Tuesday, December 27, 2022

எல்லாத் தொழிலிலும் லாபம் தான் முக்கியம். அதுவே தான் இயக்கும்.

சென்ற வருடம் நீட் பரிட்சை நடத்துவது தொடங்கி அதன் தேர்வு முடிவு எப்போது வரும் என்பது வரைக்கும் பயங்கர குழப்பம் நிலவியது. மத்திய கல்வித்துறை, மத்திய சுகாதாரத்துறை, பிரதமர் அலுவலகம் என்று தேர்ந்தெடுத்து 16 துறை சார்ந்த செயலாளர் நிலையில் இருந்தவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மாறி மாறி தொடர்ந்து கடிதம் எழுதினேன். வெற்றி கிடைக்கவில்லை.

தேர்வு நெருங்க நெருங்க நன்றாக படிக்கின்றவர்களும் தனியார் கலைக்கல்லூரிகள் முன்பணம் கேட்பதை கொடுத்து விட்டு நீட் குறித்த அக்கறை இன்றி மிகப் பெரிய செலவு செய்து தங்கள் வாழ்க்கையை வருடந்தோறும் மாணவர்கள் இழக்கின்றனர்.
அதாவது தொடக்கத்தில் நீட் குறித்து வெறி இருக்கும். தேர்வு நெருங்க நெருங்க பலரும் பேசிப் பேசி பயத்தை உருவாக்கி விடுகின்றார்கள். ப்ளஸ் டூ ரிசல்ட் வராத போது தனியார் கலைக்கல்லூரிகள் பலவிதமாக ஆசை காட்டி முன் பணம் வாங்கி (ரிசல்ட் வருவதற்கு முன்பே) வைத்துக் கொள்கின்றார்கள்.
இது போன்ற எதார்த்த விசயங்களை தமிழகம் தொடங்கி டெல்லி வரைக்கும் கொண்டு சென்று(ம்) பலன் இல்லையே என்று வருத்தப்பட்டேன்.
எவர் பார்வையில் பட்டதோ இந்த வருடம் இன்று மே மாதம் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
ஜிஎஸ்டி மற்றும் நீட் என்ற இந்த இரண்டு அமைப்புகளும் நான் பார்த்த வரைக்கும் எருமைமாடு மழையில் நிற்பது போலத் தான் செயல்படுகின்றார்கள். ஆனால் படிப்படியாக மாற்றம் உருவாகிக் கொண்டேயிருக்கின்றது என்கிற அளவில் மகிழ்ச்சி.
NEET (UG) EXAM - 07 MAY 2023

()()()

டாலர் நகரம் புத்தகத்தில் என் முதல் முதலாளியைப் பற்றி எழுதியுள்ளேன். காரணம் அவர் என்னை அங்கீகரித்த விதம். அதற்கு இருபது வருடங்களுக்குப் பின் பல பத்து முதலாளிகளைப் பார்த்து விட்டேன்.

முதலாளிக்கு அடுத்த நிலையில் இருந்த போது வாரச் சம்பளமாக நான் இருந்த பொது மேலாளர் என்ற உயர்ந்த பதவியில் வாரம் அறுபது லட்சம் கையில் பணமாக கொண்டு வந்து கொடுத்த முதலாளிகள் எவரும் இன்று வரையிலும் என் நினைவில் இல்லை. காரணம் நான் மனிதர்களைப் பார்க்கவில்லை.

டாலர் நகரம் என்ற புத்தகத்தை அச்சடிப்பதற்கு முன்பு, பலமுறை படித்து ஆச்சரியப்பட்டு அதனை வைத்துப் பல பள்ளிக்கூடங்களில் பேசிய விஜயா பதிப்பகம் முதலாளி புத்தகமாக கொண்டு வர விரும்பவில்லை என்பதனை தாமதமாகவே புரிந்து கொண்டேன். அதன் பிறகே அச்சகம், புத்தக விற்பனையாளர்கள், இதற்குள் வாழும் முதலாளிகளின் முகங்களைக் கவனிக்கத் தொடங்கி ஒதுங்கி விட்டேன்.

