Thursday, December 08, 2022

உங்கள் கண் முன்னால் உங்கள் வாரிசுகள் அழியப் போகின்றார்கள்

ஒரு பொருளை அரசாங்கம் வாங்குகின்றது. அதிகாரிகளுக்கு லஞ்சம்  கொடுக்க வேண்டி உள்ளது. பொருளில் தரம் குறைகின்றது.

அந்த பொருள் மானியமாக குறிப்பிட்ட துறையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்றது.  வாங்கிய விலை நூறு ரூபாய் என்றால் கணக்கில் காட்டப்படும் விலை ஐநூறு ரூபாய்.

இடையில் கிடைக்கும் பணம் யார் யாரோ பைக்குச் செல்கின்றது. மானியம் என்கிற ரீதியில் தேவைப்பட்ட வர்களுக்குச் சென்று சேர்வதும் இல்லை.  அப்படி வேண்டும் என்றால் அவர்கள் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்.

மேலே சொன்ன மூன்று இடங்களிலும் வசூலிக்கப்படும் பணத்தின் மதிப்பு என்பது அந்த பொருளின் மதிப்பைப் போல நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். 

விற்றவனுக்கு லாபம் இல்லை.  வாங்கியவனுக்குத் தரம் இல்லை. ஆனால்  அந்தப் பொருள் மூலம் அதிகாரிகளுக்கு அமைச்சர்களுக்கு கிடைக்கும் பணம் என்பது நாள்தோறும் பல கோடி.

இந்த சங்கிலித் தொடரில் தரகர்கள் என்ற இனம் தனியாக உள்ளது. அங்கு வாங்கும் வழங்கும் புழங்கும் தொகை என்பது தனி.




வாசிக்கும் போது பூடகம் போலவே தெரியும் தானே.  

இது தமிழகத்தில் விவசாயத்துறையில் நடந்து கொண்டு இருப்பது. இதுவே தான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றது. மேலும் இது அரசின் ஒரு துறையில் நடப்பது அல்ல.  ஒவ்வொரு துறையிலும்  இப்படித்தான் நடந்து கொண்டு இருப்பது ஆகும்.

திமுக உருவாக்கியது. அதிமுக அதனில் மேலும் கற்றுத் தேர்ந்து தெளிந்து புதிய பாதையை உருவாக்கியது. கூடுதல் பணத்தைத் திருட வழியை உருவாக்கியது. தொடர்ந்து வரும் திமுக அதற்கு மேலாக தைரியம் வந்து அடுத்தபடிக்கு சென்றது.

பணி நியமனம், பணி மாறுதல், சேஸ் வாங்குதல், உதிரிப் பாகங்கள் வாங்குதல், தனியார் முதலாளிகளிடம் பேரம் மூலம் பெறுதல்.  இது போக்குவரத்துத்துறை.  அதிகாரப்பூர்வமாக தொடங்கிய புண்ணியவான் கே.என்.நேரு.  இன்று ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்கிறார்கள்.

உங்கள் இபிகோ என்ன ஆயிற்று?

1970 முதல் இரண்டு கட்சிகள் அதன் நிர்வாக அமைப்பு என்பது இதற்குள் தான் சுற்றிச் சுற்றி வருகின்றது.

தனிமனிதர்களுக்கு என்ன பாதிப்பு என்ற கேள்வி வரும்?

விவசாயம் படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை.  பல ஆண்டுகளாக இதே தொழிலில் தரமாக செயல்பட்டு வருபவர்களுக்குச் சரியான வாய்ப்புகள் கிடைக்காது.  ஒரு பக்கம் அதிகாரிகளின் அட்டகாசம்.  மற்றொரு புறம் அவர்களை அண்டிப் பிழைக்கும் அமைச்சர் பெருமக்களின் கண்டு கொள்ளாமல் தனக்கு என்ன லாபம் என்கிற மனோபாவம்.

வருடந்தோறும் படித்து வருகின்றவர்கள் வாழ்க்கை?

வேறொரு பக்கம் பார்க்கலாம்.

நான் இடம் வாங்குகின்றேன். பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சம் கொடுக்க வேண்டும்.

வீடு கட்டப் போகின்றேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும்.

கவுன்சிலர் சார்பாக எவனாவது வருவான். அவனுக்குத் தேவையானதைக் கொடுக்க வேண்டும்.

வீட்டுக்கு மின்சாரம் வேண்டும். அந்த துறைக்கு லஞ்சம் வழங்க வேண்டும்.

குடிநீர் இணைப்பு வேண்டும். அங்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும்.

நான் இங்கு வாழ அனைத்துப் பொருட்களுக்கு வரி என்கிற விதத்தில் வசூலிக்கும் தொகை முழுமையாக சாலையாக மற்ற வசதியாக மாறுகின்றதா? என்று யோசித்தால் நான்கில் ஒரு பங்கு தான் தேறும்.

இப்படி யோசித்தால் இந்த சங்கிலிக்குப் பின்னால் உள்ள கண்ணிகள் அனைத்தும் உங்களுக்குப் புரிபடும்.  

ஒரு தொழில் நிறுவனம் நடத்தும் போது எப்போது யார் வந்து எதற்காகப் பணம் கேட்பார்கள் என்றே தெரியாது. எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. ஒன்று நேரிடையாகக் கொடுக்க வேண்டும். அல்லது சங்கம் வழியே வழங்கியே ஆக வேண்டும்.

இந்த சமூகவியல் காரணிகளைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

திரும்பத் திரும்ப மனிதர்களை அவர்கள் சாதி சார்ந்த உங்கள் விருப்பங்களை உள்ளே வைத்துக் கொள்ளுங்கள்.  அவர் பிராமணர். அதனால் ஆதரித்தே தீருவேன் என்று நீங்கள் சொன்னால் உங்கள் கண் முன்னால் உங்கள் வாரிசுகள் அழியப் போகின்றார்கள் என்பேன். நான் இங்கே பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்.

என் குழந்தைகள் இங்கு வாழ ஒன்றே ஒன்று போதும்.  யார் ஆட்சியில் இருந்தாலும் இணையம் வழியே வெளிநாடு போல வெளிப்படையான நிர்வாகம். எந்த அதிகாரிகளையும் எதற்காகவும் நேரிடையாகச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாத அழகான நிர்வாகம்.

நூறு சதவிகிதம் நேர்மையான அரசியல்வாதிகள், அதிகாரிகள் வேண்டாம். வாய்ப்பு இல்லை. மக்கள் பணம் வாங்கி பழகிவிட்டார்கள்.  ஆனால் தற்போது உள்ளது போலப் பணப்பேய் வேண்டாம்.  சேர்த்துக் கொண்டேயிருக்கின்றார்கள்.  யாருக்கு என்றே புரியவில்லை. இவர்களால் அனுபவிக்கவும் முடியவில்லை.  அனுபவிக்கவும் தெரியவில்லை.  காரணம் அடிப்படை பிச்சைக்காரப் புத்தி மாறவே இல்லை.  கருணா கடைசி வரைக்கும் இப்படித்தான் வாழ்ந்து மடிந்தார்.

எம்ஜிஆரைக் கடைசியில் சந்தித்த சத்யராஜ் கை நிறைய வைத்திருந்த நகைகளை அப்படியே கணக்குப் பார்க்காமல் அள்ளிக் கொடுத்தார். வந்தவர், போனவர், இருந்தவர், நம்பியவர், உடன் இருந்தவர் அத்தனை பேர்களிடம் அள்ளிக் கொடுத்தார்.  இறந்த பின்பு மீதம் இருந்ததை ஆர்எம் வீரப்பனும் லதா வும் வேறு எவரையும் உள்ளே அனுமதிக்காமல் அள்ளி எடுத்துச் சென்றனர்.

ஜெயலலிதா இறப்பதற்கு முன்பாகக் கடைசியாக ஆறு ஆண்டுகளில் குறிப்பாக கடைசி மூன்று ஆண்டுகளில் அவர் உடல் உறுப்புகள் அத்தனையும் கெட்டுப் போய்விட்டது. நிற்க முடியாது. உட்கார முடியாது. நடக்க முடியாது.  தனக்கு வாரிசு இல்லை. ஜெ குறித்து பெருமையாக எழுதுகின்ற அத்தனை பேர்களும் சசிகலா தான் உறவுகளை நெருங்க விடவில்லை என்று எழுதித் தள்ளிக் கொண்டே இருக்கின்றார்கள். தான் சேர்த்து வைத்து இருந்தது யாருக்காக? மக்களுக்காக நான்.  மக்களால் நான் என்றால் என்ன?  காரணம் நீங்கள் அவரை பிராமணப் பெண்மணியாகப் பார்த்து அவருக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்குறீங்க. நான் அந்த பெண்மணி உச்சக்கட்ட சைக்கோ வாகவே பார்த்தேன். மனித ஜென்மத்திற்குள் அடக்க முடியாத தப்பிப் பிறந்த பெண்மணி.

