Friday, December 13, 2019

ஆரோக்கியம் உங்களுக்கு உணர்த்தும் செய்தி?உங்கள் வயதிற்கு உடல் ஆரோக்கியம் உங்களுக்கு உணர்த்தும் செய்தி என்ன?  நீங்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் என்ன?

முதல் இருபது வயதில் உணவு தான் வாழ்க்கை. உணவு மட்டுமே வாழ்க்கை என்ற கூட்டுக்குடும்பக் கலாச்சாரத்திலிருந்து  வந்தவன் .நான். 

தேக ஆரோக்கியம், மன ஆரோக்கியம் என்கிற ரீதியில் மிகச் சிறப்பான வாழ்க்கையை அப்பா எனக்கு வழங்கியிருந்தார். 1974 ஆம் ஆண்டு வந்த பஞ்சம், அப்போது கூழ் சாப்பிட்ட நினைவுள்ளது. அதன் பிறகு எந்தக் காலத்திலும் உணவிற்காகக் கஷ்டப்பட்டதே இல்லை. 

திருப்பூர் வந்தும் கூட அடிப்படை வாழ்க்கைக்குத் துன்பப்பட்டது இல்லை. 

ஆனால் உணவென்பது ருசிக்கானது என்ற கொள்கையில் இன்று வரையிலும் மாற்றமில்லை.  பசிக்கு உணவா? ருசிக்கு உணவா? என்றால் இரண்டாவது தான் என் கொள்கை.  பட்டினியாக இருக்கச் சம்மதிப்பேன்.  அந்த உணவு அந்தத் தரத்திற்காக அளவீடுகள் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பேன்.  இது இன்று வரையிலும் சண்டை சச்சரவுகளை, சங்கடங்களை உருவாக்கினாலும் இந்த ஒரு விசயத்தை மட்டும் என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.  மாற்றிக் கொள்ளவும் விரும்பவில்லை.காரணம் உணவு என்பது ஆத்மாவோடு தொடர்புடையது என்று நான் நம்புகிறேன்.  நீங்கள் எத்தனை கோடி ரூபாய் சொத்து வைத்திருந்தாலும், எவ்வளவு பெரிய வசதிகள் உள்ள வீடு, பிற வசதிகள் உங்களிடம் இருந்தாலும்  அதனை நீங்கள் மட்டும் அனுபவிக்கப் போவதில்லை.  உங்களுடன் ஒரு கூட்டமே அனுபவிக்கும்.  உண்ணும் உணவென்பது உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. அதன் உணர்வு என்பது உங்கள் மனதோடு தொடர்புடையது.

ஆன்மீகம் என்பதனை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். நீங்கள் உணரும் கடவுள் நம்பிக்கைகளை அடுத்தவர் உணர வாய்ப்பில்லை. அதனை விவரிக்க முடியாது. அது போலத்தான் உணவும்.

தொழில் நுட்பக் காலத்தில் வாழ்கின்றோம். தரம் குறைந்த பொருட்கள் விளம்பரங்கள் மூலம் விலை அதிகமாக உங்கள் பார்வையைக் கவரும் வண்ணம் மாற்றப்பட்டு நீங்களே அதை வாங்கியாக வேண்டும் என்ற கட்டாயத்திற்குக் கொண்டு செல்கின்றது.  இது தவிர ஜனத் தொகை பெருகப் பெருக தேவைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. விளைவிக்கும் இயற்கை சார்ந்த பொருட்கள் குறைவாகவும், செயற்கைப் பொருட்கள் அதிகமாகவும் நம் வாழ்க்கையில் கலந்துள்ளது. 

தவிர்க்க முடியாது. 

உங்கள் உடல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  மறுதலிக்கும் போதும் உடலில் உபாதைகள் உருவாகும். அதனை உணரும் போது எல்லை மீறியிருக்கும். உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது.

திருப்பூரில் உள்ள அனைத்து தேநீர்க்கடையிலும் ஆராய்ச்சி பூர்வமாக ஆராய்ந்து பார்த்துள்ளேன்.90 சதவிகித டூப்ளிகேட் டீத்தூள் தான்.

