Wednesday, November 22, 2017

திருமண நாள்


குழந்தைகள் மகள்களாக மாறிக் கொண்டிருக்கும் தருணமிது. மகள்களின் யாரோ ஒருவர் தான் முதலில் தெரியப்படுத்துவார். அடுத்தடுத்து மற்றவர்களும் சேர்ந்து கொள்வார்கள். மனைவியின் முறைப்பை உள்ளே உருளும் பாத்திர ஓசையின் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

திருமண நாள், பிறந்த நாள் என்று எதுவும் நினைவில் இருப்பதில்லை. வயது கூடும் போது இரண்டு விசயங்கள் நமக்குள் நடக்கும். ஒன்று மறதி மற்றொன்று கொண்டாட்ட மனோ நிலை மாறும். 

நம் வயது கூடும் போது, நம் எண்ணங்களின் நோக்கம் வேறுவிதமாகப் போய்விடுகின்றது. நோக்கங்கள் மாறிக் கொண்டேயிருப்பதால் முக்கியமான பல விசயங்கள் மறந்துவிடுகின்றது. நமக்குள் இருக்கும் குழந்தைத் தனம் படிப்படியாகப் பலராலும் திருடப்பட்டு இருக்கும். நமக்கென பிரத்யோகமாக இருந்த பல ரசனைகள் மழுங்கடிக்கப்பட்டு இருக்கும். ஆழ்ந்த வாசிப்பு மாறி அவசர கதியில் உள்ளே நுழைந்த பலவும் குழப்பங்களைப் பந்தி போட்டு வரவேற்றுக் கொண்டிருக்கும். 

என்னைப் போலவே மகள்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றார்கள். மாறவே மாட்டேன் என்ற மனைவியும் அவரின் எளிய விருப்பங்களும் பல சமயம் சவாலாக உள்ளது. 

திருமண நாள் வரும் சமயங்களில் அதுவும் ஒரு நாள் தானே? என்ற எண்ணத்தை மாற்றியவர் மனைவி. அவருக்கு அது தான் அவர் வாழ்வின் முக்கியமான நாள் என்பதனை உணரவே பல வருடங்கள் எனக்கு ஆனது. தொடக்கத்தில் மகள்களின் பிறந்தநாளில் தெரிந்த ஆராவாரம் இப்போது மெதுமெதுவாக அடங்கி இன்று பெரிதான சுவராசியம் இல்லாமல் மாறிவிட்டது. ஆனால் இவற்றை விட மற்றொன்றை எப்போதும் நான் நினைத்துக் கொள்வதுண்டு. 

இறந்தவர்களின் நினைவு நாளை ஏன் நம்மால் சரியாக நினைவில் கொண்டுவரமுடிவதில்லை என்று? 

அப்பாவின் இறந்த நாள் சரியான அவர் இறந்த அடுத்த மாதங்களில் தான் நினைவில் வருகின்றது. அதுவும் ஊரில் இருந்து யாராவது அழைத்துச் சொன்னால் தான். தாத்தா, பாட்டி இறந்த நாள் எந்த நாள் என்பதே மறந்தே போய்விட்டது. பழகிய பலரின் நினைவு தினமும் இப்படியாகத்தான் உள்ளது. 

அன்றாட அழுத்தங்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்க, முக்கிய நினைவுகள் அனைத்தும் மறந்து போய் வாழ்வின் அன்றைய தேவைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில் கட்டாயம் ஒரு கணக்கு எடுத்துப் பார்ப்பதுண்டு. மாறிய எண்ணங்கள், மாறிக் கொண்டே வரும் ஆரோக்கியம், விலகிய நண்பர்கள், இழந்தவைகள், கற்ற பாடங்கள், படிப்பினைகள், பெற்ற நிந்தனைகள் என்று பட்டியலிட்டு பார்ப்பதுண்டு. 

