Wednesday, November 29, 2017

வணக்கம் - நூல் விமர்சனம்


எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா (1917- 2017) கொண்டாடும் நேரமிது. வைகோ அவர்களும் எம்.ஜி.ஆருக்காகச் சமீபத்தில் ஒரு விழா நடத்தியிருந்தார். எம்.ஜி.ஆருக்கான விழா என்று சொல்லாமல் தனக்கான பொன்விழா என்று காரணம்காட்டி அரசாங்கத்திடமிருந்து கலைவாணர் அரங்கைப் பெற்று இருந்தார். விழா மேடையில் எம்.ஜி.ஆர் குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்தார். அவர் பேசும் போது "நான் இந்த மேடையில் பேசுவதற்கு முன்பு எம்.ஜி.ஆர் குறித்து ஏறத்தாழ நாற்பது புத்தகங்கள் பல்வேறு நபர்கள் ஒவ்வொரு சமயத்திலும் எழுதியதை வாசித்து விட்டுத் தான் இங்கே பேசுகின்றேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

வைகோ வும் எம்.ஜி.ஆரும் எதிரெதிர் திசையில் இருந்து அரசியல் களத்தில் செயல்பட்டவர்கள். வைகோ அவர்களுக்கு எம்.ஜி.ஆர் குறித்து நேரிடையான, மறைமுகமான, செவிவழிச் செய்திகள் ஏராளமாகத் தெரிந்திருந்த போதிலும் எம்.ஜி.ஆர் குறித்த புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து விட்டு விழாவில் பேசியது என்னளவில் ஆச்சரியமாகவே இருந்தது. 

வைகோவின் உரையைக் கேட்டதிலிருந்தே எம்.ஜி.ஆர் குறித்த பலதரப்பட்ட புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது கொண்டே இருந்தது. இதுவரையிலும் எம்.ஜி.ஆர் குறித்த தகவல்கள் அனைத்தும் பத்திரிக்கைகள் வாயிலாகத் தெரிந்தது மட்டுமே. 

காரணம் எம்.ஜி.ஆர் மறைந்த போது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருந்தேன். நான் இதுவரையிலும் வாசித்த வாசிப்பின் வாயிலாகவே அவரைப் பற்றிப் பல விசயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. தீரா ஆச்சரியங்கள் நிறைந்த அவரின் வாழ்க்கை குறித்த தேடல்கள் இன்னும் முழுமையடையவில்லை. நீண்ட நாளைக்குப் பின் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்தது. 

அது வலம்புரி ஜான் எழுதிய வணக்கம்

இந்தத் தொடர் நக்கீரனில் வாரந்தோறும் வெளிவந்த காலம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அப்போது கல்லூரி முடித்து வெளியே வந்து வேலையில் சேர்ந்த சமயம். இடையிடையே சில அத்தியாயங்களை வாசித்துள்ளேன். அப்போது தொடர் வாசிப்பில் இல்லாத காரணத்தால் வாசிப்பு நிலையில் இருந்து தள்ளியே இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆனால் அப்போது வாசித்த விசயங்களுக்கும், இப்போது வாசிக்கும் போது உண்டான மனநிலைக்கும் ஏராளமான வித்தியாசங்கள். அன்று புரியாத பல அரசியல் சூட்சமங்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது இவையெல்லாம் நாம் அன்றாடம் செய்தித்தாளில் வாசித்தது தானே? என்று யோசிக்க வைக்கின்றது. 

வலம்புரி ஜான் எழுதிய பல புத்தகங்களை ஊரில் இருந்த போது நூலகத்தில் எடுத்து வாசித்துள்ளேன். இருபது வயது இளைஞர்களைச் சுண்டியிழுக்கும் நடையது. அருவி போல நம்மை இழுத்துக் கொண்டே சொல்லும். எந்த எழுத்தாளர்களின் நடையுடனும் ஒப்பிடவே முடியாது. அதீத புத்திசாலிகள் வரிசையில் நிச்சயம் வலம்புரி ஜான் அவர்களுக்கும் ஒரு இடமுண்டு. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் கரை கண்டவர். எழுத்தாற்றல், பேச்சாற்றல், பத்திரிக்கையாளர், பாராளுமன்ற உறுப்பினர் என்று வாழ்நாள் முழுக்கக் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று வாழ்ந்தவர். பல இளைஞர்களைப் பத்திரிக்கையுலகத்திற்கு அடையாளம் காட்டியவர். 

குறிப்பாக நக்கீரன் கோபால் அவர்கள் வலம்புரி ஜான் மூலமாகத்தான் முதன் முறையாகப் பத்திரிக்கை உலகத்திற்கு உள்ளே வந்தார். அப்போது வலம்புரி ஜான் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த தாய் வார இதழில் லே அவுட் ஆர்டிஸ்ட்டாக நக்கீரன் கோபால் தனது பத்திரிகை உலகப் பயணத்தைத் தொடங்கினார். 

