Sunday, December 11, 2011

இந்தியா -- பணக்காரர்களின் உலகம்

இந்தியாவில் ஏறக்குறைய 70 சதவிகித மக்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும்,  இந்த விவசாயம் சார்ந்த தொழிலை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ஏக்கர் வைத்து கஷ்ட ஜீவனம் நடத்துபவர்கள் முதல் மிகப் பெரிய நிலச்சுவான்தார்கள் வரைக்கும் இதில் அடக்கம்.

இந்த இடத்தில் தான் நம்ம மரியாதைக்குரிய திருவாளர் பன்னாட்டு முதலாளிகள் உள்ளே வருகிறார்கள். அரசாங்கத்தின் பார்வையில் பன்னாட்டு நிறுவனங்கள் என்பவர்கள் இந்தியர்களை உயர்விக்க வந்த உத்தமர்கள்.

இவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு தான் நமது அரசாங்கமும் வேறு விதமாக சொல்லி வருகின்றது.


சிறு குறு விவசாயிகள் தங்கள் விவசாய தொழிலை விட்டு வேறு தொழிலுக்குச் சென்று விடலாம். காரணம் கார்ப்ரேட் ரீதியாக இந்திய விவசாய தொழிலை மாற்றினால் மட்டுமே லாபகரமாக இருக்கும். நம்மிடம் இருக்கும் அடிப்படை வசதிகளை விட வெளிநாட்டு தொழில் நுட்பமும், அந்த மேதைகளுமே இப்போதைக்கு இந்தியாவுக்கு முக்கியமானது.

நம் விவசாயத்தை அவர்கள் செழிப்பாக வைத்திருப்பார்கள் என்கிறார்கள்.

கோவணத்துணி போல கக்கத்தில் வைத்து காலம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிடம் போய் உன் நிலத்தை தந்து விடு என்று கேட்டால் உதைக்க வரமாட்டானா?

சுற்றி வளைத்து அவனையே அந்த நிலங்களை விற்க வைத்து விட்டால்? அதைத்தான் நமது ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த உணவு சார்ந்த தொழிலில் உலகளவில் 17 பன்னாட்டு நிறுவனங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். இவர்களுக்காக மட்டுமே உலகத்தின் உள்ள ஒவ்வொரு நாட்டின் தலைவிதிகளும் மாற்றி எழுதப்பட்டுக் கொண்டு வருகின்றன.

இதை நேரிடையாக சொல்லமுடியுமா?

அமெரிக்காவில் உள்ள US AGENCY FOR INTERNATIONAL DEVLOPMENT தெளிவாக தனது அறிக்கையின் மூலம் நமக்கு புரியவைக்கின்றது. இதைத்தான் யூ.எஸ் எய்ட் என்றழைக்கின்றார்கள். இதன் நிர்வாக இயக்குநர் ராஜீவ் ஷா 'உணவுத்துறையில் பொதுத்துறையுடன் தனியார் துறையும் சேர்ந்து செயலாக்கம் செய்யும் அளவுக்கு அரசாங்கங்கள் செயல்பட வேண்டும்' என்கிறார்.

இதைத்தான் தாவோஸ் மாநாட்டிலும் உலக நாடுகளுக்கு புரியவைத்தார்

ஒரு தனியார் நிறுவனம் விவசாயத்தில் ஈடுபடும் போது அந்த நாட்டின் பசியைப் பார்ப்பார்களா? இல்லை அவர்களுக்கு உலகம் முழுக்க விலை போகும் வாய்ப்புகளைப் பார்ப்பார்களா? முழுக்க முழுக்க ஏற்றுமதியில் தானே கவனம் இருக்கும். இதற்காகத்தான் நம்முடைய மத்திய அரசாங்கம் வேறொரு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதற்கு மற்றொரு பெயர் "சிறப்பு பொருளாதார மண்டலம்."

நகரங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தான் பல வகையிலும் உதவிக்கொண்டிருக்கிறது.

இதைத் தான் இன்று ஒவ்வொரு மாநில அரசாங்கமும் வேதவாக்காக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இறுதியில் உனது நிலத்தை தருகிறாயா? இல்லை விரட்டவா? என்பதாக ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த சி.பொ.ம ஆண்டுக்கு ஆண்டு பெருகிக் கொண்டேயிருக்கிறது.