சுருங்கிய உறுப்புகள், அடம்பிடிக்கும் ஆரோக்கியம், விட முடியாத பழக்கவழக்கங்கள் என்று கணக்கில் கொண்டு வந்தாலும் கண் கட்டி வித்தை போலவே நீ இன்னமும் திருந்த வேண்டும் என்றே காலம் மிரட்டிக் கொண்டேயிருக்கின்றது? வளரும் போது ஒவ்வொன்றும் மறையும் அல்லது குறையும். ஆனால் ருசி குறையாமல் இருக்கும் போது அது ஆரோக்கியத்திற்குக் கொடுக்கும் விலையாக உள்ளது. வாயைத் திறக்காமல் இருக்க வேண்டிய சமயங்களில் திறந்த காரணங்களால் பெற்ற இழப்புகள் ஒவ்வொன்றும் பக்கவாட்டில் நின்று கொண்டு பாடங்களை நடத்திக் கொண்டேயிருக்கின்றது. 

இனியாவது திருந்துவாயா? என்று ஆசிரியர் போலக் காலம் தன் கைகளில் பிரம்புகளால் விளாசிக் கொண்டேயிருந்தாலும் எத்தனை முயற்சித்தாலும் மாற்றிக் கொள்ள முடியாத நம் அடிப்படை குணாதிசியங்கள் நமக்கே பழிப்பு காட்டும். 

இவற்றை எல்லாம் நாம் அடைய வேண்டும் என்ற பெரிய பட்டியல் தூசி அடைந்து கிடைக்க மூச்சு இறைக்க ஓடி வந்த களைப்பு பட்டியலை மறந்து அடுத்த நாள் பயத்தை தந்து விடுகின்றது. 

இன்று இரவு படுத்தவுடன் தூக்கம் வந்தால் போதும் என்ற எளிய விருப்பத்தில் எல்லாமே மறந்து போய் அடுத்த நாள் விழிப்பில் சாதாரண எளிய மனித வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டிருக்கின்றேன். இப்படியே ஒவ்வொரு சமயத்திலும் காலம் என்னை நகர்த்திக் கொண்டு இருக்கின்றது. 

அடுத்த நாள் ஆச்சரியம் என்னவாக இருக்குமோ? என்ற எண்ணத்தில் உள்ளே இருக்கும் நம்பிக்கைகள் விழிகளில் வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றது. இப்படித்தான் ஒவ்வொரு சமயத்திலும் என்னைச் சுற்றிப் படரும் அவநம்பிக்கை கொடிகளை வெட்டி சாய்த்துக் கொண்டே என் மரத்தை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றேன். இன்னமும் மரத்தின் ஆணி வேர் என்ற ஆரோக்கியம் பழுது படாமல் இருப்பதால் எல்லா நிலைகளிலும் இயல்பாக வாழ முடிகின்றது. 


 (
படம்
நன்றி)
       Henk Oochappan

உங்கள் வாசிப்புக்கு 


17 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சீரிய சிந்தனை
குழப்பமில்லா மனநிலை
தெளிவானப் பார்வை
கொண்ட தங்களுக்கு
ஆணி வேர் என்றென்றும்
ஆரோக்கியமாய் இருக்கும் ஐயா

ராஜி said...

ஆரோக்கியம் கெடும் வயசா உங்களுக்கு?!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இன்றைய பொழுது இன்பமயமாகட்டும் என்ற நினைவும், நாம் அனைவருக்கும் நல்லதே செய்கிறோம் என்ற நினைவும், நேர்மையும், அன்பும், குறைந்த அளவிலான உடற்பயிற்சியும் நம் மனதிற்கும் நம்மால் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் அதிக இன்பத்தினைத் தரும்.

ஜோதிஜி said...




