Tuesday, December 06, 2022

டிசம்பர் 5 ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட தினம்.

 முன் குறிப்பு

இதனை வாசித்து முடித்து விட்டு உங்கள் மனம் மாறினால் மகிழ்ச்சி.  என்னை திட்டினால் அதை விட இரட்டிப்பு மகிழ்ச்சி.

()()()


ஜெ என்ற அந்த பெண்மணி எந்த நாளில் எந்த நேரத்தில் இறந்தார் என்பது அறிந்த இரண்டே பேர்களில் சசிகலா ஒருவர். மற்றொருவர் பிரதாப் ரெட்டி குடும்பம்.  

ஜெ வுக்கு தகப்பன் குறித்த புரிதல் இல்லை. வலம்புரி ஜான் எழுதிய வணக்கம் என்ற நூலைப் படித்துப் பாருங்கள். அசிங்கத்தை மிதித்தது போல உணர்வீர்கள்.  

தாய் சந்தியா தன் மகளுக்கு வழங்க வேண்டிய  பாசத்தை விட அவர் மாய மான் போல பணம் பின்னால் தான் வாழ்நாள் முழுக்க துரத்தித் துரத்தி ஓடிக் கொண்டு இருந்தார்.  அதன் அடிப்படையில் நடந்த பல கோக்கு மாக்கான தகவல்களைக் கொஞ்சம் வலம்புரி ஜான் எழுதியுள்ளார்.  

ஜெ தாய் சந்தியா இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டணம் (துணை நடிகையாவதற்கு முன்பு) பல்வேறு கீழ்மட்ட வேலையைச் செய்துள்ளார். அதன் பிறகு தான் சென்னை வந்து சேர்ந்துள்ளார்.  அவர் கடைசி வரைக்கும் தான் நினைத்த ஆடம்பர வாழ்க்கையை வாழவே முடியாத ஆதங்கம், ஆத்திரம், அவசர கோலத்தில் தன் உடல் நலனில் அக்கறை செலுத்தவே இல்லை. இது அவர் மரணம் வரைக்கும் துரத்தியது. மகளை, மகனை அனாதையாக்கி விட்டு இறந்தார்.  

ஆனால் ஜெ பிறந்த நேரம் என்பது என் பார்வையில் மோடிக்கு சமமான அதிர்ஷ்டம் பெற்றவராக நான் பார்க்கின்றேன். இவரைப் பற்றி அறிந்து கொள்ளப் பலரும் எழுதிய புத்தகங்களைப் படித்த போது ஒரு பக்கம் ஆதங்கம் மற்றொருபுறம் எரிச்சலும் உருவானது.

சமீப காலத்தில் காயத்ரி என்ற வளர்ந்த கூமுட்டை பாஜக வில் இருந்து தூக்கப்பட்ட பின்பு பாஜக வின் சித்தாந்த எதிரிகளிடம் சிக்கி பேட்டி என்ற பெயரில் தன் அறியாமையை எப்படி வெளிப்படுத்திப் பார்க்கும் பலரையும் எரிச்சல் அடைய  வைக்கின்றதோ அதற்குச் சமமான நபர் தான் ஜெ.  

இதை வாசிக்கும் போது உங்களுக்குக் கோபம் வரலாம்.  உண்மை.  ஜெயலலிதா என்ற பெண்மணி ஒரு மண்ணும் தெரியாது. தன்னைச் சுற்றியுள்ள எது குறித்தும் உணர்ந்து கொள்ள விரும்பாத முயலாத  சொகுசு பிராணி. 

தமிழக வரலாறு, தமிழக அரசியல் மற்றும் சமூக வரலாறு என்பதனைப் பற்றி துளியும் அறியாமல், தான் வாசித்த மேல்நாட்டு வகையில் உள்ள துப்பறியும் நாவல்களைப் போல வாழ்க்கையை நினைத்த பெண்மணி இவர்.

ஆங்கிலம் என்பதனை கடைசி வரைக்கும் அறிவு என்று நம்பியவர். அதன் காரணமாகவே தன்னை இங்கிலாந்து மகாராணி என்று கருதிக் கொண்டவர். 

வாழ்நாள் முழுக்க பொறாமையுடன் வாழ்ந்தவர். 

