Tuesday, December 24, 2019

இசையுடன் வாழுங்கள் - 2019

தினமும் பத்து மணிக்கு ஒழுங்காகப் படுக்கைக்குச் சென்ற விடுவதுண்டு. அதிகபட்சம் பத்தரை மணி வரைக்கும்.  படுத்தவுடன் தூக்கம் வந்து விடும்.  காலையில் ஐந்து மணிக்கு அலாரம் வைக்காமல் எழுந்து விடுவதும் உண்டு.  இது இயல்பான பழக்கமாக உள்ளது.  நான் இதற்கென தனியான பயிற்சியே முயற்சியே எடுத்ததில்லை.  இயல்பாகவே வந்து விட்டது.

காரணம் தெரியாமல் சில நாட்கள் அதிகாலையில் நாலைரை மணிக்கே முழிப்பு வந்து விடும்.  ஏன் இன்று நீண்ட தூரம் நடந்து செல்லக்கூடாது என்று அதிகாலைப் பயணத்தைத் தொடங்கி விடுவதுண்டு.  ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது முழித்துப் பார்க்கும் 'வீட்டு அட்மின்' முனங்கலாக ஏதோ சொல்வார். அதற்குள் வெளியே சென்று விடுவேன்.

நான்கு பெண்களும் எழுந்து புத்துணர்ச்சியாக தங்கள் கடமைகளில் மூழ்கியிருக்கும் போது அமைதியாக உள்ளே வந்து பூனை போல அவர்களுடன் சேர்ந்து கொள்வதுண்டு. உலகம் விழித்திருக்கும். அதிகாலையில் ஆள் அரவமில்லாத நடந்து செல்லும் போது மாறிக் கொண்டேயிருக்கும் சமூகத்தை, புதிதாக உருவான கட்டிடங்களை, பலவிதமான ப்ளக்ஸ் போர்டுகளை, அறிவிப்பு தட்டிகளை என்று ஒவ்வொன்றாக வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்வதுண்டு.



வாகன இரைச்சல் இருக்காது. இதமான பனி சூழ மனதில் உருவாகும் எண்ணங்களைக் கவனித்துக் கொண்டே நடந்து செல்வதுண்டு. அன்றைய தினச் செயல்பாடுகளைக் கட்டமைப்பதும் உண்டு.

ஒரு தொழில் நகரம் தூங்கும் போது கவனித்துப் பார்த்தால் உங்களுக்குள் உருவாகும் தாக்கங்கள் அளவிட முடியாததாக இருக்கும்.  வாழ்ந்தவர்கள், வீழ்ந்தவர்கள், போராடிக் கொண்டிருப்பவர்கள் என்ற கூட்டத்தோடு அடிப்படை வசதிகள் இல்லாமல் தெருவோரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரையும் பார்த்துக் கொண்டே பாடங்கள் படித்துக் கொண்டே செல்ல முடியும்.

திருப்பூரில் நான்கு மணிக்கே பேக்கரி கடைகள் திறந்து இருக்கும்.  காலை வேளையில் முதலில் நாக்கில் படும் சுவை நன்றாக இல்லாவிட்டால் அன்றைய பொழுது முழுக்க எதையோ இழந்தது போலிருக்கும் என்ற எண்ணம் இருப்பதால் தேநீர்க் கடைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளேன்.  அந்தக் கடைகள் தவிர வேறு எங்கும் செல்ல மனம் ஒப்பாது.  சுவைக்கு அடிமையானவர்கள் ஏறக்குறைய குடிநோயாளிகள் போலத்தான். மாற்றவும் முடியாது. பல சமயம் மறைக்கவும் முடியாது. திட்டு வாங்கிக் கொண்டு திருந்த மனமில்லாத குழந்தை போல இருக்க வேண்டியிருக்கும்.

பேக்கரி கடைகளில் சமீப காலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்களில் மனம் லயிக்கத் தொடங்கியது.  ஏற்கனவே இசைஞானியுடன் சிறிது காலம் சண்டை போட்டு ஒதுங்கியிருந்தேன். அவர் பேசும் உளறல் பார்த்து வெறுத்துப் போயிருந்தேன்.

