அன்னா ஹசாரே - 'இவர் ஒரு ப்ளாக்மெயில் பேர்வழி. '
இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியவர்கள் இரண்டு பேர்கள். அவர்களைப் பற்றி கடைசியாக பார்ககலாம்.
அதற்கு முன்னால் சில விசயங்கள்.
நம்மால் இன்றைய சூழ்நிலையில் எந்த அளவிற்கு நேர்மையாக வாழ முடியும்? அன்றாட வாழ்க்கையில் லஞ்சம் கொடுக்காமல் நம் தேவைகளை நிறைவேற்றிட முடியுமா?
முடியாது என்று சொன்னால் நீங்க எதார்த்தவாதி.
முடியும்..... ஆனால் என்று இழுத்துக் கொண்டு தொடர்ந்து வார்த்தையாக சொல்ல நினைத்தால் மாற்றத்திற்கான ஒரு ஏக்கம் உங்கள் ஆழ்மனதில் இருக்கிறது என்று அர்த்தம்.
இந்த முடியும் என்ற வார்த்தைக்கு இப்போது சற்று நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன் தான் இந்த அனனா ஹசாரே. 72 வயது நிரம்பிய இந்த தாத்தாவை விட அதிகமான வயது உள்ள அரசியல்வாதிகள் இந்தியாவில் நிறைய உண்டு. பதவியை விட முடியாதவர்கள், வார்த்தை ஜாலத்தில் வாழ்க்கை கடத்திக் கொண்டிருப்பவர்கள், வாழ்க்கைக்குப் பிறகும் தேவைப்படும் இறவா புகழுக்காக ஆசைப்பட்டு மற்றவர்களை அவஸ்த்தை படுத்திக் கொண்டிருப்பவர்கள் என்ற இந்த பட்டியல் நீளும்.

தயை கூர்ந்து நம்முடைய அரசியல்வாதிகளை தலைவர்கள் என்று எவரும் அழைக்காதீர்கள். தலைவன் என்பவன் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாய் திகழ்பவர்கள். இப்போதுள்ளவர்கள் அரசியல்வியாதிகள். இந்த வியாதிகளுக்கு ஏராளமான ஆசைகள் உண்டு. காரணம் வியாதிகளுக்கு மட்டுமே ஓய்வு உறக்கம் இருக்காது. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று அதுபாட்டுக்கு பரவிக் கொண்டேயிருக்கும். கொள்ளுப் பேரனுக்கு தொடங்கி அதன் நீட்சியாக எள்ளுப் பேரன் வரைக்கும் தேவைப்படும் பணத்துக்காக அலையும் பிசாசுகள். கடைசியில் இறக்கும் தருவாயில் வாயில் போடும் எள்ளுகூட என்ன சுவை என்று தெரியாது முடிந்து போகும் கதைக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். தேவைப்படும் பணத்தை சம்பாரித்து வைத்தாலும் இவர்களின் ஆசைகள் அடங்குவதில்லை. இது ஒரு விதமான மனோவியாதி.
நம்முடைய ஜனநாயக அமைப்பில் பரம்பரை பரம்பரையாக இயல்பாகவே பணக்காரர்களாக இருந்தவர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். பத்து காசுக்கு லாட்டரி அடித்து அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கி அடித்தவர்களும் இன்று அரசியல் தலைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த இருவரும் ஒரே முனையில் சேர்ந்து விடுகிறார்கள். அது தான் தன்னம்பிக்கை முனை. இந்த முனைக்கு மற்றொரு பெயரும் உண்டு. பணப்பேய் என்று பெயரிட்டும் அழைக்கலாம்.
அடுத்த நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் இறந்து எழவு விழுந்தால் கூட கவலையில்லை. ஒரு மாவட்டமே பஞ்சத்தில் மடிந்து மொத்த மக்களும் இறந்தால் கூட அது குறித்து அக்கறைபட வேண்டியதில்லை. நம் நாட்டு பணம் வெளிநாட்டில் கேட்பாராற்று கிடக்கும் லட்சம், கோடி பணத்தை கொண்டு வர இந்த கேடிகளுக்கு தோன்றாது. ஒவ்வொரு வருடமும் அரசாங்க கஜானாவிற்கு வராத வராக்கடன்கள் குறித்து மூச்சு விட வேண்டியதில்லை. ஒவ்வொரு தாலி அறும் சப்தத்தில் இவர்களின் தலைமுறைகளின் வளர்ச்சி என்பது மேலேறிக் கொண்டிருக்கிறது.
