Tuesday, June 04, 2013

தாதாக்களும் தாத்தாக்களும்

2009 ல் வேர்ட்ப்ரஸ் ல் எழுதிக் கொண்டிருந்த போது தான் குழுமம் என்றொரு வார்த்தை எனக்கு அறிமுகமானது.  

அப்போது அறிமுகம் இல்லாத நண்பரொருவர்  மின் அஞ்சல் வாயிலாக இதில் சேருங்க என்று தெரிவித்திருந்தார்.  உள்ளே நுழைந்த போது கூகுள் குழுமம் என்ற அந்த அமைப்பு பற்றி தெரிந்தது.  பல விதமான தலைப்புகள், உரையாடல்கள் என்று எங்கங்கோ இருப்பவர்களை அந்த குழுமம் ஒன்று சேர்த்து இருந்ததை பார்த்த போது இப்படியும் இணைய தளங்களில் வசதிகள் இருக்கின்றதே என்று ஆச்சரியப்பட்டேன்.  

அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த இந்தியா சுதந்திரம் பெற்ற போது உண்டான நிகழ்வுகளை அந்த குழுமத்தில் இணைத்து வைத்தேன்.  ஓரளவுக்கு பலருக்கும் போய்ச் சேர்ந்தது.  எவர் எந்த நேரத்தில் தங்கள் கருத்துக்களைச் சொல்வார்கள் என்று காத்திருக்க வேண்டியதாக இருந்தது. வரும் மின் அஞ்சல் பல சமயம் ஸ்பேர்ம்  பகுதியில் போய் நின்று விட அது குறித்து தெரிந்த பின்பே அதற்குள்ளும் போய் ஆராய்ச்சி நடத்த வேண்டியதாக இருந்தது.  

தொழில் வாழ்க்கையை முதன்மையாக வைத்திருப்பவனுக்கு இது போன்ற சமாச்சாரங்களில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.  நேரம் ஒதுக்கவும் முடியவில்லை.  

ஆனால் வலைபதிவுகளில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் மற்ற சமூக தளங்கள் குறித்து அவசியம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.  

காரணம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான வசதிகள், வாய்ப்புகள்.  உங்களைப் பற்றி உங்கள் எழுத்துக்களைப் பற்றி அரசியல்வாதிகள் போல தெருவில் ப்ளக்ஸ் போர்டு வைத்து விளம்பரம் செய்ய முடியாது. இன்று பொதுமக்கள் இலவசத்தை தான் அதிகம் விரும்புகின்றார்கள் என்பதைப் போல நாமும் இலவசமாக பல புண்ணியவான்கள் தந்து கொண்டிருக்கும் இந்த வசதிகளை பயன்படுத்தினால் மட்டுமே பேட்டையில் நானும் ரௌடி என்று ஒத்துக் கொள்வார்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.

ப்ளாக் என்ற வலைதளம் ஏறக்குறைய தாய் வீடு போல.  

குறைந்த பட்சம் 600 வார்த்தைகளாவது எழுத தெரிந்து இருக்க வேண்டும். முக்கியமாக தமிழில் எழுத தெரிந்திருக்க வேண்டும். தமிழில் எழுதிய பிறகு எழுத்துப் பிழைகளை உணரவாவது தெரிந்திருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு வழியாக அல்லது தமிழில் நேரிடையாக எழுத கற்று இருக்க வேண்டும்.  நிச்சயம் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும். எழுத்துக்கு தகுந்தாற் போல படங்களை தேர்ந்தெடுத்து இணைக்க தெரிந்திருக்க வேண்டும்.  எழுதிய எழுத்துக்களை லே அவுட் செய்ய கற்றிருக்க வேண்டும். 