வண்டிக்கடைகள் முதல் சிறிய கடைகள் வரைக்கும் பொறிக்கும் சமாச்சாரங்களில் தரமற்ற எண்ணெய்களைத்தான் பயன்படுத்துகின்றார்கள். பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றது.

ஜங்புட் என்ற ஏரியா பக்கம் நான் சென்றது இல்லை. வெளியே வாங்கித் தின்னும் பழக்கம் கடந்த ஒரு வருடத்தில் குறைந்து இப்போது முற்றிலும் நின்று போய்விட்டது.

வீடு தான் சொர்க்கம் என்பதனை ஒவ்வொருவரும் வாழ்வில் 50 வயதில் உணரத் தொடங்குவார்கள். வீட்டில் ருசி குறைவாக இருந்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக உண்ண அதன் பிறகே கற்றுக் கொள்வார்கள்.  ருசி குறைவாக இருந்தால் அளவீடுகள் குறையும். நான் அப்படிக் குறைத்துக் கொண்ட காரணம் கடந்த 7 வருடமாக 64 முதல் 67 கிலோவுக்குள் தான் இருக்கிறேன்.  தொப்பை பூதாகரமாக உருவாகவில்லை.  

என் அம்மா போல என் மனைவியும் ஆரோக்கியமான உணவுகளை சரியான ருசியோடு சமைக்கத் தெரிந்தவர் தான்.  அதாவது என் அம்மா, அக்கா, தங்கைகள் பொறாமைப்படும் அளவிற்கு.  பல சமயம் இந்தப் பெருமை எனக்கு பலவிதங்களில் ஆப்பு அடிக்கவும் செய்கின்றது. உடன்பிறந்தவர்கள் என்னைப் பார்த்து, வாயை பொத்துடா என்கிறார்கள் இல்லையெனில் இனியாவது வாயைக் கட்டுடா? என்கிறார்கள்.  இருதலைக் கொள்ளி பாம்பு போலவே தவிக்கின்றேன்.  

முழு உடல் பரிசோதனை செய்து பார்த்த போது எந்தப் பிரச்சனையிலும் சிக்காமல் வந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  

ஆரோக்கியம் ஒன்று மட்டும் மிகப் பெரிய சொத்து என்பதனை ஒவ்வொரு மருத்துவமனைக்குள்ளும் சென்று வரும் போது மனம் உணர்கின்றது.

வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள் எந்தப் பொருட்கள் வாங்க வேண்டியிருந்தாலும் நடந்தே தான் செல்கிறேன்.

வாரத்தில் குறைந்தபட்சம் அதிகாலையில் நான்கு நாட்களாவது ஐந்து கிலோ மீட்டர் நடந்து முடித்து விடுகிறேன்.  மூச்சிரைப்பு இல்லை. கால் வலியில்லை. சோர்வு இல்லை. சர்க்கரை இல்லை. மருத்துவர் பாராட்டும் அளவிற்கு உடல் ஆரோக்கியம் இயல்பாகவே உள்ளது.

இப்போது யோசித்துப் பார்த்தால் மனம் சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்திய காரணத்தால் இது சாத்தியமாகியுள்ளதோ என்று தோன்றுகின்றது.

எவர் மீதும் பொறாமையில்லை.
எது குறித்தும் கவலையில்லை.
எந்த நிலை வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் துணிவு இருப்பதால் இயற்கை அதன் வேலையைச் சரியாகச் செய்கின்றதோ என்று நினைத்துக் கொள்வதுண்டு.

எந்தக் கடைக்குச் சென்றாலும் மனைவி மகள்கள் லிப்ட் தேடி ஓடுவார்கள்.

நான் மாடிப்படி வழியாக ஏறி நடந்து செல்வேன்.  வண்டியில் சென்றாலும் அதிகபட்சம் மணிக்கு நாற்பது கிலோ மீட்டர் க்கு மேல் பறக்க விரும்புவதில்லை. 

பொறுமை, நிதானம் இவை இரண்டும் நம் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது.

வாயை அடக்க வேண்டும் என்கிறார்கள். 

