Thursday, September 19, 2013

சீனா -- கண்ணீரில் தொடங்கும் வளர்ச்சி

"காம்ரேட்ஸ், இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் ஒரே இடத்தில் கூடுங்கள்.  நாம் பேச வேண்டும்."

ஒலிபெருக்கியின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படுகின்றது. அரசாங்கம் தீர்மானித்தபடி, கிராமத்திற்கு வந்துள்ள சார்பாளர் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த பகுதியின் தலைவர் வந்து கிராமத்து மக்களிடம் பேச்சு வார்த்தையை தொடங்குகின்றார்.

முட்டல் மோதல், பரஸ்பரம் வாக்குவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது.

"நாங்கள் எங்கள் இடத்தை விட்டுத்தர மாட்டோம்."

"அரசாங்கம் உரிய இழப்பீடு தரவில்லை."

"எங்களுக்கு விருப்பமில்லை."

"காவல்துறை எங்கள் கிராமத்தை சுற்றி வளைத்து எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது."

ஆனால் காட்சிகள் மாறத் தொடங்குகின்றது.

"நான் இந்த ஊரில் வாழ விரும்பவில்லை."

"எனக்கு பணம் அதிகம் தேவைப்படுகின்றது."

"நிறைய பன்றிகள் வளர்த்தால் நிறைய பணம் கிடைக்கும்."

"என் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்க்க விரும்புகின்றேன்.  இந்த ஊரில் இருந்தால் அந்த வாய்ப்பு எனக்கில்லை. நான் ஏதாவது ஒரு பெரிய தொழிற்சாலையில் பணிபுரிந்து நிறைய சம்பாரிக்க விரும்புகின்றேன்."

"நான் என் ஆண் நண்பருடன் பெரு நகரங்களுக்குச் செல்ல விரும்புகின்றேன். இரவு டிஸ்கோத்தே வுக்கு அவனுடன் செல்ல முடியும்."

"நான் இந்த விவசாய வேலையை விட்டு வெளியே வர விரும்புகின்றேன். அதிகாலையில் எழுந்து இரவு வரைக்கும் உழைக்க வேண்டிய இந்த வேலையை விட்டு வெளியே வர விரும்புகின்றேன்."

மேலே உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் இந்த ஆவணப் படத்தில் ஒவ்வொரு இடத்திலும் வந்து போகின்றவர்கள் பேசிய வார்த்தைகள்.

இந்தியாவின் அருகே இருக்கும் சீனா டிராகுலா போல விஸ்வரூபம் எடுத்து விரைவாக வளர்ந்து கொண்டேயிருக்கின்றது என்பதை படிக்கும் போது, மாறிய சீனா இன்று பெற்றுள்ள வளர்ச்சிகளைப் பார்க்கும் போது நாம் நம் அரசியல் தலைகளின் கையாலாத்தனத்தை அங்கலாய்ப்புடன் பேசிக் கொள்கின்றோம்.  

ஆனால் சீனாவின் ஒவ்வொரு வளர்ச்சியும் கண்ணீரில் தான் தொடங்குகின்றது.  

ஒரு கிராமத்தை பலிகிடாவாக்கி, அந்த மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ஆசை வார்த்தைகள் காட்டி, நுகர்வோர் சக்தியைச் சொல்லி, விவசாய பூமியாக இருக்கும் பொழுது உண்டான விலையை தொழிற்சாலையாக மாறிய பின்பும் உருவாகும் விலை என்று கிராமத்து வாழ்க்கையில் ஆசைகளை உருவாக்க அங்கே ஒவ்வொரு குடும்பத்திற்குள் அடிதடி உருவாகி விடுகின்றது.

ஒவ்வொன்றையும் சொல்லியே அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி குறுகிய காலத்திற்குள் புதிய நகராக மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

"தானும் படுக்க மாட்டார்கள். தள்ளியும் படுக்க மாட்டார்கள்" என்று கம்யூனிஸ்ட் கொள்கைகளை இன்று வரைக்கும் கிண்டலடிக்கும் நபர்களை சீனாவின் பொருளாதார கொள்கைகளைப் பார்த்தால் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளக்கூடும்.  