ஓரளவுக்கு உங்கள் தளம், அமைப்பு, நிறம் வருபவர்களுக்கு படிக்க உகந்ததாக இருக்க வேண்டும்.  எழுதும் ஒவ்வொரு தலைப்பும் குறைந்த பட்சம் 500 பேர்களாவது படித்தால் தான் உங்கள் எழுத்துக்களையும் படிக்க ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதை உணர முடியும்.  இதுவே தொடர்ந்து நாலைந்து மாதங்கள் உங்கள் திறமைகளை நிரூபித்தே ஆக வேண்டும். அப்போது தான உங்கள் தளம் என்பது குறைந்தபட்சம் ஆயிரம் பேர்களுக்காவது சென்றடையும்.  

ஒரு முறை வந்தவர்களை அடுத்த முறை ஏமாற்றினால் போடா நீயும் உன் எழுத்தும் என்று நகர்ந்து விடுவார்கள். என்ன தான் திரட்டிகள் உங்களுக்கு உதவினால் கூட நிரந்தரமான ஆட்களை தக்கவைப்பது என்பது உங்களின் உழைப்பின் மூலம் தான் சாத்தியமாகும்.

நிச்சயம் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் வலைதள எழுத்துக்களை  பொறுமையாக படிப்பவர்களாக இருப்பார்கள்.  மற்றவர்கள் ஸ்கோரல் செய்து விட்டு நகர்ந்து போய்விடுபவர்களாக இருக்கக்கூடும். 

உங்களுக்கு முன்னால் தாத்தா நிலையில் உள்ளவர்கள் பலரும் இந்த வலைபதிவு உலகில் இருக்கின்றார்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.  அத்துடன் இது அதிக தாதாக்கள் உள்ள உலகம் என்பதையும் கவனத்தில் வைத்திருக்கவும்.

திரைப்பட உலகில் ஏ பி சி சென்டர் என்பது போல வலையுலகிலும் அது போன்ற பிரிவுகள் உண்டு என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.  ஆனால் பலதரப்பட்ட ரசனைகள் உள்ளவர்கள் இங்கே அதிகம். எதுவும் விலைபோகும்.  எனவே சொல்கின்ற விதம் தான் முக்கியம்.

உருப்படியான விசயங்களை தேடிக் கொண்டிருப்பவர்கள், 

பொழுது போக்க எழுத்தை படிக்க வருபவர்கள். 

வம்புச்சண்டைக்கு அலைபவர்கள் 

என்று பலதரப்பட்ட மனிதர்களையும் நீங்கள் சந்தித்தே ஆக வேண்டும். 

நீங்க என்ன தான் பூட்டி வைத்துக் கொண்ட போதிலும் அவர்களின் சண்டைச் சச்சரவான வார்த்தைகள் உங்கள் மின் அஞ்சலில் ஏதோவொரு வழியில் வந்து சேர்ந்தே தான் தீரும்.  நீங்களும் அதை வேலைவெனக்கெட்டு படித்து முடித்த பிறகு அய்யோ படு பாவி இப்படி சொல்லிட்டு போயிட்டானே என்று கண்ணீர் விட்டு மன உளைச்சலோடு இருப்பவர் என்றால் எப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது உத்தமம்.  

காரணம் இணையம் என்பது இருட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறியும் கூட்டம் தான் அதிகம் உள்ளவர்கள் என்பதை எப்போதும் நாம் நினைவில் இருக்க வேண்டும்.  

மனநோய் உள்ளவர்களின் கூடாரமாக இருக்கும் இந்த இணையத்தில் தான் ஏராளமான நல்ல விசயங்களும் உள்ளது.  தேர்ந்தெடுப்பதில் தான் உங்களின் சவால் உள்ளது.  

ஒரு அரசியல்வாதி செய்கின்ற அத்தனை அக்கிரமும் உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். அவனை புகழ்பாடி ஒன்றுமே தெரியாதது போல ஒருவன் எழுதுகின்றான் என்றால் அது தனி மனித சுதந்திரம் என்று நாம் பொத்திக்கொண்டு அல்லது கணினியை மூடிக்கொண்டு  சென்று விட வேண்டும். 

நாம் செய்ய வேண்டிய உருப்படியான வேலையில் கவனம் செலுத்துவது தான் நமக்கு உத்தமமாக இருக்கும்.