நான் இதனை வேறுவிதமாகச் சொல்வேன்.

எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

ஒவ்வொரு வயது கடந்து வரும் போது உடம்பு சிலவற்றை ஏற்றுக் கொள்ளும். சிலவற்றை வேண்டாம் என்று மறுக்கும்.  ஏன் என்று நமக்குத் தெரியாது.

தொடக்கத்தில் அன்பாக எச்சரிக்கும். அதையும் மீறினால் இரண்டாவது எச்சரிக்கை கொடுக்கும்.  அப்போது நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

அப்படித்தான் என் பழக்கவழக்கங்களை ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டே வந்தேன். அதாவது  எந்த விசயத்திலும் கட்டுப்பாடு இல்லாமல் வாழ்ந்தாலும், ஏதோவொரு இடத்தில் நாம் சிலவற்றை நிறுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் உருவாகும்.  

நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். நான் உணர்ந்து கொண்டேன்.

உடம்பு ஏற்றுக் கொள்ள மறுக்கும் விசயங்களை உள்ளே திணிக்காதே.

உள்ளே சென்றது முழுமையாகச் செரிமானம் ஆகாமலிருந்தாலும் உண்ணாதே.

எச்சரிக்கை மணியடிப்பதை ஏளனம் செய்யாதே.

வாழ்நாளின் கடைசி நாள் வரைக்கும் உன் கழிவுகளை நீயே கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து முடித்து இறந்தால் மட்டுமே அது சிறப்பான வாழ்க்கை என்பதனை உணர்ந்து கொள்.

தூங்கும் போதே இறந்து விட்டால் உன்னை விடப் பாக்கியவான் இந்த உலகத்தில் வேறு யாருமே இல்லை. 

கோடிகள் சேர்ப்பது முக்கியம்.  கோடீஸ்வராக வாழ்வது மிக முக்கியம். ஆனால் அதனை அனுபவிக்கக் கடைசி வரைக்கும் உனக்கு ஆரோக்கியம் இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமானது.

உள்ளம் உணர்ந்தால் மாற்றங்கள் இன்றே உருவாகும்.

**********

அமேசான் பென் டூ பப்ளிஷ் 2019 போட்டிக்காக நான் எழுதிய 5 முதலாளிகளின் கதைக்கு மொத்தம் 24 நண்பர்கள் தமிழில் விரிவாக விமர்சனம் எழுதி இருந்தார்கள்.  

மொத்தம் 43 பேர்கள் அமேசான் தளத்தில் ஆங்கிலத்தில் விமர்சனம் எழுதியிருந்தார்கள்.  

மற்ற புத்தகங்களுக்கும் என் புத்தகத்திற்கும் உண்டான வித்தியாசம் என்னவெனில் விமர்சனம் அளித்த ஒவ்வொருவரும் புத்தகத்தை முழுமையாக வாசித்து விமர்சனம் அளித்துள்ளார்கள்.  டிசம்பர் 31 வரைக்கும் நேரம் உள்ளது.  

எனக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் உதவியவர்களை, உறுதுணையாக இருந்தவர்களை என்னளவில் எனக்குத் தெரிந்த வகையில் அவர்களுக்கு அந்தச் சமயத்திலேயே அங்கீகாரத்தை அளித்து விடுவதுண்டு. அவர்களின் எழுத்துக்களை ஆவணப்படுத்திவிடுவதுண்டு.  

எதுவும் காற்றில் கலந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.  இந்த விமர்சனங்கள், விமர்சனங்கள் எழுதியவர்களின் பெயர்கள் அமேசான் தளத்தில் கிண்டில் வடிவம் இருக்கும் வரையிலும் நமக்குப் பின்னாலும் உயிர்ப்புடன் இருக்கும்.

உங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

விமர்சனங்கள் எழுதியவர்கள் இந்தப் புத்தக இணைப்பில் சென்று சோதித்துக் கொள்ளவும்.  கிண்டில் அன் லிமிட் இருந்தால் இலவசமாகப் பெற முடியும்.

