Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Thursday, May 30, 2013

எதிரி தான் எழுத உதவினார்

அப்பா இறந்து போகும் வரையிலும் அவர் மேலிருந்த கோபம் எனக்குத் தீரவில்லை.  அவர் எந்த துரோகமும் எனக்குச் செய்யவில்லை. அவர் தப்பான ஆளுமில்லை. அவரிடம் வெற்றிலை போடும் பழக்கம் கூட இல்லை.

அவர் வாழ்வில் கடைசி வரைக்கும் எந்த தப்பான பழக்கத்திற்கும் அடிமையானதும் இல்லை.    

மிகப் பெரிய கூட்டுக் குடித்தனத்திற்கு தலைமைப் பொறுப்பில் இருந்தவர் அவரின் கடைசி நாள் வரைக்கும் உழைத்துக் கொண்டே தான் இருந்தார். எங்களையும் உழைப்பின் வழியே தான் வளர்த்தார். ஆடம்பரங்களை அண்ட விடாமல் வைத்திருந்தார்.

தவறான பழக்கம் உள்ளவர்களை அறவே வெறுத்தார். தான் தன்னுடைய குடும்பம் தன்னுடைய தொழில் என்ற மிகச் சிறிய வட்டத்திற்குள் வாழ்ந்தார். அதுவே பலமென்று கருதினார். ஊருக்குள் நாலைந்து பேர்களைத் தவிர அவர் நெருக்கம் பாராட்டியது மிகக் குறைவு.  நட்பு வட்டாரம் என்று பெரிய அளவில் இல்லை. அதை அவர் விரும்பியதும் இல்லை.  ஆனால் ஊரில் மதிப்பு மிக்க குடும்பம் என்ற பெயரை பெற்று இருந்தார்.

வீட்டில், வயலில், கடையில் வேலை பார்த்தவர்களின் குடும்பத் தொடர்புகள் தவிர வேறு எதையும் அனாவசியமான தொடர்புகளாக கருதியவர். ஊரில் பேட்டை வியாபாரிகளின் சங்கத்திற்கு இரண்டு முறை தலைவராக இருந்தவர்.  அதுவும் இவரின் இரண்டு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே மாறிப் மாறி வருவதாக இருக்கும் அந்த பதவியும் குறிப்பிட்ட சுற்றில் இவருக்கு வந்த காரணத்தால் ஏற்றுக் கொண்டவர். குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு இளைஞர்களின் கைக்கு அந்த பதவிக்குச் சென்ற போது இவர் வெளியே வந்து விட்டார்.

கையில் ஒரு மஞ்சள் பை என்பதை தனது அடையாளமாக கருதிக் கொண்டவர். ஒவ்வொரு காசையும் பார்த்துப் பார்த்து செலவு செய்ய கற்று வைத்திருந்தவர். வாழ்வில் உயர உடல் உழைப்பே போதுமானது என்று நம்பியவர்.  

ஆடம்பரம் என்ற வார்த்தையில் உணவைத் தவிர அத்தனை விசயங்களையும் கருதியிருந்தார். மகள்கள் கேட்கும் போது மனம் மாறிவிடுவார். காந்தியவாதி என்பதை விட கடைசிவரைக்கும் காங்கிரஸ்வாதியாகத்தான் இருந்தார்.

முதன் முதலாக வலையில் எழுதத் தொடங்கிய போது நாம் எதைப் பற்றி எழுதுவது என்று யோசித்த போது எப்போதும் போல அந்த மதிய வேளையில் அப்பா ஞாபகம் தான் வந்தது.  

ஏறக்குறைய அவர் இறந்து எட்டு வருடம் கடந்திருந்த போதிலும் அவர் உருவாக்கிய தாக்கம் குறைந்தபாடில்லை.  ஒழுக்கம் தான் முக்கியத் தேவை என்கிற பெயரில் மிகப் பெரிய சர்வாதிகாரத்தை எங்கள் அனைவர் மீதும் வன்முறைக்குச் சமமாக பிரயோகித்திருந்தார். 

இந்திய சுதந்திர போராட்டத்தில் சொல்லப்படும் ம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்பார்களே அதே போலத்தான்.

அவர் எங்கள் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தினார். 

எங்களை மட்டுமல்ல.அவரின் இரண்டு தம்பிகளையும் கட்டுப்படுத்தி தான் வைத்திருந்தார். முன் கோபக்காரர். சொல் பேச்சு கேட்காத போது டக்கென்று கையை நீட்டி விடும் பழக்கம் உள்ளவர். அனைவரும் அவர் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் இருந்தோம். அவரின் எந்த கட்டளைகளையும் மீறாமல் தான் வாழ்ந்தோம். வளர்ந்தோம். படித்தோம்.  

நான் மட்டும் என்னை ஆளை விட்டால் போதும் என்று வெளியே வந்து விட்டேன்.

நான் வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் எந்த நிலையிலும் வறுமை எதையும் பார்த்ததில்லை. அடிப்படை வசதிகளுக்கும் எந்த பஞ்சமில்லை.

அப்பா எப்போதும்   கல்விக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்.  

ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளைத் தான் கொண்டாடினார்.  பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தூரில் அக்கா படிக்கச் சென்ற போது தயங்காமல் கல்லூரி விடுதியில் தான் சேர்த்தார்.  கல்லூரி அளவில் அக்கா முதல் மதிப்பெண் வாங்கிய போது எவரும் யோசித்தே பார்க்கமுடியாத நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியில் கொண்டு போய்ச் சேர்த்தார்.  ஆனால் லஞ்சம் என்பதை ஆதரிக்க மாட்டார். தேவையற்ற செலவு என்பதே எங்கும் செய்ய மாட்டார்.  எவரும் எதிர்பார்க்கவும் முடியாது. உறவினர்கள் மத்தியில் ராமநாதன் குடும்பம் சரஸ்வதி குடியிருக்கிற குடும்பம் என்கிற அளவிற்கு மற்றவர்களின் பார்வைக்கு அவர் குறைகளை மீறி ஒளி விளக்காய் தெரிந்தார். 

அப்பாவிடம் வருகின்ற எவரும் இவர் குணங்கள் தெரிந்தே தான் பேசுவார்கள்.  அளவாகத்தான் பேசுவார்.  எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார்.  ஆனால் எல்லாவற்றுக்கும் எதிர்மறையான குணங்கள் என்னிடம் இருக்க அதுவே எனக்கும் அவருக்கும் நாளுக்கு நாள் தூரங்கள் அதிகமாகப் போக காரணமாகவும்  இருந்தது.

கல்லூரி முடியும் வரையிலும் முழுமையாக ஒட்டவும் முடியாமல் ஓடி ஒளியவும் முடியாமல் சித்தப்பா தான் என் விருப்பங்களுக்கு ஊன்று கோலாக இருந்தார்.  கலையார்வமோ, வேறு எந்த வித விருப்பமோ எதுவும் வீட்டுக்கு அண்டக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்.  அது தான் என் முக்கிய நோக்கமாக இருந்தது.  

படிப்பைத் தவிர மற்ற அத்தனை விசயங்களிலும் கெட்டியாக இருந்த என்னை விரட்டி விரட்டி அடித்த போதும் வீண்வம்புகள் வீடு வரைக்கும் வருவதும் மட்டும் குறைந்தபாடில்லை.  என்னை என்னால் மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.  என்னைச் சுற்றிலும் உள்ள 20க்கும் மேற்பட்ட நண்பர்களின் பட்டாளத்தையும் குறைக்கும் வழியும் தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் தாமதமாகச் செல்லும் அந்த இரவு வேளைகளில் முன்பக்க கதவுகளை தாழ்போட்டு திறக்கக்கூடாது என்ற கட்டளையோடு விழித்துக் கொண்டு காத்திருப்பார்.  இவர் சங்கதி தெரிந்து பின்புறம் கொல்லைப்புறம் இருந்த அந்த முள்காட்டுக்குள் கவனமாக கால்வைத்து ஏறி பின்பக்க கதவு வழியாக வந்து கிசுகிசுப்பாக சகோதரிகளை எழுப்பி உள்ளே வந்து சேரும் போது சரியாக காத்திருந்து கச்சேரியுடன் இடி மின்னல் வெடிக்கும்.  சாப்பாடு இல்லாமல் கண்ணீர் மழையுடன் தான் பல நாள் கழிந்துள்ளது.

ஆகஸ்ட் 25 அவர் இறந்த போது மிகத் தாமதமாகத்தான் அந்த தகவல் எனக்கு திருப்பூருக்கு வந்து சேர்ந்தது.  சென்னையில் இருந்து பேரூந்தில் வந்து கொண்டிருந்த போது திருச்சி பேரூந்து நிலையத்திற்கருகே நெஞ்சு வலியினால் அந்த அதிகாலை வேலையில் நொடிப் பொழுதில் இறந்துப் போனார். 

நள்ளிரவில் போய்ச் சேர்ந்த போது அப்பாவின் சடலத்தைப் பார்த்த போது தொடக்கத்தில் எந்த சலனமும் மனதில் உருவாகவில்லை.  இவர் சாவுக்கு நாமும் ஒரு வகையில் காரணமோ என்று கூட தோன்றியது. அவர் எதிர்பார்த்து காத்திருந்த வசதியான பெண்களை எல்லாம் புறக்கணித்து ஒவ்வொன்றும் தள்ளிப் போய் என் சம்மந்தப்பட்ட விசயங்களில் ரொம்பவே வெறுத்துப் போயிருந்தார். 

காரணம் திருப்பூருக்குள் மிகப் போராட்டமாய் வாழ்ந்து வந்திருந்த எனக்கு அந்த வருடம் முதல் படியில் ஏறி ஒரு நிறுவனத்தின் உற்பத்தியின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருந்தேன். அந்த வருடம் தான் அப்பா இறந்திருந்தார். 

நான் கடந்து வந்திருந்த தோல்விகள் ஒவ்வொன்றுக்கும் அப்பா தான் காரணம் என்று உறுதியாக நம்பியிருந்தேன்.  நம்மிடம் இல்லாத திறமைகள் அனைத்து அவர் கற்றுத் தராததே என்பதாக எனக்குள் ஒரு உருவகத்தை உருவாக்கி வைத்திருந்தேன். நம்மை அடக்கி அடக்கி வைத்த காரணத்தால் பல விதங்களில் நாம் பின் தங்கியிருக்கின்றோம் என்பதாகத்தான் ஆற்றாமையில் வெம்பியிருக்கின்றேன்.

அவர் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் மிகப் பெரிய அளவில் சொத்துக்களை விரிவாக்கம் செய்திருக்க முடியும்.  அவர் விரும்பியிருந்தால் சிலரைச் சென்று பார்த்திருந்தால் அப்பொழுதே எனக்கு கிடைக்கவிருந்த அரசு வேலையில் சேர்த்திருக்க முடியும். 

எனக்கு மட்டுமல்ல.  அவர் ஆண் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் உன் திறமையில் வளர் என்பதாகத்தான் வெளியே அனுப்பினார்.   வார்த்தைகளில் தயவு தாட்சண்யம் என்பதே இருக்காது. முக்கியமான விசேடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு தம்பிகளை அனுப்பி விடுவார்.

எவரையும் நம்ப மாட்டார்.  எவரிடமும் அறிவுரையும் கேட்க மாட்டார்.  தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றியும் யோசிக்க மாட்டார். மற்றவர்களைப் பற்றி கவலைப்படவும் மாட்டார். 

தான் உண்டு. தன் வேலையுண்டு என்பதைத்தான் தன் வாழ்க்கை நெறிமுறையாக வைத்திருந்தார். காலத்தோடு ஒத்துப் போக முடியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் உள்ளூருக்குள் வந்த புதியவர்கள் ஒவ்வொருவரும் வளர வளர இவரால் தன்னை வளர்த்துக் கொள்ளவும் முடியவில்லை.  

தன் இயல்புகளை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.  

எவருக்கும் மனதறிந்து துரோகம் செய்யக்கூடாது என்பதை முக்கியமாகக் கொண்டவரின் கொள்கைகள் எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை தந்த போதிலும் காலத்திற்கேற்ப புதிய முயற்சிகள் கூட தேவையில்லை என்பதாக வாழ்ந்தவரின் கொள்கைகள் தான் எங்களுக்கு அதிக எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்கியது.  தானும் வளராமல் எங்களையும் அண்ட விடாமல் தான் சேர்த்த சொத்துக்களை அடைகாத்தார். நான் ஊரில் பார்த்த முக்கால்வாசிப்பேர்கள் மூன்று தலைமுறைகளாக காத்து வந்த சொத்துக்களை மொத்தமாக விற்றுவிட்டு வெளியேறிய போதிலும் இன்று வரையிலும் அவர் சம்பாரித்த எந்த சொத்துக்களும் சேதாரம் இல்லாமல் தான் இருக்கின்றது.  அவர் தம்பிகளுக்கு பிரித்தது போக இன்றும் அப்படியே இருக்கின்றது.