எனக்கு ஓரளவுக்கு ப்ளாக்கர் அறிமுகமான பின்பு இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த பிரபல்ய எழுத்தாளர்களின் குழுமங்களை கவனித்த போது நாமும் இதில் இணைந்து கொண்டால் பலவற்றையும் கற்றுக் கொள்ள முடியுமே என்று ஒரு எழுத்தாளரின் குழுமத்தில் இணைத்துக் கொண்டேன். அது வலிய ஜீப்பில் ஏறிய கதையாக மாறிவிட்டது.  

கற்றுக் கொள்ள வாய்ப்பில்லாமல் சந்தைக்கடை போல சப்தங்கள் தான் அதிகமாக இருந்தது.  தினந்தோறும் இந்த குழுமத்தில் இருந்து வரும் மின் அஞ்சல் குவியத் தொடங்க ஆளை விட்டால் போதும் என்று பின்வாங்கி விட்டேன்.

இன்று வரையிலும் குழுமம் என்றால் காத தூரம் ஓடும் நிலையில் தான் ஒவ்வொரு குழுமமும் உள்ளது.  புகழ்ச்சி என்ற ஒரு வார்த்தைகளுக்குள் தான் ஒவ்வொரு குழுமமும் உள்ளது. 

இந்த வருடம் தான் கடந்த பத்தாண்டுகளாக குழுமம் ரீதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த பலரையும், குழுமங்கள் உருவான வரலாறு குறித்தும் படித்து தெரிந்து கொள்ள முடிந்தது.

ஜி மெயிலில் கூகுள் பஸ் என்று அறிமுகம் உருவான போது தான் என்னுடைய குழும பயணம் முறைப்படி தொடங்கியது.  எளிமையாக இருந்தது.  பலதரப்பட்ட கருத்துக்கள். பல்வேறு இடங்களில் உள்ள மனிதர்கள்.  தினந்தோறும் ஜிமெயிலில் உள்ளே நுழையும் போதே ஒரு சுவராசியம் வந்து விடும்.  தொடக்கத்தில் படிக்க மட்டும் விரும்பிய இந்த பயணத்தில் நம்முடைய கருத்துக்களையும் எழுத நேரம் கிடைத்தது.  ஆனால் அதுவும் அல்ப ஆயுசில் முடிந்துப் போனது.  

இதன் தொடர்ச்சிய கூகுள் ப்ளஸ் உருவாக நீட்சியாக இன்று பலவிதங்களிலும் இதன் அமைப்பு நவீனமாகியுள்ளது.  

ஆனால் இதில் தொழில் நுட்ப ரீதியாக நாம் கற்றுக் கொள்ள வேண்டியது எதுவுமே இல்லை.  நம்முடைய கருத்துக்கள் தான் முக்கியம் என்பதால் என்னைப் போன்றவர்களுக்கு கூகுள் ப்ளஸ் பயணம் எளிதாகவே உள்ளது.  எனக்கு கூகுள் ப்ளஸ் என்பதை சேமிப்பு கிடங்கு போலவே பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றேன்.  நான் பார்த்த படித்த தளங்களை அங்கே இணைத்து வைத்துக் கொள்வதுண்டு. 

மற்றவர்களுக்கு அது பிடிக்குமா? என்ற கவலையில்லை. 

எனக்கு நேரம் கிடைக்கும் போது உள்ளே நுழைந்து படிக்க வசதியாக இருக்கின்றது.  இங்குள்ள நண்பர் எப்போதும் கூகுள் ப்ளஸ் குறித்து ஒரு வார்த்தையை நக்கலாக சொல்வார்.  "சார் அதெல்லாம் பெருசுங்க கூட்டம் உள்ள இடம்.  எங்க ஃபேஸ்புக் குழுமத்தில் வந்து சேருங்க.  யூத்துங்க அட்டகாசும் எப்படின்னு உங்களுக்கு புரியும்" என்பார்.  அவரின் கூற்றில் உண்மையும் உள்ளது.  