ஆன்மீகம் என்பது அவரவருக்குத் தனியாக உருவாக வேண்டிய அனுபவம்.  அவரவர் வாழ்க்கையே கற்றுக் கொடுக்கும். சிலருக்கு வாழ்க்கை முழுக்க தேவையில்லாமல் போய்விடும். எதுவும் தவறில்லை. சிலர் மனம் சார்ந்து செயல்பட்டு தன்னை பக்குவப்படுத்தி வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.  சிலர் சில நம்பிக்கையின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஆன்மீகத்தைக் கடை பரப்பி, அதனைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள், தன்னை அதன் சார்பாளராக மாற்றிக் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்பவர்களைப் பார்க்கும் போது வியப்பாகவே எனக்குத் தோன்றும்.  பல சமயம் அவர்களின் மனநலம் குறித்தும் யோசிப்பதுண்டு.

ஆனால் காசு பணம் விசயத்தில் மிகத் தெளிவாகவே இருப்பதையும் கவனித்து வந்துள்ளேன். இதே போலத்தான் இசைஞானி இளையராஜாவையும் எரிச்சலாகப் பார்த்து அவர் பாடலை புறக்கணித்து வந்தேன். கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பாடல்களை ஒலிக்க விட்டுக் கொண்டு வேலை செய்யும் பழக்கம் சமீபகாலமாக உருவாகியுள்ளது.  மகள்கள் இருக்கும் போது அவர்கள் விரும்பும் பாடல்களைத்தான் போட முடியும்.  அது எனக்குப் பிடிக்கின்றதா? இல்லையா? என்ற அக்கறை அவர்களுக்கு இருக்காது.

டி டியூப் தளத்தில் பாடல்கள் குறித்து ஆராய்ச்சி செய்த போது எத்தனை விதவிதமான தொகுப்புகள் என்பதனைப் பார்த்து வியந்து போய் விட்டேன்.  1980 க்கு முன் என்று என் இசைப் பயணம் தொடங்கியது.  ஆனால் எல்லாவற்றையும் சுற்றி வந்து கடைசியில் இசைஞானியிடம் தான் சரணடைய வேண்டியதாக இருந்தது.

இளையராஜாவுக்கு மற்ற இசையமைப்பாளர்களுக்கு உண்டான வித்தியாசம் என்ன?

கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி என இளையராஜாவுக்கு முன்னால் கோலோச்சியவர்கள் அனைவரும் நமக்குப் பாடம் நடத்தினார்கள். வாழும் போது வாழ்வது எப்படி? பல சமயம் மீள்வது எப்படி? என்று கூடச் சொல்லித் தருகின்றார்கள். எழுதிய கவிஞர்களின் வார்த்தைகள் நெஞ்சை அறுக்கும் அல்லது உருக்கும். வகுப்பறையை மனப்பூர்வமாக விரும்பும் மாணவர்கள் உண்டா?

இல்லை.

ஆனால் சில தினங்களுக்கு முன் அதிகாலையில் 5 மணிக்குத் தேநீர்க் கடையில் இளையராஜா பாடல் ஒலித்ததைக் கேட்ட போது கால்கள் இயல்பாகக் கடையை நோக்கிச் சென்றது. நாலைந்து பாடல்களைக் கேட்க வேண்டும் என்பதற்காக இரண்டு முறை தேநீர் குடிக்க வைத்தது.

சாலையில் நடந்து வரும் போது மேட்டுப்பாளைம், ஊட்டிக்குச் சென்று கொண்டிருந்த அதிகாலைப் பேருந்துகளில் ஒலித்த இளையராஜா பாடல்களை வைத்தே ஓட்டுநர் எந்த வயதில் இருக்கின்றார்? இருப்பார் என்பதனை ஊகிக்க முடிந்தது. கவனித்த போது 40 வயதுக்கு மேல் உள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

திருப்பூரில் சில வாரங்களுக்கு முன் முழுமையாக மழை இல்லாமல் சாரலாகத் தூறலாகத் தினமும் பெய்து கொண்டிருந்தது. தொழிலாளர்களும், முதலாளிகளுக்கும் எரிச்சலை உருவாக்கினாலும் இது போன்ற சூழலில் இளையராஜா பாடல்கள் மாய வித்தைகளைச் செய்யும் அவசியத்தை முழுமையாக உணர முடிந்தது.