வேர் என்பது மட்டும் கம்யூனிஸ்ட் சிந்தாந்தம்.  ஆனால் தரைக்கும் மேல் தெரியும் மரத்தில் உள்ள அத்தனையும் அக்மார்க்க மேற்க்கித்திய கலாச்சார சாயல் கொண்ட பொருளாதாரம்.  

அனைத்தையும் மாற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அரசாங்கத்தின் கரங்கள் ஒவ்வொரு கிராமத்தையும் காங்கீரிட் காடுகளாக மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

ஏழைகளின் கண்ணீர் சாம்ராஜ்யத்தை கவிழ வைக்கும் என்பது பழைய பழமொழி.  ஆனால் இன்று எப்படி மாறியுள்ளது தெரியுமா?  

இழந்தவற்றை மறக்க பிறந்த நாள் கொண்டாட்டம், இரவு நேர ஆட்டம், தூரத்தில் மகன் மகள் கொண்டாடும் சந்தோஷங்களை ஸ்கைபே வழியாக பார்த்துக் கொள்ளும் குடும்பத்தினர் மனதில் எந்த பழமொழியும் தோன்றுவதில்லை.  

பழசை மறந்து புதிய மனிதர்களாக மாறி விடுகின்றனர்.

சம்பாரிக்க என்ன வழி? என்ற மொழியை சீன அரசு தேசிய மொழியாக மாற்றியுள்ளதால் சீனர்களின் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை அவர்களே உணர நேரமிருக்காமல் ஓடிக்கொண்டிருக்க பழகி விட்டார்கள்.

இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் மட்டுமல்ல. 

வளர்ச்சி என்ற வார்த்தைகள் எல்லா நாடுகளிலும் மந்திர வார்த்தை போல உலகமெங்கும் ஒவ்வொருவரையும் இயக்கிக் கொண்டிருக்கின்றது.

முந்தினால் முன்னேறிவிடுவாய்.

யோசித்தால் ஒதுக்கப்பட்டுவிடுவாய்.

இது நாட்டுக்கு மட்டுமல்ல.  

இன்று தனி மனிதர்களின் வாழ்க்கையும் இப்படித்தான் மாறியுள்ளது.
தொடர்புடைய பதிவுகள்

சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும்

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உழைப்பே எந்நேரமும் என்றால் பழமொழி உட்பட எதுவும் தோன்ற வாய்ப்பில்லை...

அபயாஅருணா said...

நீங்கள் சொல்வது சரியே .
ஆனாலும் அங்கே multinational நிறுவனத்தில் மிக மிக குறைவான சம்பளத்தில் வேலைக்கு வைத்து அதிக லாபம் ஈட்டுவதாக எங்கோ படித்தேன்

தி.தமிழ் இளங்கோ said...

// மாறிய சீனா இன்று பெற்றுள்ள வளர்ச்சிகளைப் பார்க்கும் போது நாம் நம் அரசியல் தலைகளின் கையாலாத்தனத்தை அங்கலாய்ப்புடன் பேசிக் கொள்கின்றோம். //

அங்கே கம்யூனிசம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் எந்த முடிவு எடுத்தாலும் தடைக்கற்கள் இல்லை. எனவே அது வளர்ர்சி போல் தோன்றுகிறது. ஒரு கூகிளை சுதந்திரமாகப் பார்க்க அங்கு அனுமதி உண்டா?

'பரிவை' சே.குமார் said...

கம்யூனிசம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடப்பதாக கேள்விப்பட்டாலும் அவர்களின் வளர்ச்சி ஆச்சர்யப்பட வைக்கிறது என்பதே உண்மை...
நல்ல பகிர்வு அண்ணா.

Valar (வளர்மதி) said...