அப்பா இறக்கும் வரையிலும் உணவு தான் வாழ்க்கை.  ருசி தான் பிரதானம் என்பதான சிறிய வட்டத்திற்குள் பொருந்திக் கொண்ட அவருக்கும் உலகத்தை அளந்து பார்த்து விட வேண்டும் என்று போராடிப் பார்த்த எனக்கும் உருவான பிணக்குகள் நாளுக்கு நாள் அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை.

கால் நூற்றாண்டுகள் காலம் அவரை வெறுத்துக் கொண்டே வாழ்ந்த வாழ்க்கையில் என் குழந்தைகளின் காலடி தடங்களைப் பார்த்த போது அப்பா என்ற பிம்பத்தின் முதன் முறையாக மரியாதை உருவானது.  

குழந்தைகளின் மருத்துவத்திற்காக அலைந்த போது தான் அவரின் உண்மையான ரூபம் புரிந்தது.  

குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற போது தான் எத்தனை அறிவீலியாக இருந்துள்ளோம் என்பதை உணர்ந்து பார்க்க முடிந்தது.

இன்று அம்மா வாழ்ந்திருந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடிகின்றது. அவரின் அசாத்தியமான பொறுமை இன்று என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கிறது.  அவர் மிகப் பெரிய பட்டாளத்திற்கு சமைத்துப் போட்டு உழைத்த உழைப்பு இன்னமும் நாம் உழைக்க வேண்டும் என்று உந்தித் தள்ளுகின்றது. வீட்டுக்கு மூத்த மருமகளின் கொடூரமான சகிப்புத்தன்மையை தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் மனோநிலையோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிகின்றது.

குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை.  ஆனால் குறைகளை மீறியும் குடும்பத்தை காத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி இப்போது தான் யோசிக்க முடிகின்றது.  அப்பாவுக்கு எந்த வகையிலும் நாம் மகிழ்ச்சியைத் தரவில்லையே என்ற குற்றவுணர்வு மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தது.  குடும்பத்தினர் திருமணத்தை ஏற்பாடு செய்து உறுதி செய்த போது அப்பா இறந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது.  என்னை விட்டு விடக்கூடாது என்று மாமனார் அவசரமாக இருந்தார்.  ஏதோவொரு வகையில் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன். மாமனாரிடம் ஒரு வருடம் முழுமையாக முடியட்டும் என்று காத்திருக்கச் சொன்னேன்.

ஊர்ப் பழக்கத்தில் தாத்தா அப்பா பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பது வாடிக்கை.  ஆனால் ஆண் குழந்தைகள் வந்தால் என்னைப் போல இருந்து விடுவார்களோ என்று இயற்கை நினைத்ததோ தெரியவில்லை. ஒன்றுக்கு மூன்றாக பெண் குழந்தைகள் வந்து சேர இன்று மூவரும் எங்களை கொண்டாடுகின்றார்கள்.

இப்போது எங்கள் குழந்தைகள் தான் எனக்கு அப்பாவாக இருக்கின்றார்கள். 

காரணம் இவனை திருத்தவே முடியாது என்று புலம்பியவரின் பேத்திகள் தான் இன்று என்னை பேதியாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தால் அமைதியாக இருக்க வேண்டும் என்று வளர்த்தவரின் பேத்திகள் இன்று கேள்விகளால் துளைத்தெடுக்கின்றார்கள்.  உங்க காலம் வேறு. எங்க காலம் வேறு என்று மல்லுக்குச் சரிசமமாக இருக்கின்றார்கள்.

அமைதியாய் வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை என்று உணர்த்திய அப்பாவின் வாழ்க்கையின் தத்துவங்களைத்தான் இப்போது நானும் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றேன். ஆமாம் பல சமயம் குழந்தைகள் கேட்கும் உண்மையான அக்கறையான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அழகாய் ஒதுங்கிவிடத்தான் தோன்றுகின்றது.  ஏன் எதற்கு எப்படி என்று கேட்டுப் பழக வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த நிலைக்கு இப்போது மூன்று பக்கத்திலிருந்து சூறாவளியும் சுனாமியும் ஒன்று சேர தாக்கிக் கொண்டேயிருக்கிறது.  வீட்டில் என்னால் சமாளிக்க முடியல என்று சொல்லும் அளவுக்கு தினந்தோறும் வாழ்க்கை அதகளமாக போய்க் கொண்டேயிருக்கிறது.

அன்று அப்பாவிடமிருந்து ஒதுங்கிச் சென்ற கால்கள் இன்று குழந்தைகளின் மாறிக் கொண்டேயிருக்கும் எதிர்பார்ப்புகளைப் பார்த்து விழிபிதுங்கி நிற்கின்றது. 

வலைதளம் அறிமுகமாகி, எழுதத் தொடங்கிய பிறகு என்னைப் பற்றி எழுதிப் பார்த்த போது குழந்தைகளின் வளர்ச்சியை, அவர்கள் கடந்து வந்த காலடித் தடத்தினை எழுதிக் கொண்டே வந்தேன்.  

பலருக்கும் இந்த அனுபவங்கள் பிடித்தது என்பதை விட இது போலவே நாங்களும் வளர்க்க ஆசைப்படுகின்றோம். உங்கள் எழுத்துக்கள் மூலம் கற்றுக் கொள்ள முடிகின்றது என்றார்கள். மற்றவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளாமல் உங்கள் அனுபவங்கள் கற்றுக் கொடுத்த விசயங்களை எழுதுவது எங்களுக்கு பிடிக்கின்றது என்றார்கள்.

விமர்சனத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு புரிந்துணர்வு இந்த வலையுலகில் எனக்கு கிடைத்தது. காரணம் அது என் அப்பா எனக்குள் உருவாக்கிய தாக்கமது.

வெறுப்புகளை மட்டுமே சுமந்தவனின் வாழ்க்கை அடிப்படையில் அன்புக்கு ஏங்கி தவிக்கும் மனம் உள்ளவனமாகத்தான் இருப்பான்.

அன்பென்பது பகிரப்படும் போது தான் அதற்கு உயிர்ப்பு வருகின்றது. உள்ளேயே வைத்துக் கொண்டிருந்தால் அதற்கு எந்த பலனும் இல்லை. அந்த அன்பு சிலருக்கு மனைவி மூலம் கிடைக்கக்கூடும்.  எல்லா சமயத்திலும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதும் இல்லை. அது பரஸ்பரம் சரியான விதத்தில் புரிந்து கொள்ளும் போது இயல்பாக இருக்கும்.  

ஒரு பக்கம் கூடி மறுபக்கம் குறைந்தால் அதிலும் பிரச்சனை உருவாகி அது விஸ்வரூபம் ஆகிவிடும் வாய்ப்பும் உள்ளதால் ஏறக்குறைய குடும்ப வாழ்க்கையென்பது கம்பி மேல் நடக்கும் கதை தான். கால மாறுதல்கள் தினந்தோறும் வரவேற்பரையில் கொண்டு வந்து கணக்கற்ற விஷங்களையும் விதைத்துக் கொண்டேயிருப்பதால் கண்கொத்தி பாம்பாகத்தான் இந்த வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது.

பேசும் பேச்சு முதல் நம்முடைய அன்றாட நடவடிக்கை வரையிலும் கவனத்தோடு வாழ் வேண்டியுள்ளது. 

ஆனால் நம் சமூகத்தில் குழந்தைகள் தான் கணவன் மனைவியை சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு சமயத்திலும் உருவாக்கி வைக்கின்றது. நான் இங்கே பார்த்த வரையிலும் அவரவர் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போது தான் பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவியிடையே உண்மையான அக்கறை உருவாகின்றது.

காரணம் நான் நீ என்ற ஈகோ குழந்தைகள் மூலம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக  அழிக்கப்படுகின்றது   நம்மால் குழந்தைகள் வாழ்க்கை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தினால் அமைதி உருவாக அதுவே உறவுச் சங்கிலியின் தன்மை கெட்டுப் போகாதவாறு இருந்து விடுகின்றது.

குழந்தைகளின் வளர்ச்சியின் மூலம் இங்கே பல கணவன் மனைவியின் உண்மையான காதல் அனுபவமும் மீண்டும் துளிர்விடத் தொடங்குகின்றது.

குடிகார கணவன் குழந்தையின் மேல் உள்ள பாசத்தினால் தன் இயல்புகளை மாற்றிக் கொண்ட பலரையும் பார்த்துள்ளேன்.  மகள் வளர்ந்துவிட்டாள் என்ற பயத்தில் ஊர் மேய்ந்த மனைவி மாறிய தன்மையும் பல பாடங்களைத் தந்துள்ளது.   இங்கே குடும்ப பாசம் என்ற ஒரு வார்த்தை தான் மேலானதாக இருக்கிறது. இதுவே தான் நம் இந்திய நாட்டை ஒரு சங்கிலி போல இன்னமும் இணைத்து வைத்து சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டிருக்கிறது.  

வேர்ட்ப்ரஸ் ல் எழுதத் தொடங்கியது முதல் இன்னமும் என் எழுத்துக்களை கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்கள் வரையும் அத்தனை பேர்களும் இது போன்று நாங்களும் குழந்தைகளின் அனுபவங்களை எழுத வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் என்று சொல்லி இருக்கின்றனர்.

ஒவ்வொரு சமயத்திலும் தங்கள் விருப்பங்களை, பாராட்டுக்களை, ஆச்சரியங்களை  விமர்சனத்தின் வாயிலாக தெரிவித்தும் உள்ளார்கள்.

இன்னும் பத்து வருடங்கள் கழித்து இங்கே மூவரும் கல்லூரிப் பக்கம் சென்று விடுவார்கள்.  அப்போது அவர்களின் உலகம் வேறுவிதமாக இருக்கக்கூடும்.  எண்ணங்கள் முழுமையாக மாறியிருக்கும்.

இன்று காட்டும் அன்பு கூட மாறியிருக்க வாய்ப்பிருக்கலாம். 

அந்த உலகத்தில் நான் (நாங்கள்) இருப்பேனா என்று தெரியாது. என்னளவில் என் அப்பாவைப் போல சரியானதை மட்டும் இவர்களுக்கு செய்து கொண்டிருக்கும் விசயங்கள் அவர்கள் மனதில் தப்பு அல்லது வன்முறை போல தோன்றியிருக்கக்கூடும்.

இப்போது வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலையில் கூட உள்ளே வைத்திருக்கக்கூடும்.

காரணம் நானும் அப்படித்தானே யோசித்துருந்தேன்..

அப்போது நான் இவ்வுலகில் இல்லாவிட்டாலும் கூட என் குழந்தைகள்  இந்த எழுத்துக்களை படிக்கக்கூடும். 

நான் என் அப்பா மேல் வைத்திருந்த வெறித்தனமான கோபத்தைப் போல ஒருவேளை எங்கள் குழந்தைகள் என் மேல் வைத்திருந்தால் அப்போது அவர்கள் மனதில் தோன்றக்கூடிய கேள்விகளுக்கு சில பதில்கள் இந்த எழுத்துக்கள்  மூலம் அவர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடும்?.

இன்னமும் நிறைய எழுதி வைப்பேன்.


ஆட்டம் காணும் அஸ்திவாரம்


வீட்டு யுத்தமும் விடுபடாத மர்மங்களும்


மிதி வண்டி - வீரமும் சோகமும்


சொம்பு இல்லாத நாட்டாமை



தினந்தோறும் மலரும் பூக்கள் 2011


சாமி கண்ணை குத்திடும்


ஊரை திருத்தப் போறீங்களா?



நான் திருந்தப் போவதில்லை.


எந்திரன் உருவாக்கும் கல்வி

Tuesday, December 04, 2012

குழந்தைகள் 2- விதைக்குள் உறங்கும் சக்திகள்


நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் இன்னமும் கலங்கலாக என் நினைவில் இருக்கின்றது. கொண்டு போய் சேர்த்தார்கள் என்ற வார்த்தையே தவறு. ஐந்து வயது ஆனதும் அக்காவுடன் அனுப்பி வைத்தார்கள். 

என் பள்ளிக்கூட ஆசிரியர் சீனிவாசன் அப்பா ஒரு முலையில் அமர்ந்திருந்தார். யாரு வீட்டு கொழந்த என்று கேட்டார். அக்கா அப்பாவின் பெயரை சொன்னார். பெரிய இலையில் நெல் பரப்பியிருந்தது.  என் கையைப் பிடித்து அந்த நெல்லில் அ போட வைத்து என்னை உள்ளே அனுப்பி வைத்தார். 

சுபம். 

அதன் பிறகு பள்ளி என்ற நதிப்பயணம் தொடங்கியது. வேறெந்த முன்னேற்பாடுகளும் முஸ்தீபுகளும் இல்லை. டவுசர், சட்டை கூட ஒரு மஞ்சள் பை. அதற்குள் ஒரு சிலேட்டு. உடைந்த குச்சி. இதை பல்பம் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் வீட்டில் இரட்டையரை பள்ளியில் சேர்க்கும் வயது வந்த போது ஒரு மாதம் முன்பாகவே அத்தனை முன்னேற்பாடுகளையும் அக்கறையுடன் செய்ய வேண்டியதாக இருந்தது.

