Sunday, December 18, 2011

நதி நீர் - கனவுத் திட்டமா?


இந்தியாவில் மனித வளம், இயற்கை வளம் என்று எல்லாமே உள்ளது. ஏன் நம் கையை வெளிநாட்டிடம் ஏந்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் முதலில் உங்களை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் உலகம் தெரியாதவன் என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.

காரணம் இது கணினி யுகம். இப்போது ஒவ்வொரு வினாடியும் அதிகபட்ச நேரமாக மனித வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றது. அதற்குள் எத்தனையோ நடந்து முடிந்து விடும் வாய்ப்புள்ள விஞ்ஞான உலகம் இது. இந்தியாவில் தனிப்பட்ட மனிதர்களின் வளர்ச்சி முதல் தரமான நிறுவனங்கள் என்பது வரைக்கும் மேல் நாட்டில் உள்ள ஏதோ ஒருவரால் (அ) ஒரு நிறுவனத்தால் சான்றிதழ் வழங்க முடிந்தால் மட்டுமே இன்றைய சூழ்நிலையில் உங்களால் சர்வதேச சமூகத்தில் போட்டியிட முடியும்.

இதைத்தான் இந்தியாவில் உள்ள இப்போதைய ஆட்சியாளர்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள். நம் வளத்தை பலத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. உலகளவில் எத்தனையோ மாறுதல் உருவாகிவிட்டது. அத்தனை தொழில்நுட்பங்களும் நமக்கு வந்து சேர நாளாகும். தொழில் நுட்பத்தை கொண்டு வருவதைவிட தொழில்நுட்பத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களே இந்தியாவிற்குள் வந்து விட்டாலே போதுமானது தானே.

இதைத்தான் பொம்மை பிரதமர் என வர்ணிக்கப்படும் மன்மோகன் ஆட்சிக்கு வந்தது முதல் செயலில் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இதற்கு மேலும் தான் வகித்துக் கொண்டிருக்கும் பிரதமர் பதவிக்கு சோனியா மகன் ராகுல் பொருத்தமானவர் என்ற சான்றிதழ் வேறு கொடுத்துள்ளார். இந்தியாவின் பிரதமர் பதவியென்பது அந்த அளவுக்கு மலிவானதாக இருக்கிறது.

மன்மோகன் சிங் சொன்ன எதிர்கால தலைவர் தமிழகத்திற்கு வந்த போது சொன்ன வார்த்தைகள் "தேசிய நதி இணைப்பு என்பது பேரழிவாகும்" என்பது.
ஆனால் இந்தியாவில் வீணாக கடலில் கடக்கும் நீர் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இதற்கு மேல் அவ்வப்போது உருவாக்கும் இயற்கை சீற்றங்களினால் பல கோடி சொத்துக்களுடன் மக்களும் அழிந்து போய்க் கொண்டிருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.


முண்டாசு கவிஞன் பாரதி " வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்" என்று விபரம் புரியாமல் எழுதி வைத்து விட்டு சென்று விட்டார் என்று நினைத்துக் கொள்கின்றார்களோ..?

இப்போதுள்ள நடைமுறையில் அது சாத்தியம் தானா?

இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு எல்லாமே அரசியல். அது மக்களுக்கு முக்கியமானதா? முக்கியமற்றதா என்பது கூட தேவையில்லாதது. எதைச் சொன்னால் உடனடி கவனம் பெறும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

முதலில் ராகுல் சொன்ன தேசிய பேரிழிவைப் பற்றி பார்க்கலாம்.

காவிரியையும் கங்கையையும் இணைத்து விட்டால் போதும் என்று முதன் முதலில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஆங்கிலேயரான சர் ஆர்தர் காட்டன். இந்த திட்டத்தை பிரிட்டன் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போது செயல்படுத்த முயற்சித்தார். 

இவர் ஒரு பொறியியலாளர்.