கூகுள் ப்ளஸ் ல் உள்ளவர்கள் பெரும்பாலும் தொடக்கத்தில் வலைபதிவுகளில் எழுதிவிட்டு எழுத முடியாத சூழ்நிலை அல்லது விரும்பாத நிலையில் அடைக்கலமாகி உள்ளவர்களின் கூட்டம் தான் அதிகம்.  சென்ற மாதத்தில் கூகுள் ப்ளஸ் ல் புனைவு ரீதியாக ஒருவர் நன்றாக எழுதி இருந்தார். யாரிவர் என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு அவரின் சுயவிபரங்களைப் பார்த்த போது அவர் அவரைப் பற்றி இப்படி எழுதியிருந்தார். 

என்னைப் பற்றித் தெரிந்து உனக்கு என்ன ஆகப்போகின்றது.?

கூகுள் பள்ஸ் ல் படங்களை பகிரும் போது எளிதாக பலருக்கும் போய்ச் சேர்கின்றது.  நூறு வார்த்தைகள் உருவாக்காத தாக்கத்தை ஒரு சிறிய படம் உருவாக்கி விடுகின்றது.  நண்பர்கள் எனக்கு அனுப்பும் படங்களை தினந்தோறும் அதில் போட்டு வைத்து விடுவதுண்டு.  

நண்பர்கள், தொடர்பவர்கள், நெருக்கமானவர்கள் என்று பலதரப்பட்ட வசதிகள் இருந்தாலும் பெரும்பாலும் பொது (பப்ளிக்) என்கிற ரீதியில் மாட்டி வைக்கும் போது நமக்கு பிடித்த பிடிக்காத எவரும் பார்த்து விட வாய்ப்புள்ளது.

சமூக வலைதளங்களில் எனக்குத் தெரிந்த வகையில் கூகுள் ப்ளஸ், முகநூல், ட்விட்டர் என்று மூன்று களம் உள்ளது.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நிலை. இது தவிர மற்ற தளங்களை நான் கண்டு கொள்வதில்லை.  தொழில் ரீதியாக லிங்டு இன் தளத்தை தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றேன். சரியாக கோடு கிழித்து வைத்துக் கொண்டு இருப்பதால் தேவையற்ற விசயங்களை இங்கே கொண்டு செல்வதில்லை.

ட்விட்டர் என்பது அதன் நுட்பங்கள் குறித்து நீளம் அகலம் என்று பலவிதங்களிலும் சோதித்துப் பார்த்த போதிலும் ட்விட்டர் வசதிகள் என்பது  என்னைப் போன்றவர்களுக்கு எரிச்சலான சமாச்சாரமே. 

எவர் என்ன சொல்கின்றார்? எப்போது சொல்கின்றார்? அதற்கு எதிர்வினை என்ன? என்பது போன்றவற்றை முழுமையாக கவனிக்க முடிவதில்லை.  ஆனால் பலரும் இதில் வெறியாகத்தான் இருக்கின்றார்கள்.  

மாதத்திற்கு இரண்டு மூன்று முறை இதற்குள் சென்று விட்டு திரும்பி விடுவதுண்டு. ஆனால் ஒவ்வொரு பதிவையும் இணைத்து வைக்க மட்டுமே இதனை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.  மாதத்தில் சில பேர்கள் என்னை இணைத்துக் கொள்ள அழைப்பிதழ் அனுப்பும் போது தான் நாமும் இதில் இருக்கின்றோம் என்ற நினைப்பே வருகின்றது.

வெகுஜன பத்திரிக்கைகளில் இணையதள செய்தியாளர்கள் என்ற பெயரில் இதற்கென்று தனிப்பட்ட பக்கங்கள் ஒதுக்கக் தொடங்கியதும் தான் பலருக்கும் இதன் மேல் தீரா ஆர்வம் உருவானது போல் உள்ளது.  ஆனாலும் இன்று வரையிலும் எனக்கு ட்விட்டர் மேல் பெரிதான ஈடுபாடு உருவாகவில்லை. இந்த இடத்தில் மற்றொரு விசயத்தைப் பற்றியும் பேசியாக வேண்டும்.  

பத்திரிக்கையில் தினமணி மட்டும் வலைபதிவுகளை ஆதரிக்கின்றது.  ஒரு பத்திரிக்கை நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது மூன்று பத்திரிக்கைகளின் பெயரைச் சொல்லி வலைபதிவுகள் சம்மந்தப்பட்ட எந்த விசயமும் இதில் வரக்கூடாது என்பதை கொள்கையாகவே வைத்துள்ளார்கள் என்பதைச் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது.  

இன்னமும் மக்களுக்கு முழுமையாக வலைதளம் சென்று அடையாமல் இருப்பதன் காரணத்தை புரிந்து கொள்ள முடிந்தது.  ஏற்கனவே மீடியா பக்கம் மக்களின் கவனம் திரும்பி உள்ளதால் பத்திரிக்கை வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.  இதுவே வலைதளம் அமைப்பு அனைவருக்கும் தெரியத் தொடங்கி விட்டால் இன்னமும் பத்திரிக்கைகளுக்கு பாதிப்பு தான்.  ஆனால் எத்தனை நாளுக்கு இப்படி மூடி மறைக்க முடியும்.  

இன்றைய பதின்ம வயது இளைஞர்களின் முக்கால் வாசி பேர்களுக்கு முகநூல் பற்றி தெரியாமல் இல்லை.  

தொடக்கத்தில் என் வலைதளத்தினை  முகநூலில் இணைத்து வைக்க முயற்சிகள் எடுக்க அது அத்தனை சுலபமாக இல்லை.  காரணம் அலுவலக ரீதியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையும் செய்து கொடுத்து சுகமான நிலையில் இருந்தே பழக்கத்தில் வந்தவனுக்கு இந்த வலையுலக தொழில் நுட்பம் சவாலாகவே இருந்தது. இருக்கின்றது. 

வலையுலகில் உள்ள தொழில் நுட்பத்தை நாமே சுயமாக கற்றுக் கொண்டு ஒவ்வொன்றையும் கற்றுத் தெளிந்து மேலே வர சற்று எரிச்சலாகவே இருந்தது.   

ஆனால் இன்று வரையிலும் ஒவ்வொரு நண்பரும் என் வலையுலக எழுத்து வளர்ச்சியில் நிறையவே உதவியுள்ளனர். இந்த வருடம் தான் என்னுடைய முழுமையான கவனத்தை இந்த முகநூல் பக்கம் செலுத்த முடிந்தது. 

உண்மையிலேயே அழகான அற்புதமான வசதிகளும் வாய்ப்புகளும் உள்ள தளம் ஃபேஸ்புக் என்ற முகநூல் அமைப்பு.  

ஆனால் 60 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் சிரங்கு வந்தவன் சொறிந்து கொண்டே இருக்கும் பழக்கத்தைப் பெற்றவன் போலத்தான் இதனை பயன்படுத்துகின்றனர்.  சிலவற்றைப் பார்க்கும் போது இவர்களுக்கு சுயநினைவு என்பது இருக்குமா என்கிற அளவுக்கு யோசிக்க வைக்கின்றது.  நம் முகத்தை மனைவியிடம் கூட கூடுதலாக ஒரு மணி நேரம் காட்டிக் கொண்டேயிருக்க முடியாது.  அடித்து துரத்தி விடுவார்.  

ஆனால் சுயமோகம் என்று பலரும் கழிப்பறையில் இருக்கும் நிலையைத் தவிர எப்போதும் தனது படங்களைத்தான்  கூச்சப்படாமல்  போட்டுத் தாக்கிக் கொண்டேயிருக்கின்றார்கள். பல சமயம் தடுமாறிப் போயிருக்கின்றேன்.  பச்சக்குழந்தைங்க கூட பயந்து வீறீடும் அழகுள்ளவர்கள் கூட அட்டகாசம் செய்வதைத்தான் தாங்க முடியவில்லை. இதற்கு மேல் லைக் பீவர் உள்ளவர்கள் அதிகம் இருப்பதால் புரட்சியாளர்கள் அதிகம் இருப்பதும் இந்த முக நூலில் தான்.  