கடந்த 25 ஆண்டுகளாக வலம்புரி ஜான் அவர்களின் எந்தப் புத்தகத்தையும் வாசித்தது இல்லை. ஆனால் பல்வேறு இடங்களிலும் பேசிய பேச்சுத் தொகுப்புகளை மட்டும் இணையத்தில் அவ்வப்போது கேட்பதுண்டு. பல சமயம் வியந்து போனதுண்டு. ஞாபக சக்தி, தொடர்ந்து வந்து விழுந்து கொண்டேயிருக்கும் வார்த்தைகளும், பலரும் அறிந்திராத சரித்திர குறிப்புகள் முதல் நிகழ்கால அரசியல் அவலங்கள் வரைக்கும் எனக் கலந்து கட்டி கேட்பவரை திகைக்க வைப்பதில் கில்லாடியாக இருப்பார். 

வணக்கம் தொடர் நக்கீரனில் வெளிவந்த போது ஏராளமான பிரச்சனைகளைச் சந்தித்தது. வலம்புரி ஜானுக்கு மட்டுமல்ல. நக்கீரன் வார இதழுக்கும் சேர்த்து ஜெ பல இடைஞ்சல்களை உருவாக்கினார். நீதிமன்றம், காவல்துறை கலந்து கட்டி கபடி விளையாடியது. ஜெ. முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய போது தமிழகம் புதுப்புது விசயங்களைக் கண்டது. மேற்கத்திய நாடுகள் மட்டுமே கண்ட சர்வாதிகாரம் என்பது இங்கே உள்ள மக்களாட்சியில் என்னவெல்லாம் உருவாக்க முடியும் என்பதனை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா. 

ஜெயலலிதா காலத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்த போதிலும் 2016 ஆம் ஆண்டு வரைக்கும் நான்கு பதிப்புகள் கண்டாலும் தற்போது தான் அதீத கவனம் பெற்றுள்ளது. காரணம் இதில் சசிகலா குறித்துச் சொல்லப்பட்ட விசயங்கள் அனைத்தும் உண்மையாகவே நடந்து கொண்டிருப்பது முக்கியக் காரணமாக இருந்தது. வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்திற்கென என்னுரை என்று 2002 வருடத்தில் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் முதல் பதிப்பு 2005 வந்து அதற்குப் பிறகு ஐந்து பதிப்புகள் வெளி வந்துள்ளது. 

புத்தகத்தை முதல் முறை வாசித்து விட்டு உருவான தாக்கமும், மீண்டும் மீண்டும் பலவற்றை யோசித்துக் கொண்டே புத்தகத்தில் சொல்லப்பட்ட சின்னச் சின்னக் குறிப்புகளை யோசித்துக் கொண்டே மூன்று நாட்களும் இந்தப் புத்தகமே மனதிற்குள் சுழன்றடித்துக் கொண்டேயிருந்தது. 

தற்போது ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்களுக்குக் கூடக் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்றவர்களைப் பற்றி எழுத்தின் வாயிலாகவே தெரிந்து இருப்பார்கள். தற்போது இணைய ஊடகங்கள் ஆதிக்கம் பெற்ற பின்பு தான் பல மறைக்கப்பட்ட பல தகவல்களும், உண்மையான விசயங்களும் விவாத பொருளாக மாறியுள்ளது. 

காரணம் இணையத்தில் கலைஞர் குறித்து நேர்மறை எதிர்மறை விசயங்கள் அனைத்தும் கலந்து இருப்பதால் வாசிப்பில் ருசி உள்ளவர்கள் எளிதாக எது சரி? எது தவறு? என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். இன்று வரையிலும் பல அரசியல்வாதிகள் கடந்த கால வாழ்க்கை, அவர்களின் நிலைப்பாடுகள், கொள்கைகள் விவாத பொருளாகவே உள்ளது. ஆனால் எம்.ஜி.ஆர் குறித்துச் சொல்லிக்கொள்ளும்படி இல்லையே? ஏன் என்று பலமுறை நெருங்கிய நண்பர்களிடம் விவாதிப்பதுண்டு. அப்பொழுதெல்லாம் அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். அவர்களின் வள்ளல்தன்மையைக் காரணமாகச் சொல்லி அதற்குப் பின்னால் உள்ள அரசியல் விசயங்களை நண்பர்கள் புரியவைப்பார்கள். 

ஆனால் ஜெயலலிதா குறித்து நம்மால் அனைத்து விசயங்களையும் இணையத்தில் தேடி எடுத்துக் கொள்ள முடியும். இணைய வளர்ச்சியில் ஜெயலலிதாவின் அகங்காரம் எடுபடாமல் போய்விட்டது. 