ஒரு காலத்தில் இந்தியாவில் தேசிய வருமானம் GDP (GROSS DOMESTIC PRODUCT) 55 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது கழுதை தேய்ந்து கட்டறும்பாகி இப்போது 2011 செப்டம்பர் மாத கணக்குப்படி ஏறக்குறைய 7 சதவிகித அளவுக்கு வந்துள்ளது. ஏன் தொழில் வளர்ச்சி ரீதியில் நாம் முன்னேறிக் கொண்டு தானே இருக்கிறோம்.

ஏன் இன்னும் நம்மால் வளர்ச்சியை எட்ட முடியவில்லை?

கிராமத்தில் சொல்லும் பழமொழியான தும்பை விட்டு வாலைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. எதில் கவனம் செலுத்த வேண்டுமோ? அதைப் பற்றி கவனமே செலுத்த விரும்பாமல் தொழிற்சாலைகளின் வளர்ச்சியை தான் நாட்டின் வளர்ச்சியாக கருதிக் கொள்வதால் ஆண்டுக்கு ஆண்டு தனி நபர்களின் வருமானம் குறைந்து இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் எகிறிக் கொண்டே இருக்கிறது.

உண்மை தான். பணம் ஒரு சாரரிடம் மட்டும் குவிந்து கொண்டேயிருக்கிறது.

மாறி வரும் பொருளாதாரத்தில் இன்று உலகம் முழுக்க ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. எல்லா சூழ்நிலைகளிலும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகளை விட்டு விலகி நின்றுவிட முடியாது. இதை கருத்தில் கொண்டே 1991 ல் ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் கொண்டு வந்தது தான் இந்த சந்தைப் பொருளாதாரம்.

எப்போதும் போல, நம்முடைய செங்கொடி தோழர்கள் டங்கல், காட் ஓப்பந்தம் மூலம் நாட்டை அந்நியருக்கு தாரை வார்த்து விடும் என்று போராடிவிட்டு ஒதுங்கி விட, சந்தைப் பொருளாதாரம் ஜம்மென்று இந்தியாவில் ராஜநடை போடத் தொடங்கியது. இந்த இடத்தில் ஒரு மகத்தான் ஆச்சரியம் என்னவென்றால் எவர்கள் உள்ளே வரக்கூடாது என்று செங்கொடி தோழர்கள் போராடினார்களோ அந்த செங்கொடி தோழர்கள் ஆண்ட மேற்கு வங்காளத்தில் தான் விவசாயிகளை அவர்கள் இடங்களை விட்டு அப்புறப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்த வேண்டியதாக இருந்தது.

பொருளாதார மாற்றத்தின் தொடக்கத்தில் நல்லதே நடக்கத் தொடங்கியது. எருதுகளின் உதவியோடு உழுது கொண்டிருந்த விவசாயிகளின் பழமைவாத சிந்தனைகள் படிப்படியாக விலக ஆரம்பித்தது. 

ஆனால் அடிப்படை சிந்தனைகளே இன்று மாறி அடிவருடி சிந்தனைகள் மட்டுமே இருக்கும் அளவுக்கு அரசியல்வாதிகள் தின்று கொழுக்க ஆரம்பித்தனர். இடைத்தரகர்கள் மட்டுமே வாழ முடிந்தது. யுகபேரம் வளர்ந்து இனி நம்மால் வாழவே முடியாது என்கிற அளவுக்கு ஒவ்வொரு விவசாயிகளையும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தத் தொடங்கியது.


சந்தைப்பொருளாதாரம் இந்தியாவில் அறிமுகமாகி 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஏராளமான தொழில் நுட்ப வளர்ச்சியை கண்டுள்ளோம். வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி முதல் அலைபேசியின் மூலம் இன்று உலகத்தை கைகளுக்கே கொண்டு வந்து விட்டோம். ஆனால் அடுத்த வீடு அந்நிய வீடாகிப் போய் விட்டது.

குறுகிய மனப்பான்மையே முக்கிய குறிக்கோளாக மாறிவிட்டது. இதுவே வளர்ந்து வளர்த்து பேராசையின் உலகமாக மாற்றியுள்ளது.