பள்ளி திறந்த முதல் நாளில் அனுப்பவில்லை. திருப்பூரில் இருக்கும்  சரஸ்வதி கோவிலுக்கு அழைத்துச் சென்றோம். கல்விக்கென்று உருவாக்கப்படுத்தப்பட்ட அந்த தெய்வத்தின் கதையை அவர்களுக்குச் சொன்னோம். அது அப்போதிருந்த மனத்தின் தன்மையில் அக்கறை என்ற பெயரில் தொடங்கிய பயணம் அது. ஆனால் அவர்களைப் பொறுத்த வரையிலும் அதுவொரு ஜாலியான ரவுண்ட் போன சுகம். 

மறுநாள் இருவருக்கும் பள்ளிச்சீருடை அணிவித்து மாட்ட வேண்டிய மற்ற சமாச்சாரங்களையெல்லாம் மாட்டி அலங்கரித்து பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். ப்ரிகேஜி வகுப்பறையில் இரண்டு ஆசிரியைகள் இருந்தார்கள். ஒருவர் வயதானவர். மற்றொருவர் மிக இளமையாக இருந்தார். 

இருவரும் அங்கே செய்து கொண்டிருந்த பணி தான் என்னை அங்கே சிறிதுநேரம் நிறுத்தி வேடிக்கை பார்க்க வைத்தது. காரணம் அங்கே கொண்டு வந்து சேர்த்த எந்த குழந்தைகளும் அடங்குவதாக தெரியவில்லை. ஒரே கத்தல் கதறல். மூக்குச் சளி சிந்தி உள்ளே நடந்த களேபரத்தில் பல கூத்துக்கள் நடந்து கொண்டிருந்தது. 

நிச்சயம் நம்மாளுங்க தலை தெறிக்க ஓடி வரப் போகின்றார்கள் என்று காத்திருந்தேன். 

காரணம் வயதான ஆசிரியை  வகுப்பறையின் உள்ளே இருந்து கொண்டு அழும் குழந்தைகளை சமாதானம் செய்து கொண்டிருந்தார். மற்றொருவர் இரண்டு கதவில் ஒரு கதவை சார்த்தியபடி அம்மா அப்பாவை அனுப்புவதில் குறியாக இருந்து கொண்டு அடுத்து வரும் குழந்தைகளை உள்ளே அனுப்புவதில் கவனமாக இருந்தார். கதவை கெட்டியாக பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார். அவரின் சேலை தலைப்பை சில குழந்தைகள் இழுத்தபடி அழுதன. இருவரும் தடுமாறி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். 

என் அலுவலக வேலையை மறந்து விட்டு அங்கேயே சற்று நேரம் நின்று அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்.  பாதிக் குழந்தைகள் கத்திய கத்தல் அந்த மூடிய கதவைத் தாண்டி வெளியே எதிரொலித்தது. கதவின் இடையே தெரிந்த வெளிச்சத்தில் உள்ளே பார்த்தேன். 

ஆனால் நம்ம இரட்டையர்கள் இருவரும் அழவில்லை. ஆனால் அங்கே அழுது கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  ஒருவர் கண்களில் மட்டும் லேசாக கண்கள் கலங்கியதை தூரத்தில் இருந்து பார்த்த போது புரிந்து கொள்ள முடிந்தது. என் தலையை கதவிடுக்கின் வழியே கண்ட போது கூட அடம் பிடித்து வெளியே வர முயற்சிக்க வில்லை. 

எனக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது.  

பெண்னை கட்டிக் கொடுத்து மாப்பிள்ளையோடு அனுப்பும் போது பெற்றோருக்கும் எவ்வித மனோநிலை இருக்குமோ அந்த மனநிலை அப்போது எனக்கும் தோன்றியது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பாக வருகின்றது.  

முதல் இரண்டு வாரங்கள் நண்பகல் 12 மணி வரைக்கும் என்று சொல்லியிருந்தார்கள்.  அலுவலக பணியில் மறந்து போய்விடுவோம் என்று அலைபேசியில் அலாரம் வைத்துக் கொண்டு அடிக்காமல் இருந்து விடுமோ என்று அரைமணிக்கு ஒரு தரம் பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக 11.45க்கு டாண் என்று அந்த வகுப்பறையில் வாசலில் தவம் கிடந்தேன் என்று தான சொல்ல வேண்டும்.  

காரணம் இரட்டையரில் ஒருவரின் உடல் நலம் குறித்த அதிக அக்கறையில் அதிகம் கவனம் செலுத்திக் கொண்டிருந்த நாட்கள் அது. 

பள்ளி நேரம் முடிந்து. வெளியே வந்தவர்கள் முகத்தில் இருந்த புன்னகையைப் பார்த்த போது தான் எனக்க போன உயிர் திரும்பி வந்தது. பள்ளிக்குள் இருக்கும் அந்த சின்ன பூங்கா பக்கம் அழைத்துச் சென்று ஊஞ்சலில் ஆட விட்டு அன்றைய வகுப்பறை அனுபவம் குறித்து மெதுவாக கேட்டேன்.  மழலை மொழியில் கூறியது இப்போதும் நினைவில் இருக்கிறது.  

நாம தான் அ ஆவன்னா ஏபிசிடி எல்லாமே படிச்சாச்சுல்ல. அதாம்பா சொன்னாங்க என்றார்கள். கொண்டு போயிருந்த மீதியிருந்த திண்பண்டங்களை தின்று கொண்டே வண்டியில் ஏறினார்கள்.  அன்று தொடங்கிய இலகுவான இவர்களின் கல்வி பயணத்திற்கு நாங்கள் முன்னேற்பாடுகளுக்காக செலவழித்த காலம் ஏறக்குறைய மூன்று மாதங்கள்.

பள்ளியில் கட்டணம் கட்டி உறுதியானதும் பள்ளி குறித்து புரிய வைத்தோம். பள்ளியின் அருமையை விளக்கிச் சொன்னேன்.  பல படங்கள் அடங்கிய புத்தகங்களை ஆறு மாதமாக வாங்கி புத்தகங்களின் மேல் உள்ள ஆர்வத்தை உருவாக்கினோம். வீட்டில் எழுத கற்றுக் கொடுத்த போது நான் மட்டும் எழுத வைக்க வேண்டாம். நாலு வயதில் எழுத தேவையில்லை. பேச கவனிக்கத் தெரிந்தால் போது என்று அவர்கள் மேல் வலிய எதையும் திணிக்காமல் அவர்கள் போக்குக்கு அனுமதித்தேன்.  

எந்த புத்தகங்களை வாங்கிக் கொடுத்தாலும் மூன்று நாட்களுக்குள் அது கிழிக்கப்பட்டு கப்பல் போல ஏதோவொன்றை செய்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அலுவலக வேலை முடித்து வீட்டுக்குள் வரும் போதே வேறொரு புத்தகத்தை வாங்கி வந்து விடுவதுண்டு. பல புத்தகங்கள்.  ஆனால் ஒவ்வொன்றும் வாய் இருந்தால் கதறியிருக்கும். இரண்டு புத்தகங்கள என்று ஒவ்வொரு செலவும் இரண்டு இரண்டாக செய்ய வேண்டியிருந்தது. கடைசியில் அட்டையில் போட்ட படங்கள் அடங்கிய பாடங்களை வீட்டுக்கு கொண்டு வந்த சேர்த்த போது தான் ஒரு முடிவுக்கு வந்தது. அவர்கள் அதையே வைத்துக் கொண்டு விளையாட்டுப் பொருட்கள் வைத்துக் கொண்டு ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

எங்கள் மூச்சு சீரானது. 

நம்முடைய கல்வியின் முக்கியப் பிரச்சனையே இங்கு தான் தொடங்குகின்றது. படங்கள் மூலம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல வளர்ந்த பிறகும் பாடம் நடத்தும் போது அது எளிதாக மூளைக்கு கடத்தப்படுகின்றது. ஆனால் இந்திய கல்வியில் செயல்வழி கல்வியை விட எழுத்து வழிக் கல்விக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.  

வலிய திணிக்கும் போது வாந்தி பேதியாகிவிடுகிறார்கள். கல்வி என்பது கசப்பு மருந்து போல ஆகிவிடுகின்றது.  நன்றாக கவனித்துப் பாருங்கள். 

நாமும் படித்து வந்துள்ளோம். நம்முடைய குழந்தைகளும் படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  நம்மில் எத்தனை பேர்கள் பள்ளிக்கூட புத்தகங்களை கதை புத்தகம் போல விருப்பத்துடன் அணுகியிருக்கின்றோம். கடமைக்கு, பயத்துக்கு, கட்டுப்பாட்டுக்கு என்று ஏதோவொரு விதத்தில் தான் ஒவ்வொரு வகுப்பையும் கடந்து வந்துள்ளோம்.  அதுவே தான் இன்று குழந்தைகள் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கின்றது. 

தாய்மொழிக் கல்வி என்பது மாறி அந்நிய மொழி கல்வி என்ற போது இன்னமும் திகட்டல் அதிகமாகி விடுகின்றது.

இந்திய கல்வியில் மட்டுமல்ல கலாச்சாரத்தில் கூட விருப்பங்களை விட திணித்தல் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. மதிப்பெண்களுக்கு உள்ள மரியாதை மனதில் உள்ள கருத்துக்களுக்கு கிடைப்பதில்லை.  எதிர்ப்பு சக்தியை இழக்க வைத்துவிட்டு எதிராளிகளோடு போராட வேண்டிய கலையை இங்கே கற்றுக் கொடுக்கின்றார்கள். 

ஒரு பக்கம் முழுக்க பூச்சி பூச்சியாக வெறுமனே எழுத்துக்கள் மட்டுமே இருந்தால் எத்தனை பேர்கள் விரும்பி வாசிப்பார்கள். அதுவே படங்கள் இருக்கும் போது ஆர்வம் இயல்பாக உருவாகின்றது. ஆனால் இங்கே எழுத்துக்கள் மூலம் மட்டுமே அத்தனையும் புகட்டப்படுகின்றது.  மூளையில் உள்ள ந்யூரான்களில் விதைக்கப்படும் விதைகளை விட அதில் செலுத்தப்படும் கருத்துக்களை அடைகாப்பது தான் முக்கியம் என்று போதிக்கப்படுகின்றது.

தொடக்கத்தில் மனித இனம் வேட்டையில் தான் தனது  வாழ்க்கையை தொடங்கியது. அப்போது கலாச்சாரம் என்றொரு வார்த்தையே இல்லை. காலப்போக்கில் பொருளாதார வாழ்க்கைக்கு மாறிய போது தான் கலாச்சாரம் என்றொரு வார்த்தையும் இடையில் வந்து சேர்ந்தது. 

எல்லாமே மாறத் தொடங்கியது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு மனித இனம் மாறத் தொடங்கிய போதே அவரவர் விரும்பிய வகையில் சட்டங்கள் வளைக்கப்பட்டது.   சட்டமியற்றும் அதிகாரத்தில் இருந்தவர்கள் சூழ்ச்சி வலையை மறைமுகமாக வைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் உருவாக்கினார்கள். உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் தலைமுறை கடந்தும் பலரால் வெளியே வரமுடியாத அளவுக்கு சமூகத்தின் ஓரத்திற்கே செல்லக் காரணமாக இருந்தது. 

அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்டு காரணங்கள் கற்பிக்கப்பட்டது.  ஆனால் காலவெள்ளத்தில் ஒவ்வொன்றும் உடைபடவும் தொடங்கியது. வலியவர்கள் பிழைக்க முடியும் என்ற பொது விதி உயிர்பெறத் தொடங்கியது. உலகில் படைக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் மற்றவர்கள் வாழ்க்கையின் நலனுக்கே என்பதாக மாறியது.  கருத்துக்கள் அனைத்தும் பகிர்வதற்கே என்று தோன்றிய போது தான் நவீனங்கள் தங்களது வெளிச்சத்தை உலகத்தின் மேல் பாய்ச்சத் தொடங்கியது.  

விஞ்ஞானம் வளர்ந்தது. பலவற்றையும் வளர்த்தது. 

ஆனால் இன்று நாம் பார்ப்பது என்ன? 

வேடவர் சமூகத்தில் தொடங்கிய நமது பயணம் இன்று வேடர்களைப் போலவே நம்மை மாற்றியுள்ளது.தொடக்கத்தில் மனிதன் சிறு புள்ளியாக இருந்தான். வட்டம் தொடங்கியது. தொடங்கிய இடத்திற்கே தற்போது வந்து சேர்ந்துள்ளோம்.