நாற்பது வயதைக் கடந்தவர்கள் நிச்சயம் இன்றைய சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மொத்த குணாதிசியங்களையும், அவரின் அவல ஆட்சி அதிகார அவலங்களை நன்றாகவே தெரிந்து வைத்து இருப்பார்கள். தமிழக அரசியலில் இறப்புக்குப் பின்பு ஜெ வைப் போலக் கேவலப்பட்டவர்கள் எவருமே இல்லை. அதேபோல இந்திய அரசியலில் இந்த அளவுக்கு அசிங்கப்பட்டவர்களும் எவருமில்லை. 

இன்றும் அவரை ஆதரிப்பவர்களை என் பார்வையில் இரண்டு விதமாகத் தான் பிரிக்க முடியும். 

ஒன்று அவர் சாதி சார்ந்த அபிமானம்.

மற்றொன்று மாற்றிக் கொள்ள முடியாத கலைஞர் மீதான வெறுப்பின் காரணமாகவும் இருக்கின்றார்கள். 

எம்.ஜி.ஆர் போல நிஜமான வள்ளல் தன்மை கொண்டவரும் இல்லை. ஆனால் தனக்கு ஒன்று தேவை என்றால் அதற்காக எந்த நிலைக்கும் இறங்கலாம் என்ற கேவல அத்தியாங்களைத் தமிழக அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவரும் ஜெயலலிதா தான். இவரைப் பற்றித் தான் வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்தில் பேசுகின்றார். அத்துடன் அவர் வாழ்ந்த கால கட்டத்தில் உள்ள அரசியல் நிலைமைகள், சம்மந்தப்பட்ட மனிதர்கள், ஆயுதம் ஏந்தத் தேவையில்லாத அரசியல் யுத்தத்தின் சகல பரிணாமங்கள் ஒவ்வொன்றையும் அவர் பாணியில் தனித்தனி கட்டுரையாகச் சொல்லியுள்ளார். 

அவரைப் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது. 

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தும் வலம்புரி ஜான் குறித்தும், இந்தப் புத்தகம் குறித்தும் இணையத்தில் தேடிப்பார்த்தேன். இரண்டு பேர்கள் எழுதிய விமர்சனங்கள் என் கண்ணில் பட்டது. ஆனால் மொக்கை எழுத்தாளர்க்கு இணையத்தில் கிடைத்துள்ள அங்கீகாரம் கூட வலம்புரி ஜான் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. எந்த இடத்திலும் வலம்புரி ஜான் குறித்த முழுமையான விபரங்கள் இல்லை. 

முக நூல் வந்த பிறகு ஐம்பது வருடங்களுக்கு முன்பு துணை கதாபாத்திரங்களில் நடித்த சாதாரண நடிகை நடிகர்களைப் பற்றிக் கூட விமர்சனமாகச் சிலாகித்து எழுதும் நபர்கள் எவரும் வலம்புரி ஜான் அவர்களைப் பற்றி எழுதாமல் இருப்பது ஒரு வகையில் ஆச்சரியம் என்றால் அவரின் கடந்த கால அரசியல் செயல்பாடுகளும் விமர்சனத்துக்கு உரியதாகவே உள்ளது. தொடர்ந்து கட்சி மாறிக் கொண்ட வந்தது முதல் எந்த இடத்திலும் நிலையாக இல்லாமல் நினைத்த போது நினைத்தவாறு பேசியது வரைக்கும் எல்லாமே அவரைக் கடைசியில் மரணம் வரைக்கும் துரத்தியது. அவரின் மரணமும், மரண ஊர்வலமும் சங்கடமாக முடிந்தது. 

தொலைக்காட்சியில் தினந்தோறும் அவர் உரையாற்றுவதைக் கேட்டுள்ளேன். மருத்துவத்தின் அத்தனை பக்கங்களையும் அலசுவார். ஆலோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டேயிருப்பார். கேட்பவர்களுக்கு எதை எடுத்துக் கொள்வது? எப்படிப் பின்பற்றுவது? என்று குழப்பங்களை வரும் வரைக்கும் சரித்திர காலச் சம்பவங்களுடன் கோர்த்துச் சொல்லுவார். கடைசியில் அவர் உடம்பு நோயின் மொத்த குத்தகை கிடங்காக மாறி எலும்பும் தோலுமாக இறந்தார். இந்த இறப்பில் ஜெயலலிதாவிற்கு முக்கால்வாசி பங்குண்டு. 

ஜெயலலிதாவை அரசியலில் அறிமுகம் செய்து வைத்த போது எம்.ஜி.ஆர் அவர்களால் ஜெ. வுக்கு ஆலோசகர் என்ற நிலையில் வலம்புரி ஜான் அவர்களைத்தான் தேர்ந்தெடுத்தார். 