பணமே பிரதானமாகி ஒவ்வொருவர் மனத்திற்குள்ளும் ஆயிரம் விஷவிதைகள் வளர்ந்து காட்டுப்புதர் போலவே மண்டிவிட்டது. தொடர்ச்சியாக இதன் விதைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் உள்ள வித்யாசம் தெரியாத உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடைவெளி விடுங்க என்பதைப் போலவே சமூக வாழ்க்கையில் நமது அரசாங்க கொள்கைகளின் மூலம் வேறொரு இடைவெளியை வெற்றிகரமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

அது தான் ஏழை மற்றும் பரம ஏழை.

இதைப் போலவே பணக்காரன் மிகப் பெரிய பணக்காரன். 

ஆனால் நம் கண்களுக்கு தெரிவதெல்லாம் இந்தியாவில் நடுத்தர வர்க்கம் உயர்ந்து விட்டது. வாங்கும் சக்தி படைத்த சந்தையில் இந்தியா முக்கியமான இடத்தில் உள்ளது என்பது மட்டுமே.

உலக நாடுகளும் இதன் அடிப்படையில் இங்கே படையெடு எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே வெம்பிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை குறித்து எவருக்கும் அக்கறையில்லை.

அர்ஜுன் சென்குப்தா கமிட்டியின் அறிக்கையின் படி, இந்தியாவில் 77 சதவிகிதத்தினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக வாழுகின்றனர். என்.சி.சக்சேனா கமிட்டியின் அறிக்கையின் படி, இந்தியாவில் 50 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழே வாழுகின்றனர். 

ஆனால் தற்போது மன்மோகன் சிங் அரசாங்கத்தின் கணக்குப்படி ரூபாய் 32 தின வருமானமாக இருப்பவர்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்குள் இருப்பவர்கள். தெருவோரக் கடையில் ஒரு தேநீரின் விலை ஆறு ரூபாய். ஆனால் ஒரு பாட்டிலின் தண்ணீரின் விலை 15 ரூபாய்.

இது தான் இப்போது இந்தியா பெற்றுள்ள உண்மையான வளர்ச்சி.

இந்தியாவின் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 35.5 % வங்கி சேவையை பயன்படுத்தியுள்ளார்கள். 35.1 % வானொலி வைத்துள்ளனர் 31.6 % தொலைக் காட்சி வைத்துள்ளார்கள், 9.1 % தொலைபேசி வைத்துள்ளனர் 43.7 % சைக்கிள் வைத்துள்ளனர் 11.7 % ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் வைத்துள்ளனர் 2.5 % கார் வைத்துள்ளனர், 34.5 % இவற்றில் எதுவுமே இல்லாமல் இருக்கின்றனர். அடுத்து வந்த பத்து வருடங்களின் எதுவுமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இன்னும் பெருகிக் கொண்டேயிருக்கிறது.

பருத்தி, கரும்பு விவசாயத்தை நம்பியவர்கள் அத்தனை பேர்களும் நட்டாத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாய அமைச்சர் சரத்பவார் தென் ஆப்ரிக்காவில் நடந்த கிரிக்கெட்டில் இந்தியா தோற்றத்திற்கு கவலைப்பட்டுக் கொண்டு உருப்படியான பயிற்சியாளர்கள் தேவை என்று கவலைப்பட்ட கதையை நாம் படித்தது தானே?.


அரசே ஒப்புக் கொண்ட புள்ளி விபரங்களின் படி, 1997 முதல் 2007 வரையிலான காலத்தில் மட்டும் 2 லட்சம் விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரத்தின் படி, இந்தியாவில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ஆப்பிரிக்க கண்டத்தை விட அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் உள்ள பணக்காரர்களை எடுத்துக் கொண்டால், 2007ம் ஆண்டு உள்ள கணக்கின் படி, இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்து மூன்றாயிரம். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

தொடரும்...

4 comments:

Unknown said...

தல ... பேசாம நாம ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆரம்பிச்சா என்னா ? நீங்க தான் ஜியெம் .. உங்களுக்கு மாசம் 1 சி சம்பளம் .. என்ன சொல்றீங்க...

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

தமிழ் செல்வா said...

மிக ஆழ்ந்த கருத்து உண்மையும்கூட. உங்கள் உணர்வுகளுக்கு வணக்கம். இந்த கருத்துக்கள் நிச்சயம் மாற்றம் உருவாக்கும். உருவாக்குவோம்.