உண்மை தான் இந்தியாவை போல பாரம்பரியம் கொண்டவர்கள் சீனர்கள், ஆனால் இன்று பணம் ஒன்றே குறிக்கோள் என்று மாறிவிட்டனர். இன்று அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், 2, 3 தலைமுறையாக வாழ்ந்தாலும் 3 வது தலைமுறை இன்னும் நமது மொழி, உணவு, பண்டிகைகள், உறவுகள், கலாச்சாரம் எல்லாவற்றையும் இன்னும் உயிருடன் வைத்துள்ளது. இந்தியர்களின் கலாச்சார உடையான சேலை போற்ற ஆடைகளை அணியும்போது அவர்களே சொல்ல கேட்டதுண்டு, நீங்கள் இன்னும் உங்கள் கலாச்சாரத்தை பின்பற்றுகிறீர்கள் என்று. வெறும் ஒருசிலர் தவிர மற்ற சீனர்கள் பெயர் முதற்கொண்டு முற்றிலும் மேற்கத்திய வாசனையில் தங்களின் வாழ்வை மாற்றிவிட்டனர். அனால் நமது யோகாவை போல் அவர்களது kum -fu, அக்குபஞ்சர், மருத்துவம் முதலியவைகளை மேற்கத்தியர்கள் விற்று காசு பார்க்கின்றனர். அனால் இவர்கள் லாடம் கட்டிய குதிரையை போல் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

saidaiazeez.blogspot.in said...

காகிதமேயானாலும் பணம் என்றால் பத்தும் பறந்து விடுகிறது. பிறகு க்லாச்சார்மாவது கத்திரிக்காயாவது!
இன்றைய உலகிற்கு பணமே அவசியமாகும் .
மீன் வித்த காசு நாறுவதில்லை என்பதை தெளிவாக புத்தியில் புகுத்தப்பட்டுள்ளது.

உலக சினிமா ரசிகன் said...

வானுயர்ந்த கட்டிடங்களும்...மினுமினுக்கும் மெட்ரோ ரயில்களும்தான் வளர்ச்சியா நண்பரே?

ஜோதிஜி said...

அரசாங்கமும் அதை நினைத்து தான் ஆட்சி செய்கின்றது. மக்களும் நம்பிக்கை வைத்து தங்களையும் வளர்த்துக் கொள்ளவே விரும்புகின்றார்கள்.

ஜோதிஜி said...

கடைசியில் ஒரு நாள் தாமதமாக எடுத்தால் பிணம் நாறத் தொடங்கி விட்டது. சீக்கிரம் எடுப்பா என்கிறார்களே?

ஜோதிஜி said...

நீங்கள் சொன்ன விமர்சனம் தான் இந்த படத்தில் பின்னால் வரும் காட்சிகளில் உள்ளது. நன்றி வளர்மதி.

ஜோதிஜி said...

வாயை பொத்திக் கொண்டு இரு என்று சொல்லி ஆட்சி நடத்தினாலும் வளர்ச்சிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதால் மக்களும் தங்களின் தேவைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.

ஜோதிஜி said...

கூகுள் நிறுவனத்தையே கதற வைத்தவர்களாச்சே.

ஜோதிஜி said...

முற்றிலும் உண்மை. திருப்பூருக்கு சவால்காரர்கள்.

ஜோதிஜி said...

அவர்களின் கடந்த 25 வளர்ச்சியை நாம் அடைய நமக்கு அடுத்த 50 ஆண்டுகள் தேவைப்படும்.

கிரி said...

ஜோதிஜி இவர்களின் வளர்ச்சியில் பல கண்ணீர் கதைகள் உண்டு. இவர்கள் வளர்ச்சியின் பாதிப்பு தர்போதுட் தெரியாது.. இன்னும் பல வருடங்கள் கழித்தே தெரிய வரும்.

சுகாதாரமான காற்று இல்லை. தண்ணீர் மாசுபடுகிறது. மாஸ்க் போடாமல் வெளியே செல்ல முடியாத நிலை பல நகரங்களில் காணப்படுகிறது.

இவர்களின் வளர்ச்சி பிரம்மிக்கதக்கதாக இருந்தாலும் இதற்கு இவர்கள் கொடுக்கும் விலை அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். தற்போதெல்லாம் பின் வரும் காலங்களில்.