சக மனிதனை, நாடுகளை சுய லாபத்திற்காக வேட்டையாடுதல் தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. இனம், மதம், மொழி, சாதி என்ற பெயரைக் கொண்டு வேட்டையாடத் தொடங்கி விட்டது. பொறாமை என்பது உள்ளே ஒழித்து வைக்கப்பட்டு அது வன்மமாக மாறியுள்ளது. அதுவே வாழ்க்கை சூத்திரம் என்ற அங்கீகாரத்தை பெற்றும் விட்டது.  

இறுதியில் இது தான் சமூகத்திற்கான தகுதியாகவும் மாறியுள்ளது.

அப்படியென்றால் இத்தனை காலம் மனித குலம் கடந்து வந்த பாதையில் ஒவ்வொருவரும் கற்ற கல்வி என்ன ஆச்சு?

காரணம் குறிப்பிட்ட மக்களுக்கு கல்வி என்பது ரத்தம் சதை நாளம் நரம்பு என்று அத்தனையிலும் ஊறிப்போய் அதனையே வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்வில் உயரத் தொடங்கினார்கள். கற்ற கல்விக்கும் அப்பாற்பட்டும் சிந்தித்தார்கள். உயர்ந்தார்கள். கல்வி சொன்ன பாதையை மட்டுமே நம்பினார்கள். 

ஆனால் கல்வியை அணியும் ஆடை போல, பூசும் பவுடர் போல பயன்படுத்திய அத்தனை பேர்களும் தானும் கற்க முடியாமல் தனக்குப் பினனால் வந்த தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்காமல் வன்மத்தை விதைத்து வகைதொகையில்லாமல் வன்முறையை அறுவடை செய்யத் தொடங்கினார்கள். 

கல்வியென்பது மனதில் மலர்ச்சியை உருவாக்க கூடியது. சிந்தனைகளை சிறகாக மாற்றக்கூடியது. இங்கே எத்தனை பேர்களுக்கு சிறகு முளைத்தது.?  இங்கே பலருக்கும் கற்ற கல்வி  எந்த மாறுதல்களையும் தந்துவிடவில்லை என்பது தான் ஒத்துக் கொள்ள வேண்டிய முக்கிய விசயம். வீழ்ச்சியைத் தர்ன் தந்துள்ளது என்ற போது கல்வியை குறை சொல்வீர்களா? கற்றுக் கொடுத்தவர்களை வசை பாடுவீர்களா?  யாரை குறை சொல்ல முடியும்.?

கல்வி என்பது பொதுவானது.  ஆனால் அதை அணுகும் விதம் தான் இங்கே முக்கியமானது. கடந்த 20 ஆண்டுகளில் நம் நாடு கல்வி ரீதியாக மிக பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை பாராட்டுரை போல சொல்லிக் கொள்கின்றோம்.  

ஆனால் தரமென்பது அதலபாதாளத்தில் தானே இருக்கிறது.

காரணம் என்ன?

செயல் முறைக் கல்வி என்பது செயலோடு கலந்தது. அது என்றுமே மறக்க முடியாத அளவில் நம்மை மாற்றி விடக்கூடியது. 

நம்மை நமக்கே உணர்த்தக்கூடியது. மற்றவர்களுக்கும் உணர்த்த வைத்து விடும். 

ஒவ்வொரு குழந்தைகளுக்குள் இருக்கும் சக்தியை எதைக் கொண்டு உங்களால் அளக்க முடியும்? . ஆலமரத்தின் வீரியத்தைப் போல தேக்கு மரத்தின் தகுதியைப் போல மாற வேண்டிய குழந்தைகள் எப்படி வளர்கின்றார்கள்?

தற்போதைய கல்வி முறையினால் மொட்டுப் பருவத்திலேயே கருகிப் போய் கனவுகளை மட்டும் விதைத்து அறுவடை செய்ய தயாராக இருக்கின்றோம். 

மனப்பாடமே முதல் தகுதி என்ற வரையறையில் தான் இங்கே சாதனை என்ற வார்த்தையே உருவாக்கப்படுகின்றது. ஆனால் வெறுமனே எழுத்துக்கள் மூலம் கற்றுக் கொடுக்கும் தற்போதைய கல்வியின் பலன் என்ன தெரியுமா?

அரிசி எந்த மரத்தில் வருகின்றது? என்று குழந்தைகள் கேட்கும் அளவிற்கு நாம் வளர்ந்துள்ளோம்.

தொடர்புடைய தலைப்புகள்

மிதிவண்டி வீரமும் சோகமும்

வீட்டு யுத்தமும் விடுபடாத மர்மங்களும்

Monday, December 03, 2012

குழந்தைகள் - பந்தம் வளர்க்கும் ஜீவன்கள்


விட்டு விடுதலையாகி.........

வாசிக்கும் பொழுதே நம் நரம்பில் ஒரு புத்துணர்ச்சி தோன்றுமே?

வானத்தில் பறக்கும் அந்த சின்னச்சிறு பறவையினங்களை பார்க்கும் போது நமக்குள்  உற்சாகம் சிறகடித்துப் பறக்கும். நம்  உள்ளுற உணர்வில் கலந்திருக்கும் கவலைகள் கூட காணாமல் போய்விடும். அந்த நிமிடத்தில் நம் மனதில் தோன்றும் படபடப்பில் நாமும் ஒரு பறவையாகவே மாறியிருப்போம்.   பல சமயம் கற்பனையில் பறந்திருப்போம். 

வெட்டவெளி ஆகாயத்தை அந்த சிறிய குருவிகள் அளந்து பார்க்கும் ஆச்சரியத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்கத் தோன்றும்.  கூடவே அருகே பறந்து செல்லும் பட்டாம்பூச்சியின் லாவகத்தில் நம்மை நாம் மறந்திருப்போம். 

தேடல்கள் தான் இந்த உலகை இயங்க வைக்கின்றது.  நம்முடைய தேவைகள் தான் தேடல்களை அதிகப்படுத்துகின்றது.

நிர்ப்பந்தங்கள் இல்லாத நிகழ்காலம் சுகமாக இருந்தாலும் அதுவே தொடரும் போது அலுப்பை தந்து விடுகின்றது.   எனக்கு போர் அடிக்குதுப்பா....... என்று சொல்பவர்களின் வாழ்க்கையை உற்று கவனித்துப் பாருங்கள்.

எந்த கலாரசனைகளும் அவர்கள் வாழ்க்கையில் இருக்காது. ரசனைகள் இல்லாத வாழ்க்கையை ரசிக்க முடியாது. .ருசிப்பதும் ரசிப்பென்பதும்  மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய காரியம். அவசர வாழ்க்கையில் வழியில் கேட்கும் ஒரு பாடல் கூட சிலருக்கும் ஆத்ம திருப்தியை உருவாக்கக்கூடியது. வாழ்க்கையில் ரசனை காணாமல் போன வாழ்க்கையில் தினந்தோறும் மிஞ்சுவது ரகளை மட்டுமே. 

ரசனைகளை விரும்பாதவர்கள் தங்கள் வாழ்க்கையை கனவுகளுக்குள் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.  ஆமை கண்ட வெந்நீர் சுகம் போல அதுவும் கூட ஒரு சமயத்தில் உண்மைகளை உணர்த்திவிடும்.  

நான் வாழ்வில் பட்ட கஷ்டமெல்லாம் நீ படக்கூடாதுடா........என்ற சோகத்தினைத் தான்  இங்கே பலரும் தங்களது குழந்தைகளுக்கு சோற்றுடன் சேர்த்து பறிமாறுகின்றார்கள். 

குழந்தைகளுக்கு வாழ்வில் இயல்பாக தோன்றும் கஷ்டங்கள் என்பது மலை போன்றது என்பதாக உருவகப்படுத்தப்படுகின்றது. உருவகம் உள்ளூற உருவாக்கப்பட்டு அதைக் கண்டு அஞ்சி எதிர்கொள்ள முடியாத அளவுக்கு வாழ பழக்கிவிடுகின்றார்கள்.

எதார்த்தம் என்பது இங்கே பலருக்கும் எட்டிகாயாக கசக்கின்றது. 

இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பவர்களால் எப்படி இருந்தாலும் நாம் எதிர்கொள்ள எப்படி இருக்க வேண்டும்? என்று யோசிக்க முடிவதில்லை. இது போன்ற சமயங்களில் தான் சாமி போன்ற ஆன்மீகம் உள்ளே வரத் தொடங்குகின்றது. கற்பனைகள் உருவகப்படுத்தப்பட்டு, அதுவே பயமாக மாற்றபட்டு ஆன்மீகத்தை தெரிந்து கொள்ளாமல் அன்பையும் பகிர்ந்து கொள்ளாமல் இடையில் நின்று போன வண்டி போலத் தான் பலரின் பயணமும் தடைபட்டுப் போகின்றது.

தப்பு என்றால் என்ன? என்பதைப் பற்றி விவரிப்பதை விட இதை எப்போதும் செய்யாதே என்பதால் ஒவ்வொருமுறையும் விதிகளை மீறுதல் என்பது இங்கே இயல்பாக நடக்கத் தொடங்குகின்றது. 

இது தான் இங்கே பிரச்சனையின் தொடக்கம். 

நாம் விரும்பும் கனவுகளைப் போல நம் அருகே உயிருள்ள கனவாக வளர்பவர்கள் நம் குழந்தைகளே. .  

நம் விருப்பம், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என்ற ஏதோவொரு வடிவத்தில் குழந்தைகளே நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள் என்பதை உணர்ந்து இருக்கின்றீர்களா?

அவர்களைப் பற்றி மட்டுமே நாம் இனி தொடர்ந்து  பேசப் போகின்றோம். காரணம் அவர்களுக்காகத் தானே நாம் வாழ்கின்றோம். 


ஆனால் நாம் வாழ்க்கையை பார்ப்பதற்கும் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களை நாம் உணர்வதே இல்லை. இந்திய கலாச்சாரத்தில் உள்ள திருமண பந்தம் என்பது சாவு வரைக்கும்  இரண்டு தண்டவாளங்கள் போலத்தான் உள்ளது.

இரண்டு மனங்கள் இணையும் வைபோகம் என்று சொன்னாலும் உடல் ரீதியாக இணைந்து உள்ள ரீதியாக இணைய முடியாமல் தண்டவாளம் போலத்தான் இங்கே பலரின் வாழ்க்கையும் இருக்கின்றது. பிரியவும் முடியாமல் புரிந்து கொள்ளவும் முயற்சிக்காமல் மன உளைச்சலோடு தான் முக்கால்வாசி பேர்களின் மூச்சும் இறுதியில் போய்ச் சேர்ந்துவிடுகின்றது.  ஆனால் குடும்ப வாழ்க்கை பயணத்திற்கு இரண்டு தண்டவாளமும் தேவை. 

இந்த தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் கட்டைகள் போலத்தான் குழந்தைகளும் இருக்கிறார்கள். திருமணம் முடிந்து பத்து வருடத்திற்குள் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாமல் நடத்தும் வாழ்க்கையென்பது ஏறக்குறைய  நரக வாழ்க்கை.

புரிந்து கொள்ளாமல், விட்டுக் கொடுக்காமல் அவரவர் கொண்ட கொள்கைகள் அத்தனையும் குழந்தைகளை தாக்கி அது அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றது.

இந்தியாவில் பலரும் இப்படித்தான் வாழ்கிறார்கள். இதுவே தன்னளவில் சரியென்று உரத்துச் சொல்கிறார்கள். சிலர் மட்டுமே குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இணைய முடியாத போதிலும் பயணத்திற்கு தேவையாய் இருப்பதால் இந்திய கலாச்சாரத்தில் குழந்தைகளின் வாழ்க்கையென்பது முக்கியமானதாக இங்கே கருதப்படுகின்றது. 

உன்னை பெத்து வளர்த்து ஆளாக்கி....... என்ற புலம்பலுக்குக் காரணமும் இது தான். 

அதிகப்படியான ஆசைகள் தான் அக்கறை என்ற பெயரில் இங்கே வெளிப்படுகின்றது.

ஆனால் குழந்தைகளுக்கும்  ஒரு மனமுண்டு  என்பதை எளிதில் மறந்து விடுகின்றோம். அவர்களுக்கான சுதந்திரம் என்பதை மாற்றி கட்டுப்பாடு என்ற நான்கு எல்லைக்குள் கொண்டு வந்து நிறுத்துகின்றோம். என் கட்டுப்பாட்டுக்குள் நீ என்பதாக கொண்டு வந்து விடுகின்றோம்.

நல்ல வளர்ப்பு என்ற வார்த்தையை மனதில் கொண்டு வன்முறையை திணிக்கின்றோம். நாம் குழந்தையாய் இருந்த போது கிடைக்காத விசயங்களை மனதிற்கு வைத்துக் கொண்டு இதையே திரும்பத் திரும்ப செய்கின்றோம்.   நாமும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிப்பதில்லை.  குழந்தைகளையும் விடுவதில்லை. 

இந்த குழந்தைகளின் சுதந்திரத்தை நாம் பேசலாம்.  

இங்கு பாதிக்கும் மேற்பட்டவர்கள் சுதந்திரம் என்பதை தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

தங்கள் வாழ்க்கையே குழந்தைகளின் சுகத்திற்காகத்தான் என்கிறார்கள். நான் அவனுக்கு என்ன குறைவைத்தேன் என்று மூக்கை சிந்துகிறார்கள். நான் மூச்சை பிடித்துக் கொண்டே வாழ்வதே அவனுக்காகத்தானே என்கிறார்கள். 

ஆனால் எந்த குழந்தைகளும் அப்படி கேட்பதிலலை என்பது தான் நாம் மனதில் குறித்துக் கொள்ள வேண்டிய விசயம். ஆனால் காலம் காலமாக இங்கே இப்படித்தான் பண்டமாற்று போல சுதந்திரமும், சுகமும் பறிமாறப்படுகின்றது. கணவன் மனைவி, அம்மா அப்பா, பெற்றோர் குழந்தைகள் என்று சுழற்சி போல நீ கொடு நான் தருகின்றேன் என்பது போல இங்கே ஒவ்வொன்றும் விலை பேசப்படுகின்றது. பேரமென்பது வெளியே தெரியாது. அதற்கு பாசம் என்ற பூச்சு பூசப்படுகின்றது. 

ஆனால் இந்த குழந்தைகளின் வாழ்க்கையை நம்மால் வாழ்ந்து விட முடியாது என்றாலும் வாழ்ந்ததை, பார்த்ததை, கேட்டதை பகிர்ந்து கொள்ள முடியும் தானே?

தற்போது சுதந்திரம் என்பது எந்த இடத்திலும் அளவாய் கொடுக்கப்பட வேண்டிய ஒன்று என்று நம்ப வைக்கப்படுகின்றது. சுதந்திரம் என்பதன் முழுமையான புரிதல் இருந்தால் அங்கே அளவு தேவையிருக்காது. புரிதல் இல்லாத இடங்களில் பயமும் இயல்பாகவே உருவாகின்றது. 

உண்மையான சுதந்திரம் என்பதன் அர்த்தத்தை ஒவ்வொரு பள்ளிக்கூட வாசலில் நின்று கவனிக்கும் வாய்ப்பிருந்தால் உங்களுக்கு முழுமையாக புரியும். 

விட்டு விடுதலையாகி என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

சுதந்திரத்தைப் பற்றி நாம் பேச அதனை முழுமையாக  அனுபவித்து இருந்தால் தானே புரியும்.?

வகுப்புகள் முடிந்து விட்டது என்று மணியடிக்கும் ஓசைதான் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கோவில் மணியோசை போல மகிழ்ச்சியை தரும் போல. அழுத்தி வைக்கப்பட்டவர்கள் அத்தனை பேர்களும் அதிலிருந்து விடுபட்டதும் ஓட்டமும் துள்ளல் நடையுமாக பெற்றோருடன் செல்லும் காட்சியை பார்க்கும் போதெல்லாம் நம்முடைய கல்வி குறித்து அதிகம் யோசிக்க முடிகின்றது.

மன உளைச்சல் அதிகமாகும் போது குழந்தைகள் விளையாடுவதை தூர இருந்து கவனித்துப் பாருங்கள்?  அர்த்தமற்ற அவர்களின் உரையாடலில் ஆயிரம் வாழ்க்கை சூத்திரங்கள் நமக்கு கிடைக்கும். கவலையைக் கண்டு, கவலையோடு வாழ்ந்து கழிக்கும் ஒவ்வொரு தினத்தின் அவலத்தினையும் மறக்க உதவும்.

குழந்தைகளும் பல சமயம் ஆசிரியர்களே. நாம் தான் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆவலாய் பறக்கின்றோம்.  முடிந்தவரைக்கும் திணிக்கின்றோம்.  ஆனால் அளவு தெரியாமல் அல்லாடவும் செய்கின்றோம்.

இங்கே இன்னமும் மாறுபட்ட சிந்தனைகள் கொண்டு வாழும் கண்வன் மனைவி அநேகம் பேர்கள். ஆனால் இறுதிவரையிலும் பந்தம் அறுபடாமல் வாழ வைத்திருப்பதும் இந்த குழந்தைகளே. குழந்தைக்காகத்தான் பொறுத்துக் கொண்டு இருக்கேன் போன்ற வார்த்தைகளை நீங்கள் சர்வசாதாரணமாக கேட்டுருக்கலாம். 

ஆனால் ஒவ்வொரு குடும்ப போர்க்களத்தை முடித்து வைப்பதும் இந்த குழந்தைகளே. உராய்வு அதிகமாகி சப்தம் எழும் எந்திரத்தின் ஆரோக்கிய காவலனாக இந்த குழந்தைகளே இருக்கிறார்கள்.

குடும்பத்தில் உருவாக்கும் பிரச்சனைகளை விட குழந்தைகள் உருவாக்கும் போர்க்களம் தான் வித்தியாசமானது. கத்தியின்றி, ரத்தமின்றி நடக்கும் இவர்களின் போர்க்களத்தில் கடைசி வரைக்கும் சுவராசியத்திற்கு பஞ்சமிருக்காது.

வீட்டுக்குள் குழந்தைகளால் உருவாக்கும் போர்க்களத்தை தினமும் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். 

நீங்கள் ரசித்துருக்கீறீர்களா? 

ஒரு குழந்தை மட்டும் இருக்கும் வீட்டில் இந்த வாய்ப்பு ரொம்பவே குறைவு. போட்டி போட ஆளிருக்கும் போது உருவாகும் களம் தான் முக்கியம். 

இங்கு தினந்தோறும் இவர்கள் உருவாக்கும் ஒவ்வொரு களத்திலும்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் தான் கடைசியில்  சிரிப்பு நடிகராக மாறிப் போகின்றேன். அழுகை காட்சிகள் பல உண்டென்றாலும் அதுவும் கடைசியில் வயிறு வலிக்கும் சிரிப்புக் காட்சியாகவே மாறிவிடுகின்றது..   


அலுவலகமோ அல்லது வெளியே எங்கு இருந்தாலும் கூட மதிய சாப்பாட்டை பல சமயம் மூன்று மணிக்கு மாற்றி வைத்துக் கொள்வதுண்டு. காரணம் அந்த சமயத்தில் தான் பள்ளி விட்டு மூவரும் வரும் நேரம். கிடைக்கும் அந்த ஒரு மணி நேரத்திற்காக வீட்டில் ஆஜராகி விடுவேன். இவர்கள் வீட்டுக்கு வருவதற்கு  ஐந்து நிமிடத்திற்கு முன்பே வீட்டில் தயாராக இருப்பேன். 

ட வடிவில் உள்ள சந்தின் முனையில் இருக்கும் வீடென்பதால் இரண்டு பக்கத்திலும்  ஆட்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள்.  வீட்டுக்கருகே பள்ளி இருப்பதால் மூன்று நிமிடங்களில் வீட்டுக்கு வந்து விட முடியும். ஆனால் சில சமயம் இவர்கள் வந்து சேர பத்து நிமிடங்கள் கூட ஆகும். காரணம் தெருவில் மூவருக்குள்ளும் ஏதோவொரு பஞ்சாயத்து  நடந்து கொண்டிருக்கின்றது என்று அர்த்தம். ஒருவர் மற்றொருவரை சீண்ட பாதியில் அந்த பயணம் தடைப்பட்டு போயிருக்கும். 

ஒரு நாள் கூட மூவரும் அமைதியாக வீட்டுக்கு வந்ததே இல்லை. வரும் வழியில் அல்லது வந்த பிறகு என்று இந்த களம் விரிவடையும். 

இவர்களின் குணாதிசியம் தெரிந்தே வாசலில் நின்று கொண்டேயிருப்பேன். எப்போது வந்து சேருவார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் நாம் தயாராக இருக்க வேண்டும். என் தலையை வாசலில் பார்த்து விட்டால் ஓ..... ...வென்று கத்திக் கொண்டு ஓடி வருவார்கள். 

முதுகில் சுமக்கும் பாரங்கள் ஒரு பக்கம் இழுக்க, கையில் வைத்திருக்கும் கூடை மறுபக்கம் தள்ள ப்ரேக் பிடிக்காத வண்டி போல குலுங்கிக் கொண்டு வருவார்கள். பின்னால் வரும் வீட்டுக்காரம்மா அலுத்துப் போய் மூச்சு வாங்க வந்து கொண்டிருப்பார்.

ஓடி வரும் போதே எனக்கு பதைபதைக்கும். தடுமாறினால்? என்று யோசிக்கும் போதே நான் இருக்கும் பாதி நிர்வாணத்தில் ஓடிப்போய் வாங்க முயற்சிப்பேன். குதியாட்டத்தில் நிற்க முடியாமல் தடுமாறி மூச்சிறைத்து என் கையை விடுவித்து மீண்டும் வீட்டை நோக்கி ஓட நான் தடுமாறி நிற்க  சிட்டுக்குருவி போல பறப்பார்கள். 


வீட்டுக்குள் இருக்கும் இரும்பு கதவு முன்னால் வந்தவர் தள்ளிய தள்ளலில் சுவற்றில் முட்டி  சப்தத்தை உருவாக்கும். பக்கத்து விட்டுக்காரர் பார்த்துவிட்டு நகர்ந்து விடுவார். முதுகில் சுமந்து வந்த பை வாசலின் உள்ளே பறக்கும். மூச்சிரைப்போடு மற்றொருவர் பையை அடுத்தவர் பிடித்து தள்ள அது மற்றொருபுறம் ஜிப் திறந்து போய் புத்தகங்கள் சிதறும். 

அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கும்.

நான் தான் முதலில்........... இல்லையில்லை நான் தான் முதலில் .............என்று வேகம் காட்ட காட்டாறு வெள்ளம் அங்கே இயல்பாக உருவாகும். காலில் மாட்டியிருக்கும் காலணிகள் கதறும். அதில் உள்ள கொக்கிகள் இவர்கள் படும் அவசரத்திற்கு ஒத்துழைக்காது. சில சமயம் பிய்ந்துப் போய் சிரிக்கும். நாம் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். எதுவும் பேசிவிட்டால் வெள்ளம் நம்மை நோக்கி தாக்கும் ஆபத்துண்டு. 

இருவர் தான் இப்போது உள்ளே நுழைந்திருக்கிறார்கள். மீதி ஒருவர் தெருவில் இருக்கின்ற மரத்தில் உள்ள இலைகளை, கண்ணில் தெரிகின்ற பூக்களை சேகரித்துக் கொண்டே வருவார். காரணம் அவர் மூட்டைகளை அம்மா சுமந்து கொண்டு வருவதால். ................

சுதந்திரத்தை நாங்கள் சொன்னதும் இல்லை. அவர்கள் புரிந்து கொண்டதும் இல்லை. காரணம் அவர்கள் வாழ்க்கையில் எதற்கும் தடையிருந்தால் தானே சுதந்திரம் தேவை?  தீர்மானிக்க கற்றுக் கொடுத்த பிறகு திரும்புவும் சொன்னால் அறிவுரை. நாமே கடைபிடித்து காட்டினால் அதற்குப் பெயர் பாடம்.  அவர்கள் எங்களுக்கு சொல்லும் பாடங்களையும் அவர்கள் சமூகத்தில் கற்றுக் கொண்டிருக்கும் பாடங்களைப் பற்றியும் தான் நாம் இனி பேசப் போகின்றோம்.

தொடர்ந்து நடைபயில்வோம்..................

தொடர்புடைய மற்ற தலைப்புகள்


Sunday, June 03, 2012

மிதி வண்டி - வீரமும் சோகமும்


 மூத்தவளுக்கு பள்ளி செல்ல மிதி வண்டி வேண்டுமாம். 

கடந்த நாலைந்து வாரமாக வீட்டுக்குள் ஒரே அமளி.  நான் கண்டு கொள்ளவே இல்லை.  காரணம் பள்ளிக்கும் வீட்டுக்கும் இருக்கும் தொலைவு ஐநூறு மீட்டர் மட்டுமே.  மூன்று வருடங்களுக்கு முன்பே வாங்கிய வண்டி ஒன்று வேறு வீட்டுக்குள் இருக்கிறது.  ஆனால் மூன்று பேர்களின் கைங்கர்யத்தில் அது பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது.  பிரித்து மேய்ந்து விட்டார்கள்.  முக்கிய சாலைகள் தவிர அத்தனை சந்துகளிலும் இவர்களின் ராஜ்யங்களை நடத்தி முடித்து விட்டார்கள்.

தற்போது இருவர் மிதி வண்டியை அநயாசமாக கையாள்கிறார்கள். ஒருவருக்கு மட்டும் இன்னும் கைகூடவில்லை. மெதுவாகவே கற்றுக் கொள்ளட்டும் என்று நானும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இப்போது மூத்தவளின் எதிர்பார்ப்பு வேறு விதமாக உள்ளது.