ஒரு விமான பயணத்தின் போது முழுமையாக படித்து முடித்து அடுத்த வாரமே சொந்தச் செலவில் இங்கு வந்து அச்சடிக்க ஏற்பாடு செய்தவர் ஓர் ஈழத்தமிழர். அதனை அச்சடிக்க காரணமாக இருந்தவர் என் நண்பர் ராமு. விகடன் அதனைப் பத்துப் புத்தகங்களில் ஒரு புத்தகமாக தேர்ந்தெடுத்ததைப் பார்த்துத் தவிர்த்த முதலாளி என்னிடம் பேசிய வார்த்தைகள் என் நினைவில் உள்ளது. இறையன்பு அவரை வாழ வைத்தார். ஆனால் அவர்கள் யாரையும் வாழ வைக்கவில்லை என்பதனை பின்னால் புரிந்து கொண்டேன்.

ஏன் இதை எழுதுகின்றேன்?

எல்லாத் தொழிலிலும் லாபம் தான் முக்கியம். அதுவே தான் இயக்கும்.

தொழில் என்றால் சுயநலம் கலந்தே இருக்கும். ஆனால் அணுகுமுறை மிக மிக முக்கியம். காலம் கடந்து நம் மனதில் நிற்கும். நிற்க வைக்கும்.

சுவாசம் பதிப்பகம் அப்படி நிற்கும் என்றே நம்புகின்றேன்.

ஹரன் பிரசன்னா அறிமுகம் ஆவதற்கு முன்பு லெஷ்மணப் பெருமாள் எனக்கு வேறொரு வகையில் அறிமுகம் ஆனவர். எனக்கு மிகப் பெரிய உதவியைச் செய்தவர். அதன் மூலம் என்னால் சங்கடம் அடைந்தவர். ஆனால் பெரிது படுத்திக் கொள்ளவில்லை. இவர்கள் நிறுவனம் (மற்றொருவரும் உள்ளார்) மும்மூர்த்தியாக சுவாசம் பதிப்பகம் ஒன்றைத் தொடங்கி உள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக பல புத்தக அட்டைகளைப் பார்த்து வருகின்றேன்.

அவர்கள் பதிப்பகம் சார்பாக ஜனவரி சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனையாகவிருக்கும் அனைத்து தலைப்புகளையும் பார்த்து ஒரு பக்கம் ஆச்சரியப்படுகின்றேன். மற்றொரு பக்கம் (உண்மையிலேயே பயமாக உள்ளது) அதிகம் யோசிக்கின்றேன். காரணம் மக்கள் வாசிப்பு பற்றி எனக்கு பல்வேறு கேள்விகள் உள்ளது. நானே என்னை ஆராய்ச்சி பொருளாக வைத்து நான் வாசிக்கும் விதத்தை வைத்து இனி வரும் காலங்களில் புத்தக வாசிப்புக்குத் தமிழர்கள் தேறுவார்களா? என்று யோசிக்கும் அளவுக்கு உள்ளது?

காரைக்குடி போன்ற இரண்டாம் கட்ட நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெண்கள் இன்னமும் முழுமையாக வாசிக்கின்றார்கள். நூலகங்கள் பிசியாகவே உள்ளது. ஆனால் காசு கொடுத்து புத்தகம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எட்டு கோடி மக்களில் 800 பேர்களிடம் இருக்குமா? என்றால் அது சந்தேகம் என்பேன். இதுவொரு வினோத மரபியல் சார்ந்த பிரச்சனையாக இருக்குமோ என்று தோன்றுகின்றது. நான் இங்கே பார்க்கும் ஆசிரியர்கள் கூட இப்படித்தான் (ஓசியில் கொடுங்கள் சார். படித்து விட்டுத் தருகின்றேன்) இருக்கின்றார்கள்.

இன்று சக்ரவர்த்தி புத்தகம் சுவாசம் பதிப்பாக வெளிவருவதைப் பார்த்தேன். அவர் எழுதத் தொடங்கிய சமயத்தில் நான் ஒன்றும் செய்யவில்லை. தூண்டுதலாக செயல்பட்டேன். நன்றி சொல்லி எழுதி இருக்கின்றார்.

இப்போது வேறொருவர் நினைவில் வருகின்றார்.

ஒருவர் வெளிநாட்டில் உள்ளார். திருப்பூரில் டாலர் நகரம் புத்தக வெளியிட்டு விழா பத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களுடன் சிறப்பாக நடந்தது. அவர் முதல் முறையாக மேடைப் பேச்சு என்பது என் விழாவில் தான் பேசினார். கேட்டார். வாய்ப்பளித்தேன்.