ஆரோக்கியம் என்பது இங்கே இரண்டு விசயங்கள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது. ஒன்று நம்முடைய படிப்படியாக வளர்த்துக் கொள்ளும் மனோநிலை. கற்றதையும் பெற்றதையும் எப்பொழுதும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வந்தால் வரவு போனால் செலவு என்று எளிதாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு மனதை பக்குவமாக்கி வைத்துக் கொண்டால் என்பது வயது ஆனால் கூட அடிப்படை ஆரோக்கியம் மாறாது. ஆனால் மற்றொன்றும் முக்கியமானது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இடம், சூழ்நிலை. நகரமயமாக்கலுக்குப் பிறகு உருவான தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்களுக்கு ஆரோக்கியத்தை விலை கொடுத்தே ஆக வேண்டிய நிலையில் தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக சிமெண்ட், கல் உடைக்கும் கிரஷர் என்றழைக்கப்படும் பகுதிகள், பஞ்சு அது சார்ந்த தொழில்கள், அணுமின் உலைகள், புகைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் தொழிற்சாலை நிறைந்த பகுதிகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட இறால் பண்னை அதன் கழிவுகள் உள்ள பகுதிகள் இது போன்ற பல இடங்களில் வாழ்பவர்களுக்கு எப்படியாகினும் அவர்களின் ஆரோக்கியம் அவர்களையும் மீறி மாறக்கூடியதே.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

மிகச் சரியான வார்த்தைகள்.

ராஜி said...

சரிங்கண்ணே. உடல் நலனை பார்த்துக்கோங்க

G.M Balasubramaniam said...

எப்போது வயதாவதை உணர்கிறீர்கள் பார்க்கவுமிதுவாகவு மிருக்கலாம் http://gmbat1649.blogspot.com/2013/05/aaadd.html

'பரிவை' சே.குமார் said...

வயது ஏறிக்கொண்டே போனாலும் நம் செயல்களும் செயல்பாடும் இளமையாகவே வைத்திருக்கும் அண்ணா...
ஆரோக்கியக் கேடு என்பதெல்லாம் சுறுசுறுப்பின் உற்சாகத்தின் முன்னே எட்டிக்கூடப் பார்க்காதே...
திருமண நாள் வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

நமக்கென பிரத்யோகமாக இருந்த பல ரசனைகள் மழுங்கடிக்கப்பட்டு இருக்கும். ஆழ்ந்த வாசிப்பு மாறி அவசர கதியில் உள்ளே நுழைந்த பலவும் குழப்பங்களைப் பந்தி போட்டு வரவேற்றுக் கொண்டிருக்கும். // உண்மை உண்மை!

துளசி: ஆம் இது எனக்கும் ..இப்படித்தான்

நாட்களைப் பொருத்தவரை கல்யாணம் ஆன புதிதில் கொஞ்சம் முக்கியத்துவம் அப்புறம் குழந்தைகள் என்றானதும் அதெல்லாம் அப்படியே காலப்போக்கில் போய் குழந்தைகளின் பிறந்த நாள் மட்டும் அவர்கள் வேண்டும் என்றால் வீட்டோடு...இதுவரை வெளியில் அழைத்து இப்போதைய பார்ட்டி போல் எல்லாம் கொண்டாடுவதில்லை. வயதாவது என்பது இப்போது பணி ஓய்வி பெறும் நிலை வரும் போது கொஞ்சம் உறுத்துகிறது. அதையும் மாற்ற வேண்டும்...என்றும் நினைப்பதுண்டு,,,

கீதா: நான் பெண்களுக்குத்தான் என்று நினைத்திருந்த வேளையில் துளசி சொல்லுவார் அவருக்கும் ஒரு வேளை அவரைப்போன்ற சிலருக்குத்தான் இருக்கும் என்றால் உங்களுக்குமா என்று தோன்றியது. நிஜமாகவே திருமணத்திற்கு முன் ஒரு விதமாக என் ரசனைகள், விருப்பங்கள் மழுங்கடிக்கப்பட்டதென்றால் திருமணத்திற்குப் பின் வேறு விதமாக...அப்புறம் 50 வயதை எட்டும் போதுதான் சுய நினைவு வருகிறது நான் நானாக இல்லாமல் என் சுயம் இழந்து இப்போதேனும் இத்தனை வருடங்கள் விட்டதைத் தொடர முடியுமா தொடரலாமே என்று விருப்பங்களைத் தூசி தட்டி வெளிக் கொணர விழைதல் அதில் கால் பாகம் கூட முடியவில்லை என்றுதான் சொல்ல வெண்டும்.

நாட்களைப் பொருத்தவரை இதுவரை கொண்டாடியதில்லை. என் மகனது பிறந்த நாள் கூடக் கொண்டாடியதில்லை. முதல் பிறந்த நாள் மட்டும் பெரியவர்களுக்காக மற்ற படி அதன் பின் கொண்டாடியதில்லை அவனுக்கு அவனது பிறந்த நாளும் சரி எனக்கும் என் பிறந்த நாளும் சரி நினைவில் இருப்பதே அபூர்வம் அதுவும் ஒரு நாள் என்ற எண்ணமும் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கிறோம் என்ற எண்ணமும் தான் காரணம்..

ஆனால் நம் எண்ணங்கள், செயல்கள், நம் மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால் எல்லாம் நம்மை எப்போதும் தைரியாமாக எதையும் எதிர்கொள்ளும் வல்லமையைத் தந்து இளமையாகவே வைத்துக் கொள்ளூம் (மனதை) உங்களுக்கா சொல்ல வேண்டும்??!!!!!

எங்கள் இருவரின் வாழ்த்துகள்.... இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

த. சீனிவாசன் said...

நான் நினைவில் கொள்ள வேண்டிய தினங்களை கூகுள் காலண்டரில் Repeat Yearly Once என்று சேமித்து வருகிறேன். இதன் மூலம் தினமும் பயன் பெற்று வருகிறேன். நீங்களும் இவ்வாறே செய்ய வேண்டுகிறேன்.

https://support.google.com/calendar/answer/37115

திருமண நாள் வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

எப்போதும் போலப் பதிவை நன்றாக உள்வாங்கிக் கொண்டு எல்லா இடங்களிலும் ஆத்மார்த்தமாக உங்கள் விமர்சனங்களை எழுதும் உங்கள் இருவருக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும்.


நான் சொல்ல வந்த ஐம்பது வயதை நெருங்கும் போது உருவாகும் மாற்றங்கள் குறித்து எழுத விரும்பினேன். மிகச் சரியாக அந்த இழையை நீங்கள் கவனித்துள்ளீர்கள். வியப்பு.

ஐம்பது வயதென்பது பல விதங்களில் முக்கியமானது. கடந்த ஒரு வருடமாகப் பல விதங்களில் இதனை, இதன் மூலம் சுற்றியுள்ள சமூகத்தைப் பல விதங்களாகப் பார்த்து வருகின்றேன்.

ஒரு தனிப் பதிவாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த விசயத்தை இங்கே எழுத விரும்புகின்றேன்.

பொருள் மட்டுமே உலகம் என்று கருதும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்தப் பொருளை தேவைக்கு அதிகம் தேவையில்லை என்று நாம் நினைத்தால் கூடச் சுற்றியுள்ள சமூகம் ஏதோவொரு வழியில் பல வகைகளில் பல விதமான அழுத்தங்கள் மூலம் நீ இவற்றையெல்லாம் அடைந்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தங்கள் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றது. பல சமயம் நாம் தேர்ந்தெடுத்த ரசனையான வாழ்க்கைக்கு எதிர்புறமாக இருந்தாலும் குறிப்பிட்ட வயது நெருங்கும் போது நாம் வாழ்ந்த வாழ்க்கை, வந்த பாதை தவறா? என்ற பெரிய கேள்வியை எழுப்பி விடும். குழப்பங்கள் இங்கே இருந்து தான் உருவாகின்றது. அவ்வாறு குழப்பங்கள் உருவானதால் தான் இந்தப் பதிவு எழுதத் தோன்றியது.

என் முக நூல் பக்கத்தில் கூட என் அறிமுகம் என்ற பகுதியில் இவ்வாறு தான் குறிப்பிட்டுள்ளேன்.

நீங்கள் வாழ்வில் பெற்ற தோல்வியும் வெற்றியும் உங்களின் ஆரோக்கியத்தை வைத்து அளவிட முடியும்.

ஆனால் இங்கே பெரும்பாலான மக்கள் கண்களை விற்றுச் சித்திரம் வாங்க விரும்புவர்களாகவே இருக்கின்றார்கள்.

ஐம்பது வயது நெருங்கிய நண்பர்களிடம் நான் எப்போதும் இப்படிச் சொல்வதுண்டு.

1. தினமும் எவ்வித மாத்திரைகளும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லாமல் அமையும் வாழ்க்கை.

2. பத்து கிலோ மீட்டர் நடந்து சென்றாலும் மூச்சு வாங்காமல், களைப்புத் தெரியாமல் தொடர்ந்து என்னால் முன்னேறிச் செல்ல முடியும் என்ற வாழ்க்கை.
3. சொந்த வீடு, வங்கியில் பணம் இவை இரண்டு இல்லாத போதும் எவருக்கும் நாம் கடன் கொடுக்க வேண்டியதில்லை என்ற நிலையில் உள்ள வாழ்க்கை.
4. வீட்டில் மனைவி குழந்தைகளுடன் இயல்பாக வாழ முடிந்த, மனவருத்தம் இல்லாத, நாள்தோறும் சச்சரவு இல்லாமல் அமையும் வாழ்க்கை.

5. அடுத்த நாள் கவலை குறித்து மனதிற்குள் இருந்தாலும் அதை ஓரளவிற்கு மேல் ஆதிக்கம் செலுத்தாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தினசரி ரசனைகளை இழக்காத வாழ்க்கை.

என்று இந்த ஐந்து பூதங்களை நண்பர்களாகப் பெற்றவர்கள் அத்தனை பேர்களும் என் பார்வையில் நிஜமான கோடீஸ்வரர்கள் என்பேன்.

நான் இந்தப் பாக்கியங்களைப் பெற்றவன். பழகும் பெரும்பாலான மக்களிடம் இது குறித்த புரிதல் வேறுவிதமாக உள்ளது என்பதால் நாம் எப்போதும் அவர்கள் பார்வையில் வேறுவிதமாகவே தெரிகின்றோம்.

உங்கள் அன்புக்கு நன்றி.

ஜோதிஜி said...

உண்மை தான் குமார். நம் சுறுசுறுப்பு மற்றும் அதன் சார்ந்த சிந்தனைகள் தான் இன்னமும் வலிமையான சிந்தனைகளுடன் தெளிவான ஆரோக்கியத்துடன் எழுத வைத்துக் கொண்டிருக்கின்றது.

ஜோதிஜி said...

நன்றி சீனிவாசன்.

நானும் இவற்றையெல்லாம் பயன்படுத்துகின்றேன். தனியாக ஒரு ஆப் கூட அலைபேசியில் உள்ளது. ஆனால் சொல்ல வந்த விசயம் வேறு. நமக்கு விருப்பான துறையில் செயல்படும் போது அதுவே நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் போது எல்லாமே இயல்பாக இருக்கும். விருப்பம் வேறு வாழ்க்கை வாழ உள்ள தொழில் வேறு எனும் போது (எழுபது சதவிகித மக்கள் இப்படித்தான் வாழ்கின்றார்கள்) நினைவுத்திறனில் மாறுதல் உருவாகின்றது. அலுவலகம் சார்ந்த நினைவுகள் அனைத்தும் நிர்ப்பந்தம் அடிப்படையில் நமக்கு பலவிதங்களில் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது. ஆனால் குடும்ப வாழ்க்கையில் அப்படியா?

ஜோதிஜி said...

”டேய்.! உனக்கு இருப்பது AAADD யின் அறிகுறிகள்”
( AAADD என்றால் AGE ACTIVATED ATTENTION DEFICIT DISORDER.)

உண்மை தான்.

பாலராஜன்கீதா said...

//எவருக்கும் நாம் கடன் கொடுக்க வேண்டியதில்லை// ? :-)

ஜோதிஜி said...

ஒவ்வொரு முறையும் உங்களின் நுணுக்கமான வாசிப்பு ஆச்சரியப்படுத்துகின்றது. வார்த்தைகள் மாறி வந்துள்ளது. நாம் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல், எவருக்கும் வாங்கிய கடனை இன்னமும் கொடுக்க முடியாமல் இருக்கின்றதே? என்று கவலைப்பட்டு வாழ்க்கை வாழாமல் இருக்க வேண்டும். அதுவே மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று சொல்ல வந்தேன். புரிதலுக்கு நன்றி.