ஆனால் நம்முடைய அரசியல்வாதிகளின் தேவைகளை விட அன்னா ஹாசரேவின் தனிப்பட்ட ஆசைகள் மிக மிகக் குறைவு. இவருடைய சிந்தனைகள் செயல்பாடுகள் அத்தனையும் இந்தியா என்ற பெரிய நாட்டின் நலன் குறித்தே இருப்பதால் இவரைச் சுற்றிய கூட்டமும் குறைவு. இவருக்கு வங்கி கணக்கு இல்லை. தங்க உருப்படியான வீடு கூட இல்லை. தன்னுடைய உணவுத் தேவைக்கு கூட தன்னுடைய ஜோல்னா பையில் யாராவது போடும் காசு தான் உதவுகின்றது. முக்கியமாக குடும்பம் என்பது இல்லவே இல்லை.
இவர் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது ஏன் பெரிசு உனக்கு தேவையில்லாத வேலை? என்று எவராவது நாலு சாத்து சாத்தினால் இறந்து போகக்கூட தயாராய் இருப்பதால் எவரும் இவர் அருகிலும் வந்து தொலைப்பதில்லை. ஒரு வேளை அடித்து தொலைத்தால் நம்முடைய மொத்த வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றித் தொலைத்து விடுவார்களோ என்று பயந்து கொண்டிருக்கும் அரசியல் தலைகள் அதிகம்.
இது தான் அன்னா ஹாசரேவின் முக்கிய பலம். இந்த பலம் தான் படிப்படியாக வளர்ந்து இன்று இந்தியா முழுக்க இவர் பெயரை உச்சரிக்க வைத்துள்ளது.
இவரின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக 1995 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த சிவசேனா பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் இரண்டு அமைச்சர்களையே நீக்க வேண்டியதாகி விட்டது. 2003 ஆம் ஆண்டு காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த நான்கு அமைச்சர்களுக்கு எதிராக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டியதாகி விட்டது. இவரின் அஹிம்சை போராட்டங்களைப் பார்த்து வெறுத்துப் போன ஒவ்வொரு அரசியல்வாதிகளும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்ய உச்சகட்டமாக இன்றைய விவசாய அமைச்சரான சரத்பவார் பால்தாக்ரே கூட்டணி தான் இவரை ப்ளாக்மெயில் பேர்வழி என்று கூறினார்கள்.
பால் தாக்கரே பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இறுதிப்பால் ஊற்றியவர். இவரைப் பற்றி இங்கே அறிமுகமே தேவையில்லை. ஆனால் சரத்பவார் பற்றி அவஸ்யம் நாம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.
இந்தியா என்ற நாடு பெற்ற பல பாவங்களில் ஒன்று இப்போது நடந்து கொண்டிருக்கும் மத்திய அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக இருக்கும் சரத்பவார். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட செத்துப் போன (விதர்பா) விவசாய குடும்பங்களின் ஆத்மா சரத்பவாரின் குடும்ப வாரிசுகளை இன்னும் எத்தனை தலைமுறைக்கு கொண்டு செல்லுமோ?
இந்தியாவில் விளைந்த பஞ்சு பொதிகளை அப்படியே பொத்துனாப்ல லவட்டி கடல் கடக்க வைத்ததில் முக்கிய பங்கி வகித்தவர். ஏற்றுமதிக்கான காலக்கெடுவை வ்வொரு முறையும் நீடிக்க வைத்து லட்சக்கணக்கான குடும்பங்களை இன்று நடுத்தெருவில் நிறுத்திய பெருமை அன்னாரையேச் சேரும். காரணம் நாம் ஏற்றுமதி செய்தால் தான் அந்நியச் செலவாணி இந்தியாவிற்ககு கிடைக்கும். அதன் மூலம் தான் இந்த வியாதிகள் நிறைய களவாணித்தனம் செய்ய முடியும்.
அன்னா ஹசாரே வலியுறுத்தும் உழலற்ற லஞ்சமற்ற அரசாங்கம் என்பதை நாம் ஒரு கனவாக எடுத்துக் கொண்டு விடலாம். ஆனால் இதற்கு முன்னால் சில கேள்விகள் நம் முன்னால் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த லஞ்சம், ஊழல் என்ற வார்த்தைகள் எங்கிருந்து தோன்றுகிறது?
வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு எப்படி இந்தியாவை பார்த்துக் கொண்டு இருக்கிறோமோ அதைப்போல தகுதியில்லாதவர்கள் அத்தனை பேர்களும் தான் நமக்கு அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். இது தான் மூலகாரணம். நம்முடைய இந்தியாவில் பல ஆச்சரியங்கள் உண்டு. இவற்றில் முக்கியமானது, எவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதே தெரியாமல் அவருக்கு வழங்கப்படும் அமைச்சர் பதவி.
காங்கிரஸ் கட்சியும், மகாராஷ்டிராவில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்த கூட்டணியின் காரணமாக இதன் தலைவரான சரத்பவாருக்கு விவசாயத்துறை அமைச்சர் பதவி.. விவசாயத்தை அதிக அளவு நம்பி வாழும் இந்தியாவிற்கு மன்மோகன் சிங் கொடுத்த அன்புப் பரிசு தான் விவசாய அமைச்சரான சரத்பவார். இவர் இந்த பதவிக்கு வந்த பிறகு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் ஆத்மாக்களோ, இவரால் வெளிச்சந்தை ஏற்றுமதி மூலம் கொண்டு செல்லப்பட்ட பருத்தி மற்றும் ஏனைய பொருட்களோ நமக்கு முக்கியமில்லாமல் போகலாம். ஆனால் இவரைப் போன்றவர்களின் கோபம் தான் இந்த தாத்தாவிற்கு மறைமுக ஆதரவை பல்முனைகளில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.
ஏன் இவர்கள் இருவருக்கும் இந்த அன்னா ஹசாரே மேல் இத்தனை கோபம்? காரணம் இவர்கள் மட்டுமல்ல. அரசியல் தலைகள் ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பின்னாலும் ஹாசரே கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் அடிவயிற்றில் அமிலம் போல சுரக்க வைக்கின்றது.
அப்படி என்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறார்?
இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் மக்களாட்சி என்றால் அதற்கு மறைமுகமான அர்த்தம் ஒன்று உண்டு. ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது. அவர்கள் நினைப்பதை எளிதாக சாதித்துக் கொள்ள வேண்டும். எவரும் கேள்வி எதுவும் கேட்கவும் கூடாது. கொள்ளுப் பேரன் வரைக்கும் இருக்கும் அத்தனை உருப்படிகளையும் ஒன்று சேர்த்து நிற்க வைத்து சேர்த்த பணத்தை தலையில் கொட்டி தீயை வைத்து கொளுத்தினால் கூட இன்னும் பணம் சேர்க்கும் ஆசை இவர்களை விட்டு போய்விடாது. மக்களும் கொடுக்கும் இலவச எலும்புத்துண்டுகளை சுவைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
தற்போதை அரசியல் என்பது ஒரு பெரும் தொழிலுக்கான முதலீடு. சம்பாரித்தே ஆகவேண்டும். அது தான் இப்போது இந்திய அரசியல்வாதிகளால் செயலில் காட்டிக் கொண்டிருக்கும் விசயமாகும். எண்ண முடியாத அளவில் எல்லாத் துறையிலும் லஞ்சம். எல்லாவற்றிலும் ஊழல்.
ஊழல் துறைக்கு தலைமைப் பொறுப்புக்கு வருபவரே கேவலமான நபராக இருந்தால் மொத்த துறையும் எப்படியிருக்கும்? அவரையும் நான் பரிந்துரை செய்தேன். அதன் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கின்றேன் என்று ஒரு பிரதமரே சொன்னால் மொத்த நிர்வாக லட்சணம் எப்படியிருக்கும்?
நம் இந்தியாவில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் இந்திய தண்டணைச் சட்டமும், ஊழல் தடுப்புச் சட்டமும் என்பது 1860 மற்றும் 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதிகாரவர்க்கத்தில் உள்ள ஊழல் கண்காணிப்புத் துறை மற்றும் இன்றைய சிபிஜ (மத்திய புலனாய்வு துறை) போன்றவர்களால் தான் முன்னெடுக்கப்படுகின்றது. இவர்கள் மூலம் நாம் கேள்வி கேட்க முடியும். இவர்கள் பதில் தருவதற்குள் அல்லது தீர்ப்பு வருவதற்கள் நமக்கு ஆயுள் கெட்டியாக இருக்க வேண்டும். இல்லை இவர்கள் திருப்பி தரும் ஆப்பை வாங்கிக் கொள்ள நாம் தகுதியான நபராக இருக்க வேண்டும்.
இந்தியா பார்க்காத ஊழலும் இல்லை. இதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் பெயர்கள் கூட பலருக்கும் மறந்து போயிருக்கும்.
காரணம் பன்றிகள் வாழும் சாக்கடையில் இருக்கும் ஜீவன்களுக்கு சராசரி மனிதர்களை விட மணம் திடம் குணம் நிரம்ப இருப்பதால் எதுவும் தாக்குவதில்லை. தாக்க தயாராய் இருப்பவர்களும் நீடீத்து இருப்பதும் இல்லை. ஏன் சாதிக் பாட்சா இறந்தார் என்றால் அதன் முனை திஹார் சிறைச்சாலை வரை போய் நிற்கும். எவராவது இத்தனை தூரம் தொடர்ந்து போய் கேள்வி கேட்க தெம்பு இருக்குமா?
இது போன்ற ஊழல்களை தடுக்கத்தான் அன்னா ஹாசரே உருவாக்க நினைக்கும் லோக்பால் என்ற விதை உருவாகின்றது. நம்முடைய அரசியல்வியாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் மேல் கொண்டுவரப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனியாக ஒரு ஆணையம் தேவை. அது எவரும் கட்டுப்படுத்த முடியாத அமைப்பாக இருக்க வேண்டும்.
பிரதமர், முதல் நீதிபதிகள் என்று எல்லோருமே இந்த அமைப்புக்கு கட்டுப்பட்டவர்கள். அடிப்படை குடிமகன்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்க கடமைப்பட்டது. இதையெல்லாம் மீறி வழக்கு என்று வரும்பட்சத்தில் ஒரு வருடத்திற்கும் முடிக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களிடம் இருந்து மொத்த இழப்பீடுகளை பெற்று அரசாங்கத்திடம் சேர்க்க வேண்டும்.
எந்த அரசியல்வியாதிகளும் தங்களுக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வார்களா? 1968 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் என்பது தேவையில்லை என்பதாக தள்ளிப் போய் இன்று 2011 ல் வந்து நிற்கின்றது.
இந்தியாவில் இப்போது தான் அன்னா ஹாசரே என்ற பெயர் இப்போது தான் மெதுவாக மேலேறி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இவரைப் பற்றி முழுமையாக தமிழ்நாட்டில் தெரியாமல் இருப்பது தமிழர்கள் செய்துள்ள மகா புண்ணியம்.
காரணம் இது தேர்தல் சமயம்.
வாக்காளப் பெருமக்களுக்கு வேறு சில முக்கிய வேலைகள் இருக்கிறது. எவர் பணம் தர வருவார்? எப்போது வருவார்? அல்லது தர வருபவர்களை தடுக்க நினைப்பவர்களை எப்படி தாக்கலாம்? போன்ற பல்வேறு எண்ணங்களில் குழப்பிப் போய் இருப்பவர்களிடம் போய் அன்னா ஹசாரே என்றால் அடிக்க வந்து விட மாட்டார்களா? சச்சின் டெண்டுல்கர், கேப்டன் டோனி என்று உச்சரித்துக் கொண்டிருக்கும் இளையர்களுக்குத் தேவையில்லாத பெயர் அன்னா ஹாசரே.
இன்றைய வாழ்க்கையின் சந்தோஷங்களை திகட்ட திகட்ட அனுபவிக்க விரும்புவர்களுக்கு எப்போதும் நாளைய குறித்த கவலை ஏதும் இருப்பதில்லை. சமூக அக்கறை என்றாலே சாக்கடையை தாண்டி வருவது போல கடந்து விந்து விடுவதால் இந்நாள் இனிய நாளே. எல்லோருக்கும் என்ன நடக்குமோ அதுவே நமக்கும் வந்து சேரும். நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு இளைய சமுதாயமும் ஒதுங்கிக் கொண்டேயிருக்க இவரைப் போன்ற 72 வயது இளைஞர் தான் இந்தியாவிற்கு தேவைப்படும் மாற்றத்திற்கு காரணகர்த்தாவாக இருக்கிறார்.
நம்முடைய தேவைகளும், ஆசைகளும் மிக குறைவாக இருந்தால் நம்மாலும் இந்த அன்னா ஹசாரே போலவே மாற்றத்தை உருவாக்க முடியும்.