அதிகாலையில் நான் கேட்ட இளையராஜா பாடல்கள் நரம்புக்குள் ஊடுவி, நியூரான்களை இதமாக ஒத்தடம் கொடுத்துத் தடவி,கால எந்திரத்தில் அமர வைத்து 30 வருடத்திற்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தி விட்டது.

கூடவே இருபது வயது இளமையுடன் நடைப்பயிற்சி முடிந்து வீட்டுக்குள் வந்து சேர்ந்த போது உற்சாகத்தை உணர முடிந்தது.

இளையராஜாவிற்குப் பின் எத்தனை எத்தனை இசையமைப்பாளர்கள் இங்கே வந்து விட்டார்கள் என்று பட்டியலிட்டுப் பார்த்தால் மிகப் பெரிய படை பட்டாளமே உள்ளது. பலவீனங்கள் பலரையும் பக்கவாட்டுச் சந்துக்குள் கொண்டு போய் நிறுத்தி விட்டது. சிலரின் சரக்கு தீர்ந்து போய் விட்டது. ரகுமான் மட்டுமே தாக்குப் பிடித்து வந்து கொண்டேயிருக்கின்றார்.  ரகுமான் பாடலையும் விதம் விதமாகக் கேட்டுப் பார்த்தேன்.  கூடவே பலரின் பாடல்களையும் கேட்டு முடித்த போது இளையராஜா என்பவர் பத்து ஜென்மங்களில் செய்ய வேண்டிய அனைத்தையும் ஒரே ஜென்மத்தில் செய்து முடித்து விட்டார் என்றே தோன்றியது.

பாடல் வரிகள் செய்யும் மாயங்கள் ஒரு பக்கம்.  (இது வைரமுத்து கூட்டணியில் இருந்த போது தான் அதிகம் வெளிப்பட்டது.)  அதே சமயத்தில் இசைக் கோர்வைகள் ஒவ்வொரு இடத்திலும் ஏறி இறங்கி, உள்வாங்கி, பள்ளத்தாக்கில் தூக்கி எறியப்பட்டு, மேலேறி மூச்சு வாங்க வந்து களைப்புடன் அமர்ந்திருக்கும் போது தடவிச் செல்லும் தென்றல் போல என்னன்னவோ செய்கின்றது.  ஏதோதோ புரியாத மொழியை உணர்த்தி விட்டுச் செல்கின்றது.

திறமை என்பதற்கு எல்லை இல்லை.  உழைப்பு என்பது இருந்து விட்டால் போதும்.  செய்யும் வேலையை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தால் போதும்.  புதுப் புது விசயங்களை உள்ளே கொண்டு வந்து விட்டால் போதும். முயற்சிகளும் பயிற்சிகளுமே மனிதர்களை மேன்மையடைச் செய்யும் போன்ற அனைத்துக்கும் பொருத்தமான தமிழக ஐகான் இசைஞானி இளையராஜா மட்டுமே.

இசைஞானியே உங்கள் பாடல்கள் பேசட்டும்.

உங்கள் வாய் இனியாவது பேசாமல் இருக்கட்டும்.


இலவசமாக வாசிக்கக் கிடைக்கும் மின்னூல்


5 முதலாளிகளின் கதை (திருப்பூர் கதைகள்



5 முதலாளிகளின் கதை - விமர்சனங்கள்

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான ரசனை...

திண்டுக்கல் தனபாலன் said...

597 படங்களில் இருந்து 2882 mp3 பாடல்கள்...

கீழ் உள்ள இணைப்பை
Copy & paste செய்து திறக்கவும்... அங்கும் கேட்கலாம்... Download செய்து கொள்ளலாம்...

https://drive.google.com/drive/mobile/folders/1j1XKAAnAmVQuEoaNSGHFpgiO1W6mRFEu?usp=drive_open

Unknown said...

நன்றி...

ஜோதிஜி said...

தனியாக பென் ட்ரைவ் வாங்கி சேமித்துக் கொள்கிறேன். நன்றி.

அது ஒரு கனாக் காலம் said...

நான் சின்ன வயதில் இருந்தே , MGR , பிறகு ரஜினி, இசையில் இளையராஜா, ( நடிகைகளில் மட்டும் கொஞ்சம் தாராளம், ஜெயந்தி , ஸ்ரீ தேவி, ஸ்ரீபிரியா , சுமலதா...and others ) 16 வயதினிலே
வந்தது என்னோட பதினாறு வயதில் ......அப்பொழுதெல்லாம் என் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் , ராஜாவின் இசை ஒரு டப்பாங்குத்து ( ருக்குமணி வண்டி வருது) ..அப்படி இப்படி என்று, ஆனால் நான் திடமாக ராஜாவின் இசை பின்னால் தான். என்னிடம் ஒரு மோகன் & முரளி பாட்டுக்கள் தொகுப்பு இருக்கிறது , ஆஹா , என்ன மாதிரியான பாட்டுக்கள். அவரின் கருத்துக்களும் என்னை ஒன்றும் செய்யவில்லை .... என்ன , நம்பிக்கையோட இருந்தார், நம்பினால் நல்லது என்று சொன்னார் , அதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. ( ஆழ்ந்து பார்த்தால் கண்ணதாசனும் அதை தான் சொன்னார் ) ..

எனக்கு கர்நாடக இசையிலும் ஆர்வம் இருப்பதால் , சினிமா பாட்டுக்கள் கேட்க நேரம் கொஞ்சம் கம்மி தான் .

காலையில் எழுந்து , சமைத்து , அதையே மதியத்திற்கு கட்டி எடுத்துக்கொண்டு, ( தினமும் சமயல் ) , துணி, கிளீனிங் , இது தவிர பூஜை, பஜன் இத்தியாதிகள் ....எங்கே நடை பயிற்சி ...ஆனால் செய்தே ஆகவேண்டும் .... ( தனியாய் வாழ்வதின் அசௌகரியங்கள் )

ஜோதிஜி said...

என்னத்த சமைக்கப் போறீங்க. கறியும் மீனும் சிக்கனும் மட்டனுமா சமைக்கப் போறீங்க. சுத்தமான அக்மார்க் சைவம். ஆயிரத்தெட்டு கண்டிசன். பச்சப் புள்ள சாப்பாடு. என்னையெல்லாம் இப்படி சாப்பிட்ச் சொன்ன உங்க ஊர்ல இருக்குற கடலுக்குள் வாழப் போயிடுவேன். க்கும்...

ஸ்ரீராம். said...

அதிகாலை நடைப்பயிற்சி நானும் ரொம்ப ரசிப்பது. அதை வைத்து முன்பு எங்கள் தளத்தில் நடக்கும் நினைவுகள் என்று எழுதி இருந்தேன்.

இளையராஜா பற்றி அதே கருத்துதான் எனக்கும். 

Rathnavel Natarajan said...

அருமை

ஜோதிஜி said...

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தச் சொல்கின்றார்கள். உள்ளுறுப்புகள் மேன்மையடைய. அதே போல காலையில் நாம் கடைபிடிக்கும் நடைபயிற்சி ஆரோக்கியம் மேம்பட என்பதனை விட நம்மில் இருக்கும் எண்ணங்களை கவனிக்க கண்காணிக்க மேம்படுத்தவும் உதவும் என்பதே நான் கண்ட உண்மை ராம்.

ஜோதிஜி said...

நன்றி

ஸ்ரீராம். said...

ஆம், நானும் பல வருடங்களாக காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவரின் ஆலோசனைப்படி அப்போதே BP மாத்திரைநும் சாப்பிட்டு விடுகிறேன்!

ஜோதிஜி said...

என் நட்பு வட்டார அனுபவங்கள் மூலம் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்களை நம் எண்ணங்கள், வாழ்க்கை முறை மூலம் மட்டுமே 70 சதவிகிதம் குணப்படுத்திவிட முடியும் அல்லது கட்டுக்குள் வைத்திருக்க முடியும். 2020 பூரண ஆரோக்கியத்துடன் வாழ என் வாழ்த்துகள் ராம்.