வருகின்ற 15ந் தேதி மதியம் 3 முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்தப் புத்தகம் இலவச வரிசையில் சேர்த்துள்ளேன்.  காரணம் ஒரு புத்தகத்திற்கு எத்தனை எத்தனை விமர்சனங்கள்? எத்தனை பார்வைகள் என்பதனை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

உங்கள் விமர்சனம் வரும்பட்சத்தில் அடுத்தடுத்து இதே புத்தகத்தில் சேர்த்து விடுவேன். நன்றி.


12 comments:

ஸ்ரீராம். said...

ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் முன்னால் ஆசையாகச் சாப்பிட்ட சிலபல பண்டங்கள் ஒத்துக்கொள்ளாததால் தானாகவே நிறுத்தத்தான் வேண்டியிருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறந்த செல்வத்தை பெற்று உள்ளீர்கள்... வாழ்த்துகள்...

G.M Balasubramaniam said...

சிலர் உண்பதற்காக வாழ்கிறார்கள் சிலர் வாழ்வதற்காக உண்கிறார்கள்

Rathnavel Natarajan said...

ஆரோக்கியம் உங்களுக்கு உணர்த்தும் செய்தி? - முழு உடல் பரிசோதனை செய்து பார்த்த போது எந்தப் பிரச்சனையிலும் சிக்காமல் வந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆரோக்கியம் ஒன்று மட்டும் மிகப் பெரிய சொத்து என்பதனை ஒவ்வொரு மருத்துவமனைக்குள்ளும் சென்று வரும் போது மனம் உணர்கின்றது.

வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள் எந்தப் பொருட்கள் வாங்க வேண்டியிருந்தாலும் நடந்தே தான் செல்கிறேன்.

வாரத்தில் குறைந்தபட்சம் அதிகாலையில் நான்கு நாட்களாவது ஐந்து கிலோ மீட்டர் நடந்து முடித்து விடுகிறேன். மூச்சிரைப்பு இல்லை. கால் வலியில்லை. சோர்வு இல்லை. சர்க்கரை இல்லை. மருத்துவர் பாராட்டும் அளவிற்கு உடல் ஆரோக்கியம் இயல்பாகவே உள்ளது.

இப்போது யோசித்துப் பார்த்தால் மனம் சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்திய காரணத்தால் இது சாத்தியமாகியுள்ளதோ என்று தோன்றுகின்றது.

எவர் மீதும் பொறாமையில்லை.
எது குறித்தும் கவலையில்லை.
எந்த நிலை வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் துணிவு இருப்பதால் இயற்கை அதன் வேலையைச் சரியாகச் செய்கின்றதோ என்று நினைத்துக் கொள்வதுண்டு. அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.அருமை. எனக்கு இது ஒரு நல்ல பாடம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனைவருக்கும் இவ்வாறு அமைவதில்லை. இதைவிட வேறென்ன வேண்டும். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

raajsree lkcmb said...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

ஜோதிஜி said...

உண்மை தான். மீன் தவிர வேறு எந்த அசைவ உணவுகளும் எனக்குப் பிடிக்கவில்லை. முட்டை கூட பல சமயம் உடம்பு ஏற்பதில்லை. கூர்மையாக உடம்பைக் கவனித்தால் நாம் தான் மருத்துவர். தனியாக மருத்துவரே தேவையில்லை. தவறான பொருட்கள் உண்டால் பத்து நிமிடத்தில் வெளியே வந்து விடும்.

ஜோதிஜி said...

நிலையாமை தத்துவம் தான் தலைவரே. மாறும். எல்லாமே இங்கு மாற்றத்திற்கு உரியது.

ஜோதிஜி said...

வெட்கமின்றி தைரியமாகச் சொல்வேன். முதல் பார்ட்டி அடியேன் தான்.

ஜோதிஜி said...

5 முதலாளிகளின் கதை படித்து விட்டீர்களா அய்யா.

ஜோதிஜி said...

நிச்சயம் மாற்றிக் கொள்ள முடியும். உங்கள் வயதில் நான் இப்படி இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.

ஜோதிஜி said...

மகள்களிடம் தினமும் ஒரு முறையாவது இதனைச் சொல்வதுண்டு. நன்றி.