எம்ஜிஆர் அரசியலுக்குள் நுழைந்து முதல்வராக ஆன காலகட்டத்தில் அதாவது 1972 முதல் 1981 வரை அடுத்த நாள் சோற்றுக்கே கஷ்டப்பட்டவர். அதற்காக நாடகம் நடிக்க, மற்ற என்ன வேலைகள் செய்யலாம் என்பது வரைக்கும் கீழே இறங்கத் தயாராக இருந்தவர்.

வேறு வழி ஒன்றும் தெரியாமல் எம்ஜிஆரை மிரட்டுவதன் மூலம் தான் அடுத்த இன்னிங்ஸ் என்பதனை தொடங்க முடியும் என்பதனை கருணாநிதிக்கு ஆதரவாக செயல்படப் போகின்றேன் என்பதனை எம்ஜிஆர் காதுக்குப் போக வைத்ததன் காரணமாக அதன் தொடர்ச்சியாக எம்ஜிஆருடன் பழகியது முதல் மற்ற சொந்த வாழ்க்கை வரைக்கும் சுயசரிதை போல வார இதழில் தொடராக எழுதப் போகின்றேன் என்ற அணுகுண்டை வீசினார். எதிர்பார்த்தது போல எம்ஜிஆர் ஆடிப் போய் விட்டார்.  அவருக்கு வேறு வழி தெரியவில்லை.  கருணாநிதி கையில் போய் சிக்கி விட்டால் தன் இமேஜ் என்னவாகும் என்பதனைப் பார்த்து உள்ளே இழுத்தார்.  சத்துணவுத் திட்டம் என்பது தன் இமேஜ் வளர்க்க உதவும் என்பதனை நம்பிக் கொண்டு இருந்த எம்ஜிஆர் அதனை புரோமோட் செய்ய ஜெ உதவுவார் என்பதனை வைத்து அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்.

ராஜ்ய சபா உறுப்பினர் பதவி உள்ளே நுழைந்த ஒரு வருடத்திற்குள் கிடைத்தது என்றால் மற்றதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். ஏன் இவருக்கு ஒரு சுக்கும் தெரியாது என்று சொல்லக்காரணம் ஆசைகள் அளவு கடந்து இருந்தது. ஆனால் உழைக்கவே கூடாது என்ற எண்ணமும் இருந்தது. அதற்குத் தான் அந்த சமயத்தில் நடராஜனும் சசிகலாவும் உடன் இருந்தனர்.

அண்ணாதுரை இருந்த இருக்கை தான் வேண்டும் என்று எம்ஜிஆருக்கே தெரியாமல் நடராஜன் பாராளுமன்ற அலுவலகத்தில் பேசி அதில் அமர வைத்து அற்ப ஆசையை ஊதி பெரிதாக்கினார்.  மற்றொரு பக்கம் எம்ஜிஆரே வலம்புரி ஜான் அவர்களை ஜெ அருகே வைத்து அரசியல் சார்ந்த அனைத்தையும் கற்றுக் கொடுக்க வைத்தார்.  அன்று வலம்புரி ஜான் எழுதிக் கொடுத்ததை பேசி தன்னை புத்திசாலி என்று வெளியே காட்டிக் கொண்டார்.  ஒவ்வொரு பத்திரிக்கையாளர்களையும் கெஞ்சிக் கூத்தாடி தன்னைப் பற்றி எழுத வைத்து வெளிக் காட்டிக் கொண்டார்.  சாகின்ற வரைக்கும் மருது அழகு ராஜ் என்பவர் எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசிக்கும் கிளிப்பிள்ளை போலவே வாழ்ந்து மடிந்தார்.

அவர் பிராமணப் பெண்மணி என்ற நோக்கத்தில் ஒரு பெண்மணி என்னோடு உரையாடினார். சசிகலா வை பயங்கரமாகத் திட்டினார். ஜெ அப்பாவி என்றார்.  நான் என் வலைபதிவில் இவரைப் பற்றி எழுதிய நாலைந்து கட்டுரைகளின் இணைப்புகளைக் கொடுத்து முழுமையாகப் படிங்க. நான் ஏதும் தப்பாக எழுதி இருக்கின்றேன் என்றால் என்னை அழைக்கவும் என்று சொன்னேன்.  அன்று முதல் அவர் என்னிடம் பேசுவதே இல்லை.  

ஏன் இந்த இடத்தில் பிராமணப் பெண்மணி என்று எழுதக்காரணம் கமலஹாசன் போல எதை திங்க வேண்டும்? எதைத் தின்னக்கூடாது என்ற பாரபட்சமே இல்லாமல் வசதி வந்த பின்பு 365 நாளும் அசைவ உணவை விரும்பிய பெண்மணி இவர்.  தன் உடல் உணர்ச்சிகளுக்கு வயதுகளுக்கு

அப்பாற்பட்ட உறவுகளை விரும்பியவர். அப்படியே வாழ்ந்தவர்.  

இவர் எத்தனை தவறுகள் செய்தாலும், இவையெல்லாம் அயோக்கியத்தனத்தின் உச்சம் அல்லவா என்று நீங்கள் சொன்னாலும் அனைத்தையும் விரும்பி விரும்பி செய்தார்.  ஆனால் அதன் விளைவுகள் இவருக்கு வரவே இல்லை. அது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. இன்று வரையிலும் இருக்கின்றது.  யோகம், ராஜயோகம், விபரீத ராஜயோகம் என்பதற்கு அப்பாற்பட்ட ஏதோவொரு அம்சம் இவரிடம் இருந்துள்ளது என்பதனை நான் கவனித்து ஆச்சரியப்பட்டுள்ளேன்.

சற்று நேரத்திற்கு முன்பு இங்குள்ள ரயில் நிலையத்திற்கு அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னால் அமர்ந்து இருந்த மகள் இன்று ஜெயலலிதா இறந்த தினம் என்றார். அப்போது தான் கூட்டத்தை சற்று கூர்ந்து கவனித்தேன்.  மொத்தம் 50 பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். காசு கொடுத்து வரவழைக்கப்பட்ட வயதான பெரியவர்கள் வழங்கப்பட்ட கருப்புச் சட்டை அணிந்து நடந்து சென்று கொண்டு இருந்தார்கள்.  

பெண்களுக்குக் கருப்பு சேலை கொடுக்கப்படவில்லை போலும் என்று நினைத்துக் கொண்டேன்.  இப்போது அதிமுக பல்வேறு கிளைகளாக பிரிந்து இருப்பதால் இப்படி இருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டேன்.  பாராளுமன்றத் தேர்தல் வருவதால் கட்சிக்காரர்கள் என்ற பெயரில் பலரும் சுறுசுறுப்பாகவே இயங்குகின்றார்கள்.

அதிமுக வில் உள்ள ஒருவனையாவது இந்தப் பெண்மணி மேல் உண்மையான அக்கறை கொண்ட மனிதர் என்று அடையாளம் காட்டுங்கள் பாருங்கள்?  

கொடநாடு விவகாரத்தை முழுமையாக ஏனோ இந்த கோமாளிக்கூட்டம் கிடப்பில் வைத்துள்ளது.  தேர்தல் வரும் போது வெளியிடுவார்களா? என்று தெரியவில்லை.  தன்னைச்சுற்றியுள்ள அத்தனை பேர்களையும் எதிரியாகவே மாற்றிக் கொண்டு வாழ்ந்த பெருமைமிக்க சாதனையாளர் ஜெயலலிதா. 

முதல் முறை முதல்வரானது முதல் இறந்த நாள் வரைக்கும் அடைந்த சுகத்தை விட உடலில் உள்ள ஆயிரக்கணக்கான நோய்கள் மூலம் பெற்ற துயரம் என்பது எதிரிக்குக் கூட வரக்கூடாது என்பேன்.  இவர் அன்றைய காயத்ரி.

கருணாநிதியை விட இவரை ஏன் இந்த அளவுக்குக் கொலைவெறியாக தாக்குவது ஏன் என்ற குழப்பம் உங்களுக்குத் தோன்றலாம். என் மேல் வெறுப்பு உருவாகலாம்?