இப்போது மோடி அய்யா பக்கம் வருவோம்.   

மோடி வெங்கையா நாயுடுவை வெளியே தூக்கி எறிந்ததும் கதறியது பாஜக வில் உள்ளவர்களோ அல்லது ஆர்எஸ்எஸ் ல் உள்ளவர்களோ அல்ல. அதிக சப்தம் எழுப்பியது வைகோ மட்டுமே. எதிர்க்கட்சியில் உள்ள அத்தனை பேர்களும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறினார்கள்.

எல். முருகனை அவர் இருந்த இடத்திலிருந்து நகர்த்தியதற்கு முதல் எதிர்ப்புக்குரல் எழுந்தது திருமாவளவன் இடம் இருந்து தான் என்பதனை கவனத்தில் வைத்திருங்கள். அவர் அமைச்சர் ஆனதும் யார் யார் எல்லாம் வாழ்த்து சொன்னார்கள் என்பதனை படித்துப் பாருங்கள்.

ரவிசங்கர் பிரசாத் செயல்படாமல் இருந்த பல விசயங்களில் நிர்வாக ரீதியாக மோடி அரசுக்குப் பல பாதகமான விளைவுகள் விளைந்தது.  விவசாயச் சட்டம் தோல்வி அடைந்ததும் அதற்குள் அடங்கும்.  பிஎஸ்என்எல் இன்னமும் படாய்படுத்தி படு கேவலமாக செயல்பட்டுக் கொண்டு இருப்பதும் அவரின் திறமையின்மைக்குச் சான்று.  இப்போது அந்த அமைச்சர் எங்கேயிருக்கின்றார்?  யாராவது பேசினார்களா?

குஜராத் ல் தன்னுடன் முதல் முறையாக போட்டியிட்ட சமஉ வுக்கு இந்த முறை இருக்கை வழங்கவில்லை (ஏழு முறை இருந்துள்ளார். பதவி வெறி அடங்கவில்லை) என்றதும் அவர் தனியாக சுயேச்சையாக போட்டியிட்டார். பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைத்துப் பேசினார்கள். மோடி அவர்களே உன்னை எனக்கு நன்றாகத் தெரியும். இது வேண்டாம் என்றார். ஆனால் அவர் மீறிப் போட்டியிட்டுள்ளார். இனி அவர் அரசியல் வாழ்க்கை அவ்வளவு தான்.

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் ஆறு மாதம் எந்த கோப்பும் நகரவில்லை. இரண்டாவது வருடம் மெதுவாக நகர்ந்தது. மூன்றாவது வருடம் காற்பங்கு தான் நகர்த்த முடிந்தது. அடுத்த முறை ஆட்சிக்கு வர மாட்டார் என்றே அதிகாரிகள் நம்பினார்கள். இரண்டாவது முறை ஒவ்வொன்றும் சிக்ஸர் தான்.  காரணம் ஏற்கனவே பந்தக்கால் நட்டு பாய் விரித்து பாக்கு வெற்றிலை வைத்துக் காத்திருந்தார்.  சிக்கின ஒவ்வொன்றும் சிதறடிக்கப்பட்டது.  இன்று மோடி உலகத்தலைவர். யாரையும் குறை சொல்லவில்லை.  யாரிடமும் அழுது புலம்பவில்லை. தன் சாதியைச்  சொல்லவில்லை.  இன்று மோடி காட்டிய பாதையில் ராகுல் வந்து சேர வேண்டிய கட்டாயத்தைக் காலம் உருவாக்கியுள்ளது.  இந்தி படவுலகமே மிரண்டு போய் பலரும் ஓய்வெடுக்கச் சென்று விட்டனர்.  காரணம் மக்கள் மேல் கொண்ட நம்பிக்கை.  இந்தியா என்ற நாடு எப்படி வர வேண்டும் என்ற கனவு. இவை தான் இன்று வரையிலும் மோடியைச் சுறுசுறுப்பாக வைத்துள்ளது என்பேன்.

சொந்தம் என்பதால் வளைந்து கொடுப்பவர்கள், லஞ்சம் என்பதால் மாற்றி வழங்குபவர்கள், திறமையின்மையை பொறுத்துக் கொண்டு நகர்த்துபவர்கள் இந்த சமூகத்திற்கு உணர்த்துவது என்ன தெரியுமா?

நீ இந்த சமூகத்தில் வெல்ல வேண்டும் என்றால், சாதிக்க வேண்டும் என்றால் உன் அப்பன் அரசியல்வாதியாக இருக்க வேண்டும். அம்மா அரசு உயர் அதிகாரியாக இருக்க வேண்டும். மாமா தொழில் அதிபராக இருக்க வேண்டும்.

இந்த மூன்றும் சாதாரண மனிதர்கள், கல்லூரி முடித்து விட்டு நிஜமான திறமைகளுடன் இந்த சமூகத்திற்குள் நுழையும் போது இங்குள்ள கண்ணிவெடிகளின் சூட்சமம் புரியாமல் கால்வைத்து ஊனமாக மாறி செயல்படாமல் போய் கடைசியில் ஃபேஸ்புக்கில் முகம் காட்டாமல் புனை பெயர் வைத்துக் கொண்டு புரட்சி பேசத் தொடங்குகின்றான்.

அண்ணாமலை தந்தி தொலைக்காட்சியில் பேசிய பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை. எந்த இடத்திலும் கடந்த இரண்டு நாட்களில் அதைப்பற்றி எழுதவில்லை. அடிப்படையில் என்னைப் போலவே அண்ணாமலை அவர்களுக்கும் அதிமுக என்ற கூட்டணி பிடிக்கவே இல்லை.  ஆனால் மத்திய பாஜக ஏதோவொரு காரணத்தால் திமுக செய்கின்ற அனைத்து ஊழல்களை கண்டும் காணாமல் இருக்கின்றது.  கடந்த கால அதிமுக அமைச்சர்கள் செய்த அயோக்கியத்தனத்தைக் கக்கத்தில் வைத்து உம்மென்று உள்ளது.  

அண்ணாமலை அவர்கள் இங்கே உருவாக்கிய மாற்றங்களை அவர்களுக்கு கிடைத்த அறிக்கை உணர்த்தியிருக்கும். ஆனால் நிஜமான களப் போராளியாக வாழ்ந்து கொண்டு இருக்கும் மோடியும் அமித்ஷா வும் தமிழ்நாடு போலவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் தட்ப வெப்ப நிலையையும் உணர்ந்து இருக்கக்கூடிய பக்காசூரர்கள் என்பதால் அண்ணாமலை அவர்கள் மத்திய பாஜக பேச்சைக் கேட்கும் சூழலில் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.  அந்த பேட்டியில் அவரின் பேச்சு அப்படித்தான் இருந்தது.

காரணம் ஊழல் குறித்துப் பேசிக் கொண்டே உலக மகா திருடர்களுடன் கூட்டணி அமைப்பது என்பது பாஜக வளரும் என்பதாக கருதினால் அது நாம் விரும்பும் பாஜக வாக இருக்காது.  எப்போதும் நண்பர்கள் சொல்லும் திபாஜக வின் கிளையாக வே அது இருக்கும்.

அண்ணாமலை அவர்களுக்கு இன்னும் அரசியல் வாழ்க்கை 50 வருடங்கள் உள்ளது.  2031 முதல் என்று நான் தொடக்கம் முதல் எழுதி வருகின்றேன்.  அவசரம் இல்லை.  இன்னும் தமிழகம் நிறைய அனுபவிக்க வேண்டி உள்ளது. அவர்களை முழுமையாக அனுபவிக்க அனுமதித்தால் மட்டுமே தமிழகம் திருந்த வாய்ப்பு அமையும்.

ஓரளவுக்கேனும் ஊழலை, குடும்ப ஆட்சி சார்ந்த நபர்களை ஆதரிக்காமலிருந்தாலே போதும். 

காலம் உருவாக்கும் ஆச்சரியங்கள் பல.

காத்திருப்போம்.

No comments: