தினமும் பத்து மணிக்கு ஒழுங்காகப் படுக்கைக்குச் சென்ற விடுவதுண்டு. அதிகபட்சம் பத்தரை மணி வரைக்கும். படுத்தவுடன் தூக்கம் வந்து விடும். காலையில் ஐந்து மணிக்கு அலாரம் வைக்காமல் எழுந்து விடுவதும் உண்டு. இது இயல்பான பழக்கமாக உள்ளது. நான் இதற்கென தனியான பயிற்சியே முயற்சியே எடுத்ததில்லை. இயல்பாகவே வந்து விட்டது.
காரணம் தெரியாமல் சில நாட்கள் அதிகாலையில் நாலைரை மணிக்கே முழிப்பு வந்து விடும். ஏன் இன்று நீண்ட தூரம் நடந்து செல்லக்கூடாது என்று அதிகாலைப் பயணத்தைத் தொடங்கி விடுவதுண்டு. ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது முழித்துப் பார்க்கும் 'வீட்டு அட்மின்' முனங்கலாக ஏதோ சொல்வார். அதற்குள் வெளியே சென்று விடுவேன்.
நான்கு பெண்களும் எழுந்து புத்துணர்ச்சியாக தங்கள் கடமைகளில் மூழ்கியிருக்கும் போது அமைதியாக உள்ளே வந்து பூனை போல அவர்களுடன் சேர்ந்து கொள்வதுண்டு. உலகம் விழித்திருக்கும். அதிகாலையில் ஆள் அரவமில்லாத நடந்து செல்லும் போது மாறிக் கொண்டேயிருக்கும் சமூகத்தை, புதிதாக உருவான கட்டிடங்களை, பலவிதமான ப்ளக்ஸ் போர்டுகளை, அறிவிப்பு தட்டிகளை என்று ஒவ்வொன்றாக வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்வதுண்டு.