இந்த பெண்மணி அரசியலுக்கு வருவதற்கு முன்பு, இந்த மனுசி டாஸ்மாக் என்ற வியாபாரத்தைத் தன் சுயநலத்துக்காக சசிகலா என்ற பெயரில் தொடங்குவதற்கு முன் தமிழகத் தொழில் நகரங்கள் அனைத்திலும் தமிழர்கள் தான் பணிபுரிந்தார்கள்.  இன்று திருப்பூரில் ஏறக்குறைய ஆறு லட்சம் வட இந்தியத் தொழிலாளர்கள் இருப்பதற்கு ஒரே காரணம் ஜெ தான் என்பேன்.  காரணம் சந்துக்குச் சந்து சாராயக்கடை என்பதனை இவர் தான் இங்கே கொண்டு வந்து மொத்தச் சமூக எண்ணங்களை மாற்றி, பாழ்படுத்தி, உழைக்க முடியாதவர்களாக உருவாக்கி, அரசு எந்திரத்தைக் கொள்ளையடிக்க என்பதாக உருக்குலைத்து, உனக்குப் பதவி, பணம் வேண்டும் என்றால் என் காலில் விழுந்து கிட என்ற புதிய அரசியல் அத்தியாயத்தை உருவாக்கியதை நீங்கள் சாதனை என்பீர்கள் தானே?

இன்று திருப்பூரில் சிறிய அளவில் தொழில் செய்யவே முடியாது. ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்.  மது ஒரு முக்கிய காரணம்.  மாறிய மனோபாவம் மற்றொரு காரணம்.

அண்ணாதுரை முதல்வராக பதவியேற்ற போது கூட திமுக கட்சிக்காரர்களும் தலைமைச் செயலகம் உள்ளே செல்லத்துவங்கி அதிகாரிகளைக் கேள்வி கேட்க துவங்கினர்.

கருணாநிதி முதல்வரான பின்பு கட்சி தான் நிர்வாகம் செய்யும்படி தமிழக அரசியல் மாறியது.  பணமும் சாதியும் தான் இனி பேசும் என்பதாக மாற்றிய பெருமை கருணா வுக்கு உண்டு.

ஆனால் ஜெ எல்லாவற்றிலும் வித்தியாசத்தைக் கையாண்டார். ஒவ்வொரு துறையும் திருடுவதற்காக மட்டுமே என்பதனை கொண்டு வந்த சாதனையாளர் இவர்.  

இதனை வாசித்து விட்டு என் மேல் உங்களுக்குக் கோபம் வந்தால் நீங்கள் தொழில் நகரங்கள் எப்படி இப்போது செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது? என்னன்ன பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கின்றது என்பதனை நீங்கள் அறியவில்லை என்று அர்த்தம்.

தங்களுக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்புகளைச் சிறு குழந்தை போலக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி ஒரு பெரிய மாநிலத்தையே தன் சொகுசு என்பதற்காக நாசம் செய்தவரை என்ன சொல்வீர்கள்.

கடைசியாக ஆன்மீகவாதி என்று முத்திரை குத்துவீர்கள்?

இவர் நடத்திய யாகங்களில் பணிபுரிந்தவர்களிடம் இவரின் இறைபக்தியின் லட்சணம் எப்படியிருந்தது? என்று கேட்டுப் பாருங்கள்.  கருணாநிதி நம்பிய இறை சக்தியை இவர் நம்பவே இல்லை என்பது தான் உண்மை.

தன் உடம்பில் இனிப்பின் அளவு 500 க்கும் மேல் தாண்டிவிட்டது.  ஐஸ்கீரிம், வெளிநாட்டு சாக்லேட் சாப்பிடவே கூடாது என்ற யாராவது சொன்னால் என்னவாகும் தெரியாது.  

எதையும் கட்டுப்படுத்த தெரியாமல், கட்டுப்படுத்தி தனக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடியவர்களை அருகே வைத்துக் கொள்ளவும் விரும்பாமல் தான் தோன்றித்தனமாக ஒரு தனி மனுஷி இறந்து இருந்தால் இதனை நான் எழுதியிருக்கவே மாட்டேன்.

கடந்த இருபது ஆண்டுகளில் தொழில் ரீதியாக வளர முடியாத தமிழக தொழில் நகரங்கள் அனைத்தும் பொலிவிழந்து அடிமை வாழ்க்கையே போதும் என்று தங்களை மாற்றிக் கொண்டு வாழப் பழகிய பல லட்சம் இளைஞர்களின் சாபத்தைச் சுமந்து கொண்டு அந்த பெண்மணி எங்கே இன்று அலைந்து கொண்டு இருக்கின்றாரோ?

No comments: