Showing posts with label கல்வித்துறை. Show all posts
Showing posts with label கல்வித்துறை. Show all posts

Tuesday, July 14, 2020

தமிழக Online கல்வியும் Offline கல்வித்துறையும்



  • முன்பு கல்வித்துறையில் ஒரு திட்டம் நடைமுறைப் படுத்த வேண்டும் என்றால் அதிகாரவர்க்கத்தின் பல படிகளைக் கடந்து வரும். பல இடங்களில் ஆலோசனைகள் கேட்கப்படும். அதன் பிறகே கல்வித்துறை செயலாளர் பார்வைக்கு வந்து சேரும். இறுதியில் தலைமைச் செயலாளர் மூலம் கல்வி அமைச்சரின் அனுமதிக்குக் கோப்பு செல்லும். ஆனால் இப்போது கல்வி அமைச்சர் என்ன விரும்புகின்றாரோ அதுவே அந்தச் சமயத்தில் ஆணையாக மாற்றப்படுகின்றது.  இதன் காரணமாகவே பரவசமாக இருக்க வேண்டிய கல்வித்துறை இன்று பரிதாபமாக மாறியுள்ளது.

  • கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளை மூடுவதற்குத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள், ஆய்வக வசதிகள், அனைத்துப் பாடத்திற்கும் ஆசிரியர் இல்லாமை, போதிய வகுப்பறை இல்லாதது என அரசுப் பள்ளிகள் திண்டாடி வருகிறது. 


Friday, August 25, 2017

மோடி ஒழிக


நீட் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு தற்போதைய சூழ்நிலையில் தமிழர்கள் காட்டும் ஆர்வமும் பரப்புரையும் ஆச்சரியமானதல்ல. ஈழப்பிரச்சினை முதல் இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைக்கும் பின்னால் உள்ள அடித்தளம் என்வென்றே அறியாமல் இருப்பது தமிழினத்தின் சிறப்பு மட்டுமல்ல. அதுவே தான் அன்று முதல் என்றும் இருக்கும் அடையாளம். ஒவ்வொருவரும் சுட்டிக்காட்ட இங்கு ஏராளமான காரணங்கள் உண்டு. ஆனால் இங்கு இன்னமும் நாம் தமிழகக் கல்வித்துறையை எந்த அளவுக்குச் சீரழித்து வைத்துள்ளோம் என்பதனை எவரும் பொதுவிவாதமாக எடுத்துக்கொள்வதில்லை. 

ஊழல் என்பது அரசியல்வாதிகளின் பொதுக் கொள்கை. கட்சி பாரபட்சமின்றி எல்லாத்துறைகளிலும் எல்லாக் காலங்களிலும் நீக்கமற நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் ஜெ. ஆட்சியில் நடந்த அக்கிரமங்களை இன்றுவரையிலும் எந்த ஊடகமும் பெரிதுபடுத்தவே இல்லை என்பதோடு இன்னமும் அவருக்குப் புனிதபிம்பத்தைத் தான் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழக வாக்காள பெருமக்கள் இன்னமும் இரட்டை இலை மயக்கத்திலிருந்து வெளியே வந்து விடத் தயாராக இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். 

ஆனால் படித்த அறிவு ஜீவிகள் எக்காரணம் கொண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயலாக்கத்தில் இருக்கின்றார்கள். நடிகையாக வந்து நாடாளும் அதிர்ஷ்டம் பெற்றவர் காட்சிகளைக் காட்டி விட்டுக் குற்றவாளியாக மறைந்து விட்டார். ஆனால் ஜெ. உருவாக்கிவிட்டுச் சென்ற பாதையை இன்றும் கையில் வைத்துக் கொண்டு படம் காட்டிக் கொண்டிருப்பவர்கள் சமீபத்தில் நமக்குக் கொடுத்த இன்ப அதிர்ச்சி கல்வித்துறைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் பதவியை மறு உருவாக்கம் செய்து தமிழகக் கல்வித்துறையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். 

ஜெ. ஆட்சியில் தினந்தோறும் ஒவ்வொரு துறையும் இத்தனை லட்சங்கள் கொண்டு வந்து தோட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கட்டளையின் காரணமாகக் கொள்ளையடிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே அதிகாரிகளாக, அமைச்சர்களாக இருக்க வேண்டிய அவல நிலை தமிழகத்தில் உருவானது. 

கடந்த 2011-ம் ஆண்டு, ஜெயலலிதா அமைச்சரவையில் சி.வி.சண்முகம், சிவபதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வைகைச் செல்வன், கே.சி.வீரமணி ஆகிய ஐந்து பேர் அடுத்தடுத்துக் கல்வி அமைச்சராக இருந்தனர். 

