Showing posts with label .பொருளாதாரம். Show all posts
Showing posts with label .பொருளாதாரம். Show all posts

Tuesday, February 25, 2020

இந்திய நிதி நிலவரம்

இந்திய அரசின் மொத்த கடன் : ரூ.91,01,484 கோடி (30.9.2019 வரையில்)

2019-20இல் இதற்கு அரசு செலுத்திய வட்டி : ரூ.6,25,105 கோடி

2019-20இல் மத்திய அரசின் பட்ஜெட்டில் விழுந்த துண்டு ; அதாவது வரவுக்கு மேல் ஏற்பட்ட செலவுகளினால் ஏற்பட்ட பற்றாகுறை : ரூ.7,66,846 கோடி

இந்த பற்றாகுறையை ஈடுகட்ட, 2019-20இல் மத்திய அரசு புதிதாக வாங்கிய கடன் : ரூ.7,66,846 கோடி

அதாவது புதிதாக வாங்கும் கடன்களில் 81 சதவீதம், பழைய கடன்களுக்கான வட்டியை கட்டச் செல்கிறது.

2019-20இல் ராணுவ செலவுகள் : ரூ.4,48,820 கோடி

2020-21 பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கீடு : ரூ.4.71 லட்சம் கோடி

2020-21 பட்ஜெட்டின் மொத்த அளவு : ரூ.26,98,552 கோடி


Friday, February 21, 2020

நிதிநிலை அறிக்கை 2020

வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். பெருக்குவோம் என்பது வெறும் கோஷமா? தேர்தல் அறிக்கையில் இட்டு நிரப்ப வேண்டிய வார்த்தைகளா? இனி இங்கே வாய்ப்பு உள்ளதா? என்ன பிரச்சனை?

மூன்று துறைகளின் வாயிலாக மட்டுமே இங்கே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

1. சுரங்கத்துறை.

(வட மாநிலங்களில் தனியார் கையில் இருந்தாலும் இது இன்று வரையிலும் மாஃபியா பிடியில் தான் உள்ளது) காமதேனு பசு போலக் கிடைக்கும் வருமானம் அரசாங்கத்திற்கு வருவதில்லை. அதிகாரிகள், இடைத்தரகர்கள், அந்தந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களைக்கடந்து முதலீடு செய்த நிறுவனம் காசு பார்க்க வேண்டும். வேலை செய்பவர்களும் வாழ்நாள் முழுக்க தங்களது பசியின் ரொட்டிக்காக உழைத்து மடிய வேண்டியது தான்.

இன்று வரையிலும் மாற்றமில்லை. எந்த அரசாங்கமும் இதில் கை வைப்பதே இல்லை. லிக்னைட் தொழிலில் என்எல்சி மட்டுமே ஏகபோகமாக உள்ளது. சீனாதானா இதில் கை வைக்க முயன்றார். பின்வாங்கி விட்டார்.

இந்தத் தொழில் இந்தியா முழுக்க பரவலாக்கம் ஆகாமல் இருப்பதற்குக் காரணம் சுற்றுச்சூழல் என்ற பெரிய ஆயுதம் கொண்டு அவவ்வபோது சொருகப்படுகின்றது. குற்றுயிரும் குலையிருமாகவே இந்தத் துறை உள்ளது.

இந்தத் துறையில் இருக்கும் அமைச்சர் மட்டும் ஏழெழு ஜென்மங்களுக்குத் தேவைப்படும் வசதிகளை அடைந்து விடுகின்றார்கள்.

Saturday, October 12, 2013

குதியாட்ட டாலரும் திருப்பூரின் இறக்குமதியும்

என்னப்பா இன்றைக்கு டாலர் டான்ஸ் ஆடுமா? இல்லை குதிக்குமா?

திருப்பூரில் நடைபயிற்சிக்கென காலையில் நடந்து செல்லும் ஏற்றுமதியாளர்களை நீங்கள் கடந்து செல்லும் போது நிச்சயம் இது போன்ற உரையாடல்களை கட்டாயம் கேட்கமுடியும்.  இன்று திருப்பூரில் உள்ள ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் காலையில் செய்தித்தாளை பிரித்ததும் முதலில் பார்ப்பதே இந்த டாலர் யூரோ பண மதிப்புகளைத் தான். 

அதற்குப்பிறகே திருப்பூரில் உள்ள எழவு செய்திகளை படிக்கத் தொடங்குகின்றார்கள்.  

முதலில் படிக்கும் செய்தியை வைத்து இன்று வங்கியில் ஆவணங்களை வங்கியில் கொண்டு போய் கொடுக்கலாமா? இல்லை நாளை டாலர் மதிப்பு ஏறியவுடன்  கொடுக்கலாமா? என்று யோசிக்கின்றார்கள்.  இரண்டாவது செய்தியை படித்தவுடன் தான் எப்போது குளிக்க வேண்டும் என்று முடிவுக்கு வருகின்றார்கள். 

ஏற்றுமதி தொழிலில் இருந்தால் ஏறிக்கொண்டிருக்கும் டாலர் மதிப்பால் நல்லது தானே என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்?

அந்த நிறுவனம் திருப்பூரில் முக்கியமான நிறுவனம்.  ஆய்த்த ஆடை ஏற்றுமதி தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் நிறுவனமும் கூட. வாரத்திற்கு ஒரு முறை ஏற்றுமதி செய்து ஒன்று இரண்டு பில்களை (INVOICE) வங்கிகளில் கொடுக்கும் நிறுவனங்களைப் போலில்லாமல்   வங்கியின் அலுவலக தினங்களில் தினந்தோறும் இரண்டு மூன்று கோடிக்கான ஏற்றுமதி செய்யப்பட்ட ஆவணங்களை வங்கியில் கொடுப்பது வாடிக்கை.  

இது போன்ற நிறுவனங்களுக்கு அமெரிக்கன் டாலரின் ஏற்றம் என்பது பம்பர் லாட்டரி  அடித்தது போல இருக்கும்.  மொத்தமாக  இரண்டு லட்சம் அமெரிக்கன் டாலர் உள்ள பில்களைக் கொண்டு போய் வங்கியில் கொடுக்க, அன்றைய தினத்தின் அடிப்படையில் ஏறிய அமெரிக்க டாலர் மூலம் குறைந்தபட்சம் இந்திய பண மதிப்பில் பத்து லட்சம் ரூபாய் வரைக்கும் கூட தனியாக கிடைக்கும். இந்த தொகையின் அடிப்படையில் அரசாங்கம் கொடுக்கும் ஊக்கத் தொகையின் அளவும் எகிறும். மாதத்தில் 24 நாட்கள் என்று கணக்கு போட்டுப் பார்த்தால் கூட இந்த தொகையே இரண்டரை கோடி என்கிற அளவுக்கு அந்த நிறுவனத்திற்கு உபரி லாபமாக கிடைக்கும்.

ஆகா நல்லது தானே?  என்று சொல்பவர்கள் மட்டும் சற்று முன்னால் வாங்க. உங்களுக்கு மட்டும் ஒரு சின்ன ரகசியம்.  

இது போன்ற நிறுவனமும் இப்போது நிதிச் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது.  ஆச்சரியமாக இருக்கின்றதா?  

உங்களை வெளியே ஓட விட்டு தாக்கினால் என்ன செய்வீர்கள்? முடிந்தவரைக்கும் வேகமாக ஓடி தப்பிக்கத்தானே பார்ப்பீர்கள். அதுவே ஒரு அறைக்குள் வைத்து அடிக்கத் தொடங்கினால்?  ஒன்று எதிர்த்து தாக்க வேண்டும் அல்லது அடியை வாங்கிக் கொண்டு அழுது கொண்டு தான் இருக்க வேண்டும்.  

தற்போது திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள்  ஊமைக்காயங்களை வெளியே சொல்ல முடியாமல் முனங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.  

தற்போது இந்தியாவில் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நடப்பது இரண்டு முனை தாக்குதல் அல்ல.  நான்கு முனைத்தாக்குதல்களில் நாடி நரம்பெல்லாம் கழன்று போய் பேயை பார்த்தவன் கதையைப் போல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

மின்சார பற்றாக்குறை, எரிபொருளின் விலையேற்றம், ஆய்த்த ஆடைகளில் பயன்படுத்தப்படுகின்ற வெளிநாட்டுப் பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறை என்று திரும்பிய பக்கமெல்லாம் திகில்பட காட்சிகள் போல இருக்கின்றது.

புதிய பொருளாதாரக் கொள்கைகளை நரசிம்மராவ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த மன் மோகன் சிங் கொண்டு வந்த போது வானாள புகழ்ந்தவர்கள் இப்போது அது திரும்பி தாக்க முழி பிதுங்கிப் போய் நிற்கின்றார்கள்.  

சற்று விபரமாக பார்ப்போம்.

இந்த கட்டுரையை எழுதும் நாளில் அமெரிக்கன் டாலரின் மதிப்பு 70 ரூபாய். ஆனால் திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் வைத்துள்ள ஒவ்வொரு ஒப்பந்தங்களும் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டு அது அன்றைய தின அமெரிக்கன் அல்லது யூரோ நாணய மதிப்பில் எடுக்கப்பட்டவையாக இருக்கும்.  சிலர் பார்வேர்ட் காண்ட்ராக்ட் போட்டு வங்கியுடன் குறிப்பிட்ட நிலையான பண மதிப்பை பெற்றிருப்பர்.  சிலரோ ஏறப்போகும் அமெரிக்கன் டாலரை நினைத்து வழி மேல் விழி வைத்து காத்திருப்பர்.  

முன்பு ஏறி இறங்கி என மாறிக் கொண்டிருக்க அமெரிக்கன் டாலரின் மதிப்பு தற்போதைய இந்திய பொருளாதார மேதைகளின் செயல்பாட்டால் சர் என்று எகிறிக் கொண்டிருக்கின்றது. இனி இறங்க வாய்ப்பில்லை என்கிற அளவுக்கு பல ஏற்றுமதியாளர்களுக்கும் உருவான மகிழ்ச்சி நிலையானதாகவும் இல்லை.  காரணம் பையில் வைப்பது போல வைத்து அப்படியே எடுத்துக் கொண்டது போல கிடைத்த லாபமெல்லாம் கண் திறப்பதற்குள் காணாமல் போய்விடுகின்றது.

இந்த தொழிலில் உள்ள ஒவ்வொரு பகுதிகளையும் சற்று விபரமாக பார்ப்போம்.

இன்று பஞ்சாலை தொழில் முற்றிலும் நவீனமாக்கப்பட்டு விட்டது. 80 சதவிகித எந்திரங்கள் வெளிநாடுகளிலில் இருந்தே இறக்குமதியாகின்றது.  வளர்ந்த நிறுவனங்கள் முற்றிலும் குளிரூட்டப்பட்ட இடத்தில் மொத்த நிறுவனமும் இயங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. 

ஆனால் இந்த எந்திரங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வேண்டிய உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலையில் இருப்பதால் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும் டாலர் மதிப்பில் கிடைக்கும் லாபங்கள் டான்ஸ் ஆடத் தொடங்குகின்றது. இந்தியாவில் உள்ள பஞ்சாலை தொழிற்சாலை மற்றொரு பிரச்சனையில் தவிக்கின்றது. 

இந்தியாவில் வெங்காயத்தின் விலை தங்கம் போல எகிற வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்ற போது நம் சரத்பவார்  நாம் ஏற்றுமதி செய்யாவிட்டால் மற்ற ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும்.  இந்திய பொருளாதாரத்தின் நம்பகத்தன்மை போய்விடும் என்ற அழகான வசனத்தை நாம் படித்து விட்டு மறந்து போயிருப்போம்.  

ஆனால் பஞ்சாலை தொழிலில் உள்நாட்டு நிறுவனங்களுக்கே பற்றாக்குறையாக இருக்கும் பஞ்சு அனைத்தும் வெளிநாடுகளுக்குத் தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உடனடி லாபத்தை கணக்கில் கொண்டும், உடைக்க முடியாத லாபியும் சேர்ந்து இந்த பஞ்சு வெளியே பறக்க காரணமாக இருக்கின்றது.  

வாங்கிப் போட்ட கோடிக்கணக்கான வெளிநாட்டு எந்திரங்களில் உற்பத்தியாகும் நூலும் கூட பல இடங்களில் நூறு சதவிகித ஏற்றுமதி நிறுவனம் என்ற பெயரில் கடல் கடக்கத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று பின்னலகம் என்று சொல்லப்படுகின்ற நிட்டிங் துறையில் உள்ள எந்திரங்களும் இறக்குமதி செய்யப்பட்ட நவீன ரக எந்திரங்கள் மூலமே துணியாக மாறுகின்றது. இந்த எந்திரங்களுக்குத் தேவைப்படும் உதிரிப்பாகங்கள் தவிர தினந்தோறும் தேவைப்படும் பலதரப்பட்ட ஊசிகள் அனைத்தும் இன்று வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்தே இந்த துறை இயங்குகின்றது. மாதம் தோறும் இந்த ஊசி சந்தை என்பது பல கோடிகளைத் தாண்டும். ஜெர்மனி, தைவான், கொரியா , சீனா போன்ற நாடுகளே இதில் முன்னிலையில் இருக்கின்றது.

சாயப்பட்டறையில் பயன்படுத்தப்படும் சாப்ட் புளோ எந்திரங்களின் நவீனம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. சாயமேற்ற பயன்படுத்தும் முக்கிய சாயங்கள் இரண்டு நிலையில் உள்ளது.  ஒன்று உள்நாட்டு சந்தையில் உற்பத்தியாவது.  

ஆனால் அதன் முக்கிய மூலக்கூறுகள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களையே சார்ந்து இருப்பது. மற்றொன்று வெளிநாடுகளில் இருந்து நேரிடையாக பலவித சாயங்கள் இந்தியாவிற்கு இறக்குமதியாகிக் கொண்டிருக்கின்றது.  

இந்திய ரூபாய் பண வீழ்ச்சியின் காரணமாக நேரிடையாக விரைவாக பாதிக்கப்பட்டது இந்த சாயத்துறையே. தற்போது விற்கப்படும் அனைத்து ரக சாயங்களின் விலைகளும் 50 சதவிகிதம் விலையேறி உள்ளது. இதற்கு மேலாக செயற்கையாக உருவாக்கப்பட்ட தட்டுப்பாடு என்பது இதன் விலையேற்றத்தை மேலும்  அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.  

அரசாங்கம் உருவாக்கிய கொள்கையின்படி சுத்திகரிக்கப்பட்ட சாய நீரை உருவாக்க சுத்திகரிப்பு நிலையத்தில் முக்கியமாக மெம்பரேன் என்றொரு சமாச்சாரம் தேவைப்படுகின்றது.  இது உப்பின் அளவை கட்டுப்படுத்தி அதை பிரிக்க உதவும் ஒரு சமாச்சாரம்.  சவ்வூடு பரவல் என்று பள்ளிக்கூடங்களில் படித்த விசயத்தை இப்போது நினைவுக்கு கொண்டு வந்தால் இந்த மெம்பரேன் குறித்து உங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.  தண்ணீரில் உள்ள உப்புத்தன்மையை கட்டுப்படுத்துவது. 


இந்த மெம்பரேன் என்பது வெளிநாட்டு நிறுவனங்களைச் சார்ந்து இறக்குமதி மூலமே பெறுவதால் மாதம் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் இந்த தொழிலில் புழங்குகின்றது.  

சாயம் தேவைப்படும் மற்றொரு துறை பிரிண்ட்டிங் துறைகளும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த பிரிண்ட்டிங் துறையில் பயன்படுத்தப்படும் சாயமும் வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருப்பதால் இறக்குமதி செய்யப்படும் அளவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேயிருக்கின்றது.

மேலே சொன்ன துறைகளைப்போல எம்ப்ராய்ட்ரி துறையில் பயன்படுத்தப்படும் எந்திரங்கள் முதல் முக்கியமாக தேவைப்படும் நூல் வரைக்கும் இறக்குமதி மூலமே அதிக அளவு பெறப்படுகின்றது. மொத்தத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இன்றைய சூழ்நிலையில் இங்கே ஒரு ஆடை கூட வெளியே வராது என்கிற அளவுக்கு எங்கெங்கு காணினும் புதிய பொருளாதார மாற்றங்கள் உருவாக்கிய நவீன வளர்ச்சியடா என்று நாம் வளர்ந்துள்ளோம்.  

ஆய்த்த ஆடையில் உற்பத்திக்கான ஒவ்வொரு அடியிலும் இன்று வெளிநாட்டு எந்திரங்களின் பங்களிப்பும், அவர்களின் ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் முடங்கிப் போய்விடும் அபாயத்தில் தான் இன்றைய திருப்பூர் ஏற்றுமதி நடந்து கொண்டிருக்கின்றது. 

இந்த மாற்றங்கள் எல்லாம் ஏமாற்றத்தை தந்து கொண்டிருப்பது எப்படி?

இன்று பஞ்சு முதல் துணியாக மாறி வருவதற்குள் இத்தனை பிரச்சனைகளை கடந்து வந்த போதிலும் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் மின்சார பற்றாக்குறையைப் போக்க ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் டீசல் மூலம் தான் நிறுவனத்தை நடத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள்.  

இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் தன்னிச்சையான வானாளாவிய அதிகாரத்தினால் வாரந்தோறும் விலை எகிற இருப்பு வைப்பதா இல்லை இருப்பதை விற்று விடுவதா என்கிற நிலையில் தான் ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களும் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றார்கள். 

(செப்டம்பர் 2013 ஆழம் மாத இதழில் வெளியான கட்டுரையின் விரிவாக்கம்.)

தொடர்புடைய பதிவுகள்


Friday, October 04, 2013

நம்ப முடியாத இந்தியாவின் வளர்ச்சி -- ஆனால் இன்று?

திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு சார்பாக , இந்திய பொருளாதாரம் - இன்றும் நாளையும் - கருத்தரங்கம் - திரு. எஸ். குருமூர்த்தி அவர்களின் சிறப்புரை (02.10.2013)நடந்தது-

இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள இந்த பேச்சு உங்களுக்கு உதவக்கூடும்.


Sunday, December 18, 2011

நதி நீர் - கனவுத் திட்டமா?


இந்தியாவில் மனித வளம், இயற்கை வளம் என்று எல்லாமே உள்ளது. ஏன் நம் கையை வெளிநாட்டிடம் ஏந்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் முதலில் உங்களை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் உலகம் தெரியாதவன் என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.

காரணம் இது கணினி யுகம். இப்போது ஒவ்வொரு வினாடியும் அதிகபட்ச நேரமாக மனித வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றது. அதற்குள் எத்தனையோ நடந்து முடிந்து விடும் வாய்ப்புள்ள விஞ்ஞான உலகம் இது. இந்தியாவில் தனிப்பட்ட மனிதர்களின் வளர்ச்சி முதல் தரமான நிறுவனங்கள் என்பது வரைக்கும் மேல் நாட்டில் உள்ள ஏதோ ஒருவரால் (அ) ஒரு நிறுவனத்தால் சான்றிதழ் வழங்க முடிந்தால் மட்டுமே இன்றைய சூழ்நிலையில் உங்களால் சர்வதேச சமூகத்தில் போட்டியிட முடியும்.

இதைத்தான் இந்தியாவில் உள்ள இப்போதைய ஆட்சியாளர்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள். நம் வளத்தை பலத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. உலகளவில் எத்தனையோ மாறுதல் உருவாகிவிட்டது. அத்தனை தொழில்நுட்பங்களும் நமக்கு வந்து சேர நாளாகும். தொழில் நுட்பத்தை கொண்டு வருவதைவிட தொழில்நுட்பத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களே இந்தியாவிற்குள் வந்து விட்டாலே போதுமானது தானே.

இதைத்தான் பொம்மை பிரதமர் என வர்ணிக்கப்படும் மன்மோகன் ஆட்சிக்கு வந்தது முதல் செயலில் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இதற்கு மேலும் தான் வகித்துக் கொண்டிருக்கும் பிரதமர் பதவிக்கு சோனியா மகன் ராகுல் பொருத்தமானவர் என்ற சான்றிதழ் வேறு கொடுத்துள்ளார். இந்தியாவின் பிரதமர் பதவியென்பது அந்த அளவுக்கு மலிவானதாக இருக்கிறது.

மன்மோகன் சிங் சொன்ன எதிர்கால தலைவர் தமிழகத்திற்கு வந்த போது சொன்ன வார்த்தைகள் "தேசிய நதி இணைப்பு என்பது பேரழிவாகும்" என்பது.
ஆனால் இந்தியாவில் வீணாக கடலில் கடக்கும் நீர் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இதற்கு மேல் அவ்வப்போது உருவாக்கும் இயற்கை சீற்றங்களினால் பல கோடி சொத்துக்களுடன் மக்களும் அழிந்து போய்க் கொண்டிருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.


முண்டாசு கவிஞன் பாரதி " வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்" என்று விபரம் புரியாமல் எழுதி வைத்து விட்டு சென்று விட்டார் என்று நினைத்துக் கொள்கின்றார்களோ..?

இப்போதுள்ள நடைமுறையில் அது சாத்தியம் தானா?

இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு எல்லாமே அரசியல். அது மக்களுக்கு முக்கியமானதா? முக்கியமற்றதா என்பது கூட தேவையில்லாதது. எதைச் சொன்னால் உடனடி கவனம் பெறும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

முதலில் ராகுல் சொன்ன தேசிய பேரிழிவைப் பற்றி பார்க்கலாம்.