இந்த திட்டத்தின் மூலம் நதியின் ஊடே போக்குவரத்தை உருவாக்க முடியும் என்று நம்பினார். ஆனால் இதைவிட ரயில் போக்குவரத்து மூலம் மிக எளிது என்று மாற்றுத் திட்டத்தில் கவனம் செலுத்த இவரின் நதி போக்குவரத்து கனவு, தொடக்க நிலையிலேயே வற்றிவிட்டது. தொடக்கத்தில் பல இடங்களில் கால்வாய் தோண்டும் பணியும் கூட நடந்தது. காலப்போக்கில் அது துர்ந்து போனது தான் மிச்சம். 

இதைத்தான் அப்போது "கால்வாய் மாலை" என்று மக்கள் நக்கலாக அழைத்தார்கள்.

ஆனால் இவர் உருவாக்கிய இந்த திட்டத்திற்கு பிரச்சனை மலைவடிவத்தில் இருந்தது. அது தான் இந்தியாவிற்கு அரணாக இருக்கும் இமயமலை. இதுவொரு முக்கிய பிரச்சனை. இவ்வளவு பெரிய உயரத்தை தாண்டி மறுபக்கம் தண்ணீரை கொண்டு வர வேண்டும். ஏறக்குறைய 1400 அடி உயரம். இதன் மூலம் 50 000 கன அடி நீரை கொண்டு வர வேண்டும். இதற்காக தேவைப்படும் மின்சாரம் முதல் மற்ற திட்ட மதிப்பீடுகளைப் பற்றி பிறகு பேசுவோம்.

கங்கை காவிரி இணைப்புக்கு அசாம் மாநிலத்தில் 200 கிலோ மீட்டர் தூரம், மேற்கு வங்கத்தில் 50 கிலோ மீட்டர் தூரம், மத்திய பிரதேசத்தில் 1000 கிலோ மீட்டர் தூரம், மகாராஷ்டிரத்தில் 500 கிலோ மீடடர் தூரம், ஆந்திர பிரதேசத்தில் 750 கிலோ மீட்டர், கடைசியாக தமிழகத்தில் 550 கிலோ மீட்டர் என்று மொத்தமாக 3750 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய்கள் தோண்டப்பட வேண்டும். இதன் மூலம் கங்கை, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி நதிகளை ஒரே அணியில் கொண்டு வந்து நிறுத்த முடியும்.

ஏற்கனவே உச்சநீதி மன்றம் ஒரு வழக்கின் அடிப்படையில் இந்த நதி நீர் இணைப்பை போர்க்கால நடவடிக்கையாக கவனம் செலுத்தி அதன் திட்ட அறிக்கையை தெரிவிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தது. ஆனால் மத்திய அரசாங்கம் வெளியிட்ட ஒன்பதாவது ஐந்தாண்டு திட்ட அறிக்கையில் இந்த நதிநீர் இணைப்பு பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லை.

1999ல் மத்திய அரசாங்கத்தின் சார்பாக "நீர் ஆதாரங்கள் தேசிய ஓருங்கிணைப்பு வளர்ச்சித் திட்டத் தேசிய ஆணையம்" ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில் கூட இந்த நதி நீர் இணைப்பு பற்றி ஒன்றும் கருத்தும் தெரிவிக்கவில்லை. காரணம் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கத்திற்கும் இந்த திட்டத்தில் கைவைத்தால் என்ன விளைவுகள் உருவாகும் என்பதை நன்கு புரிந்தே வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொள்கைகள். அதிலும் பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளால் உருவாக்கப்பட்ட மாநில அரசாங்கம் இருக்கும் போது இந்த திட்டத்தை அத்தனை சுலபமாக நிறைவேற்றி விட முடியுமா? அவரவர் அரசியல் கொள்கையின்படி வித்யாச கொள்கைகள்.

அவை அனைத்தும் அலங்கார வார்த்தைகளால் பூசி மெழுகப்பட்ட இனவாத கொள்கைகள்.

இன்று தேசிய கட்சியாக நம் கண்களுக்கு தெரிவது ஒன்று காங்கிரஸ். மற்றொன்று பாரதிய ஜனதா கட்சி. ஆனால் இவர்களின் கொள்கை ஓரே இந்தியா, ஒரே கொள்கை. ஆனால் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நடைமுறை எதார்த்தம் எப்படி இருக்கிறது?