2016ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைந்ததும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரானார் பெஞ்சமின். அடுத்து மாஃபா பாண்டியராஜன் அமைச்சரானார் 

தற்போது எடப்பாடி அமைச்சரவையில், பள்ளிக் கல்வி அமைச்சராக இருப்பவர் செங்கோட்டையன். 

இவ்வாறு 6 ஆண்டுகளில் பள்ளி கல்வித் துறை 8 அமைச்சர்களைச் சந்தித்துள்ளது. ஆனால் மாறாத ஒரே செயலாளராக இருந்தவர் சபீதா மட்டுமே, தமிழக கல்வித்துறையை ஜெ. எவ்வாறு கையாண்டார் என்பதற்கு இந்த மாறுதல்கள் உங்களுக்கு பலவற்றை புரியவைக்கக்கூடும்?

யார் இந்தச் சபீதா? 

“1988 வருடப் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் சென்னை முன்னாள் மேயர் சிவராஜின் குடும்பத்தில் இருந்து வந்தவர். 1991-96ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்தார். 

அதோடு மட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் பார்வைக்கு ஏற்ப பணியினைச் செய்து முடித்ததால் ஜெ.வின் மனதில் இடம் பிடித்தார். எந்த ஒரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு ஐடியாக்களைக் கொண்டு வந்தததோடு அரசு சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும் முக்கியமான இடத்தில் சபிதா இருந்தார்.. அதன் பிறகு ஜெ.வின் ஆட்சி மாறியதும் பல்வேறு இடங்களுக்குச் சபிதா மாறினார். 

மீண்டும் ஜெ ஆட்சிக்கு வந்ததும் பள்ளிக் கல்வித்துறையில் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா ஆட்சியில் தனிச் சிம்மாசனம் போட்டுக் கல்வித்துறையில் செயலாளர் அந்தஸ்தில் கோலோச்சியவர். ஜெயலலிதாவின் விருப்பத்தை இவர் நிறைவேற்றினாரா? அல்லது இவரின் செயல்பாடுகள் சரியானது தான் என்று ஜெ. நம்பினாரா என்று தெரியவில்லை? ஆனால் இன்று தமிழ்நாட்டின் கல்வித்தரம் கடைச்சரக்காகி ரூபாய்க்கு நான்கு டிகிரி என்று சொல்லும் அளவிற்குத் தமிழ்நாடு முழுக்கப் பட்டதாரிகள் நிரம்பி வழிகின்றனர். ஆனால் கல்வியின் தரம் அதலபாதாளத்தில் உள்ளது. 

பள்ளிக் கல்வித்துறையைப் பொருத்தவரை ஆசிரியர்கள் மாறுதல், புதிய பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது, பாடநூல்கள் வாங்குவது முதல் பல்வேறு பொருட்கள் கொள்முதல் செய்வது, அதிகப் பணம் மழை கொட்டும் ஏரியா என்பதால் ஊழல் என்பது பொதுவானது. தமிழ்நாட்டின் வருடாந்திர நிதிநிலையில் இருபது ஆயிரம் கோடிகளுக்கு மேல் கல்வித்துறையில் கொட்டப்படுகின்றது. 14 பொருட்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டும் கூட இன்னமும் மக்களுக்கு அரசுப் பள்ளிகளின் மேல் நம்பிக்கை வந்தபாடில்லை. 

மத்திய அரசு தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்ற வாதத்திற்கு ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடலாம். 

" மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1)(சி)யின் படி நலிவுற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் எனக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தைக் காலாவதியாக்குவதில் கல்வி அதிகாரிகள் தெளிவாக இருக்கிறார்கள். இதனால் ஒரு மாணவருக்குக்கூட இதன் பலன் சென்று சேரவில்லை" 

" சிறுபான்மை கல்வி நிறுவனங்களைத் தவிர்த்து அனைத்துத் தனியார் பள்ளிகளும் 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2011 முதல் சட்டம் செயல்பட்டாலும், 2013-ம் ஆண்டு முதல் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. ஆனால் இதன்பேரில் ஒரு இடம்கூட நிரப்பப்படுவதில்லை. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிதி தருவதில்லை என்று சொல்லித்தான் இவ்வளவு நாட்கள் காலம் கடத்தினார்கள். இதிலும், கொள்ளை அடிக்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டு, மாநில அரசே, அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்வோம் எனச் சொல்லி, 97 கோடி ரூபாயை ஒதுக்கினார்கள். இந்தப் பணத்தைக் கல்வி அதிகாரிகளுக்கு வேண்டப்பட்ட தனியார் பள்ளிகளுக்குக் கொடுத்துவிட்டார்கள். மாணவர்களைப் போலியாகக் கணக்குக் காட்டி பள்ளி நிர்வாகமும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.. 

