் காட்ட அழுவதா? சிரிப்பதா? என்று தெரியாமல் அவ்வப்போது தடுமாறுவதுண்டு. என்னை ஒதுக்கி விடுவார்களோ என்று பயந்து கொண்டு அவர்கள் இழுத்த இழுப்புக்கு நானும் அவர்கள் பின்னால் ஓடிக் கொண்டேயிருக்கிறேன்.(அடுத்த மூன்று நாட்களுக்கு இலவசமாக படிக்க முடியும்)

9 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜோதி ஜி! மறுபடியும் வலைப்பதிவில் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்து இந்தப்பதிவுடன் 850 என்ற எண்ணிக்கையைத் தொட்டிருப்பதற்கு முதலில் என்னுடைய மனமுவந்த வாழ்த்துகள்! இந்த இணையம் இருக்கிறதே, இது மெய் நிகர்ப்போலி என்பதை யாஹூ!360 நாட்களிலேயே தெரிந்துகொண்டதை, இங்கே 2008 வாக்கில் தமிழ் இணையச் சூழலில் இன்னும் நன்றாக மற்றவர்களுடைய அனுபவங்களிலிருந்தே தெரிந்து கொண்டேன். மாயவரத்து உபி ஒருவர் இன்னும் செழுந்தமிழால் கற்றுக் கொடுத்தார்.

ஆனால் எதையும் மனதில் சுமையாக ஏற்றிக் கொள்வதில்லை!.

ஜோதிஜி said...

850 என்ற எண்ணிக்கையைத் தொட்டிருப்பதற்கு//////

950 யைத் தொட்டுள்ளேன்.

KILLERGEE Devakottai said...

கட்டுரையை ரசித்து படித்தேன் நண்பரே வாழ்த்துகள்....

ஜோதிஜி said...

நன்றி மீசைக்கார நண்பா.

திண்டுக்கல் தனபாலன் said...

எதுவும் அளவிற்கு மீறினால் நஞ்சு தான்...

அப்புறம் வேறு ஏதேனும்...? கிண்டிலை மறந்ததிற்காக கோபித்துக் கொள்கிறேன்...(!)

கிருஷ்ண மூர்த்தி S said...

50! எண்ணிக்கையை ஒரு நூறு குறைத்துச் சொல்லிவிட்டேனா ? திருத்திக்கொள்கிறேன்!

ஜோதிஜி said...

இது நேற்று விருந்துக்கு வந்த கொளுந்தியாள். மற்றது எல்லாம் வீட்டில் இருக்கும் மனைவிமார்கள்.

கிரி said...

"நமக்கென்று எந்த அந்தரங்கமும் இல்லை என்பதால் "

இதைப்பற்றி அர்த்தமுள்ள இந்து மதம் புத்தக விமர்சனத்தில் நான் குறிப்பிட்டு இருந்தேன், பின்பற்றியும் வருகிறேன்.

நமக்கென்று அந்தரங்கம் இல்லையென்றால், அது அற்புதமான உணர்வு. யாரைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.. இதை பார்த்து விடுவார்களோ.. படித்து விடுவார்களோ என்ற கவலையில்லை.

மிக சுதந்திரமான உணர்வு. எனக்கு மிகப் பிடித்தது.

WhatsApp ல ஒரு குழுவில் நண்பன் ஒருத்தன் திடீர்னு எப்பவாவது Adult படம் எதையாவது அனுப்பி விடுவான்.. இது மட்டுமே தவிர்க்க முடியாத சிக்கல்.

மற்றபடி எனக்கு என்று எந்த ரகசியமும் இல்லை.. கிட்டத்தட்ட திறந்த புத்தகம் தான். மறைத்து வைத்தால் அது தேவையற்ற சிக்கலையே கொண்டு வரும்.. அது எனக்கு தேவையில்லை.

ஜோதிஜி said...

நன்றி கிரி.