ஆனால் வலைபதிவுகளை விட மிக மிக அதிக தூரம் சென்றடையும் வசதிகள் முகநூலில் தான் உள்ளது. 

நம்முடன் 500 பேர்கள் பயணித்துக் கொண்டிருந்தால் அவர்களை நிச்சயம் நூற்றுக்கணக்கான பேர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பார்கள்.  பத்து பேர்கள் ரீ ஷேர் செய்தால் கூட நம்பவே முடியாத இடங்களுக்கு கூட சென்று விடுகின்றது. முகநூலில் சிறப்புச் செய்திகள் என்று எதையும் போட விரும்புவதில்லை.  அப்படிப்பட்ட செய்திகளும் என்னிடம் இருப்பதில்லை. 

எதையும் நுனிப்புல் மேய்கின்ற பழக்கம் இல்லாத காரணத்தால் எப்போதும் நமக்கு வலைதளம் தான் சரியான மேடை என்பதில் இன்று வரையிலும் உறுதியாகவே உள்ளேன். ஆனாலும் தனிப்பட்ட முறையில் என் பதிவுகளுக்கென்று ஜாலக்கு வேலையெல்லாம் செய்வதில்லை.

விரும்பியவர் வா.  விரும்பாதவர் போ என்கிற நிலைதான் அன்றும் இன்றும் என்றும்.

என் வலைபதிவுகளை விட என் முகநூலில் வந்து சேர்பவர்களை கவனத்தோடு பார்த்தால் புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி போன்ற பகுதிகளில் உள்ள கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என்று வந்து சேரும் போது மகிழ்ச்சியாக உள்ளது. எப்படி இவர்களுக்கு தெரிந்தது போன்ற ஆராய்ச்சிகள் தான் இன்று வரையிலும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றது.

நான் கவனித்த வரைக்கும் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தொழில் நுட்ப அறிவு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.  இன்று வரையிலும் பலரையும் பார்த்த பின்பு நான் மனதில் கொண்ட கருத்து இது. 

ஆனால் முகநூல் என்பதை நினைத்த போதெல்லாம் உள்ளே நுழைந்து ஒவ்வொன்றாக கற்றுக் கொண்ட போதிலும் முழுமையாக இன்று வரையிலும் அதன் தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் உருவாகவில்லை. இதில் மட்டுமல்ல எந்த தொழில் நுட்பத்திலும் இன்று வரையிலும் பெரிதான ஆர்வம் உருவாகவில்லை.  

இன்று என் குழந்தைகள் எனக்கு பல பாடங்கள் நடத்தத் தொடங்கி விட்டனர். வீட்டில் மூவரில் இருவருக்கு முகநூல் மற்றும் கூகுள் ப்ளஸ் இந்த இரண்டையும் ரசிக்கத் தொடங்கி விட்டனர்.

நாம் தான் பயந்து கொண்டேயிருக்க வேண்டியதாக உள்ளது.  அவர்கள் ஒவ்வொன்றையும் எளிதாக எடுத்துக் கொண்டு பின்னால் உட்கார்ந்து கொண்டு அடுத்தது அடுத்தது என்று நகரச் சொல்கின்றார்கள்.

பலருக்கும் எழுதுவது என்பது மிகவும் கடினமாக உள்ளதாக பேசும் போது சொல்கின்றார்கள். ஆனால் எனக்கு மிக மிக எளிதாகவே உள்ளது. 

சூழ்நிலை என்பதை விட லயிப்பு என்பது உருவாக அது 3000 வார்த்தைகள் என்றாலும் மடை திறந்த வெள்ளம் போல வந்து விழுந்து கொண்டே இருக்கின்றது.  ஆனால் திரட்டிகளில் இணைப்பது போன்ற சமாச்சாரங்கள் தான் இன்று வரையிலும் சவாலாக உள்ளது என்பதை விட சோம்பேறித்தனமாக உள்ளது.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தாத்தாவும் தாதாவாகவும் உள்ளார்கள்...! இப்படியா புட்டு புட்டு வைப்பது - உண்மையை...? !

G + : முன்பு விருப்பமானவைகளை bookmark செய்து வைத்திருந்தேன்... இப்போது G + வந்தவுடன் நீங்கள் சொன்னது போல் சேமிப்புக் கிடங்கு தான்...

/// வலைபதிவுகளை விட மிக மிக அதிக தூரம் சென்றடையும் வசதிகள் முகநூலில் தான் உள்ளது. ///

100% உண்மை... ஆனால் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து...!

வதனப் புத்தகம்... அதாவது முக நூல் - மூழ்க வைக்கும் நூல்... கரணம் தப்பினால் மரணம் என்பது போல...

தி.தமிழ் இளங்கோ said...


// திரைப்பட உலகில் ஏ பி சி சென்டர் என்பது போல வலையுலகிலும் அது போன்ற பிரிவுகள் உண்டு என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவும். ஆனால் பலதரப்பட்ட ரசனைகள் உள்ளவர்கள் இங்கே அதிகம். எதுவும் விலைபோகும். எனவே சொல்கின்ற விதம் தான் முக்கியம். //

// காரணம் இணையம் என்பது இருட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறியும் கூட்டம் தான் அதிகம் உள்ளவர்கள் என்பதை எப்போதும் நாம் நினைவில் இருக்க வேண்டும். //

// இன்று வரையிலும் குழுமம் என்றால் காத தூரம் ஓடும் நிலையில் தான் ஒவ்வொரு குழுமமும் உள்ளது. புகழ்ச்சி என்ற ஒரு வார்த்தைகளுக்குள் தான் ஒவ்வொரு குழுமமும் உள்ளது. //


வலைத்தளம் குறித்த தங்களது அனுபவ வரிகள் எல்லோருக்கும் பயன்படும். யோசிக்கவும் வைக்கும்.

கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் இவற்றில் கணக்கு வைத்துள்ளேன் இருந்தாலும் இவை போன்ற சமூக தளங்களில் தனிப்பட்ட விவரங்களைத் தருவதற்கும், பதிவுகளை இணைப்பதற்கும், குழுமங்களில் சேருவதற்கும் பயமாகத்தான் உள்ளது. எனவே Blogger மற்றும் Google Followers இவைகளோடு மட்டும் நிறுத்திக் கொண்டேன்.
கோவை நேரம் said...

பிரிச்சு மேஞ்சிட்டீங்க...

saidaiazeez.blogspot.in said...

தாதாக்களும் தாத்தாக்களும் இருக்குமிடத்தில் இதோ ஒரு பிஞ்சு முளைத்திருக்கிறது

ரவி சேவியர் said...

\\சூழ்நிலை என்பதை விட லயிப்பு என்பது உருவாக அது 3000 வார்த்தைகள் என்றாலும் மடை திறந்த வெள்ளம் போல வந்து விழுந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் திரட்டிகளில் இணைப்பது போன்ற சமாச்சாரங்கள் தான் இன்று வரையிலும் சவாலாக உள்ளது என்பதை விட சோம்பேறித்தனமாக உள்ளது//.

உங்களுக்கு 3000 வார்த்தைகள் என்ன 30,000 வார்த்தைகள் கூட வரும் ஆனால் என்னை போன்றவர்கள் கமெண்ட் எழுத நினைத்தாலும் 3 வார்த்தைகள் கூட வருவதில்லை ஜீ.

ஜோதிஜி said...

சிரித்து விட்டேன் சேவியர்.

ஜோதிஜி said...

நீங்க பிஞ்சு என்றால் நாங்க விதை.

ஜோதிஜி said...

உங்கள் சார்பாக தனபாலுக்கு நன்றி.

Rathnavel Natarajan said...

வலைப்பக்கங்கள் பற்றிய விரிவான பதிவு.
நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

ஜோதிஜி said...

இன்று முழுக்க என் தளத்தில் தானா? தொடர்ச்சியாக பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்றீங்களே? நன்றிங்க.