'இத்திட்டத்தில் மோசடி செய்கிறார்கள்' எனத் தொடர்ச்சியாகப் புகார் எழுந்ததும், ஆர்.டி.இ திட்டத்திற்காகத் தனியாகக் குழு ஒன்றையும் அமைத்தார்கள். இந்தக் குழு பள்ளியில் விசிட் செய்யும்போதெல்லாம், பெற்றோரைக் கூட்டி வந்து கணக்குக் காட்டுகிறார்கள். எதிர்ப்பு காட்டும் பெற்றோரிடம், மாணவரின் எதிர்காலத்தைச் சொல்லி மிரட்டுகிறார்கள். அதற்கும் மேல் மெட்ரிக் பள்ளி இயக்குநரகம், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் என எங்குப் புகாரை தூக்கிச் சென்றாலும், கண்டுகொள்வதில்லை. சிங்காரவேலு கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாகத்தான் வாங்குகிறார்கள். ஆர்.டி.இ படி ஒரு மாணவருக்கு 9,900 ரூபாய் கட்டணத்தை அரசு வழங்குகிறது. 

முப்பதாயிரம் கட்டணம் வாங்கும் பள்ளிக்கு இதனால் இருபதாயிரம் இழப்பு ஏற்படுகிறது. சீட் வாங்க வேண்டும் என்ற நெருக்கடி வரும்போது, பள்ளி நிர்வாகம் சொல்லும் இடங்களில் பெற்றோர் கையெழுத்துப் போடுகிறார்கள். ஆர்.டி.இ கமிட்டி ஆய்வுக்கு வரும்போதுதான் எதற்காகக் கையெழுத்து வாங்கினார்கள் என்ற விவரமே தெரிய வருகிறது. நூதனமான முறையில் நடக்கும் இந்த மோசடிகளைப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. காரணம். இந்த மோசடியில் பெரும் பங்கு அவர்களுக்குப் போகிறது என்பதுதான்" 

இந்தச் சூழ்நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உதயச்சந்திரனை தனது துறைக்குச் செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தார். 

யார் இந்த உதயச்சந்திரன்? 

பல்வேறு பதவிகளில் இருந்து தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் இயக்குநராக இருந்தவர். குறிப்பாக டி.என்.பி.எஸ்.சி பரிட்சை எழுதுபவர்களுக்கு வெளிப்படைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் உருவாக்கியவதில் இவரின் சிறப்பான பணியில் ஒன்று. 

சசிகலா குடும்பத்தால் அரசியல் அனாதையாக்கப்பட்ட செங்கோட்டையன் தன்னுடைய கடைசிக் காலகட்டத்தில் செய்த உருப்படியான காரியம் உதயச்சந்திரனை தனது துறைக்குச் செயலாளராகத் தேர்ந்தெடுத்ததும், அவரைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததும் ஆகும். 

ஆனால் உதயச்சந்திரனின் சுதந்திரமென்பது செங்கோட்டையனுக்கு மட்டுமல்ல. கல்வித்துறையைச் சார்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்த லாபி வட்டத்தைப் பலமாக உலுக்கத் தொடங்கியது. வெளிப்படைத்தன்மையை எல்லா இடங்களிலும் கொண்டு வர வருமானம் பார்த்துப் பழக்கப்பட்ட கைகளுக்குச் சிரங்கு வந்தவன் கைபோல அறிக்கத் தொடங்கியது. செங்கோட்டையனுக்கு உதயச்சந்திரன் மூலம் ஒரு பக்கம் புகழ் வந்து கொண்டிருந்தாலும் வருமானம் தடைபடத் தொடங்கியது. 

வெளியே ஒவ்வொன்றும் கசியத் தொடங்கியது. கடைசியில் நீதிமன்றம் தலையிட்டு உதயச்சந்திரனை கல்வித்துறையில் இருந்து மாற்றக்கூடாது என்பது வரைக்கும் வந்து நின்றது. 

ஆனால் உதயச்சந்திரனை அவர் துறையில் இருந்து மாற்றக்கூடாது என்று அறிவுறுத்திய போதும் இவருக்கு மேலே முதன்மைச் செயலாளர் என்ற அந்தஸ்தில் பிரதீப யாதவ் என்ற அதிகாரியைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் என்றால் அதற்குப் பெயர் என்ன சூட்டலாம்? இனி உதயச்சந்திரன் பாடத்திட்டத்தை உருவாக்கும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். வேறு எந்த நிர்வாக வேலையும் பார்க்க வேண்டாம் என்று இந்த அரசு முடிவு செய்துள்ளது. 

உங்கள் வீட்டுக்கருகே ஆசிரியர் யாராவது இருந்தால் ஒவ்வொரு வகுப்பின் பாடத்திட்டங்கள் கடைசியாக எப்போது மாற்றப்பட்டது? என்பதனைக் கேட்டுப் பாருங்கள்? உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் பாடங்களைக் கவனித்துப் பாருங்கள்? தற்போதைய உலகத்திற்கும் குழந்தைகள் படிக்கும் பாடத்திற்கும் உங்களால் வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள முடியும்?  

நீட் பரிட்சை மட்டுமல்ல. மாநில அளவில் நடக்கும் தேர்வுகளுக்குக்கூட நம்முடைய கல்வித்திட்டங்கள் பலன் தராது.  கோச்சிங் சென்டர் தான் கடைசி சரணாகதியாக முடியும். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.  

என்ன காரணம்?

தாங்கள் வாங்கும் சம்பளத்திற்குப் பணிபுரிய விரும்பாத அரசு ஆசிரியர்கள் ஒரு பக்கம். உழைக்கத் தயாராக இருந்தும் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத அவலத்தை யாரிடம் போய் முறையிடுவது? என்று ஏங்கும் ஆசிரியர் கூட்டம் மறுபக்கம். இவை இரண்டையும் ஊழல் என்ற வார்த்தை தும்சம் ஆக்கியது. 

கல்வித்துறையின் சீர்கேடுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களையும் தனியார் பள்ளிக்கூடம் பக்கம் கொண்டு போய்ச் சேர்த்தது. இன்று தனியார் பள்ளிக்கூடம் கொள்ளைக்கட்டணம் வசூலிக்கின்றார்கள் என்ற கூப்பாடு ஒரு பக்கம். மற்றொருபுறம் எந்த நுழைவுத்தேர்வுகளிலும் நம் மாணவர்கள் வெல்ல முடியவில்லை என்ற அழுகாச்சி காவியம் மறுபக்கம். 

என்ன செய்வது? 

கல்வி என்பது மாநில உரிமையில் இருந்து மத்திய அரசிற்கு மாறிய போதே எதிர்த்து நிற்க வேண்டிய அரசியல்வாதிகள் இன்று எங்கள் மாநில உரிமையை மத்திய அரசு பறிக்கின்றார்கள் என்று கூக்குரலிடுவதைப் பார்த்து என்ன சொல்வீர்கள்? 

கடந்த பத்தாண்டுகளில் பெய்த மழை அனைத்தும் முறைப்படி சேர்த்து வைத்திருந்தாலே போதுமானது. அடுத்த மாநிலங்களிடம் கையேந்தியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. காரணம் பொதுப்பணித்துறை என்பது மணல் மாபியா கைகளுக்குச் சென்று சேர்ந்தது. எந்தப் புதுத்திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. 

இன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசைக் குற்றம் சுமத்துகின்றோம். கனிமத்துறையின் ஊழல் குறித்துச் சகாயம் கொடுத்த அறிக்கை என்னவானது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு துறையும் இப்படித்தான் இருந்தது. இதே போல இன்று கல்வித்துறை. 

பொருளாதாரத்தில் பலவீனமாக இருக்கும் குடும்பங்கள் அனைத்தும் கடைசியாக நம்பியிருப்பது கல்வித்துறையை மட்டுமே. தங்கள் குடும்பம் கரையேற வேண்டுமென்றால் தங்கள் குழந்தைகள் படித்து ஆளாகி உயர்நிலைக்கு வந்து விட்டால் போதும் என்று தான் ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்கள் நம்புகின்றார்கள். தான் பட்ட கஷ்டங்கள் அடுத்தத் தலைமுறை படக்கூடாது என்று ஒவ்வொரு நிலையிலும் கவனமாகச் செயல்பட்டு வந்த நம்பிக்கை நட்சத்திரம் உதயச்சந்திரனையும் இந்த அரசியல்வாதிகள் விட்டு வைக்கவில்லை.  சென்ற வருடம் சகாயம் அவர்களை தூக்கி சுமந்தோம். கடைசியில் அரசியல்வாதிகள் சுடுகாட்டில் படுக்க வைத்து மரியாதை செய்தார்கள். இன்று உதயச்சந்திரன். அடுத்த வருடம் யாரோ?

இனி என்ன? நீங்கள் தைரியமாக மோடி ஒழிக என்று கூக்குரலிடலாம். அது மட்டும் தான் உங்கள் உரிமையாக இருக்கப் போகின்றது. 


தொடர்புடைய பதிவுகள்