இவர் தான் வாசிப்பு முதல் அரசியல் பழக்கங்கள் வரைக்கும் ஜெ. வுக்குக் கற்றுக் கொடுத்தார். ஆனால் காலம் வேறுவிதமாக நகர்த்தியது. ஜெ அதிகாரத்திற்கு வந்த போது வலம்புரி ஜான் ஆகாத மனிதராக மாறிவிடக் கைது நடவடிக்கையின் போது மெல்ல கொலும் விசயத்தை டீ யில் கொடுத்து இவர் உடல் நலன் சீர்கெட்டுப் படுக்கையில் விழும் அளவிற்குக் கொண்டு போய் நிறுத்தியது. 

இந்த வணக்கம் புத்தகத்தை வெறுமனே நூல் விமர்சனம் என்ற நிலையில் பார்க்க மனம் வரவில்லை. இதில் உள்ள முக்கியக்குறிப்புகள் இணையத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பதிவுகளாக எழுதி வைத்திட விரும்புகின்றேன். 

எம்.ஜி.ஆர். -  ஜெயலலிதா 
ஜெயலலிதா -  எம்.ஜி.ஆர். 
ஜெயலலிதா -  சசிகலா 
மூவருக்கும் மத்தியில் வாழ்ந்த வலம்புரி ஜான். 

தொடர்ந்து பேசுவோம்........... 


9 comments:

ராஜி said...

எனக்கு வலம்புரி ஜான் அவர்கள் பேச்சு பிடிக்கும். ஆனா, அவர்களை பற்றி அதிகம் தெரியாது, அவசியம் படிக்கிறேன்

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா
நன்றி

sivakumarcoimbatore said...

thanks sir.

Rathnavel Natarajan said...

வணக்கம் - நூல் விமர்சனம் - அருமையான பதிவு. வணக்கம் புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

Thulasidharan V Thillaiakathu said...

வலம்புரி ஜான் குறித்து கொஞ்சமே அறிவோம். அதாவது தொலைக்காட்சியில் காலையில் வந்த அவரது பேச்சுகள் அவ்வப்போது கேட்டிருந்தாலும்...மிக அழகாகப் பேசுவார். கேட்டதுண்டு அல்லாமல் வேறு தெரியாது. அவர் எழுதிய புத்தகம் பற்றியும் கேட்டதுண்டு. இப்போது உங்கள் விமரசனத்தைப்பார்த்ததும் வாசிக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.

கீதா

தி.தமிழ் இளங்கோ said...

வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜானின் கட்டுரைகளை அவ்வப்போது படித்து இருக்கிறேன். கவிஞர் கண்ணதாசனும் வலம்புரி ஜானும் அரசியலைப் பொறுத்த வரையில் ஒரே சுழிக்காரர்கள். ஒரே இடத்தில் நிலைத்து நில்லாதவர்கள்

// ஜெயலலிதா காலத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்த போதிலும் 2016 ஆம் ஆண்டு வரைக்கும் நான்கு பதிப்புகள் கண்டாலும் தற்போது தான் அதீத கவனம் பெற்றுள்ளது. காரணம் இதில் சசிகலா குறித்துச் சொல்லப்பட்ட விசயங்கள் அனைத்தும் உண்மையாகவே நடந்து கொண்டிருப்பது முக்கியக் காரணமாக இருந்தது. //

என்ற நூலைப் பற்றிய உங்களது விமர்சன வரிகள் நூற்றுக்கு நூறு சரிதான். அண்மையில் ஒரு பத்திரிகையில் ஜெயலலிதா இறந்தபிறகு, வலம்புரிஜான் எழுதிய ஜெயலலிதாவைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த புத்தகத்திலிருந்து எடுத்து காட்டி இருந்தார்கள். அன்றிலிருந்து எனக்கு இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வம். சென்ற வாரம்தான் இவர் எழுதிய இந்த நூலை புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாங்கினேன். படிக்கத் தொடங்கி கால்வாசி படித்துள்ளேன். சுவாரஸ்யமான புத்தகம். வலம்புரி ஜானும் சுவாரஸ்யமானவர்தான்.

தனிமரம் said...

எழுதுங்கள் படிக்க ஆவலுடன் ஜீ!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களது மதிப்புரை அருமையாக உள்ளது. ஆழ்ந்து உள்வாங்கிக்கொண்டு நிதானமாக எழுதியுள்ளீர்கள் என்பதை எழுத்தின் நடை உணர வைக்கிறது. சமூகத்தின் மீதான உங்களின் அக்கரையும் இதில் தெரிகிறது. தொடருங்கள்.

G.M Balasubramaniam said...

வலம்புரி ஜானை அவ்வப்போது கேட்டதுண்டு அவர் பேச்சு எனக்குப் பிடிக்கும்