நான் மிதி வண்டியை பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். புது வண்டி தான் வேண்டும் என்ற கோரிக்கையுடன் நச்சரிக்கத் தொடங்கினாள்.. என்னுடன் படிக்கும் தோழிகள் பலரும் எடுத்து வருகிறார்கள்.  நானும் இந்த வருடம் எடுத்து வரப்போவதாக சொல்லி விட்டேன் என்று வீட்டின் நிதி மந்திரியிடம் சொல்லி வைக்க அதுவே இப்போது விஸ்ரூபமாக வந்து நிற்கிறது.

இந்த பிரச்சனையை மனைவி தான் தொடங்கி வைத்தார். இப்போது மாட்டிக் கொண்டு முழிக்கிறார்..  அசந்தர்ப்பமாக பள்ளி இறுதித் தேர்வின் போது கொடுத்த வாக்குறுதி இது.  இப்போது புயலாக தாக்கிக் கொண்டு இருக்கிறது. 

அம்மா நீங்க சத்தியம் பண்ணி கொடுத்துருக்கீங்க.  மீற மாட்டீங்க தானே என்றவளை பார்த்துக் கொண்டே வீட்டின் உள்ளே நுழைகின்றேன்.  மூத்தவள் மனைவியுடன் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறாள். கடந்த ஒரு வாரமாகவே நினைவூட்டிக் கொண்டு இருந்தவள் இப்போது அடிதடி இறங்கி விட அபயக்குரலுடன் மனைவி என்னருகே வந்து விட்டார்.

காரணம் பள்ளி நாளை திறக்கப் போகிறார்கள்.  இப்போது அதற்கான செலவு செய்யும் நேரம்.

கீழ் சபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு என் பார்வைக்கு வந்து நின்றது.  நானும் கடத்திக் கொண்டே வந்து விட தற்போது உச்சகட்ட போராட்டமாய் வீட்டில் சட்டம் ஒழுங்க கெட்டு 144 தடையுத்தரவு போடும் அளவுக்கு மகளின் வார்த்தைகளை மனைவியால் எதிர்கொள்ள முடியாமல் என்னை உதவிக்கு அழைக்கத் தொடங்கினாள்.

மகளிடம் ஒரு விதமான சாமர்த்தியம் உண்டு.  ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் முதலில் அறிவிப்பாக வெளியிடுவாள்.  பிறகு சந்தர்ப்பம் பார்த்து நினைவூட்டுவாள்.  பிறகு எப்போது வாய்ப்புண்டு என்பதை நோட்டம் விட்டுக் கொண்டு அதற்கான நேரத்தை வாக்குறுதியாக பெற்றுக் கொள்வாள்.  அந்த நேரத்திற்காக காத்திருந்து வாக்குறுதியை பெற்றுக் கொண்டு கைபேசியில் நினைவூட்டலாக பதிந்து வைத்து விடுவாள்.  முட்டாள்தனமாக நாங்களும் மறந்து விடுவாள் என்று நினைத்துக் கொண்டே இருப்போம்.  அவளும் மறந்து விடுவாள்.  ஆனால் கைபேசி ஒலி அவளுக்கு மறுபடியும் நினைவூட்டி விடும்.  மறுபடியும் ரணகளம் தொடங்கும். 

அந்த ரணகளம் தான் நடந்தது.

நான் தாமதப்படுத்தியத்திற்கு வேறு சில காரணங்களும் இருந்தது. முக்கியமாக பள்ளியில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை பள்ளிச் சீருடையை மாற்றுகிறார்கள்.  இது என்ன யுக்தியோ தெரியவில்லை. சுளையாக ஒரு பெரிய தொகையை இறக்க வேண்டியுள்ளது. சாதாரண உடைகள் அது தவிர குறிப்பிட்ட நாளைக்கு என்று தனியான உடைகள்.  இது தவிர விளையாட்டு என்பதற்கு அதற்கு தனியாக ஒரு உடை. பள்ளியில் தான் வாங்க வேண்டும்.  

அதைவிட கொடுமை இந்த சீரூடைகளை தைப்பவரிடம் கொடுத்து அதை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பது. மகா சவாலான விசயமாக இருக்கிறது. காரணம் பள்ளிக்கு அருகே இருக்கும் அவரிடம் மலை போல குவிந்து கிடக்கும் மொத்த சீரூடைகளையும் பார்க்கும் போது அவரிடன் உழைப்பும், வருமானமும் மனக்கண்ணில் வந்து போனது. உத்தேச கணக்காக அவருக்கு சுமாராக இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் ரூபாய் வருமானம்.  

இயல்பான வருமானம் உள்ளவர்கள் அத்தனை பேர்களும் கதறிக் கொண்டு தான் உடைகளை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.

இது போன்ற சமயங்களில் தான் என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் தபால் பெட்டி டவுசரோடு பள்ளிக்குச் சென்ற காலம் நினைவுக்கு வந்து போகின்றது.

மற்ற பள்ளிகளை விட ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பள்ளிக் கட்டணம் இருக்கிறது.  நன்கொடை என்பது இல்லை.  தேவையில்லாத அக்கிரம செயல்பாடுகள் எதுவுமே இல்லை.  இருந்த போதிலும் வருடந்தோறும் குறிப்பிட்ட வகையில் பள்ளிக்கட்டண தொகையை ஏற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  இது எதனால் என்று புரியவே இல்லை.  ஆனால் உள்ளே பணிபுரியும் எந்த ஆசிரியர்களுக்கும் அவர்களின் ஊதியத்தை ஏற்றியதாக தெரியவில்லை.

எல்லா அப்பாக்களின் வாழ்க்கையுமே ஏறக்குறைய பட்ஜெட் பத்மநாபன் வாழ்க்கை தான்.  அதில் எந்த சந்தேகமும் இல்லை.

எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டு மகளின் கோரிக்கையை ஆதரிக்கவும் இல்லை. ஏற்றுக் கொள்ளவும் இல்லை. ஆனால் சூழ்நிலை வேறு விதமாக இருந்தது. வீட்டுக்ள் நடந்து கொண்டிருந்த உரையாடல்களை கவனித்துக் கொண்டே எதுவும் பேசாமல் சட்டையை கழட்டி விட்டு மெதுவாக குளியலறைக்கு நகர முற்பட்ட என்னை நான்கு பேர்களும் ரவுண்டு கட்டி நகர விடாமல் தடுத்தார்கள். இல்லை என்று சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டு என் பாணியில் சமாளிக்க இரண்டு வாரத்திற்கு முன்பு ஒரு அதிரடி திட்டத்தை அமல்படுத்தினேன்.

ஒவ்வொருவரும் அடுத்த ஒரு வாரத்திற்கு என்ன் செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு கொடுத்தேன். 

குறிப்பாக மூன்று பேர்களுக்குள் சண்டை வரக்கூடாது.  தினந்தோறும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.  குறைந்த பட்சம் ஒரு முறையாவது தியானம் செய்ய வேண்டும் என்பது போன்ற பல கட்டளைகள்.,  அப்படா.... இப்போதைக்கு தப்பித்தாகி விட்டது என்று நகர்ந்தேன்.

ஆனால் என்ன ஆச்சரியம்

ஒவ்வொரு நாளும் அட்சரம் பிறழாமல் எல்லாவற்றையும் கடைபிடித்து அசரடித்து என்னை கலங்கடித்தார்கள்.  அத்துடன் மற்றொரு காரியத்தையும் கூடவே செய்தார்கள்.  அலுவலகத்தில் இருக்கும் எனக்கு குறுஞ்செய்தி மூலம் இதை முடித்து விட்டோம் என்ற சாட்சி கடிதம் வேறு. எனக்கு புரிந்து விட்டது.  இந்த வாரம் மாட்டிக் கொள்ளப் போகின்றோம் என்று.

சென்ற வாரம் கடைக்குச் சென்ற போது ஞாயிறு என்பதால் கடை மூடியிருந்தது. மூத்தவளின் மூஞ்சி சுருங்கிப் போனதை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன். ஒரு பொருளை அடைவதற்கு முன்பு இருக்கும் அவளின் முஸ்தீபுகளை குறித்துக் கொண்டேன். 

இன்றைய தின ஞாயிற்று கிழமைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லைஇன்று காலையில் பக்குவமாக நடந்து மூவரும் சேர்ந்து அதே கடைக்கு அழைத்துச் சென்றார்கள்.  எப்போதும் போலவே பூட்டியிருந்தது.  அப்பா இங்கே வாங்கப்பா என்று நாலைந்து கடைகள் தாண்டி மற்றொரு மொத்த கொள்முதல் கடைக்கு அழைத்துச் சென்ற போது தான் எனக்கு புரிந்தது.  ஏற்கனவே வீட்டுக்கருகே இருந்தவர்களிடம் விசாரித்து திட்டமிட்டு இங்கே கொண்டு வந்து நிறுத்திய விதம்.

அமைதியாய் பணத்தை கட்டி விட்டு உள்ளே கவனித்தேன். 



எந்த வகையான வண்டி, என்னென்ன வசதிகள் அதில் இருக்க வேண்டும் என்று உள்ளே மிதி வண்டியை கோர்த்துக் கொடுப்பவர்களிடம் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அங்கே இருப்பதை மூவருமே கண்டு கொள்ளவேயில்லை என்பது தான் யான் பெற்ற இன்பம்.

Thursday, December 29, 2011

தினந்தோறும் மலரும் பூக்கள் 2011



கடந்து போன வாழ்க்கையில் சென்னையில் ஒரு நள்ளிரவு மட்டும் இந்த ஆங்கில புத்தாண்டு வரவேற்பை மெரினா கடற்கரை கூட்டத்தில் கரைந்து போய் ரசித்தேன். ஆராவாரமும், ஆர்ப்பட்டமும் அள்ளித் தெளித்த கோலமாய் கடற்கரை மணலில் வரவேற்ற தலைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. 

அந்த கூட்டம் இன்று வரை கண்களுக்குள் நிற்கிறது. கடல் அலையில் கால் நனைத்து மச்சினன் கைபிடித்து வாழ்க்கையை தேடிக் கொண்டிருந்த போது அந்த இரவு இனம் புரியா மகிழ்ச்சியைத் தந்தது.  வாழ்க்கை நகர்ந்தது,

இயல்பான வாழ்க்கையின் சூத்திரங்களின் சூட்சமங்களை கற்றுக் கொள்ளத் தெரியாத வாழ்க்கை திருப்பூருக்கு நகர்த்தியது. 

வாழ்க்கை அதன் உண்மையான அர்த்தங்களை அறிமுகம் செய்ய ஆரவாரங்கள் பின்னுக்குச் சென்று அலையில்லா கடல் போல அமைதியும் வந்தது. ஒவ்வொரு வருடத்தின் கடைசி இரவும் வந்தபடியே தான் இருக்கின்றது.. அதற்கு பிறகு வந்த ஒவ்வொரு வருடமும் ஆழ்ந்த உறக்கத்தின் ஆழத்தை காட்டிக் கொண்டிருக்கும். விடிந்து பார்க்க நேற்றைய பொழுதுகள் மறந்து இன்றைய தேவைகளுக்காக மனம் ஓடத் தொடங்கி விடுகின்றது..
எந்த வருடத்தின் தொடக்கத்திலும் நான் எந்த சபதங்களையும் எடுப்பதில்லை.
காரணம் அதுவொரு சடங்காகத்தான் முடியும்.  மீனவனின் வாழ்க்கைக்கும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் பெரிதான வித்யாசங்கள் இல்லை. அங்கே தண்ணீர். இங்கே கண்ணீர்.

அங்கே எல்லைப் பிரச்சனை.  இங்கே அரசாங்கத்தின் கொள்கை பிரச்சனை.

ஆனால் இணையம் என்ற இந்த உலகம் அறிமுகமானதும் என்னுடைய வாழ்க்கை பலவிதங்களிலும் மாறியுள்ளது என்பதை ஒவ்வொரு கணமும் யோசித்து பார்த்துக் கொள்வதுண்டு. 

ஏன் எழுத வந்தோம்? என்பதும் எதற்காக எழுதிக் கொண்டிருக்கிறாய்? என்ற கேள்வியும் சக்களத்தி சண்டையாய் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

நள்ளிரவு தாமதமாக வந்தாலும் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் உருவங்களை விளக்கு போட்டு ரசிக்கும் போது மனதில் வார்த்தைகளாக வந்து மோதும். அப்பா ஏன் இன்னும் வரவில்லை? என்ற கேள்வியை கேட்டவளுக்கு அடுத்தவள் பதில் சொல்ல அவர்களின் இரவு உறக்கத்தின் தொடக்க சண்டைகள் தொடங்கும். 

வீட்டுக்குள் நுழைந்ததும், என்ன நடந்தது? என்று கேட்க எப்போதும் போல மனைவியின் விவரிப்பில் சிறிது புன்னகை என்னுள் எட்டிப் பார்க்கும். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பெற்ற பொம்மைகள் தள்ளிக்கிடக்க கோட்டோவியமாய் வினோத வடிவில் சுருக்கிக் கொண்டு படுத்துறங்கும் அவர்களின் தூக்கத்தை பார்த்து மனதில் வார்த்தைகள் வந்து வந்து போகும். 

இந்த தலையணை தான் வேண்டும் என்று போராடிப் பெற்ற போராட்டங்கள் அர்த்தமில்லாமல் ஏதோவொரு மூலையில் கிடக்கும். அவர்களின் தலையைச் சுற்றிய போர்வைகள் மூச்சு முட்டுமே என்று நகர்த்த முற்படும் போது அவர்களின் அனிச்சை செயல்கள் நமக்கு ஆச்சரியத்தை வரவழைக்கும். 

அதுவே எழுதத் தூண்டும் காரணியாகவும் பல சமயம் அமைந்து விடும். 

பலசமயம் அதிகாலை விழிப்பு அவஸ்த்தையாய் வந்து விடும். காரணம் அருகில் படுத்தவள் புரண்டு வந்து நெஞ்சுக்குள் புதைந்து விட திரும்ப முடியாத உடம்பில் கோழிக்குஞ்சு சுகத்தை ரசித்துக் கொண்டே எழுந்து விடுவதுண்டு. 

பல சமயம் அலுப்பாக இருக்கும். அவர்களின் கலைந்த ஆடைகளை கவனித்து போர்வையை போர்த்தி விட்டு வெளியே வந்து கதவு திறந்தால் குளிர் காற்று வரவேற்கும். கூடவே பக்கத்து வீட்டு பஜனை சப்தம் காதில் வந்து மோதும். அடிவாங்கி திரும்பி வந்துகொண்டிருக்கும் தமிழர்களைப் பற்றி கவலைப்படாமல் ஐயப்பனை காண வாருங்கள் என்று பாடிக் கொண்டிருப்பவர் இப்போது எங்கே இருப்பார் என்று யோசிக்க வார்த்தைகள் வந்து வந்து மோதும்.
விடியாத பொழுதில் சாலையில் ஆள் அரவமிருக்காது.  பகலில் பணம் துரத்தச் செல்லும் பறவைகள் இப்போது பாதுகாப்பான வீட்டுக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். 

நடமாட்டம் இல்லாத சந்தும், ஆய்த்தப்பணியில் இருக்கும் பறவைகளும் ஏதேதோ கவிதை சொல்லும். புலராத பொழுதுகள் புதிதாய் தெரியும். காணும் காட்சிகளை வார்த்தைகளாக கோர்ப்பதற்குள் பக்கத்து வீட்டு மனிதன் எப்போதும் போல தனது பயணத்தை தொடங்குவார். டாஸ்மாக் கடையை நோக்கி செல்லும் பயணம் அது. 

அவரின் பயணத்தை பார்த்துக் கொண்டே மதுவால் அழிந்தவர்களின் பலரின் வாழ்க்கை நினைவில் வந்து தாக்கும். அழிந்து போன பல கோடி வர்த்தக ஜாம்பவான்களின் கதைகளை நினைக்கச் சொல்லும்.  பள்ளிக்குச் செல்லாமல் பாரம் சுமக்கும் அவரின் மூத்த மகன் முகம் மனதில் வந்து மோதும். . 

உருவமாய், உணர்வாய் கோர்க்க முடியாத எழுத்துக்கள் உள்ளே ஓடிக் கொண்டேயிருக்கும்.   அதிகாலையில் மடிக் கணினி உயிர் பெற உள்ளூரைப் பார்த்த மனம் உலகத்திற்கு தாவும்.  மூகமூடிகளும் மூச்சு முட்டும் விவாதங்களுமாக இணையப் பெருவழியில் படம் காட்டிக் கொண்டு இருப்பவர்களையும் பலசமயம் மனம் இனம் கண்டு கொள்ளும்.

ஏதோவொன்றை தேட, என்ன நடக்கிறது என்பதை அறிய உதவும் இந்த இணைய மேய்ச்சல் எனக்கு ஏராளமான ஆச்சரியத்தை விதைத்துக் கொண்டேயிருக்கிறது. 

எத்தனை மனிதர்கள்? எத்தனை நிறங்கள்? 

பாசாங்கு, படப்டப்பு, வன்முறை, எரிச்சல், ஏமாற்றம், குரோதம், பொதுப்புத்தி என்று துப்பிய எழுத்துக்களை பார்க்க படிக்க அங்கங்கே பயரேகைகளும் உள்ளங்கையில் இருக்கும் ரேகை போலவே படிந்துவிடுகின்றது.  விவாதங்கள் வீபரீதமாகி தனிப்பட்ட நபர்களின் வினோத உருவங்களை உள்வாங்கிக் கொண்டேயிருக்கும். படிக்கும் வார்த்தைகள் நம் மனதின் வலிமையை உணர வைத்துக் கொண்டேயிருக்கிறது.

பால்காரரின் சப்தம் மனைவியின் அன்றாட கடமையை தொடங்கி வைக்கும்.  தேநீரை உறிஞ்சிக் கொண்டே உள்வாங்கும் செய்தித்தாள்களின் சார்புத்தனமான கட்டுரைகள், செய்திகளைப் பார்த்து சலிப்பைத்தந்தாலும் குழந்தைகளின் முழிப்பு கதையில் அடுத்த அத்தியாயம் போல மாறத் தொடங்கும்.  அவர்களின் அவசர ஓட்டத்தின் என் சிந்தனைகள் மாறி அவர்களுடன் நாங்களும் ஓடத் துவங்குகின்றோம். .

அவர்களின் அவசர ஓட்டங்கள் ஒவ்வொன்று ஒவ்வொரு புதுக்கவிதையை தந்து கொண்டு இருக்கும்.  நான் முந்தி, நீ முந்தி என்று குளியறையில் நடக்கும் கூத்தில் உலகத்தில் நாம் ஓட வேண்டிய அவசரத்தை அவர்களின் அவசரம் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கும். இறுதியில் டார்வின் சொன்ன வலிமையானவர் குளித்துக் கொண்டிருக்க பக்கவாட்டில் அழுகை சத்தம் ஓங்காரமாய் ஒலிக்கும்.

வளர்ந்து கொண்டே இருக்கின்றோம் என்று உணர்த்தும் அவர்களின் துடுக்குத்தன பேச்சுகளில் உள்ளம் மகிழ்ந்தாலும் ஒரு மூலைக்குள் பேசியே நாட்டை ஆள வந்தவர்களின் தற்போதையை வாழ்க்கை நினைவலையில் நீந்தும். 

குளிக்க ஒரு போராட்டம், துவட்ட ஒரு போராட்டம் என்று அடுத்தடுத்து கதைக்களம் மாறிக் கொண்டேயிருக்கும். நடக்கும் பஞசாயத்தில் நான் தான் பலமுறை வாய் பேசதாக மன்மோகனாய் இருக்க வேண்டியதாக உள்ளது. அர்த்தப்பார்வையோடு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டேயிருப்பேன்.

கவனிக்கும் எல்லாவற்றையும் ஒரு கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.  அவசரத்தில் அவர்கள் மாற்றிப் போட்ட ஜட்டிகளின் வினோத வடிவம் வீட்டில் சிரிப்பலையை பரப்புகின்றது. . 

பவுடர் பூச்சு அதிகம் பெற்ற அவர்களின் முகத்தின் வழியே நான் பார்த்த பழைய நாடக அவதாரங்கள் வந்து போகும். பள்ளிக்கருகே வீடென்பதால் இவர்களுக்கு இப்போதெல்லாம் படிப்பதற்கு நேரம் கிடைக்கிறது. ஆனால் படிப்பதை விட்டு பலதையும் பேச சந்தைக்கடை போல உள்ளூர் முதல் உலகம் வரை மிதிபட்டு நசுங்குகின்றது.  

மடிக்கணினியில் இருக்கும் என் பார்வையும், அவர்களின் பேச்சுக்களை நோக்கியிருக்கும் என் காதுகளும் ஒரு கலவையான காலத்தை சுமந்து கொண்டு முன்னும் பின்னும் அலைந்து கொண்டேயிருக்கிறது. நான் செய்து கொண்டிருக்கும் வேலைகள் செக்கு மாட்டுத்தனமாய் மாறிவிடுகின்றது.  

அடங்க மாட்டீங்களா? என்ற சப்தம் சமயலறையில் இருந்து வரும்.  அடங்கி விட்டார்களோ? என்று ஆச்சரியமாய் பார்த்தால் அடுத்து அணுகுண்டாய் மாற்றி அவஸ்த்தையை உருவாக்குவார்கள்..

மாட்டிய சீரூடையில் மாறிப் போன ஷுக்களின் எண்கள் புதுக்கவிதை சொல்லும். கால் ஒரு பக்கம் ஷு ஒரு பக்கம் என்று கோணி நிற்க மூவரின் வாய்களும் சிரித்து நிற்க அவசரத்தில் நிற்கும் மனைவியின் வாயில் வார்த்தைகள் வசைமாறி பொழியத் தொடங்கும். குட்டிகள் உருவாக்கிய குட்டிப் பஞ்சாயத்தில் மீண்டும் நிறுத்தப்படுவேன். கத்திப்பார்த்த மனைவியின் சொல் காற்றில் பறக்க பல சமயம் மாட்டிக் கொண்டிருக்கும் ஷுக்களும் பறக்கத் தொடங்கும்.  

அலுத்துப் போனாலும் மனதில் வார்த்தைகளாக கோர்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.  ஆழ்மன அழுத்தங்கள் அகன்று விடுகின்றது.  குதுகலமாய் அவர்களின் கொண்டாட்டங்களில் .பங்கெடுத்து அதிகாலையில் பள்ளி நோக்கிய பயணம் தினந்தோறும் தொடங்குகின்றது.


அவர்களின் பயணங்கள் எனக்கு வாழ வேண்டிய அவசிய நம்பிக்கைகளையும் விதைத்தபடியே இருக்கிறது. தெரு முனையில் கொக்குபூ மரம். தொடர்ந்த வீடுகளில் மஞசள் பூக்கள் என்று சாலையில் ஏராளமாய் இறைந்து கிடக்க இவர்களின் இரைச்சல் சப்தத்தில் வழியெங்கும் மலர்வனத்தில் மூன்று பூக்களுடன் நடந்து கொண்டே இருக்கின்றேன்.  

நம்பிக்கை செடிகளை வளர்ப்பதும் முக்கியம். 

உரமிடுவது அதைவிட அவசியம். .

கவனிக்க பழகுங்கள். அவற்றை எழுதாக்க முயற்சித்துப் பாருங்கள். 

அவரவர் வளர்த்துக் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் நாளைய சரித்திரத்தை உருவாகக்கூடும்.
                           
                                                   +++++++++++++++++++++++++                            


அரசியல் பதிவுகளுக்கிடையே தமிழ்மண நட்சத்திர வாரத்தில் புதிய நடையில் எழுதிய ஆசைமரம் என்ற தலைப்பு அதிசயமாய் பக்கவாட்டில் மேலேறி வந்துள்ளது.

அதைப் போன்ற மற்றொரு தலைப்பு எழுத முடியுமா என்று முயற்சித்த தலைப்பு இது.

2011 வருடத்தின் இரண்டாவது நாள் எழுதிய பதிவு. தமிழ்மணம் 100 பதிவுகள் படுத்துக் கொண்டே ஜெயித்தவர். சர்ச்சையான பின்னூட்டங்கள்.


தொடரும் நண்பர்கள் அணைவருக்கும் எங்கள் இல்லத்தின் நன்றி.

Thursday, September 23, 2010

குழந்தைகள் உலகம் (ஹாலிவுட் பாலா மின் நூல் பிக்ஸார் விமர்சனம்)

நம்மில பலரும் பார்த்த பழைய தமிழ் திரைப்படமான இரு கோடுகள் போலத் தான் இதுவும் கோடுகளால் ஆன உலகம்.  கால்புள்ளி, அரைப்புள்ளி என்று தொடங்கி கண்டுபிடித்த இந்த கோடுகள் தான் மில்லியனர் பில்லியனர் அளவுக்கு இதற்கு பின்னால் உழைத்த ஒவ்வொருவரையும் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. 


ஒவ்வொரு நிலையிலும் பல கோடுகளை ஒன்றாக சேர்க்க, பிரிக்க, மாட்ட என்று பல கட்டங்கள் தாண்டி வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நிலையில் இதற்கான உருவகங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கிறது. 

பெயர் தான் கார்டூன் அல்லது கேலிச்சித்திர உலகம்.  ஆனால் நம்மைப் பார்த்து கேள்விகள் கேட்கும் உலகம் போலத்தான் இருக்கிறது?

உயிரற்ற ஓடும் கார் முதல் தாவும் மிருகங்கள் வரைக்கும் எல்லாவிதமான உருவங்களையும் அதன் இயல்பான தன்மையுடன் உருவாக்க முடியும்.  ஆடலாம் படலாம் ஏன் அவசர ஆத்திரம் என்றால் குதியாட்ட நடனம் கூட போட்டுக் காட்டும். இன்று மூச்சா போகும் சத்தத்தையும் நாம் உணரும் அளவிற்கு காட்டி கப்பு வாடையை கடத்த வைக்கலாம்.  அத்தனையும் இன்று வளர்ந்துள்ள விஞ்ஞானத்தின் வளச்சி. 

அழுகை,சிரிப்பு,கேலி, கிண்டல்,துரத்தல்,வேகம் என்று நாம் எதிர்பார்க்கும் அத்தனை மனித உணர்ச்சிகளையும் நம்ப முடியாத வகையில் தந்து விட வேண்டும் என்று ஒரு பெரிய உலகமே இதற்குப் பின் இயங்கிக் கொண்டு இருக்கிறது. ஒரு சிறிய கணினி திரையின் முன்னால் அமர்ந்து கொண்டு எதற்காகவும் நகர வேண்டிய அவஸ்யம் இல்லாமல் விதவிதமாக உருவாக்கி குழந்தைகளின் உலகத்தை தங்களது மாயக் கரத்திற்குள் வைத்துருககிறார்கள்.  இவர்கள் அத்தனை பேர்களும் இந்த விஞ்ஞான உலகில் நவீன பிரம்மாக்கள்.

பிராந்திய மொழிகள் வரைக்கும் வந்து சேர்ந்துள்ள இந்த உலகம் குழந்தை களுக்கு அளிக்கும் மகிழ்ச்சி ஆச்சரியமாக இருக்கிறது. 

வீட்டில் குழந்தைகளுடன் சேர்ந்து பார்த்த சிந்துபாத் கதையில் வரும் தமிழ் குரல்கள் தமிழ் திரைப்படங்களில் வந்த அத்தனை நகைச்சுவை வசனங்களை யும் ஒன்றாக போட்டு குலுக்கி அதை சரியாக சேர்க்க வேண்டிய இடங்களில் பொருத்தி, அடேங்கப்பா.......... வேகமாக ஓடிக்கொண்டுருக்கும் ப்ரேம் வரிசை களை மறந்து ஒவ்வொரு குழந்தைகளையும் பைத்தியம் பிடிக்க வைத்துக் கொண்டுருக்கும் விந்தை உலகம் இது.  

இந்த உலகத்தைப்பற்றி நூலாசிரியர் வார்த்தைகளில்

" காமிக்ஸ் படிப்பவர்களையும் கார்டூன் படங்களை பார்ப்பவர்களையும் குழந்தைதனமானவர்கள் போல இந்தியாவில் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் இந்த கார்டூன் படங்கள் உருவாக்க ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் உழைப்பும் பயன்படுத்தும் விஞ்ஞான அறிவும் எவரும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று.  

நாம் வாழ்ந்து கொண்டுருக்கும் உலகம் எப்படி உருவானது?  பரிணாமம் என்பது என்ன? விஞ்ஞான வளர்ச்சி?  இது போன்ற மண்டையை உடைத்துக் கொள்ள வைக்கும் கேள்விகளை நாம் என்றைக்காவது நமக்குள் கேட்டுக் கொண்டு இருப்போமா? 
நிச்சயமாக வரக்கூடிய பதில் மாட்டோம் என்ற சொல்லாகத் தான் இருக்கும்.  

" இன்றைக்கு உள்ள பொழப்பே பார்க்க முடியல. இதில் எங்கே போய் நாமத்தையும் ஞானத்தையும் பார்ப்பது " என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டு நகர்ந்து கொண்டுருக்கிறோம்.

எவரோ எப்பொழுதோ எங்கேயோ இருந்து கொண்டு உழைத்த உழைப்பின் பலனை தான் நாம் அணைவரும் இன்று அனுபவித்துக் கொண்டுருக்கிறோம்.  மனிதர்களின் உடலுறவுக்கு மட்டும் இன்னும் மாற்று ஏற்பாடு கண்டுபிடிக்க வில்லை. அதுவும் வந்து விட்டால்?

அது தான் பாலா சொல்லும் தொடக்க கதையும் கூட.  

வால்ட் டிஸ்னி, பிக்ஸார் இதற்குப் பிறகு வந்த இமேஜ் ஓர்க்ஸ் உருவான தலபுராணத்தை தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். மனிதர்களை வைத்து வேலைவாங்கி ரெடி ஸ்டார்ட் கட் என்று தொண்டை தண்ணீர் வற்றி வேலை வாங்கியவர்களை விட இந்த உலகத்தில் இவர்கள் உழைத்துக் கொண்டு இருக்கும் உழைப்பு நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. 

இதை டாய் ஸ்டோரி என்ற பதிவில் நண்பர் ஜெய் தான் எழுதிக் கொண்டுருக்கும் வலைப் பூவில் வெகு அற்புதமாக சொல்லி இருக்கிறார்.

பிறமொழிபடங்கள் தமிழில்

" ஒவ்வொரு கேரக்டரையும் உருவாக்க, தனியா ரூம் போட்டு யோசிப்பாங்க போல... கண்ணைத் தனியா கழட்டி வேவு பார்க்கிற Potatohead பொம்மை, ஸ்பானிஷ் பேசி டான்ஸ் ஆடும் Buzz Light Year, அடியாள் பொம்மைகளோட வர்ற கரடி பொம்மை அப்படின்னு ஒவ்வொண்ணுக்கும் தனி ஸ்டைல், பழக்க வழக்கம், ஸ்பெஷல் திறமை, பிடிச்சது, பிடிக்காததுன்னு... அது ஒரு தனி உலகம்... பார்க்க ஆரம்பிச்சா அப்படியே உங்களை உள்ள இழுத்துடும்... அதுதான் பிக்ஸார் ஸ்பெஷல்... 

பொம்மைகளைப் பார்க்கறப்போ ஏதோ பழைய நண்பர்களை திரும்ப பார்க்கிற மாதிரி இருக்கு. புள்ளக்குட்டிகளோட இந்த வருஷம் ஒரு படத்துக்கு போகணும்னு நினைச்சீங்கன்னா, இந்த படத்துக்குப் போங்க..

 படம் முடியும்போது குழந்தைகளுக்கும், உங்களுக்குமான வயசு வித்தியாசம் அதிகம் இருக்காது.."

காரணம் அத்தனையும் தனி மனிதர்களின் உழைப்பு தான் இன்றுள்ள குழந்தை களை குதுகலமாய் வைத்துள்ளது. சும்மா வரவில்லை சுதந்திரம் என்பது போல் ஒவ்வொரு மனிதரின் ந்யூரான்கள் உருவாக்கிய மாய உலகம் இது.

நூலாசிரியர் கொடுத்துள்ள முக்கியமான குறிப்புகளில் சிறப்பான விசயங்கள் பல உண்டு. 

ஒவ்வொரு கோடுகளும் எப்படி உருவமாக மாறுகிறது. ஒரு வரி கதை உருவாக்கம் முதல் கடைசியாக பின்னால் ஒலிக்கும் குரல் வரைக்கும்  வரிசைப்படுத்தி சுட்டிக் காட்டுகிறார். 

எப்படி இந்த உலகத்தை சிருஷ்டிக்கிறார்கள் என்பதை வரிசைக்கிரமமாக எண்கள் போட்டு கொடுத்த விதம் படிக்கும் எவருக்கும் புரியக்கூடியது..

" சோர்ந்து விடாதே " என்ற தராக மந்திரம் தான் பிக்ஸார் நிறுவனத்தின் தொடக்க கால வளர்ச்சி.  அது தான் இறுதியில் "அனிமேட் கார்டூன்" என்ற மாய உலகத்தை உருவாக்க உதவியது. 

புத்திசாலிகள் எங்கேயாவது சீக்கிரம் ஜெயித்த கதை உண்டா?  காரணம் வால்ட் டிஸ்னி மூடி சூடா சக்ரவர்த்தியாக கோலோச்சிக் கொண்டுருக்க ரஜினி கிரில் கேட்டை திறந்து தமிழ் திரைப்பட உலகத்திற்கு வந்த கதையை போலத் தான் பிக்ஸார் வளர்ந்த விதம் நமக்கு நினைவு படுத்துகிறது.  1993 வரைக்கும் இந்த உலகம் இப்படித்தான் இருந்தது. ஆனால் இன்றைய வளர்ச்சி என்பது எந்திரன் வரைக்கும் எங்கங்கோ பறந்து போய்க்கொண்டுருக்கிறது.

குறிப்பாக இந்த துறையில் பணிபுரிபவர்களுக்கு கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு கையால் தொடர்ச்சியாக கோடுகளை நகர்த்திக் கொண்டுருப்பவர்களுக்கு வரும் நோய்கள் முதல் கார்டூன் உலகத்தை வைத்துக் கொண்டு மில்லியன் பில்லியன் சாம்பாரித்துக் கொண்டுருப்பவர்களைப் பற்றி படித்துக் கொண்டே வரும் போது இதன் மொத்த விஸ்தாரம் நம்ப முடியாத ஆச்சரியமாக இருக்கிறது. 

இந்த உலகத்தில் சவாலான பல வேலைகளை கணினியே எடுத்துக் கொண்டாலும் பெயர் என்னவோ பணிபுரிபவர்களின் பெயர் தான் வருகின்றது, ராயல்டி ரைட்ஸ் எதுவும் கேட்காத கணினிகள் நமக்கு பலப்பல ஆச்சரியங்களை தந்து கொண்டுருப்பதைப் போல, ஏற்கனவே வந்த 3டி போல எதிர்காலத்தில இன்னும் எத்தனை அதிசயங்களை உருவாக்கப் போகின்றதோ?

" காறித்துப்பினாலும் நான் விடமாட்டேன் " என்று உழைத்த பிக்ஸாரின் டாய் ஸ்டோரி உழைப்பை டிஸ்னி அங்கீகாரத்தை எப்போது கொடுத்தார்கள்?   தொலைக் காட்சியில் ப்ரைம் டைம் அலலது பண்டிகை தினம் போல உள்ள கிறிஸ்துமஸ் தின பண்டிகை கொண்டாட்டத்தின் போது,

டிஸ்னி பிக்ஸாருக்கு கொடுத்த அங்கீகாரம் வேறு எவருக்குமே கொடுக்காத ஒன்று.

உழைத்தால் ஒரு நாள் முன்னேறறம் உண்டு என்பது உண்மை தானே?

                                          படம் முடியல. கொஞ்சம் உட்காருங்க


அதகள புகழுக்கு பெயர் பெற்ற நூலாசிரியருக்கு அவர் பாணியில்

உங்கள் சொந்தப் பெயர்
ஏன் சொன்னா இந்தியாவின் கடனை தள்ளுபடி செய்துடுவாங்களா?

வலைதள பெயர் 
வலையே சிக்கி சின்னபின்னமாச்சு.  இதுல நீங்க வேற வந்துக்கிட்டு.

ஆசிரியரின் மிகச் சிறந்த பொன்மொழி
போய் புள்ளகுட்டிய படிக்க வச்சு உருப்புடுற வழிய பாருங்க பாஸ்

ஆசிரியர் விரும்பும் பாடல்  
அக்கரைச்சீமை அழகினிலே மனம் ஆட்டம் கண்டேனே.

ஆசிரியரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது?
பதிவுலகத்தை சுத்தம் செய்வது எப்பூடி?

திரட்டிகளின் மறுபெயர்
ச்சும்மா எரிச்சலை கௌப்பாதீங்க தல

எப்போது மறுபடியும் எழுதுவீங்க
வான்புகழ் கொண்ட வள்ளூவர் குறளுக்கு எழுத அதிகாரம் கொடுக்கும் போது

தெரிந்த மொழிகள்
கொஞ்சூண்டு தமிழ், கொறச்சு மலையாளம். ஸ்பானீஷ் தோழியை டாவடிக்க
கலந்து கட்டும் இங்கீலுபீசு

எதிர்கால லட்சியம்


1 பீன்நவீனத்துவ கதை எழுதி பலாப்படறை ஓனருக்கு டெடிகேட் செய்யனும்,  நேற்று பாலபாரதி இந்த மேட்டர படிக்க வச்ச பழி எடுத்துட்டாரு.

2, ஓட விடமா பிடிச்சு வச்சு இராமசாமி கண்ணன் கவிதைகளை படிக்க வைக்கோனும்

3, உண்மைத்தமிழன் அண்ணாவுக்கு பாசக்கார பயபுள்ள பாலா எழுதும் கடிதம்ன்னு நாலு பதிவு எழுதி டர் ஆக்கனும்., கூடவே க முதல் தொடர்ந்து தமிழில் உள்ள அத்தனை எழுத்துக்களையும் எழுதி தமிழன் தரும் பின்னூட்ட பதிலை கின்னஸ்க்கு அனுப்பனும்.

அப்புறம்................

சரி முடிஞ்சா ஆசிரியருக்கு உங்க கடிதத்தை தட்டுங்க.  ஓளிஞ்சுருந்து படிக்கிற மனுஷன் வெளியே வர வேண்டாமா?

ஹாலிவுட் பாலா மின் அஞ்சல் முகவரி hollywoodbala@gmail.com