இவர்கள் ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கொள்கையை ஏன் கடைபிடிக்கின்றார்கள்?

அது தான் அரசியல்.

இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சி என்று ஒற்றை சாளரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை நாம் அறிந்ததே. நமக்கு அருகே இருக்கும் கேரளாவில், காங்கிரஸின் கொள்கைகள் வேறு. அதே போல கர்நாடகாவில் வேறு கொள்கைகள். காரணம் அவரவர்கள் பிழைக்கின்ற வழியை பார்க்க வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் டெபாஸிட் கூட அந்தந்த மாநிலங்களில் கிடைக்காது அல்லவா?

ஆண்டுவிட்டு போன ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வினையை போட்டு விட்டு சென்றார்கள். இன்று நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.

இதற்கு மேலும் அந்தந்த மாநிலத்தில் உள்ள மாநில கட்சிகளில் உள்ள குளறுபடிகள் என்பதை நாம் தனியாக பார்க்க வேண்டும். உதாரணமாக பீகாருக்கு தங்களுக்கு கங்கை நதி திட்டத்திலிருந்து நீர் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் உண்டு. இன்று வரையிலும் "இந்திய - வங்க" தேச ஒப்பந்தத்தை மேற்கு வங்காளம் ஆர்வம் செலுவத்தில்லை. காரணம் அவர்கள் கொல்கத்தா துறைமுக வளர்ச்சியில் தான் அதிக ஆர்வம் செலுத்தி வளர்க்க விரும்புகிறார்கள்.

மொத்தத்தில் இன்றைய சூழ்நிலையில் எந்த வட மாநிலங்களும் இந்தியாவின் தெற்கு பகுதிகளுக்கு கங்கை நீரை அனுப்ப ஆர்வம் காட்டுவதே இல்லை என்பதே நிதர்சனமாகும்.

"நீர் ஆதாரங்கள் ஒருங்கிணைப்பு வளர்ச்சித் திட்ட தேசிய ஆணையம்" திட்டமிடுதலின் படி இந்த நதி நீர் இணைப்புக்கு பத்தாவது ஐந்தாண்டு கால திட்டத்தில் 70 ஆயிரம் கோடி ரூபாய். இதுவே பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நிறைவேற்றும் பட்சத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பிற்காக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள தொகை 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி.

புள்ளிவிபரங்களை படிக்கும் போதே மலைப்பாக இருக்கிறதா?

இந்தியாவில் உள்ள நதி அமைப்புகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். இந்திய துணைக்கண்டத்தின் வடக்கே உள்ள நதிகளை "இமயமலைப்பகுதி" என்றும் தெற்கே உள்ள பகுதிகளை " தீபகற்ப பகுதி " அல்லது " தென்னிந்திய பகுதி" என்றும் பிரிக்கிறார்கள்.

சரி, கங்கை காவேரி இணைப்பில் தான் இத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம்.

தென்னக நதிகள் இணைப்பு என்ன ஆயிற்று?

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா இன்று வரையிலும் தமிழ்நாட்டுக்கு பெப்பே காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். உபரி நீரை கடலில் கலந்து போகுமே தவிர உங்களுக்கு தர மாட்டோம் என்று ஒவ்வொரு மாநில அரசியல்வாதிகளும் இந்த நதிகளை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். முதலில் இந்த மாநில அரசுகளை குறை சொல்வதை விட நமது அரசியல் சட்டத்தை இன்று வரையிலும் திருத்த மனமில்லாமல் வைத்திருக்கும் நம் தலைவர்களைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்.


காரணம் மாநிலங்களில் ஓடும் நதிகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளின் ஒருங்கிணைந்த மேம்பாடு, நதிநீர் ஒதுக்கீடு, நீர் உரிமைகள் முதலிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பலவிதமான சட்டப் பிரச்சினகைள் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய விதிகளின்படி, நீர் என்பது மாநில அரசு சம்மந்தப்பட்ட விவகாரமாக இருக்கிறது. எனவே அரசமைப்பு சட்டத்தைத் திருத்தி அதன் மூலம் நீர் என்ற பொருளை மத்திய அல்லது பொதுப் பட்டியலில் கொண்டுவந்து அதன் பின்னர் நீர் வளத்தை ஒருங்கிணைத்து சிக்கனமாகப் பயன்படுத்த ஒரு தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இப்படி செய்தால் மட்டுமே மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் சொல்லைக் கேட்டு நடப்பார்கள். ஆனால் நீதி மன்ற ஆணைகளையே துச்சமாக மதிப்பவர்களை எப்படி மாற்ற முடியும்? பெரும்பான்மை பலத்துடன் மத்திய அரசாங்கத்தில் வந்தமரும் கட்சிகளுக்கும் அக்கறையில்லை. இதற்கு மேலும் இப்போது சுயமாக செயல்பட முடியாத நிலையில் இருக்கும் மன்மோகன்சிங் தலைமையில் இருக்கும் மத்திய அரசாங்கத்தில் அரசியலமைப்பு மாறுதல் என்பது நாம் நினைத்துப் பார்க்கக்கூடியதா?

சரி,

கங்கை காவேரி இணைப்புக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. இந்த திட்டத்திற்கான சாத்தியப்படாத நிதி ஆதாரம் முதல் சுற்றுப்புறம் மாசு வரைக்கும் நம் முன்னே ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் இதே போலவே லட்சம் பிரச்சனைகளை வைத்துக் கொண்டு நம் அருகே இருக்கும் பங்காளி ஒருவர் எப்படி வேகமாக நம்மைக் காட்டிலும் முன்னேறிக் கொண்டு இருக்கிறாரே?


நாம் பத்து வருடங்களில் கட்டக்கூடிய பாலத்தினை பத்து மாதங்களில் முடித்து வெள்ளோட்டம் விட்டு வெற்றிக் கொடி நாட்டி விடுகின்றாரே? உலகமெங்கும் அவரின் விலைமலிவு பொருட்கள் தானே சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. நம்மைப் போலவே ஜனத்தொகையும் அதிகம் தானே? அவர்களின் ஜனத்தொகையும் எதிர்காலத்தில் உணவுக்காக உலக நாடுகளிடம் தட்டு ஏந்தப் போகின்றதா?

வாய்ப்புகள் குறைவு. நம்ப முடியவில்லையா?

நமக்கு அரணாக மலைப்பை தந்து கொண்டிருக்கின்ற இந்த இமயமலையை அணுக்கதிர் மூலம் பிளந்து தனக்குத் தேவையான தண்ணீரை கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா?

அவர் தான் திருவாளர் சீனா?

5 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மிகவும் அடர்வான விசயத்தை ,
மிகவும் அதிக தரவுகளுடன் கூறியுள்ளீர் .
தீர்வு இல்லாத விடயம் இல்லை .
பகிர்வுக்கு நன்றி .

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

சத்ரியன் said...

// தான் வகித்துக் கொண்டிருக்கும் பிரதமர் பதவிக்கு சோனியா மகன் ராகுல் பொருத்தமானவர் என்ற சான்றிதழ் வேறு கொடுத்துள்ளார். இந்தியாவின் பிரதமர் பதவியென்பது அந்த அளவுக்கு மலிவானதாக இருக்கிறது.//

அடியை ஆரம்பிக்க வேண்டிய இடம்!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

இந்த பதிவை முகநூளில் எனது நண்பர் மதிமுகிலன் தமிழ்வேங்கை போட்டது https://www.facebook.com/photo.php?fbid=10151680723973857&set=a.10151411175013857.1073741826.509388856&type=1&relevant_count=1 .
நதிகள் இணைப்பு சாத்தியமா ?

இப்போது, ரஜினி, நரேந்திர மோடிக்காக பிர்கசாரம் செய்ய வேண்டும் என்று பாஜக'வினர் தவம் கிடக்கிறார்கள்.
இதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? ரஜினி நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொன்னாராம். எவ்வளவு நல்லவராக இருக்கிறார், அவரை பிரச்சாரத்திற்கு அழைத்தால் என்ன என்று சிலர் நினைக்கலாம். அவ்வளவு நல்லவனா இந்த ரஜினி? ஒரு கோடி முதலீடு செய்தால் பல கோடி சம்பாதிக்கலாம் என்று ஒரு வியாபாரிக்குத் தெரியாதா? ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசை தமிழன் தந்தாலும், தமிழனின் உரிமையான காவிரி நீரை கர்நாடகா அரசு மறுக்கக் கூடாது என்று துணிவாக சொல்ல வக்கில்லாமல், நடக்காத ஒரு விடயத்திற்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லும் அயோக்கியன் தான் ரஜினி. இந்திய திட்டக்குழு (Planning Commission of India) ஏற்கெனவே நதிகள் இணைப்பு சாத்தியமில்லை என்று கூறி அத்திட்டத்திற்கு ஒப்புதல் மறுத்துவிட்டது. அதற்க்கு வலுவான காரணமும் உள்ளது. ராமசாமி என்பவர் தனது ‘Water perspectives,issues concerns‘ புத்தகத்தில் ‘Linking of rivers: vision or mirage‘ பாகத்தில் ஆறுகளை இணைப்பதன் மூலம் இயற்கையின் சீற்றத்தோடு விளையாடுகிறோம் என்று எச்சரிக்கிறார். மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை கிழக்கு நோக்கி திருப்புவது இயற்கைக்கு விரோதமானது மட்டுமல்ல , கடினமானதும் ஆகும். இவ்வாறான நடவடிக்கைகளில் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுவதோடு ஆறே வறண்டு போகும் ஆபத்தும் உள்ளது. இதற்கு உதாரணமாக ரஷ்யாவின் ஆரல் ஏரியை கூறலாம். இவ்வாறான செயல்களை தவிர்த்து ஆறு ஓடும் பகுதிகளை கணக்கிட்டு வடி நிலங்களை அமைப்பதும், தேவைக்கேற்ப சிறிய நீர் தேக்கங்களை உருவாக்குவதும், நீர் பற்றாக்குறை ஏற்படும்போது அங்கிருந்து எடுத்து உபயோகப்படுத்துவதும், தேவை குறையும்போது வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்வது சாலச் சிறந்தது. இது பண்டைய கால ‘அரச நீர் விநியோக முறை‘ எனலாம். ஆங்கிலேய ஆட்சியிலேயே கங்கை-காவிரி இணைக்கும் திட்டத்தை எதிர்த்து சர். ஆர்தர் கார்டன் அறிக்கை சமர்பித்திருக்கிறார். "இது சாத்தியமற்றது, விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் " என்று கூறியிருக்கிறார்.அதற்கான காரணங்களையும் தெளிவுபட கூறியுள்ளார். "விந்திய மலை தடுப்பரன் மீது 50,000 கன அடி நீரை, 1400 அடி உயரத்திற்கு மின்சார மோட்டார் மூலம் ஏற்றுவதென்பது சாத்தியமற்றது .அவ்வாறே செய்தாலும் 300 அடி உயரம், 750 மீ நீளமும் மலையை வெட்டி எடுக்க வேண்டும். இப்படி செய்வது சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தாதா?" என வினா எழுப்பினார். அசாமில் 200 கி,மீ.,மேற்கு வங்கத்தில் 50 கி.மீ, மத்திய பிரதேசத்தில் 1000 கி.மீ, மஹாராஷ்டிரத்தில் 500 கி.மீ, தமிழ் நாட்டில் 550 கி.மீ, என மொத்தம் 3750 கி.மீ கால் வாய் வெட்டி நீரை கடத்த வேண்டும். எந்த அளவுக்கு இதெல்லாம் சாத்தியம் என்று யோசிக்க வேண்டும். காவிரி நீரில் தமிழனுக்கான நியாயமான பங்கை கருநாடக அரசு தர வேண்டும் என்று சொன்னால் தன் படம் கர்நாடகாவில் ஓடாது என்று நன்கு அறிந்து, நிறைவேறாத ஒரு திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று சொல்லி பல கோடிகள் சம்பாதித்துவிட்டார் இந்த "கேடி" ரஜினி.