காவிரியையும் கங்கையையும் இணைத்து விட்டால் போதும் என்று முதன் முதலில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஆங்கிலேயரான சர் ஆர்தர் காட்டன். இந்த திட்டத்தை பிரிட்டன் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போது செயல்படுத்த முயற்சித்தார். 

இவர் ஒரு பொறியியலாளர்.

இந்த திட்டத்தின் மூலம் நதியின் ஊடே போக்குவரத்தை உருவாக்க முடியும் என்று நம்பினார். ஆனால் இதைவிட ரயில் போக்குவரத்து மூலம் மிக எளிது என்று மாற்றுத் திட்டத்தில் கவனம் செலுத்த இவரின் நதி போக்குவரத்து கனவு, தொடக்க நிலையிலேயே வற்றிவிட்டது. தொடக்கத்தில் பல இடங்களில் கால்வாய் தோண்டும் பணியும் கூட நடந்தது. காலப்போக்கில் அது துர்ந்து போனது தான் மிச்சம். 

இதைத்தான் அப்போது "கால்வாய் மாலை" என்று மக்கள் நக்கலாக அழைத்தார்கள்.

ஆனால் இவர் உருவாக்கிய இந்த திட்டத்திற்கு பிரச்சனை மலைவடிவத்தில் இருந்தது. அது தான் இந்தியாவிற்கு அரணாக இருக்கும் இமயமலை. இதுவொரு முக்கிய பிரச்சனை. இவ்வளவு பெரிய உயரத்தை தாண்டி மறுபக்கம் தண்ணீரை கொண்டு வர வேண்டும். ஏறக்குறைய 1400 அடி உயரம். இதன் மூலம் 50 000 கன அடி நீரை கொண்டு வர வேண்டும். இதற்காக தேவைப்படும் மின்சாரம் முதல் மற்ற திட்ட மதிப்பீடுகளைப் பற்றி பிறகு பேசுவோம்.

கங்கை காவிரி இணைப்புக்கு அசாம் மாநிலத்தில் 200 கிலோ மீட்டர் தூரம், மேற்கு வங்கத்தில் 50 கிலோ மீட்டர் தூரம், மத்திய பிரதேசத்தில் 1000 கிலோ மீட்டர் தூரம், மகாராஷ்டிரத்தில் 500 கிலோ மீடடர் தூரம், ஆந்திர பிரதேசத்தில் 750 கிலோ மீட்டர், கடைசியாக தமிழகத்தில் 550 கிலோ மீட்டர் என்று மொத்தமாக 3750 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய்கள் தோண்டப்பட வேண்டும். இதன் மூலம் கங்கை, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி நதிகளை ஒரே அணியில் கொண்டு வந்து நிறுத்த முடியும்.

ஏற்கனவே உச்சநீதி மன்றம் ஒரு வழக்கின் அடிப்படையில் இந்த நதி நீர் இணைப்பை போர்க்கால நடவடிக்கையாக கவனம் செலுத்தி அதன் திட்ட அறிக்கையை தெரிவிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தது. ஆனால் மத்திய அரசாங்கம் வெளியிட்ட ஒன்பதாவது ஐந்தாண்டு திட்ட அறிக்கையில் இந்த நதிநீர் இணைப்பு பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லை.

1999ல் மத்திய அரசாங்கத்தின் சார்பாக "நீர் ஆதாரங்கள் தேசிய ஓருங்கிணைப்பு வளர்ச்சித் திட்டத் தேசிய ஆணையம்" ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில் கூட இந்த நதி நீர் இணைப்பு பற்றி ஒன்றும் கருத்தும் தெரிவிக்கவில்லை. காரணம் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கத்திற்கும் இந்த திட்டத்தில் கைவைத்தால் என்ன விளைவுகள் உருவாகும் என்பதை நன்கு புரிந்தே வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொள்கைகள். அதிலும் பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளால் உருவாக்கப்பட்ட மாநில அரசாங்கம் இருக்கும் போது இந்த திட்டத்தை அத்தனை சுலபமாக நிறைவேற்றி விட முடியுமா? அவரவர் அரசியல் கொள்கையின்படி வித்யாச கொள்கைகள்.

அவை அனைத்தும் அலங்கார வார்த்தைகளால் பூசி மெழுகப்பட்ட இனவாத கொள்கைகள்.

இன்று தேசிய கட்சியாக நம் கண்களுக்கு தெரிவது ஒன்று காங்கிரஸ். மற்றொன்று பாரதிய ஜனதா கட்சி. ஆனால் இவர்களின் கொள்கை ஓரே இந்தியா, ஒரே கொள்கை. ஆனால் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நடைமுறை எதார்த்தம் எப்படி இருக்கிறது?

இவர்கள் ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கொள்கையை ஏன் கடைபிடிக்கின்றார்கள்?

அது தான் அரசியல்.

இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சி என்று ஒற்றை சாளரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை நாம் அறிந்ததே. நமக்கு அருகே இருக்கும் கேரளாவில், காங்கிரஸின் கொள்கைகள் வேறு. அதே போல கர்நாடகாவில் வேறு கொள்கைகள். காரணம் அவரவர்கள் பிழைக்கின்ற வழியை பார்க்க வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் டெபாஸிட் கூட அந்தந்த மாநிலங்களில் கிடைக்காது அல்லவா?

ஆண்டுவிட்டு போன ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வினையை போட்டு விட்டு சென்றார்கள். இன்று நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.

இதற்கு மேலும் அந்தந்த மாநிலத்தில் உள்ள மாநில கட்சிகளில் உள்ள குளறுபடிகள் என்பதை நாம் தனியாக பார்க்க வேண்டும். உதாரணமாக பீகாருக்கு தங்களுக்கு கங்கை நதி திட்டத்திலிருந்து நீர் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் உண்டு. இன்று வரையிலும் "இந்திய - வங்க" தேச ஒப்பந்தத்தை மேற்கு வங்காளம் ஆர்வம் செலுவத்தில்லை. காரணம் அவர்கள் கொல்கத்தா துறைமுக வளர்ச்சியில் தான் அதிக ஆர்வம் செலுத்தி வளர்க்க விரும்புகிறார்கள்.

மொத்தத்தில் இன்றைய சூழ்நிலையில் எந்த வட மாநிலங்களும் இந்தியாவின் தெற்கு பகுதிகளுக்கு கங்கை நீரை அனுப்ப ஆர்வம் காட்டுவதே இல்லை என்பதே நிதர்சனமாகும்.

"நீர் ஆதாரங்கள் ஒருங்கிணைப்பு வளர்ச்சித் திட்ட தேசிய ஆணையம்" திட்டமிடுதலின் படி இந்த நதி நீர் இணைப்புக்கு பத்தாவது ஐந்தாண்டு கால திட்டத்தில் 70 ஆயிரம் கோடி ரூபாய். இதுவே பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நிறைவேற்றும் பட்சத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பிற்காக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள தொகை 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி.

புள்ளிவிபரங்களை படிக்கும் போதே மலைப்பாக இருக்கிறதா?

இந்தியாவில் உள்ள நதி அமைப்புகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். இந்திய துணைக்கண்டத்தின் வடக்கே உள்ள நதிகளை "இமயமலைப்பகுதி" என்றும் தெற்கே உள்ள பகுதிகளை " தீபகற்ப பகுதி " அல்லது " தென்னிந்திய பகுதி" என்றும் பிரிக்கிறார்கள்.

சரி, கங்கை காவேரி இணைப்பில் தான் இத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம்.

தென்னக நதிகள் இணைப்பு என்ன ஆயிற்று?

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா இன்று வரையிலும் தமிழ்நாட்டுக்கு பெப்பே காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். உபரி நீரை கடலில் கலந்து போகுமே தவிர உங்களுக்கு தர மாட்டோம் என்று ஒவ்வொரு மாநில அரசியல்வாதிகளும் இந்த நதிகளை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். முதலில் இந்த மாநில அரசுகளை குறை சொல்வதை விட நமது அரசியல் சட்டத்தை இன்று வரையிலும் திருத்த மனமில்லாமல் வைத்திருக்கும் நம் தலைவர்களைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்.


காரணம் மாநிலங்களில் ஓடும் நதிகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளின் ஒருங்கிணைந்த மேம்பாடு, நதிநீர் ஒதுக்கீடு, நீர் உரிமைகள் முதலிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பலவிதமான சட்டப் பிரச்சினகைள் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய விதிகளின்படி, நீர் என்பது மாநில அரசு சம்மந்தப்பட்ட விவகாரமாக இருக்கிறது. எனவே அரசமைப்பு சட்டத்தைத் திருத்தி அதன் மூலம் நீர் என்ற பொருளை மத்திய அல்லது பொதுப் பட்டியலில் கொண்டுவந்து அதன் பின்னர் நீர் வளத்தை ஒருங்கிணைத்து சிக்கனமாகப் பயன்படுத்த ஒரு தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இப்படி செய்தால் மட்டுமே மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் சொல்லைக் கேட்டு நடப்பார்கள். ஆனால் நீதி மன்ற ஆணைகளையே துச்சமாக மதிப்பவர்களை எப்படி மாற்ற முடியும்? பெரும்பான்மை பலத்துடன் மத்திய அரசாங்கத்தில் வந்தமரும் கட்சிகளுக்கும் அக்கறையில்லை. இதற்கு மேலும் இப்போது சுயமாக செயல்பட முடியாத நிலையில் இருக்கும் மன்மோகன்சிங் தலைமையில் இருக்கும் மத்திய அரசாங்கத்தில் அரசியலமைப்பு மாறுதல் என்பது நாம் நினைத்துப் பார்க்கக்கூடியதா?

சரி,

கங்கை காவேரி இணைப்புக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. இந்த திட்டத்திற்கான சாத்தியப்படாத நிதி ஆதாரம் முதல் சுற்றுப்புறம் மாசு வரைக்கும் நம் முன்னே ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் இதே போலவே லட்சம் பிரச்சனைகளை வைத்துக் கொண்டு நம் அருகே இருக்கும் பங்காளி ஒருவர் எப்படி வேகமாக நம்மைக் காட்டிலும் முன்னேறிக் கொண்டு இருக்கிறாரே?


நாம் பத்து வருடங்களில் கட்டக்கூடிய பாலத்தினை பத்து மாதங்களில் முடித்து வெள்ளோட்டம் விட்டு வெற்றிக் கொடி நாட்டி விடுகின்றாரே? உலகமெங்கும் அவரின் விலைமலிவு பொருட்கள் தானே சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. நம்மைப் போலவே ஜனத்தொகையும் அதிகம் தானே? அவர்களின் ஜனத்தொகையும் எதிர்காலத்தில் உணவுக்காக உலக நாடுகளிடம் தட்டு ஏந்தப் போகின்றதா?

வாய்ப்புகள் குறைவு. நம்ப முடியவில்லையா?

நமக்கு அரணாக மலைப்பை தந்து கொண்டிருக்கின்ற இந்த இமயமலையை அணுக்கதிர் மூலம் பிளந்து தனக்குத் தேவையான தண்ணீரை கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா?

அவர் தான் திருவாளர் சீனா?

Saturday, December 17, 2011

கொள்ளையனே வெளியேறு


போராட்ட குணத்திற்கும், போரட்டத்திற்கும் பெயர் பெயற்றவர்கள் ஓரிஸ்ஸா மக்கள். 

தொடக்கம் முதலே விளைநிலத்தை ஆக்கிரமிக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் முடிந்தவரைக்கும் எதிர்த்தே வந்துள்ளார்கள். ஆனால் 2000 ஆம் ஆண்டு முதல் ஒரிஸ்ஸா பூமி இடுப்பு ஒடிந்த பூமியாக மாறிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரிஸ்ஸா மேல் தனிக்கவனம் உண்டு. இதைப் போலவே வடகிழக்கு மாநிலங்களிலும் உண்டு. காரணம் அங்கே உள்ள இயற்கைச் செல்வங்கள். நிலக்கரிச் சுரங்கங்கள், மற்றும் உலோகக் கனிமங்களும் அதிக அளவில் கொட்டிக் கிடப்பதே முக்கிய காரணமாக உள்ளது.

கண்களுக்கு எட்டிய வரையிலும் நீண்டதாக இருக்கும் விவசாய நிலங்களும் அதனைச் சார்ந்துள்ள துறைமுக வசதிகளும் இருப்பதால் பல பன்னாட்டு நிறுவனங்களின் கழுகுப் பார்வையில் இந்த ஓரிஸ்ஸாவே முக்கிய இடத்தில் உள்ளது.

இதன் காரணமாகவே ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் நாங்கள் இங்கே தொழில் தொடங்க ஆசைப்படுகின்றோம் என்று உள்ளே வரத் தொடங்கினார்கள். இதன் வழியில் உள்ளே வந்தவர்கள் தான் தென் கொரியாவின் ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான பொஹாங் ஸ்டீல் நிறுவனம் (POSCO )

இந்த நிறுவனம் இங்கே வருவதை எதிர்த்து ஒரிஸ்ஸாவில் உள்ள ஜகத்சிங்பூரில் 30 000 கிராம மக்களும் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வாழந்து கொண்டிருப்பவர்களும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த நிறுவனம் இங்கே மூதலீடு செய்வதாக வாக்களித்த தொகை எவ்வளவு தெரியுமா? 52,000 கோடி.

2005 ஜுன் மாதம் 22 ஆம் தேதி ஓரிஸ்ஸா அரசும் போஸ்கோ நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆறாயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு தோறும் 120 டன் ஸ்டீல் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலை நிறுவுவது தொடர்பான ஒப்பந்தம் உருவானது.

இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இங்கே சுற்றியுள்ள நிலக்கரி சுரங்கங்கள் அணைத்தும் வந்துவிடும். இந்த நிறுவனத்தோடு ஓரிஸ்ஸா அரசு முப்பது ஆண்டுகள் என்ற நோக்கில் இந்த ஒப்பந்தத்தை போட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் இருபது ஆண்டுகள் நீடித்துக் கொள்ளலாம்.


இது இயல்பான நடைமுறைதானே என்கிறீர்களா? இனிமேல் தான் நாம் சந்தோஷப்படவேண்டிய பல விசயங்கள் உள்ளது.

இங்குள்ள நிலங்களில் உள்ள கனிம வளங்களான குரோமியம், மங்கனீஷ் போன்ற தாதுப் பொருட்களை மிக குறைந்த விலைக்கு ஒரிஸ்ஸா அரசாங்கம் இந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.

இந்த நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் 6000 லட்சம் டன் இரும்புத்தாது அரசாங்கம் வழங்க வேண்டும். அதுவும் ஒரு டன் ரூபாய் 2000 முதல் 2600 விலையில் கொடுக்க வேண்டும்.

இது போதாதென்று தொழிற்சாலைக்கான மானியம் என்ற வகையில் டன்னுக்கு 400 ரூபாய் அரசு வழங்கவேண்டும். இந்த வகையில் மட்டும் நிறுவனத்திற்கு 96,000 கோடி ரூபாய் லாபமாக கிடைக்கும்.

இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பாரதீப் பகுதியில் துறைமுகம் அமைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி தந்துள்ளது. ஏறக்குறைய இந்த துறைமுகமே ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து விடும்.

இந்திய கடல்சார் பகுதியில் ஒரு தனியார் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் எதிர்காலத்தில் என்னவெல்லாம் குளறுபடிகள் உருவாகும் என்பது குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டால் போதும்.. 'மாவோயிஸ்ட்களுக்கு எந்த காலத்திலும் வன்முறை என்பது தீர்வாகாது..' என இன்று வரைக்கும் அவர் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

துறைமுகம் எளிதில் அமைத்து விடமுடியுமா? இந்த துறைமுகத்திற்கு தேவைப்படும் சாலை போக்குவரத்து முதல் மற்றும் ரயில், மின்சார வசதிகள் வரைக்கும் அரசாங்கமே செய்து தரவேண்டும்.

சரி தொழிற்சாலை அமைத்தாகிவிட்டது. நிர்வாக அலுவலகம் வேண்டுமே? அதற்கும் சில ஏக்கரை தலைநகர் புவனேஷ்வரில் அரசாங்கம் இலவசமாக கொடுக்க வேண்டும். பஞ்சாயத்து இத்துடன் முடியவில்லை. இன்னமும் அனுமன் வால் போலவே இருக்கிறது.

இந்த நிறுவன கட்டுமானத்திற்கு மகாநதியில் இருந்து வருடந்தோறும் 12,000 முதல் 15,000 கோடி லிட்டர் நீரை எடுத்துக்கொள்ளும். இதன் காரணமாக அருகில் உள்ள கட்டக்கிலும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததே.

மாநில அரசாங்கம் கொடுத்துள்ள சலுகைகளைப் போலவே மத்திய அரசாங்கமும் பல சலுகைகளை வழங்கி உள்ளது. இந்திய தொழிற்சாலைச் சட்டங்கள், இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் செல்லுபடியாகாது.


சரி. இத்தனை பிரச்சனைகள் இருக்கிறதே? இந்த நிறுவனத்தினால் இந்தியாவிற்கு எந்தந்த வகையில் லாபம் என்பதையும் பார்த்து விடலாம்.

ஒப்பந்தம் போடப்பட்டுள்ள முப்பது ஆண்டுகளில் வரி வகையில் 22,500 கோடி மாநில அரசாங்கத்திற்கும்,89,000 கோடி ரூபாய் மத்திய அரசாங்கத்திற்கும் கிடைக்கும். அதாவது முப்பது ஆண்டுகளில் மத்திய மாநில அரசாங்கத்திற்கு வரிகளாக 1,11,500 கோடி ரூபாய் கிடைக்கும். சுருக்கமாகத் சொல்லப்போனால் மத்திய மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு சராசரியாக 3,700 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் இரும்புத்தாதுவுக்கு அரசாங்கம் கொடுக்கும் மானியம் மட்டுமே இதை விட பல மடங்கு அதிகம்.

அரசாங்கத்தின் கூற்றுப்படி இந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் ஒன்றுக்கும் உதவாத நிலங்கள் என்று அறிக்கை சொல்கின்றது. ஆனால் உண்மை நிலவரமென்பது இந்த நிலங்கள் நன்றாக விளையக்கூடியது மட்டுமல்லாது விலை அதிகம் போகக்கூடிய இடங்களாகும்.

இந்த நிறுவனத்திற்காக உருவாகப்போகும் பாரதீப் துறைமுகப்பகுதியில் மீன்பிடித்து வாழக்கூடிய 30 000 மீனவர்களின் வாழ்க்கையும் அதோகதியாகிவிடும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இந்த ஜகத்சிங்பூரில் உள்ள விவசாய நிலங்களுக்கு வேறொரு வகையில் சிறப்புண்டு. நெல், வெற்றிலை, தென்னை, முந்திரி, பாக்கு போன்ற விவசாயத்தின் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு வருடந்தோறும் ஏதோவொரு வேலை இருந்து கொண்டே இருக்கும். இதேபகுதியில் உள்ள ஜடாதரி பகுதியில் மீன்பிடித்தல் தொழிலும் நடந்து கொண்டேயிருக்கும்.

சாதகபாதக அம்சங்களை பார்த்தாகிவிட்டது.

இப்போது மற்றொன்றையும் நாம் பார்கக வேண்டும். 

எந்த நாட்டிலும் ஒரு அரசாங்கம் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியும் தானே? மக்கள் கிளர்ச்சி என்பது கடைசி தான். அதற்குள் சாம, பேத, தான, தண்டம் அத்தனையும் கையில் எடுத்து முடிந்தவரைக்கும் அடக்கப் பார்த்தாலும் கடைசியில் சில நாடுகளில் மட்டுமே ஆட்சி மாற்றம் நடக்கின்றது. ஆட்சியில் வருபவர்கள் மாறுவார்களே தவிர பன்னாட்டு நிறுவனங்களுக்காக உருவாக்கப்படும் நலன்கள் மாற்றப்படுவதில்லை.

இது தான் எதார்த்தம்.

குண்டர் படைகள் ஒரு பக்கம். அரசாங்கத்தின் கெடுபிடிகள் மறுபக்கம் என  இன்று ஒரிஸ்ஸா யுத்தபூமியாக மாறிக் கொண்டிருக்கிறது. உச்சகட்டமாக அரசாங்கம் இந்த பகுதிகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த பொருட்களையே நிறுத்தும் அளவுக்கு தங்கள் விசுவாசங்களை பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவன முதலாளிகளிடம் வாங்கித்தின்ற எலும்புத்துண்டுகளை கடித்து கடித்து வாயில் ரத்தம் வந்த போதிலும் விசுவாசம் மட்டும் இன்று வரையிலும் குறைந்தபாடில்லை.

ஆனால் இன்று வரையிலும் போராடிக்கொண்டிருக்கும் இந்த பகுதி மக்களைப் பற்றி எந்த இந்திய ஊடகமும் கண்டு கொள்ளவில்லை என்பது தான் இதில் உள்ள சிறப்பம்சம்.

இப்போது நீங்கள் ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளுக்கு அருகே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் ஹரியானா வரைக்கும் உள்ள அத்தனை நிறுவனங்கள் வரைக்கும் ஒரு விசயத்தில் கெட்டியாக இருப்பதை கூர்ந்து கவனித்தால் நம்மால் சரியாக புரிந்து கொள்ளமுடியும்.

ஒரு ஆலைக்கு தேவைப்படும் நிலத்தைப் போல நூறு மடங்கு இடத்தையும் வளைத்து வைத்துக் கொள்கிறார்கள். காரணம் நில மதிப்புக்காக.

இதன் காரணமாக சுற்றியுள்ள மக்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அங்குள்ள விலைநிலங்கள் மாறிவிடுகின்றது. இது தவிர அந்த ஆலையின் காரணமாக வெளியேறும் நச்சு வாயுக்கள் மூதல் கழிவு நீர் வரைக்கும் சுற்றியுள்ள அத்தனை பகுதிகளில் உள்ள நிலங்களின் தன்மைகளையும் மாற்றி விடுகின்றது. ஏறக்குறைய அந்த தொழிற்சாலையை நம்பியே அங்கே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை இயல்பாகவே உருவாகி விடுகின்றது. இது தான உண்மை.

இதைத்தான் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது என்கிறார்களோ..?. இதைக் கொண்டாடுங்கள் என்று மேலைநாட்டு சமூகம் நமக்கு அறிவுரை தருகிறது. உள்ளுர் கிராமங்கள் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கிறது. கிராமத்துக்கு தண்ணீர் ஆதாரங்கள் தரும் கண்மாய், ஏரிக்களும் படிப்படியாக தூர்த்து பட்டா போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றோம்.

நாம் பன்னாட்டு நிறுவனங்களை, நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை எத்தனை குறைகள் சொல்கின்றோமோ அந்த அளவுக்கு நமக்குள் இருக்கும் வியாதிகளையம் நாம் கண்டு கொள்ள வேண்டும்.


மாநிலத்திற்கு மாநிலம் நீருக்காக குடுமிபிடி சண்டையே நடந்து கொண்டிருக்கிறது. மழையும் பொய்த்துப் போனது. கடலில் கலந்தாலும் பரவாயில்லை. ஆனால் உனக்கு தரமாட்டோம் என்கிற மாநில அரசாங்க கொள்கைகளும் பிடிவாதங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே?

நதி நீர் பிரச்சனையிலே விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறதே?

அதுக்கு என்ன தான் தீர்வு?

கங்கை காவேரி இணைப்பு சாத்தியம் தானா?

தொடர்ந்து வரும் பாதை

Sunday, December 11, 2011

இந்தியா -- பணக்காரர்களின் உலகம்

இந்தியாவில் ஏறக்குறைய 70 சதவிகித மக்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும்,  இந்த விவசாயம் சார்ந்த தொழிலை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ஏக்கர் வைத்து கஷ்ட ஜீவனம் நடத்துபவர்கள் முதல் மிகப் பெரிய நிலச்சுவான்தார்கள் வரைக்கும் இதில் அடக்கம்.

இந்த இடத்தில் தான் நம்ம மரியாதைக்குரிய திருவாளர் பன்னாட்டு முதலாளிகள் உள்ளே வருகிறார்கள். அரசாங்கத்தின் பார்வையில் பன்னாட்டு நிறுவனங்கள் என்பவர்கள் இந்தியர்களை உயர்விக்க வந்த உத்தமர்கள்.

இவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு தான் நமது அரசாங்கமும் வேறு விதமாக சொல்லி வருகின்றது.


சிறு குறு விவசாயிகள் தங்கள் விவசாய தொழிலை விட்டு வேறு தொழிலுக்குச் சென்று விடலாம். காரணம் கார்ப்ரேட் ரீதியாக இந்திய விவசாய தொழிலை மாற்றினால் மட்டுமே லாபகரமாக இருக்கும். நம்மிடம் இருக்கும் அடிப்படை வசதிகளை விட வெளிநாட்டு தொழில் நுட்பமும், அந்த மேதைகளுமே இப்போதைக்கு இந்தியாவுக்கு முக்கியமானது.

நம் விவசாயத்தை அவர்கள் செழிப்பாக வைத்திருப்பார்கள் என்கிறார்கள்.

கோவணத்துணி போல கக்கத்தில் வைத்து காலம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிடம் போய் உன் நிலத்தை தந்து விடு என்று கேட்டால் உதைக்க வரமாட்டானா?

சுற்றி வளைத்து அவனையே அந்த நிலங்களை விற்க வைத்து விட்டால்? அதைத்தான் நமது ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த உணவு சார்ந்த தொழிலில் உலகளவில் 17 பன்னாட்டு நிறுவனங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். இவர்களுக்காக மட்டுமே உலகத்தின் உள்ள ஒவ்வொரு நாட்டின் தலைவிதிகளும் மாற்றி எழுதப்பட்டுக் கொண்டு வருகின்றன.

இதை நேரிடையாக சொல்லமுடியுமா?

அமெரிக்காவில் உள்ள US AGENCY FOR INTERNATIONAL DEVLOPMENT தெளிவாக தனது அறிக்கையின் மூலம் நமக்கு புரியவைக்கின்றது. இதைத்தான் யூ.எஸ் எய்ட் என்றழைக்கின்றார்கள். இதன் நிர்வாக இயக்குநர் ராஜீவ் ஷா 'உணவுத்துறையில் பொதுத்துறையுடன் தனியார் துறையும் சேர்ந்து செயலாக்கம் செய்யும் அளவுக்கு அரசாங்கங்கள் செயல்பட வேண்டும்' என்கிறார்.

இதைத்தான் தாவோஸ் மாநாட்டிலும் உலக நாடுகளுக்கு புரியவைத்தார்

ஒரு தனியார் நிறுவனம் விவசாயத்தில் ஈடுபடும் போது அந்த நாட்டின் பசியைப் பார்ப்பார்களா? இல்லை அவர்களுக்கு உலகம் முழுக்க விலை போகும் வாய்ப்புகளைப் பார்ப்பார்களா? முழுக்க முழுக்க ஏற்றுமதியில் தானே கவனம் இருக்கும். இதற்காகத்தான் நம்முடைய மத்திய அரசாங்கம் வேறொரு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதற்கு மற்றொரு பெயர் "சிறப்பு பொருளாதார மண்டலம்."

நகரங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தான் பல வகையிலும் உதவிக்கொண்டிருக்கிறது.

இதைத் தான் இன்று ஒவ்வொரு மாநில அரசாங்கமும் வேதவாக்காக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இறுதியில் உனது நிலத்தை தருகிறாயா? இல்லை விரட்டவா? என்பதாக ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த சி.பொ.ம ஆண்டுக்கு ஆண்டு பெருகிக் கொண்டேயிருக்கிறது.

ஒரு காலத்தில் இந்தியாவில் தேசிய வருமானம் GDP (GROSS DOMESTIC PRODUCT) 55 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது கழுதை தேய்ந்து கட்டறும்பாகி இப்போது 2011 செப்டம்பர் மாத கணக்குப்படி ஏறக்குறைய 7 சதவிகித அளவுக்கு வந்துள்ளது. ஏன் தொழில் வளர்ச்சி ரீதியில் நாம் முன்னேறிக் கொண்டு தானே இருக்கிறோம்.

ஏன் இன்னும் நம்மால் வளர்ச்சியை எட்ட முடியவில்லை?

கிராமத்தில் சொல்லும் பழமொழியான தும்பை விட்டு வாலைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. எதில் கவனம் செலுத்த வேண்டுமோ? அதைப் பற்றி கவனமே செலுத்த விரும்பாமல் தொழிற்சாலைகளின் வளர்ச்சியை தான் நாட்டின் வளர்ச்சியாக கருதிக் கொள்வதால் ஆண்டுக்கு ஆண்டு தனி நபர்களின் வருமானம் குறைந்து இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் எகிறிக் கொண்டே இருக்கிறது.

உண்மை தான். பணம் ஒரு சாரரிடம் மட்டும் குவிந்து கொண்டேயிருக்கிறது.

மாறி வரும் பொருளாதாரத்தில் இன்று உலகம் முழுக்க ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. எல்லா சூழ்நிலைகளிலும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகளை விட்டு விலகி நின்றுவிட முடியாது. இதை கருத்தில் கொண்டே 1991 ல் ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் கொண்டு வந்தது தான் இந்த சந்தைப் பொருளாதாரம்.

எப்போதும் போல, நம்முடைய செங்கொடி தோழர்கள் டங்கல், காட் ஓப்பந்தம் மூலம் நாட்டை அந்நியருக்கு தாரை வார்த்து விடும் என்று போராடிவிட்டு ஒதுங்கி விட, சந்தைப் பொருளாதாரம் ஜம்மென்று இந்தியாவில் ராஜநடை போடத் தொடங்கியது. இந்த இடத்தில் ஒரு மகத்தான் ஆச்சரியம் என்னவென்றால் எவர்கள் உள்ளே வரக்கூடாது என்று செங்கொடி தோழர்கள் போராடினார்களோ அந்த செங்கொடி தோழர்கள் ஆண்ட மேற்கு வங்காளத்தில் தான் விவசாயிகளை அவர்கள் இடங்களை விட்டு அப்புறப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்த வேண்டியதாக இருந்தது.

பொருளாதார மாற்றத்தின் தொடக்கத்தில் நல்லதே நடக்கத் தொடங்கியது. எருதுகளின் உதவியோடு உழுது கொண்டிருந்த விவசாயிகளின் பழமைவாத சிந்தனைகள் படிப்படியாக விலக ஆரம்பித்தது. 

ஆனால் அடிப்படை சிந்தனைகளே இன்று மாறி அடிவருடி சிந்தனைகள் மட்டுமே இருக்கும் அளவுக்கு அரசியல்வாதிகள் தின்று கொழுக்க ஆரம்பித்தனர். இடைத்தரகர்கள் மட்டுமே வாழ முடிந்தது. யுகபேரம் வளர்ந்து இனி நம்மால் வாழவே முடியாது என்கிற அளவுக்கு ஒவ்வொரு விவசாயிகளையும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தத் தொடங்கியது.


சந்தைப்பொருளாதாரம் இந்தியாவில் அறிமுகமாகி 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஏராளமான தொழில் நுட்ப வளர்ச்சியை கண்டுள்ளோம். வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி முதல் அலைபேசியின் மூலம் இன்று உலகத்தை கைகளுக்கே கொண்டு வந்து விட்டோம். ஆனால் அடுத்த வீடு அந்நிய வீடாகிப் போய் விட்டது.

குறுகிய மனப்பான்மையே முக்கிய குறிக்கோளாக மாறிவிட்டது. இதுவே வளர்ந்து வளர்த்து பேராசையின் உலகமாக மாற்றியுள்ளது.

பணமே பிரதானமாகி ஒவ்வொருவர் மனத்திற்குள்ளும் ஆயிரம் விஷவிதைகள் வளர்ந்து காட்டுப்புதர் போலவே மண்டிவிட்டது. தொடர்ச்சியாக இதன் விதைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் உள்ள வித்யாசம் தெரியாத உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடைவெளி விடுங்க என்பதைப் போலவே சமூக வாழ்க்கையில் நமது அரசாங்க கொள்கைகளின் மூலம் வேறொரு இடைவெளியை வெற்றிகரமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

அது தான் ஏழை மற்றும் பரம ஏழை.

இதைப் போலவே பணக்காரன் மிகப் பெரிய பணக்காரன். 

ஆனால் நம் கண்களுக்கு தெரிவதெல்லாம் இந்தியாவில் நடுத்தர வர்க்கம் உயர்ந்து விட்டது. வாங்கும் சக்தி படைத்த சந்தையில் இந்தியா முக்கியமான இடத்தில் உள்ளது என்பது மட்டுமே.

உலக நாடுகளும் இதன் அடிப்படையில் இங்கே படையெடு எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே வெம்பிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை குறித்து எவருக்கும் அக்கறையில்லை.

அர்ஜுன் சென்குப்தா கமிட்டியின் அறிக்கையின் படி, இந்தியாவில் 77 சதவிகிதத்தினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக வாழுகின்றனர். என்.சி.சக்சேனா கமிட்டியின் அறிக்கையின் படி, இந்தியாவில் 50 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழே வாழுகின்றனர். 

ஆனால் தற்போது மன்மோகன் சிங் அரசாங்கத்தின் கணக்குப்படி ரூபாய் 32 தின வருமானமாக இருப்பவர்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்குள் இருப்பவர்கள். தெருவோரக் கடையில் ஒரு தேநீரின் விலை ஆறு ரூபாய். ஆனால் ஒரு பாட்டிலின் தண்ணீரின் விலை 15 ரூபாய்.

இது தான் இப்போது இந்தியா பெற்றுள்ள உண்மையான வளர்ச்சி.

இந்தியாவின் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 35.5 % வங்கி சேவையை பயன்படுத்தியுள்ளார்கள். 35.1 % வானொலி வைத்துள்ளனர் 31.6 % தொலைக் காட்சி வைத்துள்ளார்கள், 9.1 % தொலைபேசி வைத்துள்ளனர் 43.7 % சைக்கிள் வைத்துள்ளனர் 11.7 % ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் வைத்துள்ளனர் 2.5 % கார் வைத்துள்ளனர், 34.5 % இவற்றில் எதுவுமே இல்லாமல் இருக்கின்றனர். அடுத்து வந்த பத்து வருடங்களின் எதுவுமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இன்னும் பெருகிக் கொண்டேயிருக்கிறது.

பருத்தி, கரும்பு விவசாயத்தை நம்பியவர்கள் அத்தனை பேர்களும் நட்டாத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாய அமைச்சர் சரத்பவார் தென் ஆப்ரிக்காவில் நடந்த கிரிக்கெட்டில் இந்தியா தோற்றத்திற்கு கவலைப்பட்டுக் கொண்டு உருப்படியான பயிற்சியாளர்கள் தேவை என்று கவலைப்பட்ட கதையை நாம் படித்தது தானே?.


அரசே ஒப்புக் கொண்ட புள்ளி விபரங்களின் படி, 1997 முதல் 2007 வரையிலான காலத்தில் மட்டும் 2 லட்சம் விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரத்தின் படி, இந்தியாவில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ஆப்பிரிக்க கண்டத்தை விட அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் உள்ள பணக்காரர்களை எடுத்துக் கொண்டால், 2007ம் ஆண்டு உள்ள கணக்கின் படி, இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்து மூன்றாயிரம். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

தொடரும்...