அதன் பிறகு ஓரளவுக்குப் பேசக் கற்றுக் கொண்டார். எந்த இடத்திலும் இதனைக் குறிப்பிடுவதே இல்லை. ஏன் பாஜக வை ஆதரிக்கிறீர்கள் என்று எரிச்சலுடன் கேட்டார். சிரித்துக் கொண்டேன்.

மனிதர்களை நான் பெரிதும் மதிக்கின்றேன். அதன் காரணமாக கட்சி அரசியல் சார்பை வைத்து மனிதர்களை எடை போடும் நல்ல நண்பர்களுக்கு என் எழுத்து சென்று சேர வேண்டிய அவசியம் இல்லை என்று மறைத்து விடுகின்றேன்.

மனித முகம் தரும் அதிர்ச்சி எனக்கு அதிர்ச்சி அளிப்பதில்லை. காரணம் நான் வாழும் ஊரில் பார்த்த மனிதர்கள் ஒவ்வொருவரும் எனக்கு மனித உளவியல் சார்ந்த அனைத்தையும் கற்றுத் தந்துள்ளது.

முதல் மதிப்பெண்கள் வாங்கும் அளவுக்கு பரிட்சை வைத்து கற்றுக் கொடுத்து உள்ளனர்.

சுவாசம் பதிப்பகம் சார்பாக எந்தப் புத்தகம் வெளிவந்தாலும் நீங்கள் அவசியம் வாங்க வேண்டும். உங்களுக்குப் படிக்க நேரமில்லை என்று சொல்லாதீர்கள். ஆர்வம் இல்லை என்று சொல்லுங்கள்.

மாதம் ஒரு முறை மற்றவர்களுக்கு பரிசளிக்க வாங்குங்கள். காரணம் ஹரன் பிரசன்னா அவர்களின் தொழிலுக்கு அப்பாற்பட்ட அணுகும் விதம் என்னை நிறையவே யோசிக்க வைத்துள்ளது. பலவற்றை கற்றுத் தந்துள்ளது.

சாதி, மதம், பணம், தன் விருப்பம், தன் நோக்கம் என்ற விதங்களில் மனிதர்களின் நல்லொழுக்கம் அனைத்தும் தற்போதைய சூழலில் வேறு விதமாக மாறிக் கொண்டே வருகின்றது. அழைத்தால் திரும்ப அழைப்பதில்லை. பேச விரும்புவதில்லை. செய்தி பார்த்து பதில் தருவதில்லை. இப்படி சொல்லி அலுப்பூட்ட விரும்பவில்லை.

எல்லாவற்றுக்கும் காரணம் அவரவர் சூழல். அதற்கு அப்பால் தன்னெஞ்சறிவது பொய்யற்க என்ற நோக்கம் இருக்குமேயானில் இதை வாசிக்கும் போது நண்பர்கள் உணர்வார்கள். ஆனால் நான் பார்த்தவரையிலும் குற்றவுணர்வு இல்லாத அளவுக்கு உறவுகளை கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

இதற்காகவே துண்டித்துக் கொண்டு நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமையும் இயல்பாகவே அமைந்து விடுகின்றது.

ஆனால் நம் நிலை புரிந்து, உணர்ந்து, நாம் விரும்பும்படி மனிதர்களை கையாள்வது அடிப்படையிலேயே அப்பா அம்மா ஒழுக்கம் கொண்டு வளர்ந்து இருந்தால் மட்டுமே மட்டுமே முடியும். அதில் பிரசன்னா நம்பர் ஒன். வாழ்த்துகள்.

காரணம் பதிப்பகத்துறையில், எழுத்துலகில், எழுத்தாளர்களிடம் நீங்கள் நெருக்கமாக பழகியிருந்தால் அங்கே நிலவும் உண்மையான பல விசயங்கள் புரியும். அது குறித்து நான் முழுமையாக எழுத விரும்பவில்லை.

திறமை உள்ள அனைவரையும் தானே அழைத்து வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து பாரபட்சமின்றிச் சமதளத்தில் நிறுத்தி உலகத்தீரே இவரைக் கவனிப்பீராக என்ற உரக்கச் சொல்லும் சுவாசம் பதிப்பகம் எந்நாளும் வெற்றியுடன் திகழ என் வாழ்த்துகள்.

No comments: